திருமண நாள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 24, 2025
பார்வையிட்டோர்: 241 
 
 

நடுத்தர வயது பெண்மணி பூங்குழலி , மாடியறையில் , கட்டிலில் அமர்ந்து தன்னுடைய சேலைகளை மடித்துக் கொண்டிருந்தாள். அப்போது அந்த அறைக்குள் வந்த அவளுடைய பதின்பருவ மகள் தென்றல் அவள் அருகில் வந்து அமர்ந்நாள்.

“இன்னிக்கு ஒங்களுக்கு வெட்டிங் டே ன்னு நாகா தாத்தா சொன்னாரு.. மெனி மோர் ஹேப்பி ரிடர்ன்ஸ் ஆப் த டே ம்மா” என்று அவளுடைய கரங்களைப் பற்றினாள் தென்றல்.

“மம்மி ஒங்களோடது காதல் திருமணமா?“

“அதெல்லாம் இல்லை அது பெரிய கதை … சொல்றேன்.”

அந்த அறையின் கதவருகே தென்றலின் அப்பா தமிழ் வந்து நின்றதை இருவரும் கவனிக்கவில்லை.


பதினைந்து ஆண்டுகளுக்கு முன்…

செங்கல்பட்டு நகரின் முக்கிய அரசியல் புள்ளி நாகா என்றழைக்கப்படுகிற நாகபூஷணம். அவரது மனைவி சுசீலா. இந்த இணையரின் ஒரே மகள் பூங்குழலி. இவர்களுக்கு மகன்கள் இல்லை. நாகபூஷணம் சார்ந்திருந்த அரசியல் கட்சி ஆட்சியில் இருந்த போது அவரிடம் உதவியாளராக வந்து சேர்ந்தவன் தமிழ் என்கிற தமிழ் அழகன். கெட்டிக்கார இளைஞன். அவன் மேடையில் நன்றாக பேசுவதால் அவனை கட்சிப் பேச்சாளன் ஆக்கப் பரிந்துரை செய்தார் நாகபூஷணம். எந்த ஊருக்குப் பேச போனாலும் ஊருக்கு உடனே திரும்பி வந்து நாகபூஷணத்தின் நிழல் போலவே அவருடன் இருந்தான் தமிழ்.

நாகபூஷணத்தைப் போலவே அந்த ஊரில் மக்களிடையே செல்வாக்கு பெற்ற எதிர்க்கட்சிப் பிரமுகர் நம்பி ராஜன்.

ஒரு நாள். நாகபூஷணம் மகிழ்ச்சி அடைவார் என்று நினைத்து , நம்பிராஜன் கடத்தப்பட்டு விட்டார் என்ற செய்தியை நாகாவிடம் சொன்னான் தமிழ். அதிர்ச்சி அடைந்த நாகா, உடனே நம்பியின் வீட்டுக்குச் சென்று அவருடைய மனைவிக்கும் மகன்களுக்கும் ஆறுதல் கூறி விரைவில் மீட்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறி வருகிறார். ஆளும் கட்சியின் மற்ற புள்ளிகளுக்கு அவர் அவ்வாறு செய்தது பிடிக்கவில்லை.

இரண்டு நாள் கழித்து மாலையும் இரவும் சந்திக்கும் நேரத்தில் , நாகா அவரது வீட்டு அருகே உள்ள கட்டுமானம் பாதியில் நின்று உள்ள இடத்தில் தான் நம்பிராஜனை வைத்திருப்பார்கள் என்று முடிவு செய்து, தமிழிடம் சொல்லாமல் அங்கு போகிறார். இருட்டி விடுகிறது.

மூன்றாவது மாடிக்குச் செல்கிறார். நம்பிராஜனைக் கடத்தி வைத்து இருந்த அன்பு தன்னுடைய ஆட்களிடம் பேசினான் –

“நாம இவரை கடத்தினது மீடியாவுக்கு எல்லாம் தெரிஞ்சு போச்சு. இவரை விட்டுவிடுவோம்… போய் செங்கல்பட்டு பஸ் ஸ்டான்ட் கிட்ட விட்டுட்டு வந்துடுங்க”

அவனுடைய ஆட்களில் ஒருவன் “இவனை லேசில் நான் விட மாட்டேன். நம்ம கட்சி ஆட்சியில இருந்தப்ப எனக்கு ஒரு கான்ட்ராக்ட்டும் கொடுக்கல.. இவனை நான் சும்மா விட மாட்டேன்.” என்று சொல்லிக் கொண்டே கத்தியுடன் நம்பிராஜனை நோக்கிப் பாய்த்தான். மறைந்திருந்த நாகா, நம்பியைக் காப்பாற்ற அருகில் வந்த போது அவன் இருவரையும் தாக்க முற்பட்ட போது நாகாவைத் தொடர்ந்து வந்த தமிழ் இருவரையும் காப்பாற்றினான். அப்படியும் நாகா கீழே விழ நேர்ந்ததால் அவருக்குத் தலையில் அடிபட்டது. மூவரும் சமாளித்து எழுந்து நின்ற போது காவல் துறையினர் வந்தனர்.

சிறிய கிளினிக் போன்ற மருத்துவமனையில் நாகபூஷணம். அவரது தலையில் கட்டு. அவர் அருகில் சின்ன ஸ்டூல்களில் அவரது மனைவி சுசீலாவும் அவரது மகள் பூங்குழலியும் அமர்ந்து இருந்தார்கள்.

முகத்தில் புன்னகையுடன் தமிழ் அங்கே வந்தான்.

நாகபூஷணம் கேட்டார் –

“என்னய்யா முகத்துல இவ்ளோ பிரகாசம்?”

தமிழ்: “அண்ணே நீங்க எதிர்க்கட்சி புள்ளியை மெனக்கெட்டு காப்பாத்தினதுக்கு ஒங்க மேல மேலிடத்துக்கு புகார் மேல புகார் பறந்திருக்கு. ஆனா, முதலமைச்சர், நீங்க கட்சி எல்லாம் பார்க்காம ஒரு பிரமுகரை ரிஸ்க் எடுத்து காப்பாத்தி இருக்கீங்க மனிதாபிமானத்தோட அதனால ஒங்களுக்கு பாராட்டுக் கடிதம் தயார் பண்ண சொல்லி இருக்காராம்.. காலியா இருக்கிற மா.செ. பொறுப்பு ஒங்களுக்கு தான்ன்னும் சொல்லிட்டாராம்”

நாகாவின் முகம் மலர்ந்தது.

“யோவ் நேத்து எங்க ரெண்டு பேரை காப்பாத்தினதுக்கு , இப்ப நல்ல சேதி சொன்னதுக்கு உனக்கு ஏதாவது செய்யணும் யா என்ன வேணும்னு கேளு”

தமிழ் தலையைத் தாழ்த்திக் கொண்டு

“இனிமே ஒங்கள மாமான்னு கூப்பிட விரும்பறேன்…”

“அப்படின்னா” கேட்டார் நாகா.

அவருடைய மனைவியார் பேசினார்

“புரியலயா ஒங்களுக்கு … ஒங்க பொண்ண கட்டி கொடுக்க சொல்றான் சொல்றாரு.. நீங்க டெரர்ன்னு நெனச்சுகிட்டு ஒங்க பக்கத்து சொந்தமும் என் பக்கத்து சொந்தமும் பொண்ணு கேட்டு வர மாட்டேங்கறாங்க இல்ல இவனுக்கே இவருக்கே பூவ கட்டிக் கொடுத்துடலாம்”

நாகா, “நானா எப்படி முடிவு செய்ய முடியும்” என்று பூங்குழலியைப் பார்த்தார். பூங்குழலியின் முகத்தில் புன்னகை . “அப்ப சரி ” என்றார் நாகா முகத்தில் மகிழ்ச்சியுடன்.


தென்றல் அம்மாவிடம் பேசினாள் –

“கொக்கு மாதிரி காத்திருந்து ஒன்ன தட்டிகிட்டு வந்துட்டாரு அப்பா.. வடிவேலு சார் காமெடில சொலறா மாதிரி என்ன ஒரு புத்திசாலித்தனம்”

தமிழ், அவர்கள் அருகில் வந்தான். மகளின் தோளைத் தட்டினான் .

மனைவியிடம் இதெல்லாமா குழந்தை கிட்ட சொல்லுவ என்றான்.

தென்றல் மீண்டும் வாயாடினாள் –

“அம்மா .. அப்பா, இனிமே பெரிய மனுசங்களை காப்பாத்த போகாம பாத்துக்கோ.. நான் சொல்றதை சொல்லிட்டேன். யாரையாவது காப்பாத்த போய் அவங்களுக்கு ஒன்ன மாதிரி அழகான மகள் இருந்தா எனக்கு சித்தியாக்கிடுவாரு…”

கூறிக்கொண்டே அறையை விட்டு ஓடினாள் தென்றல். “பேச்சை பாரு” என்றான் தமிழ். பூங்குழலி சிரித்தாள்.

(இந்தப் புனைகதையின் சூழலும் கதை மாந்தரும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல)

எஸ்.மதுரகவி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *