கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 31, 2026
பார்வையிட்டோர்: 1,508 
 
 

(1953ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15

10. ரகு

நான் எங்கு செல்கிறேன்? என்ன செய்கிறேன்?’ நான் உயிருடன் தான் இருக்கிறேன். ஆனால் செத்த பிணம் போல் உணர்கிறேன். கூவென்று கத்திக் கொண்டு ஆரவாரத்துடன் ஓடிச் செல்லும் இந்த ரயில் என் பிரேதத்தைச் சுமந்து செல்கிறது. ஐயோ நான் பாதகன்….! நான் பாதகன்….!

என்னை மீறிக் கண்களிலே கண்ணீர் கொப்புளித் துக்கொண்டு வருகிறது. மற்றவர்கள் பார்வையி லிருந்து என் முகத்தை மறைத்துத் தலையணையில் புதைத்துக் கொண்டு நான் விம்முகிறேன். என் துயரம் எல்லாம்….என் கவலையும கண்ணீரும் எல்லாம் சேர்ந்தாலும்…. என் அன்பு மனைவிக்கு ஒரு கவளம் உணவளிக்குமா? என் ஆருயிர்க் குழந்தைக்கு ஒரு சங்கு பால் ஆகுமா…? ஆகாது….ஆகாது!

மூன்று மாதத்திற்குள் ஆயிரம் ரூபாய் ரொக்க ஜாமீன் கட்டுவதாகச் சம்மதித்து வேலையை ஒப்புக் கோண்டேன். எந்தத் துணிச்சலில் எங்கிருந்து சம்பாதித்துக் கட்டுவதாக ஏற்றுக் கொண்டேன்? ஏன்? அந்தச் சமயத்தில் என் மாமனாரிடமிருந்து பணம் வாங்கிக் கட்டிவிடலாம் என்று தான் நினைத்தேன். கமலாவுக்காக அவர் எதையும் செய்திருப்பார். ஆனால்….

நான் கமலாவை அழைத்துவரச் சென்றிருந்த அதே நாள், அதே இரவு… அவருடைய சொத்துக்கள் அத்தனையும் கொள்ளை யடிக்கப்பட்டன. என் உள்ளத்தில் இடி விழுந்தது போல் ஆயிற்று. அந்தத் துயர் சூழ்ந்த நிலையிலே கருத்தரித்திருந்த அவளை அங்கே விட்டுவிட்டு வரவும் கூடாது என்று அழைத்துக் கொண்டு வந்து விட்டேன். அந்தச் சமயத்தில் எனக்கு எவ்வளவு துணிவிருந்தது. பாங்க் ஏஜெண்ட் கம்மேல் பிரியமாயிருக்கிறார். அவரிடம் விஷயத்தைச் சொல்லிப் பார்ப்போம். கண்டிப்பாக ஜாமீன் கட்டித் தான் ஆகவேண்டும் என்றால் மூன்று மாதங்கள் இருக் கின்றனவே….அதற்குள் வேறு உத்தியோகம் பார்த் துக் கொண்டால் போகிறது. நம்முடைய படிப்புக்கும். சாமர்த்தியத்துக்கும் வேலைதானா கிடைக்காது என்று நினைத்தேன்.

ஏஜென்டிடம் ஒரு தடவை நான் ஜாடையாக இதைப்பற்றிச் சொன்னபோது, “அதற்கென்ன நீங்கள் நபர் ஜாமீன் எழுதிக்கொடுத்தால் போதும். நான் ஹெட் ஆபீசுக்கு எழுதிக் கொள்கிறேன். அதன்பிறகு மாதாமாதம் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டி விடுங்கள் ” என்று சொன்னார். அதே. ஏஜெண்ட்….!

பாலு வந்துவிட்டுப் போன மறு நாள்தான் அப்படி நடந்தது. பாலுவுக்கும் நான் வேலையிலிருந்து நீக்கப்பட்டதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ என்று நினைக்கிறேன். சே… ஒருக்காலும் அப்படி இருக்காது. பாலு இருந்திராவிட்டால் என் திருமணமே நடந்திராது. பாலு செய்த உதவி மகத்தானது. சென்னை வந்ததும் நாங்கள் எவ்வளவு ஆனந்தத்துடன் புதிய குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்தோம்? வீட்டின் இரப்பிலே கூடுகட்டி வாழும் சிறு குருவிகள் போல்…. நாங்கள் ஒரு மனதுடன், உல்லாசமாக உலகம் முழுவதும் சுற்றி வருவோம். உளம் மகிழ வாழ்வோம் என்றெல்லாம் நினைத்தேன். மாந்துளிர்களுடன் வரும் வசந்தத்திலே குயில்களின் ஊடலிலும் கூடலிலும் நிறைந்திருக்கும் இன்ப கானம் போல் எங்கள் காதலிலும் கமலாவின் இன்னிசை கலந்திருக்கும் என்று நினைத்தேன். ஜோடியாகச் சினிமா, நாடகம் பார்க்கப் போய் வருபவர்களைப் பார்த்து நான் பொறாமைப் பட்டதுண்டு. இனி நாங்கள் உலகில் இருந்த எல்லாக் காதல் இணைகளையும் தோற்கடித்து விடுவோம் என்று நினைத்தேன்.

அமைதி நிறைந்த முழு நிலவிலே, நறுமலர்கள் நிறைந்த இன்பப் பொழிலிலே, இளந் தென்றலிலே… ஆடுவார் ஒரு பக்கம் ஆடிக்கொண்டிருக்கப்பாடுவார்- ஒரு பக்கம் பாடிக்கொண்டிருக்க நாங்கள் உலகை மறந்து நடந்து கொண்டிருப்போம், கையோடு கை கோர்த்து என்று நினைத்தேன் – என் ஆசைக் கனவுகள் எல்லாம் என்னாயின? என் அன்புக் கோட்டைகள் தான் என்னவாயின? வாழவே பிறந்த மனிதன் வாழ்விலே ஏன் இப்படி வதைபடவேண்டும்? வாழ்வில் இத்தனை துன்பங்களும் சூறாவளிகளும் எப்படித் தான் நிறைந்துவிட்டன? ஏன் தான் இன்னும் இருக்கின்றன?…

மனித வாழ்வு மனிதர் நிறைந்த சமுதாயத்தில் இத்தனை கொடியதாக இருக்கிறது? இது எதனால்…? விலங்கின் கூட்டங்களில்கூட இல்லாத, ஒன்றை யொன்று அடித்துக் கொள்ளும் பொறாமை, துவேஷம் தன் இனத்தைத்தான் வெறுக்கிற தீக்குணம் மனித னிடத்திலே வந்துவிட்டன. அதனால்தான் என்று நினைக்கிறேன்.

என் அனுபவம் குறைவு ஆனால்,

பாங்க் ஏஜெண்ட் என்னை அழைத்தார். “மிஸ்டர் ரகுநாதன். நீங்கள் செக்யூரிடி கட்டத் தயாரா….? அவர் குரல் விபரீதமாக ஒலித்தது. எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. நான் ஏற்கனவே அவரிடம் தெரிவித்திருப்பதாக மென்று விழுங்கிக் கொண்டு கூறினேன்.

“நான் உங்களுக்காக ரொம்ப வருத்தப்படுகிறேன். மிஸ்டர் ரகுநாதன். ஹெட் ஆபீஸிலிருந்து ஸ்ட்ரிக்டான ஆர்டர் வந்திருக்கிறது. நீங்கள் உடனடியாக செக்யூரிடி கட்டாவிட்டால் நான் உங்களை வேலையிலிருந்து நீக்க வேண்டியிருக்கும்…” மேலே வைத்த இரும்புக் கிராதி திடீரென்று தலைமேல் விழுந்தால் எப்படி இருக்கும்? எனக்கு முதலில் நினைவுக்கு வந்தது வீட்டில் பிரசவ வேதனைப் பட்டுக் கொண்டிருக்கும் என் மனைவியின் முகம் தான்! “ஐயோ நீங்கள் வாக் களித்ததார் அல்லவா நான் வேறு வேலை கூடப்பார்க்க வில்லை” என்றேன். “நான் என்னய்யா வாக்களித்தேன். ஹெட் ஆபீசுக்கு ரெகமெண்ட் பண்ணுகிறேன் என்றேன். அவர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் நான் என்ன செய்யட்டும்?”

எனக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. தடுமாறிக்கொண்டு வெளியே வந்தேன். நான் எப்படி வீடு வந்து சேர்ந்தேன் என்பது எனக்கேதெரியவில்லை வீட்டிற்கு வந்ததும் வராததுமாக எனக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கும் செய்தியைத் தெரிவிக்க விமலா காத்துக் கொண்டிருந்தாள்…

என் முதல் குழந்தை…. என்னுடைய பிரதிபிம்பம். வளர்ந்து என் வாழ்வை வாழ்நாளுக்கும் மேலாக நீடித்துப் பரம்பரை வளர்க்க வந்த குலக் கொழுந்து…. என் நிறைவேறா ஆசைகளுக்கு, லட்சியங்களுக்கு. உருக்கொடுக்க எனக்குக் கிடைத்திருக்கும் முதல் வாய்ப்பு… என் மகன்! என் மகன்…! ஆனால் அவன் வருகையை மகிழ்ச்சியுடன் வரவேற்க முடியவில்லை என்னால். என் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவ மாடாதது என் மாமனாருக்கு ஏமாற்றமாக இருந்தது. சிரித்துக்கொண்டு ஓடிவந்து என்னிடம் கூறிய விமலா முகத்தைக் கவிழ்த்துக் கொண்டு போனாள். “ஏன் ரகு ஒருமாதிரி இருக்கிறாய்,” என்று கேட்ட என் மாமனாரிடம் ‘வேலை ரொம்ப கடினமாக இருக்கிறது. நாளைக்குக் கூட லீவு கிடைக்கவில்லை. கொஞ்சநேரம் நிம்மதியாக இருக்க முடியவில்லையே என்ற கவலை தான்,’ என்றேன்.

எனக்கு ஆண் மகவு பிறந்த வைபவத்தைக் கொண்டாட வீட்டில் சர்க்கரையும், பழமும், தாம்பூலமும், மிட்டாய்களும் வாங்கிக் குவித்து வைக்கப் பட்டிருந்தன. விமலா சர்க்கரையை அள்ளி என் வாயில் போட்டாள். அது இனித்ததா கசந்ததா என்பது எனக்கே புரியவில்லை. எப்படியோ அவர்களுடன் கலந்து நானும் மகிழ்ச்சி உடையவன் போல் காட்டிக் கொண்டேன்.

மறு நாள் காலை நான் தலைவாரிக் கொண்டிருந்த போது ஒரு டின் நிறைய மிட்டாயைக் கொண்டு வந்து கொடுத்து “உங்கள் ஆபீஸில் எல்லோருக்கும் கொடுங்கள்” என்றார் மாமனார். நான் எந்த ஆபீசுக்குப் போகட்டும்? யாருக்கு மிட்டாய் வழங்கட்டும்? மிட்டாய் டின்னைத் தூக்கிக்கொண்டு வெளியே நடந்தேன். என் கண்களில் என்னை அறியாமல் கண்ணீர் நிறைந்து கொண்டிருந்தது. என்ன ஆனாலும் சரி… துன்புற்றுப் போய், மனம் உடைந்து வந்திருக்கும் என் மாமனாரிடம் என் துன்பத்தைக் கூறிவிடக்கூடாது என்று முடிவு செய்து கொண்டேன்.

குப்பத்தின் ஓரத்திலே தலைவிரி கோலமாய், நிர்வாணமாகவும் கந்தல்களோடும் விளையாடிக் கொண்டிருந்த சேற்றில் பிறந்து சேற்றிலே வளர்கிற ஏழைக் குழந்தைகளுக்கு கை நிறைய மிட்டாயை அள்ளிக் கொடுத்தேன். துரதிர்ஷ்டவசமாக இந்த உலகத்திற்கு வந்துவிட்ட மனித ஜீவன்களே. தாய் தந்தையர்களின் தவறுதலால் இந்தத் தரித்திர வாழ்வுக்கு வந்துவிட்ட ஏழைப் பிராணிகளே…. மனித வாழ்வின் எந்தவித நலன்களும் காணாது மண்ணிலே பிறந்து மண்ணிலே மடிந்து போகும் மாண்பில்லாத குழந்தைகளே… இதோ பாருங்கள். உங்கள் கை நிறைய வாங்கி வாய் நிறையைத் தின்னுங்கள். உங்களைப் போல் இந்த உலகத்திற்கு, ஏழையாகிப்போன என் வீட்டிற்கு தவறுதலால் வந்து விட்ட இன்னொரு ஜீவனின் வருகையில் நீங்களாவது மகிழ்ச்சி அடையுங்கள் என்று சொல்லிக் கொண்டேன் என் மனதிற்குள்ளாக.

அதன் பிறகு என் வேலையைக் கவனிக்கச் சென்றேன். முன்பு என் உத்தியோகம் ஒரு ஆபீசில் ஒரு மேஜை முன்னதாக இருந்தது. இப்பொழுது பல ஆபீசுகளில் பல மேஜைகளின் முன்னால் நடந்தது. வேலை தேடும் வேலைதான்.

காலை முதல் மாலைவரை ஒவ்வொரு காரியாலயத்தின் வாசற்படிகளிலும் ஏறி இறங்குவது. அங்கே உள்ள மானேஜர். முதலாளி. அல்லது அவர்களுடைய ப்யூன் வறண்ட குரலிலே வேலை காலி இல்லை ஸார் என்று சொல்வதைக்கேட்டு விட்டு வெறித்துப்போன உள்ளத்துடன் கீழே இறங்குவது. இது என் தொழிலாயிற்று.

எப்படியோ என் நண்பர்களிடமும், இந்தக் குறைந்த காலத்திலே அறிமுகமானவர்களிடமும் ஐந்தும் பத்துமாகக்கடன் வாங்கி ஒரு விதமாக ஒரு மாத காலம் வரைக்குடும்பத்தை நடத்தி என் துன்பத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே என் மாமனாரையும் விமலாவையும் ஊருக்கு அனுப்பி வைத்தேன். ஆயிரம் தடவை, நான் ஒரு மாதிரியாக இருப்பதைக் குறிப்பிட்டு விட்டுக் குழந்தையை ஜாக்கிரதையாகக் கவனித்துக் கொள்ள வேண்டிய முறைகளை உபதேசம் செய்து விட்டு அவர் விடைபெற்றுக் கொண்டார். பாவம் அவர் அன்பு நிறைந்த மனிதர். ஊருக்கு நல்லவராக வாழ்ந்தார். அதே ஊராரால் இன்று காலில் போட்டு மிதிக்கப்படுகிறார். என்னால் அல்லவா அவருக்கும் இவ்வளவு துன்பமும் அவமானமும் வந்து விட்டது. அதை நினைக்க என் உள்ளம் எவ்வளவு வருந்துகிறது?

ஒரு நாள் அலுத்துப்போய் வீட்டில் உட்கார்ந்தவுடன் என் துன்பங்கள் எல்லாம் மலை மலையாக எழுந்து என் கண் முன் நிற்க ஆரம்பித்தன. கவலையில் உள்ளம் குன்றிப்போய் உட்கார்ந்து கொண்டிருந்தேன். கமலா குழந்தையை எடுத்துக்கொண்டு என்னிடம் ஒடி வருகிறாள். அது எவ்வளவு அழகாகச் சிரிக்கிறது என்பதைக் காட்டத்தான். என் அன்புக் கண்மணியின் சிரிப்பை பார்த்து மகிழ என் உள்ளத்தில் தெம்பெங்கே? என் துன்பத்தைப் பார்த்துச் சிரிக்க நீ இன்னும் ஒரு ஆத்மா வந்து விட்டாயா? என்று மனத்துள் நினைத்துக் கொண்டேன். என் உணர்ச்சியற்ற தன்மையைப் பார்த்துக் கமலா ஏமாற்றமடைகிறாள். அவளுக்கு இன்னும் விஷயம் தெரியாது. அவள் தலையை வருடியவாறு உண்மையைச் சொல்லி விடலாம் என்று வாய் எடுத்தேன். ஆனால்… என் அருமை மனைவி…தாய்மையின் இனிய பாசத்துடன் தன் செல்வக் குழந்தையைப் பார்த்துக் கொஞ்சிச் சிரித்து விளையாடுவதைப் பார்த்ததும்… என் துன்ப இருளால் அந்த இன்ப ஒளியை ஏன் அணைத்து விடவேண்டும் என்று நினைத்துப் பேசாமல் இருந்து விட்டேன். எப்படியாவது… எங்காவது ஒரு வேலை சம்பாதித்து விடவேண்டும் என்று உறுதி செய்து கொண்டு எழுந்து நடக்க ஆரம்பித்தேன்.

எத்தனை உறுதிசெய்து கொண்டால் என்ன? எத்தனை தான் அலைந்தால் என்ன? ஒரு பயனும் ஏற்படவில்லை. மீண்டும் மீண்டும் சலித்துப்போய், வெறுப்படைந்து போய் ஓய்ந்துபோய்க் கடைசியாக வீட்டை நோக்கித் தளர் நடை நடக்க வேண்டியது தான் என் தலைவிதியாகப் போய் விட்டது. கடவுளே….

வறுமை என்னை நன்றாகக் கப்பிப்பிடித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டது. ஆயிரம் கால்கள் உடைய சிலந்தியின் கால்களில் அகப்பட்டுக்கொண்ட சிறு பூச்சிபோல் நான் தவிதவித்தேன். நான் இன்னும் மனிதனாக இருந்தேன். என் உயிர் உணர்வு ஆசைபாசம் அத்தனையையும், இதய வேகம், தாபம், ஆற்றல் அறிவு அத்தனையையும் வறுமை கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சிக்குடிக்க ஆரம்பித்து விட்டிருந்தது. உடலின் வீரியத்தையும் இரத்தத்தையும் உறிஞ் சிக்கொன்று விடுகிற மோகினிப் பிசாசுகளைப்பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், வறுமை அதைவிட மிகமிகக்கொடியது என்பது என் அனுபவம்.

கடன் காரர்கள் என்னை அரித்துத்தின்ன ஆரம்பித்தனர், நண்பர்கள் பகைவர்களாயினர். நல்லவர்கள் என்னைப் பார்த்தும் பாராதவர் போல் முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றனர். பால்காரன், மோர்க்காரி, காய்கறி விற்பவள், மளிகைக் கடைக்காரன், வீட்டுக்காரன், துணி வெளுப்பவன்….என்று நான் பாக்கி கொடுக்க வேண்டியவாகளின் பட்டியல் நீண்டு கொண்டே போயிற்று. நான் என்ன செய்வேன்.. என்னதான் செய்யப் போகிறேன்.

ஒரு தடவை என் மாமனாருக்குக்கடிதம் எழுதலாம் என்று நினைத்துப் பேனாவை எடுத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். அதுவும் கமலா ரொம்ப வற்புறுத்தியதன் பிறகு அன்றுதான் அவருடைய கடிதம் வந்தது.

அவர் நிலம் ஜப்திசெய்யப்பட்ட விவரமும் அவர் ஊரைவிட்டு எங்காவது போய்விடலாம் என்று நினைக்கிற அளவு வெறுப்படைந்து விட்டதாகவும், விமலாவுக்காக இல்லாவிட்டால் எங்காவது பரதேசம் போயிருப்பார் என்றும் எழுதியிருந்தார். நான் அழுவதா சிரிப்பதா…? இரண்டில் எதைச் செய்யவும் நான் சக்தியற்றவனாக இருந்தேன்.

எல்லாம் தெரிந்தும் எவ்வளவு பொறுமையாகக் கமலா என் துன்பங்களிலே பங்குகொள்கிறாள். பெண்களுக்குச் சகிப்புத்தன்மை அதிகம். அதிலும் கமலா…! அவளாக அல்லாமல் வேறு ஒரு பெண்ணாக இருந்திருந்தால்… நான் பட்டுக்கொண்டிருந்த வேதனையின் இடையில்கடினமாக ஒருவார்த்தைச் சொல்லி விடுகிற மனைவி என் உயிரை வாங்கி விட்டிருப்பாள். ஆம். நான் எத்தனை தடவை தற்கொலை செய்து கொள்வதைப்பற்றி யோசித்திருக்கிறேன். ஆம் தற்கொலைதான். கோழைத்தனம் என்பார்கள் சிலர். கோழைத்தனமாவது வீரத்தனமாவது? மனதில் எந்த வித உணர்ச்சிக்கும், அறிவுக்கும் திறனுக்கும் எதற்குமே இடமில்லாமல் போய் விட்ட பின்னால் கோழைத்தனத்தையும் அதையும் இதையும் பற்றிச் சிந்திக்க நேரம் எங்கே?

கமலா……! அவளைப் பற்றி நினைக்கும் பொழுது என் உள்ளம் உருகுகிறது. அவளுடைய சலனமில்லாத இனிய வாழ்விலே ஏன் தான் நான் குறுக்கிட் டேன்? அவளுடைய களங்கமற்ற கன்னித் தன்மையிலே வகையற்ற என் ஏழ்மைக் கரங்களை ஏன் பதித்தேன் ? ஐயோ…. நான் என்னென்ன நினைக்கிறேன். எனக்குத் தெளிவாகச் சிந்திக்கும் ஆற்றலும் கூட இல்லாமல் போய் விட்டது. இனிப் பைத்தியம் பிடிக்க வேண்டியது ஒன்றுதான் பாக்கி. அவள் என்னோடு சிரித்து முகத்துடன் பட்டினி கிடக்கிறாள். ஆனால் குழந்தை….? நான் ஏன் தான் இன்னும் உயிருடன் இருக்கிறேன்?

கணவனும் மனைவியும் குழந்தைகளுமாகப் பிச்சை எடுத்துக் கொண்டு போகிறவர்களை நான் பார்த்திருக்கிறேன். நான் அப்படி போகவா…? ஆமாம் இனி இங்கிருந்தால் அப்படித்தான் நேரும். ஏன்.. வீட்டுக்காரர் மட்டும் கொஞ்சம் கருணை காட்டியிராவிட்டால் முன்னமே அப்படித்தான் நடந்திருக்கும். கடைசியாக…

மனைவியும் குழந்தையும் பட்டினி கிடப்பதைப் பார்த்துச் சகிக்க முடியவில்லை. தற்கொலை செய்து கொள்வதிலிருந்து எனக்கு வேறு வழி பட்டாளத்தில் சேர்வதாகத்தான் இருந்தது. இல்லா விட்டால் இந்த இரயில் என்னைச்சுமந்து கொண்டு சென்று கொண்டிருக்காது.

கமலா நான் வருவேன் வருவேன் என்று எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருப்பாள். என்னைக் காணாதபோது கண்ணீர் வடிப்பாள். விம்மி விம்மி அழுவாள். ஆனால் இனிமேல் அவளும் குழந்தையும் பட்டினி கிடக்க வேண்டியிருக்காது, ரெக்ரூட்டிங் ஆபீசில் கிடைத்த அட்வான்ஸ் பணம் அவள் விழித் தெழுந்தவுடன் கையில் கிடைத்திருக்கும். பாவம் எங்கேயோ நேரத்தில் எழுந்து போயிருக்கிறார். சீக்கிரம வந்து விடுவார். எங்கே கடன் வாங்கினாரோ…. பணம் வைத்துவிட்டுப் போயிருக்கிறார். அவர் வருவதற்குள் சமைத்து வைக்கவேண்டும், என்று நினைத்து அவசரம் அவசரமாக அரிசி பருப்பு வாங்கிச் சமைத்து வைத்திருப்பாள். அந்தச் சாதம் நான் பட்டாளத்தில் சேர்ந்து விட்டேன் என்பதை அறிந்து அவள் துயரம் மிகுந்து சமையல் செய்யும் எண்ணத்தையே மறந்து உட்கார்ந்திருக்கிற பொழுது உதவும்…. கமலூ….! கமலூ!

11. கமலா 

அழுதழுது என் கண்கள் வற்றிப் போய்விட்டன. இனி அழுவதற்கும் சக்தி இல்லை. வழக்கமாக எழுவதை விட அன்று நேரத்திலேயே எழுந்திருந்து விட்டேன். அவரைக் காணோம். சுற்றும் முற்றும் பார்த்தேன் கையில் தட்டுப்பட்ட ஒரு பொட்டலத்தில் இருபத்தைந்து ரூபாய் இருந்தது. எனக்குத் திகீர் என்றது. பிறகும் யோசனை செய்து வேலைக்காக யாரையாவது பார்க்கச் சென்றிருப்பார் என்று நினைத்தேன். அப்படியானால் நேற்றிரவு பணத்தை என்னிடம் ஏன் சொல்லிக் கொடுக்கவில்லை என்ற எண்ணம் வந்தது. சரிதான் இரவு நெடுநேரம் கழித்து வந்தார். சொல்லிக் கொடுக்க மறந்து போய் விட்டார் போல் இருக்கிறது. என்று நினைத்துக் கொண்டேன். பல நாட்களாகவே சரியானபடி சாப்பாடு கிடையாது. இன்றாவது வயிறாரச் சாப்பிடட்டும் என்று நினைத்து அவசரம் அவசரமாக உப்பிலிருந்து விறகுவரை எல்லாச் சாமான்களும் வாங்கிக் கொண்டு வந்து சமைத்து வைத்தேன்.

நடுப்பகலாகியும் அவர் வரவில்லை. எனக்குப் பயமாக இருந்தது. ஆனால்….எந்த நிலைமையிலும் என் கண்ணாளர்…. என்னை இங்கே தனியாக விட்டுப் போகமாட்டார் என்று நினைத்து மனத்தைத் தேற்றிக் கொண்டேன். எனக்கு இங்கே அவரைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள். நாங்கள் தான் யாருமற்ற அனாதைகளாயிற்றே? – இந்த நிலைமை எல்லாம் அவருக்குத் தெரியாமலா இருக்கிறது?…. ஐயோ அவர் என்னை உயிரைவிட அதிகமாக நேசிக்கிறார். சாவானாலும், வாழ்வானாலும் அது எங்கள் இருவருக்கும் சேர்ந்து தான் வரவேண்டும். எதிலுமே நாங்கள் தனியாகப் பங்குகொள்ள முடியாது என்றெல்லாம் நினைத்துக் கொண்டேன். வறுமை எங்கள் வாழ்வின்மேல் படை யெடுத்த நாள் முதலாகவே ஒழுங்கு முறை அமைதி எல்லாமே கெட்டுப்போய் விட்டன. அத்தான் எப் போது வருவார் எப்போது சாப்பிடுவார் என்பதற் கெல்லாம் ஒரு நிச்சயமும் கிடையாது. வேதனையில் அவர் உள்ளம் மிகவும் நொந்து போய்விட்டது. அவருக்குச் சாப்பிடவே தோன்றாது. வீட்டில் நான் சாப்பிடாமல் அவர் வருகையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பேன் வழிமேல் விழிவைத்து ஒவ்வொரு கணமும் அவர் வருகையின் மேலேயே உயிர் வைத்துக் கொண்டிருப்பேன் என்று நினைத்துத்தான் அவர் திரும்பி வருவார். அவரைச் சாப்பிட வைப்பதற்குள் நான் எவ்வளவு கஷ்டப்படுவேன்…. ஐயோ நான் எப்படி வாழ்வேன்….?

கண்ணீர் கொப்புளித்துக் கொண்டு வருகிறது. துயரம் நெஞ்சை அடைக்கிறது. பெண்ணாய்ப்பிறந்து விட்ட எனக்கு அழுவதைத் தவிர வேறு என்னதான் தெரிந்திருக்கிறது. கடவுளே நான் என்ன செய்வேன்….?

எங்கள் வாழ்வை வறுமை தின்று விட்டது. நடுக் கடலில் திசை காணாதலையும் கலம் போல் நான் தவிக்கிறேன். நம்பிக்கை என்ற அஸ்திவாரம் கல்கலத்துப்போன பின்னால் வாழ்க்கைக் கட்டிடம் சரிந்து கொண்டிருக்கிறது. அவர் அங்கே….நான் இங்கே…. எப்போதாவது உயிருடன் சந்திப்போம் என்கின்ற நம்பிக்கையே இல்லாமல் ஐயோ….என்னால் சிந்திக்க முடியவில்லையே…. நினைக்க நினைக்க அழுகை குமுறிக் கொண்டு வருகிறதே… நான் என்ன செய்வேன்?

எவ்வளவு அன்புடனும் ஆசையுடனும் நாங்கள் புதுக் குடும்பம் அமைத்துப் புதுவாழ்வு நடத்தினோம்? என்னை மகிழ்ச்சியுடன் வைத்திருக்க அவர் எவ்வளவு பாடுபடுவார்? என் அன்புக் கண்ணாளன் ஒரு கணம் என் முகம் சோர்ந்தால் எவ்வளவு வேதனைப்படுவார்? இப்பொழுது நான் அழுதழுது சாகிறேன். எனக்கு ஆறுதலாக ஒரு வார்த்தை கூறக் கூட யாரும் இல்லையே…. என்னை ஏன் தான் விட்டுச் சென்றீர்…. என்னை விட்டுப்போக உங்களுக்கு எப்படித்தான் மனம் வந்தது. கமலூ…. நாம் மூவரும் கொஞ்சம் விஷம் சாப்பிட்டுவிட்டு உயிரை விட்டு விடுவோம். அது ஒன்று தான் இனி நாம் செய்யக்கூடியது என்று அன்றெரு நாள் கூறினீரே…. அதைப் போல் செய்திருக்கக் கூடாதா….? அன்று நான்தான் தடுத்து விட்டேன். பாபி! இல்லாவிட்டால் இன்று எனக்கு இக்கொடிய துன்பம் வந்திராதே….?

சமைத்து வைத்த சாப்பாட்டுடன் அவர் வருவார் வருவார் என்று காத்துக் கொண்டிருந்தேன். பொழுது சாயச் சாய எனக்குத் திகில் அதிகரித்தது. இன்னும் காணோமே இன்னும் காணோமே என்று என் நெஞ்சு திக் திக்கென்று அடித்துக் கொண்டது. இதோ வந்துவிடுவார். இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவார் என்று மனதைத் தேற்றிக் கொண்டே அழுகின்ற குழந்தைக்குக் கொஞ்சம் சாதம் ஊட்டிக் கொண்டிருந்தேன். அந்தச் சேவகன் கொண்டுவந்த கடிதத்தைக் கொடுத்தவுடனே எனக்குப் பாதி உயிர் போய்விட்டது. சாவோலை கண்டதுபோல் நான் நடுங்கினேன். ஆனால்…,இன்னும் சற்று நேரத்தில் உன் உயிர் பிரிக்கப்படப்போகிறது என்று எழுதியிருந்தால் கூட நான் அவ்வளவு துயரம் அடைந்திருக்கமாட்டேன்.

கண்மணி கமலா…

உயிருக்குப் போராடும் இந்த வாழ்க்கையை என்னால் பொறுக்க முடியவில்லை என் உயிரைவிட அதிகமாக நேசிக்கும் நீயும் நம் கண்மணிக் குழந்தையும் என் கண் எதிரே பட்டினி கிடப்பதைப் பார்த்துச் சகித்துக் கொள்ள என்னால் முடியவில்லை. இனி இங்கே ஒருநாள் தாமதிப்பது கூடத் தற்கொலை போன் ற விபரீதமான முடிவுக்குத்தான் கொண்டு வந்துவிடும்.

கமலா….என் அன்பே, என்னை மன்னித்து விடு. நான் எங்கோ செல்கிறேன். தொலை தூரத்திற்கு! நான் பட்டாளத்தில் கீழ்த்தர அதிகாரியாகச் சேர்ந்து விட்டேன் என்று சொன்னால் உனக்கு நான் என்ன ஆனேனோ ஏது ஆனேனே என்று – கவலைப்பட வேண்டியிருக்காது என்று நினைக்கிறேன். கமலா நம்வாழ்வைச் சின்னாபின்னமாக்கி விட்ட வறுமைப் பகையைத் துரத்தி அடிப்பதற்கு அதைவிட வேறு வழியே இல்லை. உன்னைப் பிரிய நினைக்கும்பொழுது எவ்வளவு துயரத்துடன், சகிக்கமுடியாத வேதனையுடன் பிரிகிறேன் தெரியுமா….? கமலா என்னால் எழுத முடியவில்லை!

நாம் அணு அணுவாகச் செத்துக் கொண்டிருந்தோம். இனி வாழ்வை நோக்கி முன்னேறியாக வேண்டும். கமலா…இங்குள்ள நிலைமைகள் தெரிந்தால் ஏற்கெனவே மனம் உடைந்து போயிருக்கும் தந்தை மிகவும் வருத்தப்படுவாரே என்று நினைத்து நான் அவருக்குக்கூட எழுதவில்லை. வீட்டுக்காரருக்கு எழுதியிருக்கிறேன். அவர் உன்னைப் பெற்ற மகள் போல் பார்த்துக் கொள்வார். கடன்காரர்கள் எல்லோருக்கும் ஒரு மாதம் தவணை சொல்லி வை. நான் அடிக்கடி- கடிதம் எழுதுகிறேன், நீயும் எழுது, இனி அதுதான் நாம் சந்திக்கும் வழி…

கமலா….என் கண்ணே வருகிறேன்.

குறிப்பு : அடுத்த கடிதத்தில் விலாசம் எழுதுகிறேன்.

நேரம் போனது தெரியாமல் விம்மி விம்மி அழுது கொண்டிருந்தேன். விளக்குக்கூட ஏற்றி வைக்க வில்லை. பகல் மறைந்து இரவு வந்ததும் பாதிப் பொழுது கழிந்திருக்க வேண்டும். குளிர் காற்று வீசிக் கொண்டிருந்தது. ஜன நடமாட்டம் கூட இல்லை. யாரோ கதவைத் தட்டும் சப்தம் கேட்டது. அந்த அவ நேரத்தில் கதவை இடிப்பவர்கள் யார் என்ற சந்தேகத்துடன் ஜன்னலைத் திறந்து பார்த்தேன். வீட்டுக்காரரின் நரைத்ததலையும் கைத்தடியும் காட்சி அளித்தன. போய்க் கதவைத் திறந்தேன். ஹி ஹி ஹீ…. என்று பல்லை இளித்துக் கொண்டு, “மனசு கேக்கலைம்மா…. பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்….” என்று சொல்லிக்கொண்டே உட்கார்ந்தார். அவர் பார்வையும் செயலும் ஒரு விதமாக இருந்தன. இவர் தான் என்னைப் பெற்ற தந்தை போல் பார்த்துக் கொள்வார் என்று அத்தான் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். ஏன் என் தந்தையைவிட அதிகம் வயதானவராகத் தான் இருப்பார் – ஐயோ…அப்பா… இனி நான் உங்களை என்றாவது சந்திப்பேனா….?

சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே வீட்டுக்காரன், “குழந்தை எங்கேம்மா? தூங்குகிறதா…?” என்று கேட்டார். “ஆமாங்கய்யா” என்றேன் நான்.

“பாவம் இத்தனை காலம் ரொம்பக் கஷ்டப்பட்டே.. இனிமேலாவது கொஞ்சம் சுகமா இரு…. பாவம் உலகம் தெரியாத சின்னப்பொண்ணு அம்மா நீ…. உனக்கு விபரம் தெரியலை. இங்கே பட்டனத்திலே எல்லாம்…. பொழைக்கறதுக்கு எத்தனையோ வழி இருக்குதம்மா… ஆம்பிளைக்கிட்ட சம்பாத்தியம் இல்லாத போனாக்கூட பொம்பிளைகளே சமாளிச்சுக்கலாம். ஹி ஹி ஹீ…. உனக்கு ஒண்ணும் தெரியலை…….” உபதேசம் செய்து கொண்டே கொட்டாவி விட்டு உடலை நெளித்தார். “உங்களுக்குத் தூக்கம் வருகிறது போல் இருக்கிறது. போய்ப் படுத்துக் கொள்ளுங்கள் ஐயா….எங்களால் உங்களுக்கும் கஷ்டம்….” என்றேன். “ஊம் ஹூம்…. அதெல்லாம் ஒண்ணும் இல்லை அம்மா. உனக்காக எவ்வளவு கஷ்டம் வேணும்னாலும் படலாம். வாடகை – எக்கெல்லாம் நான் ஒண்ணும் உன்னைத் தொந்தரவு பண்ண மாட்டேன். இன்னும் ஏதாவது பத்து அஞ்சு வேணும்னாலும் என்னைக் கேட்டு வாங்கிக்கோ…. உனக்கு உபகாரம் பண்ணவேணும்னு ரொம்ப நாளா ஆசை. சமயம் தான் கிடைக்கலை” எனறார்.

“நீங்கள் எங்களுக்கு எத்தனையோ உபகாரம் செய்திருக்கிறீர்கள் ஐயா… அதுவே ரொம்ப அதிகம். நீங்கள் ரொம்ப தூரம் போகவேண்டும். நேரமாகி விட்டதே….?”

“போகாவிட்டால் என்ன….பரவாயில்லை. நான் இங்கேயே படுத்துக் கொள்கிறேன்” என்றார் கிழவர். அனுதாபம் உள்ள ஒரு பெரிய மனிதர் சாதாரணமாகச் சொல்லக் கூடிய வார்த்தைகள் தான் அவை. ஆனால் இந்தக் கிழவர் பார்த்த பார்வையும் சிரித்த சிரிப்பும் இருக்கிறதே…. என்னைத் தூக்கிப் பாதாளத்தில் எறிவது போல் இருந்தது. அடப்பாபீ…. இவனுக்கு இவ்வளவு வயதாகியும் இந்தப்புத்தி விடவில்லையே… என்று நினைத்துக்கொண்டு, ”வேண்டாம் ஐயா…. இரவு நேரத்தில் அவர் இல்லாத சமயத்தில் நான் யாரையும் தங்கவிட மாட்டேன்….” என்றேன். “என்ன புள்ளே விபரம் தெரியாமே பேசறியே…. ஒரு பெரிய மனுஷன் உனக்காக இவ்வளவு தூரம் நடந்து வந்திருக்கறான் பணமும் கொடுக்கறேன்கறான்….” என்று சொல்லிக்கொண்டே எழுந்து என் கையைப் பிடித்து….

எனக்கு வந்த ஆத்திரத்தில் நான் என்ன செய்தேன் என்பது தெரியவில்லை. எனக்கு எப்படித்தான் அவ்வளவு பலம் வந்ததோ எனக்கே புரியவில்லை அந்தப்பெரிய மனிதன் கன்னத்தை அழுத்திப்பிடித் துக்கொண்டு தரைமேல் கிடந்தான். “போ வெளியே” என்று கர்ஜித்துக் கொண்டிருந்தேன் நான். சில நிமிஷங்களுக்குப் பிறகு அவன் கோபத்துடன் எழுந்திருந்தான். “நானா வெளியே போக வேண்டும். போடீ வெளியே…. நாலுமாசமாச்சு வாடகை கொடுத்து. வீடு கட்டி வெச்சவ மாதிரி என்னை வெளியே போங்கறான்…” என்று கூப்பாடு போட்டான். எனக்கு அப்பொழுதுதான் சுய நினைவு வந்தது. ஆமாம், அவனுக்கு வாடகை கொடுத்து, நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. பட்டணத்தில் எங்கேயுமே அப்படி இருக்க முடியாது. எந்த வீட்டை விட்டு வெளியே போகும்படி நான் அவனுக்குக் கட்டளையிட்டேனோ அந்த வீட்டின் நிழலை மிதிப்பதற்குக்கூட எனக்கு அருகதை கிடையாது ஆனால்….

அவன் காலன்போல் கன்னாப்பின்னாவென்று பேசிக்கொண்டு நிற்கிறான். இனி அந்த வீட்டிலே அரைக்கணம்கூட நிற்க முடியாது. என் காதலர் கடிதம் எழுதுவார். அவருடைய கடிதத்தைப் பெறக் கூட வழி இல்லாமல் போய் விடுமே….? என் தந்தையைப் போய்ச் சேரக்கூட எனக்கு வழி கிடையாதே….? திக்கற்ற நான் இந்தப்பொல்லாத உலகத்தில் எப்படி வாழ்வேன். யோசனை செய்தவாறு நான் கண்ணீர் வடித்துக்கொண்டு நின்றேன். என் உடல் கிடுகிடென்று நடுங்கிக்கொண்டிருந்தது. எத்தனை நேரம் நான் அப்படி நின்று கொண்டிருந்தேனோ….? அவன் பேசுகிற வரைபேசிச்சலித்த பிறகு சிறிது நேரம் நின்று என்னை உற்றுப்பார்த்து விட்டு அருகே வந்து “புத்தி வந்ததா புள்ளே… வெளியே போனா வீணாக் கெட்டுப்போவே…. காலிப் பசங்க உன்னை லேசில்விட மாட்டாங்க. பேசாமே நான் சொல்றதைக் கேட்டுட்டு வீட்டோடே இரு”, என்றான். நான் பேசவில்லை, அவன் துணிவடைந்து என் கண்ணீரைத் துடைக்க வந்தான்.

சற்று முன்பு எனக்கிருந்த வலிவெல்லாம் எங்கோ தான் போய்விட்டதோ தெரியவில்லை. அவன் தொட்டிருந்தால் நான் விழுந்திருப்பேன். ஆனால்… நான் பேசாமல் நடுங்கிக் கொண்டே போய் என் குழந்தையைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு வெளியே நடந்தேன். அவன் ஒன்றும் பேசவில்லை. வெளியே என்னை வரவேற்க காரிருளும், அதைவிடக் கரிய நெஞ்சம் படைத்த உலகமும் காத்துக் கொண்டிருந்தது.

12. மாணிக்க முதலியார்

கமலாவின் வீடு பூட்டிக் கிடந்தது. பட்டணத்திற்கு வந்ததும் நான் எவ்வளவு வேகமாக ஓடி வந்தேன். என் மகளைக் காணோம்….! அக்கம் பக்கம் விசாரித்ததில் இரண்டு நாளைக்கு முன்னால் ரகு எங்கேயோ போனவன் திரும்பி வரவில்லை என்றும் அன்றிரவு கமலாவும் எங்கேயோ போய்விட்டதாகவும் கூறினார்கள். ரொம்ப காலமாகவே ரகு வேலை இல்லாமல் திண்டாடிக் கொண்டிருந்ததாகவும் வறுமையில் என் மகள் ரொம்பவும் சீரழிந்ததாகவும் கூறினார்கள். என் காலடியில் பூமி பிளந்து விட்டதுபோல் நான் படு பாதாளத்தில் இறங்கிக் கொண்டிருக்கிறேன். ஐயோ கஷ்டப்படுகிறோம் என்று எனக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கக் கூடாதா?

என் மகளைத் தேடாத இடம் இல்லை. ஆறுகுளம் குட்டைகள் உட்பட எல்லாம் தேடிவிட்டேன். கடற்கரையில் மூன்று நாட்களாகக் காத்துக் கொண்டிருந்தேன். என் மகள் தற்கொலை செய்து கொண்டாளோ என்று நினைக்க என் உள்ளம் எவ்வளவு வேதனை அடைகிறது. நான் அவளை என்றாவது காண்பேனா…? கமலா…. நீயாவது எனக்கு ஒரு வார்த்தை… ஒரே ஒரு வரியாவது எழுதிப் போட்டிருக்கக் கூடாதா? உனக்குமா அம்மா என்னைத் தெரியாமல் போயிற்று?

வறுமையில் என் மகள் என்ன பாடு பட்டாளோ என்று நினைக்க என் உள்ளம் துடிக்கிறதே? அவள் பட்டினி கிடந்திருப்பாள். குழந்தை பாலின்றி அழுது இருக்கும்…. பட்டுடைகள் தரித்த மேனியில் பாழும் கந்தைகளைச் சுற்றிக் கொண்டு எண்ணெய் கிடையாத தால் சீவாது சீக்குப் பிடித்த சிகையுடன் காட்சியளித்திருப்பாள். என்னால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லையே? கமலா…. என் கண்ணே கமலா…!

அலைந்து அலைந்து என் கால்கள் சலித்து விட் டன. தேடித் தேடி என் கண்கள் பூத்துவிட்டன. நடந்து நடந்து என் உடல் அலுத்துவிட்டது… என் உள்ளம் அலுக்கவில்லை. கமலா….உன்னை நான் எப்பொழுது காண்பேன்?

கையில் கொண்டு வந்த பணம் தீர்ந்து விட்டது. விமலாவும் நானும் ஓட்டலில் தங்கியிருந்தோம். இனி நாங்களும் சாப்பாட்டிற்குத் திண்டாடவேண்டிய நிலைமை வந்து விடலாம். கவலைகளுக்கிடையே நான் நடேச முதலியாரைப் பார்க்கப்போனேன். அவர் பட்டணத்தில் ஒரு பெரிய புள்ளி. சினிமாக் கம்பெனிகளை எல்லாம் தெரியும். சங்கீத சபைகளிலே அவருக்கு மிகுந்த செல்வாக்கு உண்டு. ரேடியோவிலும் அவருக்கு வேண்டியவர்கள் இருக்கிறார்கள். அவர் கடிதம் எழுதியிருந்தார். விமலாவுக்கு ஏதாவது சான்ஸ் கிடைக்க வேண்டும். அதைக் கொண்டுதான் இனி நான், பிழைக்கவேண்டும். கேஸ் நடத்த வேண்டும். நான் எப்படிப்பட்ட நிலைமையில் இருந்தேன். எந்த நிலைமைக்கு வந்து விட்டேன். துன்பங்கள் என் தான் என்னைத் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன?

நடேச முதலியார் என்னைப் பார்த்ததும், “ஏன் இப்படி இளைத்துப் போய்விட்டீர்கள் ?’ என்று கேட்கிறார். என்னுடைய சூழ்நிலைகள் அவருக்குத் தெரிந்திருந்தால்…….? நான் விஷயத்தைச் சுருக்கமாகச் சொன்னேன். மறு நாள் மாலை நடக்கும் பாரதி சங்கீதப் போட்டியில் கலந்து கொள்ளும்படியும் பரிசு பெற்றாலும் பெறாவிட்டாலும் விமலாவுக்கு அதனால் நன்மை ஏற்படும் என்றும் கூறினார். அவருடைய வீடே ஒன்று காலியாக இருப்பதாகவும் அதில் நாங்கள் வசிக்கலாம் என்றும் சொன்னார். உளம் நிறைந்த நன்றியோடு அவருக்கு வணக்கம் தெரிவித்து விட்டுப் புறப்பட்டேன். மீண்டும் கமலாவைத் தேட… நான் எங்கு சென்று தேடுவேன்?

எத்தனை நாட்களாகியும் கமலாவைப்பற்றிய தகவலே ஒன்றும் கிடைக்கவில்லை. அவள் என்ன ஆனாளோ குழந்தை என்ன ஆயிற்றோ? ரகு என்ன ஆனனோ ஒன்றும் புரியவில்லை… கமலாவைப் பற்றி நினைக்கும் பொழுது என் உள்ளம் திகீர் என்கிறது. கவலை என்றால் இன்னதென்றே அறியாதபடி நான் அவளை வளர்த்தேன். அவள்….!

விமலா பாரதி பாட்டுப் போட்டியில் முதல் பரிசு பெற்றாள். அவளுடைய சங்கீத ஞானம் பெரிய வித்வான்களைக் கூடக் கவரும் தன்மை வாய்ந்ததாக இருந்ததென்றால்….? ரேடியோவிலும் சினிமாவுக்குப் பின்னணிகள் பாடுவதிலும் அவளுக்கு நிறையச் சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றன. எங்கள் வாழ்க்கை உருண்டு கொண்டிருக்கிறது. ஆனால். விமலா பாட வாய் திறந்தால் என் உள்ளம் கமலாவைத் தேடி ஓடுகிறது. என் கண்களில் நீர் தேங்குகின்றது. என் பெற்ற. மனம் பித்துப் பிடித்தலைகிறதே….! நான் என்ன செய்வேன்?

கமலாவின் வாழ்க்கைத் தேர்… திக்குத் தெரியாத காட்டில் சேற்றில் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. விமலாவின் வாழ்க்கையும் ஆரம்பித்துக் கொண்டிருக்கிறது. ஒரு மகளைப் பிரிந்த துயரத்திலே நான் தத்தளித்துக் கொண்டிருக்கிறேன். இவளுடைய வாழ்க்கையாவது நல்லபடியாக அமைய வேண்டுமே என்று நினைத்தால்…?

நடேச முதலியார் மகன் சபேசன் விமலாவைக் காதலிக்கிறான்.. முதலியாருக்கும் அவளிடம் அளவு கடந்த பிரியம். அவளுடைய வயதுக்கு இந்த அளவு சங்கீத ஞானம் எங்குமே பார்த்ததில்லை என்பது அவர் அபிப்பிராயம். அவளைத் தம் மருமகளாக்கிக் கொள்ள வேண்டும் என்பது அவருடைய ஆசையும் தான். கடவுளே விமலாவுக்காவது வாழ்க்கை நன்றாக அமைய வேண்டுமே என்று, நினைத்தால்….?

ஒரு நாளாவது கமலாவைப்பற்றி நினையாமல் இருக்க முடியவில்லை. இந்தக் கொலைகார உலகத்தில் அவள் என்ன பாடுபடுகிறாளோ என்று நினைத்து நினைத்து என் உள்ளம் வெதும்பிக்கொண்டிருக்கிறது.. கமலா… என் உள்ளத்தில் அனலேற்றிவிட்டு எங்கம்மா சென்று ஒளிந்து கொண்டாய்.

– தொடரும்…

– திருமணம் (நாவல்), முதல் பதிப்பு: பிப்ரவரி 1953, சத்தி பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *