திறந்தவெளி




(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கன்னிப் பருவத்திலே வழக்கமாய் வரும் கனவுகள் கற்பனைகள் எல்லோருக்கும் வருவது போலவே கனகாவுக்கும் வந்தன. வாழ்க்கை சொர்க்கமாகத் தோன்றியது. எதைப் பார்த்தாலும் குறும்பு மின்னியது. அடிக்கடி சிரிப்பும் வந்தது வாழ்க்கையே சுவையாக மாறியது. நகைச்சுவை உணர்வு தானாக விளைந்தது. எதையுமே ரசிக்க வேண்டும் என்னும் ஆவல் கிளர்ந்தது.

ஆமாம் ஆனால் எல்லாம் இப்படி வறண்டு போகும் என்று எதிர்பார்க்கவில்லை அவள். எல்லா உணர்வுகளும் எல்லோருக்கும் வரும் ஆனால் சிலருக்கு மட்டும் நடக்கும். எல்லோருக்கும் கிடைத்துவிடாது என்னும் வாழ்க்கையின் யதார்த்தம் அவளுக்கு நிதர்சனத்தை உணர்த்தியது. அவளும் ஏறக்குறைய அதை ஏற்று வாழப் பழகிவிட்டாள். இருந்தாலும் பலருக்கு கிடைக்கும் அந்த இயல்பான வாழ்க்கை சுகானுபவங்கள் அவளுக்கு மட்டும் ஏன் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கின்றன எட்ட எட்ட இன்னும் கொஞ்சம் உயரமாய் எட்டாத விண் வெளியாய் கடக்கக் கடக்கக் குறையாத பாலைவனமாய் ஏன் இப்படி ஆகிப் போனது.
இன்றும் யாரோ பெண்பார்க்க வருகிறார்களாம். புதுக் கன்னியாய் இருந்த அவள், முதிர் கன்னியாய் முதிர்ந்துவிட்டாள். வருபவன் தலை வழுக்கை என்றாலும், வயதில் முதிர்ந்தவன் என்றாலும் அவனுக்குப் பிடித்திருக்க வேண்டும் அப்போதுதான் வாழ்க்கை அமையும்.
அவளுக்கு ஏனோ (Beggers can not Be a chooser) என்னும் சொல் நினைவுக்கு வந்தது. அவள் மட்டும் என்ன தவறு செய்துவிட்டாள் அப்படி.
ஒரு நாள் விரக்தியில் அம்மாகூட யாரையானும் காதலிக்கவாவது உனக்குத் திறமை இருக்கா அதுவும் இல்லையே. பகவானே, இவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் குடுன்னு பகவானை வேண்ட ஆரம்பித்துவிட்டாள். அப்பாவோ கேட்கவே வேண்டாம் வாயைத் திறந்து ஒரு வார்த்தை கூட அவள் மனம் புண்படும்படி பேசியதில்லை. ஆனால், உனக்குக் கல்யாணம் ஆனப்புறம்தான் அடுத்தவளுக்குக் கல்யாணம் செய்யணும். உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சால் நல்லா இருக்கும் அப்பிடீன்னு ஒரு பெருமூச்சு விடறாரே அதுவே போதுமே. அப்பாவின் பெருமூச்சும் அவள் மனத்தில் தீயாய்த் தகித்துக்கொண்டிருந்தது.
மாலை மணி ஆறு. பெண்பார்க்க வந்தவர்கள் வீட்டினுள் நுழைவதும், அப்பா அவர்களை வழக்கமாக வரவேற்கும் பாணியில் குரலில் போலியான உற்சாகத்துடனும், ஆனால் அநேக எதிர்பார்ப்புகளுடனும் வரவேற்பது காதில் விழுந்தது. ‘கனகா அவங்கல்லாம் வந்துட்டாங்க. ரெடியா இரு அப்பிடீன்னு பரபரத்தாள் அம்மா, ஏதோ ஓட்டப் பந்தயத்துக்குத் தயாராக்குவது போல. அவள் கவலை அவளுக்கு. கிட்டே வந்து புடவைத் தலைப்பை இழுத்து நன்றாகப் போர்த்திவிட்டாள். சரி அவங்க வந்து கொஞ்ச நேரம் கழிச்சு நான் வந்து உன்னைக் கூட்டிண்டு போறேன். இங்கேயே இரு. முகத்தைக் கொஞ்சம் புன்சிரிப்பா வெச்சிக்கோ’ என்றபடி கூடத்துக்கு போனாள்.
எப்போ நம்ம காட்சி வருமோ அப்போ சரியான நேரத்துக்கு உள்ளே நுழைஞ்சு நம்ம கதாபாத்திரத்தை வசனமெல்லாம் மறக்காம பேசி சரியா நடிக்கணுமேன்னு கவலைப்படற நடிகன் மாதிரி எப்போ கூப்புடுவாங்களோ அப்பிடீன்னு ஒரு படபடப்போட காத்திருந்தாள் கனகா. வழக்கமான வரவேற்பு எல்லாம் முடிந்த பின்னால் அம்மா உள்ளே வருவது தெரிந்தது.
அவங்களுக்குக் காப்பி எடுத்துண்டு போயி குடுத்துட்டு நமஸ்காரம் செய்யி என்றாள், ஏதோ இதுதான் எனக்கு முதல் முறை போல் நினைத்துக்கொண்டு.
இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க, நடந்து வந்துகொண்டிருந்தாள் கனகா. மனதுக்குள் மாப்பிள்ளை எப்பிடி இருப்பாரோ கருப்போ சிவப்போ உயரமோ குள்ளமோ எப்பிடி இருந்தா என்ன இவனாவது நம்மைப் பிடிக்கிறதுன்னு சொல்லணும். அதுக்கப்புறம் அவங்க கேக்கறதெல்லாம் செய்ய அப்பாக்குச் சக்தி இருக்கணும். அப்பா ஒப்புக்கணும் இன்னும் இத்யாதி இத்யாதிகள். சரி ஆண்டவா நீ விட்ட வழின்னு மனசுக்குள்ளே நெனைச்சிண்டு கூடத்துக்கு வந்து அவங்களுக்கெல்லாம் காப்பியைக் கொடுத்தாள் கனகா!
தாம்பாளத்தைக் கீழே வைத்துவிட்டு, குனிந்து நமஸ்கரித்தாள். அவள் மனத்தில் எப்போதோ எழுதிய “இது முப்பதாவது முறை ஒரு வேளை இவன் தானோ” என்ற புதுக்கவிதை வரிகள் நிழல் படமாய் ஓடின.
அப்படியே லாகவமாய் மாப்பிள்ளையைப் பார்த்தாள். அட அழகாகத்தான் இருக்கிறார்! இளமையாகவும் இருக்கிறார். மனக்கண்ணில் தன் பக்கத்திலே அவரை நிறுத்திவைத்து ஜோடிப்பொருத்தம் பார்த்தாள். இப்பிடி உக்காரும்மா என்ற பெரியவர்களின் வேண்டுகோளுக்குச் செவி சாய்த்து அப்படியே பவ்வியமாய் உட்கார்ந்தாள். அவள் தலை குனிந்தவண்ணம் இருந்தாலும் ஒரு வேளை இவன்தானோ என்னும் வரிகளில் மனம் நிலைத்தது. காதுகள் கூர்மையாயின.
மாப்பிள்ளை ரமேஷ் அவருடைய தகப்பனாரிடம் ஏதோ சொன்னதும் அந்த இடமே திடீரென்று மகிழ்ச்சியில் திக்கு முக்காடியது. கனகாவுக்குப் புரிந்தது. மாப்பிள்ளை தன்னைப் பிடித்திருக்கிறது என்று சொல்லிவிட்டார் என்று. நிமிர்ந்து பார்த்தாள். அம்மாவுக்கு வாயெல்லாம் பல். அப்பா நிம்மதிப் பெருமூச்சு விட்டார். வனப்பின் உச்சியில் இருந்த தங்கை கல்யாணி மனம்கொள்ளா மகிழ்ச்சியுடன் அக்காவைப் பார்த்துக் கட்டை விரலை உயர்த்தினாள். காதருகே வந்து கங்ராட்ஸ் அக்கா என்றாள். கனகாவுக்கும் மனம் நிறைந்தது.
பெண்பார்க்க வந்த ரமேஷின் தாயார், கனகாவைப் பார்த்து ‘நீயும் நல்லா பாத்துக்கோம்மா. உனக்கு மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்கா’ என்றாள். மீண்டும் ஒரு முறை மாப்பிள்ளையைப் பார்த்தாள் கனகா அதிர்ந்தாள் மாப்பிள்ளை ரமேஷ் கிண்டல் செய்துகொண்டிருந்த கனகாவின் தங்கை கல்யாணியிடம் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தான். அவர்கள் இருவரையும் பார்த்த கனகாவின் மனத்தில் அட, நாம இப்பிடி சிந்திக்கலையே என்று ஒரு புது எண்ணம் தோன்றியது. மனத்தில் தோன்றிய எண்ணத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு எழுந்தாள்.
‘நான் மாப்பிள்ளைகிட்ட தனியா பேசணும்’ என்றாள். அதுனாலென்ன ரெண்டு பேரும் மனசு விட்டுப் பேசுங்க தப்பில்லே. ஓரளவாவது புரிஞ்சிண்டுதான் கல்யாணம் பண்ணிக்கணும். அப்போதான் வாழ்க்கை நல்லா இருக்கும்’ என்றாள் பையனின் தாயார் பெருந்தன்மையாக. கனகாவும் ரமேஷும் கூடத்தில் தனித்து விடப்பட்டனர். மற்றவர் அனைவரும் எழுந்து வீட்டைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினர்.
கனகா ரமேஷிடம், “நான் ஒண்ணு சொன்னா தப்பா நெனைக்க மாட்டீங்களே. எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு, நான் அடிக்கடி பெண் பார்க்க வர்றவங்க முன்னாடி நமஸ்காரம் செஞ்சு, அவங்க நிராகரிச்சதுக்கு அப்புறம் மனசு உடைஞ்சு போயிருக்கேன். முதல் முறையா என்னைப் பிடிச்சிருக்குன்னு சொன்ன ஆண்மகன் நீங்கதான். எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு. ஆனா என் மனசுலே தோன்றியதைச் சொல்றேன். ஏத்துக்கறதும் ஏத்துக்காததும் உங்க இஷ்டம். எனக்குன்னு ஒருத்தன் வராமலா போகப் போறான். எனக்கு பழகிப் போச்சு. அதுனாலே நான் காத்திருக்கத் தயார். இந்த நிலைமை இனிமே எந்தப் பொண்ணுக்கும் வரக் கூடாது. குறிப்பா என் தங்கை கல்யாணிக்கு வரவே கூடாது. அதுனாலே நீங்க கல்யாணியைக் கல்யாணம் செஞ்சிகிட்டா எனக்கு மகிழ்ச்சியா இருக்கும்” என்றாள் கனகா.
ரமேஷ் அவளை வினோதமாகப் பார்த்தான். “சரி நான் கூடத்திலே போயி சொல்லிடறேன். கவலைப்படாதீங்க. உங்களை மாட்டிவிட மாட்டேன்” என்றான். மீண்டும் அங்கே அனைவரும் கூடினர். மாப்பிள்ளை தொண்டையைச் செறுமிக்கொண்டு “நாங்க ரெண்டு பேரும் மனம் விட்டுப் பேசினோம். நான் இந்தக் கல்யாணம் செஞ்சிக்கறதிலே பெருமைப்படறேன். ஆமாம் எனக்குக் கனகாவை ரொம்பப் பிடிச்சிருக்கு. இந்த நிமிஷம் முதல் இந்த வீட்டு மாப்பிள்ளை மட்டுமல்ல நான். இவங்களுக்கும் பிள்ளை மாதிரிதான். கல்யாணிக்கும் ஒரு நல்ல மாப்பிள்ளையா பாத்து பொருத்தம் பார்த்து ரெண்டு கல்யாணத்தையும் ஒரே நேரத்திலே நடத்தணும் அப்பிடீங்கறது என் ஆசை. கவலைப்படாதீங்க. கல்யாணிக்கு ஏத்த மாப்பிள்ளை பாக்கறது என் பொறுப்பு” என்றான் ரமேஷ். அங்கே மீண்டும் மனிதம் பூத்தது.
– வெற்றிச் சக்கரம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: அக்டோபர் 2012, தமிழ்க் கமலம் பதிப்பகம்.