கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 21, 2026
பார்வையிட்டோர்: 1,596 
 
 

(1947ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்  19-21 | அத்தியாயம்  22-24 | அத்தியாயம்  25-27

இருபத்திரண்டாவது அத்தியாயம்

“அந்தக் கலியாணம் நின்று விட்டதா மல்லவா?'” என்றாள் செல்லம்மாள்.

“எந்தக் கலியாணம்?” என்று உமையொருபாகஞ் செட்டியார் கேட்டார்.

“அதுதான், நம்ம சகுந்தலைக்குப் பேசி, அப்புறம் மாறினார்களே, அவர்கள் வீட்டுக் கலியாணம்.”

“நின்றுவிட்டதா? ஏன்? உனக்கு யார் சொன்னது?” என்று உமையொருபாகஞ் செட்டியார் உற்சாகத்துடன் கேட்க வாரம்பித்தார்.

“ஊர் ழுழுதுந்தான் பேசிக் கொள்கிறார்கள். உங்களுக்குத் தெரியாதா?”

“தெரியாதே!”

“நின்றுவிட்டதாம்!”

“ஏன் நின்றுவிட்டதாம்? பெண்ணுக்குப் பையன் பிடிக்கவில்லையா ?”

“அதொன்று மில்லையாம். அந்தப் பெண்ணுக்குச் சின்னம்மா ஒருத்தி இருக்காளாம். தன் அண்ணன் மகனுக்கே அவளைக் கட்ட வேண்டுமென்று பிடிவாதமாய் அவள் கட்டிக் கொண்டாளாம்”

“அந்தப் பெண்ணும் கலியாணம் பண்ணிக் கொண்டதல்லவா?”

“உம்”

”உன் பெண்ணைப்போல் பிடிவாதக்காரக் கழுதை எங்கும் கிடையாதம்மா! கலியாணம் பண்ணினால் அவனைப் பண்ணுவாளாம். இல்லையானால் கன்னியா யிருப்பாளா மல்லவா? அதைத்தானே பார்க்கப் போகிறேன்!”

“இப்பொழுது அந்தக் கலியாணந்தான் நின்று விட்டதே. நீங்கள் மறுபடியும் பேசி முடிவு செய்துவிட்டு வாருங்களேன்? இவளும் பிடிவாதமாயிருக்கிறாளல்லவா?”

”இனி நான் அந்த மனுஷன் முகத்தில் முழிக்கப் போவதுமில்லை. அந்த வீட்டு வாசலை மிதிக்கப் போவது மில்லை. மனுஷன் எப்பப் பேச்சு மாறினானோ, அவனோடு நமக்கென்ன சம்பந்தம்?”

“இப்படி நீங்களும் பிடிவாதமாயிருந்தால், அந்தப் பெண்ணின் கதி என்னாவது?”

“என் தங்கை மகனின் ஜாதகந்தான் நன்றாய்ப் பிடித் திருக்கிறதே. முகூர்த்தம் நிச்சயிக்க வேண்டியதுதான்.”

”சகுந்தலைக்குச் சம்மதமில்லையே!”

”சம்மதமில்லையா? அதைத்தானே பார்க்கப் போகிறேன்!”

“இப்படி வீம்பு பண்ணாதீர்கள்.”

“இனி நான் அந்த மனுஷன் வீட்டிற்குப்போக மாட் டேன். அது மட்டும் நிச்சயம் ” என்று சொல்லி வெளியே போய்விட்டார் உமையொருபாகஞ் செட்டியார்.

”என்னடி உன்னோடு பெருந் தொல்லையா யிருக்கிறது! நாங்கள் எல்லாம் இப்படித்தான கலியாணம் பண்ணிக் கொண்டோம்? உன் அத்தை மகனுக்கு என்னடி குறை? அவனுந்தான் படிச்சிருக்கான்; பணமிருக்கிறது. பேசாமல் அவனைக் கலியாணம் பண்ணிக் கொள்ளடி. ஏண்டீ இப் படி எங்களை வாதை பண்ணுகிறாய்?”என்று செல்லம்மாள் தன் மகளை நோக்கிக் கூறினாள்.

சகுந்தலை மெளனமா யிருந்தாள்.

“இப்ப அவனுக்குக் கலியாணமாகி யிருந்தால், என்னடி செய்வாய்?”

சகுந்தலை மீண்டும் மௌனஞ் சாதித்தாள்.

“மாடு மாதிரி பெண்ணை வைத்துக்கொண்டு கவலை யற்றிருக்கிறாளே என்று ஊராரெல்லாம் என்னை ஏசுகிறார்களடி. உனக்கென்ன, கவலையற்றிருக்கிறாய்!”

“ஊராரெல்லாம் ஏசினால், அவர்களைப் போய்க் கடி. என்னை ஏன் தொல்லை பண்ணுகிறாய்?”

“அடியே, நீ நினைத்தமாதிரி உன்னை விடமுடியாது. உன்னை உன் அத்தை மகனுக்கே கட்டுகிறோமா, இல்லையா என்று பார்” என்று கோபத்துடன் செல்லம்மாள் கூறினாள்.

“கட்டின மறுநாளே நீங்கள் என் பிணத்தை வந்து பார்க்கிறீர்களா, இல்லையா என்று அதையும்பார்,” என்று வேகத்துடன் சகுந்தலை கூறிவிட்டு ஒரு அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டாள். அவளுக்கு அழுகை பொங்கிக்கொண்டுவந்தது. அழுது அழுது அவளு டைய ஆத்திரமெல்லாம் அமர்ந்தபோது, அவளுடைய மனோநிலை சிறிது மாறியது. ‘என்ன பண்ணித் தொலை வது? யாருக்கு வேண்டுமானாலும் கல்யாணம் பண்ணிக் கொடுக்கட்டும்’ என்றுதான் அவளுடைய மனப்பான்மை இருந்தது. அவளுடைய பிடிவாதம் எல்லாம் அவளுடைய கண்ணீரில் கரையலாயிற்று

நிற்க, உமையொருபாகஞ் செட்டியார் வெளிப் பார் வைக்குத்தான் பிடிவாதமாகவும், கண்டிப்பாகவும் பேசி னாரே ஒழிய, உண்மையில் அவருடைய மனம் அவ்வளவு கடினமாக இல்லை. அவரும் ‘என்ன பண்ணித் தொலைவது? சின்னக் கழுதை பிடிவாதம் செய்யும்பொழுது, நாம் ணங்கித்தான் போகவேண்டும்’ என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டார். அவர் தன் கடைக்குச் சென்ற போது, அங்கே பல நண்பர்கள் கூடியிருந்தார்கள்.

“சுந்தரஞ் செட்டியாருடைய பேரன் கல்யாண நின்று விட்டதாமல்லவா?” என்று அவர்களைப் பார்த்து உமையொருபாகஞ் செட்டியார் கேட்டார்.

“உங்களை வயிறெரியப் பண்ணியதற்குப் பலன் இல்லாமலா போய்விடும்?”

“இப்பொழுது அவருடைய அபிப்பிராயம் எப்படி இருக்கிறதென்று தெரியவில்லையே” என்றார் உமையொரு வாகஞ் செட்டியார்.

“அதென்ன அப்படிக் கேட்கிறீர்கள்? அங்கே சம்பங் தம் செய்து கொள்ள உங்களுக்கு விருப்ப மிருக்கிறதா?”

“பெண் பெற்றவனுக்கு மானம் ஏது? மரியாதை ஏது ஐயா?” என்றார் உமையொருபாகஞ் செட்டியார்.

”அது நிஜந்தான்” என்று அங்கிருந்தவர்களும் அவருடைய அபிப்பிராயத்தை ஆமோதித்தார்கள்.

பின்பு, வந்தவர்கள் போனவர்களை எல்லாம் உமை யொருபாகஞ் செட்டியார் விசாரிக்க வாரம்பித்தார். சுந்தரஞ் செட்டி யாரும் தன்னுடைய சம்பந்தத்தை விரும்புகிறாரென்றும், அவ்விதம் சம்பந்தம் செய்து கொள்வதை, அவர் பேச்சு மாறியதற்கு ஒரு பிராயச் சித்தமாகக் கருதுகிறாரென்றும் அவருக்குத் தெரியவந்தது. ஒருநாள் திடீரென்று உமையொருபாகஞ் செட்டியார் வெற்றிபுரத்துக்குப் போவதாகச் சொன்னபோது, சகுந் தலை மிகவும் ஆச்சரியப்பட்டாள். அவர் திரும்பி வந்து முகூர்த்தம் நிச்சயமாய் விட்டது என்று சொல்லியபோது அவள் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை.

பாலகிருஷ்ணனுக்கும் சகுந்தலைக்கும் ஒரு நன் முகூர்த்தத்தில் திருமணம் நிறைவேறியது!

பேரன் பெண்டாட்டியைப் பார்த்து லக்ஷ்மியம்மாள் உள்ளம் பூரித்தாள். ருக்மணியைக் காட்டிலும் சகுந்தலை எல்லாவிதங்களிலுமே மேம்பட்டவள் என்று அவளுக்குத் தோன்றியது.

நல்லவேளையாகச் சிவகாமிக்கு ஜுரம் சௌகரியமாகி அவளுடைய உடம்புந் தேறிவிட்டது. ஒருநாள் பகவான் செட்டியார் அவளைப்பார்த்து, ‘பாலகிருஷ்ணனுக்குக் கலி யாணம் ஆகிவிட்டதாம் அல்லவா? உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.

”உங்கள் பெண் இல்லாவிட்டால், அவனுக்கு வேறு பெண்ணே கிடைக்காதா?  அவன் கலியாணமாகாமல் பிரம்மச்சாரியாகவே இருப்பான் என்றா நினைத்தீர்கள்?” என்று சிவகாமி கூறினாள்.

“நமக்கு ஏன் அழைப்பு அனுப்பவில்லை?”

“நீங்கள் செய்த வேலைக்கு அவர்கள் நமக்கு அழைப்பு அனுப்பிவிட்டுத்தான் மறு ஜோலி பார்ப்பார்கள்!”

“மாப்பிள்ளை நல்ல பையன்தான். நம்ம ருக்மணிக்குத் தான் அந்தப் பிராப்தம் இல்லை” என்றார் பகவான் செட்டியார்.

பாலகிருஷ்ணனும் சகுந்தலையும் ஆடிக்கழைக்கப் பட்டு மதுரைக்குச் சென்றார்கள். செல்லம்மாள் மாப்பிள் ளைக்குப் பல விதங்களிலும் உபசாரம் செய்தாள். மாப் பிள்ளையும் பெண்ணும் மிகக் குதூகலமாய்க் காலத்தைப் போக்கினார்கள்.

செல்லம்மாளைக் கல்யாணம் விசாரிக்க வந்தவர்க. ளெல்லாம் “உன்மகள் கெட்டிக்காரி யம்மா! பிடிவாதமாய் அவனையே கலியாணம் பண்ணுவேன் என்று சொல்லிக் கடைசியில் அப்பிடிவாதத்தைக் கொண்டு செலுத்தியே விட்டாளா! கெட்டிக்காரிதான்” என்றார்கள்.

அதைக் கேட்கச் செல்லம்மாளுக்கு மிகவும் சந்தோ ஷமாயிருந்தது. அவர்கள் அப்படிச் சொல்லும் போதெல் லாம், அவள் புன்முறுவல் செய்வாள்.

“சில பெண்களைப் போல், உன் மகள் முட்டாள் தன மான பிடிவாதம் செய்யாமல் நல்ல பொருளுக்குத்தான் அம்மா, ஆசைப் பட்டிருக்கிறாள்! மாப்பிள்ளை நல்ல பையன் தான்” என்பார்கள்.

“போகட்டும். ஈஸ்வரன் கிருபையில் அதுகள் நன்றா யிருக்க வேண்டும். அவ்வளவுதான். வேறென்ன?’ என் பாள் செல்லம்மாள்.

இம்மா திரி சம்பாஷணையைக் கேட்கும் போதெல்லாம் சகுந்தலையை ஒரு கேள்வி கேட்கவேண்டும் என்று பால கிருஷ்ணனுக்கு ஆசை தோன்றும். ஆனால் கேட்பதற்கு வெட்கப்படடுக் கொண்டு பேசாமலிருந்து விடுவான். புது மணத் தம்பதிகளின் வெட்கம், கூச்சம் இதெல்லாம் சற்று மறைந்தபோது, ஒரு நாள் பாலகிருஷ்ணன் தான் கேட்க நினைத்த கேள்வியைக் கேட்டே விட்டான்.

“”ஏன் சகுந்தலா, நீ என்னையே கலியாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்று பிடிவாதம் செய்தாயாமே. நான் உனக்கு என்ன அபராதம் செய்தேன்? நீ ஏன் என்னை இப்படித் தண்டிக்க வேண்டும் என்று தீர்மானித்தாய்?”

இதைக் கேட்டதும் சகுந்தலை கோபத்துடன் அவனை விழுங்கி விடுபவள் போல் சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள்.பின்பு திடீரென்று சிரித்துக்கொண்டு, “அந்த வருஷ விழாக் கொண்டாட்டத்தில் அத்தனைபேர் இருக்க என்னையே ஏன் அப்படி வெறிக்க, வெறிக்கப் பார்த்தீர் கள்? அந்தக் குற்றத்திற்காகத் தான் தண்டிக்க வேண்டு மென்று தீர்மானித்தேன்!” என்று சொன்னாள்.

அன்று இரவுச் சாப்பாடு முடிந்தவுடன் மாமனார் மருமகனைப் பார்த்து, ‘என்ன மாப்பிள்ளை, காலேஜ் திறந் தவுடன் சேர வேண்டியதுதானே?” என்று கேட்டார்.

“ஆமாம், அதில் என்ன சந்தேகம்?”

“எந்தக் கல்லூரி ? அமெரிக்கன் கல்லூரியிலா, மதுரைக் கல்லூரியிலா?”

‘எனக்குத் திருநெல்வேலிக் கல்லூரிக்குப் போகத் தான் விருப்பமாயிருக்கிறது’ என்றான் பாலகிருஷ்ணன்.

மாமனார் வருந்தி அழைக்க வேண்டும் என்று நினைத் துக்கொண்டு மாப்பிள்ளை ‘பிகு’ பண்ணுவதாக எண்ணி, “ஏன் நம்ம வீட்டிலேயே இருந்துகொண்டு இங்கேயே படிக்கலாம். நீங்கள் அப்படி ஒன்றும் வித்தியாசமாய் நினைத்துக் கொள்ள வேண்டாம். நம்ம ஊரில் காலேஜ் இருக்கும் பொழுது, நீங்கள் ஏன் இன்னொரு ஊருக்குப் போவது? அதெல்லாம் போகப் படாது இங்கே இருந்து படிப்பதுதான் பலவிதங்களில் உங்களுக்கும் சௌகரியம் எங்களுக்கும் சௌகரியம். ஹாஸ்டல் சாட்பாடு உங்க ளுடைய உடம்புக்கு ஒத்துக்கொள்ளாது. மண்டையிடித் தால், காய்ச்சலடித்தால் உங்களை யார் பார்த்துக் கொள் வார்கள் அங்கே? அதெல்லாம் கூடாது. இங்கேதான் வந்து விடுங்கள்,” என்று உமையொருபாகஞ் செட்டியார் கூறினார்.

“இப்பொழுதே அதற்கென்ன அவசரம்? பார்க்கலாம். இன்னும் நாளிருக்கிறதல்லவா?” என்றான் பாலகிருஷ்ணன்.

இருபத்து மூன்றாவது அத்தியாயம்

பாலகிருஷ்ணனுடைய இல்லற வாழ்க்கை இன்பகர மாய்ச் சென்று கொண்டிருந்தது. ஆடிக்குச் சென்ற தம்பதிகள் இருவரும் மதுரையிலிருந்து திரும்பி வந்த தினம். அன்று சாயந்திரம் பாலகிருஷ்ணன் கடையிலிருந்து திரும்பியபோது, தன் மனைவிக்காகப் பூவும், பலகாரங்களும் வாங்கி வந்தான். அங்ஙனம் வந்தபோது, அவன் முன்பு சிவகாமிக்காகப் பூவும் பலகாரங்களும் வாங்கி வரும் வழக்கம் அவனுக்கு ஞாபகம் வந்தது. அவைகளைக் கொண்டு போய்ப் பாட்டியின் கையில் கொடுத்தான், பெரியமனுஷியாகப் பாட்டி வீட்டிலிருக்கும் பொழுது சகுந்தலையின் கையில் கொடுக்கக் கூடாதென்பது அவனுடைய எண்ணம். அன்றுதான் முதன்முதல் அவன் தன் மனைவிக்காகப் பூவும், பலகாரங்களும் வாங்கி வந்திருந்தான்.

“நானும் இங்கே பூவாங்கி யிருக்கிறேனே, நீ வேறு ஏன் வாங்கி வந்தாய்?” என்று பாட்டி கேட்டாள்.

“எனக்குத் தெரியாதே!” என்றான் பாலகிருஷ்ணன். லக்ஷ்மியம்மாள் அவைகளைச் சகுந்தலையிடங் கொடுத் தாள். அவள் அப் பலகாரங்களில் சிலவற்றை எடுத்து ஒரு தாம்பாளத்தில் பாட்டிக்குக் கொண்டுவந்து கொடுத் தாள்.

”எனக்கென்ன பலகாரம்? நீ சாப்பிடு,” என்று சொன்னாள் லக்ஷ்மியம்மாள்.

சகுந்தலையும் அப்பலகாரங்களைச் சாப்பிடவில்லை. கணவன் வாங்கிக் கொண்டுவந்த பூவையும் அவள் தலையில் வைத்துக்கொள்ளவில்லை. இதைப் பாலகிருஷ்ணன் கவனித்தான்.

காரணம் என்னவா யிருக்கலாம்? வெகு நேரம் யோசித்தும், அவனுக்கு அதன் மர்மம் விளங்கவில்லை. அவளுடைய கையில் கொடுக்காததனால், அவளு க கோபமாயிருக்கலாமோ என்று யோசித்தான்.

அன்றிரவு சாப்பாடு முடிந்தவுடன் வெற்றிலை பாக்குத் தட்டை எடுத்துக்கொண்டு சகுந்தலை மாடிக்குச் சென்றாள். பாலகிருஷ்ணன் படுக்கையில் கோபமாய் உட்கார்ந்திருந்தான்.

“நான் வாங்கிவந்த பூவை நீ ஏன் வைத்துக்கொள்ள வில்லை?”

“நான் வைத்துக்கொள்ள இஷ்டப்படவில்லை!”

“இஷ்டமில்லையா?”

“ஆம்.”

“ஏன்,நான் தொட்ட பூ உனக்கு ஆகாதோ?”

“நீங்கள் தொட்ட பூ எனக்கு ஆகும்.”

“அப்புறம்?”

“நான் வைத்துக் கொள்ள இஷ்டப்படவில்லை.”

பாலகிருஷ்ணனுக்கு என்ன சொல்வதென்று தெரிய வில்லை.மிகுந்த கோபத்துடன் அவளைப் பார்த்தான்.

“ஐயோ! உங்கள் கோபத்தைப் பார்த்தால் பயம்மா யிருக்கிறது! இப்படி எல்லாம் என்னைப் பார்க்காதீர் கள்!” என்று சொல்லிச் சிரித்துக்கொண்டே தன் மடியி லிருந்து பூவை எடுத்து, “நான் வைத்துக்கொள்ள இஷ்டப் படவில்லை. நீங்களே அதை எனக்குச் சூட்டவேண்டுமென் பது என் ஆசை!” என்று அவன் கையில் கொடுத்தாள்.

பாலகிருஷ்ணனுக்குச் சந்தோஷங் கரைகொள்ள வில்லை!

“அதுதான் சரி. நான் வாங்கிவந்த பலகாரங்களை நீ ஏன் தொட்டுக்கூட பார்க்கவில்லை?”

“எனக்கு சாப்பிட இஷ்டமில்லை”

“சாப்பிட இஷ்டமில்லையா?”

“ஆம்”

“ஆமாம் உனக்குச் சாப்பிட இஷ்டமில்லை.ஆனால் நான் ஊட்ட வேண்டுமென்பது உன்னுடைய இஷ்டம்! அப்படித்தானே?” என்று சொல்லிக்கொண்டே அவ ளுடைய மடியைப் பற்றி இழுத்தான். அதிலிருந்து அவன் வாங்கிக் கொண்டுவந்த பலகாரப் பொட்டலம் கீழே விழுந்தது!

இங்ஙனம் அவர்களுடைய இல்லறச் சகடம் பூச் சூட்டலும், ஜிலேபி ஊட்டலுமாக இனிது ஓடிக்கொண் டிருந்தது!

வீட்டு வேலைகளிலும் லக்ஷ்மிப்பாட்டிக்குச் சகுந்தலை மிகுந்த உதவியாயிருந்தாள். படித்த பெண்ணாயிருந்த போதிலும், எல்லா வேலைகளையும் சந்தோஷத்துடனும் உற்சாகத்துடனும் செய்தாள். பாட்டியுடன் சென்று தண்ணீர் எடுத்து வந்தாள. பாட்டிக்குச் சமையலில் ஒத் தாசைபுரிந்தாள். இதை எல்லாம் பாரத்தபோது, பாட் டிக்கு மிகுந்த சந்தோஷமா யிருந்தது. ஆனால் அத்துடன் அவளுக்கு ஒரு ஏக்கமும் இல்லாமல் இல்லை. ‘ருக்மணியை கலியாணம் பண்ணியிருந்தால், சிவகாமி வரப்போக இருப் பாளே. அந்த முட்டாள் மனுஷனுடைய முட்டாள் செய் கையால் இப்படிப் போக்குவரவு அற்றுப் போய் விட் டதே. மனுஷன் பேசாமலாவது இருந்து தொலைத்தான? உறவைக் கெடுத்து விட்டானே!” என்று அவள் அடிக்கடி வருந்தினாள்.

பாலகிருஷ்ணனுக்குத் தன் மனைவி இம்மாதிரிக் கடி னமான வேலைகளை எல்லாம் செய்தது பிடிக்கவில்லை. அவளுடைய மென்மையான கரங்கள் தண்ணீர்க் கயிற் றைப் பற்றி இழுக்கும்போது, சிவந்து கன்றிப் போகுமே என்று நினைத்தான். புகைமண்டிய சமையலறையிலிருக் கும் பொழுது, அவளுடைய கண்களில் கண்ணீர் மல்குமே என்று அவனுக்கு வருத்தம் ஏற்பட்டது.

ஒரு நாள் பாட்டியிடம், “ஏன் பாட்டி, எத்தனை நாளைக்குத்தான், இந்த வேலைகளை எல்லாம் நீ செய்து கொண்டிருப்பாய்? உனக்குக் கஷ்டமாக இல்லையா?” என்று பாலகிருஷ்ணன் கேட்டான்.

“இப்பொழுதுதான் உன் பெண்டாட்டி உதவிக்கு வந்திருக்கிறாளல்லவா?” என்று லக்ஷ்மிப் பாட்டி சிரித் துக் கொண்டே சொன்னாள்.

“இதற்கெல்லாம் ஒரு ஆள் வைத்துவிட்டால் என்ன பாட்டி?”

“அதை நீ விண்டு விளம்ப வேண்டு மென்றுதானே உன் வாயைக் கிள றினேன். ஏண்டாப்பா, இத்தனை நாளும் உனக்கு ஏன் இந்தக் கருணை பிறக்க வில்லை?” என்று பாட்டி சிரித்துக் கொண்டே கேட்டாள்.

பாலகிருஷ்ணனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

அன்று சுந்தரஞ் செட்டியார் சாப்பிட்டுக் கொண் டிருக்கையில், லக்ஷ்மியம்மாள் புன்சிரிப்புடன், ” வீட்டு வேலைகளுக்கெல்லாம். ஒரு ஆள் வைக்க வேண்டுமாம். உங்கள் பேரனுக்கு என் மேல் கருணை பிறந்திருக்கிறது!” என்று சொன்னாள். பக்கத்திலேயே சாப்பிட்டுக் கொண் டிருந்த பாலகிருஷ்ணனுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது!

மறுநாள் காலையில் சகுந்தலை குடத்தை எடுத்துக் கொண்டு, தண்ணீர் எடுத்து வரக் கிளம்பியபோது, “வேண்டாம் அம்மா! நீ தண்ணீர் கொண்டு வருவது உன் புருஷனுக்கு இடுப்பு வலிக்கிறதாம்! நான் போகிறேன்.” என்று பாட்டி சிரித்துக் கொண்டே சொன்னாள்.

“அவர் என்னிடம் அதைச் சொல்லியிருக்கவேண்டும். நான் நன்றாய்ப் பதில் சொல்லி யிருப்பேன்” என்றாள் சகுந்தலை.

“என்னடியம்மா பதில் சொல்லியிருப்பாய்? படித்த, புத்திசாலிப் பெண்ணாச்சே. எங்கே, சொல் பார்க்கலாம்,” என்றாள் லக்ஷ்மியம்மாள்.

”அவர் படித்துப் படித்துக் கண்கள் பூத்துப் போகின்றன. ஒளி மழுங்கிக் கெட்டுவிடும். எழுதி எழுதி, உள்ளங்கை தேய்ந்து, விரல்கள் சூம்பி விடுகின்றன. இதெற்கெல்லாம் முதலாவது ஒரு ஆள் வைத்துக் கொள்ளுமாறு சொல்லி யிருப்பேன்!” என்றாள்.

”சபாஷ்! எனக்கு இந்த யோசனை தெரியவில்லை யேடீ, படித்த பெண்ணென்றால். படித்த பெண் தான்!” என்று பேத்தியை மெச்சினாள் லக்ஷ்மிப்பாட்டி.

அவளுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. பாலகிருஷ் ணன் வந்தவுடன், “நாளைக்கு ஒரு ஆளை வரச்சொல்லி யிருக்கிறேண்டாப்பா” என்றாள்.

பாலகிருஷ்ணன் சந்தோஷத்துடன், “அதுதான் நல்லது பாட்டி! நான் சொன்னால் கேலி பண்ணுகிறாயே?” என்றான்.

“ஆமாண்டா பாலு ! இப்படி வைத்த கண் மாறாமல் படித்துக்கொண்டே இருந்தால், உன் கண்கள் என்ன கதி ஆவது? எழுதி, எழுதி விரல்களும் சூம்பிப் போகு மல்லவா? ஆகையினால் அந்த வேலைகளை எல்லாம் கவ னித்துக் கொள்வதற்காக நாளைக்கு ஒரு ஆளை வரச் சொல்லி யிருக்கிறேன்”, என்று லக்ஷ்மியம்மாள் புன்முறுவலுடன் கூறினாள்.

என்ன பதில் சொல்வதென்று பாலகிருஷ்ணனுக்குத் தோன்றவில்லை. இது சகுந்தலையினுடைய குறும்புதான் என்பது அவனுக்கு உடனே தெரிந்து விட்டது. என்ன செய்யலாம்? அவளைக் கன்னத்தில் நன்றாய் அறைய வேண்டும் போல் அவனுக்குத் தோன்றியது!

கல்லூரிக்குப் போவதற்கு இன்னும் சில தினங்களே இருந்தன. திருநெல்வேலி ஹிந்துக் கல்லூரியிலிருந்து பாலகிருஷ்ணனுக்குப் பிரவேச உத்திரவு வந்திருந்தது. அதைக் கையில் வைத்து அவன் பார்த்துக் கொண்டிருந்த பொழுது, அங்கு சகுந்தலை வந்தாள்.

“அதென்ன பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?”

பாலகிருஷ்ணன் அக்கார்டை அவளிடம் நீட்டினான்.

அதைப் பார்த்துவிட்டு, “அப்படியானால் நீங்கள் திருநெல்வேலிக்குத்தான் போகிறீர்களா?” என்று கேட்டாள்.

“ஆம்”

“மதுரையில் எங்கள் வீட்டில் இருந்துகொண்டு படிக்கலாம். அங்குதான் போகவேண்டும்.”

“உங்கள் வீட்டில் இருந்து கொள்ளலாம். ஆனால் படிக்க முடியாது.”

“ஏன் படிக்கமுடியாது?”

“தேவியார் அல்லும் பகலும் அறுபது நாழிகையும் அங்கே திருக்கோயில் கொண்டருளி யிருக்கும்போது, அடியேன் கவனம் படிப்பில் செல்லுமா?”

சகுந்தலை புன்முறுவல் செய்தாள். “என்னை நீங்கள் இப்படியெல்லாம் ஏமாற்ற முடியாது. நீங்கள் திருநெல் வேலிக்குப் போகுங் காரணம் எனக்குத் தெரியும்.”

“என்ன?”

”அந்த வருடாந்திர விழாக் கூட்டத்தில் என்னை அந்தப்பார்வை பார்த்தீர்களே. அதில் எவ்வளவோ விஷயம் அடங்கி யிருக்கிறதென்று நினைத்து, நான் உங்களையே கலியாணம் பண்ணுவதென்று பிடிவாதமா யிருந்தேனே. நீங்கள் மட்டும் அந்தத் திருநெல்வேலிப் பெண்ணைக் கலியாணம் பண்ணிக்கொள்ள ஏன் சம்மதித்தீர்கள்? என்னைக்காட்டிலும் அவள் மீதுதானே உங்களுக்கு அதிக விருப்பம்?”

“அப்படி என்று யார் சொன்னது?”

“அப்படியானால்?”

“அப்படியானால் என்ன?”

“அப்படியானால், உங்கள் தாத்தாவும் பாட்டியுந் தான் பிடிவாதமாய் அதைத் தீர்மானம் செய்தார்களா? உங்களுக்கு அதில் பரிபூர்ணமான இஷ்ட மில்லையா?”

“இல்லை.”

இவ்வார்த்தை சகுந்தலைக்கு மிகவும் ஆறுதல் அளித் தது. இன்னொரு பெண் கிடைக்காததனால் தான் அவன் தன்னைக் கலியாணம் செய்துகொண்டான் என்ற எண் ணம் அவளுடைய மனதை வெகுநாட்களாய் வருத்திக் கொண்டே இருந்தது. அங்ஙனம் இல்லை என்று தெரிந்து கொண்டதில் அவள் மிகவும் சந்தோஷம் அடைந்தாள். அவளுடைய மனதிலிருந்து ஒரு பெரும் பாரம் நீங்கியது. போல் தோன்றியது.

பாலகிருஷ்ணன் உண்மையைத்தான் சொன்னான். ஆனால் முழு உண்மையையும் சொல்லி விட்டானா?

அவன் மறுநாள் திருநெல்வேலிக்குப் புறப்பட இருந்தான். அன்றிரவு லக்ஷ்மியம்மாள் மாடிக்கு வந்தாள் “ஏண்டா பாலு, திருநெல்வேலிக்குத் தானே போகம் போகிறாய்?”

அவன் அங்குப் போவதில் அவளுக்கு ஒரு ஆறுதலிருந்தது.

“ஆம்.” என்றான் பாலகிருஷ்ணன்.

”அங்கே சிவகாமியைப் பார்ப்பாயல்லவா?”

“அவளை ஏன் பாட்டி பார்க்கப் போகிறேன்?”

ருக்மணியைத் தனக்குக் கலியாணம் செய்து கொடுக்காததனால், அவனுக்குச் சிவகாமி மீது வருத்தமிருக்குமோ என்று லக்ஷ்மிப் பாட்டி நினைத்தாள்.

“அப்படியானால் நீ அவளைப் பார்க்கவே மாட்டாயா?” அவளுடைய கண்களில் கண்ணீர் மல்கியது.

“கல்லூரிக்கும் அவளுடைய வீட்டிற்கும் வெகு தூரம், பாட்டி”

“இருந்தாலும் ஒரே ஊர் தானப்பா.” அவளுடைய வார்த்தைகள் கெஞ்சுங் குரலில் இருந்தன.

“எதற்காகப் பாட்டி கேட்கிறாய்?”

“அவள் சுகமாயிருக்கிறாளா, சௌக்கியமா யிருக் கிறாளா என்று பார்த்து எனக்கு ஒரு கடிதம் போட மாட்டாயா?” அவளுடைய கண்களினின்றும் கண்ணீர்த் துளிகள் உதிர்ந்தன.

சிறிது நேரம் மௌனம்.

“கடிதங்கள்கூடப் போடவேண்டாம், பாலு. கடிதம் போட்டால் அவருக்குத் தெரிந்து விடுமல்லவா? நீ எப் பொழுது மறுபடியும் இங்கு வருவாய்?”

“சுமார் மூன்று மாதங்களாகும்”

“பரவாயில்லை. நீ வரும்பொழுது அவளைப் பார்த்து விட்டு வருகிறாயா?”

பாட்டியின் குரலும், அவள் பேசிய முறையும், பால கிருஷ்ணனுடைய உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. திருநெல்வேலிக்குப் படிக்கச் செல்வதென்று அவன் தீர் மானித்ததன் ஆதிக் காரணம் வேறுதான். ஆயினும் அப் பொழுது அவனுக்கு முன்னால் நின்ற பிள்ளையில்லாத. அப் பெண்ஜன்மத்தைத் திருப்தி செய்வதற்காகவேனும், எத்தகைய தடைகளையும் மீறிக்கொண்டு அவன் திரு நெல்வேலிக்குப் போகலாம் போலத் தோன்றியது.

“மறந்துவிடாதே,தம்பி!” என்று பிள்ளையில்லாத அப்பெண் ஜன்மத்தின் குரல் மீண்டுங் கெஞ்சியது!

இருபத்து நான்காவது அத்தியாயம்

பாலகிருஷ்ணனுடைய அறையில் அவனுடைய கல்லூரி நண்பர்கள் பலர் கூடியிருந்தனர். அவன் திருநெல் வேலிக் கல்லூரிக்கு வந்து ஏறக் குறைய ஒருமாதமாகப் போகிறது. அவனுக்குக் கல்லூரியிலும், ஹாஸ்டலிலும் பல நண்பர்கள் சேர்ந்து விட்டனர்.

“நாங்கள் இன்று சினிமாவுக்குப் போகிறோம். நேரமாய் விட்டது. சீக்கிரம் புறப்படும்” என்றார்கள் நண்பர்கள்.

“என்ன படம்?” என்று பாலகிருஷ்ணன் கேட்டான்.

“ஹிந்திப் படம் ஒன்று புதிதாய் வந்திருக்கிறது”

ஹிந்திப்படம் என்றால் அவனுக்கு வெகு பிரியம். அவனுக்குச் சிறிது ஹிந்தி தெரியும். ஆகையினால் தான் அவனைக் கூட்டிச் செல்வதற்கு நண்பர்கள் விசேஷமாய் வந்திருந்தார்கள்.

“நியூ தியேட்டர்ஸ் படம்,” என்றான் ஒரு நண்பன்.

கேட்கவே வேண்டியதில்லை. மிக அழகாக விருக்கும்.

“சைகால் நடிக்கிறான்!” என்றான் இன்னொருவன்.

சைகாலுடைய பாட்டில் பாலகிருஷ்ணனுக்கு அபார மோகமுண்டு. அவசியம் அவன் போகத்தான் வேண்டும். ஆனால் அவன் வேறொரு இடத்திற்கு அன்று போவதாகத் தீர்மானம் செய்திருந்தான். ஆகையினால் சினிமாவுக்கு வரமுடியாதென்று பாலகிருஷ்ணன் கூறினான். நண்பர்கள் மிகவும் வற்புறுத்தினர். ஆனால் பாலகிருஷ்ணனும் பிடிவாதமாய் மறுத்து விட்டான். நண்பர்கள் போய் விட்டனர்.

பாலகிருஷ்ணன் திருநெல்வேலிக்கு வந்து ஏறக் குறைய ஒரு மாதமாகிறது. அவன் மனதிலிருந்த ஆசையை அதுவரை அவனால் பூர்த்தி செய்து கொள்வதற்கு முடிய வில்லை. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் அன்று சிவகா மியைப் பார்க்க வேண்டுமென்று அவன் தீர்மானித்துக் கொள்வான். ஆனால் ஏனோ அதுவரைக்கும் அது நிறை வேறவில்லை. அந்த ஞாயிற்றுக்கிழமை கட்டாயம் அவ ளைப் பார்க்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தான. ஆனால் அவளை எங்ஙனம் பார்ப்பது? அவளுடைய வீட் டிற்கு அவன் போகலாமா? எப்படிப் போவது? அவர்களுடைய குடும்பங்களுக் கிடையில் பேச்சு வார்த்தை இல்லையே. அப்படி இருக்கும்பொழுது, அவன் போவது சரியா? பின் அவளை எங்ஙனம் பார்க்கமுடியும்? அதற்கு என்ன வழி? இவ்விதம் சிந்தித்துக்கொண்டே பாலகிருஷ் ணன் தன் அறையிலிருந்து புறப்பட்டான். சிந்தனையில் ஒரு வழியும் தோன்றா விட்டாலும், சிற்சில சமயங்களில் மனிதன் காரியத்திலிறங்குகிறான். அம்மாதிரிதான் அன்று பாலகிருஷ்ணனும் சிவகாமியின் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தான். ஏன்? அவளைச் சந்திப்பதற்கு ஒரு வழியும் புலப்படாத போதிலும், அவன் ஏன் அக் காரியத் தில் முனைந்தான்? ஏதாவது ஒரு வழி தானே தோன்றும் என்று அவன் நினைத்தானோ!

அவன் அத்தெருவை அணுகி விட்டான். அவனுடைய கால்கள் வேகமாய் நடந்தன. அவனுடைய நெஞ்சு ஏன் ‘திக் திக்’ என்று அடித்துக் கொள்கிறது? சிவகாமியின் வீடு சமீபத்தில் வந்து விட்டது.

இதென்ன அதிசயம்? அது நிஜந்தானா, அல்லது அவனுக்கு எற்பட்ட ஒரு பிரமைதானா?

சிவகாமி வாசலில் நின்று கொண்டிருந்தாள்! அதே பழைய மோகன உருவம்!

பாலகிருஷ்ணன் அவளைப் பார்த்தான். அரை குறைப் பார்வைதான். நன்றாய்க் கூடப் பார்க்கவில்லை. அவளுடைய கண்களை அவனால் சந்திக்க முடியவில்லை. அதற்குள் அவன் அவளுடைய வீட்டைக் கடந்து விட்டான். ஏனோ அத்தனை அவசரம்? மிக வேகமாய் நடந்து போய் விட்டான்!

பாலகிருஷ்ணனுக்கு அன்று வெகு திருப்தி. ஒரு மா த மாய் அவன் கொண்டிருந்த ஆசை அன்று பூர்த்தியாகி விட்டது. சிவகாமியை அவன் பார்த்து விட்டான்!

அதென்ன ஆச்சரியம்? அவன் வரும் சமயம் பார்த்து, அவள் வாசலில் எப்படி நின்றுகொண்டிருக்க நேர்ந்தது? தற்செயலாய் நின்று கொண்டிருந்தாளா… அல்லது … அல்லது அவனை எதிர்பார்த்தே நின்று கொண் டிருந்திருப்பாளோ? ஒவ்வொரு நாளும் இங்ஙனம் அவள் எதிர்பார்த்து, ஏமாற்றம் அடைந்திருப்பாளோ? இவ் வெண்ணம் அவனுக்கு இன்பம் ஊட்டியது. அவ்வின்பத் திலும் ஒரு துன்பம் தலை நீட்டியது. திருப்தியிலும் ஒரு அதிருப்தி! அவளுடைய கண்களை அவனால் சந்திக்க முடியவில்லை! அவன் அவசரமாய் வந்துவிட்டான். சிவகாமி அவனைக் கவனித்தாளோ, இல்லையோ?

இச்சம்பவம் நடந்த மறுநாள் இரவு பகவான் செட் டியார் மாடியில் படுக்கையறையில் உட்கார்ந்து கொண்டு வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தார். சிவகாமி அவருக் குப் பக்கத்தில் உட்கார்ந்து வெற்றிலை மடித்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

“பாலகிருஷ்ணன் இங்கேதான் படிக்கிறானாம். உனக்குத் தெரியுமா?” என்று பகவான் செட்டியார் கேட்டார்.

சிவகாமி சிறிதேனும் உணர்ச்சியற்ற முறையில் “உம்” என்றாள். அதிலிருந்து அவளுக்கு அவ்விஷயம் தெரியுமா, தெரியாதா என்பதைப் பகவான் செட்டியா ரால் அறிந்துகொள்ள முடியவில்லை.

“இங்கேதான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறானாம்” என்று மீண்டும் பகவான் செட்டியார் கூறினார்.

”உம்,” என்றாள் சிவகாமி.

அத்துடன் அப்பேச்சு நின்றது. இவ்விஷயத்தைச் சிவகாமி வெகு நாட்களுக்கு முன்பே அறிந்திருந்தாள். அயல் வீட்டுக்காரி ஒருத்தி ஒரு நாள் அவளிடம் பேசிக் கொண்டிருந்தபோது “உன் பெரியம்மா பேரன்….. என்று ஆரம்பித்தாள்.

சிவகாமி ஆச்சரியத்துடன் விழித்தாள்.

“அவன் தாண்டியம்மா உங்கள் ருக்மணிக்குக் கூட உன் வீட்டுக்காரர் அவனை முதலாவது பேசினாராமல்லவா” என்று அவள் கேட்டாள்.

“ஆமாம், அவனுக்கென்ன?” என்று பதற்றத்துடன் சிவகாமி கேட்டாள்.

“ஒன்றுமில்லை. அவன் இங்கேதான் காலேஜில் படித் துக் கொண்டிருக்கிறானாம். உனக்குத் தெரியுமா?”

”ஓஹோ! எனக்குத் தெரியாதே!” என்றாள் சிவகாமி. பாலகிருஷ்ணனுக்கும் ருக்மணிக்கும் நடக்க விருந்த நின்று விவாகம் திடீரென்று எதிர்பாராத விதமாய் போனது முதலில் சிவகாமிக்கு எமாற்றத்தையும் கோபத் தையுமே உண்டு பண்ணியது. ஆரம்பத்தில் உண்டான உணர்ச்சி வேகத்தில், அவள் தன்னுடைய ஏமாற்றத்தை யும், கோபத்தையும் வெளியில் காட்டிக் கொள்வதற்குக் கூட அஞ்சவில்லை. ருக்மணியின் கலியாணத்தில் அவள் கலந்து கொள்ளாமலிருந்ததும், மேலும் அவள் செய்த பிடிவாதங்களும் அவ்வேகத்தில் எழுந்த செயல்களே ஆகும். ஆனால் சிறிதுகாலம் ஆனபின்பு, அவ்விஷயத்தை அவள் சாந்தமாய்ச் சிந்தித்துப் பார்த்தபோது, அக் காரி யம் அத்தகைய முடிவுக்கு வந்ததே நலம் என்று அவளுக் குத்தோன்றியது. அத்தகைய மனோ நிலையில் இருந்த போது தான், பாலகிருஷ்ணன் திருநெல்வேலியில் படித் துக் கொண்டிருக்கிறான் என்ற விஷயத்தை அவள் அறிந் தாள். அது அவளுடைய மனதில் எத்தகைய உணர்ச் சியை உண்டுபண்ணியது?

நிற்க, ஞாயிற்றுக்கிழமைதோறும் மாலை நேரத்தில் சிவகாமியின் வீட்டு வழியாகச் செல்வதையும், அவளைப் பார்ப்பதையும் ஒரு முக்கியமான சடங்காக வைத்திருந் தான் பாலகிருஷ்ணன். அவளும் நாளடைவில் ஞாயிற்றுக்கிழமை மாலைகளில் அவனை எதிர்பார்க்க வாரம்பித்தாள்.

இம்மாதிரி ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை அவள் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்த போதுதான், அவ்வெதிர்பாராத சம்பவம் நடந்தது. எப்பொழுதும் வழக்கம் போல் தெருவழியே போகாமல் பாலகிருஷ்ணன் அன்று அவளை நோக்கியே நடந்து சென்றான். சிவகாமி யின் உள்ளம் படபடத்தது ஐயய்யோ! இதென்ன விப ரீதம்! என்று நினைத்துக்கொண்டு, எழுந்து உள்ளே போக. யத்தனித்து, வீட்டிற்குள் அடி எடுத்து வைத்தாள். அதற் குள் பாலகிருஷ்ணன் அங்கு சென்று, ”சிவகாமி!'” என்று அழைத்தான். அவள் ஏன்?” என்று பதில் சொல்ல வில்லை. ஆனால் கதவை ஆதாரமாகப் பிடித்துக் கொண்டு பேசாமல் நின்றாள்.

“நான் நாளை ஊருக்குப் போகிறேன். பாட்டி உன் னைப்பார்த்துவரச் சொன்னாள்”

சிவகாமி ஒன்றும் பதில் சொல்லவில்லை.

“சௌக்கியமாய்த்தானே இருக்கிறாய்? பாட்டி உன்னை விசாரித்துத் தெரிந்துகொண்டு வரச் சொன்னாள்.”

இவ்வார்த்தைகளைக் கேட்டவுடன் சிவகாமியின் கண் களிலிருந்து ‘பொல பொல வென்று கண்ணீர் உதிர்ந்தது. அக்கண்ணீருடன், ”சௌக்கியமாய்த்தானிருக்கிறேன்.. சௌக்கியத்திற் கென்ன குறை?” என்றாள்.

“சந்தோஷமா யிருக்கிறா யல்லவா?”

இது யாருடைய கேள்வி? பாட்டியினுடைய கேள்வியா? அல்லது பாலகிருஷ்ணனுடைய சொந்தக் கேள்வியா?

“உம்,” என்றாள் சிவகாமி.

“நான் நாளைக்குப் புறப்படுகிறேன். பாட்டிக்கு ஏதாவது சமாச்சாரம் சொல்லி விடுகிறாயா?”

“சமாச்சாரம் என்ன இருக்கிறது? அம்மா சுகமாயிருக்கிறதல்லவா?”

“சுகமாய்த்தானிருக்கிறாள்.”

இதற்குப் பிறகு சிறிது நேரம் இருவரும் மௌனமா யிருந்தார்கள். கடைசியில் “சரி, நான் போய்வருகிறேன்” என்று பாலகிருஷ்ணன் புறப்பட்டான். சற்றுத் தூரத்தில் பகவான் செட்டியார் வீட்டைநோக்கி வந்து கொண்டிருந்தார்! பாலகிருஷ்ணன்! அவரைப் பாராதவன் போல் போய் விட்டான்.

சிவகாமியின் முகம் மாறுபட்டிருப்பதைப் பகவான் செட்டியார் கவனித்தார். சிவகாமி அவருக்குச் சாதம் பரிமாறிக் கொண்டிருந்தாள். வெகு நேரம் வரைக்கும் இருவரும் ஒன்றும் பேசவில்லை. அது உண்மையில் வெகுநேரமா யில்லாத போதிலும், வெகு நேரம்போல் தோன்றியது. அந்நிலைமை சகிக்க முடியாததாயிருந்தது.

கடைசியில் பகவான் செட்டியார், “இங்கு பாலகிருஷ்ணன் வந்திருந்தானா?” என்று கேட்டார்.

“ஆம்”

“எதற்காக?”

“எதற்காக வருவான்?”

“எதற்காக வந்தான் என்று கேட்டேன்.”

“அம்மா ஒரு சேதி சொல்லி விட்டிருந்தது. அதைச் சொல்வதற்காக வந்தான்.'”

“என்ன சேதி?”

“அம்மா சுகமாயிருக்கிறதாம்”

“அப்புறம்?”

”அப்புறம் என்ன?”

“நீ என்னசேதி சொல்லிவிட்டாய் ?”

“நான் சௌக்கியமா யிருக்கிறேன் என்று சொல்லி விட்டேன்.”

“அப்புறம்?”

“அவ்வளவுதான். அப்புறம் ஒன்றுமில்லை.”

மறுநாள் காலை பாலகிருஷ்ணன் ஊருக்குப் புறப் பட்டான். அவன் தன்னுடைய மனைவி சகுந்தலாவை விட்டுப் பிரிந்து ஏறக் குறைய மூன்று மாதங்களாய். விட்டன. ரயிலில் சென்று கொண்டிருக்கும் போது, அவளுடைய நினைவு அவனுக்கு வந்தது. முன்னெப்போதையும் விட ஏனோ, அப்பொழுது அவனுக்கு அஞ் ஞாபகம் மிகத் தீவிரமாகத் தோன்றிற்று. அவளுடைய அழகிய உருவம், அவளுடைய காதல் வார்த்தைகள், அவள் அவன்மீது கொண்ட ஆசை எல்லாம் அவனுடைய மனத்திரையில் தோன்றின. அவளைப் பார்க்க வேண்டும். என்ற அவா அவனுக்கு உண்டாயிற்று. அவளைப்பற்றி நினைக்க, நினைக்க அவ்வாசை மிகவும் அதிகரித்தது. ரயில் சீக்கிரமாய் ஊர்போய்ச் சேர்ந்து விடாதா என்று விரும்பினான். அவனுடைய உடம்பு முழுவதிலும் ஒருவித வேகம் பரவியது. அவனுக்கு வேறு ஒரு விஷயத்திலும் உள்ளம் செல்லவில்லை. வண்டி ஒரு நிலையத்தில் நின்றது. அங்கு சுமார் இருபது நிமி ஷங்கள் வண்டி நிற்கும். பிரயாணிகள் சாப்பாட்டை முடித்துக் கொள்ளவேண்டிய இடம் அது. ஆனால் பால கிருஷ்ணனுக்குச் சாப்பாட்டில் பிரியம் செல்லவில்லை. ஏதோ சில பலகாரங்களை மட்டும் சாப்பிட்டுக்கொண்டு வண்டியிலேயே உட்கார்ந்து விட்டான்.

கடைசியில் வண்டி அவனுடைய ஊரையடைந்த போது, மாலையாகிவிட்டது. ரயிலிலிருந்து இறங்கியதும். குதிரை வண்டி ஒன்றை அமர்த்திக்கொண்டு பாலகிருஷ் ணன் விரைவில் வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தான். பாட் டியும் சகுந்தலையும் அவனை முக மலர்ச்சியுடன் வரவேற் றனர். பாலகிருஷ்ணன் சகுந்தலையைப் பார்த்தான். அவ ளுடைய முகத்தில் ஒரு புனிதச் சோபையும், ஓர் புதிய அழகையும் கண்டான். அவனுடைய உள்ளத்தின் வேக மும், உடலின் பரபரம்பும் அதிகரித்தன. பாட்டி கேட்ட இரண்டொரு கேள்விகளுக்கு அவசரமாய்ப் பதிலளித்து விட்டு, மாடியிலுள்ள தன்னுடைய அறைக்குப் போய் விட்டான்.

அறையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்துகொண்டு, ஏன் இன்னும் சகுந்தலை வரக்கானோம்?’ என்று துடி யாய்த் துடித்துக் கொண்டிருந்தான் பாலகிருஷ்ணன். கடைசியில் அவள் வந்து சேர்ந்தபோது, அவளை ஆவலுடன் இறுகக் கட்டிப் பிடித்து, முத்தத்துக்கு மேல் முத்த மாய்ப் பல முத்தங்களிட்டான்.

“வந்தவுடன் வருவதற்கென்னவாம்? ஏன் இவ்வளவு நேரம்? எவ்வளவு நேரமாய் உனக்குக் காத்திருப்பது?” என்று கேட்டான் பாலகிருஷ்ணன்.

“போனவுடன் வருவதற் கென்னவாம்? ஏன் இத்தனை மாதங்கள்? எத்தனை மாதங்களாய் உங்களுக்காகக் காத்திருப்பது?” என்று சகுந்தலை கேட்டாள்!

இங்ஙனம் அவர்கள் குதூகலமா யிருக்கும் பொழுது லக்ஷ்மிப்பாட்டி அங்கு வந்து சேர்ந்தாள்.

“என்னடா பாலு, வந்ததும் வராததுமாய் மாடியில் ஏறிக்கொண்டாய்? சிவகாமியைப் பார்த்தாயா, தம்பி?” என்று லக்ஷ்மிபம்மாள் பேரனைப் பார்த்துக் கேட்டாள். அவள் வேடிக்கையாகப் பேசினாளே ஒழிய, உண்மையில் அவளுடைய முகத்தில் சோகச்சாயை படர்ந்திருந்தது.

“பார்த்தேன் பாட்டி.”

“பார்த்து என்ன சொன்னாய்?”

”நீ சுகமாயிருக்கிறாயா என்று பாட்டி பார்த்துவிட்டு வரச்சொன்னாள்” என்றேன்

”அதற்கு அவள் என்ன சொன்னாள்?”

“அப்படிச் சொன்னேனோ இல்லையோ, அவளுடைய கண்களிலிருந்து ‘பல பல’ என்று கண்ணீர் உதிர்ந்தது பாட்டி!”

பாலகிருஷ்ணன் இவ்வார்த்தைகளைச் சொன்னானோ இல்லையோ, பாட்டியின் கண்களிலும் கண்ணீர் மல்கியது!

“அவள் சுகமாயிருக்கிறாளா, தம்பி ?”

“சுகமாயிருக்கிறாள்.”

அவ்வார்த்தைகளைக் கேட்டவுடன் பிள்ளையில்லா அப் பெண் ஜென்மத்தின் மனதில் பெரும் ஆறுதல் உண்டாகியது.

பின்பு அவள் மாடியிலிருந்து கீழே இறங்கிய போது, 4′ இப்படி அவள் ஒரு இடத்திலும் நான் ஒரு இடத்திலு மாய் இருக்க வேண்டி யிருக்கிறது. கட்டியிருந்தால் ஒரு தொல்லையு மில்லை. இந்தப் பயலுக்குக் சந்தோஷமாய் இருக்கலாம்” என்று தன் மனதிற்குள் சொல்லிக் கொண் டாள். பாலகிருஷ்ணனும் சகுந்தலையும் இருந்த சந்தோஷ நிலைமையைப் பார்த்து, அவளுக்கு இவ் வெண்ணம் உண்டாயிருக்கவேண்டும்.

– தொடரும்…

– திருமணம் (நாவல்), முதற் பதிப்பு: செப்டம்பர் 1947, அருணோதய நிலையம், வேலூர்.

சு.குருசாமி சு.குருசாமி (Trichi. S.V. Guruswamy Sarma, திருச்சிராபுரம் சு.வை.குருசாமி சர்மா) என்பவர், தமிழில் முதல் சில புதினங்களில் ஒன்றான "பிரேம கலாவதீயம்" (1893) எழுதிய ஒரு முக்கியமான தமிழ் புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் 1940களில் "வாடா விளக்கு" போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும், பல கதைகளைத் தொகுத்து வெளியிட்டதோடு, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவியவர். மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை, பண்டித எஸ்.எம்.நடேச சாஸ்திரி, பி.ஆர்.ராஜமையர், சு.வை.குருசாமி சர்மா, அ.மாதவையா ஆகியோர் முதற் காலக்கட்டத் தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *