கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 6, 2026
பார்வையிட்டோர்: 69 
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்

(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அது ஓர் அரசாங்க மருத்துவமனை . இப்படிச் சொல்வதால் அதைப் பற்றி விவரித்துச் சொல்ல வேண்டியதில்லை. நிர்வாகம், சுற்றுப்புறச் சுகாதாரம், ஜனநெருக்கம் ஆகியவற்றைப் பற்றிய எல்லாச் செய்திகளும் இதற்குள் அடக்கம்.

அதன் வசாலில் ஓர் அரசமரம் இருந்ததுதான் ஆச்சர்யம். எப்படி விட்டு வைத்தார்கள் என்பது தெரியவில்லை. ‘தெரியவில்லை’ என்று சொல்லக்கூடாது. தெரிந்ததுதான். பிள்ளையார் காப்பாற்றினார்; நிஜமாகவே பிள்ளையார்தான் காப்பாற்றினார். மரத்தடியில் திடீரென்று பிரசன்னமான அவரை அப்புறப்படுத்தினால் தான் அரசமரத்தையும் மருத்துவமனை கட்ட முற்பட்டபோது, அப்புறப்படுத்தியிருக்க முடியும். அவ்வாறு செய்ய யாருக்கும் துணிவில்லை. அரசமரம், பிள்ளையாருக்கு நன்றி கூறியது.

அரசமரம் மட்டும் நன்றி கூறவில்லை; மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள். அவர்கள் நண்பர்கள் உறவினர்கள் எல்லாரும் பிள்ளையாருக்கு நன்றி கூறினார்கள். அந்த மரத்தைச் சுற்றி வட்டமாக எழுப்பப்பட்டிருந்த மேடைதான் அங்கு வந்த ஏழை நோயாளிகளுக்கும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் வரவேற்பறை, ஓய்வறை எல்லாம் ஆங்கிலத்தில் சொல்லப்போனால், ‘லௌன்ஜ்’ தொடர்ந்து மூன்றாவது நாளாக அந்த மருத்துவமனைக்கு வந்தான் செல்வம். வெறும் அந்தப் பெயரை மட்டும் வைத்துக் கொண்டு அவனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற முடியாததால் இந்த அரசாங்க ஆஸ்பத்திரிக்கு அவன் வர நேர்ந்தது. மூன்று நாளாக அலைச்சல் தான் மிச்சம். டாக்டரைப் பார்க்க முடியவில்லை. இந்த அலைச்சலிலேயே குணமாகி வருவதுபோல் அவனுக்கு ஒரு பிரமை.

அரசமரத்தடியில் இரண்டாவது நாளாக அந்த ஆளைச் செல்வம் பார்த்தான்; அவன் நேற்றும் இதே நிலையில்தான் படுத்திருந்தான். சிறிதும் மாற்றமில்லை கண்கள் மூடியிருந்தன. ‘நோயாளி’ காக்க வைத்திருப்பார்கள். அசதியில் தூங்குகிறான் என்று நேற்று நினைத்தான் செல்வம். ஆனால் இன்றும் அதே நிலை. இன்னுமா யாரும் அவனை கவனிக்கவில்லை?

வேறு ஆளாக இருக்கக் கூடுமோ? இல்லை அவன் தான் அவன் வலக்கையில் பச்சைக் குத்தியிருந்ததை நேற்றுப் பார்த்தது செல்வத்தின் நினைவுக்கு வந்தது.

சட்டைப் போடாத உடம்பை ஓர் அழுக்குக் காசித்துண்டு அரை குறையாகப் போர்த்தியிருந்தது. கழுத்தில் பழுப்பேறிய ஒரு மணி மாலை, வயதை நிர்ணயிக்க முடியவில்லை. முப்பதுமிருக்கலாம். அறுபதுமிருக்கலாம். வயிறு முதுகோடு ஒட்டி, முன்புறமிருப்பதால் ‘வயிறு’ என்று சொல்லும்படியாக இருந்தது.

செல்வம் அவனருகில் சென்று கையைத் தொட்டான். ‘ஜில்’லென்றிருந்தது. திடுக்கிட்ட நிலையில் அவன் நாடியை பார்த்தான் உறுதியாயிற்று

செல்வம் மேடையினின்றும் இறங்கி, என்ன செய்வதென்று புரியாமல், பொக்கை வாயில் புகையிலையைப் போட்டுக் கொள்வதற்காக அதை இடது உள்ளங்கையில் வைத்து அழுத்தித் தேய்த்துக் கொண்டிருந்த ஒரு கிழவரிடம்,

“அந்த ஆளு போயிட்டாரு…” என்றான்.

அவர் பதிலொன்றும் கூறாமல் புன்னகை செய்தார்.

அவருக்குக் காது கேட்காது என்பதை உணர்ந்த செல்வம் மருத்துவமனை வாசலை நோக்கி விரைந்தான்.

இரண்டு நர்ஸ்கள் எதைப் பற்றியோ தீவிரமாக விவாதித்துக் கொண்டு சென்றனர்.

“ஸிஸ்டர் ஒரு நிமிஷம்” என்றான் செல்வம். இருவரும் ஒன்றும் புரியாமல் கூப்பிட்டவன் அவன்தானா என்ற சந்தேகம் வினாக்குறியாக முகத்தில் தெரிய நின்றனர்.

அவன் அவர்களுக்கு மரத்திசையை சுட்டிக் காட்டியவாறு சொன்னான், ‘அந்த ஆளு போயிட்ட மாதிரி தெரியுது” ஒருத்தி யோசிக்காமல் தன்னிச்சையாய் உடனே கேட்டாள்: “எங்கே?”

“அது எனக்குத் தெரியாது” என்றான் செல்வம் புன்னகையுடன். உடனே இப்படி பதில் சொல்லியிருக்கக் கூடாதென்று மனத்தை ஒரு கணம் உறுத்தியது இன்னொருத்தி கேட்டாள்.

“போயிட்டார்னு உங்களுக்கு எப்படி தெரியும்?”

“தொட்டுப் பார்த்தேன். ‘ஜில்’னுருக்குது. அவரு யாருன்னு எனக்குத் தெரியாது. நேத்தியிலிருந்து அந்த மரத்தடியிலே கிடக்கிறாரு”

“நேத்தியிலிருந்தா?” என்றாள். “போயிட்டார்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டவள். அவர் பெயர் ரெஜினா. அவள் அணிந்திருந்த வில்லை அதை அறிவித்தது. இன்னொருத்தி நிர்மலா. அவள் நெற்றியில் விபூதிக் கீறு.

”ஆமாம் …நேத்திக்கும் அவரு இப்போ மாதிரியே கிடந்தாரு. அசதி தூங்கிறாருன்னு நான் போயிட்டேன். நான் மூணு நாளா வந்துகிட்டிருக்கேன். டாக்டரைப் பார்க்க முடியலே..”

“நாங்க என்ன செய்யணுங்கறீங்க?” என்றாள் நிர்மலா.

“நான் டாக்டரில்லே. அவர் போயிட்டார்னு நான் தப்பா சொல்லக்கூடும்… நீங்க ‘நர்ஸ்’ அவர் நாடியைப் பார்த்து…”

“அப்படித் தொட்டுப் பார்த்து முடிவு பண்ண எங்களுக்கு அதிகாரமில்லை… டாக்டர்தான் சொல்லணும். இது போலீஸ் கேஸா இருந்தா… அதுதான் சிக்கல்… ” என்றாள் ரெஜினா.

“வைத்தியத்துக்கு வந்தவரு… போயிருக்கலாமில்லையா” என்றான் செல்வம்.

“இது உங்க யூகம். போலீஸை முதல்லே கூப்பிடுங்க…” என்றாள் நிர்மலா.

“நான் கூப்பிடணுமா?”

“நீங்கதானே முதல்லே பாத்தீங்க… கையை வேறு தொட்டுப் பாத்திருக்கீங்க…”

என்று கூறிக் கொண்டே ரெஜினா போய்விட்டாள். நிர்மலாவும் ஒரு கண நேரத் தயக்கத்துக்குப் பிறகு அவளைப் பின் தொடர்ந்தாள். இதற்குள் மரத்தடியில் ஒரு சிறுகூட்டம் கூடிவிட்டது.

செல்வம் அக்கூட்டத்தை நோக்கிச் சென்றான்.

”உங்க சொந்தக்காரரா?” என்று கேட்டார் ஒருவர்.

“அவர் மனுஷன்னு தெரியுது, நாம எல்லாருக்குமே சொந்தக்காரரு…” என்றான் செல்வம்.

“இந்த ஆஸ்பத்திரி ஆரம்பிச்ச நாள்லே வைத்தியத்துக்கு வந்திருப்பாரு. காத்து காத்தே போயிருக்கலாம்…” என்றான் ஓர் இளைஞன் புன்முறுவலுடன்.

“நீ சொல்லறதும் சரி… கவர்மென்ட் ஆஸ்பத்ரின்னா இப்படித்தான்..” என்று ஆமோதித்தார் இன்னொருவர்.

“அவர்போயிட்டார்னு நிச்சயமா தெரியுமா?” என்று கேட்டார் வழுக்கை தலையாயிருந்த ஒருவர்.

அப்பொழுது ஒரு டாக்டர் அவர்களை நோக்கி வந்தார். “என்ன பிரச்னை?” என்றார் அவர்.

டாக்டர் 43 வயதுக்காரர். அவருடைய மீசை அவர் முகத்துக்குப் பொருத்தமில்லாமல் இருந்ததுபோல் செல்வத்துக்குத் தோன்றிற்று. குழந்தை முகத்துக்கு எதற்கு ஆக்ரோஷமான மீசை ?

“இவரைக் கேளுங்க… ” என்று யாரோடாக்டரிடம் சொன்னார். சொன்னவர் யாரென்று தெரியவில்லை. கூட்டம் அதிகரித்துவிட்டது. டாக்டர் செல்வத்தின் முகத்தை ஏறிட்டு நோக்கினார்.

“நான் மூணு நாளா ஆஸ்பத்திரிக்கு வந்துகிட்டிருக்கேன். ‘ஸ்பான்டி லைஸிஸ்’னு நினைக்கிறேன். டாக்டர் ரவியைப் பார்க்கச் சொன்னாங்க, அவரைத்தான் பார்க்க முடியலே”

“உங்க கதை இருக்கட்டும் இந்த ஆளு யாரு, இவருக்கென்ன ஆச்சு?’ என்றார் டாக்டர், சற்றுப் பொறுமையை இழந்த குரலில்.

“நேத்துலேந்து இப்படியே இங்கே கிடக்கிறாரு… நான்தான் இதைக் கவனிச்சேங்கிறதுதான் எனக்கும் இவருக்குமுள்ள சம்மந்தம்…” என்றான் செல்வம்.

“சரி.. இது போலீஸ் கேஸாருக்கலாம். முதல்லே போலீஸ் வரட்டும் நான் அவங்களுக்கு போன் செய்யறேன்…” என்று கூறிக்கொண்டே டாக்டர் உள்ளே போக முற்பட்டார்.

“அவர் போயிட்டாரா இல்லையான்னு பார்க்க வேண்டாமா, டாக்டர்… அப்படி போகலேன்னா சிகிச்சை…” என்று செல்வம் சொல்லி முடிப்பதற்குள் டாக்டர் குறுக்கிட்டார். “பார்த்தா தெரியலே? அது ‘பாடி’ய்யா போலீஸ் கேஸா இருந்தா நாம கை வச்சதே குத்தம்னு கையாலாகாத போலீஸ் நம்மை துளைச்சு எடுத்துருவாங்க… முதல்லே அவங்க வரட்டும் அவங்களைச் சாட்சியா வச்சுகிட்டு பாக்கிறதுதான் முறை…”

டாக்டர் போய்விட்டார்.

அப்பொழுது இரண்டு டாக்டர்கள், இளைஞர்கள், வந்தார்கள், செல்வம் அவர்கள் அணிந்திருந்த வில்லைகளில் பெயர்களைப் படித்தான் சுரேஷ் குமார்.

குமார் கேட்டான்: “என்ன ‘ப்ராப்ளம்’?”

“ப்ராப்ளம் சால்வ் ஆயிடிச்சு.. அதோ அந்த ஆளு நிம்மதியா போயிட்டாரு” என்றான் செல்வம்.

“யார் நீங்க” என்றான் சுரேஷ்

”அவர் போயிட்டார்ங்கிறதைப் பார்த்த முதல் ஆளு… நர்ஸ் டாக்டர் எல்லார்கிட்டேயும் சொல்லியாச்சு. போலீஸ் கேஸா இருக்கலாம். கிட்டே வரமாட்டாங்கிறாங்க… அவர் போயிட்டார்னு நான் நினைக்கிறேன், அது தப்பாகவுமிருக்கலாம். இந்த ஆஸ்பத்திரி யிலே டாக்டர் உதவியில்லாமெ யாரும் சாக முடியாதுங்கிறதும் எனக்குத் தெரியும்…”

சுரேஷ் செல்வத்தை இடைமறித்தான். “ஆர் யு எ ஸினிக் ?” “ஸினிக் இல்லே… மனுஷன் தயவு செய்து அவர் போயிட்டாரா இருக்காரான்னு முதல்லே பாருங்க…” என்றான் செல்வம்

இரண்டு டாக்டர்களும் ‘அது’வா, ‘அவனா’ அங்கு அருகில் சென்றார்கள்…

சுரேஷ் நாடியைப் பிடித்துப் பார்த்தான். குமார் நெற்றியைத் தொட்டு பார்த்தான்.

“அப்போபோனாரே டாக்டர். பார்க்க முடியாதுன்னுட்டாரா?” என்று கேட்டான் சுரேஷ்

“ஆமாம்…. போலீஸ் கேஸ் னு முடிவு பண்ணிட்டாரு…”

சுரேஷும் குமாரும் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகை செய்தனர். அந்த டாக்டரை இருவருக்கும் பிடிக்காது போலிருக்கிறது என்று செல்வம் நினைத்துக் கொண்டான்.

“அவர் பார்க்க முடியாதுன்னு போயிட்டார்னு நீங்க ‘மெடிக்கல் சூப்பிரண்டென்ட்டே பார்த்து ஒரு ரிப்போர்ட் கொடுக்க விரும்பினா கொடுக்கலாம்…’ என்றான் சுரேஷ்.

“நோயூஸ் … யு நோ வாட் வில் ஹாப்பென்… ” என்றான் குமார். சுரேஷிடம்.

“நோ.. லெட் இட் பி ரெக்கார்டட்… ” என்றான் சுரேஷ்

இருவரும் மேடையை விட்டுக் கீழே இறங்கி வந்தார்கள்.

“என்ன செய்யப் போறீங்க?” என்று கேட்டான் செல்வம்.

“அவர் போயிட்டாரு… இட் ஈஸ் எ பாடி… போலீஸ் வரட்டும்…” என்றான் குமார்.

“நீங்க பாக்கிறப்போ அவர் உயிரோடு இருந்திருக்கலாம். அந்த டாக்டர்கிட்ட சொல்லியிருக்கீங்க, அவர் கேக்கலே. கிரிமினல் நெக்ளிஜென்ஸ்… வயலேஷன் ஆஃப் கோட் ஆஃப் கான் டெக்ட்… மெடிக்கல் கவுன்ஸிலுக்குப் போக வேண்டிய விஷயம் இது… என்றான் சுரேஷ்

“அவர் பெயரு முத்துக் கிருஷ்ணன் ஸீனியர் டாக்டர் ‘கம்ப்ளெய்ண்ட்’ கொடுக்க தயங்காதீங்க ஜனங்ககிட்டே ஒரு விழிப்புணர்ச்சிக்குன்னு பப்ளிக் சர்வீஸ் லேருக்கிறவங்களுக்கு தெரியணுமில்லே?” என்றான் குமார்.

“ஓ.கே. லெட் அஸ் கோ…” என்று கூறியவாறு புறப்பட்டான் சுரேஷ். அவனைத் தொடர்ந்தான் குமார். செல்வத்தினால், அவனுடைய இரத்த அழுத்தம் அதிகமாகிக் கொண்டு வருவதை உணர முடிந்தது. ‘மெடிக்கல் சூப்பிரடென்ட்’டைப் போய்ப் பார்ப்பது என்று முடிவு செய்தான்.

“நான் பெரிய டாக்டரைப் பார்த்து ஆஸ்பத்திரி எவ்வளவு அழகா நடக்குதுன்னு சொல்லலாம். இங்கே ஒருத்தர் அனாதையா செத்துக்கிடக்கிறாரு… யாரும் இதைப் பத்திக் கவலைப்படறதா தெரியலே… நீங்க யாரானும் வர்றீங்களா, என் கூட…?” என்றான் செல்வம். இறந்தவருக்கு இறுதி மரியாதை செலுத்துவதுபோல், அங்கு சில விநாடிகள் அமைதி நிலவியது.

“நீங்க போய் சொல்லுங்க… முதல்லே பாத்தவரு நீங்க… கூட்டம் போட்டுகிட்டுப் போய் சொன்னாலும் நல்லாருக்காது.”, என்றார் நடுத்தர வயதுக்காரர் ஒருவர். சிறிதுநேரம் கழித்து அவர் கையில் காய்கறிப்பை. ஆஸ்பத்திரிக்குக் காய்கறிப் பையுடன் எதற்கு வந்திருக்கிறாரென்று செல்வம் ஒருகணம் யோசித்தான்.

“அனாதைப் பொணத்தைத் தகனம் செய்யறதுக்காக ஒரு சங்கமே இருக்கு. நான் அதற்கு ‘டொனேஷன்’ கொடுத்திருக்கேன்… வருமான வரிவிலக்குகூட இதுக்கு உண்டு. ஆனா டெலிஃபோன் நம்பர் தெரியலே… வீட்லேருக்கு” என்றார். தூய வெள்ளை ஆடைய தரித்த ஒருவர்.

செல்வம் மருத்துவமனைக்குள் நுழைந்தான். முதல் மாடியில் ‘மெடிக்கல் சூப்பிரென்டென்ட்’ அலுவலகம் இருக்கிறது என்று அவனுக்குத் தெரியும்.

அவன் அவருடைய அலுவலகத்துக்குள் நுழைந்தபோது, நாலைந்துபேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அவனுக்குத் தெரிந்தது.

“நான் ‘எம். எஸ்’ ஸை உடனே பார்க்கணும்” என்றான் செல்வம் அவருடைய செயலரிடம். செயலர், ஓர் அழகான பெண். கன்னத்தில் குழிவு தோன்ற ஒரு வசீகரமான புன்னகையுடன் அவள் சொன்னாள்… ‘அப்பாய்ன்ட்மென்ட்’ இல்லாமெ அவரைப் பாக்க முடியாது”

“ஆஸ்பத்திரி வாசல்லே ஒரு பொணம்…” என்றான் செல்வம். அகிலா பில்லை அறிவித்த அச்செயலரின் பெயர். திடுக் கிட்டாள். அழகான குழிவு மறைந்து கண்களில் அதிர்ச்சி தெரிந்தது. “என்ன சொல்றீங்க?”

“இத பத்திதான் அவர்கிட்டே பேசணும் ஆஸ்பத்திரிக்குப் பிரச்னை வரக்கூடாதில்லே…?”

அகிலா உள்ளே சென்றாள் செல்வம் உள்ளே அழைக்கப் பட்டான்.

‘மெடிக்கல் சூப்பிரென்டென்டின்’ பெயர் ஹரிஹரன். நெற்றியில் சின்ன வட்டவடிவில் குங்குமம். இரண்டு புருவங்களுக் கிடையே ஒரு மயிர் பாலமிருந்தது. சரீரம் முழுவதும் கறுப்பும் வெள்ளையும் அடர்த்தியான மயிர்.

“யார் நீங்க என்ன சொல்றீங்க, பொணமா, வாசல்லியா, வாட் டுயுமீன்…?”

ஒரே மூச்சில் எல்லாக் கேள்விகளும் பல சுருதிகளில் செல்வத்தை வந்து தாக்கின. வளமான குரல்.

“என் பேர் செல்வம். மூணு நாளா டாக்டர் ரவியைப் பார்க்க இங்கே ஆஸ்பத்திரிக்கு வந்துகிட்டிருக்கேன். அவரைப் பார்க்க முடியலே. எனக்கு ‘ஸ்பான்டிலைஸிஸ்’. ‘ஸ்பான்டிலைஸிஸ்’ இல்லாமலு மிருக்கலாம். நேத்து வந்தப்போ அந்த ஆளு ஆஸ்பத்திரி அரச மரத்தடியிலே, பிள்ளையார் பக்கத்திலே கிடந்தாரு… நேத்திருந்த மாதிரியே இப்பவும் கிடக்கிறாரு… முந்தா நாளும் இருந்திருக்கலாம்…. ஆனா நான் முந்தா நா பாக்கலே… நான் பாக்காதினாலே, அவரில்லேன்னு என்னாலே உறுதியா சொல்லமுடியாது. இருந்திருக்கலாம். ஆனா…’

ஹரிஹரன் சீறி விழுந்தார்… “என்னய்யா, வாசல்லே பொணம்னு சொல்லிட்டு, ரப்பர் மாதிரி ஏதோதோ இழுத்துண்டு போறே…? வீண் கதை பேசாம விஷயத்தைச் சொல்லு…”

“அந்த ஆளுதான் பொணம். ரெண்டு நாளா கிடக்குது… உங்க நர்ஸ்கிட்டே சொன்னேன். டாக்டர்கள்கிட்டே சொன்னேன். யாரும் எந்த ஆக்ஷனும் எடுக்கிறதா தெரியலே…உங்க ஆஸ்பத்திரிக்கு ‘பேஷண்டா’ வந்து, வாசல்லே அரச மரத்தடியிலே படுத்துக்கிட்டிருக்கப்போ, மண்டையைப் போட்டிருக்கலாம். இல்லாட்டா, அந்தப் பையன் சொன்ன மாதிரி, டாக்டரைப் பார்க்க நாள் கணக்கா காத்திருந்திட்டு, ‘வெய்ட்’ பண்ணி வெய்ட் பண்ணியே உசிரை விட்டிருக்கலாம்… இல்லாட்டா…”

“போறும் எங்கேயிருக்கு அந்த பொணம்…? கூட வந்து காமியுங்கோ…” என்று கூறிக் கொண்டே டாக்டர் ஹரிஹரன் கிளம்பினார்.

அவர்கள் வாசலுக்கு வந்து அரசமரத்தடியை நோக்கிச் சென்றார்கள்.

அரசமரம் இருந்தது.

பிள்ளையார் இருந்தார்.

ஆனால் அந்தப் பிணத்தைக் காணவில்லை! செல்வத்துக்குத் தூக்கி வாரிப் போட்டது. எங்கே போயிற்று அந்தப் பிணம்?

“எங்கே இருக்கு அந்த பாடி? ” என்று கேட்டார் ஹரிஹரன். “இங்கேதான் இருந்தது. எனக்கு ஒண்ணும் புரியலே…” என்றான் செல்வம்.

அவன்சுற்றும் முற்றும் பார்த்தான். சிறிது நேரத்துக்கு முன்னால் அவன் பார்த்த யாருமே அங்கில்லை.

“இந்த மரத்தடியிலே ஒருத்தரு படுத்துக் கிடந்தாரில்லே…?” என்று பலகீனமான குரலில் கேட்டான். அனைவரையும் பார்த்து ஒரு பொதுக் கேள்வியாக.

“தெரியாதே”

ஹரிஹரன் கோபமாகச் சொன்னார்… “நாங்க டாக்டர்ஸ்… எங்க ‘டைம்’ ரொம்ப ‘ப்ரீஷீயஸ்’ ஏன் இப்படி ‘வேஸ்ட்’ பண்றீங்க…?”

“நான் சத்தியமா சொல்றேன் டாக்டர்… இங்கே ஒருத்தர் கிடந்தாரு… செத்துப் போனவர்தான். நீங்க டாக்டர் சுரேஷ், டாக்டர் குமார் ரெண்டு பேரையும் வேணும்னா கேட்டுப் பாருங்க. டாக்டர் சுரேஷ்தான் நாடியைப் பிடிச்சுப் பார்த்தாரு…’

“இங்கேருக்கிற யாருக்குமே இது தெரியாமலா போகும் ?” என்றார் ஹரிஹரன்.

“அதான் எனக்குப் புரியலே… நான் அப்போ பார்த்தவங்கள்லே யாருமே இப்போ இங்கே இல்லை. பிள்ளையாரைத் தவிர…” என்றான் செல்வம்.

“பிள்ளையாரைச் சாட்சிக் கூண்டிலே நிறுத்த முடியாது…” என்றான் ஓர் இளைஞன் சிரித்துக் கொண்டே.

“அப்படிப் பிள்ளையார் சாட்சி சொல்ல வந்தா நம்ம கிரிமினல் சட்டத்திலே அதற்கு இடமில்லே, இல்லையா டாக்டர்?” என்றான் செல்வம்.

டாக்டர் ஹரிஹரன் மிகக் கோபமாக அவனைப் பார்த்துவிட்டு, பதிலொன்றும் கூறாமல், மருத்துவமனையை நோக்கி விரைந்து சென்றார்.

செல்வம் மறுபடியும் சுற்று முற்றும் பார்த்தான்.

அப்பொழுது பார்த்தவர்களில் எப்படி ஒருவர்கூட இல்லாமல் போக முடியும்…?

டாக்டர் சுரேஷ், டாக்டர் குமார் ஆகிய இருவரையும் பார்ப்பதென்று தீர்மானித்து அவன் மீண்டும் மருத்துவமனைக்குள் நுழைந்தான்.

டாக்டர் குமார் இரண்டாவது மாடியிலிருந்தான். டாக்டர்சுரேஷ் மூன்றாவது மாடி. செல்வம் குமார் அறையை நோக்கிச் செல்லும்போது, எதிரே சுரேஷ் வந்தான்…

“டாக்டர் சுரேஷ்… ஒரு நிமிஷம்” என்றான் செல்வம்.

சுரேஷ், அவனை யாரென்று தெரியாமல் பார்ப்பது போல் செல்வத்துக்குப் பட்டது.

“என் பேர் செல்வம்… வாசல்லே அந்த பாடி…”

“எஸ்… எஸ் எம்.எஸ்.கிட்டே, டாக்டர் முத்துக் கிருஷ்ணனைப் பத்தி ‘கம்ப்ளெய்ன்ட்’ கொடுத்தீங்களா?”

“அங்கே அந்த பாடியை இப்போ காணலை. டாக்டர் ஹரிஹரனைக் கூட்டிக்கிட்டுப் போனேன்… அங்கே… அந்தப் பொணத்தை காணோம்…”

“அது எப்படி காணாமல் போகும்…?” என்று அதிர்ச்சியுடன் கேட்டான் சுரேஷ்.

“அதான் எனக்கும் தெரியலே. நீங்க தயவு செய்து டாக்டர் ஹரிஹரன்கிட்டே வந்து நடந்ததைச் சொன்னா போதும்… நான் பொய் சொன்னேன்னு அவர் நினைச்சுகிட்டிருக்காரு…’

அவர்கள் டாக்டர் ஹரிஹரன் அறைக்குள் சென்றபோது, அங்கு டாக்டர் முத்துக்கிருஷ்ணன் இருந்தார்.

”என்ன சுரேஷ்… இந்த ஆளை எங்கே பிடிச்சே? ஒண்ணு இவர் பைத்தியம். இல்லாட்டா பொய் சொல்றார்… நல்லவேளை, இவர் பேச்சைக் கேட்டுண்டு, முத்துக்கிருஷ்ணன் போலீஸுக்கு ஃபோன் செய்யலே…” என்றார் ஹரிஹரன்.

“டாக்டர், மரத்தடியிலே கிடந்த அந்த ஆளை நான் உங்களுக்கு காமிக்கலியா…” என்றான் செல்வம் முத்துக்கிருஷ்ணனிடம் இறைஞ்சும் குரலில்.

“நீங்க அப்படியொரு ஆள் கிடக்கிறதா சொன்னீங்க. நான் பாக்கலே” என்றார் முத்துக்கிருஷ்ணன்.

“நல்லவேளை நீங்க போலிஸுக்கு ஃபோன் பண்ணலே. அவங்க வேறு வந்து ‘பாடி’ கீடின்னு ஒரே வம்பாய் போய். ஆஸ்பத்திரிக்குக் கெட்ட பேர் வந்திருக்கும். அந்த ஆளு செத்தும் போகலே, ஒண்ணும் போகலே… தூங்கிண்டிருந்திருப்பான். தூக்கம் கலைஞ்சதும் எழுந்து போயிருப்பான்… தட்ஸ் ஆல்… இந்த ஆளு அதுக்குள்ள ‘பொணம்’ ‘கிணம்’னு சொல்லி… மை காட்… வாட் எ நியுஸென்ஸ்…” என்றார் ஹரிஹரன்.

“டாக்டர் சுரேஷ், நீங்க சொல்லுங்க நீங்க ‘பாடி’யைப் பார்க்கலே?” என்று கேட்டான் செல்வம்.

சுரேஷ் பேசாமலிருந்தான்

“டாக்டர் சுரேஷ், பளீஸ்”

”உங்களுக்கு ‘ஸ்பான்டிலைஸிஸ்’ இல்லே… வேணும்னா டாக்டர் ருத்ரன்கிட்டே ‘அப்பாய்ன்ட்மென்ட்’ ஃபிக்ஸ் பண்ணிக் கோங்கோ… அவர் எங்க சைகாடிரிஸ்ட்” என்றார் ஹரிஹரன் புன்னகையுடன்.

செல்வம் அவ்வறையை விட்டு வெளியே வந்தான்.

டாக்டர்சுரேஷின் மௌனந்தான் அவனுக்கு மிகுந்த எரிச்சலைத் தந்தது. டாக்டர் குமாரை கூப்பிட்டிருந்தாலும் டாக்டர் ஹரிஹரன் முன்னால் அவனால் ஒன்றும் பேசியிருக்க முடியாது. டாக்டர் ஹரிஹரனுக்கு அவன் சொன்னது உண்மை என்று தோன்றி யிருந்தாலும் பிணம் ஆஸ்பத்திரிவாசலில் இல்லை என்பது ஆறுதலைத் தந்திருக்கும்…

பிணம் எங்கே போயிருக்க முடியும் ? இது எப்படி சாத்தியம்?

ஒருவேளை, நடந்தவையாவும் அவன் மனப்பிரமையா? அவன் டாக்டர் ருத்ரனைக் கலந்தாலோசிக்க வேண்டியது அவசியந்தானா? செல்வம் ‘ஸ்கூட்டரை ‘எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.

கடை வீதியில் ஒரே கூட்டம் ஏதோ ஒரு கண்டன ஊர்வலம் வருவதாக சொன்னார்கள்.

கூட்டத்தைச் சமாளித்துக் கொண்டு அவன் ஸ்கூட்டரில் சென்றான்.

எதிர்த்தாற்போல் ஒரு பெரிய ஊர்வலம். ‘ஸ்கூட்டரை’ நிறுத்தி, அவன் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவரைக் கேட்டான்: “என்ன ஊர்வலம் இது?”

“சவ ஊர்வலம்”

“சவ ஊர்வலமா?”

“ஆமாம் அரசாங்கத்தின் அடக்குமுறையை எதிர்த்து ஒரு தொண்டர் உண்ணாவிரதமிருந்தாராம். அவர் செத்துட்டாரு அவரைக் கொன்னது அரசாங்கம்னு கோஷம் போட்டுகிட்டு வராங்க..” “யார் அவரு, தொண்டர்?”

“அவர் உண்ணாவிரதம் இருந்ததே யாருக்கும் தெரியாது. திடீர் பிள்ளையார் மாதிரி திடீர்த் தியாகி… அதோ அந்த ‘வேன்’லே பாடியை எடுத்துகிட்டு வராங்க பாருங்க…”

செல்வம் ‘வேனை’ நோக்கிச் சென்றான். திறந்த வண்டியி லிருந்த அந்த உடல் முழுவதும் மலர்க்குவியல். செல்வத்துக்கு அந்தத் தியாகியின் முகம் தெரியவில்லை.

– இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள், முதற் பதிப்பு: 2010, கிழக்கு பதிப்பகம், சென்னை.

இந்திரா பார்த்தசாரதி (பிறப்பு: சூலை 10, 1930) தமிழகத்தின் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இவர் 40 ஆண்டு காலம் டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியாவர். இது தவிர போலந்து நாட்டில் வார்சா நகரில் அமைந்துள்ள வார்சா பல்கலைக்கழகத்தில் ‘இந்தியத் தத்துவமும் பண்பாடும்’ கற்பிக்கும் ஆசிரியராகவும் இருந்தார். 17 புதினங்கள்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *