துணை




இந்திய மணி ஏழுக்கெல்லாம் அப்பாவிடமிருந்து போன்.
ஆயாசத்துடன் மொபைலை எடுத்து “சொல்லுப்பா” என்றாள் லாவண்யா.
“எப்படிடா இருக்க? குளிர் ஆரம்பிச்சுடுத்தா?”
“ம்ம்ம். ஆரம்பிச்சாச்சு. நல்லாயிருக்கேன். நீங்கள்லாம் எப்படி இருக்கீங்க? என்ன இவ்ளோ காலைல போன்?”
“சும்மாதான்” என்று சொன்ன அப்பா ஊர்கதையெல்லாம் பேசிவிட்டு ஐந்து நிமிடம் கழித்து விஷயத்துக்கு வந்தார்.
“குட்டிமா… அந்த நரேந்தர் வரன் வந்தது இல்லையா.. அதுபத்தி பேசத்தான் போன் பண்ணேன். “

லாவண்யா முகத்தில் சிறு புன்னகை. அவள் கண்முன் நரேனின் அழகான முகம் வந்து போனது. ஸ்கைப்பில் பேசும்போது தான் கவனித்தாள் அவன் எவ்வளவு handsome என்று. கிட்டத்தட்ட ஹிந்தி சினிமா ஹீரோக்கள் மாதிரி. அவள் உடலுக்குள் ஒரு மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது.
“சொல்லுப்பா”
“அது வந்து குட்டிமா.. நானும் அம்மாவும் அவங்க வீட்டுக்குப் போயிருந்தோம். திருவல்லிக்கேணில ஒரு flat. பேயாழ்வார் சந்தோ என்னமோ. ஹால்னு பேரே தவிர கால வக்க எடமில்ல. “
“அதுனால என்னப்பா? நான் என்ன அங்கேயா வாழப்போறேன்? நாங்க இருக்கப்போறது என்னமோ அமெரிக்கால.”
“நானும் அப்படியேதான் நெனச்சேன் குட்டிமா. ஆனா உக்காந்து பேசிப் பார்த்தபோத்தான் தெரிஞ்சுது பையனுக்கு ஒரு அக்கா இருக்காளாம். ஏதேதோ காரணம் சொன்னாங்க. ஆனா கல்யாணம் ஆகல. வயசு முப்பது ஆகப்போறது. பாங்க்ல பெரிய வேலை. ஆனா என்ன பிரயோஜனம்? எனக்கென்னவோ அந்த ஆளு மூஞ்சியே பிடிக்கல. பொண்ணு சம்பாத்யத்துல உக்காந்து சாப்பிடாரான்னு ஒரு சந்தேகம். மேலும், நாங்கள்லாம் பாதி கிணறு தாண்டியாச்சு. எங்க காலத்துக்கு அப்புறம், அந்த பொண்ணு உங்க responsibility ஆயிடுத்துன்னா? முடியுமா யோசிச்சுப் பாரு. அதுனால உன் சார்பா நானே வேண்டாம்னு சொல்லிட்டேன்” என்று சொல்லி முடித்தார்.
லாவண்யாவுக்கு ஆயாசம அதிகமானது. “சரிப்பா” என்று சொல்லி போனை வைத்தாள். பிறகு போனை மீண்டும் எடுத்து gallery யில் சேமித்து வைத்திருந்த நரேனின் போட்டோவை delete செய்தாள்.
எழுந்து ஃப்ரிட்ஜ் திறந்து மீதம் வைத்திருந்த பீசாவை எடுத்து சூடு பண்ண ஆரம்பித்தாள். சூடானதும் எடுத்துக்கொண்டு டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.
மூன்று வருடங்களுக்கு முன் முதன் முதலாக அவளுக்கு வரம் பார்க்கலாமா என்று அப்பா கேட்டபோது என்ன அவசரம் என்றுதான் அவளும் கேட்டாள். அம்மாதான் “சும்மாயிரு. உனக்கு ஒண்ணும் தெரியாது” என்று வாயை அடைத்துவிட்டாள்.
வந்த வரனும் அமெரிக்காவில் இவள் இருந்த இடம் அருகேதான். பையன் நேராகவே வந்து சந்தித்தான். நன்றாக பேசினான். மரியாதையாக இருந்தான். கிட்டத்தட்ட ஒத்துப் போகும் என்று நினைத்தபோதுதான் இவள் அப்பா ” பையன் டாக்டர்.. அதெல்லாம் ஒத்துவராது. இப்படித்தான் நம்ம சொந்ததுத்துல…” என்று ஏதோதோ கதை சொல்லி தவிர்த்து விட்டார். அதற்கப்புறம் பல வரன்கள். சில பையன் வீட்டில் வேண்டாம் என்றார்கள். சில இவள் வீட்டில்.
நாளடைவில் லாவண்யாவுக்கு இந்த விஷயம் அலுக்க ஆரம்பித்தது. கடைசியாக இந்த நரேன். ரொம்ப நாள் கழித்து அவள் மனதில் வசந்தம். நரேனுக்கும் இவளைப் பிடித்துப்போனது. ஆனால் கடைசியில் இப்படி முடிந்து விட்டது.
திடீரென்று மீண்டும் போன். அம்மா!
“என்னம்மா?” என்றாள் அலுப்பாக.
“லாவ்ஸ்! எனக்கு கொஞ்ச நாள் உன்னோட வந்து இருக்கணும். எவ்ளோ சீக்கிரம் முடியுமோ டிக்கட் அரேஞ் பண்ணு. ரிட்டர்ன் நான் அங்க வந்து சொல்றேன்”
“என்னம்மா திடீர்னு? சரி ரெண்டு நாள்ல அரேஞ் பண்ணறேன். வா வா ரொம்ப சந்தோஷம்”
அடுத்த வாரத்தின் ஞாயிறு அன்று அம்மா வந்து சேர்ந்தாள். காரணம் தெரியாமல் லாவண்யா அம்மாவைக் கட்டிக்கொண்டு அழுதாள்
அப்புறம் அம்மாவுக்காக லீவு எடுத்து பல இடங்களுக்குக் கூட்டிச் சென்றாள். ஆபீஸ் விட்டு வந்தால் சூடான காப்பி அம்மா கை சாப்பாடு என்று இரண்டு மாதம் பறந்தே போனது.
ஒரு நாள் ஆபீசில் அப்பாவிடமிருந்து போன். “குட்டிமா.. உங்க அம்மாவுக்கு என்ன ஆச்சு? ஏன் என் போனை அட்டென்ட் செய்ய மாட்டேங்கிறா? அங்கேயே செட்டில் ஆயிட்டாளா? சென்னை வர எண்ணமில்லையா?” என்று பொரிந்து தள்ளிவிட்டார்.
“சரி நான் அம்மாகிட்டே சொல்றேன்பா” என்று சொல்லி சமாளித்துவிட்டாள். மாலை வீடு வந்ததும் அம்மாவிடம் சொன்னாள்.
“நான் பேசிக்கறேன் அப்பாகிட்ட. நீ வந்து காப்பி குடி” என்று அம்மா பேச்சை மாற்றிவிட்டாள்.
இரவு டின்னருக்குப் பிறகு அம்மாவும் மகளும் வெகு நேரம் ரம்மி விளையாடினார்கள். சுமார் பதினொரு மணிக்கு லாவண்யா “அம்மா, நாளைக்கு எனக்கு நிறைய வேலை இருக்கு. நான் தூங்கப் போறேன்” என்று சொல்லி சென்றுவிட்டாள்.
சிறிது நேரம் கழித்து தன் மொபைலை தேடி ஹாலுக்கு வந்தவள் காதில் அம்மாவில் குரல் விழுந்தது. அப்பாவிடம் பேசுகிறாள் போல. டிஸ்டர்ப் செய்ய வேண்டாம் என்று திரும்ப எத்தனித்தவள் காதில் அவள் பெயர் விழுந்தது. என்னவென்று நின்று கேட்டாள்.
“ஒரு ரெண்டு மாசம் நான் இல்லாம இருக்க முடியல உங்களுக்கு. இத்தனைக்கும் வயசு அம்பத்தாறு ஆறது. சமைச்சுப் போட சமையல்காரி, வீட்டு வேலைக்கு வேலைக்காரி, வெளில போக வர ஊபர் ஓலா. போதாததுக்கு நம்ம வீடு பக்கத்திலேயே உங்க அண்ணா, தங்கை வீடுகள். அப்படியிருந்தும் உங்களுக்கு நான் தேவைப்படறது.
பாவம் நம்ம பொண்ணு. வயசு இருவத்தாறுதான் ஆறது. அவளுக்குன்னு ஒரு துணை வேண்டாமா? அவ கஷ்டத்தைப் புரிஞ்சுக்க வேணாமா? நரேன் அப்பா அவர் பொண்ணு சம்பளத்துல கண்ணா இருக்கார்ன்னு சொன்னீங்க. அதுபோல உங்கள ஒருத்தர் சொல்ல எவ்ளோ நேரமாகும்?”
லாவண்யா ஸ்தம்பித்து நின்றாள். தன் மனவோட்டங்கள் அம்மாவுக்கு எப்படித் தெரிந்தது?
மறுமுனையில் அப்பா என்ன சொன்னார் என்று கேட்கவில்லை. “நரேன் அப்பா நம்பர் என்கிட்டே இருக்கு. சரின்னு கூப்பிட்டு நானே சொல்லிடறேன்” என்றாள் அம்மா புன்னகையோடு. அப்போதுதான் லாவண்யா அங்கே நின்றிருப்பதை கவனித்தாள்.
“அம்மா” என்றவாறே லாவண்யா ஓடிச்சென்று அம்மாவைக் கட்டிக்கொண்டாள்.
“நரேன் போட்டோ இருக்கா இல்லை டிலீட் செஞ்சுட்டியா? இல்லேனா நான் மெயில்ல அனுப்பட்டுமா?” என்றாள் குறும்பாக.
Is it an adaption ? Just a doubt ?
I think it is a common subject. Many would have written on this sub. Sorry I have doubted I could not delete my comment. My apology.
Super reality. Well written.