திருமணம்
கதையாசிரியர்: சு.குருசாமி
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: January 1, 2026
பார்வையிட்டோர்: 3,654
(1947ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9
நான்காவது அத்தியாயம்
சீதையின் தாயார் தன் மகனைச் சாகக் கொடுத்த துக்கத்தில் குழந்தை பாலகிருஷ்ணனைக் கவனிக்காமல் போய்விட்டாள். பாலகிருஷ்ணன் பிறந்த துரதிர்ஷ்டத் தினால் தான் அவளுடைய மகள் இறந்துவிட்டதாக அவள் எண்ணினாள்; இங்ஙனம் ஒருவரும் வேண்டாத, விரும்பாத குழந்தையாக இருந்தான் பாலகிருஷ்ணன்!
தாயை இழந்த தன் குழந்தைக்கு ராமநாதன் பிஸ்கோத்தும், பழங்களும், வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தான். ஆனால் குழந்தையை வளர்ப்பதற்குப் பிஸ்கோத்தும், பழங்களும் மட்டும் போதுமா? தன் மனைவியின் அருமை ராமநாதனுக்கு இப்பொழுது நன்கு விளங்க வாரம்பித்தது. நோயாளி ஜீவனாயிருந்த போதிலும், எவ்வளவு பெரிய சுமையைப் பிறருக்கு எந்த விதமான கஷ்டமும் கொடுக்காமல் வெகு சுலபமாகச் சுமந்து கொண்டிருந்திருக்கிறாள் என்பதை யோசித்துப் பார்த்த போது, அவனுக்குத் தன் மனைவியின் மீது பச்சாத்தாபமும், தான் அவளை அலக்ஷியம் செய்ததற்காகத் தன் மீது சிறிது வெறுப்பும் உண்டாயின. அவள் சுமந்து கொண்டிருந்த பாரத்தைப் பொத்தென்று கீழே போட்டு விட்டு மறைந்துவிட்டாள். இனி அச் சுமையை யார் தூக்குவது?
லக்ஷ்மியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு பாலகிருஷ்ணன் அன்று நின்றதைக் கண்டபோது, சுந்தரஞ் செட்டியார் தன் மனைவியை நோக்கி, “இனிமேல் இவன் தான் உனக்கு மகன் என்று நினைத்துக்கொள். இவனை நன்றாகக் கவனித்துக்கொள், லக்ஷ்மி. பாவம், தாயில்லாக் குழந்தை யல்லவா!” என்றார்.
லக்ஷ்மி வேறொன்றும் பதில் சொல்லவில்லை. “ச்ச்” என்று உற்சாகமற்ற முறையில் உச்சுக் கொட்டினாள். அவளுடைய சொந்தக் குழந்தைகளோ ஒன்றன் பின் ஒன்றாய் இறந்து விட்டன. இவனை எல்லாம் வளர்க்க வேண்டுமென்று அவளுக்குத் தலை விதியா? அப்படியே அவனை வளர்த்தாலும் அவன் அவளுக்கு என்ன சாதிக்கப் போகிறான்? தன் மகனாயிருந்தால், தனக்குப் பிற்காலத்தில் உதவுவான். பாலகிருஷ்ணனை வளப்பதனால் என்ன பிரயோஜனம்? என்ன இருந்தாலும் அவன் அயலாள் மகன் தானே என்று இவ்வாறெல்லாம் லக்ஷ்மி நினைத்தாள். தன் மகன் ரங்கசாமி இறந்த பின்பு வேறு எந்தப் பிள்ளையின் மீதும் தன்னால் அன்பு செலுத்த முடியாதென்று அவளுக்குத் தோன்றியது. அவனைப் போன்ற புத்திநுட்பம், அவனைப் போன்ற அழகு வேறு எந்தப் பிள்ளைக்கு வரும்? வேறு எந்தக் குழைந்தையினால் அவனைப் போல் மழலை மொழிகள் கூறி அவளை மயக்க முடியும்? அப்படி ஒரு குழந்தை உலகத்தில் இருக்கப் போகிறதா? அல்லது இனித் தான் பிறக்கப் போகிறதா என்றெல்லாம் எண்ணினாள்.
குழந்தை பாலகிருஷ்ணன் “பாட்டி! பாட்டி!” என்று அவளுடைய கால்களை வந்து கட்டுவான். அச்சமயங்களில் எல்லாம் பலாத்காரமாய் அவனை இழுத்தெறிய அவளுக்கு மனம் வருவதில்லை. அது அவளுடைய இயற்கைக்கு முற்றிலும் விரோதம். ஆயினும் “அதோ பொம்மை இருக்கிறது எடுத்துக் கொண்டுவா; அதோ பிஸ்கோத் இருக்கிறது, எடுத்துக்கொள்” என்று ஏதாவது போக்குக் காட்டி அனுப்பிவிடுவாள்.
தாயினிடத்திலும், தாயைப் பெற்ற பாட்டியினிடத்திலும் காணாத ஒரு வசீகர சக்தியை தன் தாத்தாவின் இரண்டாந்தாரமாகிய லக்ஷ்மியினிடம் பாலகிருஷ்ணன் கண்டான். தாய் நோயாளியாயிருந்தாள். அவளைக் கண்டாலே அவனுக்கு வெறுப்பு. லக்ஷ்மியின் முகத்தில் சோகச் சாயை படர்ந்திருந்த போதிலும், அது மலர்ந்த முகம். அது அவனைத் தன் பாலிழுத்தது.
ஒரு நாள் பாலகிருஷ்ணன் லக்ஷ்மியிடம் வந்து, “பாட்டி, ஒனக்கு ஒரு பாட்டுச் சொல்லட்டுமா?” என்று கேட்டான். குழந்தை தனக்குத் தெரிந்தவைகளை எல்லாம் பிறரிடத்தில் சொல்லி அவர்களுடைய புகழைப் பெற வேண்டு மென்று நினைக்கிறது. பாட்டி பதில் சொல்வதற்குள் பாலகிருஷ்ணன் பாட்டை ஆரம்பித்துவிட்டான்.
“காக்கா, காக்கா, கண்ணுக்கு மைக்கொண்ணா
குருவி, குருவி, கொ ண்டைக்குப் பூக் கொண்ணா
கொக்கே, கொக்கே, குழந்தைக்குப் பால் கொண்ணா
கிளியே,கிளியே, கிண்ணியிலே தேன் கொண்ணா”
என்று சிறுவன் பாடினான். இம்மாதிரி ரங்கசாமி பாடி இருந்ததால், கிண்ணியில் பாலுந்தேனும் கலந்து கொண்டு வந்து லக்ஷ்மி கொடுத்திருப்பாள். ஆனால் இப் பொழுதோ, ”நாலு வயதிலேயே தாயைத் தின்னவனுக்கு, வேறு யார் பாலுந் தேனுங் கொடுப்பார்கள்? கொக்குங் குருவியுந் தான் கொடுக்கவேண்டும்!” என்று சிரித்துக் கொண்டே சொல்லி, அவனுடைய கன்னத்தை இலேசாய்க் கிள்ளினாள். பாலகிருஷ்ணனுடைய பாட்டு அவளுக்கு நன்னாய்த்தானிருந்தது!
சிறுவன் பள்ளிக்கூடம் செல்ல ஆரம்பித்தான். தாயில்லாக் குழந்தையாகையினால், சிறிது பருவம் தவறியே அவன் பள்ளிக்கு அனுப்பப்பட்டான். ரங்கசாமி பாடிய பாட்டுக்களையும்,பேசிய பேச்சுக்களையும் அவனுங் கற்றுக் கொண்டு வந்து பாட்டியிடம் சொல்லி, அவளை மகிழ்விக்க ஆரம்பித்தான். அவைகளை எல்லாம் அனுபவித்து லக்ஷ்மி சந்தோஷமடைந்தா ள்.
“நிலா, நிலா! எங்கே போறே? மலைக்குப் போறேன். மலைக்கு எதுக்கு? மரம் வெட்ட. மரம் எதுக்கு? செப்புச் செய்ய. செப்பு எதுக்கு ? காசு போட. காசு எதுக்கு ? மாடு வாங்க. மாடு எதுக்கு? பால் கறக்க. பால் எதுக்கு? நீ குடிக்க!” என்று ஒரு நாள் அவன் கூறிய பொழுது, “வானத்திலிருக்கும் சந்திரனாடா உனக்குப் பால் கொண்டு வர வேண்டும்? நான் கொடுக்க மாட்டேனா?” என்று சொல்லி லக்ஷ்மி சிரித்தாள்.
“அடே கண்ணு, ஆனந்த நடனம் ஆடு பார்க்கலாம்” என்பாள் லக்ஷ்மி. பாலகிருஷ்ணன் ஆடி முடிந்தவுடன், “நீயும் என் ரங்கசாமியைப் போலவே ஆடுகிறாயடா கனி!” என்று அவனைக் கட்டி முத்தமிடுவாள்.
பாலகிருஷ்ணனும் “ஓடி விளையாடு பாப்பா” “செந்தமிழ் நாடு ” என்னும் பாட்டுக்களைப் பாடினான். சில நாட்களில் ரங்கசாமி பாடாத அநேக பாட்டுக்களைப் பாடி, அவன் காட்டாத அநேக விதமான விளையாட்டுக்களை எல்லாங் காட்ட வாரம்பித்தான். அப்பொழுதெல்லாம் லக்ஷ்மி, “நீ என் ரங்கசாமியை விட புத்திசாலியா யிருக்கிறாயடா, பாலு!” என்று சொல்லி மகிழ்வாள்.
இங்ஙனம் சிறிது சிறிதாக லக்ஷ்மி தன் மகனிறந்த துக்கத்தை மறக்கலானாள். சுந்தரஞ்செட்டியாருடைய போதனைகள் சாதிக்காத ஒருகாரியத்தைக் காலதேவனும் பாலகிருஷ்ணனும் சேர்ந்து சாதித்து விட்டார்கள்!
ஒரு சமயம் சீதையின் தாயார் வெற்றிபுரத்துக்கு வந்தாள். தன் மகள் வயிற்றுப் பேரனைத் தன்னுடைய வீட்டிற்குக் கூட்டிக் கொண்டு போய்க் கொஞ்ச நாள் வைத்திருக்க வேண்டுமென்று அவளுக்கு ஆசை.
அதை, லக்ஷ்மியிடம் தெரிவித்த போது, “பேஷாய்க் கூட்டிக் கொண்டு போங்கள். உங்களுக்கில்லாத பிள்ளையா?” என்று சொன்னாள்.
ஆனால் அன்று தன் கணவன் வந்தபோது, “குழந்தை நன்றாய்ப் படித்துக் கொண்டிருக்கிறானே. இப்பொழுது அவனைப் பட்டிக்காட்டிற்கு அனுப்பினால், அவனுடைய படிப்பு என்னாவது?” என்று ரகசியமாகச் சொன்னாள். அவரும் அவளுடைய உள்ளக் கிடக்கையை அறிந்து கொண்டு, பாலகிருஷ்ணனை அவனுடைய பாட்டியுடன் அனுப்புவதற்கு மறுத்து விட்டார்.
தன் மனைவியின் தூண்டுதலின் பேரில்தான் சுந்தரஞ் செட்டியார் பையனை அனுப்ப மறுத்து விட்டாரென்பது, ஆவுடையம்மாளுக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. “என் பேரனை அனுப்பமாட்டேன் என்பதற்கு இவள் யார்? அப்படியாவது இவள் தகப்பனைப் பெற்ற பாட்டியா, இந்த மாதிரியெல்லாம் அதிகாரம் செய்வதற்கு ? இரண்டாந் தாரமாய் வாழ்க்கைப் பட்ட கழுதைதானே! இவளுக் கென்ன இத்தனை வம்பு?” என்று அடுத்த வீட்டுக்காரியிடம் குறைப்பட்டுக் கொண்டு, வீட்டில் சாப்பிடாமலும் சொல்லிக் கொள்ளாமலும் அவள் ஊருக்குப் போய். விட்டாள்.
அதைக் கேள்விப் பட்டவுடன், லக்ஷ்மி மிகவும் மனம் வருந்தினாள். என்ன விருந்தாலும் பாலகிருஷ்ணன் தன் பிள்ளையாவானா என்று அவள் நினைத்தது சரியாய் விட்ட தல்லவா? எதற்காக இன்னொருத்தி பிள்ளையிடம் இப்படி வாஞ்சை வைக்கவேண்டும் என்று நினைக்க ஆரம்பித்தாள். இதற்கேற்றாற்போல் இன்னொரு சிறு சம்பவம் அவளுக்கு ஞாபகம் வந்தது. ஒரு நாள் பள்ளிக்கூடத்திலிருந்து வந்து, நுழையும் போதே, பாலகிருஷ்ணன் “பாட்டி!” என்று கூப்பிட்டுக் கொண்டே வந்தான். அவ்வளவு பிரியத்துடன் அவன் கூப்பிட்டுக் கொண்டு வந்ததைப் பார்த்ததும், “நான் உனக்குப் பாட்டி இல்லையடா, கண்ணு, நான் தான் உனக்கு அம்மா. என்னை ‘அம்மா ‘ என்று கூப்பிடு ராசா. ஆகட்டுமா?” என்று சொன்னாள். ஆனால் பழைய வழக்கப் படி பாலகிருஷ்ணன் அவளைப் ‘பாட்டி’ என்றே கூப்பிட்டான். அப்பொழுதெல்லாம் அவளுக்கு அது விகற்பமாய்த் தோன்றவில்லை. ஆனால் இப்பொழுதோ, ‘அந்தப் பயலும் நான் என்ன சொல்லியபோதிலும் என்னைப் பாட்டி ‘ என்றுதானே கூப்பிடுகிறான். ‘அம்மா’ என்று ஒரு தடவை யாவது கூப்பிடுகிறானா? என்ன இருந்தாலும் நான் அயலாள் தானே?’ என்று லக்ஷ்மி உள்ளம் நொந்தாள்.
அன்று சுந்தரஞ் செட்டியார் சாப்பிட வந்த போது, ”பாலகிருஷ்ணனைக் கொண்டு போய் அவன் பாட்டியிடம் சேர்த்து விட்டு வாருங்கள். நான் யார் அவனை அனுப்ப வேண்டாம் என்று சொல்வதற்கு?” என்று சொன்னாள் லக்ஷ்மி அவளுடைய கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது.
விஷயம் முழுவதையும் விசாரித்து அறிந்து கொண்டு, “உனக்கில்லாத உரிமைதான் அவளுக்கிருக்கிற தாக்கும்? அவன் என்னென்னமோ உளறினாள் என்று நீ ஏன் வருத்தப்படுகிறாய்?” என்று சுந்தரஞ் செட்டியார் மனைவியைத் தேற்றினார்.
“மக்களின்பம் எனக்குக் கூடாதென்று தானே ஈசன் என் பிள்ளைகள் எல்லாவற்றையும் பறித்துக் கொண்டார்! இன்னும் ஏன் எனக்கு இந்த வீண் ஆசை?” என்றாள் லக்ஷ்மி.
இப்படியே லக்ஷ்மியின் மனம் மாறு பட்டு விடுமோ என்று சுந்தரஞ் செட்டியார் அஞ்சினார். எல்லாம் பக்கு.. வமாய் வந்து கொண்டிருந்த சமயத்தில், வகை தொகை ஒன்றுந் தெரியாத ஆவுடையம்மாள் வந்து காரியத்தைக் கெடுத்து விட்டாளே என்று அவர் நினைத்தார்.
இங்ஙனமிருக்கையில் ஒரு நாள் சுந்தரஞ்செட்டியார் வீட்டிற்கு வந்தபோது, வீட்டில் ஒருவருமில்லை. வீடு திறந்திருந்தது. ஆனால் லக்ஷ்மியைக் காணோம்! அவள் எங்கே? மாடிக்குச் சென்று பார்த்தார். அங்கும் இல்லை. வீட்டைத் திறந்து போட்டு விட்டு எங்கே போய் விட்டாள்? செட்டியார் காத்திருந்து பார்த்தார். சுமார் அரை மணி நேரமாய் விட்டது எங்கே இன்னுங் காணோமே என்று வாசலுக்குச் சென்று இப்பக்கமும் அப்பக்கமும் பார்த்தார். தெருக்கோடியில் பாலகிருஷ்ணைனைக் கையில் பிடித்துக் கொண்டு லக்ஷ்மி வந்து கொண்டிருந்தாள்.
“எங்கே போயிருந்தாய்?”
“பள்ளிக்கூடம் விட்டு வெகு நேரமாய் விட்டது. பாலனைக் காணோமே என்று பார்க்கப் போயிருந்தேன்!”
“அதற்கு வீட்டைப் பூட்டி விட்டாவது போகக் கூடாதா?”
”ஐயையோ! திறந்தா கிடந்தது? நான் போன அவசரத்தில் பூட்ட மறந்து விட்டேன் போலிருக்குது!”
செட்டியார் சிரித்துக் கொண்டே, “நீயார் அவனைத் தேடுவதற்கு? உனக்கு ஏன் இந்த வீண் ஆசை? உன் பிள்ளையா நீ இப்படி எல்லாம் ஆத்திரப் படுவதற்கு?” என்றார்.
லக்ஷ்மியும் சிரித்துக் கொண்டே, “சாப்பிட வாருங்கள். நேரமாச்சு” என்றாள்.
ஐந்தாவது அத்தியாயம்
பள்ளிக்கூடம் விட்டவுடன் பாலகிருஷ்ணன் வெகு வேகமாய் வீட்டை நோக்கி ஓடினான். இப்பொழுது அவனுக்கு வயது பத்திருக்கும். அன்றாவது பாட்டி வந்திருக்கிறாளா என்று பார்க்க வேண்டுமென்று அவனுக்கு ஆவல். பாட்டி ஊருக்குப் போய் ஏறக்குறைய ஒரு மாதமாகிறது. இன்னும் வரவில்லை. ஒவ்வொரு நாளும் மா காலையிலும் மாலையிலும்ம பள்ளிரக்கூடம் விட்டவுடன் இதே ஆவலுடன் மிக விரைவாய் வீட்டிற்கு வருவான். வீட்டிற்கு வந்ததும் பாட்டி வராததைக் கண்டு ஏமாற்றமடைவான். லக்ஷ்மிம்மாள் தன்னுடன் பால கிருஷ்ணனையுங் கூட்டிக் கொண்டு சென்றிருப்பாள். அவனுடைய படிப்புக் கெட்டு விடும் என்று சுந்தரஞ் செட்டியார் தாம் வேண்டாமென்று தடுத்து விட்டார். இவ்வொரு மாதமாகச் சுந்தரஞ் செட்டியாருக்கும் பாலகிருஷ்ணனுக்கும் ஹோட்டலில்தான் சாப்பாடு.
பாலகிருஷ்ணனுடைய தந்தை ராமநாதஞ் செட்டியாருக்கு மறு விவாகம் ஆகிவிட்டது. புதிதாக வந்த பெண்ணுக்கும் லக்ஷ்மிக்கும் ஒத்துப் போகவில்லை. ஆகையினால் அவர் தன் புது மனைவியின் தூண்டுதலின் பேரில், தனிக்குடித்தனம் செய்ய வாரம்பித்தார். மகனும் மருமகளும் தனியாகப் பிரிந்து செல்வதாகத் தீர்மானித்த காலத்தில், பாலகிருஷ்ணனையும் ராமநாதன் கூட்டிக் கொண்டு சென்று விடுவானோ என்பதுதான் லக்ஷ்மிக்குப் பெருங் கவலையாகவிருந்தது. ஆனால் நல்ல வேளையாகப் பாலகிருஷ்ணனை லக்ஷ்மியிடமே விட்டுச் சென்று விட்டார் ராமநாதஞ் செட்டியார். அவ்விதம் செய்ததில் அவர் லக்ஷ்மிக்கும் பாலகிருஷ்ணனுக்கும் பெருஞ் சேவை செய்தார். ஏன்? தனக்கும் ஒரு பெரிய நன்மையைத் தான் செய்து கொண்டார். பாலகிருஷ்ணன் இடையில் இருந்தால், அவர் தன்னுடைய மனைவியுடன் சந்தோஷமாக இருந்திருக்க முடியாது.
லக்ஷ்மி ஊருக்குச் சென்றவுடன் பாலகிருஷ்ணனை அவனுடைய தகப்பன் வீட்டிற்குச் சென்று கொஞ்சநாட்கள் சாப்பிடுமாறு சுந்தரஞ் செட்டியார் சொன்னார். ராமநாதஞ் செட்டியாரும் மகனைக் கூப்பிட்டார். ஆனால் பாலகிருஷ்ணன் போக மறுத்து விட்டான். கொஞ்ச வாரிடத்தில் தானே குழந்தை செல்லும்!
“தாத்தா, பாட்டி எப்பொழுது வருவாள்? இன்னுங் காணோமே?” என்று மிகுந்த ஆத்திரத்துடன் அன்று காலையில் பாலகிருஷ்ணன் கேட்டான்.
“காரியங்கள் எல்லாம் முடிந்து விட்டன. அநேகமாய் இன்றைக்கு வந்துவிடுவாள்” என்றார் சுந்தரஞ் செட்டியார்.
அந்த நம்பிக்கையில் தான் அவசர, அவசரமாய் ஓடி வந்தான் பாலகிருஷ்ணன். வீட்டிற்கு வந்து பார்த்தான். வீடு பூட்டியிருந்தது. அன்றும் பாட்டி வரவில்லை போலும் என்று நினைத்துக் கொண்டு, அடுத்த வீட்டில் சாவியை வாங்கி, வீட்டைத் திறந்து புத்தகங்களை வைத்து விட்டு வீட்டைப் பூட்டிக் கொண்டு கடைக்குச் செல்வதற்காக வாசற்படி இறங்கினான். தெருக் கோடியில் லக்ஷ்மியம்மாள் வந்து கொண்டிருந்தாள்! அவளுக்குப் பின்னால் அதோ வருவது யார்?
பாட்டி வீட்டிற்கு வந்து சேரும் வரைக்கும் சிறுவன் காத்திருக்க வில்லை. ”பாட்டி!” என்று அவளை எதிர் நோக்கி ஓடினான். “வாடா கண்ணு!” என்று லக்ஷ்மி தன் பேரனைப் பக்கத்தில் அணைத்துக்கொண்டு “பள்ளிக்கூடத்திற்குப் போகிறாயா, பாலு? எங்கேடா சாப்பிட்டுக் கொண் டிருந்தாய்?” என்று அவனைப் பலவிதமாக விசாரிக்க வாரம்பித்தாள். ஆனால் அவளுடைய கவனம் அவனுடைய கேள்விகளில் செல்லவில்லை. அது யார் அவனுடைய பாட்டியின் கூட வந்து கொண்டிருந்தது!
லக்ஷ்மிக்குப் பின்னால் ஒரு சிறுமி மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தாள். அவளுடைய தலைமயிர் வாராமல் பின்னாமல் பரட்டையாகக் கிடந்தது. தன்னுடைய கட்கத்தில் அவள் ஒரு பொட்டணத்தை இடுக்கியிருந்தாள். அதில் நாலைந்து துணிகள் கட்டப்பட்டிருந்தன. பால கிருஷ்ணன் அவளையே உற்று நோக்கினான். அவள் யார்?
இதற்குள் அவர்கள் வீட்டிற்கு வந்துவிடவே, வீடு திறக்கப்பட்டது. சிறுமி பயந்து, பயந்து மெள்ள வீட்டிற்குள் அடி எடுத்து வைத்தாள். உள்ளே சென்றதும்,. சிறுமி இங்குமங்கும் மிரள, மிரள விழித்தாள். இதை யெல்லாம் பார்த்தபோது, பாலகிருஷ்ணனுக்கு வேடிக்கையாக விருந்ததோ, என்னவோ, “இது யார், பாட்டி?” என்று கேட்டான்.
”சிவகாமி!”
இந்தப் பதிலினால் சிறுவனுக்கு என்ன விளங்கி இருக்கும்? ஒன்றுந் தெரியாமல் விழித்தான்.
“உனக்குத் தங்கை என்று வைத்துக்கொள்ளேன்!”
“எனக்குத் தங்கை இல்லையே!”
“இதுவரைக்கும் இல்லை. இனிமேல் இவளைத் தங்கையாக வைத்துக்கொள்” என்றாள் பாட்டி.
அன்றிரவு சுந்தரஞ்செட்டியார் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். சிறியதாயார் வந்திருக்கும் செய்தியை அறிந்து, ராமநாதனும் துக்கம் விசாரிப்பதற்காக வந்திருந்தான். லக்ஷ்மியம்மாள் அவளைச் சாப்பிடச்சொல்லவே, அவனும் உட்கார்ந்தான். பாலகிருஷ்ணனும் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
சிறுமி வந்திருப்பதைச் சுந்தரஞ்செட்டியார் கவனித்திருந்தார். ஆனால் அவளைப்பற்றி ஒன்றுங் கேட்கவில்லை. தானாகவே லக்ஷ்மி சொல்வாள் என்று நினைத்துக் கொண்டிருந்தார். இதுவரைக்கும் அவள் அப்பேச்சை எடுக்காத தைக் கண்டு, அவரே கேட்கவாரம்பித்தார்.
“உன்னுடன் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறாயே! அவள் தான் உன் தங்கை மகளா?”
லக்ஷ்மி மிகச் சுருக்கமாகப் பதிலளித்தாள்.
“ஆம்.”
“பாவம்! அவளைக் காப்பாற்றுவதற்கு ஒருவரும் இல்லை போலிருக்குது!”
“ஏன் இல்லை? நான் இருக்கிறேனே முண்டம் போல! அது உங்களுக்குத் தெரியவில்லையா?” அவளுடைய பதிலில் சிறிது ஆத்திரம் தொனித்தது.
“நீ அந்தப் பெண்ணுக்குப் பெரியம்மா என்பது எனக்குத் தெரியாதா, என்ன? பாவம் இந்த வயதிலேயே அது தாயையும் தகப்பனையும் இழந்து விட்டு அநாதையாக இருக்கிறதே என்றுதான் சொன்னேன்.”
“ஆகையினால் இனிமேல் நான்தான் அவளுக்குத் தாயார்! நீங்கள் தான் தகப்பனார்!” என்றாள் லக்ஷ்மி. இங்ஙனம் சொல்லிவிட்டுக் கடைக்கண்ணால் ராமநாதனை ஒருமுறை பார்த்தாள்.
ராமநாதன் ஒன்றும் சொல்லவில்லை.
மேலும் லக்ஷ்மி பேசினாள். “அவள் இங்கேதானிருப்பாள். நாம்தான் அவளை வளர்த்து எல்லாம் செய்ய வேண்டும்” என்று ஆத்திரத்துடனும், அழுத்தத்துடனும் சொன்னாள்.
“யார் வேண்டாமென்றது? பேஷாயிருக்கட்டும். பேஷாய் வளர்ப்போம். யாரோ வேண்டாமென்றது போல் நினைத்துக் கொண்டல்லவா நீ பேசுகிறாய்?” என்று புன்சிரிப்புடன் சுந்தரஞ் செட்டியார் கூறினார்.
லக்ஷ்மி மேலும் ஒருமுறை ராமநாதனைப் பார்த்தாள்.
அவன் பேசாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
எல்லோரும் சாப்பிட்டுக் கை கழுவினார்கள்.
“அவளுக்கு என்ன வயதாகிறது?” என்று சுந்தரஞ் செட்டியார் மனைவியைக் கேட்டார்.
“எட்டு வயதாகிறது”
“எங்கே அவளைக் காணோம்?”
“சிவகாமி!” என்று லக்ஷ்மி கூப்பிட்டாள். பதில் இல்லை.
வாசலிலும், வீட்டிற்குள்ளுமாக இங்குமங்கும் தேடினாள். அவளைக் காணோம்.
“எங்காவது இருட்டு வீட்டில் ஒரு மூலையில் ஒட்டிக் கொண்டிருப்பாள்!” என்றான் பாலகிருஷ்ணன்.
“ஏண்டா, அவள் இருக்குமிடத்தை விளக்கு வைத்துத்தான் பார்க்க வேண்டுமோ!’ என்று சிரித்தார் சுந்தரஞ் செட்டியார்.
எல்லா இடங்களிலுந் தேடிப் பார்த்தபோது பால கிருஷ்ணன் சொல்லியபடி, மாடியின் ஒரு இருட்டறையில் ஒரு மூலையில் சிவகாமி ஒண்டிக் கொண்டிருந்தாள். அச் சிறுமிக்கு இருளில் இருப்பது கூடப் பயமாயில்லை. ஆனால் புதிய ஆட்களிடையே இருப்பது அதைவிடப் பயமாயிருந்தது போலும்!
”இவ்வளவு பெரிய வீட்டில் நீ இருப்பதற்கு இருளடைந்த இந்த மூலைதான் கிடைத்ததாடி? இங்கு ஒண்டிக் கொண்டு கிடக்கிறாய்?” என்று லக்ஷ்மி கேட்டாள்.
சிவகாமி அழுதாள்!
சிவகாமியைப் பாலகிருஷ்ணன் பல விதங்களில் கேலி செய்ய வாரம்பித்தான்.
“பாட்டி, பூனை வருகிறது. பாலை எங்கே வைத்திருக்கிறாய்? உரியில் வைத்து விடு” என்பான் பாலகிருஷ்ணன்.
“ஏற்கனவே அவள் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறாள். நீயும் ஏண்டா அவளைக் கேலிபண்ணுகிறாய்?” என்பாள் பாட்டி.
சிவகாமி அடிமேல் அடி வைத்துச் சத்தமில்லாமல் பூனையைப் போல் நடப்பது பாலகிருஷ்ணனுக்கு வேடிக்கையாயிருந்தது.
“ஏன் பாட்டி, இவள் இப்படி பயப்படுகிறாள்? நம்மை யெல்லாம் பார்த்தால் அவளுக்கு புலி போலவா இருக்கிறது?” என்பான் பாலகிருஷ்ணன்.
ஒரு நாள் லக்ஷ்மியம்மாள் சிவகாமியை ஏதோ ஒரு காரியத்திற்காகக் கூப்பிட்டாள்.
“ஏன் பெரியம்மா ?” என்று சொல்லிக் கொண்டு சிறுமி வந்தாள்.
“எட்டு வயதிலே தாயுந் தகப்பனையுந் தூக்கி விட்டவளுக்கு பெரியம்மா வேறே சின்னம்மா வேறே என்னடி வேண்டியிருக்கு? ‘அம்மா’ என்றுதான் கூப்பிடு” என்றாள் லக்ஷ்மி. ‘பெரியம்மா’ என்று கூப்பிடக் கூடாது போலும் என்று சிவகாமி பயந்துகொண்டு, அதிலிருந்து லக்ஷ்மியம்மாளை ‘அம்மா’ என்றே அழைக்க வாரம்பித்தாள். லக்ஷ்மிக்கு வெகு சந்தோஷம்!
சிவகாமிக்குப் புதுப் பாவாடைகள், சட்டைகள் எல்லாம் தைக்கப்பட்டன. பாலகிருஷ்ணனுக்குத் தலைவாருவதுடன் சேர்த்து, சிவகாமிக்கும் தலைவாரிப் பின்னினாள் லக்ஷ்மியம்மாள். சிவகாமி அவளை ‘அம்மா’ என்று அழைத்தாள் தன்னை அவ்விதம் கூப்பிடுமாறு பாலகிருஷ்ணனை அவள் வேண்டினாள். ஆனால், அவன் அவளைப் ‘பாட்டி’ என்றுதான் கூப்பிட்டான். இவளோ ஒரு முறை சொன்னவுடன் அதிலிருந்து ‘அம்மா’ என்றே கூப்பிடுகிறாள்! சிவகாமி அவளுடைய சொந்தத் தங்கையின் மகள், பாலகிருஷ்ணனோ அவளுடைய மூத்தாளின் பேரன்.
இனி அவளுடைய அன்புத்தாரை எவ்வழியில் பாயும்? அதனுடைய போக்கு மாறிவிடுமோ? யார் கண்டது? போகப் போகத்தானே தெரியும் !
ஆறாவது அத்தியாயம்
“நீ ஏண்டா அந்தப் பெண்ணை இப்படி காணக் கருக் குலைகிறாய்? தாயுமில்லாமல், தகப்பனுமில்லாமல் சீரழிகிறதே என்று அவளைக் கூட்டிக் கொண்டு வந்தால் ஏண்டா இப்படித் துன்பப் படுத்துகிறாய்?”
“அனாதைக் கழுதை வேறு எங்காவது போகட்டுமே. இங்கு ஏன் இருக்கவேண்டும்?”
“அவளை அனாதைக் கழுதை என்று சொல்கிறாயே? நீ என்னடா தாயோடு சவரணையாய் வாழ்கிறாய்? நீயும் நாலு வயதிலிருந்து என் கையைத்தானே ஓடிக்கிறாய்? நீ உங்கப்பன் வீட்டிற்குப் போவதுதானே? இங்கு ஏன் இருக்கிறாய்?’
“எனக்கு இந்த வீட்டிலிருப்பதற்கு உரிமை உண்டு. அவளுக்கில்லை”
“என்னடா உரிமை எல்லாங் கண்டுவிட்டாய்? உனக்கிருக்கிற உரிமை அவளுக்கும் இருக்கத்தான் செய்கிறது. உன் தாத்தா உன்னைக் கொண்டு வந்து வளர்க்கிறார். நான் அவளைக் கொண்டு வந்து வளர்க்கிறேன். யாராவது என்னமும் சொல்லட்டும். அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.”
“அதைத் தானே பார்க்கப் போகிறேன்” என்றான் பாலகிருஷ்ணன். இம்மாதிரி சச்சரவு பாட்டிக்கும் பேரனுக்கும் அடிக்கடி நடக்க வாரம்பித்தது. ஆதியில் சிவகாமியைப் பாலகிருஷ்ணன் விநோதமாகக் கேலி செய்து கொண்டிருந்தான். அது வெகு சீக்கிரத்தில் மாறிவிட்டது. “பாலு, பாலு” என்று மட்டுங் கூப்பிட்டுக் கொண்டிருந்த லக்ஷ்மி இப்பொழுது ‘காமு. காமு’ என்றுங் கூப்பிட வாரம்பித்தாள். பாலகிருஷ்ணனை மட்டுமே பாராட்டிக் கொண்டிருந்தவள், இப்பொழுது சிவகாமியையும் சீராட்ட வாரம்பித்தாள். என்ன செய்தாலும் இருவருக்குமே செய்தாள் லக்ஷ்மி. இது பாலகிருஷ்ணனுக்குப் பிடிக்கவில்லை. அவனுடைய உள்ளத்தில் பொறாமை குடி கொண்டது. சிவகாமி வருவதற்கு முன்பு, எல்லாப் பண்டங்களையும் பாலகிருஷ்ணன் மட்டுந்தான் அனுபவித்துக் கொண்டிருந் தான். அது மட்டுமல்ல, பாட்டியின் அன்பையும் அவன்தான் முழுதுங் கவர்ந்தான். ஆனால் இப்பொழுதோ பண்டங்கள் பகிர்ந்து கொடுக்கப்பட்டன. பாட்டியின் அன்பையும் அவனே முழுதும் அனுபவிக்க முடியவில்லை. லக்ஷ்மியம்மாள் சிவகாமியின் மீதும் அன்பு செலுத்தினாள்!
லக்ஷ்மிக்கும் ஒருவிதமான சிறுமை உணர்ச்சி இருக்கத்தான் செய்தது. என்ன விருந்தாலும் சிவகாமி அயல் வீட்டுப் பெண் தானே. பாலகிருஷ்ணன் தானே வீட்டுக்குரியவன் என்ற எண்ணம் அவளுடைய மனதில் உள்ளூர விருந்தது. மேலும் பாலகிருஷ்ணனை சிறு பிள்ளையிலிருந்து வளர்த்தவளல்லவா? ஆகையினால் பாலனுக்கு நெய் விட்டாளானால், சிவகாமிக்கு எண்ணெய்தான் விடுவாள். எந்தத் தின்பண்டமும் பாலகிருஷ்ணனுக்கு சற்று அதிகமாகத்தான் கொடுத்தாள். பேரன் தூங்குவதற்கு மெத்தை விரித்துத் கொடுத்தா ளென்றால், சிவகாமியைப் பாயின் மீது தான் படுக்கப் போட்டாள், ஆயினும் அதுகூட அவனுக்குப் பிடிக்கவில்லை. சிவகாமி தன் வீட்டில் ஏன் தூங்க வேண்டும் என்று அவன் நினைத்தான். அப்படி இருக்கும் போது. அவளுக்குப் பாய்விரித்துக் கொடுத்தால், அவனுக்குப் பொறுக்குமா?
ராமநாதஞ் செட்டியார் வீட்டிலிருந்து பிரிந்தது போல் கொஞ்சகாலத்தில் கடையிலிருந்தும் விலகிக் கொண்டு தனி வியாபாரம் செய்யவாரம்பித்தார். சிற் சில சமயங்களில் பாலகிருஷ்ணன் தந்தையின் கடைக்குச் செல்வான். தந்தை என்ற பாசமோ, அன்போ, இல் லாத போதிலும் சிறுவனுக்கு அவரிடத்தில் மரியாதை உண்டு. அவன் அம்மாதிரி அவரிடம் செல்லும் சமயங்க ளில், அவர் தன் மகனுக்கு இரண்டணா அல்லது நான்கணா கொடுப்பது வழக்கம். தாத்தாவிடம் கேட்டுத் தனக்குக் கிடைக்காத சாமான்களை அவன் தன்னுடைய தந்தையினிடம் சென்று வாங்கிக்கொள்வான். ஒருநாள் அம்மாதிரி சிறுவன் தந்தையிடம் சென்றபோது, அவர் அவனைப் பார்த்து, “முன்போல் பாட்டி உன்மீது பிரியமாயிருக்கிறாளாடா? அவளுடைய தங்கை மகள் ஒரு பெண் வந்திருக்கிறாளே, அவள் மேல்தான் பிரியமாயிருக்கிறாளா?” என்று கேட்டார்.
“எப்பொழுதும் போல் பிரியமாய்த் தானிருக்கிறாள்” என்று பாலகிருஷ்ணன் பதிலளித்தான்.
அப்புறம் இரண்டணாவைக் கொடுத்தார். வாங்கிக் கொண்டு வந்து விட்டான். இதற்கப்புறம் சிறுவன் அவரிடம் செல்லும் போதெல்லாம் இதே கேள்வியை அவர் அடிக்கடி கேட்பார்; பாலகிருஷ்ணனும் அதே மாதிரியே பதிலளித்து வந்தான். ஆயினும் அவனுடைய மனதிற்குள்ளே, பாட்டி தன்னை முன்போல நடத்தவில்லை என்ற எண்ணம் சிறிது சிறிதாக வேரூன்ற வாரம்பித்தது. அதற்குக் காரணம் அந்தச் சிவகாமியல்லவா என்று அவன் நினைத்தான்.
ஒருநாள் பாலகிருஷ்ணன் இட்டிலி சாப்பிட்டுக் கொண்டிருந்தான். முணுக்கு விடாமல் சிவகாமி வந்து அவனுக்குப் பின்னால் தண்ணீர்ச் செம்பை வைத்தாள்.
“உன் மகள் சமர்த்தைப் பார்த்தாயல்லவா? தண்ணீர்ச் செம்பை எங்கு வைப்பது? பட்டிக்காட்டுக் கழுதைகள் பிள்ளை வளர்த்திருக்கிற லக்ஷணத்தைப் பார்!” என்றான் பாலகிருஷ்ணன்.
“ஏண்டா அவளை உனக்குப் பிடிக்காவிட்டால், அவளை மட்டுந் திட்ட வேண்டியதுதானே? செத்துப் போன அவளுடைய ஆத்தாளையும், அப்பனையும் ஏண்டா இழுக்கிறே?” என்றாள் பாட்டி.
சிறிது நேரத்திற்குப் பின்பு, சிவகாமி தன்னுடைய குடத்திலிருந்து தண்ணீர் கொண்டு வந்து வைத்திருந்தாள் என்பது பாலகிருஷ்ணனுக்குத் தெரிய வந்தது. லக்ஷ்மியுடன் சிவகாமியும் ஒரு சிறு குடத்தை எடுத்துக் கொண்டு கிணற்றுக்குச் சென்று நீர் சுமந்து வருவது வழக்கம். இப்படி வீட்டு வேலைகளில் அவள் ஒத்தாசையா யிருந்ததும் ஒரு காரணம், லக்ஷ்மி அவள் மீது பிரியமா யிருந்ததற்கு.
சிவகாமியை வெறுத்ததோடு நில்லாமல், பாலகிருஷ் ணன் அவள் தொட்ட சாமான்களையும் வெறுக்கவாரம் பித்தான். அவள் மீது அவன் கொண்ட பகைமையும் பொறாமையும் நாளுக்கு நாள் அதிகரித்தது. ஆகாதவள் கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றமென்று அவள் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் அவன் தள்ளினான்.
“அவள் தொட்ட தண்ணீர் எனக்கு வேண்டாம்” என்றான் பாலகிருஷ்ணன்.
“பின்னே, உனக்குத் தண்ணீர் எடுத்து வைக்க உன் பெண்டாட்டியாடா வைத்திருக்கிறாய்? என்னால் இப்பொழுது எழுந்திருக்க முடியாது. குடித்தால் குடி. இல்லா விட்டால், சும்மா கிட” என்றாள் பாட்டி.
இவள் வந்துதானே பாட்டி தனக்குத் தண்ணீர் எடுத்து வைப்பதைக் கெடுத்துவிட்டாள் என்று பாலகிருஷ்ணன் நினைத்தான்.
“நான் தொட்ட தண்ணீர் ஆகாதென்றால், இட்டிலி மட்டும் ஏன் தின்கிறாய்? அது நான் அரைத்த மாவுதானே?’ என்றாள் சிவகாமி.
பாலகிருஷ்ணனுக்குக் கோபம் பொறுக்க முடி வில்லை. அவளுக்கு அவ்வளவு வாய்க்கொழுப்பு வந்து விட்டதா என்று அகங்காரங்கொண்டு, “உன் கரிக் கையைக் கண்டதில் எல்லாம் ஏண்டி வைப்பாய்?” என்று இட்டிலி தின்பதை விட்டு எழுந்து, அந்தக் கையோடு அவளுடைய கன்னத்தில் பலமாய் ஒரு அறை கொடுத்தான்.
பாட்டிக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. ஆனால் பாலகிருஷ்ணன் மீது காட்ட வேண்டிய கோபத்தை எல்லாம் சிவகாமியின் மீது கொட்டினாள்! “அறிவு கெட்ட கழுதை! உனக்கும் நன்றாய் வேண்டும்! அப்பனையும் ஆத்தாளையும் இந்த வயதிலேயே தூக்கிவிட்ட கழுதைக்கு உனக்கென்னடி வாய்? உனக்கென்னடி பேச்சு? பேசாமல் மூலையில் அவிந்து கிடக்காமல், அவனுக்கு ஏண்டி தண்ணீர் எடுத்து வைக்கிறாய்?” என்று அவளைத் திட்டிவிட்டு மௌனமாய்க் கண்ணீர் வடிக்க வாரம்பித்தாாள்.
சிவகாமியை அடிக்க லக்ஷ்மிக்கு உரிமை உண்டு. ஆனால் பாலகிருஷ்ணனை அடிக்க அவளுக்கு உரிமை உண்டா? அவனைத் தொட்டால், நாலுபேர் நாலு வார்த்தை சொல்லுவதற்கு இடமுண்டாகு மல்லவா? ஆனால் சிவகாமியை அவள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். கேட்பார் யார்? அவள் மீது தனக்கிருந்த அதிக உரிமையையும், உறவையும் லக்ஷ்மி இம்மாதிரி காட்ட வாரம்பித்தாள்!
“இவ்வளவு நாளைக்கப்புறம் எனக்குக் கெட்டபெயர் வாங்கிக் கொடுக்க நீ ஏண்டி இங்குவந்து தொலைத்தாய்? தாயோடு, தகப்பனோடு நீயும் போய்ச் சேர்ந்திருந்தால், நான் என் பாலகிருஷ்ணனை வைத்துக்கொண்டு சுகமாக இருந்திருப்பேனே” என்று சில சமயங்களில் சிவகாமியைக் கடிந்து கொள்வாள், லக்ஷ்மி.
இப்படியிருக்கையில் ஒருநாள் மாலை லக்ஷ்மியின் சிநேகிதை ஒருத்தி அவளைப் பார்க்கவந்தாள். அவர்களிருவரும் ஏதேதோ பேசிக்கொண்டிருந்த பொழுது சிவகாமி, குடத்தை எடுத்துக்கொண்டு சமயலறையிலிருந்து வெளியில் வந்து,
“தண்ணீர் கொண்டு வருகிறேன், அம்மா ” என்று சொல்லிவிட்டு வெளியில் சென்றாள்.
“இவள் யார்?’” என்று கேட்டாள் லக்ஷ்மியின் சிநேகிதை. அவள் பெயர் கோமதியம்மாள்.
“இவள் தான் என் தங்கையின் மகள்.”
“அடியே! இவள் தானா தகப்பனையும், தாயையும். பறி கொடுத்தவள்? கட்ட வளர்ந்திருக்கிறாள் போலிருக்கிறதே!”
“ஆமாம், வயதாச்சு. ஒரு மாப்பிள்ளை பார்க்க வேண்டும்.”
“எல்லாம் நீ தானே செய்யவேண்டும்? பாவம். அதுக்குத் தாயுமில்லை, தகப்பனுமில்லை!” என்றாள் கோமதியம்மாள்.
“நான் தான் செய்யவேண்டும். வேறு யார் இருக்கிறார்கள்?”
“மாப்பிள்ளைக்கு இங்குமங்கும் ஏன் அலையப் போகிறாய்? உன் பேரனுக்கே கட்டி விடு. ஒன்றுக்குள் ஒன்று பின்னிக் கொண்டு கிடக்கும். பெண் நன்றாயிருக்கிறாள். இருவரும் சரியான ஜோடிதான்!” என்றாள் கோமதி.
“ஆனால் இரண்டுக்கும் ஏழாம் பொருத்தமாயிருக்கிறதே. நாயும் பூனையும் போல் அல்லவா சண்டை போட்டுக் கொள்கிறதுகள்!”
“இப்பொழுது அப்படித்தானிருக்கும். கலியாணம் பண்ணிவிட்டால், எல்லாம் சரியாய்ப் போய்விடும். இதையும் அதையும் யோசிக்காதே” என்றாள் கோமதியம்மாள்.
”நம்முடைய விருப்பத்தில் என்ன இருக்கிறது? அவர் (சுந்தரஞ்செட்டியார்) சம்மதிக்க வேண்டும். அவர் சம்மதித்தாலும் பையனுடைய அப்பன் இணங்கி வர வேண்டுமல்லவா?” என்றாள் லக்ஷ்மியம்மாள்.
“எல்லாம் இணங்குவார்கள் இணங்காமல் என்ன?” என்று சொன்னாள் கோமதியம்மாள்.
தன்னுடைய தங்கையின் மகளாகிய அவ்வனாதைப் பெண் அத்தகைய அதிர்ஷ்டசாலியாகவா இருக்கப் போகிறாள் என்று லக்ஷ்மியம்மாள் நினைத்தாள்.
– தொடரும்…
– திருமணம் (நாவல்), முதற் பதிப்பு: செப்டம்பர் 1947, அருணோதய நிலையம், வேலூர்.
![]() |
சு.குருசாமி (Trichi. S.V. Guruswamy Sarma, திருச்சிராபுரம் சு.வை.குருசாமி சர்மா) என்பவர், தமிழில் முதல் சில புதினங்களில் ஒன்றான "பிரேம கலாவதீயம்" (1893) எழுதிய ஒரு முக்கியமான தமிழ் புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் 1940களில் "வாடா விளக்கு" போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும், பல கதைகளைத் தொகுத்து வெளியிட்டதோடு, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவியவர். மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை, பண்டித எஸ்.எம்.நடேச சாஸ்திரி, பி.ஆர்.ராஜமையர், சு.வை.குருசாமி சர்மா, அ.மாதவையா ஆகியோர் முதற் காலக்கட்டத் தமிழ்…மேலும் படிக்க... |
