கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 10, 2026
பார்வையிட்டோர்: 3,379 
 
 

(1947ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்  13-15 | அத்தியாயம்  16-18 | அத்தியாயம்  19-21

பதினாறாவது அத்தியாயம்

ஒரு ரயில் வண்டியில் ஒரே சமயத்தில் எத்தனை விதமான பிரயாணிகள் பிரயாணம் செய்கிறார்கள்? வெவ்வேறு வயதினர், வெவ்வேறு கொள்கையை யுடையவர்கள். வெவ்வேறு நோக்கங்களுடன் வெவ்வேறு ஊர்களுக்கல்லவா செல்கிறார்கள்! சிலர் கல்யாணத்திற்காகச் செல்பவர்கள்; சிலர் இழவிற்காக; சிலர் வியாபாரஞ் செய்யப் போகிறார்கள். சிலர் கல்வியின் நிமித்தம் பிரயாணத்தை மேற்கொள்கிறார்கள். சிலர் பிரசங்கம் செய்யவும், பலர் பிரசங்கம் கேட்கவும் போகிறார்கள். வேறு சிலர் உல்லாசமாகப் பிரயாணம் செய்கிறார்கள். அன்று அந்த ரயிலில் பிரயாணம் செய்த பாலகிருஷ்ணனும் சிவகாமியும் எந்த நோக்கத்துடன் எங்கே சென்று கொண்டிருந்தார்கள்?

இரண்டு தினங்களுக்கு முன்பு பாலகிருஷ்ணனைச் சிவகாமி சாப்பிடக் கூப்பிட்டதும், அவன் வருவதற்கு மறுத்ததுமான சம்பவம் சிவகாமியின் மனதில் அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தது.

அவள் தன்னை மிகவும் நொந்து கொண்டு, தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டுமென்று சங்கற்பமும் செய்து கொண்டாள். இது இவ்வாறிருக்க. பாலகிருஷ்ணனின் மனோநிலை எப்படி இருந்தது? சிவகாமியின் விஷயத்தில் மிகவுங் கொடூரமாக நடந்து கொண்டதாகவும், அவளை அவன்தான் அவமானப் படுத்தி விட்டதாகவும் நினைத்தான். அவன் நடந்து கொண்டவிதம் சரிதானே என்று திடீரென இன்னொரு எண்ணமும் அவனுடைய மன தில் குறுக்கிட்டது. இல்லை, இல்லை அவளுடைய மனதை நான் புண் படுத்தி விட்டேன். நான் அவளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளவேண்டும்’ என்று தனக்குள் அடிக்கடி அவன் சொல்லிக் கொண்டான்.

பாலகிருஷ்ணன் மீண்டும் யோசித்தான். எதற்காக மன்னிப்புக் கேட்கவேண்டும்? மனனிப்புக்கேட்பது எதைக் குறிக்கும்? அவளல்லவா அவனை அவமானப் படுத்தினாள்! ஆசையினால் அவள்தானே மன்னிப்புக் கேட்கவேண்டும்? அவள்தான் எதற்காக மன்னிப்புக் கேட்கவேண்டும்? அவள் சொன்னது சரிதானே. அவனுக்குத் தனிமையில் அவள் உணவு பரிமாறலாமா? அவள் யார் அவனுக்கு? முன் பின் யோசியாமல், ஏதோ ஒரு நனநேரத்தில் அந் நிகழ்ச்சிகள் நடந்துவிட்டன. அவை அவ்வாறு நடந்தது நன்மையேயாகும். இனி அவளைப்பற்றி அவன் ஒருபோதும் நினைக்கக் கூடாதென்று தீர்மானித்துக் கொண்டான்.

இவ்வாறு அவர்களிருவருடைய உள்ளங்களிலும் புயல் சற்று அமர்ந்திருந்தபோது, அவ்விருவரையும் விதி தனிமையில் ஒன்று சேர்த்தது.

லக்ஷ்மியம்மாளுக்குக் காய்ச்சல் நின்றுவிட்டது. ஆயினும் மிகவும் பலஹீனமாயிருந்தாள். அங்ஙனமிருக்கையில், சிவகாமியை ஒரு அவசர காரியத்தின் நிமித்தம் உடனே கொண்டு வந்து விடுமாறு திருநெல்வேலியி லிருந்து கடிதம் வந்து சேர்ந்தது. யார் கொண்டு போய் விடுவது? லக்ஷ்மியம்மாள் மிகவும் பலஹீனமாயிருந்தாள். அந்நிலையில் அவள் போக முடியாது. போனால் மீண்டும் படுத்துக் கொள்வாள். சுந்தரஞ் செட்டியாருக்குக் கடையில் அவசர வேலைகளிருப்பதாகச் சொன்னார். ஆகையினால் பாலகிருஷ்ணனே அவளைக் கொண்டு போய் விட்டு வருவது என்று தீர்மானிக்கப்பட்டது. ஒரே கல்லில் இரண்டு பழங்களைக் குறிபார்த்தார், சுந்தரஞ் செட்டியார். பாலகிருஷ்ணன் சிவகாமியைத் திருநெல்வேலியில் அவளுடைய கணவன் வீட்டில் சேர்த்துவிட்டு, அப்படியே தூத்துக்குடிக்குச் சென்று சில சரக்குகள் கொள் முதல் செய்து கொண்டு வரவேண்டுமென்பது ஏற்பாடு. பேரனை வியாபாரத்தில் பழக்கினாற் போலும்ஆகுமென்று சுந்தரஞ்செட்டியார் நினைத்தார். யானைக்கும் அடி சறுக்கும் என்பார்கள். எல்லாம் அறிந்திருந்த சுந்தரஞ் செட்டியாருக்கும் கால் சறுக்கி விட்டது!

பாலகிருஷ்ணனும் சிவகாமியும் ரயிலில் சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் ஏறியிருந்த வண்டியில் விசேஷமாகக் கூட்டமில்லை. பேசுவதற்கு ஒரு சந்தர்ப்பங் கிடைத்தபோது, பாலகிருஷ்ணன் ‘சிவகாமி,” என்றான்.

அவள் பதிலளிக்கவில்லை. ஆனால் அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

“நான் உன் மனதைப் புண்படுத்தி விட்டேன். நீ என்னை மன்னிக்க வேண்டும்.”

நெருப்பின் மீது பூத்திருந்த நீறு அகன்று, அது கொழுந்துவிட ஆரம்பித்தது.

“உன்னை நான் என்ன மன்னிப்பது? கடவுள் என்னைத்தான் மன்னிக்க வேண்டும்.”

சிவகாமியின் இவ்வார்த்தைகள் அவர்களுடைய பேச்சுக்குத் தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்தது. வெகுநேரம் வரைக்கும் இருவரும் எதுவும் பேசவில்லை. அவர்களுடைய உள்ளங்களில் என்னென்ன எண்ணங்கள் தோன்றினவோ!

வண்டி வேகமாய்ச் சென்று கொண்டிருந்தது. மனித உள்ளத்தின் உணர்ச்சி வேகம் அதைவிடக் குறைந்ததா? நன்செய்களையும், புன்செய்களையும், மரங்களையும் புதர்களையும், கால்களையும் ஆறுகளையும், வாய்க்கால்களையும் பின்னிடச் சென்று கொண்டிருந்தது ரயில். உணர்ச்சிப் பெருக்கு எதை எல்லாம் தாண்டிச் சென்று கொண்டிருந்தது? தூரத்தை ரயில் பொருட்படுத்துவதில்லை. உணர்ச்சி எதை மதிப்பதில்லை? மீண்டும் பாலகிருஷ்ணன்தான் பேச்சை ஆரம்பித்தான்.

“சிவகாமி!”

“என்ன?”

“இன்றைக்குத் தென்காசியிலிறங்கி, குற்றாலத்து அருவியில் முழுகிவிட்டு நாளைக்குத் திருநெல்வேலி. போகலாமா?”

“நாம் திருநெல்வேலிக்கல்லவா டிக்கட் எடுத்திருக்கிறோம். எப்படி இறங்க முடியும்?”

பாலகிருஷ்ணன் ஒரு புன்சிரிப்புடன் தன் பையி லிருந்து டிக்கட்டுகளை எடுத்துக் காட்டினான். தென்காசிக்கே டிக்கட்டுகள் வாங்கப் பட்டிருந்தன! அவைகளைப் பார்த்ததும் சிவகாமியின் உள்ளத்தில் ஒருவிதமான திகில் குடி கொண்டது.

குற்றாலம் என்றவுடன் சிவகாமிக்கு அவளுடைய கணவனின் ஞாபகம் வந்தது.

“குற்றாலத்திற்குப் போயிருக்கிறாயா, சிவகாமி?” என்று ஒருநாள் பகவான் செட்டியார் அவளைக் கேட்டார்.

“நான் குற்றாலம் ஒன்றுதான் பார்க்கவில்லை! மற்றதெல்லாம் பார்த்துவிட்டேன்!” என்று சிரித்துக் கொண்டே சிவகாமி பதிலளித்தாள்.

”கன்னியாகுமரி முதல் காசிவரைக்கும் உன்னைக் கூட்டிக் கொண்டு போய்க் காட்டுகிறேன், சிவகாமி,” என்றார் பகவான் செட்டியார்.

சிவகாமி பதிலொன்றும் பேசவில்லை.

“இந்த வருஷம் ‘சீசனுக்கு’ நாம் குற்றாலம் போகலாம் சிவகாமி.”

பின்பு சிறிது நேரம் யோசித்துக் கொண்டிருந்து விட்டு மீண்டும் தான் சொன்னதையே வற்புறுத்துவது போல் சொன்னார். “வியாபாரம் எக்கேடு கெட்டாலும் சரி, இவ் வருஷம் அவசியம் போவோம்!”

அவளுடைய கணவன் போகவேண்டும் என்று விரும்பிய குற்றாலத்திற்குத்தான் இப்பொழுது சிவகாமி சென்று கொண்டிருந்தாள். ஆனால் யாருடன்?

ரயில் தென்காசியை அடைந்தது. பாலகிருஷ்ணனும் சிவகாமியும் ரயிலைவிட்டு இறங்கினர். பாலகிருஷ்ணன் திருக்குற்றாலத்திற்குப் போக ஒரு குதிரை அமர்த்தினான். சிவகாமி முதலில் ஏறி வண்டிக்குள் ஒண்டி ஒடுக்கமாய் உட்கார்ந்து கொண்டாள். அவளுடைய முகம் பிரகாசமற்றிருந்தது. பாலகிருஷ்ணன் பின்னால் ஏறி உட்கார்ந்தான்.

“அருவிக் கரைக்கே விடவா, ஸார்?” என்று வண்டிக்காரன் கேட்டான்.

”ஆம்,’ என்றான் பாலகிருஷ்ணன்.

கண்கொள்ளா இயற்கைக் காட்சிகளிடையே ஓடிச் சென்று சிறிது நேரத்திற்குப்பின் வண்டி அருவியின் முன்னால் நின்றது. ‘ஜோ!’ என்ற சப்தத்துடன் ஏராளமான தண்ணீர் மலையினின்றும் கீழே விழுந்து கொண்டிருந்தது. ஆஹா! எத்தகைய அழகான காட்சி! என்ன அற்புதமான நீர் வீழ்ச்சி!

பொதிய மலை மிகப் பழமையான தொன்று. பழம் பாறை விளிம்பென்பர் பூகோள சாஸ்திரிகள். பொதிய மலையரசன் தன் மார்பகத்தே கொண்டான் சிற்றாற்று மங்கையை. கணவன் உள்ளங்குளிர அவன் மார்பகத்தே ஓடிக்கொண்டிருந்தாள் அவள். திடீரென்று சமநிலத்தைக் கண்ணுற்றாள். கல் தோன்றிய பின்பு தோன்றியது மண். அதனுடைய இளமை அவளை வசீகரித்தது. இளமை ததும் பிய அச் சமநிலத்தை யடையக் காமுற்றாள் சிற்றாற்று மங்கை. ஒரே வீழ்ச்சி! பொங்குமா கடல் அவ்வீழ்ச்சியைத் தடுக்கமுயன்றது முடியவில்லை! ‘நான் விழுந்தே தீருவேன்’ என்பதுபோல், பொங்கிக் கொந்தளித்துக்கொண்டு அவள் விழுந்து விட்டாள். முதிய பொதிய மலையை விட்டு இளைய சமநிலத்தைச் சேர்ந்து விட்டாள் சிற்றாற்று மங்கை, அதில்தான் எத்தகைய வீழ்ச்சி!

வண்டிக்காரனுக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டுச் சிறிதுநேரம் அவ்வருவியையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு பாலகிருஷ்ணனும், சிவகாமியும் நின்று கொண்டிருந்தார்கள்.

என்ன அற்புதமான வீழ்ச்சி !

பின்பு வாடகைக்கு ஒரு அறை அமர்த்தித் தங்களுடைய சாமான்களை எல்லாம் அதில் வைத்துப் பூட்டி விட்டு, குளிப்பதற்காக அருவிக்குச் சென்றார்கள்.

ஆஹ!! அருவி நீரில்தான் எத்தகைய ஜிலு ஜிலுப்பு! ஆனால் அவர்களுடைய உள்ளங்களில்?

சிவகாமியைப் பாலகிருஷ்ணன் ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான். இனிய உணவு வகைகள் எல்லாம் இருவருக்கும் பரிமாறும்படி உத்தரவிட்டான். பாலகிருஷ்ணனுக்கு நல்ல பசி. அவைகளை ஆவலுடன் உண்டான். ஆனால் சிவகாமி அவைகளைத் தொடவில்லை.

“மிகக் களைப்புற்றிருக்கிறாய். சாப்பிடு, சிவகாமி,” என்று பாலகிருஷ்ணன் சொன்னான்.

”எனக்கு வேண்டாம்.”

“கொஞ்சமாவது சாப்பிடு. இல்லையானால் மிகக் களைப்பாயிருக்கும். ”

“வேண்டாம் என்றால் விடு,” என்று சிறிது கடு கடுப்புடன் கூறினாள் சிவகாமி.

பாலகிருஷ்ணன் அவளை உற்றுக் கவனித்தான்.

சிறிது நேரத்திற்குப் பின் “புறப்படலாமா?” என்றான் பாலகிருஷ்ணன்.

“உம்.”

பாலகிருஷ்ணன் முன்னால் சென்றான். அவனைப்பின் தொடர்ந்து சிவகாமி சென்றாள். அவர்கள் இருவரும் அறையை அணுகி வாசற்படி ஏற யத்தனித்தார்கள். முதலில் பாலகிருஷ்ணனுக்குக் கால் இடறியது. அவனுக்குப் பின்னால், சிவகாமிக்கும் கால் இடறியது!

வீழ்ச்சியைத் தடுக்கும் பொங்குமாகடல்! பொங்குமா கடலினால் சிற்றாற்றின் வீழ்ச்சியைத் தடுக்க முடிந்ததா?

அவர்கள் மேலே சென்றார்கள். கதவைத்திறப்பதற்கு பாலகிருஷ்ணன் சாவியை எடுத்தான்.

கதவு திறக்கப்படும். அப்புறம் அடைக்கப்படும். அறைமுழுதும் இருள் சூழ்ந்து கொள்ளும். அவர்களுடைய உள்ளங்களிலும் இருள் சூழும். அப்புறம்?

அறைக் கதவு திறக்கப்பட்டது! அச்சமயம் எங்கிருந்தோ ‘சிவகாமி! சிவகாமி’ என்று ஒரு குரல் கேட்டது.

அது எங்கிருந்து வந்தது?

வானுலகத்திலிருந்தா, பூவுலகத்திலிருந்துதானா? அது மனிதக்குரலா? தெய்வக்குரலா? அது யாருடைய குரல்?

பதினேழாவது அத்தியாயம்

அக்குரலைக் கேட்டவுடன் சிவகாமியும் பாலகிருஷ்ணனும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தனர். சிறிது தூரத்தில் ஓர் ஆடவரும் சிறு பெண்ணொருத்தியும் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. அவர்களைக் கண்டதுமே சிவகாமியின் நெஞ்சந் துணுக்குற்றது. தன் கதி என்னவாகுமோ என்று அஞ்சினாள். அவர்கள் சமீபத்தில் நெருங்க, நெருங்க அவளுடைய இருதயத் துடிப்பின் வேகம் அதிகரித்தது. அவளுடைய தலை சுழல்வது போல் தோன்றியது ; நல்ல வேளையாகப் பக்கத்தில் ஒரு தூண் இருக்கவே, அதைப் பிடித்துக் கொண்டு சமாளித்துக் கொண்டாள்.

பிடித்துக்கொண்டு அவர்கள் யார்? உரத்த குரலில் அவளைச் “சிவகாமி சிவகாமி!” என்று கூப்பிட்டது யார்?

பாலகிருஷ்ணனும் அவ்விருவரையும் உற்று நோக்கி யவாறே இருந்தான். என்ன பேசுவது, எப்படி நடந்து. கொள்வது என்று தீவிரமாக யோசித்தான். அவனுடைய உள்ளத்தில் எழுந்த கலவரத்தில் ஒன்றும் தோன்றவில்லை.

இதற்குள் பகவான் செட்டியாரும், அவருடைய மகளும் அறையை அணுகிவிட்டனர். நல்ல வேளையாக பகவான் செட்டியாரே பேச்சை ஆரம்பித்தார். “நேற்றுத் தான் கடிதம் கிடைத்தது. உடனே புறப்பட்டு வந்தேன். உங்களை இங்கே சந்தித்தது நல்லதாய்ப் போய் விட்டது!” என்றார்.

எந்தக் கடிதம், யார் எழுதியது, எதைப்பற்றி என் பது ஒன்றும் பாலகிருஷ்ணனுக்கு விளங்கவில்லை.

பகவான் செட்டியார் திடீரென்று சொல்லி வைத்தது போல், குற்றாலத்தில் தோன்றியது அவனைத் திடுக்குறச் செய்தது. ஏற்கெனவே அவனுடைய உள்ளத்திலிருந்த குழப்பத்துடன் இதுவுஞ் சேர்ந்துகொள்ளவே ஒன்றும் பதில் சொல்லத் தெரியாமல் விழித்தான். கடைசியில் தட்டுத் தடுமாறிக் கொண்டு, “சிவகாமியைத் திருநெல்வேலியில் சேர்த்துவிட்டு, தூத்துக்குடிக்குப் போய் சில சரக்குகள் கொள்முதல் செய்துகொண்டு வரும்படி தாத்தா என்னை அனுப்பினார்” என்று அவன் சொன்னான்.

“உங்கள் இருவரையும் இங்கேயே பார்த்துக் கொண்டது நல்லதாயிற்று, இல்லையானால், இன்னுங் கொஞ்ச நேரத்தில் நான் ஊருக்கல்லவா போய்க் கொண்டிருப்பேன்?” என்றார் பகவான் செட்டியார்.

எந்த ஊருக்கு, ஏன் போய்க் கொண்டிருப்பார்? பாலகிருஷ்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை.

“நான் குற்றாலம் பார்த்ததில்லை. சிவகாமியும் பார்த்ததில்லை. அருவியில் ஸ்நானம் செய்துவிட்டுப் போகலாம் என்று நடுவில் இங்கு இறங்கினோம்” என்றான் பால கிருஷ்ணன்.

“அது சரிதான்! அது சரிதான்! நீங்கள் இங்கே வந்ததனால் எனக்கு ஒரு சிரமம் குறைந்தது!” என்றார் பகவான் செட்டியார்.

சிவகாமியைத் திருநெல்வேலிக்கு உடனே கொண்டு வந்து விடுமாறு பகவான் செட்டியார் எழுதிய கடிதத்தை பார்த்ததும், சுந்தரஞ் செட்டியார் அதற்குப் பதில் உடனே எழுதிவிட்டார். லக்ஷ்மியம்மாளுக்கு உடம்பு சிறிது அசௌகரியமாயிருப்பதாயும், தனக்குக் கடையில் அவசர வேலைகள் இருப்பதாகவும், ஆகையினால் பகவான் செட்டியாரே புறப்பட்டு வந்து, சிவகாமியைக் கூட்டிக் கொண்டு செல்லும்படியும் சுந்தரஞ் செட்டியார் அக் கடிதத்தில் எழுதியிருந்தார். இதை லக்ஷ்மியம்மாளிடம் கூறிய போது, அவளுக்கு அவர் எழுதிய பதில் பிடிக்க வில்லை. “சிவகாமியை நாம் போய்க் கூட்டிக் கொண்டு வந்தோம். நாமேதான் கொண்டுபோய் விட வேண்டும். அப்படியிருக்கப் பெண்ணை இங்கே வைத்துக் கொண்டு, ‘நீங்கள் வந்து கூட்டிப் போங்கள்’ என்று சொல்வது சரியல்ல” என்று அவள் சொன்னாள். அதற்கப்புறந்தான் பாலகிருஷ்ணன் வசம் சிவகாமியை உடனே அனுப்புவது என்று தீர்மானித்தார்கள். இந்த விஷயம் பாலகிருஷ்ணனுக்கோ சிவகாமிக்கோ தெரியாது.

அக்கடிதத்தைப் பார்த்துத்தான் பகவான் செட்டியார் புறப்பட்டார். சிவகாமியை ஒரு அவசர காரியத்தின் நிமித்தமல்லவா உடனே கொண்டு வந்து விடும்படி அவர் சுந்தரஞ் செட்டியாருக்குக் கடிதம் எழுதியிருந்தார்? அந்த அவசர காரியம் வேறொன்றுமில்லை. அந்த ‘சீச’னுக் குச் சிவகாமியை அவர் குற்றாலத்திற்கு அழைத்துச் செல்வதாகச் சொல்லியிருந்தார். அவருடைய கடைக்கு வந்த சிலர் குற்றாலத்தில் சாரல் ஆரம்பித்து விட்டதாகவும் ‘சீசன்’ ஆரம்பம் அவ்வருடம் மிகத் திவ்யமாயிருப்பதாகவும் சொன்னார்கள். உடனே புறப்பட வேண்டும் என்று நினைத்துத்தான் அவர் சுந்தரஞ் செட்டியாருக்குக் கடிதம் எழுதினார். தன் மாமனார் எழுதிய பதிலைப்பார்த்ததும், அவர் தன் மகள் ருக்மணியைக் கூட்டிக்கொண்டு குற்றாலத்திற்கு வந்தார். அங்கு ஒரு ஜாகை அமர்த்தி, அவளை அதில் வைத்து விட்டு, தான் மட்டும் வெற்றிபுரம் சென்று சிவகாமியைக் கூட்டிக்கொண்டு, மறு ரயிலிலேயே வந்து விடலாம் என்பது அவருடைய எண்ணம்.

அவ் வெண்ணத்துடன் அவர் குற்றாலத்திற்கு வந்த போது தான், எதிர் பாராத விதமாய் அங்கு பாலகிருஷ்ணனையும் சிவகாமியையும் ஒரு அறைக்கு வெளியில் பார்த்தார்! அவர்களைத் திடீரென்று அங்கு கண்டதும். முதலில் அவருக்கு மனது ஒரு மாதிரியாகத்தானிருந்தது அவர்களிருவரும் எப்படி அங்கு வந்து சேர்ந்தார்கள்? அவருக்கு வேறு விதமாகவல்லவா கடிதம் வந்திருந்தது? ஒரு வேளை சுந்தரஞ்செட்டியார் பின்னால் தன் மனதை மாற்றிச் சிவகாமியை அனுப்பி வைப்பதென்று தீர்மானித்து விட்டாரோ ? அப்படியே அனுப்பிவைத்தாலும் சிறு பெண்ணை இப்படியா அனுப்பிவைப்பது? ஆனால் அதில் என்ன குற்றம்? சுந்தரஞ்செட்டியார் விஷயங்களை நன்கு அறிந்த அனுபவசாலி. அவருக்குத் தெரியாத விஷயமா? குற்றமில்லை என்று நினைத்துத்தானே அவர் அனுப்பி யிருக்கிறார்? அவர் தவறு செய்வாரா? அவர் குற்றமில்லை என்று நினைத்தால், அதில் ஒரு குற்றமுமிராது. சரி, அது தான் போகட்டும். அவர்கள் ஏன் தனியாகக் குற்றாலத்திற்கு வந்தார்கள்? பாலகிருஷ்ணன் குற்றாலம் பார்க்க வில்லையாம். அதனால் வந்தார்களாம்.

சின்னஞ் சிறிசுகள். ஊர் பார்க்கும் ஆசை! ஆனால் சிவகாமியைக் குற்றாலத்திற்குக் கூட்டிப் போவதாகத்தான் அவர் சொல்லியிருந்தாரே. அப்படி இருந்தும் சிறு பிள்ளையிலிருந்து ஒன்றாய் வளர்ந்தவர்கள். சகஜமாய்ப் பழகியவர்கள் கல்மிஷமற்ற உள்ளத்துடன் வந்திருக்கிறார்கள் போலும். இம்மாதிரி நினைத்துப் பகவான் செட்டியார் ஒருவாறு தன் மனதைச் சமாதானப் படுத்திக் கொண்டார்.

பகவான் செட்டியார் பாலகிருஷ்ணனுடன் பேசிக் கொண்டிருந்தபோது, சிவகாமி தன் மனதிற்குள் “என்னைத் தடுத்தாட்கொண்ட சுவாமி, என்னை மன்னியுங்கள், மன்னியுங்கள்!” என்று பலமுறை சொல்லிக் கொண்டாள். அவ்வாபத்தான சமயத்தில் தன்னைச் “சிவகாமி!” என்று கூப்பிட்டுப் பாதுகாத்த அவளுடைய கணவனின் குரலை அவள் தெய்வக் குரலாகவே மதித்தாள். அவளுடைய உள்ளத்தில் எழுந்த தீ அணைந்து விட்டது. இனி ஒருபோதும் தோன்றாது என்று அவள் நினைத்தாள்.

பகவான் செட்டியாருடன் பேசிக்கொண்டிருந்த பாலகிருஷ்ணன் திடீரென்று திரும்பிய போது, பக்கத்திலிருந்த ருக்மணி தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தான். அவர்களிருவருடைய கண்களும் ஒரே சமயத்தில் சந்தித்தன!

பாலகிருஷ்ணன் இரண்டு நாட்கள் குற்றாலத்தில் தங்கியிருந்து விட்டுத் தூத்துக்குடிக்குச் சென்று விட் டான். குற்றாலத்தில் பகவான் செட்டியாருடைய குடும்ப வாழ்க்கை சகஜமாகவே நடந்து கொண்டிருந்தது.

ஒரு நாளில் பல முறை அருவியில் குளிப்பதும், மாலைநேரங்களில் மலையின் மீதோ மலைச்சாரலிலோ உலாவுவது கொண்டி மகாச் சந்தோஷமாகவே நாட்கள் சென்று கொண்டிருந்தன. இப்படியிருக்கையில் ஒரு நாள் சிவகாமி தன் கணவனைப் பார்த்து, “பாலகிருஷ்ணனைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டாள்.

“நான் என்ன நினைக்கிறேன்! ஒன்றும் நினைக்கவில்லையே!” என்றார் அவர்.

“இல்லை. அவன் எப்படி?”

“நல்லவன் தான். எதற்காகக் கேட்கிறாய்?”

“இன்னும் உங்களுக்குத் தெரிய வில்லையா?”

“தெரிய வில்லையே. என்ன?”

“நம்ம ருக்குமணிக்கு அவன் ஏற்ற மாப்பிள்ளை யல்லவா? அதற்காகத்தான் கேட்டேன்”

“நல்ல மாப்பிள்ளை தான். நம் கலியாணத்திற்கு. முன்பு, உன்னைப் பார்ப்பதற்காக நான் முதன் முதலில் வந்தேனல்லவா? அப்பொழுதே எனக்கு அவ்வெண்ணம் மனதில் உதித்தது. அதற்கு இப்பொழுது என்ன?”

“ஒரு நல்ல காரியத்தை நினைத்தால், உடனே அதைச் செய்ய வேண்டும் என்பார்கள்!”

“ஜாதகம் பிடிக்க வேண்டுமல்லவா? அனுப்பச்சொல்லிப் பார்க்கலாம்.”

“நான் அம்மாளிடம் கேட்டு, ஜாதகத்தை வாங்கிக் கொண்டு வந்திருக்கிறேன்!”

இதைக் கேட்டதும் பகவான் செட்டியாருக்கு மிகவும் ஆச்சரியமாக விருந்தது.

அவருடைய ஜோஸ்ய நண்பர் ஒருவர் குற்றாலத்திற்கு வந்திருந்தார். அவரிடம் காட்டிக் கேட்டபொழுது, ஜாதகம் நன்றாய்ப் பிடித்திருந்தது.

“நீங்கள் இக்காரியத்தைச் செய்ய வேண்டுமென்று நினைத்தால் உடனே பேசி முடிக்க வேண்டும். அவனுக்குப் பெண் கொடுப்பதாக அநேகம்பேர் நெருக்கிக் கொண்டிருக்கிறார்கள்,” என்று சிவகாமி தன் கணவனிடம் கூறினாள்.

“பார்க்கலாம்,” என்றார் அவர்.

அவளுடைய மூத்தாளின் மகளைப் பாலகிருஷ்ணனுக்குக் கலியாணம் பண்ணிக் கொடுப்பதற்கு ஏன் அவள் அங்ஙனம் துடித்துக் கொண்டிருந்தாள்?

ஒரு நாள் சிவகாமி ருக்மணியைப் பார்த்து, “ஏண்டீ ருக்கு, உனக்கு மாப்பிள்ளையைப் பிடித்திருக்கிறதாடீ?” என்று கேட்டாள்.

“போம்மா” என்றாள் ருக்மணி.

“மாப்பிள்ளையைப் பிடிக்காமலா, அன்று அவனை விழுங்கி விடுவதுபோல் பார்த்துக் கொண்டிருந்தாய்?” என்றாள் சிவகாமி.

இதைச் சொல்லவும் ருக்மணிக்கு வெட்கம் வந்து விட்டது. அவள் வாசலுக்கு ஓடிவிட்டாள்!

”பாலகிருஷ்ணன் வருகிறானா என்று பார்ப்பதற்காடீ இப்படி ஓடுகிறாய்? அவன் வருவதற்கு இன்னும் நாளிருக்கிறதடி! இங்கே வா!” என்றாள் சிவகாமி.

தூத்துக்குடியில் தன் வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு பாலகிருஷ்ணன் ஊர்போய்ச்சேர்ந்தான். அங்கு. அவனுடைய பாட்டிக்கு உடம்பு நன்றாய்ச் சௌகரிய மடைந்திருந்தது.

”என்னடா, சிவகாமியைக் கொண்டுபோய் விட்டாயா? என்ன சொன்னார் அவள் மாப்பிள்ளை?”

“என்ன சொல்வார்? ஒன்றும் சொல்லவில்லை. கூட்டிக் கொண்டுபோய் விட்டதில் அவருக்கு ரொம்பச் சந்தோஷம்!”

“அதுதான் நான் சொன்னேன். நாம் கூட்டிக் கொண்டு வந்தோம். நாமே கூட்டிப் போய்விட வேண்டும் என்று.”

குற்றாலத்திற்குப் போன விஷயத்தைப்பற்றிப் பாலகிருஷ்ணன் ஒன்றும் சொல்லவில்லை.

“எதற்காக அத்தனை அவசரமாகக் கூட்டிக் கொண்டுவரச் சொல்லிக் காகிதம் போட்டாராம்?”

”குற்றாலத்திற்குச் ‘சீசனுக்கு’ப் போவதற்காம்”

“குற்றாலமும் பாபநாசமுமாய் அவர்களுடைய வாழ்க்கை குதூகலமாய்த் தானிருக்கிறது!” என்றாள் லக்ஷ்மியம்மாள்.

அந்தச் சமயம் சுந்தரஞ் செட்டியார் கடையிலிருந்து. வந்தார். பேரனைப் பார்த்ததும் எல்லா விபரங்களையும் விசாரித்துவிட்டுச் சாப்பிட உட்கார்ந்தவர், லக்ஷ்மியம்மா ளைப் பார்த்து, “உன் பேரனுக்குக் கலியாணமா மல்லவா?” என்றார்.

“அப்படி என்று யார் சொல்கிறார்கள்?” என்று, சிரித்துக்கொண்டே லக்ஷ்மியம்மாள் கேட்டாள்.

“நான் தான் சொல்கிறேன் என்று வைத்துக் கொள்ளேன்.”

“இப்படித் திடும் என்று ஒரு விஷயத்தைச் சொன்னால் என்ன விளங்குகிறது?'”

“ஏன் விளங்கவில்லை? இன்று உமையொருபாகஞ் செட்டியார் வந்தார். கடையிலே உட்கார்ந்து பேசினோம். எல்லாம் நிச்சயமாகி விட்டது!”

“இதென்ன காரியம் செய்திருக்கிறீர்கள்? பெண்ணை நாம் பார்க்க வேண்டாமா? அவர்களுடைய குலங் கோத்திரம் எல்லாம் விசாரிக்க வேண்டாமா? நமக்குப் பிடித்திருந்தாலும், உங்கள் மகனுக்கு அந்த இடம் பிடிக்க வேண்டாமா? இப்படி ஏன் முன்பின் யோசியாமல் சங்கடத்தில் மாட்டிக்கொண்டீர்கள்?”

“இல்லையடி அம்மா, இல்லை! நீ என்ன சொல்கிறாய் என்று பார்க்கலாமிண்ணு சொன்னேன். உன்னைக் கேட்காமலா உன் பேரன் கலியாணத்தை நிச்சயம் பண்ணி விடுவேன்?”

“பின் நடந்ததென்ன? ஒன்றுமில்லாமல் இவ்வளவு கதை அளக்க மாட்டீர்களே?”

“உன் பேரன் ஜாதகம் பிடித்திருக்கிறதாம். எல்லாம் பேசிமுடித்து வெற்றிலை பாக்குப் பரிமாற இன்னும் சில நாட்களில் வருவதாக உமையொருபாகஞ் செட்டியார் கடிதம் எழுதியிருக்கிறார்” என்று சுந்தரஞ் செட்டியார் சிரித்துக் கொண்டே சொன்னார்.

பாலகிருஷ்ணனும் தாத்தாவுடன் சாப்பிட்டுக் கொண்டு தானிருந்தான். அவர் சொன்ன விஷயங்களைக் கேட்டபோது, அவன் குற்றாலத்தில் பார்த்த ருக்மணியின் முகமும், அவளுடைய கண்களும் அவனுக்கு ஞாபகம் வந்தன. சிவகாமியின் ஞாபகமும் அவைகளுடன் கூடவே வந்தது!

பதினெட்டாவது அத்தியாயம்

“எவ்வளவோ பெரிய மனிதர் களெல்லாம் இருக்கையில் சின்ன மளிகைக் கடை வியாபாரியான என்னை இந்த முக்கியமான காரியத்திற்குக் கூப்பிடுகிறீர்களே” என்றார் சுந்தரஞ் செட்டியார்.

“எங்களுக்கு உங்களுடைய சரக்குத்தான் பிடித்திருக்கிறது. நீங்கள் அவசியம் வர வேண்டும். எல்லோரும் உங்களைத்தான் விரும்புகிறார்கள்.”

“பள்ளிக்கூட விழா என்கிறீர்கள். கல்வி இலாக்கா அதிகாரிகளை அழைத்துக் கௌரவித்தால், உங்களுக்குப் பலவிதங்களில் அவர்கள் உதவியா யிருப்பார்கள். என் னால் உங்களுக்கு என்ன பலன் ஏற்படப் போகிறது?” என்று மீண்டும் சுந்தரஞ் செட்டியார் கூறினார்.

“அவர்களை எல்லாம் முந்தின வைபவங்களுக்குக் கூப்பிட்டு விட்டோம். இதற்கு நீங்கள் தான் கட்டாயம் தலைமை வகிக்க வேண்டும்”

“இன்னொரு யோசனை சொல்கிறேன். நான் ஒரு பேச்சாளனாக வருகிறேன். வேறு யாராவது பெரிய மனுஷரைத் தலைவராகப் போட்டுக் கொள்ளுங்கள்.”

“தலைவர் நீங்கள் தான். அது நிச்சயமாகிவிட்டது. நீங்கள் பேச்சாளர் என்று சொன்னதுந்தான் எனக்கு ஞாபகம் வருகிறது. உங்கள் பேரன் இவ் வைபவத்தின் போது ஒரு சொற்பொழிவாற்ற வேண்டும்.”

“என்னய்யா ஒரு புதுச் சங்கடத்தை உண்டு பண்ணுகிறீர்கள்?” என்று சுந்தரஞ் செட்டியார் சிரித்தார்.

“உங்கள் பேரனைப்பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதனால் தான் சொல்கிறேன்.”

“ஏண்டா பாலு, இவர் என்னமோ சொல்கிறாரே. உன்னைப் பற்றி ஏதேதோ தாறுமாறாய்ப் பேசுகிறார்!” என்று சொல்லி, வந்தவரை நோக்கிச் சுந்தரஞ்செட்டியார் புன்முறுவல் செய்தார்.

பால கிருஷ்ணன் அவ்விடம்வந்து, ஒன்றுந் தெரியாமல் விழித்தான்.

“பலர் பேசிக் கொள்வதைத்தான் சொல்கிறேன். நான் புதிதாக ஒன்றும் கற்பனை செய்து சொல்லவில்லை” என்றார் வந்திருந்தவர். அவருடைய பெயர் பழனிசெட்டியார். சுந்தரஞ் செட்டியாருடைய ஹாஸ்ய உணர்ச்சி அவரையும் பிடித்துக் கொண்டது.

பாலகிருஷ்ணன் மேலுங் கலவரத்துடன் விழித்தான்.

“மதுரையில் எல்லோரும் இதைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது ரயிலில் வரும் போது கூடப் பலர் இதைப்பற்றிச் சொன்னார்கள்.”

மதுரையில் எதைப் பற்றிப் பேசிக் கொள்கிறார்கள், ரயிலில் எதைப் பற்றிப் பேசினார்கள் என்று பாலகிருஷ்ணனின் மனம் தீவிரமாக யோசிக்க வாரம்பித்தது. அவனுடைய எண்ணமெல்லாம் ஒரு விஷயத்தைச் சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. ஆகையினால் எல்லாம் அதன் மயமாகவே அவனுக்குத் தோன்றியது.

”அது முற்றிலும் பொய். அதற்கு ஆதாரமே இல்லை” என்று ஆத்திரத்துடன் மறுக்கவேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது.

பழனி செட்டியார் அப்பொழுது மீண்டும் பேச வாரம்பித்தார். “எல்லாராலும் பேசப்படுவதென்றால் அது லேசான விஷயமா? பையன் பலே பையன்! லேசான பையன் என்று நினைக்காதீர்கள்” என்று சுந்தரஞ் செட்டியாரைப் பார்த்துக் கூறினார்.

“அது சுத்தப் பொய். சிறிதும் ஆதாரம் அற்றது!” என்று பாலகிருஷ்ணன் மிகுந்த ஆத்திரத்துடன் கூறினான்.

“நீ எவ்வளவு மறுத்தாலும், நடந்தது இல்லை என்றா ஆகிவிடும், தம்பீ? ஊர் வாயை மூட உலை மூடி உண்டா? அது தான் இப்பொழுது ஊர் முழுதும் பரவி விட்டதே!” என்றார் பழனி செட்டியார்.

பாலகிருஷ்ணனுக்கு என்ன சொல்வது என்று தெரிய வில்லை. அவனுடைய உள்ளம் மேன் மேலுங் கலக்கமுற்றது. எது ஊர் முழுதும் பரவி விட்டது? அவன் சிவகாமியுடன் குற்றாலத்திற்குப் போனதா? அது பரவக் காரணமில்லையே. ஆயினும் விஷயத்தைத் தெளிவாய்க் கேட்டு விடுவதென்று தீர்மானித்து மிகுந்த தைரியத்துடன், “எது ஊர் முழுவதும் பரவிவிட்ட தென்கிறீர்கள்? எனக்கு. ஒன்றும் நீங்கள் பேசுவது புரியவில்லை,” என்றான்.

“என்ன தம்பி, ஒன்றுந் தெரியாதவன் மாதிரி பேசிகிறாய். ஜில்லா மாணவர்கள் பேச்சுப் போட்டியில் நீ வெற்றி பெற்றது ஒருவருக்குந் தெரியாதா என்ன? அதென்ன லேசான விஷயமா? ஏன் ஊரெல்லாம் வாது?” என்று சொல்லி அவர் சிரித்தார். சுந்தரஞ் செட்டியாரும் தன் பேரன் புகழைப் பிறர் வாயால் கேட்டுச் சந்தோஷமடைந்தார்!

பாலகிருஷ்ணனின் தலையிலிருந்து ஒரு பெரும் பாரம் நீங்கியது போலிருந்தது. பாரம் நீங்கினால் தலை நிமிர வல்லவா வேண்டும்? அது ஏன் குனிந்தது!

பழனி செட்டியார் மதுரையிலுள்ள ஒரு பெண் பாட சாலையின் மானேஜர். பள்ளிக்கூட ஆண்டுவிழாக் கொண்டாட்டத்திற்கு அவ்வருடம் தலைமை வகிப்பதற்குச் சுந்தரஞ் செட்டியாரை அழைப்பதற்காக வந்திருந்தார். முடிவாகச் சுந்தரஞ் செட்டியாரைத் தலைவராகவும், பாலகிருஷ்ணனைப்பேச்சாளனாகவும் தீர்மானம் செய்துவிட்டுச் சென்றார். கடைசியாக “தாங்கள் வரும் ரயிலைக் குறிப்பிட்டு எனக்கு அவசியம் கடிதம் எழுத வேண்டும். நான் ரயிலடியில் தங்களுக்காகக் காத்துக் கொண்டிருப்பேன்,” என்றார்.

“ஐயோ, அதெல்லாம் வேண்டாம். நாங்கள் நேரே தங்கள் வீட்டிற்கே வந்து விடுவோம். நான் ஒரு சின்ன வியாபாரி. அவேனா சிறு பையன். எங்களுக்காக ஆடம்பரங்கள் ஒன்றும் வேண்டாம்,” என்று சுந்தரஞ் செட்டியார் கூறினார்.

குறித்த தேதியில் தாத்தாவும் பேரனும் மதுரை போய்ச் சேர்ந்தார்கள். சுந்தரஞ் செட்டியார் ஆடம்பரங்கள் ஒன்றும் வேண்டாம் என்று கூறியிருந்த போதிலும், அங்கு ஆடம்பரங்களுக்கு ஒன்றும் குறைவில்லை. ரயில் நிலையத்திலிருந்து அவர்களிருவரும் காரில் மானேஜரின் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு அவர்களுக்கு நடந்த விருந்தும், உபசாரமும் அற்புதமாயிருந்தன. பின்பு அவர்கள் பாடசாலைக்குச் சென்றார்கள். ‘வாசலில் வணிகத்தலைவரே வருக! வருக!’ என்று பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் சுந்தரஞ் செட்டியார் உள்ளத்தில் உவகை பொங்கியது.

‘நான் வணிகத்தலைவராமே!’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டார். சுந்தரஞ் செட்டியார் தமிழில் சிறந்த அறிவாளிதான். ஆங்காங்கே சிறு சிறு கூட்டங்களில் முன்பு பேசியது உண்டு. ஆனால் ஒரு பள்ளிக் கூடத்தின் வருஷக் கொண்டாட்டமாகிய ஒரு பெரிய வைபவத்தில் அவர் கௌரவிக்கப்படுவது அதுதான் முதல்தடவை.

தன்னுடைய தாத்தா அம்மாதிரி மதிக்கப்பட்டதைப் பார்த்துப் பாலகிருஷ்ணன் மிகவும் பெருமையடைந்தான்.

விழா மிகவும் விமரிசையுடன் கொண்டாடப்பட்டது. தலைவருடைய முன்னுரை, பின்னுரை, அவர் கொண்டாட் டத்தை நடத்திய திறமை, பள்ளிக்கூடத்தின் முன்னேற் றத்துக்காக அவர் கூறிய யோசனைகள் இவையெல்லாம் வந்திருந்த யாவராலும் போற்றப்பட்டன. பாலகிருஷ்ண னுடைய பேச்சும் அருமையாயிருந்தது. அதில் முதுமையின் அனுபவமில்லாவிட்டாலும், வாலிபத்தின் ஆவேசமும் முறுக்கும் இருந்தன.

அவ்விழாவிற்கு உமையொருபாகஞ் செட்டியாரும் வந்திருந்தார். அவர் வந்ததற்கு ஒரு முக்கிய காரணமு மிருந்தது. கூட்டம் முடிந்த பிறகு, அவர் சுந்தரஞ் செட்டியாரையும் பாலகிருஷ்ணனையும் தனியாகக் கண்டு பேசினார். அப்போது, ஒருவர் வந்து பாலகிருஷ்ணனைத் தங்கள் சங்கக் கூட்டம் ஒன்றில் பேசவேண்டும் என்றும் எந்த நாள் அவனுக்குச் செளகரியமாயிருக்கும் என்றும் கேட்டார். பரீக்ஷை முடிந்து விடுமுறை விட்டிருந்தார் களாகையால், எந்த நாளும் அவனுக்குச் சௌகரியந்தா னென்று பாலகிருஷ்ணன் அவருக்குக் கூறினான். இதைக் கவனித்துக் கொண்டிருந்த சுந்தரஞ்செட்டியார் அவரைப் பார்த்து, “ஏன் ஐயா, என் பேரன்தான் உங்களுக்கு வேண்டுமாக்கும்? நான் வேண்டாமாக்கும்!” என்றார். அங்குக் கூடியிருந்த அனைவரும் சிரித்தார்கள்!

அன்றிரவே சுந்தரஞ் செட்டியாரும், பாலகிருஷ்ணனும் ஊருக்குப்புறப்பட்டார்கள். ரயிலில் போகும்போது, சுந்தரஞ்செட்டியார் பேரனைப்பார்த்து, “ஏண்டா பாலு, இன்றைய விழாவில் எல்லாப் பரிசுகளையும் ஒரு பெண் கட்டிக்கொண்டு சென்றாளே, நீ கவனித்தாயா?” என்று கேட்டார்.

பாலகிருஷ்ணன் வாய் திறந்து பதில் சொல்லாமல் “உம்” என்று மட்டுந் தலையை அசைத்தான்.

”அவள் யார் தெரியுமா?”

பாலகிருஷ்ணன் பதில் சொல்லாமல் பேசாமலிருந்தான்.

“அவள் தான் உமையொருபாகஞ்செட்டியார் மகளாம். நல்ல பெண்ணாய்த்தானிருக்கிறாள்”

பாலகிருஷ்ணனுக்கு அவர் சொன்ன விஷயம் புதிதல்ல. ஒவ்வொரு தடைவையும் பரிசு வாங்குவதற்காக ஒரே பெண் எழுந்து வந்தபோதே, அச்சிறு பெண் அவனுடைய கவனத்தைக் கவர்ந்தாள். அப்பொழுதே அவள் யார் என்று அவன் விசாரித்து அறிந்திருந்தான்!

‘நல்ல பெண்தான். உமையொருபாகஞ் செட்டியார் வந்தால் உடனே பேசி முடித்துவிடலாம்’ என்று சுந்தரஞ் செட்டியார் தன் மனதில் தீர்மானித்துக்கொண்டார்.

ஏறக்குறைய அதேசமயம் உமையொருபாகஞ்செட்டியார் வீட்டில் ஒரு சம்பாஷணை நடந்துகொண்டிருந்தது.

“என்னடியம்மா, மாப்பிள்ளையை நீயே பார்த்துக் கொண்டாயல்லவா? உனக்குத் திருப்திதானே? நான் சொன்னதில் உனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை!” என்றார் உமையொருபாகஞ் செட்டியார்.

“நல்ல பையன்தான். படிப்பிலும் அழகிலும் நம் சகுந்தலைக்கு ஏற்றவன்தான்” என்றாள் அவருடைய மனைவி செல்லம்மாள்.

‘”உனக்குத்திருப்தி ஏற்பட்டு என்ன பிரயோஜனம்? அவளல்லவா சொல்லவேண்டும்? கண்ணா மூச்சிக் கலியாணம் பண்ணிக்கொள்ள மாட்டேன் என்றாளே அந்த நவீன நாகரீகக்காரி, அவளல்லவா பதில் சொல்லவேண்டும்! அவள் எங்கே?” என்று உமையொருபாகஞ் செட் டியார் கேட்டார்.

“அவளை என்ன கேட்பது? சீக்கிரம் பேசிமுடித்துவிட வேண்டியதுதான். எப்பொழுது போகிறீர்கள்?” என்று செல்லம்மாள் கேட்டாள்.

– தொடரும்…

– திருமணம் (நாவல்), முதற் பதிப்பு: செப்டம்பர் 1947, அருணோதய நிலையம், வேலூர்.

சு.குருசாமி சு.குருசாமி (Trichi. S.V. Guruswamy Sarma, திருச்சிராபுரம் சு.வை.குருசாமி சர்மா) என்பவர், தமிழில் முதல் சில புதினங்களில் ஒன்றான "பிரேம கலாவதீயம்" (1893) எழுதிய ஒரு முக்கியமான தமிழ் புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் 1940களில் "வாடா விளக்கு" போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும், பல கதைகளைத் தொகுத்து வெளியிட்டதோடு, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவியவர். மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை, பண்டித எஸ்.எம்.நடேச சாஸ்திரி, பி.ஆர்.ராஜமையர், சு.வை.குருசாமி சர்மா, அ.மாதவையா ஆகியோர் முதற் காலக்கட்டத் தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *