திருப்பம்
இரவு நேரம் பத்து மணி . தொழிலதிபர் நம்பி , தம்முடைய படுக்கை அறையில் கட்டிலில் அமர்ந்து லேப்டாப்பில் மூழ்கி இருந்தார். திறந்து இருந்த கதவு வழியாக அவரது மகள் , ஒல்லியான இளைஞி கண்மணி அறைக்குள் நுழைந்தாள் . அவர் அருகில் அமர்ந்தாள் .

“என்ன டாடி , எப்பவும் இந்த நேரத்துல அம்மா படத்துகிட்டயும் சாமி கிட்டயும் பேசிட்டுப் படுத்துடுவீங்க இன்னும் தூங்காம என்ன வேலை ? நான் வெச்சுட்டுப் போன பாலும் மாத்திரையும் அப்படியே இருக்கு … “
கேட்டாள் கண்மணி.
“வந்திருந்த மெயில் எல்லாம் பார்த்துக்கிட்டு இருந்தேன்பா மறந்தே போச்சு .. “
என்றார் நம்பி . “இந்தாங்க என்று பால் டம்ளரை நீட்டினாள். அவர் குடித்து முடித்ததும் மாத்திரையையும் தண்ணீர் புட்டியையும் அவரிடம் கொடுத்தாள்.
அவர் வாங்கிக் கொண்டார்.
“அப்பா .. ஒங்க கிட்ட அஞ்சு நிமிசம் பேசணும் . சண்டே இன்னிக்கு ஒங்க கிட்ட பேசிடலாமனு பார்த்தா ஒங்களுக்கு இன்னிக்கு விசிட்டர்ஸ் மேல விசிட்டர்ஸ் … “
“சொல்லு கண்ணு என்ன விஷயம் ? ஒன் கிட்ட பேசாமல் வேற யார் கிட்ட பேசப் போறேன் …. “ புதல்வியிடம் குழைந்தார் நம்பி .
“ஆமாமாம் …. கொஞ்சலுக்கு ஒங்களுக்கு சொல்லியா கொடுக்கணும் .. சரி .. அதை விடுங்க .. ஜனா மாமா வந்திருந்தாரு … நீங்க பிசியா இருந்தீங்கன்னு போயிட்டாரு … “
“கோரிக்கை என்னன்னு ஒன் கிட்ட ஒன் தாய்மாமன் சொல்லிட்டுப் போயிருப்பானே …. . நான் அவனுக்கு என் தங்கையை ஒங்க அத்தை வனஜாவை கட்டி வெச்சேன் . பிசினஸ் வெச்சுக் கொடுத்தேன் . பிசினஸ் ல சாதிக்க முடியலன்னு அப்பப்ப நிதி உதவியும் செய்தேன் . இதுக்கு மேல நான் எப்படி சப்போர்ட் பண்ண முடியும்னு சொல்லு … “
“மாமாவுக்கு நேரம் கூடி வரலை பாவம் …. “
“மாமா மேல கொள்ளை பாசம் தான் .. என்ன கேட்டான்னு சொல்லு … “
“மாமாவுக்கு பணக் கஷ்டம் மனக் கஷ்டம் ரெண்டும் … அத்தை மாமா கிட்ட கோபிச்சுகிட்டு அவங்க நடத்தற வுமன்ஸ் ஹாஸ்ட்டல் ல போய் இருக்காங்களாம் .. மாமா தனியா சமைச்சு சாப்பிட்டுகிட்டு காலத்தை ஓட்டிக்கிட்டு இருக்காரு . “ கண்மணி தந்தையாரின் முகத்தைப் பார்த்தாள்.
“அவங்களுக்குள்ள பிணக்குக்கு நான் என்ன செய்ய முடியும் ? பணக் கஷ்டத்திற்கு நான் ஐந்து இலட்சம் செக் தரேன். நாளைக்கு ஆபீஸ் வந்து ஒன் கிட்ட வாங்கிக்க சொல்லு. வழக்கம் போல இதை நிதி உதவியா தர மாட்டேன். ஒன் மாமா ரைட்டர் கிரியேட்டிவ் டிசைனர் தானே … டெல்லி இண்டஸ்ரியல் பெடரேஷன் கம்பெனிகளுக்காக காபி டேபிள் புக் போட்டியை அறிவிச்சு இருக்காங்க … முதல் பரிசு ஐம்பது இலட்சம். ஒன் மாமனை நம்ம கம்பெனிய பத்தி ஒரு காபி டேபிள் புக் உருவாக்க சொல்லு … பரிசு கிடைச்சா அந்த பணம் அப்படியே ஒங்க மாமாவுக்கு தான் . நம்ம கம்பெனி பத்திய பழைய நியுஸ் கிளிப்பிங் , விருதுகள் விவரம் நம்ம ஹிஸ்டரியை எல்லாம் அட்மின் ல இருக்கிற வாசு கிட்ட இருக்கு அவர்தான் க்யுரேட்டர் மாதிரி பாதுகாக்கிறாரு. அவரை ஒங்க மாமாவுக்கு அறிமுகம் செஞ்சு வை. தனியா லேப்டாப் வேணும்னா வாங்கி கொடு. … அந்த போட்டிக்கு அனுப்பறதுக்கு ரெண்டு வாரம் தான் இருக்கு … போட்டி பத்தின லிங்க் எல்லாம் நான் உனக்கு ஷேர் பண்றேன் … என்ன ஓகேவா ? “ என்று முடித்தார் நம்பி .
“இந்த ஐடியா நல்லா இருக்கு பா மாமா அசத்திடுவாரு … “
“சரி இனிமேல் ஒங்க மாமா சாமர்த்தியம் .. குட் நைட் கண்ணு .. “
“குட் நைட் பா ” என்று கூறி விட்டு அந்த அறையிலிருந்து வெளியே வந்தாள் கண்மணி .
மறு நாள் மாலை வேளை. எம்ஜே காபி ஷாப்பில் கண்மணியும் அவளுடைய மாமா நடுத்தர வயது உடைய வாட்டசாட்டமான உருவம் கொண்ட ஜனாவும் கட்டுடல் இளைஞன் அட்மின் வாசுவும் அமர்ந்து இருந்தனர். மாமாவிடம் தந்தையார் கூறிய விஷயங்களை விவரித்து விட்டு அவர் கொடுத்த காசோலையையும் புதிய லேப்டாப்பையும் கொடுத்தாள் கண்மணி . ஜனாவின் முகம் மலர்ந்தது.
“ மாமா நீ கலக்கிடுவன்னு அப்பா கிட்ட பெருசா பெருமையா சொல்லி இருக்கேன் .. அத்தை வந்திடுவாங்க நீ அதைப் பத்தி எல்லாம் நினைக்காம இந்த வேலையில மும்முரமா இறங்கி முடி .. .. “ என்று மாமாவின் கைகளைப் பற்றிக் கொண்டாள் கண்மணி. “ இவர் வாசு .. எங்க ஆபீஸ் பில்லர்ஸ்ல ஒருத்தரு ” இளைஞன் வாசுவை அறிமுகம் செய்து வைத்தாள். வாசு ஜனாவின் கைகளைக் குலுக்கினான். “ இவரு உனக்கு
எல்லா தகவல் , கிளிப்பிங் , போட்டோகிராப்ஸ் எல்லாம் கொடுப்பாரு மாம்ஸ் .. பார்த்துக்கோ ” என்று கூறி விடை பெற்றாள் கண்மணி .
சுறுசுறுப்பான திங்கட் கிழமை காலை பத்தரை மணி. தொழிலதிபர் நம்பி தமது அலுவலகத்தில் உள்ள தமது புதல்வி கண்மணியின் அறையில் அவளுக்கு எதிராக உள்ள நாற்காலியில் அமர்ந்து இருந்தார்.
“ஏம்பா … நான் ஒங்க கேபினுக்கு வந்திருப்பேனே … நீங்களே ஏன் வந்தீங்க … “ கேட்டாள் கண்மணி .
“இதுல என்ன இருக்கு … ஒங்க மாமாவை வரச் சொல்லியிருந்தேனே . இன்னும் வரலியா…“
“வந்திடுவாருப்பா “
அப்போது கதவைத் தட்டி விட்டு ஜனா அறைக்குள் நுழைந்தார்.
அக்காவின் கணவரைப் பார்த்து ” வணக்கம் அத்தான் ” என்றார் ஜனா.
“வாப்பா .. “ என்று வரவேற்ற நம்பி , அருகில் இருந்த நாற்காலியில் அமரச் சொன்னார்.
“வனஜா கிட்ட பேசற விதத்தில் பேசிட்டேன். இன்னிக்கு அவ வீட்டுக்கு வந்திடுவா … இனிமேல் அவளை தாஜா பண்ணி மறுபடியும் முரண்டு பிடிக்காம பார்த்துக்கறது ஒன் கையில தான் இருக்கு . கண்மணி எதிரே நான் வேற எதுவும் பேச முடியாது … புரியுதா … “
“சரி அத்தான் … “
“காலாகாலத்துல என்னை மாமாவாக்கி இருந்தால் இவ்வளவு கஷ்டம் வருமா ? சரி சென்றதினி மீளாது இன்று புதிதாய்ப் பிறந்தோம் ன்னு இல்லற வாழ்க்கையைத் தொடங்குங்க … “ என்ற நம்பி , தம்முடைய புதல்வியைப் பார்த்து ” கண்ணு அந்த செக்கை ஒங்க மாமாகிட்ட கொடு ” என்றார்.
கண்மணி தன்னுடைய மேசை மீதிருந்த காசோலை உறையை மாமாவிடம் கொடுத்தாள்.
“எதுக்கு அத்தான் . காபி டேபிள் புக் போட்டில பரிசு நம்ம நிறுவனத்துக்கு கிடைக்கலையே ” என்றார் ஜனா.
“ஆமாம் கிடைக்கல .. நீ ரைட் அப் நல்லா எழுதி இருந்தே டிசைனும் நல்லா பண்ணி இருந்தே … பராவால்லே விடு . இந்த ஐம்பது இலட்சம் செக் எதுக்குன்னா செர்விக்கல் கேன்சர் அது என்ன பெண்களின் கருப்பை வாய்ப் புற்றுநோய் பத்தி பிரசாரமா இல்லாம பார்க்கத் தூண்டும் வகையில நீ விழிப்புணர்வு படம் எடுத்து இருந்தியே அதுக்குத்தான் இது … சோசியல் மீடியால நிறைய பேர் அதை ஷேர் பண்றாங்க எனக்கும் அப்படித்தான் வந்துச்சு. யூட்யூப் பிரபலங்கள் எல்லாம் கூட அதைப் பத்தி பேசி ஷேர் பண்ணி இருக்காங்க நீ எடுத்த படத்துக்கு என்னோட பரிசு வெச்சுக்கோ … இந்தப் பணத்தைக் காப்பத்தறது பெருக்குவது எல்லாம் உன்னோட சாமர்த்தியம் . பினான்சியல் டிஸ்ப்ளினோட இரு உன் மருமகள் கண்மணி மாதிரி “
ஜனா “இல்ல அத்தான் அந்த ப்ரொட்யூசர் தான் எனக்கு கொடுத்துட்டாரே… “ என்று இழுத்தார்.
“உன் ஷார்ட் பில்ம் க்காக அவங்க என்ன ஒரு இலட்சம் தானே கொடுத்திருப்பாங்க..நீ பெண்கள் இடையே ஏற்படுத்தின விழிப்புணர்வுப் பணிக்காக தான் நான் இந்த தொகையை கொடுக்கறேன். நம்ம கம்பெனியோட சிஎஸ்ஆர்* நடவடிக்கைகளுக்கும் கண்மணி கிட்ட நீ நல்ல ஐடியாஸ் கொடு சரி பார்ப்போம் “
என்று கூறியபடியே மைத்துனர் ஜனாவின் தோள்களைத் தட்டிக் கொடுத்தபடியே புதல்வியின் அலுவலக அறையிலிருந்து வெளியே சென்றார் நம்பி. புன்னகை தவழ மாமாவைப் பார்த்தாள் கண்மணி.
* சமூகப் பொறுப்புணர்வு பணிகள்
– காபி டேபிள் புக் கதைகள்
குறிப்புரை:
காபி டேபிள் புக் பற்றிய அறிமுகம் – கண்ணுக்கு விருந்தாக அமையும் வண்ணப் படங்களுடனும் மிகச் சிறிய அளவிலான செய்திக் குறிப்புகளுடனும் படைக்கப்படும் புத்தகங்களே காபி டேபிள் புக் என்று அழைக்கப்படுகின்றன . கார்ப்பரேட் நிறுவனங்கள் , பொதுத்துறை நிறுவனங்கள் , அரசுத்துறைகள் , ஏன் தனிநபர்களும் தங்கள் சாதனைப் பயணங்கள் , கடந்து வந்த பாதைகள் , திட்டங்களின் வெற்றிக் கதைகள் ஆகியவற்றைப் பறைசாற்றும் வண்ணம் கண்கவர் வண்ணப் புத்தகங்களாக வடிவமைத்துப் படைப்பார்கள் .மிகுந்த பொருட் செலவில் அச்சிடப்படும் இந்தப் புத்தகங்கள் பார்ப்பவரை வசீகரிக்கும் .
அச்சு வடிவில் உள்ள காபி டேபிள் புத்தகங்கள் தரும் அலாதியான வாசிப்பு அல்லது பார்க்கும் அனுபவத்தால் அச்சு வடிவிலான காபி டேபிள் புத்தகங்கள் வழக்கொழிந்து விடாமல் இன்னும் அச்சிடப்பட்டு வருகின்றன . சில மிகப்பெரிய புத்தக அங்காடிகளில் காபி டேபிள் புக் என்பதற்காக தனி அடுக்கும் வைத்துள்ளனர். அதனால் , வீடுகள் ,அலுவலகங்களில் காபி டேபிள் புத்தகங்களும் இடம் பெறுகின்றன. நிறுவனங்கள் , தங்கள் பார்வையாளர்கள் அமரும் அறையில் தங்கள் நிறுவனம் பற்றிய காபி டேபிள் புத்தகத்தைக் காட்சிக்கு வைத்திருப்பார்கள் . மேலே குறிப்பிட்ட நோக்கங்கள் தவிர , பின்வரும் தலைப்பு மற்றும் வகையினங்களில் காபி டேபிள் புத்தகங்கள் , உலக அளவில் படைக்கப்பட்டு வாசகர்கள் இடையே வரவேற்பைப் பெறுகின்றன. அவை – 1. கலை மற்றும் வடிவமைப்பு 2. பயணம் மற்றும் புகைப்படங்கள் 3. பேஷன் மற்றும் ஸ்டைல் 4. உணவு மற்றும் பானங்கள் 5. இசை மற்றும் பொழுதுபோக்கு 6. விளையாட்டு மற்றும் சாகசங்கள் 7. வரலாறு மற்றும் பண்பாடு 8. இயற்கை மற்றும் வனவளம்.
இப்படிப்பட்ட தலைப்பிலான காபி டேபிள் புத்தகங்கள் விற்பனையில் சாதனை படைக்கின்றன. பிறந்த நாள் , திருமண நாளில் வேண்டியவர்களுக்குப் பரிசு அளிக்க சிலர் சில குறிப்பிட்ட காபி டேபிள் புத்தகங்களை வாங்கித் தருகின்றனர் . (வித்தியாசமான புத்தகங்களைத் தேடிப்பிடித்துப் படிக்கும் தங்கள் காதலிக்கு சிலர் காதல் பரிசாக காபி டேபிள் புத்தகங்களை அளிக்கின்றனர்.)
இந்த காபி டேபிள் புக் என்பதை அடிநாதமாக கொண்டு ‘ காபி டேபிள் புக் கதைகள் ‘ என்ற சின்னஞ்சிறு புனைகதைகளைப் படைத்துள்ளேன் .
– எஸ்.மதுரகவி
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |