கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 23, 2026
பார்வையிட்டோர்: 1,945 
 
 

(1947ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்  22-24 | அத்தியாயம்  25-27

இருபத்து ஐந்தாவது அத்தியாயம்

சென்ற அத்தியாயத்தில் கூறிய விஷயங்களுக்குப் பின், சில வருஷங்களில் பல சம்பவங்கள் மிக விரைவாய் நடந்து விட்டன. நாம் எதிர்பார்ப்பது போலவே காரியங்கள் இவ்வுலகத்தில் நடப்பதில்லை. மனிதனுடைய வாழ்க்கைச் சக்கரம் சில சமயம் வேகமாகவும், சில சமயம் மெது வாகவும் ஓடுவது போல் தோன்றுகிறது. அது வேகமாய் ஓடும் பொழுது, இவ்வளவு சீக்கிரத்தில் இத்தனை காரியங்கள் நிறைவேறி விட்டனவே என்று நாம் அதிசயிக்கிறோம். அக்காரியங்கள் நமக்குப் பாதகமாக விருந்தால், இவை இத்தனை வேகமாகவா நடக்கவேண்டும் என்று நாம் ஆத்தி ரமும் அடைகின்றோம். பாலகிருஷ்ணனின் வாழ்க்கைச் சக் கரம் இப்பொழுது வேகமாய்த்தான் ஓடியது. ஆனால் அது முன்னேறிச் செல்லாமல் பின்னோக்கியா ஓடவேண்டும்!

பாலகிருஷ்ணனனுடைய கல்லூரிப் படிப்பு இடையி லேயே அகாலத்தில் நின்று விட்டது. சுந்தரஞ் செட்டியாருக்கும், மகன் ராமநாதஞ் செட்டியாருக்கும் சிறிது சிறிதாகப் புகைந்து கொண்டு வந்த மனஸ்தாபம் கடைசியில் கொழுந்து விட்டு எரிய வாரம்பித்தது. இறுதியாக அது கோர்ட்டில் வியாஜ்யம் நடக்கும் நிலைமையை அடைந்து விடும் என்று ஒருவரும் எதிர் பார்க்கவில்லை. ஆயினும் உண்மை அது தான். மகனுக்கும் தந்தைக்கும் வாத்சல்ய மான உறவு என்றும் இருந்தது கிடையாது.

“எல்லாவற்றையும் அவனே கட்டிக்கொண்டு ஆளட்டுமே. விட்டு விடுங்களேன். நமக்கு எதற்காக இந்த வம்பும் வழக்கும்? நம்மைக் காடு ‘வா! வா!’ என்கிறது. வீடு ‘போ! போ!’ என்கிறது. நமக்கோ பிள்ளையுமில்லை, குட்டியுமில்லை. இத்தனை சொத்தையும் நாம் என்ன பண்ணப் போகிறோம்? அவனுடைய பிள்ளைக்குத்தானே கொடுக்கப் போகிறோம். நாம் கொடுப்பதை அவனே கொடுத்து விட்டுப் போகிறான். கடைசிக் காலத்தில் நீங்கள் ஏன் கோர்ட்டிற்கும் வீட்டிற்குமாக அலைகிறீர்கள்?” என்று லக்ஷ்மியம்மாள் கணவனிடங் கூறினாள்.

ஆனால் அவர் கேட்கவில்லை. வியாஜ்ஜியம் என்று வந்த பிறகு அவருக்கு வைராக்கியமே தோன்றியது. “அந்தப் பயலுக்கு அத்தனை தைரியம் என்ன வந்தது? ஏன் என்னி டம் வந்து தன் பங்கைப் பிரித்துவிடச் சொல்லிக் கேட்பதற்கென்ன கொள்ளை? பார்க்கலாம் ஒரு கை! இது பிதிரார்ஜிதச் சொத்தில்லை. என் சுயார்ஜ்ஜிதச் சொத்து.என் இஷ்டப்படி செலவு செய்வதற்குச் சட்டம் இருக்கிறது. அவன் ஜெயித்து விடுவானோ? அதைத்தானே பார்க்கப் போகிறேன்!’ என்று சுந்தரஞ் செட்டியார் வீரியம் பேசினார்.

”சுயார்ஜிதச் சொத்துதான். ஆனால் என்னுடைய தாயாரின் நகைகளை விற்றுத்தானே ஆதியில் கடை வைத்தது?” என்று மார் தட்டினார் ராமனாதஞ் செட்டியார்.

ராமநாதஞ் செட்டியார் கடையிலிருந்து பணத்தை எடுத்துச் செலவழித்துச் செலவழித்துத் தன் வியாபாரத்தைப் பாழாக்கினார். சுந்தரஞ் செட்டியார் தன் சொத்துக்களை எல்லாம் விற்று, விற்றுச் செலவழித்து இறுதியில் சொத்து முழுவதையும் இழந்தார்.

இதற்கிடையில் லக்ஷ்மியம்மாள் நோய்வாய்ப்பட் டாள். அவள் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாள் என்ற நம்பிக்கையே ஒருவருக்குமில்லை. “லக்ஷ்மி போய்க்கொண்டிருக்கிறாள். வீட்டிலிருந்த லக்ஷ்மியும் போய்க்கொண்டிருக்கிறது!” என்றார் சுந்தரஞ் செட்டியார்.

வழக்கு ஹைக்கோர்ட்டுக்குச் சென்றது. அது முடியும் வரைக்குங்கூட லக்ஷ்மி உயிரோடிருக்கவில்லை. ஒரு நாள் கண்ணை மூடிவிட்டாள்!

பின் ஒருநாள் வியாஜ்ஜியம் முடிந்தது. அது முடிவ தற்குள் இங்கே சொத்தும் முடிந்து விட்டது! இருவரும் ஓட்டாண்டி யானார்கள். இனி யார் வெற்றியடைந்தால் தான் என்ன? ஒருவருக்குத் தன் வெற்றியில் சந்தோஷமோ, மற்றவருக்குத் தன் தோல்வியில் துக்கமோ ஏற்படவில்லை. தோல்வியைச் சமமாகப் பாவிக்க வேண்டுமென்கிறார்களே, அது இதுதானோ? அங்ஙனம் மனிதர்கள் பாவிக்க வேண்டும் என்பதற்காக நீதிஸ்தலங்கள் எவ்வளவு தூரம் உதவுகின்றன!

“லக்ஷ்மியும் போய்விட்டாள். வீட்டிலிருந்த லக்ஷ்மியும் சென்று விட்டது!” என்றார் சுந்தரஞ் செட்டியார்.

பாலகிருஷ்ணன் தன் படிப்பை நிறுத்தவேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டபோது, அவனுடைய மாமனார் அவனைத் தன் வீட்டிலேயே இருந்துகொண்டு படிக்குமாறு வேண்டினார். அவன் செல்வத்துடனிருந்தபோது கௌரவத்துடன் மறுத்த ஒன்றை, ஏழ்மையடைந்த பின் ஏற்றுக் கொள்வது கேவலம்என்று மதித்தான். ஆகையினால் மேலே படிப்பதில்லை என்று கண்டிப்பாய்க் கூறிவிட்டான்.

படிப்பை நிறுத்த வேண்டி ஏற்பட்டதை அவன் அவ்வளவு பெரிய துரதிர்ஷ்டமாக மதிக்கவில்லை. ஆனால் அந்த வியாஜ்ஜியத்தின் காரணமாகத் தன்னைச் சிறுவயதிலிருந்து வளர்த்து வந்த தாத்தாவையும், முக்கியமாகப் பாட்டியையும் அவன் பிரிய நேர்ந்தது. அந்த வழக்கில் தன்னுடன் சேர்வதில்தான் அவனுக்கு நன்மை இருக்கிற தென்று சொல்லி அவனுடைய மனதை ராமநாதஞ் செட்டியார் பல விதங்களிலுங் கலைத்து விட்டார். இறுதியில் வியாதியாய்க் கிடந்த லக்ஷ்மியம்மாளைப் பார்க்கவுங் கூடாதென்று தடுத்து விட்டார். பாட்டியின் கடைசிக் காலத்தில், அவளைப் பார்க்க முடியாமற் போனதுதான் பாலகிருஷ்ணனுக்குப் பெரும் வருத்தமாயிருந்தது.

லக்ஷ்மியம்மாள் கண்ணை மூடிய பொழுது, அவள் வளர்த்த பெண்ணாகிய சிவகாமி அவளுடைய பக்கத்திலேயே தானிருந்தாள். அது அவளுக்குப் பெரும் ஆறுதலாயிருந்தது. மகனுக்கும் தனக்கும் சச்சரவு ஏற்படவே, சுந்தரஞ் செட்டியார் பகவான் செட்டியார் மீது கொண்ட பகைமையைப் படிப்படியாய் மறந்தார். பேரனும் அவரை விட்டுப் பிரிந்து விட்டான். பகவான் செட்டியாருடைய உதவியும் சுந்தரஞ் செட்டியாருக்கு வேண்டியிருந்தது. தன் சொத்துக்களை அவரிடம் அடமானம் வைத்துக் கடன் வாங்கினார். பின்பு அவைகளை அவருக்கே விற்றார். இப்படி யாக அவரும் அவருடைய மனைவி சிவகாமியும் சுந்தரஞ் செட்டியார் வீட்டிற்கு வரப்போக இருந்தார்கள். இங்ஙன மிருக்கையில் தான் லக்ஷ்மி நோயுற்றாள். அவளுக்குச் செய்ய வேண்டிய தொண்டுகள் எல்லாம் ஒன்றேனுங் குறையில்லாமல் சிவகாமி செய்து வந்தாள்.

ஒருநாள் லக்ஷ்மியம்மாள் சிவகாமியைத் தன் பக்கத்தில் அழைத்தாள்.

”என்னம்மா?” என்று சிவகாமி வந்தாள்.

“இப்படி உட்கார். உன்னை வெகுநாட்களாய் ஒரு கேள்வி கேட்க வேண்டுமென்று எனக்கு ஆசை.”

“என்ன கேள்வியம்மா?”

“நீ சந்தோஷமா யிருக்கிறாயா சிவகாமி?”

இதைக் கேட்டதும் சிவகாமி திடுக்கிட்டாள். லக்ஷ்மியம்மாள் எதைக் குறிப்பிடுகின்றாள்?

“நீ இப்படி நோயாக இருக்கும்போது, நான் எப்படி யம்மா சந்தோஷமாயிருப்பேன்?” என்றாள் சிவகாமி.

“நான் அதைக் கேட்கவில்லையடி, சிவகாமி. நீ சந்தோஷமாயிருக்கிறாயா என்று கேட்கிறேன்,” என்று லக்ஷ்மியம்மாள் மீண்டும் கேட்டாள்.

“சந்தோஷத்திற் கென்னம்மா குறை? எனக்கும் பெண்ணொன்றும் ஆணொன்றும் இருக்கிறதல்லவா?” என்றாள் சிவகாமி.

“இந்தக் கலியாணம் எல்லாம் என்னடி கலியாணம்? கொட்டையும், முழக்கையும், வீட்டையும், வாசலையும், மாட்டையுங் கன்றையும் பார்த்து நான் அந்தக் காலத்தில் ஆறுதல் அடைந்தேன் என்பது நிஜந்தான். ஆனால் அதெல்லாம் ஒரு ஆறுதல்தானே! உண்மையில் அது சந்தோஷ மாகுமா? பூர்ண திருப்தியாகுமா? ‘குற்றாலம் போகிறார் கள், பாபநாசம் போகிறார்கள்’ என்று என் மனத்தை அடிக்கடி தேற்றிக் கொண்டேன். ஆனால் உண்மையில் சொல்கிறேன். உன் கலியாணத்தைப் பற்றி எனக்கு இத்தினியேனும் சந்தோஷமில்லை.”

“ஏனம்மா கடைசிக்காலத்தில் இப்படி மனமுடைந்து பேசுகிறாய்? வேண்டாம் அம்மா. நிம்மதியாய்ப் படுத்துக் கொள்,” என்றாள் சிவகாமி.

“பாவி மனுஷர் கெடுத்து விட்டாரேடி! நீ ஏழைப் பெண்ணாம்! உன்னைத் தன் பேரனுக்குக் கட்டிவிடுவேன் என்று பயந்துதானடி வியாபார விஷயமாய்ப் போனவர் அவசர, அவசரமாய் உன் கலியாணத்தை நிச்சயித்துக் கொண்டு வந்தார்? உன்னை ஏழை என்று நினைத்தார் களே, நீ இப்பொழுது ஏழையாகவா இருக்கிறாய்? தங்களைப் பணக்காரர்கள் என்று மதித்துக் கொண்டார்களே அவர்கள் பணக்காரர்களாகவே இருக்கப் போகிறார்களா? நீ வேண்டுமானாலும் பார். இந்தக் கேஸ் முடியும்போது அவர்கள் அப்பனும், மகனும் இருக்க வீடில்லாமல், குடிக்கக் கஞ்சியில்லாமல் தெருவில் நிற்கிறார்களா, இல்லையா என்று பார். அந்த நிலைமை வருவதற்குள் என்னை ஆண்டவன் கொண்டு போய்ச் சேர்த்துவிட வேண்டும் என்பது தான் என் பிரார்த்தனை” என்று ஆத்திரம் அடக்க முடியாமல் வார்த்தைகளைக் கொட்டினாள் லக்ஷ்மியம்மாள்.

”அம்மா! அம்மா!” என்று பொங்கிவந்த அழுகை யைத் தடுக்க முடியாமல் அழுதாள் சிவகாமி.

“அந்தப் பயல் பாலுவின் கதி என்னவாகுமோ என்றுதான் என் மனம் கோகிறது, உன்னை அவனுக்குக் கட்டியிருந்தால் இந்தக் குடும்பம் இந்தக் கதிக்கு வருமாடி?” என்று தேம்பித்தேம்பி லக்ஷ்மியம்மாள் அழுதாள்.

“ஏனம்மா இப்படி அழுகிறாய்? உடம்புக்கு ஆகாது. பேசாமல் தூங்கம்மா!” என்று லக்ஷ்மியம்மாளைச் சாந்தப் படுத்தி விட்டுச் சிவகாமி தனிமையை நாடிச் சென்றாள்.

எதற்காக? விம்மி, விம்மி அழுவதற்காக!

அவளுக்குக் கிடைக்கவிருந்த ஒரு பாக்கியத்தை ஏழ்மை ஐசுவரியம் என்ற வித்தியாசத்தினால் சமுகம் அவளிடமிருந்து பறித்துக் கொண்டது. அவள் அதைச் சமூகத்திலிருந்து பலாத்காரமாகப் பிடுங்கிக் கொண்டால் என்ன? லக்ஷ்மியம்மாளின் ஆத்திரந் ததும்பிய சொற்களைக் கேட்டபோது, அவளுடைய மனதில் இத்தகைய எண்ணமே உதித்தது.

பாலகிருஷ்ணன் அச்சமயம் எங்கிருந்தான்? என்ன செய்து கொண்டிருந்தான்? அவன் தன்னுடைய மனைவியுடன் எங்கோ போய்விட்டான் என்று கேள்விப்பட்டிருந்தாள். அவனை எப்படிச் சந்திப்பது? இனி எப்பொழுதாவது அவனைச் சந்திக்க முடியுமா! எங்ஙனமாவது அவனைப் பார்க்க வேண்டுமென்று அவளுடைய உள்ளம் அவாக் கொண்டது. அவனைப்பார்த்து என்ன செய்வது?

இம்மாதிரி மனோநிலையிருந்த போதுதான் எதிர்பாராத விதமாய் ஒரு நாளிரவு அவள் பாலகிருஷ்ணனைச் சந்திக்க நேர்ந்தது அவள் ஏதோ ஒரு சோலியாய் மதுரைக்குச் சென்றிருந்தாள். அவனும் அங்கு வந்திருந்தான். அது அவளுக்குத் தெரியாது. ஒரு நாளிரவு இருவ ரும் மீனாக்ஷியம்மன் கோவிலில் சந்தித்தனர். அம்மனைத் தரிசித்துவிட்டுச் சிவகாமி அம்மன் சந்நிதியிலிருந்து வந்து கொண்டிருந்தாள். பாலகிருஷ்ணன் அம்மன் சந்நிதிக்குப் போய்க் கொண்டிருந்தான். ஒருவரை ஒருவர் பார்த்ததும் இருவரும் திடுக்கிட்டனர். வெகு நாட்களாக அவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்கவில்லை. அப்பொழுது அவளுக்குச் சுமார் இருபத்திரண்டு, இருபத்துமூன்றுவயதிருக்கலாம். மின்சார விளக்குகளின் வெளிச்சத்தில், அவளுடையை முகத்தைப் பாலகிருஷ்ணன் நன்றாய்ப் பார்த்தான். இளம் பருவத்தில் அவளுடைய முகத்தில் அவன் கண்ட சோபை இன்னும் அதில் பிரகாசித்துக் கொண்டுதானிருந்தது. அவ ளுடைய உருவம் எப்பொழுதும் போல் அவனுக்கு மனோ லாகிரியை உண்டு பண்ணவே செய்தது. அவளும் அவனை உற்று நோக்கினாள். எதிர் பாராது ஏற்பட்ட சந்திப்பினால் இருவருக்கும் பிரமிப்பு ஏற்பட்டது. ணன் ஏதோ பேச வாயெடுத்தான். சிவகாமியும் ஏதோ பேச முயல்வதுபோல் தோன்றியது. ஆனால் என்ன நேர்ந் ததோ தெரியவில்லை. எதுவும் பேசாமலே இருவரும் ஒருவரைக் கடந்து ஒருவர் சென்று விட்டனர். சிவகாமியைக் கூப்பிட்டுப் பேசலாமா, திரும்பிச்சென்று அவளைப்பார்க் கலாமா என்று பாலகிருஷ்ணன் தயங்கித் தயங்கிப் பல முறை நினைத்தான். ஆனால் ஏனோ அவனுக்குத் தைரியம் வரவில்லை.

அவர்களிருவரும் பேசுவதற்கு எத்தனையோ விஷயங்களிருந்தன. எத்தனை எத்தனை விஷயங்கள்! லக்ஷ்மியம் மாள் இறந்த பின்பு, முதல் தடவையாக அப்பொழுது தான் இருவரும் சந்தித்தார்கள். அவள் அவர்களிருவருக் கும் பொதுவானவள். இருவருக்கும் மிகவும் வேண்டிய வள். இருவரையும் வளர்த்தவள். இருவர் மீதும் மிகுந்த பிரியங் கொண்டிருந்தவள். அவளைப்பற்றி அவர்கள் பேசியிருக்கலாம்.

”உன்னை அவ்வளவு பிரியமாக வளர்த்தவளாச்சே. என்ன விருந்தாலும், கடைசிக் காலத்தில் அவளை ஒரு தடவையாவது வந்து பார்க்கக் கூடாதா? பிணத்தின் முகத்திலாவது விழிக்க வேண்டாமா?” என்று அவள் கேட்டிருக்கலாம்.

“பாட்டி கடைசிக் காலத்தில் என்ன சொன்னாள்? என்னைப்பற்றி நினைத்தாளா? மிகவும் வருத்தப்பட் டாளா?” என்று அவனும் ஏதாவது பேசியிருக்கலாம். இருவருக்கும் பேசவேண்டுமென்ற விருப்பமும் இருந்தது. பின் ஏன் பேசவில்லை.

பேசவில்லை!

சிவகாமி தன்னை மிகவும் நொந்துகொண்டாள். தனக்குக் கிடைக்காமற் போன அப்பரிசைப் பலாத்கார மாகவேனும் பிடுங்கிக் கொள்ள வேண்டுமென்று அவள் நிச்சயித்திருந்தாள். ஆனால் ஒரு சந்தர்ப்பம் வாய்த்த போது, அவனுடன் பேசுவதற்குக்கூட அவளுக்கு நா எழவில்லை. அவள் தான் பேசவில்லை. அவனாவது அவளுடன் பேசியிருக்கக் கூடாதா? வேறொன்றும் பேசாவிட் டாலும் “சிவகாமி சுகமாயிருக்கிறாயா?” என்றாவது கேட் டிருக்கலாகாதா? அவ்வளவுகூடச் செய்யாத ஒருவனைப் என் மனம் பற்றி நான் ஏன் அடிக்கடி நினைக்கிறேன்? ஏன் அவனையே நாடுகிறது. ‘சீ! சீ!’ என்று தன்னைத் தானே அவள் மிகவுங் குறை கூறிக்கொண்டாள்.

பாலகிருஷ்ணனின் மனது மிகவுஞ் சங்கடப்பட்டது. ‘சிவகாமி ஏன் என்னுடன் பேசவில்லை?’ என்ற வினா மீண்டும் மீண்டும் அவனுடைய உள்ளத்தில் எழுந்தது. கடைசியில் அவன் தன்னை ஒருவாறு சமாதானப்படுத்திக் கொண்டான். அவனும் அவளுடன் பேசவில்லையல்லவா? ஆயினும் அவனுடைய பிரியம் சற்றேனும் குறைய வில்லையே. அதுபோல் அவளும் அவனுடன் பேசாவிட்டா லும், அவளுடைய பிரியம் குறைந்திராது என்று நினைத் துக் கொண்டான். இவ்வெண்ணம் அவனுக்குச் சிறிது ஆறுதல் அளித்தது.

இருபத்து ஆறாவது அத்தியாயம்

பாலகிருஷ்ணன் ஒரு சிறிய உத்தியோகத்திலிருந்தான். குடும்பச் சொத்துக்கள் முழுவதும் அழிவதற்கு முன்பே அவளுக்கு அவ்வுத்தியோகம் கிடைத்துவிட்டது. உத்தியோகம் சிறிதாயிருந்த போதிலும், அவன் ஊர் ஊராய் மாற்றப்பட்டான். இப்பொழுது ஒரு சிற்றூரி லிருந்தான். சொந்தவூரிலிருந்து வெகு தூரத்திற்கப்பால். வியாஜ்ஜியம் முடிந்து விட்டதென்றும் சொத்துக்களெல்லாம் தொலைந்துவிட்டன என்றும் அவனுக்குத் தெரிந்த போது, அதற்காக அவன் அதிக வருத்தப்படவில்லை. பாட்டி லக்ஷ்மியம்மாள் புண்ணியவதி. குடும்பத்தின் அவல நிலைமையைக் காணாமலே அவள் போய்ச் சேர்ந்து விட்டாள்! உயிருடனிருந்தவர்களில் அவன் அதிகமாய்க் கடமைப் பட்டது தாத்தா ஒருவருக்குத்தான். அவரைத் தன்னுடன் வந்து வசிக்குமாறு அனேக கடிதங்கள் எழுதினான். அவர் வரவில்லை. நேரில்சென்றும் ஓரிரு முறைகள் அழைத் தான். ஆனால் அவர் அவனுடன் செல்ல மறுத்துவிட்டார். நல்லவேளையாக அதற்கப்புறம் அவர் அதிக நாள் உயிருடனிருக்கவில்லை. சீக்கிரத்தில் சிவலோக பதவி யடைந்து விட்டார். பாலகிருஷ்ணனின் தந்தை அவருடைய இரண்டாந் தாரத்துடனும் மக்களுடனும் கஷ்ட ஜீவனம் செய்து கொண்டிருந்தார்.

பாலகிருஷ்ணனுடைய உத்தியோகத்திலிருந்து, அவனுக்குக் கிடைத்த வருமானம் சொற்பமே. ஆயினும் அதைக் கொண்டு அவன் திருப்தியாகவே வாழ்ந்து வந்தான். சிற்சில சமயங்களில் தந்தைக்குச் சிறிது உதவியும் செய்தான். சகுந்தலை அவன்மீது அளவுக்கு மிஞ்சி அன்புடனிருந்தாள். அவனுக்கு மூன்று ஆண் குழந்தைகளும் இரண்டு பெண் குழந்தைகளும் இருக்கின்றன. அவளுடைய அன்பான பார்வை, சொற்கள் செய்கைகள் இவைகளை எல்லாம் பார்க்குந்தோறும், கேட்குந்தோறும் அனுபவிக்குந்தோறும், அவனுக்கு ஆனந்தம் பொங்கும். சகுந்தலை குடிக்கிசைந்த நாயகி. இல்லறத்துக்குகந்த இல்லாள். மனைக்கேற்ற மனைவி. பாலகிருஷ்ணன் அவள்மீது மிகவும் பிரியமாய்த் தானிருந்தான். ஆயினும் என்ன? அவனுடைய இல்வாழ்க்கை பூர்த்தியானதாக அவனுக்குத். தோன்றவில்லை. அது நிறைவுள்ளதாகக் காணப்பட வில்லை. அது குறையுள்ளதாகவே தென்பட்டது!

சிவகாமியை மறந்துவிட வேண்டுமென்று அவன் முயல்கின்றான். அனால் அது முடியவில்லை. காலம் செல்லச் செல்ல, அவளைப்பற்றிய எண்ணம் சிறிது சிறிதாக மங்கி மறைந்து விடுமென்று அவன் நினைத்தான். ஆனால் அங்ங னம் நடைபெறவில்லை. ஒன்றன்பின் ஒன்றாகப் பல வருஷங்கள் கடந்துவிட்டன. ஆண்டுகள் பல கழிந்தும், அவளைப் பற்றிய நினைவு என்றும் பசுமையாகவே இருந்தது. அப்படியானால் அது காலத்திற்கும் அப்பாற்பட்டதா, என்ன? அது அவனுடைய உள்ளத்தில் மிக ஆழமாகப் பதிந்துவிட்டது. பாலகிருஷ்ணனின் மனம் சிவகாமியை நாடுகிறது. அவனையுமறியாமல் அவனுடைய மனம் அவள்பால் அடிக் கடி இழுக்கப்படுகிறது. ‘நான் இப்பொழுது இந்த வேலையைச் செய்துகொண்டிருக்கிறேன். அவள் இப்பொழுது என்ன செய்து கொண்டிருப்பாள்?என்று அடிக்கடி அவன் நினைக்கிறான். அவள் இருப்பது போலவும் நிற்பது போல வும், நடப்பது போலவும், படுப்பது போலவும், தூங்குவது போலவும், விழிப்பதுபோலவும், பேசுவது போலவும், சிரிப்பது போலவும், அழுவதுபோலவும் அவன் அடிக்கடி கற் பனை செய்து கொள்கிறான். இங்ஙனம் அவள் அவனுடைய மனக்கண் முன்பு நடமாடிக்கொண்டே இருக்கிறாள். அத் தகைய சமயங்களில் எல்லாம் அவனுக்கு ஆத்திரம் பொங் கும். சிவகாமியையும் தன்னையும் சேர்த்து வைக்காத சமு கத்தையும், உலகத்தையும் அவன் வெறுத்தான். அதற்கு ஜவாப்தாரியா யிருந்தவர்கள் மீதும் அவனுக்குக் கோபம் உண்டாயிற்று.

தந்தை சரியில்லாதிருந்து, தாயையும் இழந்து தத் தளித்த பாலகிருஷ்ணனை எடுத்து வளர்த்தவர்கள் அவடைய பாட்டியும், தாத்தாவும். அவனை இந்த நிலைக்காவது கொண்டுவந்தவர்கள் அவர்கள் அவர்களில்லா விட்டால், அவனுடைய கதி என்னவா யிருக்குமோ? அவர்கள் சொத்துச் சுகத்தைவிட்டுச் செல்லவில்லை என்பது உண்மைதான். ஆயினும் நாலுதுட்டுச் சம்பா தித்துச் சாப்பிடுவதற்கு அவர்கள் அவனுக்குத் தற்புத்தி பண்ணிவைத்து விட்டார்களல்லவா ? அதற்காக அவர் களுக்கு அவன் நன்றி செலுத்தவே செய்தான். எனினும் சிவகாமியைப் பற்றிய எண்ணம் அவனுடைய உள்ளத் தில் வந்து மோதிய போதெல்லாம், அவர்கள் மீது அவ னுக்குக் கோபமே பொங்கி எழுந்தது. பாட்டி அன்பாயி ருந்தாளாம் அன்பாய்! என்ன அன்பாயிருந்து விட்டாள்!” பேரனுக்கு என்ன சந்தோஷத்தைத் தேடிவைத்திருக்கிறாள்? “சிவகாமியை என் பேரனுக்குத்தான் கலியாணம் செய்வேன் என்று அவள் பிடிவாதஞ் செய்திருந்தால் நடந்திருக்காதோ?’ என்று அடிக்கடி அவன் நினைப்பான். அதை யொட்டியே அவனுக்கு இன்னொரு எண்ணமுந் தோன்றும். அவள் எப்படி அங்ஙனம் பிடிவாதம் செய்திருக்க முடியும்? அவன் தான் சிவகாமியை எடுத்ததற் கெல்லாம் அடித்துக் கொண்டும், வைது கொண்டு மிருந் தானே. அப்படி நாயும் பூனையும் போலிருந்த அவர்க ளுக்கு முடிபோட்டு வைத்தால், அவர்கள் சந்தோஷமாய் வாழ மாட்டார்கள் என்று அவள் நினைத்திருப்பாளல் லவா? வீணில் அவர்களிருவர் வாழ்க்கையையும் கெடுக்க வேண்டாமென்று அவள் கருதியிருப்பா ளல்லவா? மேலும் அவனுக்குத் தந்தையும், தாத்தாவும் இருந்த போது, அவன் மீது பாட்டிக்கு என்ன உரிமை இருந்தது? ஆகையினால் அவள் மீது குற்றமில்லையே. சரி, அவள் மீது குற்றமில்லை என்றே வைத்துக்கொள்வோம். அவனுடைய தாத்தா எல்லா விஷயங்களையும் அறிந்திருந்தாரல்லவா? அவர்களுடைய உள்ளப் போக்கு பின்னால் எப்படி மாறும் என்பதை அவர் உணர்ந்துதானே இருந்தார்? அவர்களி டையே உள்ள சம்பந்தம் விபரீ தமாய் வளர்ந்து விடுமோ என்று அஞ்சித்தானே சிவகாமியைச் சீக்கிரமாய் வேறி டத்தில் கலியாணம் செய்து கொடுத்துவிட்டார்? அதன் மூலம் அவர் அவனுக்கு நன்மையா செய்தார்? ஐயோ நன்மையா செய்தார்? நன்மை செய்யவில்லையே!

சரி, சகுந்தலையை அவனுக்குக் கலியாணம் பண்ணி வைத்தாரே. அதற்காக அவன் நன்றி செலுத்த வேண்டாமா? அவளை அவன் கொஞ்சவில்லையா? அவளுடன் குலாவவில்லையா? அவளை அவன் முத்தமிடவில்லையா? அவளிடம் இன்பந் துய்க்கவில்லையா? ஆம், முத்தமிட்டான். இன்பம் அனுபவித்தான். ஆனால் வேறிடத்தில் விழவேண்டிய முத்தமல்லவா அங்கு விழுந்தது? இன் னோரிடத்தில் அனுபவிக்க வேண்டிய இன்பத்தையல்லவா அவன் அங்கு அனுபவித்தான்! இம்மாதிரி ஏங்கியது அவனுடைய உள்ளம்.

ஆயினும் அவனுடைய இல்லறச் சகடம் மேடுபள்ள மில்லாத பாதையில் இப்போது நேராகத்தான் போய்க் கொண்டிருந்தது. அத்தகைய காலத்தில்தான் ஒரு நாள், தபால்காரன், “உங்களுக்கொரு புக் போஸ்டு இருக்கிறது. சார்!’ என்று அவனிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்து விட்டுச் சென்றான். அது ஒரு புக்போஸ்டுதான். அச்சாதா ரணப் புக்போஸ்டே அவனுடைய வாழ்க்கையில் ஒரு பெரிய மாறுதலை உண்டாக்குவதற்கு ஆதாரமாயிருந்த தென்றால் வியப்பாயில்லையா?

கடிதத்தைப் பிரித்தான். அது ஒரு திருமண அழைப் புப் பத்திரிக்கை! இப்பொழுது பாலகிருஷ்ணனுக்குத் திருமணம் என்றாலே வெறுப்பு ஏற்பட்டிருந்தது. இவ்வுலகத்தில் எங்குந் திருமணம் நடப்பதில்லை. இங்கு நடப்பதெல்லாம் வெறும் மணமே என்பது அவனுடைய அபிப்பிராயமாயிருந்தது. ஆகையினால் முதலில் கலியாணப் பத்திரிக்கையின்மீது அவன் அதிகக் கவனம் செலுத்தவில்லை. பின்பு அது எங்கிருந்துவந்தது என்று தெரிவதற்கு அதன் மேற்புறத்தைக் கவனித்தான். திருநெல்வேலியிலிருந்து அது வந்திருந்தது! யாருக்குக் கலியாணமாயிருக்கும் எனத் திடீரென்று அவனுடைய ஆர்வம் தூண்டப்பட்டது.

பாலகிருஷ்ணன் பத்திரிக்கையை வாசித்தான். சிவ காமியின் மகளுக்கு கலியாணமாம்! ஆம் சிவகாமியின் மகளுக்குக் கலியாணம்! என்ன விசித்திரம்? ஒருகாலத் தில் சிவகாமி மணப்பருவத்தி லிருந்தாள்! பாலகிருஷண னுக்கு அது நேற்றுத்தான் போலத் தோன்றியது. ஆனால் இன்றோ அவளுடைய மகளுக்குக் கலியாணம் நடக்கப் போகின்றது. காலம் பறக்கின்றதோ? இறக்கை கட்டிக் கொண்டு பறக்கிறது போலும் என்று பாலகிருஷ்ணன் நினைத்தான். காலதேவன் வெகு விரைவாய்ப் பிரயாணம் செய்து விட்டதுபோல் அவனுக்குத் தோன்றியது.

சிவகாமியின் மகளுக்குக் கலியாணம்! அத்தகைய சுப வேளையில் அவள் பாலகிருஷ்ணனை மறக்கவில்லை. மீனாக்ஷியம்மன் கோவிலில், அவளை அவன் சந்தித்துப் பல வருஷங்களாய் விட்டன. ஆயினும் அது அவனுக்கு இப் பொழுது ஞாபகத்திற்கு வந்தது. அன்று அவனுடன் ஒரு வார்த்தை கூடப் பேசாத சிவகாமி, அவனைத் தன் மகள் கலியாணத்திற்கு வரச் சொல்லி ஒரு அழைப்புப் பத்தி ரிக்கை அனுப்பியிருந்தாள். விலாசத்தை நோக்கினான். அது சரியாய் எழுதப்பட்டிருந்தது! அவனுக்கு அது ஆச்சரியமாயிருந்தது. அவனிருந்த ஊர் அவளுக்குத் தெரியாது. சொந்தவூருக்குப் பல நூறு மைல்களுக்கப்பால் அவனிருந்தான். அதை எப்படி அவள் விசாரித்தறிந்தாள்? விசாரிக்க முடியாதென்பதல்ல. அதைத் தெரிந்துகொள்ள அதிக சிரமப்பட்டிருக்க வேண்டும். அச்சிரமத்தை எடுத் திருந்தாள் சிவகாமி! அம்மணப் பத்திரிக்கையைப் பார்க்க, அவன் மிக்க மகிழ்ச்சி கொண்டான்.

பத்திரிக்கையில் கண்டிருந்த இன்னொரு விஷயம் அவ டைய கவன த்தை ஈர்த்தது. “காலஞ்சென்ற பகவான் செட்டியாரின் புத்திரி சௌபாக்கியவதி….” என்று அதில் குறிப்பிட்டிருந்தது. அப்படியானால்?

சிவகாமி ஓர் விதவை! ஐயோ! சிவகாமி விதவையா? அது எதையோ அவனுக்கு அறிவுறுத்துவது போல் தோன்றியது.

அது எப்பொழுது நடந்தது? சிவகாமி அது வரைக்கும் அவனுக்கு ஏது அவ்விஷயத்தைத் தெரியப்படுத்த வில்லை?

பத்திரிக்கையின் அடிப்பாகத்தைப் பாலகிருஷ் ணன் நோக்கினான். விருந்தினரை எதிர்பார்ப்பவர்களின் பெயர்களில் பாலகிருஷ்ணன் பெயரும் காணப் பட்டது!

அவனுடைய உள்ளம் துடித்தது. கட்டாயம் திருநெல்வேலிக்குப் போக வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டான்.

“சக்கு! நாளை நான் திருநெல்வேலிக்குப் புறப்படுகிறேன்,” என்றான் பாலகிருஷ்ணன்.

“எப்பொழுது? நாளைக்குக் காலை வண்டியிலா? தாராளமாய்ப் போங்கள்!” என்றாள் சகுந்தலை.

“விளையாட்டில்லை சக்கு? நிஜமாய்த்தான், நாளைக்குப் புறப்படுகிறேன்!”

”அது சரி. இன்றைக்குப் புதிதாகவா இதைச் சொல்கிறீர்கள்? இது அடிக்கடி நீங்கள் சொல்லுவது தானே?” என்று கூறிச் சிரித்துக் கொண்டே சகுந்தலா போய்விட்டாள்.

பாலகிருஷ்ணன் திருநெல்வேலிக்குப் போவதாகச் சொன்னது இது முதல் தடவையல்ல. அடிக்கடி சகுந்தலையிடம் அவன் அப்படிச் சொல்லுவது வழக்கம்.

“திருநெல்வேலியில் உங்கள் கிளையார் யாரிருக்கிறார் களென்று, நீங்கள் அங்கே ‘போகப்போறேன் போகப் போறேன்’ என்று துடிக்கிறீர்கள்?” என்று சிரித்துக் கொண்டே சகுந்தலை கேட்டாள்.

“அதென்ன சக்கு அப்படிச் சொல்லுகிறாய்? சிவகாமியும் நானும் கூட வளர்ந்தவர்களல்லவா? அவளை ஒரு தடவை பார்த்து விட்டு வர வேண்டுமென்று ஆசையா யிருக்கிறது,” என்பான் பாலகிருஷ்ணன்.

“கூட வளர்ந்தவர்களென்றால் ஒன்றாய்ப் பால் குடித்து வளர்ந்தவர்களா?” என்று சிரித்துக்கொண்டே சகுந்தலை அவனுடைய பேச்சை மழுப்பி விடுவாள்.

இந்தத் தடவையும் அந்தமாதிரிதான் அதை அவள் அலக்ஷியம் செய்தாள். ஆனால் பாலகிருஷ்ணன் மேலுங் கூறினான். “நிஜமாகவேதான், சக்கு! நாளைப் புறப்படப் போகிறேன்.”

அவன் முகத்தில் தோன்றிய உறுதியைக் கண்டதும், அவள் சற்றுத் திகைத்தாள். பின்பு விஷயம் முழுவதையும் விசாரித்து அறிந்தபோது, அவளுடைய மனதை ஒரு திகில் பற்றிக்கொண்டது. அது என்ன திகில்? ஏன் உண்டாகியது?

தன் கணவனைத் திருநெல்வேலிக்குப் போகவிடக் கூடாதென்று அவள் தீர்மானித்துக் கொண்டாள்.

“அவள் யார்? நீங்கள் யார்? அவளுடைய மகள் கலியாணத்திற்கு நீங்கள் இவ்வளவு தூரத்திலிருந்து போகவேண்டிய அவசியமில்லை” என்றாள். “நீங்கள் தான் சாதாரணமாய் ஒரு கலியாணத்திற்கும் போகிற வழக்க மில்லையே. இந்தக் கலியாணத்திற்கு மட்டும் போக வேண்டிய தேவை என்ன?”

“நான் அவசியம் போகத்தான் வேண்டும்”

“நீங்கள் போகக் கூடாது!”

“நான் போகிறேனா, இல்லையா என்று பார்.”

“அப்படியானால் நானுங் கூட வருவேன்.”

“நீ வரக் கூடாது. அவள் என் வகையில் உறவான வள். ஆகையினால் நான் மட்டுந்தான் போவேன்,” என்று பாலகிருஷ்ணன் கண்டிப்பாய்க் கூறிவிட்டான்.

அவள் அன்று முழுதும் அழுதாள். புலம்பினாள். இரவு முழுதும் கணவனைப் பலவாறு கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள். ஆயினும் அவன் கேட்கவில்லை. அவளுடைய கண்ணீரையும், இதர தடைகளையும் பொருட்படுத்தாது, மறுநாட் காலையில் புறப்பட்டு விட்டான். சகுந்தலை வாசலில் நின்று கண்ணீருங் கம்பலையுமாய் அவன் மறையும் வரைக்கும் பார்த்துக் கொண்டே நின்றாள்.

இருபத்து ஏழாவது அத்தியாயம்

ரயிலில் வழி நெடுக பாலகிருஷ்ணனுக்குச் சிவகாமி யின் சிந்தனையாகவே இருந்தது. சிவகாமியை முதன் முதல் அவன் சந்தித்தபோது, பாவம், ஓர் ஆதரவுமற்ற சின்னஞ் சிறுமியா யிருந்தாள் அவள். அதிலிருந்து கடைசியாக அவளை மீனாக்ஷியம்மன் கோவிலில் சந்தித் தது வரைக்குமுள்ள சம்பவங்கள் ஒவ்வொன்றாய் அவனுடைய மனதில் தோன்றின. சம்பவங்களெல்லாம் வரிசைக்கிரமப்படி அவனுடைய ஞாபகத்திற்கு வந்தன என்று சொல்வதற்கில்லை. ஒரு சமயம் ஒரு நிகழ்ச்சி தோன்றும். அது முடிவதற்குள்ளேயே அவனுடைய எண்ணம் இன்னொரு நிகழ்ச்சியின் மீது தாவும். இங்ஙனம் அவனுடைய எண்ணமெல்லாம் அப்பொழுது சிவகாமி யைப் பற்றியதாகவே இருந்தது. என்ன விந்தை! முதலில் அவ்வளவு தூரம் வெறுத்த ஒரு பெண்ணின் மீது இத் தகைய மாறாக்காதல் எப்படி ஏற்பட்டது? அது அவனுக்கு அதிசயமாகவே தோன்றியது. சகுந்தலையும் அழகிதான். சிவகாமியும் அழகியே. அவனை அவ்வளவு தூரம் ஆகர்ஷிப் பதற்குச் சிவகாமியின் அழகில் என்ன விசேஷ அம்சம் பொருந்தி யிருந்தது? அது அவனுக்கு விளங்கவில்லை. ஆனால் அவனுடைய மனம் அவள்பால் இழுக்கப்பட்டது மட்டும் அவனுக்குத் தெரிந்தது. சிவகாமியின் உருவம் அவனுடைய மனக்கண்முன் நின்றது. ஆஹா! சிவகாமிக்கு உவமை சிவகாமியேதான்! அவளுடைய கண்களில்தான் எவ்வளவு பிரகாசம்! அவளுடைய முகத்தில் எத்தனை சோபை! அவளுடைய முகத்தில் மட்டுமா அம்மோகனம் இருந்தது? அவளுடைய அங்கங்கள் முழுவதிலும் அது பரவி இருந்தது! அவள் மோகனாங்கி! அத்தகைய மோக னாங்கியைத்தான் அவன் சிறிது நேரத்தில் சந்திக்கப் போகிறான்.

அவள் இப்பொழுது விதவையாயிருந்தாள். அது அவ னுக்கு இன்பம் அளித்ததா, துன்பம் அளித்ததா? ஒரு விதத்தில் அவளுக்கு விடுதலை கிடைத்து விட்டது போல் அவனுக்குத் தோன்றிற்று.ஆனால் சமுகம் அவளுக்கு பல இன்னல்களை விளைவிக்கும். ஒரு சுகம் மட்டுமல்ல, பல பாவம்! சுகங்களை இனி அவள் அனுபவிக்க முடியாது. அவனுடைய சிவகாமிக்கு ஆறுதல் அளிக்க வேண்டியது இங்ஙனம் நினைத்தபோது, தன் அவனுடைய கடமை. முழு உருவத்தையும் வெளியில் காட்ட வெட்கப்பட்டது போல், ஒரு எண்ணம் இலேசாக அவனுடைய உள்ளக் கோடியில் தலைகாட்டியது. அது என்ன எண்ணம்? அதற் காகத்தான் அவன் திருநெல்வேலிக்குப் போய்க் கொண்டிருக்கிறானா?

இத்தகைய எண்ணங்களுடன் தாம் அவன் சிவகாமி யின் வீட்டை அடைந்தான். அங்கே அவளைப் பார்ப்பதற் குள், அவனுடைய உள்ளம் படாத பாடு பட்டுவிட்டது.

மேளம் முழங்கிக் கொண்டிருந்தது! அன்றுதான் முகூர்த்தம்! வீடு முழுவதிலும் ஆரவாரமா யிருந்தது. புரோகிதர் என்னென்னமோ சாமான்கள் வேண்டு மென்று கேட்டுக் கொண்டிருந்தார். ஆடவரும் பெண்டிரும் இங்குமங்கும் ஓட்டமும் நடையுமாய்த் திரிந்து கொண்டிருந்தனர். ஒரு சாமானைத் தேடி ஒன்பதுக்கு மேற்பட்டவர்கள் போவார்கள். ஒருவன் அச்சாமானை எடுத்துக் கொண்டுபோய்க் கொடுத்து விடுவான். மற்றவர்களெல்லாம் அதைத் தேடு தேடென்று தேடிக் கொண்டிருப்பார்கள். பல கலியாணங்களுக்குச் சென். இம்மாதிரி விஷயங்களில் அனுபவம் வாய்ந்தவர்கள் ஒருமுறை தேடி அச்சாமனைக் காணாவிட்டால், பேசா மல் ஒரு தனி இடத்திற்குச் சென்று நிம்மதியாய்த் தூங்க ஆரம்பித்து விடுவார்கள்! யாராவது அதை எடுத் துக் கொண்டுபோய்க் கொடுத்திருப்பான் என்று அவர் களுக்கு நிச்சயம். இதில் முன்பின் அனுபவ மில்லாதவர் கள், எல்லா இடங்களிலும் அதைத் தேடிக்கொண்டும், கண்டவர்களை எல்லாம் ”அது எங்கே? அது எங்கே?” என்று கேட்டுக் கொண்டும், அவர்களைத் திட்டிக்கொண்டு மிருப்பார்கள். இங்ஙனம் வேலை கொஞ்சமாக நடந்தா லும்,ஆர்ப்பாட்டம் மட்டும் பலமாக இருக்கும். அவ்வார வாரம் மிக்க கும்பலில்தான் பாலகிருஷ்ணனும் தான் நாடி வந்த பொக்கிஷத்தைத் தேடிக் கொண்டிருந்தான்!

இதென்ன விந்தை? அதோ பாலகிருஷ்ணனை நோக்கி வருவது யார்?

பாலகிருஷ்ண னை நோக்கி வருவது யாரா? ஏன் அவனுக்கு அடையாளம் தெரியவில்லையா?

அவள் தான் சிவகாமி!

சிவகாமியா?

ஆம். சிவகாமிதான்!

பாலகிருஷ்ணன் பார்க்கவந்த மோகனாங்கி!

ஏன், அவளிடத்தில் மோகனமில்லையா ?

அவனை நோக்கி வந்து கொண்டிருந்த அந்த உருவத்தைப் பார்த்ததும் பாலகிருஷ்ணன் பிரமித்தான்!

சிவகாமி பக்கத்தில் நெருங்கிவிட்டாள். “ஏன் இப்படி துரும்பாய் இளைத்து விட்டீர்கள்? அடையாளமே தெரியவில்லையே!” என்று சிவகாமி வியப்புடன் கேட்டாள்.

பாலகிருஷ்ணனுக்குத் திருமணப் பத்திரிக்கை அனுப்பிய போது, சிவகாமி அவனுடைய பழைய மதன காம ரூபத்தையே நினைத்துக் கொண்டிருந்தாள். அதைத்தான் அவள் பார்க்கப்போவதாக அவள் எதிர்பார்த்துக் கொண் டிருந்தாள். வாழ்க்கைப் புயலில் அடிபட்டு, வாடி வதங் கிய அவனுடைய உருவத்தைக் கண்டவுடன், அவளுக்கும், முதலில் ஆச்சரியமே ஏற்பட்டது.

சிவகாமியின் வார்த்தைகளைக் கேட்ட பின்புதான் பாலகிருஷ்ணனுக்கு அவனுடைய சொந்த நிலைமை விளங்கியது.

மனிதர்களின் உடல் என்றும் இளமையுடன், என் றும் பதினாறாய் இருக்குமா? உடல் மூப்புக்கு அடிமைப்பட்டது தானே?

முதலில் ஏற்பட்ட பிரமிப்பு நீங்கியவுடன், இருவரும் சகஜமாய்ப் பழக வாரம்பித்தார்கள். என்று மில்லாத அன்புடன் இருவரும் க்ஷேமலாபங்கள் விசாரித்தனர். என்று மில்லாத அமைதியுடனும், விகார மின்மையுடனும் வளர்ந்து கொண்டே பேச்சு ஒன்றன்பின் ஒன்றாக போயிற்று. அவர்கள் பேசவேண்டிய விஷயங்கள் எத்தனையோ இருந்தன.

“சகுந்தலையை ஏன் கூட்டிக்கொண்டு வரவில்லை? உங்கள் இருவரையு மல்லவா தாரை வார்க்கச் சொல் லலா மென்றிருந்தேன். சரி போனால் போகிறது. கலி யாணம் முடிந்ததும் ஊருக்குப் போய்க் குடும்பத்தைக் கூட்டிக்கொண்டு இங்கே வந்துவிடுங்கள். இன்னும் ஏன் கண்காணாத தேசத்தில் போய்,யாரோ எவரோ போலிருக் கிறீர்கள்? சொத்தில்லையே என்ற கவலை உங்களுக்கு வேண்டாம். என் சொத்தெல்லாம் இனி உங்கள் சொத் தென்றே நினைத்துக் கொள்ளுங்கள். அதில் தவறு ஒன்று மில்லை. உங்கள் சொத்தெல்லாம் உண்மையில் என்னுடைய சொத்துடன் தானே ஐக்கிய மடைந்திருக்கிறது,” என்றாள் சிவகாமி. பாலகிருஷ்ணனுடன், அவள் முதன் முதல் பன்மையில் பேசியது இச்சந்திப்பில்தான்.

“ஐக்யமா?”

“பின் இல்லையா?”

“அது சரிதான். இனி நாம் எங்கிருந்தால் என்ன?”

அவர்கள் பேசிக் கொண்டிருந்த இடத்திற்கு அப் பொழுது ஒரு பெரிய மனிதர் வந்தார். “ஏண்டாப்பா பாலா, ஏனம்மா, சிவகாமி, க்ஷேமலாபங்களை எல்லாம் அப்புறம் பேசிக்கொள்ளக் கூடாதா? அங்கே மாங்கல்ய தாரணத்திற்கு ஏற்பாடாகிக் கொண்டிருக்கிறது.வாருங் கள் மணவறைக்கு!” என்று அவர் கத்திவிட்டுச் சென்றார்.

“ஆமாம் முகூர்த்த நேரமாய்விட்டது. வாருங்கள் மணவறைக்குப் போகலாம்!” என்று சிவகாமி எழுந்திருந்தாள்.

இருவரும் மண வறைக்குச் சென்றனர் ! வாத்தியம் முழங்கிக் கொண்டிருந்தது. எல்லாச் சடங்குகளும் முடிந்தபின், சிறிது நேரத்தில் மாப்பிள்ளை பெண்ணின் கழுத்தில் திருமங்கிலியத்தைக் கட்டினான்.

சிவகாமி பாலகிருஷ்ணனைப் பார்த்தாள். அவனும் அவளைப் பார்த்தான். ஓரே நேரத்தில் இருவருடைய இதழ்களிலும் ஒரு அழகிய புன்முறுவல் பூத்தது!

கெட்டி மேளம் கொட்டியது ! திருமணம் நிறைவேறியது!

சிவகாமியின் மகளுக்கு அப்பொழுது நடந்தது திருமணமோ, என்னவோ? ஆனால் சிவகாமிக்கும் பாலகிருஷ்ணனுக்கும் பல வருஷங்களுக்கப்புறம், அப்பொழுது நிறைவேறியது திருமணமே ஆகும். அதில் சந்தேகமே இல்லை! உடலுக்கு மூப்புண்டு; மாறுதலுண்டு. ஆனால் உள்ளத்திற்கு ஏது மூப்பும் மாறுதலும்? அவர்களுடைய உள்ளங்கள் அன்றுபோல் இன்றும் இளமையுடன் தாமிருந்தன. அவர்களுடைய அன்பும் அன்றுபோல் இன்றும் புதுமை மாறாமல் தானிருந்தது!

அவர்களுடைய உள்ளங்களுக்கிடையே திருமணம் நிறைவேறிவிட்டது! உள்ளங்கள் ஒன்றாய்க் கலந்தன!

அடங்காத் தாகம் அடங்கியது! தீராத மோகம் தீர்ந்தது!

உள்ளத்தையும், உடலையும் எரித்து நாசஞ்செய்யும் காமத் தீ அணைந்தது!

உள்ளத்தையும் உடலையும் ஒருங்கே ஒளிபெறச் செய்யும் காதல் தீபம் சுடர் விட்டது!

கலியாணச்சடங்குகள் எல்லாம் முடிந்தபின், பாலகிருஷ்ணன் ஊருக்குச் சென்றான். சகுந்தலை அவனை மலர்ந்த முகத்துடன் வரவேற்றாள். என்னென்ன வெல்லாமோ நினைத்து, அவள் ஏங்கிக் கொண்டிருந்தாள். கணவனை திரும்பக் கண்டவுடன், அவள் கட்டிலடங்காக் களிப்பெய்தினாள்.

“என்ன?” என்றாள் சகுந்தலை.

“திருமணம் நிறைவேறி விட்டது!” என்றான் பால கிருஷ்ணன்.

முன்பு சிவகாமியைப்பற்றி நினைத்த போதெல்லாம், பாலகிருஷ்ணனின் உள்ளத்தில் குழப்பமும், கலவரமுமே தோன்றின. ஆனால் இப்பொழுதோ, அவளைப்பற்றி நினைக்குந் தோறும், நினைக்குந் தோறும் அவனுடைய மனதில் மாசற்ற மகிழ்ச்சி உண்டாகிறது. அவனுடைய வாழ்க்கையை அவள் வளம் படுத்துகிறாள். அவளுடைய நினைவு அவனுடைய சிந்தனைக்குத் தெளிவும், சொல்லுக்கு இனிமையும், செயலுக்கு இங்கிதமும் கொடுக்கின்றது.

அவர்களுக்குள் திருமணம் நிறைவேறி விட்டது!

(முற்றும்)

– திருமணம் (நாவல்), முதற் பதிப்பு: செப்டம்பர் 1947, அருணோதய நிலையம், வேலூர்.

சு.குருசாமி சு.குருசாமி (Trichi. S.V. Guruswamy Sarma, திருச்சிராபுரம் சு.வை.குருசாமி சர்மா) என்பவர், தமிழில் முதல் சில புதினங்களில் ஒன்றான "பிரேம கலாவதீயம்" (1893) எழுதிய ஒரு முக்கியமான தமிழ் புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் 1940களில் "வாடா விளக்கு" போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும், பல கதைகளைத் தொகுத்து வெளியிட்டதோடு, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவியவர். மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை, பண்டித எஸ்.எம்.நடேச சாஸ்திரி, பி.ஆர்.ராஜமையர், சு.வை.குருசாமி சர்மா, அ.மாதவையா ஆகியோர் முதற் காலக்கட்டத் தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *