திருமணம்
கதையாசிரியர்: சு.குருசாமி
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: January 3, 2026
பார்வையிட்டோர்: 3,298
(1947ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12
ஏழாவது அத்தியாயம்
பாலகிருஷ்ணணுக்குச் சுமார் பதினாறு அல்லது பதினேழு வயதிருக்கும். சிறிதேனும் முகவாட்டமின்றி நன்றாய் வளர்ந்திருந்தான். அவனைப் பார்த்தவர்கள் யாரும் அவனைத் தாயில்லாப் பிள்ளை என்று சொல்ல மாட்டார்கள். பிரகாசமான கண்கள், பொலிவுள்ள முகம். பள்ளிக்கூடத்தில் சிற்சில சமயம் அவன் திறந்த மேனியுடன் தேகப்பயிற்சி செய்யும்போது, திரண்டு, பருத்த அவனுடைய தோள்களையும், மார்பையுங் கண்டு பிற மாணவர்கள் பொறாமை கொள்வர். “தாயில்லாப் பிள்ளை தானே ! லக்ஷ்மி அவனை எப்படி வளர்த்திருக் கிறாள்? இத்தனைக்கும் பிறந்ததிலிருந்து அவனுக்குத் தாய்ப்பால் கூடக்கிடையாது. பிள்ளை வளர்ப்பதில் லக்ஷ்மிக்கு ஈடாக ஒருவரையும் சொல்லமுடியாது. அவளுடைய தங்கையின் பெண்ணைத்தான் கூட்டிக் கொண்டு வந்தாளே. அப் பெண் வந்தபோது நோஞ்சை யாய் எப்படி இருந்தது! இப்பொழுது அதை எப்படி வளர்த்துவிட்டாள்! அவள் கைப்பட்ட சோறுண்டாலே பிள்ளைகள் நன்றாய் வளரும் போலிருக்குது. கல்மிஷ மற்ற உள்ளம் அல்லவா?” என்று தெருவில் எல்லோரும் பேசிக்கொள்வார்கள்.
இப்படி அவர்கள் பேசிக்கொண்டிருப்பது லக்ஷ்மி யம்மாள் காதுக்கு எட்டினால், “நான் நன்றாய் வளர்த்தி ருந்தால், இவர்கள் கண்களில் ஏன் தீப்பிடிக்கிறது? என்று சொல்லி, அவர்களுடைய காலடி மண்ணை எடுத்துத் தன் பேரனுக்கும், பெண்ணுக்கும் திருஷ்டி சுற்றிப் போடுவாள். அத்தனை வயதுக்கப்புறம் தனக்குத் தன் பாட்டி திருஷ்டி சுற்றிப் போடுவதைப் பார்த்தால், பாலகிருஷ்ணனுக்குச் சிரிப்பாய் வரும். அச் சமயங்களில் எல்லாம் பாட்டி எப்பொழுதும்போல் தன்மீது பிரிய மாய்த்தானே இருக்கிறாள் என்று அவனுக்குத்தோன்றும்.
ஒருநாள் காலையில் பாலகிருஷ்ணன் மிகுந்த கோப மாயிருந்தான். சிவகாமி இங்குமங்கும் போகும் போதெல் லாம், அவளை எரித்து விடுபவன்போல் பார்த்துத் தனக்குள்ளேயே ஏதோ முணு முணுத்துக்கொண்டான். புதுப்புகைச்சல் ஏதோகிளம்புகிறது என்று லக்ஷ்மி நினைத் தாள். ஆனால் ஒன்றும் பேசவில்லை. அதுவாக எரியும் போது எரியட்டும். அதற்குள் ஏன் அதை ஊதிவிட வேண்டும் என்பது அவளுடைய எண்ணம்.
“இந்தச் சனியன் என்றைக்குத்தான் தொலையுமோ தெரியவில்லை. இவள் தொலையும் வரைக்கும் நான் நிம்மதி யாயிருக்க முடியாது” என்றான் பாலகிருஷ்ணன்.
அவன் அவ்விதம் கத்தினால், பாட்டி என்ன விஷயம் என்று அவனை விசாரிப்பாள் எனப் பாலகிருஷ்ணன் எதிர்பார்த்தான். பாட்டி ஒன்றும் பேசவில்லை. அவள் பேசாமலிருந்தது அவனுடைய கோபத்தை அதிகப் படுத்தியது.
“என் பவுண்டன் பேனாவைக் காணோம்!” என்று கடைசியில் பாட்டியிடம் சென்று அவனே சொன்னான்.
“அதை என்னிடம் ஏன் சொல்லுகிறாய்?”
“உன்னிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வது?”
“நான் அதை எடுக்கவில்லை”
“நீ எடுக்கவில்லை என்பது எனக்குத்தெரியும். அவளைக் கேள்.”
“அவளும் எடுக்கவில்லை.”
பெட்டியில் பேனா இல்லை என்று கண்டவுடனே சிவகாமியின் மீதுதான் அவனுக்குச் சந்தேகம் உண்டாகியது. சிறிது நேரத்திலேயே அச்சந்தேகம் நிச்சயமான நம்பிக்கையாக மாறிற்று.
“அவள் தான் எடுத்திருப்பாள்!” என்றான் பால கிருஷ்ணன்.
“அவள் அதை எடுத்து என்னடா செய்யப்போகிறாள்?”
“விற்பாள்!”
“அவள் யாருக்கடா விற்பாள்?”
“அது எனக்கு எப்படித் தெரியும்?”
இம்மாதிரி சமயங்களில் எல்லாம் சிவகாமியின் பக்கமே லக்ஷ்மி சேர்ந்து கொண்டது பாலகிருஷ்ண னுடைய பொறாமையை மேலுந் தூண்டிவிட்டது. மனித உள்ளம் சஞ்சல முள்ளது தானே! அவள் யார்மீது பிரியமாயிருக்கிறாள் என்பதை இச் சம்பவம் எல்லாம் காட்டுவதாக அவன் நினைத்தான். பாட்டி அவன் மீது முன்பு அதிகப் பிரியமாயிருந்தாள். ஆனால் இப்பொழுது?
அவள் விழிக்கிற விழியே, அவள்தான் பேனாவை எடுத்திருக்க வேண்டுமென்று காட்டுகிறதே என்று பாலகிருஷ்ணன் நினைத்தான்.
சிறிது நேரத்திற்குப் பின்பு ‘சிவகாமி’ என்று மாடியிலிருந்து சப்தம் வந்தது. பாலகிருஷ்ணன்தான் அவளை மாடிக்கு அழைத்தான். எதற்காக? குற்றவாளி போல் அவளைத் தன் முன்னால் நிறுத்தி விசாரிப்பதற்காக!
ஆனால் அவள் போகவில்லை.. “நீ அங்கு போக வேண்டாமடி,” என்று லக்ஷ்மி தடுத்து விட்டாள். பாலகிருஷ்ணனுடைய கோபம் முன்னிலும் அதிகரித்தது.
இவ்விதம் பாலகிருஷ்ணன் அவள் மீது ஏதாவது குறை கூறிக்கொண்டும், குற்றம் சாட்டிக் கொண்டுமே இருந்தான்.
எல்லா விஷயங்களிலும் அவளைத் தன் போட்டியாகவே அவன் கருதினான். கடைவீதிக்குப் போய் ஏதாவது சாமான் வாங்கிக்கொண்டு வருமாறு லக்ஷ்மியம் மாள் பாலகிருஷ்னனை ஏவுவாள். அவளைப் போகச் சொல்லேன்?” என்பான் அவன். “அவள் பெண் பிள்ளை, கடைவீதிக்குப் போக வெட்கப்படுகிறாள்.நீ போடா என் பாள் பாட்டி. “நான் ஆண் பிள்ளை. படிக்கவேண்டாமா?” என்று அவன் சொல்லிவிடுவான். பின்பு கடையிலிருந்து யாராவது வேலைக்காரன் வந்தால் அவன் மூலம் வேண் டிய சாமான்களை லக்ஷ்மியம்மாள் வாங்கிக் கொள்வாள்.
சிவகாமியின் கலியாணத்தைப் பற்றி லக்ஷ்மி யம்மாளுக்குக் கவலை அதிகரிக்க வாரம்பித்தது. அன்று அவளுடைய சிநேகிதை கோமதியம்மாள் அதைப் பற்றிக் குறிப்பிடுவதற்கு முன்பே, அவளுடைய உள்ளத்தில் அவ்வெண்ணம் ஒரு சிறிய ரேகைபோல் இருந்து வந்தது. சிவகாமியைத் தன் பேரனுக்குக் கலியாணம் செய்துவிட்டால் என்ன? கோமதியம்மாளும் அதைப் பற்றிச் சொல்லவே, அவ்வெண்ணம் சற்று வலுவடைந்தது. தன் தங்கையின் மகளை இன்னொரு இடத்தில் கொடுத்தால், அவள் அங்கு என்னென்ன கஷ்டம் அனுபவிக்க நேருமோ ? தன் பேரனுக்கு இன்னொரு பெண்ணைக் கலியாணம் செய்து வைத்தால் அவள் எப்பேர்ப் பட்டவளாய் அமைவாளோ? அவளுக்குந் தனக்கும் ஒத்துக் கொள்ளுகிறதோ என்னவோ? ராம நாதஞ் செட்டியாருக்கு இரண்டாந்தாரம் வாய்த்தது போல் இருந்தால் என்ன செய்வது? இம்மாதிரி எல்லாம் லக்ஷ்மியம்மாள் எண்ணுவதுண்டு. ஆனால் வீட்டில் நடக்கும் விஷயங்களோ அவளுடைய ஆசைக்கு உற் சாகம் ஊட்டுவனவாகத் தோன்றவில்லையே!
ஒரு நாள் பாலகிருஷ்ணன் தன் தந்தையிடம் சென்றிருந்தான்.
“பாட்டி உன் மேல் பிரியமாயிருக்கிறாளா, பாலு” என்று அவர் வழக்கம்போல் கேட்டார்.
“பிரியமாய்த் தானிருக்கிறாள், ” என்று பதிலளித்து விட்டு அவன் சென்ற காரியத்தைத் தெரிவித்தான். அவன் கால் பந்துப் போட்டிப் பந்தயம் ஒன்றில் கலந்திருந்தான். பந்தயம் விளையாடுவதற்காக அவன் அயலூருக்குச் சில நாட்கள் போகவேண்டியிருந்தது. செலவு பள்ளிக்கூடத்தைச் சேர்ந்ததுதான். ஆயினும் அவன் கையில் கொஞ்சம் பணம் வேண்டுமென்று நினைத்தான். தாத்தாவிடம் கேட்டுப் போதிய பணம் வாங்கிக் கொண்டான். தந்தையிடமும் ஒரு சிறு தொகை வாங்கிக் கொண்டால் தாராளமாய்ச் செலவழிக்கலா மென்று வந்திருந்தான். அவன் விரும்பிய தொகையை வாங்கிக்கொண்டு, அவரிடம் விடைபெற்றுக் கொள்ளும்போது ஏதோ, அவர் சொல்ல விரும்பியது போல் அவனுக்குத் தோன்றியது. ஆகையினால் சற்று நின்றான். தான் சொல்ல விரும்பியதை எப்படி ஆரம்பிப்பது என்று அவர் தயங்கிக் கொண்டிருந்தார். கடைசியில் வேறு முகவுரை ஒன்றுந் தோன்ற வில்லையோ, என்னவோ, “பாட்டி உன் மீது பிரியமாயிருக்கிறாளா?” என்று மீண்டுங் கேட்டார்.
“உம்,” என்றான் பாலகிருஷ்ணன்.
“அவளுடைய எண்ணம் சரியாகத் தெரியவில்லை. அப்படி ஏதாவது பேச்சு வந்தால், நீ சம்மதித்து விடாதே” என்றார் தந்தை.
பாலகிருஷ்ணன் ஒன்றும் பேசாமல் நின்றான்.
ராமநாதஞ் செட்டியார் மீண்டும் பேசினார். “ஏராளமான நகைகளுடனும், நல்ல முடியும் பணத்துடனும் (வரதக்ஷிணை) பெரிய பணக்கார வீட்டுப் பெண்கள் எத்தனையோ உனக்கு வரும். உனக்கு எதற்கடா அவ்வனாதைப் பெண்?”
“இது கூடவா எனக்குத் தெரியாது? நான் உங்களை விட ஜாக்கிரதையாக விருக்கிறேன்” என்று மனதில் நினைத்துக் கொண்டான் பாலகிருஷ்ணன். ஆனால் வெளியில் ஒன்றும் பதில் சொல்லவில்லை.
“நேற்றுக் கூட மதுரையிலிருந்து சில பேர் வந்து ஜாதகம் கேட்டார்கள். “பையன் படிப்பு முடியும் வரைக்கும் ஜாதகம் கொடுப்பதில்லை” என்று நான் சொல்லி விட்டேன்”.
கலியாண விஷயத்தைப் பற்றிப் பேசினால் வாலிபர்களுக்கெல்லாம் சிறிது வெட்கம். ஆகையால் சற்று அலக்ஷியமாயிருப்பது போல் காட்டிக் கொள்வார்கள். பால கிருஷ்ணனும் அவ்விதமே நடந்து கொண்டான்.
அவனுடைய மௌனத்தை அவர் எவ்விதம் புரிந்து கொண்டாரோ தெரியவில்லை “அப் பெண் உனக்கு முறையும் இல்லையே!” என்று மேலுங் கூறினார்.
அதற்குமேல் தனக்கு ஒன்றுங் கூற வேண்டியதில்லை என்று அவனுடைய முகபாவம் காட்டிற்றோ, என்னவோ, ராமநாதஞ்செட்டியார் அத்துடன் நிறுத்திக்கொண்டார்.
அன்று பாலகிருஷ்ணன் வீட்டிற்குத் திரும்பி வருகையில் வழி நெடுக மிகக் சந்தோஷத்துடன் வந்து கொண்டிருந்தான். அவனுடைய ஜாதகத்தை எத்தனையோ பேர் கேட்கிறார்கள். அவனுடைய தந்தை கொடுக்க மறுக்கிறார். அதில் அவனுக்கு அத்தகைய பூரிப்பு!
சுந்தரஞ் செட்டியார் சூக்ஷ்ம புத்தியுள்ளவர். பால கிருஷ்ணனுக்கும் சிவகாமிக்கும் நடந்த போராட்டங்களை அவர் கூர்மையாகக் கவனித்து வந்தார். கவனிக்கக் கவனிக்க அது அவருக்கு அச்சத்தையே விளைவித்தது. என்ன அச்சம்? விபரீதமாய் முடிந்து விடுமோ என்று பயந்தார். ஆகையினால் கூடிய சீக்கிரம் அதை ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். என்று நிச்சயித்துக் கொண்டார்.
எட்டாவது அத்தியாயம்
சுந்தரஞ் செட்டியார் வெளியூருக்குச் சென்றிருந்தார். அநேக நாட்களாய் விட்டன, இன்னும் வரக்காணோமே என்று லக்ஷிமியம்மாள் கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள். வியாபார ஜோலியாகப் போவதாகச் சொல்லியிருந்தார். இத்தனை நாட்களாக என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று லக்ஷிமியம்மாள் யோசித்தாள். அநேக ஊர்களில் அவருக்குச் சிஷ்யர்கள் உண்டு. யாராவது இரண்டு பேர் கிடைத்தால் போதும். நாள் கணக்காக வேதாந்த விஷயங்களைப்பற்றிப் பேசிக்கொண்டே இருப்பார். வந்த வேலை கூட அவருக்கு மறந்துபோய்விடும். வர வர இப் பொழுது அவர் கடையில் வியாபாரத்தைக் கூடச் சரியாகக் கவனிப்பதில்லை. ஏதாவது தத்துவ விசாரணையில் எங்காவது ஈடுபட்டு விட்டாரோ என்று லக்ஷிமியம்மாள் நினைத்தாள்.
கடையிலிருக்கும் சம்பளகாரர்களை, “முதலாளி எங்கே போயிருக்கிறார்? உங்களிடம் ஏதாவது சொன்னாரா? இன்னுங் காணோமே?” என்று லக்ஷிமியம்மாள் கேட்டாள்.
“இன்ன ஊருக்கென்று நிச்சயமாய்ச் சொல்லவில்லை. வியாபார விஷயமாய்த்தான் போவதாகச் சொன்னார்.”
“என்ன விஷயம்?”
“கருப்பட்டி மொத்தமாக ஒப்பந்தம் செய்துகொண்டு வருவதாகச் சொன்னார்.”
“எப்பொழுது வருவார்?”
“வியாபார சம்பந்தமாய்ப் போகும்போது, அதெல்லாம் நிச்சயமாய்ச் சொல்ல முடியுமா? ஜோலி முடிந்தவுடன் வந்து விடுவார்.”
“அவர் மட்டுந்தான் போயிருக்கிறாரா, கைவல்யநவநீதமும் கூடப் போயிருக்கிறதா என்று கேட்டேன்!” என்றாள் லக்ஷிமியம்மாள்.
இந்தச் சமயம் அங்கு நின்று கொண்டிருந்த சம்பளகாரர்கள் எதிர்பாராத விதமாய்த் திடீரென்று சிரித்தார்கள். லக்ஷிமியம்மாள் சொன்னதிலிருந்த ஹாஸ்யத்திற்காக அவர்கள் சிரிக்கவில்லை. அவள் அப்படிக் கூறிய போது அவர்களிடையே இருந்த சிறுவன் ஒருவன், “ஞான வாசிட்டமும் சேர்ந்து போயிருக்கிறதென்று சொல்லு. நான்தான் பெட்டிக்குள் எடுத்து வைத்தேன்” என்று மெதுவாகச் சொன்னான். அது லக்ஷிமியம்மாளுக்குக் கேட்டிராது. முதலாளியம்மாளுக்குக் கேட்குமாறு உரத்த குரலில் சொல்வதற்கு அவனுக்குத் தைரியம் வந்திராது. அதைக் கேட்டுத்தான் அவர்கள் அப்படிச் சிரித்தார்கள்.
இங்ஙனம் லக்ஷ்மியம்மாள் கவலைப்பட்டுக் கொண்டிருந்த போது, இரண்டு நாட்களுக்கப்புறம் சுந்தரஞ் செட்டியார் வந்து சேர்ந்தார். அவர் வீட்டிற்குள் நுழைந்தபோது, சிவகாமிக்குப் பூச்சூடிப் பொட்டிட்டுக் கொண்டிருந்தாள், லக்ஷ்மி. அதைப் பார்த்ததும் செட்டியார் புன் முறுவல் கொண்டார்.
“எங்கே ஒரேயடியாய் ‘டேரா’ அடித்து விட்டீர்கள்?”
“சாவகாசமாய்ச் சொல்கிறேன். இலையைப் போடு சாப்பிடுவதற்கு.”
“போன இடத்தில் வேதாந்தக் காலக்ஷேபம் ஆரம்பித்து விட்டீர்களோ என்று நினைத்தேன்.”
“அதுவுந்தான் நடந்தது.”
“கருப்பட்டி ஒப்பந்தம் செய்து வரப் போயிருப்பதாகச் சொன்னார்கள்.”
“அதுவுந்தான் முடித்தேன்.”
“வேறென்ன செய்தீர்கள்?”
“சாதத்தைப் போடு. சாப்பிட்டுவிட்டுச் சொல்கிறேன்.”
செட்டியார் சாப்பிட்டுவிட்டு வெற்றிலைச் செல்லத்தை எடுத்துக் கொண்டு உட்கார்ந்தார். அவர் சொல்லப் போவதில் ஆவலுள்ளவள் போல் லக்ஷ்மியம்மாள் காட்டிக் கொள்ளவில்லை. ஆயினும் செட்டியாரே விஷயத்தை ஆரம்பித்தார்.
“கலியாணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் சீக்கிரமாய்ச் செய்!”
ஆச்சரியத்தினால் லக்ஷ்மியம்மாள் விழித்தாள்.
“உன் மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து வந்திருக்கிறேன்.”
“சிவகாமிக்கா?” என்று துணுக்குற்றுக் கேட்டாள் லக்ஷ்மியம்மாள். கானல் நீர்போல் அவளுக்கு ஒரு தூர நம்பிக்கை இதுவரை இருந்து வந்தது. அது நிறை வேறக் கூடிய தா என்பது வேறொரு கேள்வி. ஆயினும் அவ்வாசை அவளுக்கு இருந்தது. அதை வெளியில் கூட அவள் ஒருவரிடமும் சொல்லவில்லை. சொன்னால் அது ஏற்றுக் கொள்ளப்படுமா என்று சந்தேகித்தாள். எனினும் அந் நம்பிக்கை அவளுடைய உள்ளத்தின் ஒரு மூலையிலிருப்பதை இதுவரை ஒன்றுந் தடுக்கவில்லை. ஆனால் இப்பொழுதோ?
”ஏன், உனக்கு ஆச்சரியமா யிருக்கிறதா?” என்று சுந்தரஞ் செட்டியார் கேட்டார்.
“இல்லை. நான் சொல்லாமல் நீங்களே பார்த்துக் கொண்டு வந்து விட்டீர்களே” என்று சொல்லி லக்ஷ்மி சமாளித்துக் கொண்டாள்.
“சிவகாமிக்கு வயதும் ஆகிவிட்ட தல்லவா? நாம் தானே கலியாணம் செய்து வைக்கவேண்டும்?”
“ஆமாம். நீங்கள் பார்த்து வந்தது. சரிதான். மாப்பிள்ளை எந்த ஊர்?”
“திருநெல்வேலி”
“திருநெல்வேலியில்…….?”
“திருநெல்வேலியில் பகவான் செட்டியாரை யற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாய் அல்லவா?”
“எனக்கு அதெல்லாந் தெரியாது. சொல்லுங்க. “அந்தப் பகவான் செட்டியாருடைய மகனா?”
செட்டியார் திடுக்கிட்டு ஒரு நிமிஷம் தயங்கினார். பின்பு மென்று விழுங்கிக்கொண்டு, “பகவான் செட்டியாரே தான்” என்றார்.
“இரண்டாந்தாரமா?”
“உம்.” அப்படிச் சொல்லும்போது செட்டியாருக்கு என்னவோ மாதிரி தானிருந்தது.
“என்ன வயதிருக்கும்?”
“நா ற்பது வயதென்று சொல்கிறார். ஆனால் ஆளைப் பார்த்தால் அவ்வளவு மதிக்க முடியாது.”
இதைச் சொல்லிவிட்டு உற்சாகந் தரக்கூடிய விஷயம் வேறு ஏதாவது சொல்ல வேண்டுமென்று அவர் நினைத்தாரோ என்னவோ, “எல்லா நகைகளும் மாப்பிள்ளையே போடுகிறார். காசுமாலை, பெரண்டைக்காய்ச் சங்கிலி இரண்டுசரம், மிளகுமணிமாலை, கலர்க்கல் மாலை, வயிர மூக்குத்தி, வயிரத்தோடு, வங்கி, கைக்கு நாலு வளையல்கள், மோதிரம் – எல்லாம் என்று வைத்துக் கொள்ளேன்” என்றார்.
பின்பு அடுத்தாற் போல், “அவருடைய மனைவிக்கு என்று அவர் போடுகிறார். யாருக்குப் போடுகிறார்?” கூறினார்.
“மூத்த குடியாளுக்கு எத்தனை பிள்ளைகள்?”
“ஒரே ஒரு பெண் தான். வேறு ஒன்றுமில்லை. சொத்தெல்லாம் நம்ம சிவகாமியின் பிள்ளைகளுக்குத்தான்” என்று சிரித்துக்கொண்டே சுந்தரஞ் செட்டியார் சொன்னார்.
“சொத்து என்ன இருக்கும்?”
“நாலைந்து லக்ஷங்கள் இருக்கலாம். அத்துடன் வியாபாரமும் இருக்கிறது.”
”உம்.” என்றாள் லக்ஷ்மியம்மாள். சிறிதுநேரத்திற்குப் பின் ஏதோ நினைத்துக் கொண்டவள் போல் “அப்படியானால் எல்லாம் முடிவு செய்து விட்டீர்களா? என்றைக்கு, முகூர்த்தம்?” என்று கேட்டாள்.
“இன்னும் ஒன்றும் முடிவு செய்யவில்லை. எல்லாம் பேசினோம். மாப்பிள்ளை பெண்ணைப் பார்க்க வேண்டும் என்றார். இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் வருவார். அப்பொழுது நீயும் மாப்பிள்ளையைப் பார்த்துக் கொள்ளலாம். மாப்பிள்ளை பிடித்திருந்தால், வெற்றிலை பாக்குப் பரிமாறலாம். இல்லையானால் வேண்டாம்”, என்றார் சுந்தரஞ் செட்டியார்.
அவர் கூறிய பிரகாரமே, மாப்பிள்ளையும் இரண்டு மூன்று தினங்களில் நன்றாக முகக்ஷவரம் செய்து கொண்டு வந்து சேர்ந்தார். பெண் அவருக்குப் பிடித்திருந்தது. பெண்ணோ, அல்லது பெண்ணின் பெரிய தாயாரோ யாதொரு ஆக்ஷேபணையும் சொல்லவில்லை. வெற்றிலை பாக்குப் பரிமாறி, முகூர்த்தம் நிச்சயிக்கப் பட்டது!
இக் கலியாணத்தைப் பற்றி லக்ஷ்மியம்மாளின் மனப்பான்மை என்னவென்பதை அறிவது மிகவுங் கஷ்டமாயிருந்தது. ஒரு சமயம் ஒரு மாதிரியும், இன்னொரு சமயம் ஒரு மாதிரியும் பேச வாரபித்தாள். “மாப்பிள்ளை அப்படி ஒன்றும் வயதானவராய்த் தோன்றவில்லை. ஏராளமான சொத்திருக்கிறது.மூத்த குடியாளுக்கு ஆண் சந்ததி இல்லை எல்லாம் இவளுடைய பிள்ளைகளுக்குத்தானே. என் சிவகாமிக்கு என்ன குறைச்சல்?” என்பாள் ஒரு சமயம். இன்னொரு சமயம் சலிப்புடன், “உம், என்ன விருந்தாலும் இரண்டாந் தாரந்தானே. அவள் தலையில் எழுதியது அவ்வளவுதான்!” என்பாள். அவளுடைய மனதில் அதைப் பற்றி நிச்சயமான அபிப்பிராயம் ஒன்றும் இல்லை போலும். அத்துடன் இந்நிலைமைக்குத் தன்னை அவள் வெகு நாட்களாகத் தயார் செய்து கொண்டு வந்தது போலவுந் தோன்றியது. உள்ளூற அவளுடைய மனதில் அவ்வெண்ணம் வேரூன்றிவிட்டது. தாயையுங் தகப்பனையும் பறிகொடுத்த சிவகாமியைத் தன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்த போதே, ‘இவள் இரண்டாந் தாரமாய்த்தான் வாழ்க்கைப்பட வேண்டியிருக்கும்’ என்று லக்ஷ்மியம்மாள் நினைத்து விட்டாள். இடையில் பாலகிருஷ்ணனைப் பற்றி அவள் எண்ணிய எண்ணம் கானல் நீர் தானே! ஆகையினால் பொதுவாகப் பார்க்குமிடத்து, லக்ஷ்மியம்மாள் சந்தோஷமடைந்தாள் என்றே சொல்லவேண்டும்.
சிவகாமி? அவள் இதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை.
ராமநாதஞ் செட்டியார் இவ் விஷயத்தைக் கேள்விப்பட்டபோது, அதிக சந்தோஷமடைந்தார். சிவகாமி யைப் பாலகிருஷ்ணனுக்குக் கலியாணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் தன் சிறிய தயாருக்கு இருக்குமோ என்று அவர் பயந்ததுடன், தன்னுடைய தந்தைக்கும் அம்மாதிரி அபிப்பிராய மிருக்குமோ என்றும் அவர் சந்தேகித்தார். அதை உத்தேசித்துத்தான் அவர் தன்னுடைய மகனை அன்று எச்சரித்தார். ஆகை யினால் சிவகாமிக்கு வேறு இடத்தில் கலியாணம் ஆவது அவருடைய அச்சத்தை நீக்கியது.
பாலகிருஷ்ணன்? இதைப் பற்றி அவனுடைய உள்ளக் கிடக்கை என்ன? அந்தச் சனியன் என்றைக்குத் தொலையும், தான் நிம்மதியாயிருக்கலாம் என்று தானே அவன் நினைத்துக் கொண்டிருக்கிறான்! ஆகையினால் அவனும் சந்தோஷம் அடையத்தானே வேண்டும்?
ஒரு நாள் அவன் ஏதோ நினைத்துக்கொண்டு மாடியில் உட்கார்ந்திருந்தான். படிப்பில் ஏனோ, அவன் மனம் செல்லவில்லை. சிவகாமி ஏதோ அலுவலாக மாடிக்கு வந்தாள். பாலகிருஷ்ணனுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. சட்டென்று எழுந்து சென்று அவளை அணுகி, அவளுடைய கைகளைப் பிடித்தான்.
“காமு! உனக்குக் கலியாணமாமே! இன்னுஞ் சில தினங்களில் நீ உன் புருஷன் வீட்டிற்குப்போய் விடுவாய். அப்புறம்…” என்று கொஞ்சுதலாய்ச் சொன்னான்.
“உன் ஆதரவும் வேண்டாம், உன் அடியும் வேண்டாம்” என்று சொல்லி வெடுக்கெனத் தன் கைகளைப் பிடுங்கிக் கொண்டு அவள் சென்று விட்டாள்!
அப்பொழுது பாலகிருஷ்ணனுக்கு என்ன தோன்றி யது? அவன் என்ன நினைத்தான்?
ஒன்பதாவது அத்தியாயம்
பகவான் செட்டியார் பேச்சு மாறிவிட்டார்! முன்னம் கலியாணத்தைப் பற்றி அவர் பேசிய பேச்சுக்களும், அதற்குப்பின் இப்பொழுது நடந்த நடவடிக்கைகளும் சுந்தரஞ் செட்டியாருக்கு ஞாபகம் வந்தன. சிவகாமிக்கு என்னென்ன நகைகள் மாப்பிள்ளை போடுகிறார் என்பதைச் சுந்தரஞ் செட்டியார் லக்ஷ்மியம்மாளிடம் வெகு சுலபமாகவும் வெற்றிகரமாகவும் சொல்லிவிட்டார். ஆனால் பகவான் செட்டியாரை அதற்குச் சம்மதிக்க வைப்பதற்கு அவர் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. கருப்பட்டி ஒப்பந்தம் சகாயமாகச் செய்து கொள்வதிலாவது அவருடைய வேதாந்த ஞானம் சிறிது உதவியது. இங்கே அது கூட அவருக்கு உதவாது போல் முதலில் தோன்றிற்று.
“உம்முடைய மனைவிக்குத் தானே ஐயா போடுகிறீர்? வேறு யாருக்குப் போடப் போகிறீர்” என்று சொன்னார் சுந்தரஞ் செட்டியார்.
அதற்கப்புறங்கூடப் பகவான் செட்டியார் சம்மதிக்க வில்லை. கடைசியில் அந்நகைகள் போடுவதற்குச் சம்மதிக்கா விட்டால், தான் கலியாணத்திற்கு இசைய முடியாதென்று சுந்தரஞ் செட்டியார் முறித்துக் கொண்டார். அதற்கப்புறந்தான் பகவான் செட்டியார் அரை மனதாய்ச் சம்மதித்தார். ஆனால் ஆசாமி மிகக் கறாரான பேர்வழி போலும்! “நகைகள் இன்னின்னவை என்று தீர்மானித்தது சரிதான். ஒவ்வொன்றும் இத்தனை பவுன் என்பதையும் இப்பொழுதே பேசிக் கொள்வோம். பின்னால் கலியாண வீட்டில் தகராறு ஏற்படக் கூடாதல்லவா?” என்றார்.
“புதிதாகவா நகைகள் செய்யப் போகிறீர்கள்? முதல் மனைவியின் நகைகளெல்லாம் இருக்கு மல்லவா? அதைப் போட்டால் போதும்” என்றார் சுந்தரஞ் செட்டியார்.
“அவளுடைய நகைளெல்லாம் என் மகளுக்குத் தனியாக எடுத்து வைத்து விட்டேன். அது ஒன்றையேனும் நான் தொடப் போவதில்லை. எல்லாம் இப்பொழுது புதிதாய்த்தான் செய்யவேண்டும்.”
எத்தனை பவுனில் நகைகள் செய்யப்பட்டாலும், அதைப்பற்றி சுந்தரஞ் செட்டியாருக்குக் கவலை அதிக மில்லை. அத்தனை நகை போடுவதாகப் பெருமையாச் சொல்லி, லக்ஷ்மியம்மாளைக் கலியாணத்திற்குச் சம்மதிக்க வைக்க வேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கம். ஆயினும் வார்த்தையை விட்டுக் கொடுக்காமல், “உங்கள் மனைவிக்குச் செய்து போடுகிறீர்கள். நீங்கள் எப்படிச் செய்தாலும் சரி. நன்றாய்ச் செய்தால் உங்களுக்குத். தானே பெருமையும், சந்தோஷமும்”, என்றார்.
“காசுமாலை பதினைந்து பவுன்களுக்குள் சுருக்கமாய்த்தான் செய்வேன்” என்று கண்டிப்பாகப் பகவான் செட்டியார் கூறினார். இதற்குச் சுந்தரஞ் செட்டியார் சம்மதிக்க மாட்டாரோ என்று அவருக்குக் கவலை.
“சரி,” என்றார் சுந்தரஞ் செட்டியார்.
“பெரண்டைக்காய்ச் சங்கிலி இரண்டு சரங்கள் போடவேண்டும் என்றீர்கள். மூன்றும் மூன்றும் ஆறு பவுன்தான்”
”சரி.”
“மிளகு மணிமாலை இரண்டே பவுன்தான்!”
“சரி.”
“கலர்க்கல் மாலையும் அப்படித்தான்.”
“உங்களிஷ்டம் என்றுதான் சொல்லிவிட்டேனே!-”
“எல்லாம் இப்பொழுதே பேசிக் கொண்டால்தான் நல்லது. பின்னால் கலியாண வீட்டில் நீங்கள் தகராறு- செய்தால், நாலுபேர் பார்ப்பவர்களுக்கு நன்றாயிருக் காதல்லவா? நாலும் நாலும் எட்டுவளையல்கள் நாலே பவுன்தான்!”
‘ஆசாரி கெட்டிக்காரனாயிருந்து, உங்களுக்கு இரண்டு பவுனில் செய்து கொடுத்தாலும் எனக்குச் சம்மதமே!”
“புது வைரத்தோடுதான் போடுவேன். மூக்குத்தியும் அப்படியே.”
இவைகளில் எல்லாம் விட்டுக்கொடுத்த சுந்தரஞ் செட்டியாருக்குத் திடீரென்று ஒருயோசனை தோன்றியது. “நகைகளை எல்லாம் உங்களிஷ்டத்திற்கு விட்டுவிட்டேன். ஆனால் நிச்சய தாம்பூலப் புடவையையும், முகூர்த்தப் புடவையையும் என்னிஷ்டம் போல் நீங்கள் வாங்க வேண்டும்,” என்றார்.
புடவையொன்று இருநூறு, முன்னூறு ரூபாய்க்கு வாங்க வேண்டுமென்று சொல்லி விடுவாரோ என்று பகவான் செட்டியார் பயந்தார். ஆனால் சுந்தரஞ் செட்டியாருடைய கற்பனை அவ்வளவு தூரத்திற்குச் செல்லவில்லை.
“நிச்சயதாம்பூலப் புடவை எழுபத்தைந்து ரூபாய். முகூர்த்தப் புடவை ஐம்பது ரூபாய்!”
“உங்களிஷ்டம் போலவே செய்து விடுவோம். இல்லையானால் நீங்கள் விடமாட்டீர்கள் போலிருக்கிறதே!” என்றார் பகவான் செட்டியார்.
இவைகளில் எல்லாம் விவாதம் சீக்கிரம் முடிந்து விட்டது. கலியாணச் செலவெல்லாம் பகவான் செட்டியாரைச் சேர்ந்தது என்று சொல்லப்பட்டது. அதையும் அவர் விசேஷமாய் ஆக்ஷேபிக்கவில்லை. ஆனால் கலியாணம் எங்கு நடத்துவது என்பதைப் பற்றித்தான் அதிகத் தகராறு ஏற்பட்டது. மாப்பிள்ளை வீட்டிலோ அல்லது தன்வீட்டிலோ நடத்த வேண்டும் என்பது சுந்தரஞ் செட்டியார் கக்ஷி.
“இரண்டாந்தாரந்தானே, ஆடம்பரமெல்லாம் எதற்கு? திருப்பரங்குன்றக் கோயிலில் சுருக்கமாகச் செய்து விடுவோம்” என்றார் பகவான் செட்டியார்.
தன்னுடைய சொந்தப் பிள்ளைகளின் கலியாணத்தைச் செய்து பார்ப்பதற்கு லக்ஷ்மியம்மாள் கொடுத்து வைக்கவில்லை. தன் தங்கையின் மகள் கலியாணம் ஒன்று. தான் அவள் சந்தோஷமாய்ச் செய்து பார்க்கப்போகிறாள். அதையும் இப்படிக் கோயிலில் செய்வதற்கு சம்மதிக்கவே மாட்டாள் என்று சுந்தரஞ்செட்டியார் நிச்சயமாக நினைத்தார்.
“ஒருநாள் கலியாணமானாலும் சரி. உங்கள் வீட்டிலோ, அல்லது எங்கள் வீட்டிலோ வைத்துக்கொள்வோம். கோயிலில் செய்வதற்கு என் மனைவி சம்மதிக்க மாட்டாள்” என்று சுந்தரஞ்செட்டியார் சொன்னார்.
கடைசியில் வேறு வழியில்லாமல் அதற்கும் சம்மதிக்க நேர்ந்தது பகவான் செட்டியார். இவ் விஷயங்களில் எல்லாம் சுந்தரஞ் செட்டியாருக்குப் பூர்ண வெற்றி!
இவ்வளவு விஷயங்களையும் பேசி, சில்லறை விஷயங்களைக்கூடக் கண்டிப்பாகவும், கறாராகவும் பேசிவிட்டு, பெண்ணைப் பார்த்துவிட்டுப் போனவர் இப்படி அடியோடு மாறிவிடுவாரென்று சுந்தரஞ் செட்டியார் நினைக்கவே இல்லை!
பகவான் செட்டியார் பேசின பேச்சு மாறி விட்டார்!
அந்த மனுஷரைச் சும்மா விடக்கூடாது! நாலு பேர்களுக்கு மத்தியில் அவர் மானத்தைப் போக்கிவிட வேண்டுமென்று சுந்தரஞ்செட்டியார் தீர்மானித்துக் கொண்டார். கலியாண வீட்டில் அதற்காக ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தார். நல்லவேளையாக ஒரு சந்தர்ப்பமும் சீக்கிரமே வாய்த்தது. ஏழெட்டுப் பேர்களுடன் பகவான் செட்டியார் பேசிக் கொண்டிருந்தார். சுந்தரஞ் செட்டியார் உடனே அங்கு சென்று, “இவர் இப்படிப் பேச்சு மாறலாமா ஐயா? வாக்கு மாறினால் வகுசி மாறி விடும் என்றல்லவா சொல்வார்கள்! இவர் செய்தது நியாயமா?” எனத் திடீரென்று கேட்டார்.
பகவான் செட்டியார் திடுக்கிட்டுப் போனார்! அவர் எவ்வகையில் வாக்கு மாறி விட்டார்?
“பதினைந்து பவுனில் காசு மாலை செய்வதாகப் பேசிவிட்டு, ஐம்பது பவுனில் பவுன் மாலையாக இவரை யாரையா செய்யச் சொன்னது? அதைச் சுமக்க மாட்டாமல், என பெண்ணினுடைய கழுத்தல்லவா புண்ணாய்ப் போய்விட்டது?” என்று சொல்லிச் சுந்தரஞ் செட்டியார் புன்முறுவல் செய்தார்.
எல்லோரும் சிரித்தார்கள்.
பேசினது பேசியபடி ஒன்றாவது செய்திருக்கிறாரா என்று கேளுங்கள். சங்கிலி ஆறு பவுனில் செய்வதாகப் பேச்சு. அது பத்துப் பவுன், மிளகு மணி மாலையும், கலர்க்கல் மாலையும் நாலு பவுனிலே பண்ணி விடுகிறேன் என்றார். அவை இரண்டும் பன்னிரண்டு பவுன். புது வைரத்தோடு தான் போடுவதாகச் சொன்னார். இப் பொழுது அசல் வைரத்தோடு வாங்கியிருக்கிறார். ஒவ்வொன்றாய்ச் சொல்வானேன்? ஒன்றாவது சொன்னபடி செய்யவில்லை!
யாவரும் சிரித்தனர்.
”பெண்ணைப் பார்த்து விட்டுத்தான், ஐயா, இப் படிச் சொன்ன சொல் தவறி விட்டார். பெண்ணைப் பார்க்குமாறு இவரை விட்டது பிசகாய்ப் பிசகாய்ப் போச்சு!” என்றார் சுந்தரஞ் செட்டியார்.
எல்லோரும் குலுங்கக் குலுங்கச் சிரித்தனர். கலியாண வீட்டில் அது நல்ல தமாஷாயிருந்தது. பகவான் செட்டியாருக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. இப்படித் தன் மானத்தைக் கெடுப்பாரென்று அவர் எதிர்பார்க்கவில்லை.
“என்னைக் கேலி பண்ணுவதற்கு மச்சினன் இல்லை என்று மாமா கேலி செய்கிறார். செய்து விட்டுப் போகட்டுமே!” என்றார் பகவான் செட்டியார்.
ஹாஸ்யம் மேலும் தொடரப்பட்டது.
“ஒரு நாள் கலியாணம் என்று நினைத்துக் கொண்டு, என் அலுவல்களை எல்லாம் அப்படி, அப்படியே போட்டு விட்டு வந்திருக்கும் போது, ஐந்துநாட்களுக்குக் கலியாணத்தை வைத்துக்கொண்டு, என்னைப் போகவிட மாட்டேன் என்கிறாரே. என் காரியங்களெல்லாம் கெட்டுப் போகுமே, அதற்கு யாரையா ஜவாப்தாரி?” என்று கலியாணத்திற்கு வந்திருந்த ஒருவர் கேட்டார்.
லக்ஷ்மியம்மாளுக்கும் பகவான் செட்டியார் மீது ஒரு குறை இருந்தது. தான் போட்டது என்று பெயர் சொல்வதற்கு ஏதாவது சில நகைகள் தன் மகளுக்குச் செய்து போட வேண்டுமென்று அவளுக்கு ஆசை. அதற்கு இடமே வைத்திருக்கவில்லை, அவளுடைய மரு மகன். முகூர்த்த நெல் சேலை, நாலா நீர்ச்சேலை என்று சில நல்ல புடவைகளையாவது எடுத்துக் கொடுக்கலாம் என்று நினைத்து அவள் வாங்கி வைத்திருந்தாள். இவ் விஷயத்தில் சுந்தரஞ் செட்டியாரும் அவளுடைய இஷ்டப்படியே விட்டிருந்தார். ஆனால் பகவான் செட்டியார் எடுத்திருந்த விலையுயர்ந்த பட்டுப் புடவை களிடையே, லக்ஷ்மி யம்மாள் எடுத்திருந்தவை சிறிது கூடச் சோபிக்கவில்லை.
திருநெல்வேலியில் சிவகாமியின் மாப்பிள்ளை வீட்டைப் பார்த்தபோது லக்ஷ்மிக்குச் சந்தோஷம் தாங்கமுடியவில்லை. மாடுகளும் கன்றுகளும், கூடமும் மாடியுமாயிருந்ததைக் கண்டுப் பூரித்துப் போனாள். ஒரு பெரிய அறை முழுவதும் நெல் மூட்டைகள் அடுக்கப்பட்டிருந்தன. சிவகாமிக்கு இத்தகைய பாக்கியங்கள் எல்லாம் கிடைக்குமென்று அவள் நினைக்கவே இல்லை.
“சிவகாமி அதிர்ஷ்டக்காரிதான்!” என்றாள் கலியாணத்திற்கு வந்திருந்த ஒருத்தி.
“அதிர்ஷ்டக்காரிதான். இல்லையென்று யார் சொன்னது? ஆனால் மாப்பிள்ளை தான்….” என்று இன்னொருத்தி ஆரம்பித்தாள்.
“மாப்பிள்ளைக்கு என்ன? மன்மதன் மாதிரி இருக்கிறார்”, என்று இரண்டு மூன்று பேர் சேர்ந்தாற்போல் சொன்னார்கள்.
அவள் அப்படியே அடங்கிவிட்டாள்.
சுந்தரஞ் செட்டியார் கடையிலிருந்த வேலைக்காரர் சிலரும் கலியாணத்திற்கு வந்திருந்தனர். அவர்களுக் கெல்லாம் பகவான் செட்டியார் புதுவேஷ்டியும், புது அங்கவஸ்திரமும் வாங்கிக் கொடுத்தார். அவர்களுக்கும் பரமசந்தோஷம்!
பகவான் செட்டியாரை அப்படி மயக்கி விட்டாள் சிவகாமி!
பட்டும் பணியும், பொட்டும் பூவுமாய்ச் சிவகாமியைப் பார்த்தபோது, சுந்தரஞ் செட்டியாருக்குக்கூட ஒரு சபலம் தோன்றியது அவருக்கென்ன சபலம்?
இங்ஙனம் எல்லாருக்கும் சந்தோஷமா யிருந்தது சரிதான். ஆனால் சிவகாமிக்கு?
ஏன், சிவகாமிக்கும் மிகுந்த திருப்திதான். பகவான் செட்டியார் ஒரு சங்கீதக் கச்சேரியும் வைத்து விட்டார்! த ன்னுடைய கலியாணம் இவ்வளவு சிறப்பாக நடக்கு மென்று அவள் கனவிலும் கருதவில்லை. வீட்டிலிருந்த கட்டில்களையும், மெத்தைகளையும், நாற்காலிகளையும் பார்த்தபோது, அவளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி உண்டாயிற்று. அத்தனை செல்வங்களும் இனி அவளுடையவை!
திருமணப் பத்திரிகை அச்சிடுவதாக முதலில் நினைப்பில்லை. ஆனால் ஒரு குறையுமிருக்க லாகாதென்று, பகவான் செட்டியார் அதையும் அச்சிட்டுப் பந்து மித்திரர்களுக்கு வழங்கி இருந்தார்.
இவ்வளவு விமரிசைகளுடன் பகவான் செட்டியாருக்கும் சிவகாமிக்கும் திருமணம் நிறைவேறியது!
– தொடரும்…
– திருமணம் (நாவல்), முதற் பதிப்பு: செப்டம்பர் 1947, அருணோதய நிலையம், வேலூர்.
![]() |
சு.குருசாமி (Trichi. S.V. Guruswamy Sarma, திருச்சிராபுரம் சு.வை.குருசாமி சர்மா) என்பவர், தமிழில் முதல் சில புதினங்களில் ஒன்றான "பிரேம கலாவதீயம்" (1893) எழுதிய ஒரு முக்கியமான தமிழ் புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் 1940களில் "வாடா விளக்கு" போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும், பல கதைகளைத் தொகுத்து வெளியிட்டதோடு, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவியவர். மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை, பண்டித எஸ்.எம்.நடேச சாஸ்திரி, பி.ஆர்.ராஜமையர், சு.வை.குருசாமி சர்மா, அ.மாதவையா ஆகியோர் முதற் காலக்கட்டத் தமிழ்…மேலும் படிக்க... |
