கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 25, 2026
பார்வையிட்டோர்: 2,055 
 
 

(1953ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6

1. கமலா

நான் நேற்றுவரை அப்பாவின் சின்னக் குழந்தையாக இருந்தேன்……!

ஆமாம். நான் நேற்றுவரை அப்பாவின் சின்னக் குழந்தையாக இருந்தேன்!

ஏனோ என் மனம் என்னை அறியாமல் இந்த வார்த்தைகளைத் திரும்பத் திரும்பக் கூறிக்கொள்கிறது. எனக்கு என்னவோ போல் இருக்கிறது. உடம்பெல் லாம் புல்லரிப்பது போன்ற உணர்ச்சி. உள்ளம் கிறு கிறுக்கிறது. தென்றல் காற்றிலே மிதந்தேகும் சிறிய சருகுபோல் என் உள்ளமும் மெல்ல மெல்ல, மெல்ல மெல்ல மிதந்து செல்கிறது. என்னை அறியாமல் நானே சிரித்துக் கொள்கிறேனோ என்னவோ என் தங்கை விமலா சும்மா கேலி செய்கிறாள். அவளுக்கென்ன தெரியும்? விடலைப் பெண் தானே?

அப்பா தாயில்லாப் பெண்களாகிய எங்களிடம் எவ்வளவு பிரியமாக இருக்கிறார்? அவருடைய அன் புக்கு எந்த விதத்திலும் உவமை சொல்ல முடியாது என்றே நினைக்கிறேன். உண்மையில் எங்கள் அம்மா இருந்திருந்தால் அவளுக்கு எங்களிடம் இவ்வளவு அன் பிருக்குமா என்பது கூடச் சந்தேகம்தான், அம்மாவை நினைக்கும்போது என் மனதில் எங்கிருந்தோ ஒரு ஏக்க உணர்ச்சி வந்து மோதுகிறது. அம்மா…….. அவள் முகம் எப்போதோ கனவில் கண்டாற்போல் என் நினை வுக்கு வருகிறது. அம்மா என்னை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு “நிலா நிலா வா வா… நில்லாமலே வா வா…” என்று பராக்குக் காட்டிப் பாலும் சோறும் ஊட்டிய அம்மா… ! என் தலை சீவி, முகம் கழுவி முன் நெற்றிக்கு பொட்டும், கண்ணுக்கு மையம் இட்டு, பட்டு பாவாடையும் சொக்காயும் உடுத்தி, விதம் வித மாகச் சிங்காரித்து அழகு பார்த்து அள்ளி அனைத்து அகமகிழ்வுகொண்ட என் ஆசை அம்மா…! அவளுக்கு நான் கொடுத்து வைக்கவில்லை! எனக்காவது அவ்வளவு கிடைத்தது. பாவம் விமலாவுக்கு அம்மா வின் முகம் கூட நினைவில் இருக்காது. அவளுக்கு ஒன்றரை வயது தானே அம்மா மணரமடையும் போது…? ஐயோ. அம்மா… அவளுக்கும் எங்கள் மேல் ரொம்பப் பிரியம்தான் ! உண்மையில் அப்பாவும் அம்மாவும் இரண்டு பேரும் இருந்திருந்தால் இவர்களில் யார்எங்களிடம் அதிகம்பிரியமாக இருக்கிறார்கள்என்று கண்டுபிடிக்க முடியவே முடிந்திருக்காது. இரண்டு பேரும் அப்படி அன்புடையவர்களாக இருந்ததனால் தானோ என்னவோ தெய்வம் ஒருவரைப் பிரித்துத் தன்னிடம் எடுத்துக்கொண்டது. நான் நினைக்கிறேன். தெய்வம் என்பது ஒரு பொல்லாத பொறாமைப் பின்ட மாய் இருக்கவேன்டும்! அதற்கு மனிதர்கள் சந்தோஷ மாக இருப்பதைப் பார்க்கப் பிடிக்காததுபோல் இருக் கிறது. மனிதர்களைத் துன்புறுத்தி அவர்கள் படாத பாடு பட்டுத் துடித்துச் சாவதைப் பார்ப்பதில்தான் அதற்கு ஆனந்தம் இருக்கும் போலும்!

தாயில்லாக் குழந்தைகள் என்று பெயர் தான். எங்கள் வாழ்க்கையிலே தாயின் இடம் சூனியமாகி விட் டால் கூட அதைத் தவிர வேறு ஒரு குறையும் காணாது நாங்கள் வளர்க்கப்பட்டோம். எங்களுக்கு வாய்த்தது போல் ஒரு அப்பா உலகத்தில் வேறெந்தக் குழந்தைக் குமே வாய்த்திருக்கமுடியாது என்றுதான் நான்நினைக் கிறேன். அப்பா எங்களுக்கு அப்பாவாக மாத்திரம் இருக்கவில்லை. அம்மாவாகவும், தங்கை யாகவும் தமக்கையாகவும் தோழியாகவும் சிநேகிதையாகவும் கூட இருந்தார். நாங்கள் அப்பாவிடம் படித்தோம். பாடினோம்,சிரித்தோம், களித்தோம், சாப்பிட்டோம், பேசினோம், எங்கள் இன்பத்திலும் துன்பத்திலும் எல்லாவற்றிலும் அப்பா எங்களோடு பங்கு கொண்டிருந்தார்.

அந்த வரையில் நானும் விமலாவும் பாக்யசாலிகள் தான். இன்று வரை எங்கள் வாழ்க்கையோடு ஒன்றிப் போய், எந்த விதத்திலும் பிரித்துணர முடியாதவராக இருந்த அப்பா… இன்று? எனக்கு மாத்திரம்..? எனக்கு என்னவோபோல் இருக்கிறது. அப்பாவின் அன்பு மறக்க முடியாததுதான்… ஆனால்…?

என் உள்ளம் ஏன் இப்படித் தடுமாறுகிறது? எனக்கு எல்லாம் அளித்து சல்லபமாக இருந்த அப்பா…… என்னிடத்தில் எல்லையற்ற அன்பை அள் ளிச் சொரிகிற அப்பா…. என் உள்ளம் அந்த அன் புடன் திருப்தி அடைவதாக இல்லை. வேறு எதையோ நாடி அலைகிறது. எங்கெங்கோ இழுத்துச்செல்கிறது.

புத்தகத்தில் படித்த அந்த வாக்கியம் என் நினைவுக்கு வருகிறது. “பருவம் அடைந்த பெண்ணிற்குத் தேவை அப்பா அல்ல அம்மா ஒரு கணவன்” என்று மணமாகாமல் மனம் புழுங்கிக்கொண்டிருக்கும். அந்தப் பெண் தன் தாயிடம் ஒரு நாள் வாய்விட்டுக் கூறிவிடுகிறாள்.. மண்ணிலே முளைத்தசெடி சூரியனை நோக்கித் தன் ஆயிரம் கரங்களை நீட்டிப் படர்வதைப் போல் பெண்ணின் உள்ளமும் பெற்றவர்கள் இடத் திலிருந்து பிறிதோர் இடத்தை நோக்கிப் படர்ந்து படர்ந்து செல்லும்போலும்……! நான் இந்தச் சில நாட்களுக்குள் எவ்வளவுமாற்றம் அடைந்துவிட்டேன்! எவ்வளவு சாதனக்காரி ஆகிவிட்டேன்! அப்பாவிடம் எதையும் ஒளித்துவைக்கும் பழக்கம் இல்லாதவளாகிய நான் எவ்வளவு மறைத்துவைக்க ஆரம்பித்து விட் டேன். ஒவ்வொரு சமயங்களில் என் உள்ளம் ‘சீ நன்றியற்றவளே…. இதுதானா நீ உன் தந்தைக்குச் செய்யும் கைமாறு’ என்று இடித்துக்காட்டுகிறது. ஆனால்……..ஆனால்…. எனக்கு வெட்கமாகயிருக்கிறது. இது என் தவறல்ல பருவத்தின் தவறுதான்….

அது சரியா தவறா என்று எனக்குப் புரியவில்லை வாலிபன் ஒருவனும் மங்கை ஒருத்தியும் பிறர் அறியா வண்ணம் காதல் புரிவது உலகோரால் பரிகசிக்கப்படு கிறது. கள்ளக் காதலர்களைப் பற்றி எவ்வளவு கீழ்த் தரமாகப் பேசப்படுகிறது என்பது எனக்குத் தெரியும் ஆனால் என் னால் காதலிக்காமல் இருக்க முடிய ஆனால்…. வில்லையே….? பசியும் தாகமும் எவ்வளவு இயற்கையாக எழும் உணர்ச்சிகளாக இருக்கின்றன. அவற்றை மறைத்துவைக்கவோ சகித்துக் கொள்ளவோ முடி கிறதா…….? என் வரையில் காதலும் அப்படிப்பட்டது. தான் என்று நினைக்கிறேன்.

காதல் புரிவதற்காகத்தானே கல்யாணம் செய்து வைக்கிறார்கள். பத்துப்பேர் அறியப்பந்தல் வாயிலிலே மணமக்கள் ஆக்கப்பட்டபின்தான் காதல் வரவேண் டும் என்பது சட்டம்போலும். ஆனால் பசியும் தாகமும் எப்படி எந்தச்சட்டத்திற்கும் கட்டுப்பட்டன அல்லவோ அதே போல்தான் காதலும் என்று நினைக்கிறேன். அதுவும் இயற்கையாகவே, யாரையும்கேளாமலே வந்து விடுகிறது.

எனக்கு மணமாகவில்லை. மணம் செய்து கொடுக்கப் பட்டபின், என் மணாளரைக் காதலிப்பதுதான் நியாயம் என்று வரையறுக்கப் பட்டிருக்கிறது. ஆனால் என் உள்ளத்திலே எழும்இயற்கையான உணர்ச்சிகளை என்னால் தடுத்துக்கொள்ளமுடியவில்லையே! வெள்ளம் வந்தபின் அனைபோடுவதைப் பற்றி யோசனை செய்வதால் என்ன பயன் ?

ஒரு பெண் பல ஆடவர்களை நாடுவதையோ, மோகவெறி பிடித்தலைவதையோ குற்றம் என்று கூறலாமா, இருக்கலாம். ஆனால், உள்ளமும் உணர்வும் ஒன்றைத்தான் விரும்புகிற ஒருவனைக் காதலிப்பதில்…. மணாளனாக அடைய முயல்வதில் என்ன தவறு இருக்கக்கூடும் ?

கல்யாணம் ஆனபின் காதலிப்பது என்பது…. கட்டிலுக் கேற்றபடி ஆளைப்பிடிப்பது என்பதுபோல் இல்லையா? அதைவிட ஆளுக்கேற்ற கட்டிலாக இருக் தால்… காதலும் கல்யாணமும் இனைந்து வருவதாக இருந்தால்…

எனக்குக் கொஞ்ச நாளாகப் பைத்தியம் பிடித்து விட்டாற்போல் இருக்கிறது. விமலாவும் அப்படித்தான் சொல்கிறாள். ஜன்னல் அருகே உட்கார்ந்துகொண்டு இப்படி எதையாவது நினைத்து நினைத்துப் பொழுதைப் போக்குவது என் வழக்கமாகி விட்டது. எதையாவது. நினைத்துக் கொண்டிருக்கமாத்திரமா,நான் இங்கு உட் கார்ந்து கொண்டிருக்கிறேன். அவர் வருவார்.. கண்டிப்பாக வருவார். ஒரு நாளைக்கு நாலைந்து தடவை யாவது இப்படியும் அப்படியும் நடந்து செல்வார். ஆனால் வழிந்து பொங்கும் அவருடைய அழகிய முகத் தைப் பார்ப்பதற்காகத்தான் நான் இங்கே அமர்ந்து தவம் கிடக்கிறேன். ஐயோ… நான் எவ்வளவு பொல் லாதவளாகி விட்டேன் !

அவர் அடிக்கடி அப்பாவிடம் வருவார். அதிலும் நானும் விமலாவும் மாலைநேரங்களில் வீணையை எடுத்து வைத்துக்கொண்டு பாட உட்கார்ந்துவிட்டால் எங்கள் பாட்டு முடியும் வரை அவர் இங்கேயேதான் இருப் பார். நாங்கள் எல்லோருக்கும் தெரிகிற மாதிரியில் மிக வெளிப்படையான நண்பர்களாகவே இருந்த போதிலும்கூட உள்ளத்தில்நாங்கள் எப்படிஎப்படியோ மாறிவிட்டோம்…….! காதலர்களாகி விட்டோம்….!

இது ஏன் இப்படி நடந்தது என்பதுதான் எனக் குப் புரியவில்லை. அவரை ஆரம்ப முதலே எனக்குப் பிடித்திருந்தது. தோற்றத்தில் மாத்திரம் அல்ல. குணத்திலும் கூடத்தான். வேறு எத்தனையோ பேர் களையும் கூடத்தான் எனக்குத் தெரியும், ஆனால் எப் படி என்று என்னால் சொல்லமுடியவில்லை. ரகு என் ஆசைக் காதலன். அருமைக் கண்ணாளன்! அவரைப் பிரிந்து என்னால் இருக்க முடியாது. ஒருநாள் அவரைப் பார்க்காவிட்டால் அந்த நாள் நான் உயிருடன் இருந்தும் இல்லாத நாள் தான்!

ஆனால், குழப்பமான சிந்தைகளும் கவலைகளும் சந்தேகங்களும் எப்பொழுதும்தான் உள்ளத்தில் வந்து மோதுகின்றன. அவற்றிற்கு வேளையும் காலமும் தெரிகிறதா என்ன? எங்கள் காதல் கை கூடாவிட் டால் அவர் கூறுகிறபடி நாங்களும் ஒரு லைலாவும் மஜ் னுவும் ஆகி விடுவோமா…? நான் ஒரு ஜாதி! அவர் ஒரு ஜாதி! அப்படி எல்லாம் நடக்காது. அப்பா என் மனம் நோக ஒன்றும் செய்ய மாட்டார். அவருடைய தந்தை பெரிய சீர்திருத்தவாதியாம். ரகு என்னைக் கைவிட மாட்டார்……! என்னைக் கைவிடவே மாட்டார்!

ஏனோ என் உள்ளம் சஞ்சலம் அடைகிறது. பேதைப்பெண்ணே உனக்கு என்ன இல்லாமல் கிடக்கிறது? எல்லாம் இருந்தும் ஏதும் இல்லாதவள் போல் ஏன் இப்படித் தவிக்கிறாய்?

2. ரகுநாதன்

என் உள்ளம் தவி தவிக்கிறது. எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. சங்கங்களிலும் சபைகளி லும் சண்டப் பிரசண்டம்செய்கிற என் தந்தை உள்ளே இப்படி இருப்பார் என்று நான் கனவில்கூட கருதிய தில்லை. கொஞ்சநாட்களுக்கு முன்னால் அவர் முற் போக்கு வாலிபக் கழகத்திலே நிகழ்த்திய பிரசங்கம் இப்பொழுது கூட என் காதுகளில் எதிரொலிக்கிறது. மனிதர் யாவரும் ஒரு இனம், ஒரு குலம், ஒரு நிலை, ஒரு நிறை… என்பதற்குமாறாத விஞ்ஞான, பௌ திக, உடல், உள ஆராய்ச்சி நூல்களிலிருந்து ஒரு சான்றாவது கூற முடியுமா. அப்படியிருக்க சாதி, சமயம், குலம், வருணம் என்ற பேதமிட்டு மனிதரை மனிதர் பிரித்து வைக்கும் மடமையை நாம் இன்னும் அனுமதித்துக் கொண்டிருப்பது நன்றாக இருக்கிறதா…. சிந்தித்துப் பாருங்கள்… என் று அவர் ஆவேசமாகக் கேட்டபோது கூடியிருந்த இளைஞர்கள் மடமடவென்று கைதட்டி ஆரவாரம்செய்தனர். என் உள்ளத்திலோ ஆனந்தம் பொங்கி வழிந்துகொண்டிரு ந்தது. துள்ளிக்குதிப்பது ஒன்றுதான் பாக்கி. ஆர வாரத்துடன் நான் அவர் பேச்சை ரசித்துக்கொண் டிருந்தேன். இனிக் கமலாவை அடைவதில் எனக்கு ஒரு தடையும் இருக்காது என்று நான் பகற்கனவு கண்டு கொண்டிருந்தேன்.

கமலாவும் நானும் அதே வாலிபர் சங்கக்கட்டி டத்தில், அதே தலைவரின் முன்னிலையில் மாலை மாற்றித் திருமணம் செய்து கொள்வது போலவும் எங்களை வாழ்த்தி என் தந்தை பேசுவது போலவும் கூட என் கண் முன்னே நினைவுப்படங்கள் சுழன்று கொண்டிருந்தன. நான் என்னை மறந்து ‘ கமலி…. கமலி….’ என்று சொல்லிக் கொண்டிருந்தேன். என் நண்பன் கையைப் பிடித்து இழுத்த போதுதான் எனக்கு நினைவு வந்தது.

சிறிது நேரத்திற்குள் நான் என்னென்ன மனக் கோட்டைகள் கட்டி விட்டேன். எத்தனை கற்பனைகள் செய்து விட்டேன். என் தந்தை, என் நலத்திலே அக் கரைகொண்டு, என்னைப் பெரிய மனிதன் ஆக்க வேண்டும் என்று தம் சக்திக்கும் மீறி என்னைப் பட்டணத்திற்கு அனுப்பிப் படிக்க வைத்த என் தந்தை.. எதற்கெடுத்தாலும்…’ நம்ம ரகு இருக்கிறா னே… பி. ஏ – லே பஸ்ட் கிளாஸிலே பாஸ்செய்து விட்டான். கவர்னது அவனைப் புகழ்ந்து பேசி இருக்கிறார். படிப்பு என்றால் எல்லோருக்கும் வந்து விடுமா ஐயா…! என்று சும்மாவாவது சொல்லிச் சொல்லி என்னைப்பெருமைப் படுத்தித்தான் மகிழ்வு கண்ட என் தந்தை… என் விருப்பத்திற்கு மாறாக எதுவுமே சொல்ல மாட்டார் என்று மனப்பால் குடித் தேன். கமலாவிடம் நான் எவ்வளவு நம்பிக்கையுடன் கூறினேன்! ஐயோ அவள் உள்ளத்திலே குளிர்ந்து விட்ட நம்பிக்கைப் பயிரை என் கையால் நான் எப்படிப் பிடுங்கி எறிவேன்?

Co

கூட்டத்திலே அவர் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டபோது உண்மையில் நம் தந்தைதான் பேசு கிறாரா என்று எனக்கும் சந்தேகமாக இருந்தது. இவ் வளவு விரைவில் இவ்வளவு பெரிய சீர்திருத்த வாதி யாக இவர் எப்படி மாறிவிட்டார் என்று நான் சந்தே கித்தேன். இப்பொழுதல்லவா புரிகிறது ? அப்பா வுக்கு தான் பெரிய மனிதன் என்று பெயர் பெற வேண்டும் என்பதிலே பெரிய ஆசை ! அந்த ஆசை ரொம்ப காலமாக அவர் உள்ளத்தில் பதிந்து கொண் டிருக்கிறது. அவர் செய்கிற ஒவ்வொரு காரியத்திலுமே அந்த ஆசை பிரதி பலிக்கக் காணலாம். எதற்கெடுத் தாலும் என்னை இழுத்துவைத்துப் பெருமை படுத்திப் பேசுவதுகூட இந்தப்புகழ் மோகம் காரணமாகத்தான் ஆம்… ஆரம்பத்திலிருந்தே அவரை எனக்கு நன்றாகத் தெரியும். பொதுக் கூட்டத்திலே அவர் பேசி யதைக் கேட்டு அவர் சீர்த்திருத்த வாதியாகி விட்டார் என்று நினைத்தது என் பைத்தியக் காரத்தனம். கடவுளே நான் என்ன செய்வேன்? கமலாவைப் பிரிந்து… அதைப்பற்றி என்னால் நினைக்கக் கூட முடியாது. கனவில் கூட நினைக்க முடியாது.

என் தந்தை அனுமதிப்பார் என்று நினைத்து. நான் அவளைக்காதலிக்கவில்லை, கமலா என் இளமைக் கனவுகளின் இன்பலட்சியமாக இருந்ததனாலேயே காதலித்தேன் ! என் வாழ்க்கைப் பொழிலுக்கு வனப் பளிக்கும் வண்ண மலராகத் திகழ்வாள் என்றதனா லேயே காதலித்தேன். கமலா…… எனக்குப் பாலை யிலே குளிர் சோலை, பாழ் இருளிலே தெரியும் சுடர் விளக்கு அலை நடுவே கிடைத்த தெப்பம்………. ஆமாம்…….. கமலா என் வாழ்க்கைக்கு லட்சியம். கற் பனைகளுக்கு உருவம். எதிர் காலத்தின் விழித்துனை…. அந்த அன்புக் காதலிலே என் உள்ளம் எப்படி எல் லாம் கற்பனை செய்கிறது. கமலாவை நான் எதனாலும் இழக்க முடியாது. எதற்காகவும் இழக்க முடியாது.

ஆனால் உண்மையில் அப்பாவின் பேச்சைக் கேட்டபோது அவர் எங்கள் திருமணத்திற்குச் சம்ம தித்து விட்டதாகவே நினைத்து விட்டேன், அதனா லேயே ஏமாந்துவிட்டேன். விளாம்பழம் நல்லதென்று நினைத்து நாவில் நீர் ஊற உடைக்க, அதன் நடுவே புழுக்கள் நெளியக் கண்டதைப்போல் ஆயிற்று என் நிலை! அப்பா பெரிய இடத்தில்’ எனக்குப் பெண் பேசப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். நான் எந்த இடத்திலுமே எனக்குப் பெண் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை என்றேன். ‘ ஏண்டா சந்நியாசியாகவே இருந்துவிடப் போகிறாயா ?” என்று கேட்டார் அப்பா

நான் சிரித்தேன். உனக்கு ஒன்றும் தெரியாது. எல்லாம் காலா காலத்தில் எதை எதைச் செய்யவேண் டுமோ அதை அதைச் செய்துதான் ஆகவேண்டும். உத்தியோகம் கித்தியோகம் எல்லாம் பிறகு தானாக வந்து விடும்’ என்று கூறிக்கொண்டே அவர் கிளம்பி விட்டார். ஆண் பிள்ளையாக இருந்தும் எனக்கு ‘ஒரு மாதிரி’யாகத்தான் இருந்தது, “அப்பா வேறு பெண் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை” என்றேன்,

“அப்படியானால் நீயே பார்த்து முடிவு செய்து’ கொண்டாயா ?”

‘ஆமாம்’ என்பது போல் தலையை அசைத்தேன் நான்.

“நீ புத்திசாலி என்று நினைத்தேன். உன் வயதுப் பையன்களுக்கு இதைப்போன்ற விஷயங்களில் எல்லாம் அனுபவம் இருக்காது, காதல் என்றும் லட்சியம் என்றும் கன்னா பின்னாவென்று உளறிக் கொண்டு கண்டதை நினைத்துக்கொண்டு திரிவார்கள் அவை பேச அழகாக இருக்கலாம். எழுதவும் படிக்கவும் நன்றாக இருக்கலாம். ஆனால் காரியத்தில் உதவாது….”

“அப்பா, பெண் எல்லா விதத்திலும் உங்களுக்குப் பிடித்தமான விதத்தில் இருப்பாள். நல்ல குடும்பம், பணக்காரி படித்தவள், அழகானவள். அவர் வீட் டில் இரண்டு பெண்கள் தான். வேறு ஆண் குழந்தைகள் கிடையாது….”

அப்பா சந்தேகத்துடன் கேட்டார், “எந்த ஊர்…”

“இதே ஊர்தான்…”

“இந்த ஊரில் எனக்குத் தெரிய அப்படிப்பட்ட பெண் ஒன்றும் இல்லையே….”

“ஏன் அப்பா…… முதலியாரின் பெண் கமலா?”

நான் ஆவலுடன் கூறினேன். ஆனால் அப்பாவின் முகம் பயங்கரமாக மாறியதைப் பார்த்தவுடனேயே என் இதயம் அடியோடு கலங்கி விட்டது. வானம் அளாவக் கட்டிய மாளிகை அப்படியே உருக் குலைந்து விழுவதுபோல் என் கற்பனை மாளிகைகளும் தகர்ந்து விழுந்தன. இருந்தும் நான் நம்பிக்கையோடு அவர் முகத்தைப் பார்த்துக்கொண்டு நின்றேன். அவர் ஆத்திரத்துடன் “முட்டாள் தனமாக எதையாது சொல்லிக் கொண்டிராதே…. அதெல்லாம் நடைபெறாது….” என்று சொல்லிவிட்டு விர்ரென்று போய்விட்டார். நான் ஏக்கத்துடன், “அப்பா.. அப்பா” என்று கூப்பிட்டேன். ஆனால், அறுப்பவன் செவியில் ஆட்டின் அவலக் குரல் ஏறுவதுண்டா….? என் தந்தை போய் விட்டார்.

இங்கே வீடு அமளிப் படுகிறது. காரிலே சம்மந்தி கள் இருக்கின்றனர். அவர்களுடன் அந்தப் பெண்ணையும் அழைத்துக்கொண்டு வந்திருந்தார்கள். பெண் ணின் அழகைப்பார்த்தால் நான் கமலாவை மறந்து விடுவேன் என்பது அப்பாவின் நினைப்புப் போலும். வாழைக் குலையைப் பார்த்து அழுகிற குழந்தைக்கு எந்தப் பழத்தைப் பிடுங்கிக் கொடுத்தால் தான் என்ன? பெரியவர்கள் காதலைப் பற்றி இப்படித்தான் நினைக்கிறார்களா? ஆனின் தேவை பெண் ! ஆண் ஒரு இயந்திரம் பெண் ஒரு இயந்திரம் இப்படித்தான் இவர்கள் நினைக்கிறார்களா? என் மனம் புழுங்குகிறது..

கமலாவுக்கு என் முகம் சிறிது சோர்ந்திருப்பதை பார்த்தாலே சந்தேகம் வந்து விடுகிறது, இரண்டு நாட்களுக்கு என் மனம் சிறிது ஆறுதலடைகிறவரை அவளைப் பார்க்கக்கூடாது என்று நினைத்தேன். ஆனால்… அவளைப் பார்க்காமல் இருக்க முடிகிறதா….? காந்தஊசி வடக்கு திசையையே காட்டுவது போல் என் உள்ளமும் எப்பொழுதும் கமலாஇருக்கும் இடத்தையே அல்லவா காட்டிக் கொண்டிருக்கிறது. ஆங்கிலப் பிர யாணி ஒருவன் ஆப்ரிக்கா சுதேசிகளிடம் அகபட்டுக் கொண்டபோது அவர்கள் அவன் கையிலிருந்த திசை காட்டும் கருவியைப் பிடுங்கிக் கொண்டார்களாம். அதை எப்படி எப்படித் திரும்பினாலும் முள் ஒரே திசையில் நிற்பதைக் கண்டு அது என் அம்மா இருக்கு மிடத்தைக் காட்டுகிறது என்று சொன்னானாம். என் கையிலும் ஒரு திசை காட்டும் கருவி இருந்தால்….

கமலா என்றும் இல்லாதபடி அவ்வளவு நன்றாக அலங்கரித்துக் கொண்டிருந்தாள். அந்த அழகைக் கண் குளிரப் பார்க்கக் கூட என்னால் முடியவில்லை. “ஏன் ஒரு மாதிரி இருக்கிறீர்கள் ? என்னிடம் சொல்லமாட்டீர்களா…” என்று துருவித் துருவிக் கேட்க ஆரம்பித்துவிட்டாள். சொன்னாலும் சங்கடம், சொல்லாவிட்டாலும் சங்கடம். எனக்கு என்ன செய்வ தென்று தெரியவில்லை. எப்படி இருந்தாலும் அவளுக்குத் தெரிய வேண்டிய விஷயந்தானே என்று நினைத்து ஒருவாறாகச்சுற்றி வளைத்து மெதுவாக விஷயத்தைச் சொன்னேன்-பெண்களின் இதயம் மெழுகைக் காட்டிலும் மிக மிருதுவான பொருளில் செய்யப் பட்டிருக்க வேண்டும்! ஒன்றைக்கேட்டவுடனே அவர் கள் கண்களில் எப்படிக் கண்ணீர் வந்து விடுகிறது? கமலா விம்ம ஆரம்பித்து விட்டாள். அவளை ஆறுதலடையச் செய்வதற்குள் எனக்குப் போதும் போது மென்றாகி விட்டது ரொம்ப நேரமாகி விட்டது. அதற்குள்… கமலாவின் தந்தை வந்து விட்டார். எனக்குப் பகீர் என்றாய் விட்டது. நான் என்ன செய்வேன்? அவர் நம்பிக்கையுடன் என்னைத் தன் வீட்டில் கலந்து பழக விட்டிருந்தார். ஆனால் நான்…

செய்யவொண்ணாத துரோகத்தைச் செய்து விட்டதுபோல என் உள்ளம் நடுநடுங்க ஆரம்பித்து விட்டது. அவ்வளவு காலமும் நான் சேகரித்து வைத் திருந்த தைரியம் எல்லாம் நான் எதிர்பார்த்திருந்த அந்தச் சமயத்திற்குதவாமல் பறந்து போய்விட்டது. நான் நடுங்கிக்கொண்டிருந்திருக்க வேண்டும். அவர் மௌனமாக எங்கள் அருகே வந்து, “கமலா நேரமாக வில்லையா. போய்க்கொஞ்ச நேரம் பயிற்சி செய்து கொண்டிரு அம்மா”
என்று கூறினார். கமலா முன்னால் சென்றாள். “ரகுவா…” என்று கூறி விட்டு அவர் நடந்தார். அவர் குரள் கரகரத்தது. அவர் என்னைப்பார்க்கவே இல்லை.

கமலாவும் விமலாவும் வீணை வாசித்துப் பாடிக் கொண்டிருந்தனர். நான் எந்த உலகத்திலோ இருந்தேன். கமலாவும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும், என்னால் கவனிக்க முடியவில்லை. என் கால்களின் கீழ் இருந்து பூமி நழுவிக் கொண்டிருப்பது போல் எனக்குத் தோன்றிக் கொண்டிருந்தது.

பாட்டின் இடையிலேயே, “சரி போதும் அம்மா” என்றார் அவர். அவர் குரல்கடினமாக இருந்தது. நான் கமலாவைப் பார்த்தேன். வீணையின் மேல் முத்து முத்தாகக் கண்ணீர்த்துளிகள். என் இதயம் பிளந்து விடும்போல் இருந்தது. நான் என்ன நிலையில் இருந்தேன் என்பது எனக்குப் புரியவில்லை. நான் அவரிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தேன். ‘தவறு என்னுடையது தான் அவள்மேல் கோபிக்காதீர்கள் ‘ என்று சொல்லியிருப்பேன் என்று நினைக்கிறேன். கமலா அவர் கால்களைப் பிடித்துக்கொண்டு விம்மிய தும், விமலா ஒன்றும் புரியாமல் விழித்துக்கொண்டு நின்றதும் என் நினைவில் விழுந்தன.

அவர் என் தோளைப்பிடித்து மெதுவாக அசைத்து, “ரகு… நான் யார் மேலும் குற்றம் சுமத்த வில்லை. ஆனால் சமுதாயம் மிகக்கொடுமையானது…… மிகமிகக் கொடுமையானது. அதை எதிர்த்து நிற்க யாராலும் முடியாது…” என்றார். நான் என்ன சொன்னேன் என்பது என் நினைவுக்கு வரவில்லை. கமலாவை விட்டு வாழ்வதை விடச்சாவதையே விரும்புகிறேன். என்று ஏதாவது சொல்லியிருப்பேன் என்று நினைக்கிறேன். கமலாவும் அப்படித்தான் ஏதோ சொன்னாள். அவர் நெடுநேரம் யோசனை செய்து கொண்டே நின்றார். பிறகு… “ரகு….கமலா….நான் உங்களுக்கு நல்லது தான் செய்வேன். எனக்குத் தெரியாமல் நீங்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கக்கூடாது. எந்த விதமான தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது. கடிதத்தின் மூலமாகக்கூட. நான் என்னால் முடிந்த வரை… உங்களுக்கு நல்லதுதான் செய்வேன்” என்றார்.

நான் எப்படி அவரிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டேன் என்பது எனக்கே தெரியவில்லை. அவள் விம்மிக்கொண்டிருந்த தம்மகளை மார்மேல் சாய்த்துக்கொண்டு அவள் தலையை வருடியவாறு, “அம்மா.. நீ என் குழந்தை…. என் குழந்தைதான் நீ” என்று சொல்லிக் கொண்டிருந்தார் எவ்வளவு உருக்கமாக அவர் அந்த வார்த்தைகளைக் கூறினார்? அவர் முகம் அன்பாய் எவ்வளவு கனிந்திருந்தது. என்னால் அந்தக் காட்சியை மறக்கவே முடியாது…! அவரும் ஒரு தந்தைதான் என்று நினைக்கும் பொழுது…!

3. மாணிக்க முதலியார் 

“அவரும் ஒரு தந்தைதான்….” என்று நினைக்கும்பொழுதுதான் எனக்கு இந்தத் துணிவு வருகிறது. ஆமாம்…. என்னுடைய நிலையில் நான் இப்பொழுது வேறு என்ன செய்ய முடியும்?

நான் ஒரு பெண்ணாக இருந்திருந்தால்… என் குழந்தைகளுக்கு எந்தக் காலத்தில் எதுதேவை என்பதை என்னால் புரிந்து கொண்டிருக்க முடியும். நானோ… .என்னுடைய அன்பின் மிகுதியில் அவர்களை எப்பொழுதும் என் சின்னக் குழந்தைகளாகவே நினைத்துக் கொண்டிருந்து விட்டேன். தன் பெண்களுக்கு அழகிய ஆடைகள், ஆபரணங்கள் வாங்கிக்கொடுத்து விடுவதோடும், படிக்கவும் பாடாவும் வைப்பதோடும் ஒரு தந்தையின் கடமை முடிந்து போவதில்லை. ஒரு தந்தை தன் அன்பு முழுவதையும் அவர்கள்மேல் சொரிவதாலும் அவர்கள் வாழ்க்கை நிறைந்து விடுவதில்லை…. உரிய காலத்தில் அவர்களுக்கு மணம் செய்து வைப்பதும் – அதனால் அவர் தன் அன்புக்குழந்தைகளைப் பிரிய நேரிட்டாலும் – அவசியம் தான்.

இந்தத் துன்பகரமான உண்மையை நான் அடியோடு புரிந்து கொள்ளவில்லை நான் அதைப்பற்றிச் சிந்தித்ததுண்டு. ஆனால் அக்கரையுடன் கவனிக்க வில்லை. என் மகளின் பண்பில் ஏற்பட்ட சிறு மாற்றங்களைக் கூட நான் கவனியாமல் விட்டு விட்டேன்.

கமலா….என் கண்களிலே ஆடித்திரிந்த சிறு குழந்தையாய், ஓடி நகைத்துவரும் சிறு மதலையாய்த் தான் தோன்றிக் கொண்டிருந்தாள். ஆனால் அன்று…?

அவள் என்னைவிட அதிகமாக வேறொருவரை நேசிக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. பருவத்தின் ரகசிய உணர்ச்சிகள், ஒரு தந்தையிடம் கூட வாய்விட்டுக் கூற முடியாதவை என்று நான் நினைக்க வில்லை. அது என் தவறுதான். நான் தந்தை…. மலர் தன் முழு எழிலும் மணமும் காட்டி வண்டை நோக்கி ஆடி மகிழ்வதைக் கண்டு செடி பொறாமைப் படுவதில் அர்த்தமில்லை. ஆமாம், நான் அப்படித் தான் நினைக்கிறேன். அது அவள் தவறல்ல. ரகுவின் தவறும் அல்ல.

ரகு நல்லவன். உத்தம குணம் உள்ள இளைஞன். இனிய பண்புடையவன். கமலாவின் உள்ளம் அவனை நாடியதில் அதிசயப் பட ஒன்றும் இல்லை….அவனும் கமலாவின் மேல் ஆசையாக இருக்கிறான். ஆனால்….?

இந்தத் துரதிர்ஷ்டம் பிடித்த சமுதாயம் தன் குழந்தைகளுக்கு வாழ்வளிப்பதாக இல்லையே….? ராமகிருஷ்ணபிள்ளை என்ன நினைப்பார்?

அவருக்கு எப்பொழுதுமே என்னைக் கண்டால் பிடிக்காது. ஏனோ.. எனக்கே தெரியவில்லை, எந்த விஷயத்திலுமே நாங்கள் இருவரும் ஒத்துப்போக முடிந்ததில்லை. அதனால் நாம் கூடியவரை ஒதுங்கிப் போனால்கூட வேண்டுமென்றே நம்மிடம் வம்புக்கு வருவார். அப்படிப்பட்ட மனிதர் இந்தத் திருமணத்திற்குச் சம்மதிக்கவா போகிறார்? நான் நம்பவில்லை.

ரகுவையும் கமலாவையும் ஒருவரை ஒருவர் சந்திக்கக் கூடாதென்று தடுத்து வைத்திருக்கிறேன். ஆனால், பிரித்து வைப்பதால் காதல் அதிகமாவதைத் தவிரக் குறைந்து விட்டதாக எந்தக் காவியமும் கூற வில்லையே….? அவர்கள் ஒருவரை ஒருவர் மறந்து விட வேண்டியது தான் என்று இறுதியாகக் கூறிவிடலாம். ஆனால்…. என்னால் அப்படி நினைக்க முடியவில்லை. எந்தக் குழந்தைகளுடைய வாழ்க்கை வளமடைவதற்காக என் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டேனோ அதே குழந்தைகளின் வாழ்க்கையை என் கையாலேயே முறித்து விடுவதா….? அது என்னால் முடியாது. முடியவே முடியாது.

எனக்கு வேறு வழி ஒன்றும் தோன்றாத தாலேயே ராமகிருஷ்ண பிள்ளையின் வீட்டை நோக்கி நடந்தேன். நேர்மையாக நேருக்கு நேர் அவரிடம் கேட்டு, ஒரு முடிவுக்கு வருவதைவிட வேறு நல்ல வழி இருக்க முடியுமா? அவரும் பெரிய சீர்திருத்தவாதி என்று பெயர் பெற்றவர். நாங்கள் வேறு வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் எங்கள் குழந்தைகளின் வாழ்க்கையையும் ஏன் பாழ்படுத்த வேண்டும்? ராமகிருஷ்ண பிள்ளை சாதி சமயம் பார்க்கமாட்டார். அவர்தான் சீர் திருத்த வாதியாயிற்றே என்றெல்லாம் நினைத்துக் கொண்டு தான் சென்றேன்.

நல்லவேளை மனிதர் வீட்டில்தான் இருந்தார். வேறு யாரும் இருந்ததாகவும் தெரியவில்லை. நல்ல சமயம் என்று நினைத்தேன். பிள்ளை என்னை வரவேற்றார். அந்த வரவேற்பே என்னைத் தூக்கி வாரிப் போட்டது – “வாங்கோ முதலியார்வாள் வாங்கோ. நானும் உங்களைப் பார்க்க வேண்டும் என்றுதான் நினைத்தேன். நீங்களே வந்து விட்டீர்கள். நல்லதாகப் போயிற்று….”

“நானும் உங்களைப் பார்க்கவேண்டும் என்று தான் வந்தேன்”.

“சரிதான். நீங்கள் பெரிய மனிதர், படித்தவர். பணக்காரர். ஊரிலே மட்டும் மரியாதையும் உள்ளவர், நீங்கள் இப்படி நடக்க விடலாமா?… எனக்கு உள்ளது ஒரு மகன் தானய்யா.. உங்களுக்காவது பெண்கள் இரண்டுபேர் இருக்கிறார்கள்….! எனக்கு உள்ளவன் ஒரு மகன் தானே..?”

பிள்ளை கம்பீரமான குரலில் இரைந்தார். எனக்கு என்ன பதில் சொல்வதென்று தோன்றவில்லை. மிகவும் கஷ்டப்பட்டுச் சமாளித்துக்கொண்டு, “நான் உங்கள் மகனை அபகரித்துவிட வரவில்லை….” என்றேன். பிள்ளையின் குரல் உச்சஸ்தாயியை எட்டிற்று, “பின் இதற்கு என்ன அர்த்தம். அவன் வீட்டிலே தங்குவதில்லை. நான் சொன்ன சொல்லைத் தட்டாதவன் இன்று என்னையே எதிர்த்துப் பேசுகிறான். உங்களுக்கு இஷ்டமில்லையானால் வீட்டை விட்டே போய் விடுகிறேன் என்கிறான். நான் என்னய்யா செயயட்டும்? நான் அவனை எவ்வளவு பாடு பட்டு வளர்த்திருப்பேன், எவ்வளவு கஷ்டப்பட்டுப் படிக்க வைத்திருப்பேன். அவனை என்ன நிலைமைக்குக் கொண்டு வர வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்? உமக்கு ஏதாவது தெரியுமா ஐயா….? சீ! நீங்களும் ஒரு பையனைப் பெற்றிருந்தால் தெரியும். உமக்கிருப்பவை பெண்கள் தானே? உங்களுக்கு எப்படித் தெரியப் போகிறது…”

ராமகிருஷ்ண பிள்ளை அப்படி அவமதிக்கும் குரலில் பேசிக்கொண்டு போவது எனக்குப் பிடிக்க வில்லை. உள்ளுக்குள் எவ்வளவு விரோதம் இருந்தாலும் நேற்று வரை நம்மைக்கண்டால் பல்லைக்கெஞ்சிக் கொண்டிருந்த ஒரு மனிதன் இன்று இப்படிப்பேசுவ தென்றால்…? நானும் கொஞ்சம் கடினமான குரலிலேயே கூறினேன். “பிள்ளைவாள் நீங்கள் உங்கள் மகனைக் கஷ்டப்பட்டு வளர்த்ததைப் பற்றியோ படிக்க வைத்ததைப் பற்றியோ நான் குறை கூறவில்லை. நீங்கள் உங்கள் மகனை எதிர் காலத்தில் எவ்வளவு பெரிய மனிதன் வேண்டுமானாலும் ஆக்கலாம். அதையும் யாரும் தடுக்கப் போவதில்லை….” என்று சொல்லிக் கொண்டு வந்தேன். மனிதன் என்னைப்பேசவிட வில்லை. முன்னைவிட உரத்த குரலில், “யாரும் என்னைத் தடுக்க முடியாது. அது எனக்குத் தெரியும்?”

“இன்றைக்கு அவனுக்குப் பெரிய லட்சாதிபதி வீட்டிலே சம்பந்தம் வந்திருக்கிறது. அவன் செய்து கொள்ள மாட்டேன் என்கிறானே… நான் என்ன செய்யட்டும்? கல்யாணம் செய்து கொண்டால் உங்கள் பெண்ணைத்தான் செய்து கொள்வானாமே… ஏன் ஐயா இது நடக்குமா….? இது நல்லதா….நீங்களே யோசனை செய்து பாருங்கள். நாங்கள் என்ன ஜாதி. நீங்கள் என்ன ஜாதி….? அப்படி ஏதாவது செய்து விட்டால் ஊரார் என்ன சொல்வார்கள்….? ஏன் ஐயா உங்கள் நிலைமையைத் தான் யோசனை செய்து பாருமே ஒரு பெண் இப்படிப் பைத்தியக்காரத்தனமாக நடந்து விட்டால் இன்னொரு பெண்ணை எவன் ஐயா கட்டுவான்….யோசனை செய்து பாருங்களேன்….” என்று கூச்சல் போட்டார். எனக்கு ஆத்திரமாக வந்தது. ஆனால், நாம் அவசரப்பட்டு நம் குழந்தைகளின் வாழ்க்கையைக் கெடுத்துவிடக் கூடாதே என்று நினைத்து என்னை நானே அடக்கிக் கொண்டேன். இந்த மனிதனிடம் என்ன சொல்வதாலும் பயன்படாது என்ற உணர்ச்சி தலை தூக்காமல் இல்லை. ஆனால், என்மகள் என் காலைப்பிடித்துக்கொண்டு கண்ணீர்விட்டு அழுகதோற்றம் என் மனக்கண் முன் வந்தது அவளுக்காக….அவளுக்காக முடிந்த வரையிலும் மனப்பூர்வமாக முயற்சிசெய்து பார்த்து விடுவது என்று நினைத்து மௌனமாக இருந்தேன். நான் மௌனமாக இருப்பதைக்கண்டு அவர் மீண்டும். “ஏன் ஐயா பேசாமல் இருக்கிறீர்?” என்றார்.

“காரியம் இன்னும் மிஞ்சி விடவில்லை பிள்ளைவாள். அதற்குள் ஏன் ஆத்திரப்படவேண்டும்.. நாம் ஆத்திரப்படுவதால் மாத்திரம் எல்லாம் நம் இஷ்டம் போல் நடந்து விடுமா…. வெற்றிலை பாக்குப் போடுங்கள்….” என்று சொல்லிவிட்டுத் தட்டில் இருந்த வெற்றிலையை எடுத்து மடிக்க ஆரம்பித்தேன். “என் இஷ்டப்படிதான் நடக்கவேண்டும்,” என்று மேஜை மேல் ஓங்கிக் குத்தியவர் நான் நிதானமாக இருப்பதைப்பார்த்துச் சிறிது நேரம் இப்படியும் அப்படியுமாக நடந்து விட்டு மெதுவாக வந்து ‘சேரில்’ அமர்ந்தார்.

சிறிது நேரம் நாங்கள் இருவருமே மௌனமாக இருந்தோம். பிள்ளை கொஞ்சம் சாந்தி அடைந்திருந்தார். இப்பொழுது எனக்குப் பேசுவதற்கான சமயம் என்று தெரிந்து நிதானமாகப் பேச ஆரம்பித்தேன். “ரகுவும் கமலாவும் ஒருவரை ஒருவர் காதலிக்கும் விஷயம்….”

“காதலாவது கத்தரிக்காயாவது ? சிறுபிள்ளைத் தனமல்லவா அது?”

“ஆமாம். நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஆனால், அந்த விஷயம் எனக்கு நேற்றுத்தான் தெரிய வந்தது.”

“எனக்குப் பத்து நாளைக்கு முன்னாலே தெரியும்….”

“உடனே நீங்கள் எனக்குத் தெரிவித்திருக்கலாம். ஆனால், செய்யவில்லை. சரி கிடக்கட்டும். எனக்கு நேற்றுத்தான் தெரியவந்தது”

“நீங்கள் என்ன செய்தீர்?”

“நான் செய்த முதல் காரியம், இனிமேல் எனக்குத் தெரியாமல் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கவோ, கடிதத்தின் மூலம் அல்லது வேறு விதமாகத் தொடர்பு வைத்துக்கொள்ளவோ கூடாது என்று தடுத்தது தான்…”

“சரியான வேலை… என்ன இருந்தாலும் நீங்கள் பெரிய மனிதர். நீங்கள் நியாயப்படிதான் நடப்பீர்கள்”

“ஆனால்…. நான் ரகுவிடமும் கமலாவிடமும் நேரில் பேசியதிலிருந்தும்.. நிதானமாக யோசித்துப் பார்த்ததிலிருந்தும் என்னால் ஒரு முடிவுக்குத்தான் வர முடிந்தது”

”என்ன அது?”

“இனிமேல் அவர்களைப் பிரித்து வைப்பது கஷ்டம். அதனால் அவர்கள் இருவரின் வாழ்க்கையுமே கெட்டுப்போய் விடும்”

“இல்லை இல்லை அப்படி எல்லாம் ஒன்றும் நடக்காது. அதெல்லாம் முட்டாள் தனம்”

“பிள்ளைவாள். உங்களுக்கும் ஒரே மகன். என்னுடைய இரண்டு பெண்களையும் ஒரு தந்தைக்கு மக்களிடம் எவ்வளவு அன்பு இருக்குமோ அவ்வளவு அன்புடனும் தான் நேசிக்கிறேன். யோசனை செய்து பாருங்கள். அவர்களுடைய எதிர்காலம் இன்பமய மானதாய் இருக்கவேண்டும், என்பதைத் தவிர நமக்கு வேறு என்னதான் ஆசை இருக்க முடியும். நாமே நட்டு வளர்த்த பயிர் நம் கண் முன்னால். சிறிது வாட்டம் கொடுத்தாலே நம் மனம் என்ன பாடு படுகிறது? அப்படியிருக்க நம் குழந்தைகள் உள்ளம் உடைந்து வாடுவதையா நாம் பார்த்துச் சகித்துக் கொள்ளப்போகிறோம்….?”

“என்ன ஐயா…. உன் பெண்ணுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு வந்திருக்கிறாயா….”

“என் பெண்ணுக்காக மாத்திரம் அல்ல. உங்கள் மகனுக்காகவும் தான் பேசுகிறேன்…”

பிள்ளையின் ஆத்திரம் எல்லை கடந்து போயிருக்க வேண்டும். “என் மகனுக்காகப் பேச நீ யார் ஐயா…. உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ… என் மகனுக்காகப் பேசுகிறார் மகனுக்காக….”

அவர் குதித்தார். என் உடலில் தீப்பற்றிக்கொண்டது போல் தகித்தது. பிள்ளைக்குச் சரியான பதில் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். நா எழவில்லை. தாங்க முடியாத அவமானத்தோடும் துயரத்தோடும் வேறு வார்த்தை பேசாமல் எழுந்து வந்தேன். நான் செய்யக்கூடிய காரியம் அது ஓன்றாகத்தான் இருந்தது.

நிலை குலைந்துபோய் வீட்டில் வந்து உட்கார்ந்தேன். அவமானத்தால் என் உடலே குறுகிப்போய் விட்டது போல் தோன்றியது. விமலா என் எதிரில் வந்தாள். கமலாவும் என்னைப்பார்த்துக் கொண்டே சென்றாள். அவர்களுக்கு என்னை நெருங்கத் துணிவு வரவில்லை. எந்தக் காலத்திலும் என் மக்களிடம் எள்ளளவும் குன்றாது என் உள்ளத்திலே நிறைந்திருந்த அன்பு – அதுவும் கூட அப்பொழுது கசந்து போயிருந்தது. நான் என்றுமே அவர்களை வெறுப்புடன் பார்த்திருக்க மாட்டேன். ஆனால்….

ரகு என் எதிரிலே வந்து நின்றான். அவன் கையிலே பெட்டி இருந்தது. ஆத்திரத்தில் அவன் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. பார்த்தவுடன் எனக்கு அவனிடம் வெறுப்புத்தான் உண்டாயிற்று. இந்தச் சமயத்தில் இவன் ஏன் என்னிடம் வந்தான் ? கொஞ்சம் பொறுத்து வந்திருக்கக் கூடாதா என்று நினைத்தேன்? நான் அவனைப்பார்த்து விட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டேன் என்று நினைக்கிறேன். அவன் இரண்டு கைகளையும் கூப்பிக்கொண்டு நாத் தழுதழுக்கக் கூறினான். “என்னால் நீங்கள் மிகவும் அவமானப்பட்டு விட்டீர்கள்… மிகவும்…. சொல்ல முடியாத அளவு அவமானப்பட்டு விட்டீர்கள். உங்களுக்கு நான் மிகவும் கொடுமை செய்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்… என்னை மன்னித்து விடுங்கள்?”

அவன் முகத்தைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. கண்களில் கண்ணீர் துளிர்த்துக் கொண்டிருந்தது. அந்தத் தோற்றத்தை என் ஜென்ம வைரியிடம் பார்த்திருந்தால் கூட என் மனம் இளகிப் போயிருக்கும். “ரகு..நீ ஆண் மகன்….நீ கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை….” என்றேன் நான். கரகரத்த குரலில் அவன் கூறினான், “என்னைப் பொறுத்த வரையில் என் வாழ்க்கை அஸ்தமித்துப்போய் விட்டது. இனி நான் எதற்காக வாழவேண்டும் என்று புரிய வில்லை. நான் இந்த வாழ்க்கையைப் பெறக் காரணராக இருந்த என் தந்தையே அதை முடிவுக்கும் கொண்டு வரக்காரணராகி விட்டார். நான் போகி றேன். ஏதாவது காலத்தில் நீங்கள் என்னைப் பற்றிச் சிந்திக்க வேண்டி வந்தால்…. துரதிர்ஷ்ட சாலியாகிய என்னைப்பற்றி…அனுதாபத்துடன் அன்புடன் சிந்திக்கவேண்டும் என்றுதான் நான் கேட்டுக் கொள்கிறேன்…”

பக்கத்து அறையிலேயிருந்து விம்முகின்ற ஒலிகள் என் காதிலே விழுந்தன கமலா – என் மனம் இளகிப்போய் விட்டது. ஆனால், என்ன பேசுவது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன் – “ரகு… சும்மா மனசை விட்டு விடாதே அப்பா…. நாங்கள் எல்லாம் இவ்வளவு காலம் ஆகி உயிருடன் இருக்கிறபொழுது உன்னை இவ்வளவு சீக்கிரத்திலேயே உயிரைவிட்டுவிட விட்டு விடுவோமா?” என்ற பேச்சுக் கேட்டு நான் திரும்பினோன். ரகுவும் ஆச்சரியத்துடன் திரும்பிப்பார்த்தான். பாலு எப்பொழுது உள்ளே வந்தான் என்பதை நாங்கள் இருவருமே கவனிக்க வில்லை. ஸில்க் ஜிப்பாவும் ஜரிகைக்கரை வேஷ்டியும் அங்க வஸ்திரமும் குங்குமப் பொட்டுமாக அவனுடைய வழக்கமான உடைகளில் கை நிறைய வெற்றிலையை வைத்துக்கொண்டு, சாவதனமாக ஒவ்வொன்றாகச் சுண்ணாம்பைத் தடவிப்போட்டுக் கொண்டிருந்தான்.

– தொடரும்…

– திருமணம் (நாவல்), முதல் பதிப்பு: பிப்ரவரி 1953, சத்தி பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *