தீயை வளர்க்கிறார்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 5, 2025
பார்வையிட்டோர்: 221 
 
 

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எனக்கு அவனை நீண்ட காலமாகத் தெரியும். அவன் பிறந்த கிராமமும் நான் பிறந்த கிராமமும் அடுத்தடுத்துள்ள தீவுகள். 

அவன் முதன்முதலில் ஆசிரியனாகக் கடமையேற்றது நான் பிறந்த கிராமத்தில், எனது சகோதரர் அதிபராகக் கடமையாற்றிய கணேச மகாவித்தியாலயத்தில்தான்… பின்னர், அவன் காதலித்துக் கல்யாணம் செய்த கிராமத் திலேயே நானும் காதலித்து கல்யாணம் செய்தேன். 

இப்போது அவனது வீடு எங்கள் வீட்டிற்கு முன்னா லுள்ளது. 

1990 பிற்பகுதி வடபகுதியெங்கும் ‘பொம்மர்களும் ‘ஹெலி’களும் இஷ்டப்படி கண்ட இடங்களெல்லாம் அழிப்பு வேலை செய்தபோது… ஒரு நாள்… பகல் 11 மணி யிருக்கும். 

சங்கானை உதவி அரசாங்க அதிபர் காரியாலயத்தில் கையெழுத்திடச் சென்றிருந்தேன். பேரிரைச்சலோடு மூன்று ‘பொம்மர்கள்’ வந்தன. உதவி அரசாங்க அதிபர் காரியாலயம், கடைகள் யாவும் இழுத்து மூடப்பட்டன. மக்கள் சிதறி ஓடினர். பதுங்கிடம் தேடினர். என் நண்பர் உபதபாலதிபர் நடாவும் நானும் மாடிக் கட்டிடமொன் றின் மூலையில் நின்றுவிட்டு, திரும்பி வந்துகொண்டிருந் தோம். ‘பொம்மர்கள்’ நீள்வட்டமடித்து இரு முறை சுற்றி வந்தன. 

நாங்கள் வந்து கொண்டிருந்த ஒழுங்கையிலிருந்து பார்க்கக்கூடியதாக ஒரு மைல் தூரத்திற்கப்பால் பொம்மர்கள் பெருத்த சத்தத்துடன் நான்கு தடவை கீழே குத்தி இறங்கி நிமிர்ந்து பறந்தன. 

மனதுக்குள் ஒரே ஏக்கம்… தவிப்பு… உபதபாலகத்துக்கு வந்து சேர்ந்ததும் நண்பர் நடா அங்கு தர்மப் பணத்துக் காகக் காத்து நின்ற இரு ஏழை வயோதிபர்களுக்கு அவசர அவசரமாகப் பணம் கொடுத்தார். 

அப்போது வீதியால் சைக்கிளில் வந்த ஒரு பையனிடம், “எங்க குண்டுகள் விழுந்தது” என நண்பர் கேட்டார். 

“சந்தியில் தான் நாலு குண்டும்.. உங்கட.. மாஸ்ரர் ரவி ஐயா போயிற்றார். அதோட ஒரு இளம் பிள்ளை.. இரண்டு சின்னப் பிள்ளைகள்.. பாக்கேலாது..” 

இருவரும் ஓடி வந்தோம். “இளம் பெண்ணும், சின்னப் பிள்ளைகளும் துண்டு துண்டாய் போயிற்றாம்..”யாரோ வழியில் சொல்லிக் கொண்டு போனார்கள். 

அப்போதுதான் ரவியைச் சிலர் வீட்டிற்குள் தூக்கிக் கொண்டு வந்தார்கள். ‘வயிற்றில் ஒரு சின்னத் துண்டு பறந்துட்டுது. அந்த இடத்திலேயே உயிர் போயிற்றுது’. பக்கத்தில் ஒருவர் சொல்லிக் கேட்டது. என்னால் நம்ப முடியவில்லை. 

சிரித்த முகத்தோடு என் நண்பன் ரவி படுத்திருந்தான். வயிற்றைச் சுற்றிக் கட்டியிருந்த துணியில் நிறைய இரத்தம் தோய்ந்திருந்தது. 

அவன் தலையைத் தடவியவாறு ஓ வென்று வாய்விட்டு அழுது விட்டேன். அருகில் நின்ற அவனது சகலன் நல்ல தம்பி என்னை அணைத்துக் கொண்டார். முதல் நாள் இரவு பன்னிரண்டு மணி வரை ‘கேற்‘றடியில் நின்று கதைத் தோம். “சனம் உணவுப் பொருள்களுக்கு கஸ்ரப்படுகுது. எப்படியும் உதவவேணும். நீங்கள் எல்லாம் எங்களுக்கு ஒத்துழைக்க வேணும்” என்று சொன்னான். 

அவன் அரசியல் வேலை செய்யவில்லை. அரச உத்தி யோகத்தை ஒழுங்காகச் செய்தவன். மக்களைப் பற்றியே யோசித்தான். 

கடந்த பல நாட்களாக நண்பர் பலருடன் சேர்ந்து சாவகச்சேரி, கொடிகாமம் போன்ற இடங்களுக்கெல்லாம் சைக்கிளிலேயே சென்று உணவுப் பொருட்கள் வாங்கி வந்தான். கிராமத்திலுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் கிடைக்கக்கூடியதாகப் பங்கீட்டு முறையில், மலிவு விலையில் அவற்றை விநியோகிக்க ஒழுங்கு செய்தான். சந்தியில் அதற்கென ஓர் இடத்தையும் தெரிவு செய்து அதில் வைத்து உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த முன்மாதிரியையே பல கிராமத்து ஆட்களும் பின்பற்றினரே. 

உணவுப் பொருட்கள் வழங்கும் வேளையிலா குண்டு களைப் பொழிவது? எல்லோரும் பதுங்கிடம் தேடி ஓடிட ஏழைகளுக்கு உதவிய நீயும், ஏதுமறியாச் சிறுவர்களும், அவர்களை அழைத்துப் போக வந்த அப்பாவி இளம் பெண்ணும் பலியாகி விட்டீர்களே…! என் மனதில் ஆயிரம் எண்ணக் கீற்றுக்கள். 

எனக்கும் அவனுக்கும் கொள்கையளவில் பலத்த முரண்பாடுதான். ஆனாலும் அவன் மக்களை நேசித்தான். மக்களுக்கு உதவத்துடித்தான். உள்ளந் திறந்து பேசுவான்… அதனால் அவன் மீது மரியாதை..நட்பு 

சட்டப்படி உடலைப் பரிசோதனை செய்து சான்றிதழ் பெறவும்,உடலைக் கெடாமல் அடுத்த நாள் வரை பாதுகாக்கும் பொருட்டும் அரச வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அவன் வீட்டில் மூத்த மகன். அவனுக்கு பொறுப்புகள் பல இருந்தன. அவனுக்கும் மூன்று பாலகர்கள். இந்த பொறுப்புக்களை யார் சுமப்பர்… 

எண்ணிப் பார்க்காதவர் அங்கில்லை. 

அரச வைத்திய சான்றிதழ் பெற்றால், அது பின்னர் அந்தப் பாலகர்களின் எதிர்காலத்துக்கு ஏதோ ஒரு வழியில் உதவும் என்பது எமது எண்ணம். ஏனெனில் அவன் அரச ஊழியன். கடமை தவறாத நல்லதோர் ஆசிரியன். வீட்டில் நின்றோர் பலரும் தடுத்தனர். நிலைமை அப்படி. 

தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு, தெரிந்த ஒருவரின் காரில் உடலை எடுத்துச் சென்றோம். அப்போது வழி யெங்கும் ஹெலியும் பொம்பரும் பறந்தபடி… நீண்ட தூரத்துக்கு காரை ஹெலி துரத்தியது. தொடர்ந்து சுட்டுக் கொண்டு வந்தது. 

கார் ஓடிய வேகம்; புளிய மரங்களுக்கிடையில் அதனை மறைத்தது; நாங்கள் நிலத்தில் படுத்துக்கொண்டது; சரமாரியாகச் சுட்டுத் தள்ளியபின் ஹெலி திரும்பியது; பின்னர் துரித வேகத்தில் கார் வைத்தியசாலைக்குள் புகுந்தது; எல்லாமே கனவு போல் தான் இருந்தது. 

பரிசோதனை முடிந்து, சான்றிதழ் பெற்று உடலையும் பதப்படுத்திக்கொண்டு வீடு வந்து சேர்க்க மாலை ஏழரை மணிக்கு மேலாகிவிட்டது. 

காருக்கு வெளிச்சம் இல்லை. ஆனாலும் மின்னல் வேகத்தில் வந்து சேர்ந்தது சாரதியின் திறமைதான்! வீதியில் வேறு வாகனங்கள் நடமாட்டமும் அரிதுதானே. என் மனைவிக்கு நான் எங்கு சென்று வந்தேன் எனத் தெரியாது. என்னைக் காணாது கலங்கிப் போயிருந்தவர் முற்றத்தில் என்னைக் கண்டதும் ஓடி வந்து கேட்டாள்.. 

“எங்கே போய்விட்டு வந்தீர்கள்.. நல்லதம்பி அண்ணை.. வருத்தக் காற மனுஷன் அவரை இந்த நேரத்திலை தனிய ஆஸ்பத்திரிக்கு போக விடுறதே.. அதுவுமில்லாமல்.. ரவி…” என்னால் பேச முடியவில்லை. கண்கள் முட்டிப் போயின. 

என் மூன்று வயது மூத்த மகள் வந்து, “அப்பா.. ஏன் கீதா அக்கா வீட்டில அழுது கேட்குது.. என்ன நடந்தது” என்று கேட்டாள். 

பேச்சு வரவேயில்லை. கண்ணீர் முட்டி சேட்டில் துளி விழுந்தது. ரவியும் நானும் அவனது வீட்டு முற்றத்திலி ருந்து இரவு நெடுநேரம் வரை பல விடயங்களும் கதைத்துக்கொண்டிருக்க, என் மூத்த மகளும் அவன் ஒரே மகள் கீதாவும் ‘லைற்’ வெளிச்சத்தில் எத்தனை நாள் ஓடி விளையாடியிருப்பார்கள். 

பல நாட்கள் சென்றும்…. என் மகள் நடுச்சாமத்தில் திடுக் கிட்டெழுந்து என்னை எழுப்பிக் கேட்பாள்… “அப்பா … கீதா அக்காவின் அப்பா செத்துப் போயிற்றாரா.. இனி வரவே மாட்டாரா.. கீதாவும் என்னைப் போல அப்பா வின்ர செல்லம் தான்.. பாவம் அப்பா…’ 

என் கண்கள் நிறைந்துவிடும். மகளை இறுக அணைத்துக் கொள்வேன். 

இப்போது என் மகளுக்கு ஐந்து வயது கூட நிரம்ப வில்லை. பொம்மர் சத்தம் கேட்டால் எல்லோரையும் ‘பங்கருக்குள்’ ஓடி விடுமாறு முதலில் கூவி அழைப்ப துடன், ஒரு வயது கூட நிரம்பாத தங்கச்சியையும் தூக்கிக் கொண்டு ‘பங்கருக்கு’ள் ஓடுகிறாள். 

பங்கருக்குள்ளும் விளையாட்டுப் பொருட்கள்… 

“கீதா அக்காவை அழ வைச்ச… அவளின்ரை அப்பாவை சாக்காட்டின ‘பொம்பரை’ ஒரு நாளைக்கு…” அவள் கையில் அந்த சீனத் தயாரிப்பு விளையாட்டுத்துப்பாக்கி… பேரிரைச்சலோடு சீனத் தயாரிப்பு ‘சகடை’ விமானம் எங்கோ தூரத்தில் பீப்பா குண்டைத் தள்ளிவிட்டுப் போகிறது. 

என் காதுகளுக்குள்ளிருந்து இன்னும் இரைச்சல் சத்தம் போகவில்லை. மகள் வெளியில் வந்து நிமிர்ந்து பார்க்கிறாள். 

– இளங்கோவன் கதைகள், முதற் பதிப்பு: வைகாசி 2006, உமா பதிப்பகம், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *