தாவோயிஸம் எங்கே இருக்கிறது?
தாவோ என்பது சீன மெய் ஞான மார்க்கம். இது, இந்து மற்றும் பௌத்த மதங்களில் உள்ள தந்தரா போன்றதே. தாந்த்ரீகத்தில் உள்ள கொள்கைகள், கோட்பாடுகள், வழமைகள் யாவும் அப்படியே தாவோவிலும் இருப்பது ஆச்சரியப்படுத்தக் கூடியது. தந்த்ரா மற்றும் தாவோவுக்கு இடையே ஏராளமான கொண்டு – கொடுப்பினைகள் உள்ளன.

சீனாவின் இரு பெரும் தத்துவ + மெய்ஞான மார்க்கங்கள் கன்பூசியஸிஸம் மற்றும் தாவோயிஸம் ஆகும். இதில் கன்பூசியஸிஸம், லட்சியவாதத்தை அடிப்படையாகக் கொண்டது. தாவோயிஸம், இயற்கையான எதார்த்தவியல் வாழ்க்கை முறையை மேற்கொள்வது.
தாவோயிஸத்தைத் தோற்றுவித்தவர் சுவாங் சூ ஆவார். டோங்குவோஸி என்ற அறிஞர், சுவாங் சூவிடம் தாவோ பற்றிய உரையாடலை மேற்கொண்டார்.
அவர் கேட்டார்: “தாவோ என்று நீங்கள் சொல்வது எங்கே இருக்கிறது?”
சுவாங் சூ சொன்னார்: “தாவோ எல்லா இடத்திலும் இருக்கிறது; அது இல்லாத இடமே இல்லை.”
டோங்குவோஸியால் அதைப் புரிந்துகொள்ள இயலவில்லை. “குறிப்பாக இன்னதென்று அதைக் கூற இயலுமா?”
அப்போது அவ்விருவரும் வெளிப்புறப் பகுதியில் நின்றுகொண்டிருந்தனர். சுவாங் சூ சுற்றுமுற்றும் கவனித்தார். காலடியில் எறும்புச் சாரி சென்றுகொண்டிருந்தது. அதைச் சுட்டிக்காட்டி, “இந்த எறும்புச் சாரியில் கூட தாவோ இருக்கிறது!” என்றார்.
டோங்குவோஸிக்கு ஆச்சரியம். “இவ்வளவு கீழ்மையான, சிறு உயிரினத்தில் தாவோ இருக்கிறதா?”
“அதோ, அந்தப் புல்லின் இதழில் கூட தாவோ இருக்கிறது!”
“எறும்பு கூட பரவாயில்லை; அது பூச்சி இனம். ஆனால், புல் – அதைவிடக் கீழான தாவரம் ஆயிற்றே!”
சுவாங் சூ, அங்கு கிடந்த கட்டிடச் சிதைவை சுட்டிக் காட்டினார். “அங்கே கிடக்கும் அந்த ஓட்டுத் துண்டில் கூட தாவோ இருக்கிறது!”
இது டோங்குவோஸியை இன்னும் வியக்கச் செய்தது. “ஏன் நீங்கள் மேலும் மேலும் கீழே சென்றுகொண்டிருக்கிறீர்கள்? முன்பு சொன்ன விஷயங்களாவது பரவாயில்லை. அவை உயிரினங்கள் எனலாம். ஆனால், இந்த ஓடு, ஓர் ஜடப்பொருள். இதிலுமா தாவோ இருக்கிறது?”
சுவாங் சூ சொன்னார்: “தாவோ அனைத்திலும்தான் இருக்கிறது; சிறுநீரிலும் மலத்திலும் கூட!”
டோங்குவோஸி அதற்குப் பிறகு வாய் திறக்கவில்லை.
தாவோயிஸத்தின் மைய சித்தாந்தம் என்ன என்பதைப்பற்றி, அதன் கண்ணோட்டங்கள் எத்தகையவை என்பதைப் பற்றி, மிகச் சுருக்கமாக விளக்கும் அருமையான கதை இது.
இந்தக்கதை ஆழ்ந்த சிந்தனையை எழுப்பக் கூடியது. இதன் மேற்பரப்பில் பார்க்கும்போது, தாவோவில் எந்த சிறப்பம்சமும் இல்லை என்று தோன்றும். மதிப்பற்ற இடங்களிலும், கீழ்மையான மற்றும் இழிவான பொருட்களிலும் அது இருப்பதால், தாவோ தரக்குறைவானது என்றும் தோன்றலாம். ஆனால் உள்ளார்ந்து சிந்தித்துப் பார்க்கையில்தான் அதன் ஆழம் என்ன என்பது புலப்படும்.
தாவோ என்பது அத்வைத சித்தாந்தம். அதில் நன்மை – தீமை, உயர்வு – தாழ்வு, புனிதம் – இழிவு என்பதே கிடையாது. இயற்கையின் படைப்பில் இத்தகைய பிரிவுகள் ஏதும் இல்லை. மனிதர்கள்தான் அவற்றைப் பல்வேறு வகையறாக்களாகவும், எதிர்மைகளாகவும் பிரித்து, உயர்வு – தாழ்வு என பேதப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
ப்ரபஞ்ச மொத்தமும் ஒரே ஒரு புனிதமான படைப்பு மூலத்தில் இருந்து உருவானது. எனவே, இதில் உள்ளவை யாவும் புனிதமானவையே. இதன்படியே, தாவோ என்பது உயர்திணை உயிரிகள், மேன்மையான இடங்கள், புனிதமான பொருட்கள் ஆகியவற்றில் மட்டும் இருப்பது அல்ல. அஃறிணை உயிரிகள், ஜடப் பொருட்கள், மதிப்புக் குறைவான இடங்கள், மற்றும் இழிவான பொருட்களிலும் கூட இருப்பதுதான்.
‘புத்தரும் புழுவும் ஒன்று’ என புத்த மதத்தில் ஒரு மரபுத்தொடர் உண்டு. ஒரு மூலத்தில் இருந்து வந்ததால் அனைத்தும் சமம் என்கிற அத்வைதக் கோட்பாட்டின்படி அமைந்தது அது. இந்த தாவோ கதை உணர்த்தும் தத்துவமும் அதேதான்.