தாலாட்டு




(1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சுந்தரமூர்த்திக்கு அன்றிரவுதான் சாந்திக் கல்யாணம்.

சுந்தர மூர்த்தி வெளிமுற்றத்தில் ஈஸிசேரில் கண்ணை, மூடியவாறே படுத்துக் கிடந்தான்; ஆனால் கண்கள் தான் மூடியிருந்தனவே தவிர, மனசு மூடவில்லை. மனசில் என்னென்னவோ சிந்தனைகள் உருண்டு புரண்டு கொண்டி ருந்தன. எனவே அவனும் உருண்டு புரண்டு கொடுத்துக் கொண்டிருந்தான்.
உள்வீட்டுக் கடிகாரம் மணி பதிமூென்று அடித்து ஓய்ந்ததும் அவனுக்குத் தெரியும். பெரிய பெருமாள் கோவில் அர்த்தசாம சேவைக்காகச், சங்கு ஊதும் முழக்கமும் அவனுக்குக் கேட்கத்தான் செய்தது.
அவன் தூங்கி விடவில்லை.
“என்ன சுந்தரம், இங்கேயே படுத்துக் கிடந்தா? ரூமூக்குப் போ” என்று அவனது ஒன்றுவிட்ட அக்கா வந்து அவனைச் சத்தம் கொடுத்தாள்.
சுந்தரமூர்த்தி திடுக்கிட்டுக் கண்ணைத் திறந்தான். அவனது நினைவுத் தொடர் அங்கேயே படீரென்று அறுந்து போன தன் காரணமாகத்தான் அந்தத் திகைப்பு.
எழுந்ததும் கண்ணணைத் திறந்து புறங்கைகளால் கசக்கிக் கொண்டான்.
“சரி, மணி தூங்கிட்டானா?” என்று கேட்டான்.
“அவன் அப்பவே தூங்கிட்டான். இனிமே என்ன? அவன் கவலையும் விட்டுது; உன் கவலையும் விட்டுது” என்று அக்கா மனம் நிறைந்து கூறிவிட்டுப் பெருமூச்செறிந்து கொண்டாள்.
“சரி, நீ போ. நான் போய்க்கிடுதேன்” என்று கூறி விட்டு, மீண்டும் ஈஸிசேரில் சாய்ந்தான் சுந்தரமூர்த்தி.
“நேரமும் தான் ஆச்சில்லே?” என்று கூறிக்கொண்டே அக்கா அங்கிருந்து அகன்று சென்றாள்.
கந்தரமூர்த்தி ஈஸிசேரில் படுத்தவாறு வானைப் பார்த்தான்; வானத்தில் ஒரே நட்சத்திரக் கூட்டம். ஒரே இருள். இருளில் துளித் துளித் துவாரங்கள் பொத்துக்கொண்டது போல் நட்சத்திரங்கள் மினுக்கின. அந்த இருளுக்கும் நட்சத் திரங்களுக்கும் மேலாக, எதையோ யாரையோ தேடிப் பார்ப் பதுபோல் அவன் கண்கள் ஒரு கணம் கூர்மை பெற்றன. மறுகணம் அவன் பெருமூச்சுவிட்டுக்கொண்டே சுற்றுமுற்றும் பார்த்தான்.
கூடத்தில் பெட்ரோமாக்ஸ் லைட் புஸ்ஸென்று எரிந்து கொன்டிருந்தது. காற்றுக் குறைந்து விட்டதால், விளக்கின் ஒளி மங்கிச் செத்து, சோகை பிடித்த மூஞ்சியைப் போல் பிரகாசமற்றும் காய்ந்து கொண்டிருந்தது. விளக்கின் மீது எண்ணற்ற அந்துகளும், ஈசல்களும் மோதி மோதி விழுந்து கொண்டிருந்தன. வீட்டுத் தாரிசாவிலும் உள்ளிலும் ‘டொன்கள் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தார்கள். சீதை மட்டும் இல்லாத அசோகவனத்தின் ராக்ஷஸக் காவல் மாதிரி இருந்தது அந்தக் கோலம்.
சுந்தரமூர்த்திக்கு அந்த விகார்க் காட்சியில் ஒரு கணம் கூட, கண் நிலை குத்தவில்லை. உடனேயே எழுந்து சென்று காஸ்லைட்டின் பிடியைத் திருகி நெகிழ்த்தினான்; மூச்சை இழக்கும் பெட்ரோமாக்ஸ் ஆங்காரமாக உறுமிக்கொண்டு ஒளியைப் பறி கொடுத்து அடங்கியது.
இருள் சூழ்ந்து பரவி, சுற்றுப்புறச் சூழ் நிலையெல்லாம் கட்புலனுக்கு மறைந்த பின்னால் சுந்தர மூர்த்தி மெதுவாக அடியெடுத்து வைத்து மாடிப்படியில் ஏறினான், மாடிக்குச் சென்று அறைக் கதவைத் தள்ளினான். கதவு தானாகவே திறந்துகொண்டாலும், திறக்கும்போது ஒரு தடவை முனகிக் கொண்டது.
சுந்தரமூர்த்தி உள்ளே நுழைந்ததும் கதவைப் பழைய படியும் சாத்திவிட்டுத் திரும்பினான்.
அங்கு மரகதம் துள்ளித் தாவிக் கட்டிலிருந்து இறங்கி ஒதுங்கினாள்.
சுந்தரமூர்த்தி நேராக மரகதத்திடம் போய்விடவில்லை. வெளியே பார்த்த ஜன்னலோரமாக நின்ற அவனும் ஜன்னல் வழியே வெளியே பார்த்தான். பிறகு ஏதோ நினைத்துக் கொண்டவன் மாதிரி விசுக்கென்று திரும்பி நேராகக் கட்டிலில் வந்து உட்கார்ந்தான்; மரகதம் இன்னும் கொஞ்சம் ஒதுங்கி நின்று கொண்டாள்.
கட்டிலில் புதிய தலையணைகளும், புதிய மெத்தை ஜமுக்காளமும் போடப்பட்டிருந்தன. அதன்மீது அப்போது அவன் பார்த்த. வானத்து நட்சத்திரங்களைப்போல, துளித் துளியாக உதிரிப் பூக்கள் சிதறிக் கிடந்தன. வானத்தை ஊடுருவிப் பார்த்தது போலவே, சுந்தரமூர்த்தி அந்தப் படுக்கையையும் ஊடுருவிப் பார்த்தான். எதிரே கிடந்த சிறு பெஞ்சியில் ஆறிப் போய் ஆடை படர்ந்த பால் இருந்தது. பக்கத்தில் ஏதோ தின்பண்டங்கள்.
சுவரோரத்தில் இருந்த குத்து விளக்கு மரகதத்தைப் போலவே மூச்சு விடாமல் ஆடாமல் அசையாமல் நின்று எரிந்து கொண்டிருந்தது.
“உட்காரேன்.”
மரகதம் உட்காரவில்லை. நின்று கொண்டுதானிருந்தாள்.
சுந்தரமூர்த்தி கட்டிலில் இருந்தவாறே அவளை எட்டிப் பிடிக்க முயன்றன்; மரகதம் கூச்சத்தால் விலகியதும், அவனது கைக்குப் பதிலாக அவளது சேலையின் முன் தானை , இான் சுந்தர மூர்த்தியின் பிடிக்குச் சிக்கியது.
பிடித்த பிடியை விடாமல் பற்றி இழுத்தான் அவன்; மரகதம் வேறு வழியின்றிச் சேலை செல்லும் திக்கில் தானும் திரும்பி வந்தாள், பக்கத்தில் வந்தவுடன் சுந்தரமூர்த்தி அவளைப் பற்றி உட்காரச் சொன்னான். கூசிக் குறுகிக் குன்றிய மரகதம் வேறு வழியின்றி அவனருகே உட்கார்ந்தாள்.
சுந்தரமூர்த்தி மெதுவாக அவள் கையை எடுத்துத் தன் கையில் வைத்துக்கொண்டான்; அந்த மிருதுவான கன்னிக் கரங்களின் ஸ்பரிச சுகத்தில் அவன் உடல் புளகாங்கிதம் அடைந்தது. இத்தனை காலமாக மனசில் தலை தூக்கி நின்ற பிரமச்சரியம் அந்த ஸ்பரிச இன்பத்தில் கரைந்தோடி விட்டது. தூங்கிக் கிடந்த ஆண்மை தன் முறுக்கை யெல்லாம் காட்டி முறைத்துத் தொனித்தது..
பற்றிய கையை அழுத்திப் பிடித்தான் சுந்தர மூர்த்தி.
“மரகதம், ஏன் பேசாம இருக்கே ?”
பதிலில்லை. அவள் எதைப் பேசுவாள்? எப்படிப் பேசுவாள்? சுந்தரமூர்த்திக்கும் ஆண்மையின் உத்வேகத்தில் அசட்டுத்தனம் தெரியாமல் ஏதோ பேசினான்.
“சரி, உனக்குப் பசிக்கிறதா? ஏதாவது சாப்பிடேன்” என்று தட்டிலிருந்த பண்டத்தில் ஒன்றை எடுத்து அவள் வாயருகே கொண்டுபோனான். அவள் வாயை மூடியவாறே தலையை ஆட்டினான்.
“சரி” என்று சொல்லிக்கொண்டே அதைத் தன் வாயில் போட்டுக்கொண்டான் சுந்தரமூர்த்தி.
சிறிதுநேரம் சுந்தரமூர்த்தி ஏதேதோ பேசிக் கொண்டே மரகதத்தின் உடம்பில் செல்லச் சரசங்கள் ஆடிக்கொண்டிருந்தான். மரகதமும் கணத்துக்கு ஒரு கோணலாக உடம்பை: நெளித்துக் கொடுத்துக்கொண்டு பேசாது இருந்தாள்.
குத்து விளக்குச் சுடர் எண்ணெய் சுவறி மெலிந்து வாட ஆரம்பித்தது; சிறிது நேரத்தில் திரி அழுவதும் விளக்கின் குளத்துக்குள்ளேயே எரிந்து கருகிச் சாம்பலாகி இருளில் அடங்கியது.
இருள் சூழ்ந்ததும், சுந்தரமூர்த்தி மரகதத்தை மெதுவாகத் தலையணையில் சாய்த்தான். கட்டிலுக்குக் கீழாகத் தொங்கிக் கிடந்த கால்களை மேலே எடுத்துவிட்டான், மறுகணம் சுந்தரமூர்த்தியின் முகத்தில் மரகதத்தின் சுடுமூச்சு உறைத்துக் கொண்டிருந்தது.
சுந்தரமூர்த்தி, மரகதத்தின் கன்னங்களை இருட்டில் தடவித் தடம் கண்டு கொண்டிருந்தான்………..வெளியி லிருந்து ஓவென்று அழுகுரல் கேட்டது.
“மணி முழிச்சிட்டான் போலிருக்கு” என்று சொல்லிக் கொண்டே சுந்தரமூர்த்தி தலையைச் சாய்த்தான்.
ஆனால்……….
வெளியில் அழுகைச் சத்தம் ஓயவேயில்லை. “ஙப்பா!..ஙப்பா!” என்று மழலைக் குரலில், அழுது கொண்டே முனகினான் மணி.
“தூங்குடா கண்ணு, அப்பா வெளியே போயிருக்கு. சித்தே நேரத்திலே வந்துரும்”, என்று. யரோ அவனைச் சமாதானப்படுத்தும் குரலும் கேட்டது. அது அக்காவின் குரல் தான்.
*ஙப்பா !… ஙப்பா ,…ங்…ங்.. “
பையன் அழுகையை நிறுத்தவில்லை. அக்கா அவனை எடுக்கப் போனாள். ஆனால் அவனோ ஒரே ஆங்காரத்துடன் உறுமிக் கொண்டே அழ ஆரம்பித்தான்.
சுந்தரமூர்த்தி பிடியை விலக்கி எழுந்து உட்கார்ந்தான்.
“மரகதம், விளக்கை ஏற்று .
“ம்” என்று செல்லமாக முனகிக்கொண்டே மரகதம் கட்டிலைவிட்டு இறங்கினாள். சிறிது நேரத்தில் செத்துப் போன குத்துவிளக்குச் சுடர் புனர்ஜென்மம் பெற்று மீண்டும் எரிய ஆரம்பித்தது…..
“யாரு, சின்னவன முழிச்சிருக்கான்?” என்று தூக்கம் கலைந்தெழுந்த பெண்ணின் குரல் உசாலிற்று.
“ஆமாமா, பெயலுக்கு அர்த்த சாமத்திலேயும் அப்பா ஞாபகம்தான்” என்றாள் அக்கா.
‘அதென்ன பண்ணும்? இருந்தாலும், அது முரண்டுக்கு அப்பா வந்தாலொழிய அடங்க மாட்டானே!” .
“அவனை எப்படிக் கூப்பிடறது. நல்லாயிருக்கா!”
“சரிதான்” என்று முனகிவிட்டு மீண்டும் தூங்க முனைந்தது உசும்பிய குரல்.
குழந்தையோ விடாமல், மூச்சு வாங்காமல் “ம்ம்” மென்று முனகி முனகி அழுது கொண்டிருந்தது. இடை யிடையே ஏக்கங் கலந்த விம்மலும் பொருமலும் ஓங்கித் தாழ்ந்தன.
சுந்தரமூர்த்தி ஒன்றும் பேசாமல் கட்டிவிலேயே உட்கார்ந்திருந்தான். !
ஒரு மனி… ஒன்றரை மணி.
அழுகை இன்னும் ஓயவில்லை. ஏங்கி ஏங்கி அழுது அழுது குழந்தையின் தொண்டைகூடக் கம்மிப் போய்விட்டது, அத்தனை அழுகையிலும் “ஙப்பா…. ஙப்பா” என்று முனகல் முக்கல் எதுவும் குறையவில்லை.
சுந்தரமூர்த்தியால் வெகு நேரம் இருக்க முடியவில்லை. “இரு வரேன்” என்று சொல்லிக்கொண்டே மாடிக் கதவைத் திறந்துகொண்டு கீழே இறங்கினான். மாடிப் படியிலிருந்த வாறே “அக்கா, அவனை இப்படிக்கொண்டா” என்று கேட்டான்.
அக்காவும் “வலுத்த பெயல். ஒய்றானா பாரு” என்று கூறிக்கொண்டே குழந்தையைச் சுந்தரமூர்த்தியிடம் ஒப்படைத்தாள்.
சுந்தர மூர்த்தியின் தோளில் சாய்ந்ததுமே குழந்தைக்கு அழுகை நின்றுவிட்டது.
“பாரேன். இத்தனை அழுகையும் எங்கேதான் போச்சோ?” என்று அதிசயித்துக் கொண்டே அக்கா திரும்பி விட்டாள்.
சுந்தரமூர்த்தி மணியைத் தூக்கிக்கொண்டு மாடிக்கு வந்து சேர்ந்தான். சுந்தரமூர்த்தி வந்தவுடன் மரகதம் என்ன நினைத்தாளோ என்னவோ? “ரொம்ப அழுதானோ?” என்று பரிதாபத்துடன் கேட்டாள்.
“ஆமா” என்று பதிலளித்துவிட்டுக் கட்டிலில் உட்கார்ந்தான், சுந்தரமூர்த்தி.
குழந்தை அங்கு நின்ற அந்தப் புது மனுஷியைக் கண்ட வுடன் மீண்டும் அழ ஆரம்பித்தது. சுந்தரமூர்த்தி “அழாதேடா கண்ணு” என்று சொல்லிக் கொண்டே தட்டில் இருந்த தின்பண்டங்களை எடுத்துக் குழந்தையின் வாயில் ஊட்டினான். குழந்தை மூக்கு வழியாக வடியும் சளியை உறிஞ்சிக் கொண்டே பட்சணங்களை மொக்க ஆரம்பித்தது.
“நீ ஏன் நிக்கிறே? வந்து படுத்துக்கோ ” என்றான் சுந்தரமூர்த்தி .
மரகதம் வந்தாள், உட்கார்ந்தாள்.
“படுத்துக்கோ.”
மரகதம் படுத்துக் கொண்டாள், சுந்தரமூர்த்தி தின்பண்டத்தையும் பாலையும் குழந்தைக்கு. ஊட்டிவிட்டு, தனக்கும் மரகதத்துக்கும் இடையில் குழந்தையைப் போட்டுத் தட்டிக் கொடுத்தான். குழந்தை அழாவிட்டாலும் தூங்க மாட்டாமல் சாதித்தது. அவன் தட்டிக் கொடுப்பதை எப்போது நிறுத்தினாலும், அது உசும்பி எழும்பியது. எனவே சுந்தரமூர்த்தி தானும் குழந்தையின் பக்கத்தில் குழந்தையின் முதுகைத் தட்டிக் கொடுத்தவாறே. கண்களை மூடினான்.
குத்து விளக்குச் சுடர் இன்னும் எரிந்து கொண்டடிருத்தது.
மரகதம் கட்டிலோரத்தில் ஆடாமல் அசையாமல் படுத்திருந்தாள். தட்டிக் கொடுக்கும் ஓசையும், குழந்தையின் உசும்பலும் நின்றுவிட்டது என்று தெரிந்தவுடன் அவள் மெதுவாக எழுந்து சுந்தரமூர்த்தியின் முகத்தைக் ‘குனிந்து’ பார்த்தாள். பிறகு நேராகக் குத்து விளக்கருகே சென்று அதைக் குளிர வைத்துவிட்டுத் திரும்பினாள்.
சுந்தரமூர்த்தி திடுக்கிட்டு விழித்தெழுந்தான். தான் எப்போது தூங்கிப் போனோம் என்பதே அவனுக்குத் தெரியவில்லை. கழுத்தில் இளம் ஸ்பரிச சுகம் பட்டதும், அவன் “மரகதம்” என்று கூறிக் கொண்டே அந்தக் கையைப் பற்றினான். அது குழந்தையின் கை, மறுகணம் அவன் கை படுக்கையைத் துழாவியது.
மரகதத்தைக் காணவில்லை.
“மரகதம்?’ என்று மெதுவாகக் கூப்பிட்டுக் கொண்டே கீழே இறங்கினான். கீழ் வீட்டிலிருந்து கடிகாரம் ஐந்து மணி அடித்தது. எங்கோ ஒரு சேவல் கூலி ஓய்ந்தது.
வெளியே பார்த்த ஜன்னல் ஓரத்தில் மரகதம் படுத்திருந்தாள். விடி நிலவின் மங்கிய ஒளித் துண்டம் அவள் மீது அப்பிக் கிடந்தது. அவள் அயர்ந்து தாங்கிக்கொண் டிருந்தாள்.
“மரகதம்!”
சுந்தரமூர்த்தியின் கை பட்டதுமே அவள் திடுக்கிட்டு விழித்தாள்.
“இங்கே ஏன் படுத்தே? பனி , விழுமே” என்றான் சுந்தரமூர்த்தி.
மரகதம் எழுந்து உட்கார்ந்து ஆடையை ஒழுங்கு செய்தாள்.
“சரி. பொழுது விடிஞ்சிட்டுது. நீ வேணுமானா, கீழே போ” என்றான்.
மரகதம் ஒன்றுமே பேசாமல் அங்கிருந்து எழுத்து அடி பெயரும் ஓசைகூடக் கேட்காமல் வாசலுக்குச் சென்றாள். திறந்து மூடிய கதவு முனகிக்கொண்டது மட்டுமே கேட்டது.
2
சுந்தரமூர்த்திக்கு மரகதம் இரண்டாவது மனைவி, அவனது முதல் மனைவியான சங்கரவடிவு சுமார் எட்டு மாச காலத்துக்கு முன்னால் காலமாகிவிட்டாள். அவள் இறந்தபோது சுந்தரமூர்த்தியின் செல்வச் சிரஞ்சீவிப் புத்திரப் பேறான மணிக்கு வயது ஒன்று முடிந்து ஒரு மாதம்.
சுந்தரமூர்த்திக்கு இப்போதும் வயசு ஒன்றும் அதிகமாகிவிடவில்லை; அநேகமாக முதற் கல்யாணம் பண்ணிக் கொள்கிற வயசுதான். முப்பதை இன்னும் தாண்டவில்லை என்றாலும் கடந்த மூன்றாண்டுக் காலமாக அவன் பெற்றிருந்த அனுபவம் இன்னொரு முப்பது வருஷத்துக்குக் காணும்.
சக்கரவடிவு அப்படி ஒன்றும் அழகியில்லை என்றாலும் அவளைச் சுந்தரமூர்த்தி மனம் விரும்பித்தான் கல்யாணம் செய்துகொண்டான். கல்யாணம் பண் ணிய முதல் வருஷம் – இடையிலே ஒரு மூன்று மாதக் கருச் சிதைவு ஏற்பட்டபோதிலும்கூட அவர்கள் இருவருக்கும் மிகுந்த ஆனந்த மயமாய்த்தானிருந்தது. அவர்கள், இருவரும் ஒருவருக்கொருவர் சொர்க்கமாகத் தோன்றி ஆனந்தம் பரிமாறிக் கொண்டிருந்தார்கள். அடுத்த வருஷ மத்தியில் தான் மணி பிறந்தான். ஆனால் மணி பிறந்தபோது அவள் பிரசவத்திலேயே மிகவும் கஷ்டப் பட்டுப் போனாள். அப்போது நொம்பலப்பட்டுப் போன உடம்பு பின்னால் அவள் மரணமடையும் வரையிலும் கொஞ்சம்கூடத் தேறவில்லை. அதற்குக் காரணம், பிரசவம் கழிந்த சில மாதங்களிலேயே அவளுக்கு உள்ளுக்குள்ளாக எப்போதோ பற்றியிருந்த க்ஷயரோகம் ஆட்டம் காணத் தொடங்கிவிட்டது.
க்ஷயரோகம் என்றதுமே சுந்தரமூர்த்திக்குக் குலை நடுங்கியது. அந்த நோயிலிருந்து அவளை எப்படியாவது மீட்டாக வேண்டும் என்று அரும்பாடு பட்டான். அவனுக்குப் பண வசதியும் அப்படியொன்றும் கிடையாது. ஏதோ மாதா மாதம் சம்பளப் பணம் என்று ஆபீசில் எண்ணிக்கொடுப்பது அவன் குடும்ப நிர்வாகத்துக்குப் போதுமானது என்பதைத் தவிர, வேறு வகையில் அவனுக்கு எந்த பூஸ்திதியோ பிதிரார்ஜிதமோ கிடையாது. கல்யாணத்துக்குக்கூட, கடன் வாங்கித்தான் நடத்த வேண்டியிருந்தது. இருந்தபோதிலும் அவன் படாத பாடுபட்டு இருக்கிற நகைகளை ஒன்றிரண்டாக விற்று, இரண்டு மூன்று இடங் களில் கடனும் வாங்கிச் சங்கரவடிவின் உயிரை மீட்பதற்காக அரும்பாடுபட்டான்.
சுற்றுச் சூழக் கடன், வீட்டிலே கைக்குழந்தையைப் பார்க்கக்கூட ஆளில்லாத சங்கடம். ஆபீஸில் கெடுப்பிடி, நாளாக நாளாக வரவும் செலவும் ஒத்துப் போகாத இழுபறி இத்தியாதி சங்கடங்களோடும், ‘சுந்தரமூர்த்தி மனத்தைத் தளரவிடாது சங்கரவடிவின் வாழ்க்கை உத்தார ணத்துக்காக மன்றாடிக் கொண்டிருந்தான். ஆனால், அவள் முயற்சியெல்லாம் முடிவில் விழலுக்கிறைத்ததாகவே முடிந்தது.
சங்கரவடிவு ஒருநாள் இரவு அமைதியாகக் கண்களை மூடி விட்டாள். மனைவி இறந்தவடன் அவனுக்கு அழக்கூடத் திராணியில்லை; மனசு அத்தனை தூரம் மரத்துப்போயிருந்தது. கடைசிக் காலத்தில் அவள் கஷ்டப்படாமல் போய் விட்டால் நல்லது என்றுகூடச் சில வேளை நினைத் திருந்தான். சங்கரவடிவு காலமானவுடன் அவனுக்கிருந்து மனநிலையில் எங்காவது தேசாந்திரியாகக்கூடப் போயிருப் பான்; ஆனால் காலில் கட்டிய தளை மாதிரி போனவள் ஒரு பிள்ளையையும் போட்டுவிட்டுப் போனது ஒன்று தான் அவனை இந்த உலகோடு ஒட்ட வைத்திருந்தது.
மனைவி இறந்தவுடன் குழந்தையைப் பராமரிப்பதே அவனுக்குப் பெரும் சங்கடமாயிருந்தது. இருந்தாலும் வாழாவெட்டியாக இருக்கும் தன் ஒன்றுவிட்ட அக்காளின் உதவியினால், குழந்தையை ஓரளவு கவனித்துக் கொள்ள ஏற்பாடு செய்தான். சங்கரவடிவு இறந்தவுடனேயே அவனை இரண்டாம் கல்யாணம் செய்து கொள்ளும்படி அக்காவும் ஊரிலுள்ளவர்களும் வற்புறுத்தினர். என்றாலும் இல்லற வாழ்க்கையில் முதற்படியிலேயே ஊமையடி வாங்கி மரத்துப் போன அவன் உள்ளத்தில் இரண்டாம் கல்யாணத்தைப் பற்றிய எண்ணமே உதிக்கவில்லை. மேலும், காதலைப் பற்றிய சொப்பனக் கனவெல்லாம் சங்கரவடிவு படுக்கையில் சாய்ந்ததுமே அவனுக்கு அற்றுப் போய்விட்டது. வாழ்க்கையிலிருந்து அவன் பெற்ற அனுபவம் ஒரே கசப்பு. மீண்டும் அதே கசப்பை ருசிப்பதற்கு அவன் அஞ்சினான்.
என்றாலும், ஊராரின் வற்புறுத்தலும் அக்காவின் வற்புறுத்தலும் ஒருபுறமிருக்க, சுத்தரமூர்த்திக்குக் குழந்தை யின் பொகுட்டாவது இன்னொரு கல்யாணம் பண்ணிக் கொள்ளத்தான் நேருமோ என்ற சந்தேகமும் கொஞ்ச நாளாய்த் தோன்ற ஆரம்பித்தது. அத்துடன் அக்காவையும் புகுஷனுடன் வாழ னவக்கச், சிலர் முயற்சிகள் செய்து வந்ததால், அவள் எந்த நேரத்தில் வீட்டைவிட்டுப் போவாள் என்பதும் நிச்சயமில்லை. எனவே இந்த மாதிரியான நிலையில் ஒருநாள் அவன் அக்காவிடம் இரண்டாம் கல்யாணத்துக்குச் சம்மதம் தெரிவிக்கவே நேர்ந்தது.
அக்கா தான் மரகதத்தைத் தேடிப் பிடித்துப் பெண் பேசினாள். கல்யாணமும் டாப்புச் சிறப்பு எதுவுமில்லாமல் , ஆண்டவன் கோயில் சந்நிதியில் நாலு இன பந்துக்களுடன் சுருக்கமாக நடந்தேறியது.
மரகதமும் சுந்தரமூர்த்திக்கு முந்தி விரிக்கும் பத்தினி யாகி, கிருஹலஷ்மியாய் வீட்டுக்கு வந்தாள்; விளக் கேற்றினாள்.
குழந்தைக்கு அறிவு வளர்ந்து விநயம் தெரிந்து கொள்ளதற்கு முன்பாகவே, மரகதத்தைக் கட்டிக்கொள்ள விரும்பினான்; அதனால்தான் சங்கரவடிவு காலமாகி வருஷம் கழிவதற்கு முன்பே அவன் மஞ்சள் கயிற்றைக் கையால் தொட்டான். என்றாலும் அவனைப் பொறுத்த வரை சங்கரவடிவு படுக்கையில் விழுந்த அன்றே அவள் இறந்தது பாதிரிதான் இப்போது பட்…து. காரணம், அந்த ஒரு வருஷ காலத்தில் அவன் பட்டபாடு இன்னும் பிரத்தியட்சப் பிண்டமாகக் கண் முன் நிற்பதுபோலத் தோன்றினாலும் எத்தனையோ யுகக்கணக்காய் அனுபவித்த வேதனையாகத் தான் தெரிந்தது.
என்றாலும் மரகதத்தைக் கைபிடித்தபோது அவன் மனசில் எத்தனையோ சந்தேகங்கள் அலைக்கழிந்து கொண்டிருந்தன.
குழந்தைக்காகத்தான் நான் மணந்துகொள்கிறேன் என்றலும் மரகதம் குழந்தையை எப்படிக் கவனிப்பாளோ? என்ன இருந்தாலும் பெற்ற தாய்க்கு வருமா? இவள் குழந்தையைச் சரியாகக் கவனிக்காவிட்டால்…?
“இல்லறத்திலேயே பிடிப்பற்றுப் போனபின் மீண்டும் மணந்து கொள்கிறேன். குழந்தையின் நன்மை என்று கூறி, கட்டிய மனைவியின் நன்மையை நான் மறந்து விட முடியுமா? அவளும் சின்னஞ் சிறிசு, என்னென்னவோ இன்பக் கனவுகளோடு தான் என் வீட்டுக்கு வருகிறாள். அந்தக் கனவுகள் என்னால் பாழடைந்துவிடக்கூடாது, ஆனால் அந்த ஆசைக் கனவுகளுக்கு இந்தக் குழந்தையே முட்டுக்கட்டையானால்……..?”
“அப்படியானால் தான் மரகதத்திடம், திருப்திகரமாக நடந்தால் தான் அவளும் குழந்தையிடம் திருப்திகரமாக நடந்து கொள்வாள். அப்படியானால் தான் நான் என் குழந்தைக்கும் மனைவிக்கும் துரோகம் இழைக்காமல் வாழ முடியும்”.
சுந்தரமூர்த்தியின் மனசில் இப்படி என்னவெல்லாமோ தோன்றித்தோன்றி மறைந்தன.
ஆனால் அவன் தன் புது மனைவியைச் சந்தித்த அன்றிரவிலேயே, அந்த முதல் சந்திப்பிலேயே குழந்தை குறுக்கிட்டு, அந்தச் சந்திப்பின் இங்கிதத்தைப் பாழ்படுத்தி விட்டது.
அதன் பின் அவர்கள் சந்திக்காமல் போகவில்லை, சந்தித்தார்கள். குழந்தை குறுக்கிடாமலும் இருந்ததுண்டு. எனினும் அவன் நெஞ்சில் ஒரு பயம். ஆனந்த மயமான கனவுகளை எதிர் நோக்கித்தான் மரகதம் அந்த முதல் நாள் இரவு தலை சாய்த்திருப்பாள். எத்தனையோ வருஷ காலமாக, எட்டாத இன்பக் கனலாக அவள் மனசில் , தங்கித் தவம் கிடந்த அன்றைய இரவு அப்படிப் பாழ்பட்டுவிட்டதே. அதனல் அவள் மனம் புண்ணடைந்திருக்குமோ? அதனால் அவளுக்கு, குழந்தை மீது வெறுப்பேற்பட்டிருக்குமோ? இந்தக் குழந்தையினால், வயது மீறாத கணவனை அடையவில்லை யென்றாலும், இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டோமே என்று அவள் எண்ணுவாளோ? அதனால் அவள் மனமுடைந்து போவாளோ?
சுந்தர மூர்த்திக்கு அந்த ஒரு நாள் இரவு அனுபவத்தின் மீது பற்பலவிதமான எண்ணங்களும் உண்டாகிக்கொண்டே யிருந்தன.
மரகதம் இப்போது தனியாகத்தான் இருக்கிறாள். அக்காகூட ஊருக்குப் போய்விட்டாள். இப்போது அவள் குழந்தையை எப்படிக் கவனிக்கிறாள்?
சுந்தரபூர்த்தி அதையும் சுவனிக்கத்தான் செய்தான்; என்றாலும் அதிலிருந்து அவனால் எதுவும் நிர்ணயிக்க முடிய வில்லை. எனவே அவன் மரகதத்தின் ஒவ்வொரு அசைவை யும்கூட அளவிட்டுக் கொண்டிருந்தான்.
ஆனால் மரகதமோ?
மரகதம் தன்னைத் தானே அளவிட்டுக்கொண்டிருந்தாள்.
இரண்டாம் தாரமாய் வாழ்க்கைப்படப் போகிறோம் என்பதை மரகதம் அறிந்தபோதிலேயே அவள் அதைப்பற்றி எந்தவிதக் கவலையும் படவில்லை. கட்டப்போகும் வழக்கமாக இருக்கும் இரன்டாம். கலியாண மாப்பிள்ளையான கிழவனாக இராமல் வயசு மாப்பிள்ளையாக இருந்ததொன்றே அவளுக்கும் சமாதானம் தந்தது. குழந்தையுள்ள தகப்பனா யிற்றே என்றாவது, இறந்துபோன மனைவியை எண்ணி மறுகுவாரோ என்றாவது அவள் எண்ணிப் பார்க்க வில்லை.
ஆனால், சுந்தரமூர்த்தி நினைத்ததுபோல், மரகதத்துக்கு முதல் ஏமாற்றம் முதல் இரவின்போது நிகழவில்லை. அதற்கு முன்பே நிகழ்ந்துவிட்டது.
மரகதத்தைப் பெண் அழைத்துக்கொண்டு வந்து உள் வீட்டில் விளக்கு, முன்னால் வைத்திருந்தார்கள், தலையிலே கொத்துப் பூ: கழுத்து நிறைந்த நகைகள். முகத்திலே புது மணப் பெண்ணின் மோஹனம்; நாணம்……….
குனிந்த தலை நிமிராமல் அந்தப் புது வீட்டில் உட்கார்ந்திருந்தாள் , மரகதம். அப்போது சுந்தரமூர்த்தியின் பிள்ளை மணி தளர்நடை நடந்து அங்கு வந்தான்: உடனே அக்கா அவனைத் தூக்கி மரகதத்தின் மடியில் விட்டு, “இந்தா பாருடா இது தான் அம்மா?” என்று அறிமுகப்படுத்தினாள். குழந்தை அவளை ஒருமுறை ‘குர்’ என்று பார்த்துவிட்டு, அக்காவிடம் பாய்ந்து ஒட்டிக் கொண்டது.
அதற்குள் பக்கத்திலிருந்த பாட்டி “பெத்த அம்மா தான் அம்மாவா? இவளும் ‘ அம்மா தான்!” என்று சொன்னாள்.
மரகதத்துக்கு அப்போதே சுருக்கென்றது, ‘கல்யாணம் பண்ணி, புருஷனோடு இன்பமாக இருக்கலாம் என்று தான் வந்தாள்… ஆனால் தாலி கழுத்தில் ஏறு முன்பே தனக்கு ‘அம்மாப்’ பட்டமா? அதற்குள் தன் மடியில் குழந்தையா? அதற்குள் நான் தாயாராகி வீட்டேனா?…..
அவளுக்கு அந்தப் பொழுதில்தான் நெஞ்சம் திடுக்கிட்டு விட்டது. என்றாலும் அதனால் அவள் மனங்கலங்கி அழுது விட வில்லை. அதன்பின் மணவறையில் நிகழ்ச்சியின் போது கூட, அவளுக்குக் கண்ணீ வரவில்லை.
ஆனால், அந்த நிகழ்ச்சியால் சுந்தரமூர்த்தி எதிர்பார்த் ததுபோல் அவன் மனசில் கசப்புணர்ச்சி எதுவும் ஏற்பட்டு விடவில்லை. அவளுக்கு ஏமாற்றம் தான் ஏற்பட்டது. காதலை எதிர்பார்த்துத்தான் அவள் கல்யாணம் செய்து கொண்டாள். என்றாலும் காதலுக்கு அடிப்படையான தாய்மை உணர்ச்சி அவளிடம் தலை தூக்காவிட்டாலும் மக்கிப் போகவில்லை. எனவே அவள் அந்தக் குழந்தையைக் கண்டு பரிதாபம்தான் பட்டாள்.
இருந்தாலும், சுந்தரமூர்த்திக்கு அவள் மனசை அளந்து எடைபோட்டுவிட முடியவில்லை. திகைத்தான். குழந்தையோ இத்தனை நாள் பழகியும் தன்னிடம்தான் பாய்ந்து வருகிறதே இதய, அவளிடம் போக மாட்டேன் என்றது. அதனால், அவள் அதனிடம், பிரியமாயில்லை என்று நிர்ணயித்து , விடலாமா?……..
மரகதமே அந்தத் தாயில்லாக் குழந்தை மீது பரிதாபப் பட்டாள்.
நானும் நாளை தாயாகிவிடக் கூடும். அப்போது என் குழந்தையையும் கவனிக்கத் தானே வேண்டும். அன்று “தலைப் பிள்ளை ஆண் பிள்ளையாகப் பிறக்கட்டும்” என்று அத்தை ஆசீர்வதித்தாளே. எனவே இப்போது பிள்ளையில்லை யென்றால் எப்படியோ ஒரு வருஷத்திலோ இரண்டு வருஷத்திலோ எனக்குப் பிள்ளை பிறக்கத்தானே போகிறது! அந்தப் பிள்ளையை உதறித்தள்ள முடியுமா?
“ஆனால், கலியாணம் ஆன அன்றே குழந்தையா? கட்டிய புருஷனுடன் பழகி நாலு வார்த்தை கூச்சமில்லாமல் பேசுவதற்குள்ளேயா குழந்தை? முதல் இரவின் சந்திப்பிலேயே குழந்தையின் கூக்குரலா?
“ஆனால், அது என்ன செய்யும்? அது அறியாத குழந்தை, அப்பாவைப் பிரிந்து இருக்கச் சகிக்காத குழந்தை. அப்பாவை நான் பிரித்துக்கொண்டு போய்விட்டேன் என்று அது அழுததா? அதற்கில்லாத உரிமை எனக்கு ஏது? நான் நேற்று வந்தவள். அது அவரின் பிரதிபிம்பம்; ஜீவப் பகுதி. எனவே அதைப் பகையாடுவதற்கு நான் யார்? எனக்காக அவர் என்னை மணந்துகொண்டாரா? இல்லை அவருக்காகவா? பார்க்கப் போனால், இந்தக் குழந்தைக்காகத்தானே அவர் என்னை மணந்துகொண்டார்?……..”
மரகதம் தன் மனசுக்குள்ளாக எத்தனையோ எண்ணி னாள், அவள் கண்ட முடிவெல்லாம் குழந்தையின் அன்பை முதலில் வென்றால் தான், பின்னர் கணவனின் அன்பை வெல்ல முடியும் என்பதுதான்.
ஆனால் சுந்தர மூர்த்தியோ மனைவியின் அன்பை வென்றால் தான் குழந்தையின் அன்பை அவள் வெல்லுவாள் என்று தான் கருதினான்.
இருந்தாலும் இருவரும் ஒருவரையொருவர் பல மாத காலமாக அறிந்துகொள்ளவில்லை.
3
அன்று சுந்தர மூர்த்தி இரவு ஒன்பது மணிக்குமேல் தான் வீட்டுக்கு வந்தான்; எங்கேயோ சினிமா பார்த்து விட்டு, வரும்போது, மரகதத்துக்குப் பூவும், மணிக்கு மிட்டாயும் வாங்கிக்கொண்டு வந்தான்.
வீட்டுக்குள் நுழைந்ததுமே ” ஏன். இத்தனை நேரம்?” என்று கரிசனையோடு விசாரித்தான் மரகதம்.
“ஏன், மணி. தேடினானோ?”
“இல்லை, நான்தான் தேடினேன்.”
“அவன் தூங்கிவிட்டானா?”
” நல்லrrத் தூங்கினான். கொட்டுக் கொட்டென்று விழித்துக் கொண்டிருக்கிறான்” என்று கூறிக்கொண்டு வீட்டுக்குள் சென்று மணியைக் கையில் தாக்கிக் கொண்டு வத்தாள் மரகதம்.
“இந்தா பாருடா அப்பா, போ” என்று காட்டினாள்.
சுந்தரமூர்த்தி கைகளை நீட்டினான். மணி அவனிடம் போக மறுத்துவிட்டு, மரகதத்தைப் பார்த்து ” இம்பா இம்பா” என்று ஏதோ சொன்னான்.
“வர மாட்டாயா?”
“ம்பா ம்பா”:
“அவனுக்குப் பால் வேணுமாம், அதான் அப்படி!”
“அடேடே! அவன் பாஷையை நீ கூடக் கத்துக் கிட்டியா?”
“பின்னே?”
சுந்தரமூர்த்தி உள்ளே சென்று படுக்கையில் அமர்ந்தான். அவன் மனசில் வெளியிலிருந்து வரும்போதே சரச எண்ணங்கள்தான் தலை தூக்கி நின்றன. எனவே தான் அவன் மரகதத்துக்குப் பூ கூட வாங்கி வந்திருந்தான். எனவே அவன் விளக்கை இறக்கி வைத்துவிட்டு மரகதத்தின் வரவுக்காகக் காத்துக்கொண்டிருந்தான்.
ஆனால் மரகதமோ கூடத்தில் உட்கார்ந்து, குழந்தையை உறங்கப் பண்ணிக்கொண்டிருந்தாள்; ஆனால் குழந்தையோ உறங்கமாட்டராமல் அடம் பிடித்துக்கொண்டிருந்தான்.
சுந்தரமூர்த்தியால் அதுவரை தாங்க முடியவில்லை.
“மரகதம், தூக்கம் வரல்லே ? வாயேன்.”
“எனக்கு வந்தால் போதுமா? மணிக்கு–“
சுந்தரமூர்த்தி பதிலே பேசவில்லை. அன்று மணி தன்னிடம் வராததைக் கண்டே அவனுக்கு மரகதத்தின்மீது நம்பிக்கை ஏற்பட்டது. குழந்தையை அவள் நேசிக்கிறாள் என்று பட்டது.
‘ஒரு மட்டும் என் எண்ணம் பாழடையாமல் போயிற்று!’
சுந்தரமூர்த்தி ஏதேதோ எண்ணிக் கொண்டு படுத்துக் கிடந்தான். வெளியில் கூடத்தில் மரகதம் ஏதோ தாலாட்டிப் பாட்டைப் பாடிக்கொண்டே மணியை உறங்கப் பண்ணிக் கொண்டிருந்தாள்.
அந்தத் தாலாட்டு மணியை மட்டும் உறங்க வைக்க வில்லை; சுந்தரமூர்த்தியையும், நிம்மதியோடு உறங்க வைத்தது.
– 1950 – க்ஷணப்பித்தம் – முதற் பதிப்பு: அக்டோபர், 1952 – மீனாட்சி புத்தக நிலையம், 50, மேலக் கோரத் தெரு : மதுரை கிளை : 228, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை