தாயுமானவர்





(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பால் ஒழுகும் முகம்! இனிய தேன் ஒழுகும் குரல்! குருத்து போன்ற இளமை! அறிவோ காலைச் சூரியன் போல் தகதகக்கும் பண்பும், நெறியும். படிப்பும் கூடிய அந்த இளைஞன் தான் திருச்சிராப்பள்ளி அரண்மனையில் பெரிய சம்பிரதி. (முக்கிய கணக்குப் பிள்ளை)

நாயக்க வம்சத்தார் ஆண்ட காலம்!
தொடக்கத்தில் முத்து வீரப்ப நாயககும் அவருக்குப் பின் அவரது அரசியும், பின்னர் விஜயரங்க சொக்கநாத நாயக்கரும், அவர் மறைவுக்குப் பின் அவரது அரசி மீனாட்சியும் ஆட்சி புரிந்து கொண்டிருந்தார்கள்.
இதில் விஜயரங்க சொக்கநாத நாயக்கரிடமும் அவரைத் தொடர்ந்து அவரது மனைவியார் மீனட்சியாரிடமும் கணக்குப்பிள்ளையாக வேலை பார்த்தவர் இந்த இளைஞர். (மீனாட்சியின் காலம் 1654-1658)
விதவை மீனாட்சி இந்த இளைஞரிடம் அடிக்கடி கணக்குகள் கேட்க வருவார்.
இளைஞனின் அறிவுக் கூர்மை மட்டுமல்ல, அவனது இளமையான அழகும் மீனாட்சியைக் கவர்ந்தது.
அவன் மீது அவளுக்குத் தீராத காதல் தோன்றியிருந்தது. அதைப் பல வழிகளில் இளைஞனுக்கு உணர்த்திப் பார்த்தாள். இளைஞன் வேறு எல்லா விஷயங்களிலும் புரிந்து கொள்பவன். ஆனால் இந்த விஷயத்தில் மட்டும் சூட்டிகை இல்லை.
இதை அறிந்த அரசிக்கு இன்னும் தாபம் அதிகமாகியது.
ஒரு நாள் கணக்குப்பிள்ளை இளைஞன் தனியாக அவள் அறைக்கு வந்தபோது, உடனே அவனது கையைப் பிடித்து இழுத்தாள், “தாயுமானவர்! என் தாபத்தைத் தணி!” என்று வாய் திறந்து கெஞ்சிக் கேட்டாள்.
இளைஞன் தாயுமானவன் திடுக்கிட்டான்.
அரசி செய்வது தகாத செயல் என்று புரிந்து கொண்டான், கையை விருட்டென்று உருவினான், அந்தக் கணமே வெளியே ஓடினான்.
நேராக வீட்டுக்கு வந்தான், தனது சிறிய தாயார் மகனான அருளைய பிள்ளையோடு ஊரை விட்டுப் புறப்பட்டான். தென் திசை நோக்கிச் சென்றான்.
நல்லூர் என்னும் ஊரை அடைந்து இளைப்பாறும்போது தனது சிவபூஜைப் பெட்டகத்தை எடுத்துக் கொள்ளவில்லை என்று நினைவு வந்தது.
“அருளையா! நீ போய் சீக்கிரம் எடுத்து வா!” என்று கூறினான்,
அங்கே அருளையா வருவதற்காகக் காத்திருந்தபோது கருணாகரக் கடவுள் மீது பதிகம் ஒன்றைப் பாடினான்.
சீக்கிரம் அருளையனும் பெட்டகத்தோடு திரும்பினான்.
இருவரும் மேலே புறப்பட்டார்கள்.
தாயுமானவருடைய தந்தை கேடிலியப்ப பிள்ளை. இவருக்கும் மனைவி கெஜவல்லிக்கும் பிறந்த முதல் மகன் சிவ சிதம்பரம்.
சிவ சிதம்பரம் பிறந்த பின்னர் கேடிலியப்பருக்கு வெகு நாள் குழந்தை பிறக்க வில்லை.
ஒரு சமயம் கேடிலியப்பரின் தமையனார் வேதாரண்யப் பிள்ளை வந்து, “உனக்காவது ஒரு மகன் இருக்கிறான். எனக்கு மகவு இல்லையே” என்று சொன்னபோது,
கேடிலியப்பர் சிறிதும் தயங்காமல், “அண்ணா! சிவசிதம்பரத்தையே தங்களுக்கு வளர்ப்புப் பிள்ளையாகத் தருகிறேன்” என்று கூறிச் சிவசிதம்பரத்தை அவரிடம் அளித்து விட்டார்.
பின்னர் மகவு இல்லாத கேடிலியப்ப பிள்ளை திருச்சிராப்பள்ளி நாயக்கரிடம் (1608-1625) கணக்குப்பிள்ளையாக அமர்ந்தார்,
தினந்தோறும் திருச்சிராப்பள்ளி மலைக் கோவிலில் எழுந்தருளியிருக்கும் தாயுமானவ சுவாமியைத் தொழுது வர கெஜவல்லி கர்ப்பம் அடைந்தாள்.
தம்பதிகள் மகிழ்ச்சி பொங்கும்படி கெஜவல்லிக்கு ஒரு ஆண் மகவு பிறந்தது.
அந்த மகன்தான் தாயுமானவன், திருச்சிக் கடவுள் பெயரையே அவனுக்கு வைத்தார் கேடிலியப்ப பிள்ளை.
தாயுமானவன் கல்வி கற்று சிறந்த அறிவு ஆற்றலோடு இருக்கும்போது, தந்தை கேடிலியப்ப பிள்ளை மரணமெய்தினார்.
தந்தையைப் போலவே மகனும்-நுண்ணிய அறிவோடு இருப்பதைப் பார்த்த நாயக்கர் மன்னர், தாயுமானவனையே தமது கணக்குப் பிள்ளையாக ஏற்றுக் கொண்டார்.
அரசாங்க வேலை செய்து வரும் நாளையில் தாயுமானவன் தினமும் மலைக்கோட்டை அருகில் இருக்கும் மௌன மடத்துக்குச் சென்று அங்கு எழுந்தருளியிருக்கும் மொன குருவை மனதாரத் தொழுது வந்தான்.
இவரது பக்தி சிரத்தையைக் கண்ட மௌன் குரு, இவருக்குத் தெய்வ அருள் லபிக்கும்படி அருள் புரிந்தார். அவர் அருள் பெற்ற நாளிலிருந்து தெய்வீகப் பாடல் நாகப் பாட ஆரம்பித்தான் தாயுமானவன்.
பலவிதப் பாமாலைகள் இயற்றி இறைவனைத் தொழுவதுடன், அரண்மனையில் கணக்குப்பிள்ளை உத்தியோகத்தையும் செவ்வனே நடத்தி வரும்போதுதான் அரசி மீனாட்சி அவன் மீது மோகம் வைக்கும் சம்பவம் நிகழ்ந்தது.
நல்லூரை விட்டுக் கிளம்பிய தாயுமானவர், பின்னர் விராலிமலை, திருக்கோகர்ணம், இராமேசுவரம் ஆகிய ஸ்தலங்களுக்குச் சென்று அந்தந்த ஊர் இறைவன் மீது பதிகங்களைப் பாடிய வண்ணம் சென்றான்.
இராமேசுவரத்தில் தாயுமானவனின் அண்ணன் சிவசிதம்பரம் தாயுமானவனைச் சந்திக்க, பின்னர் எல்லாருமாகத் திருமறைக் காட்டுக்கு வந்து அங்கே குடியிருந்து வரலானார்கள்.
இங்கே, அண்ணன் வற்புறுத்த தாயுமானவர் மட்டுவார் குழலி என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இந்த இல்லற வாழ்வில் தாயுமானவருக்குப் பிறந்த ஒரே பிள்ளை கனகசபாபதி.
இல்லறத்தில் இருக்கும்போதே தாயுமானவரின் மனம் துறவறத்தை நாட, அதற்கு ஏதுவாக இரு சம்பவங்கள் நிகழ்ந்தன. முதலில் தாயுமானவரின் தாய் இறந்தாள், பின்னர் அவரது மனைவியும் இறந்தாள்.
தன் மகன் கனகசாபாபதியை தமையன் முத்துவீரப்ப சிவசிதம்பரத்திடம் விட்டுவிட்டு,
தாயுமானவர் துறவு பூண்டு அருளை யாவையும் அழைத்துக் கொண்டு சிவத் தொண்டு செய்யப் போனார்.
தாயுமான சுவாமி மொத்தம் எழுதிய பாடல்கள் 1452.
1661ல் காட்டூரணியை அடைந்து அங்கே மோன நிட்டையில் ஆழ்ந்த தாயுமானவர் அந்த ஆண்டு தை மாதம் திங்கட் கிழமை அன்று இறைவனடியைச் சேர்ந்தார்.
அவர் சிவப் பதவி துடைத்த இடம் இப்பொழுது லட்சுமிபுரம் என வழங்கப் படுகிறது.
பக்திச் சுவை ஊட்டும் தாயுமானவரின் பாடல்கள் இன்னும் நமக்கு இறை உணர்ச்சியையும், பக்திக் கண்ணீரையும் தருபவை.
ராமேசுவரம் கோவிலில் தண்டு இறங்கிய போர்ச்சுக்கீஸியர்களை தாயுமானவர் ஒரு படை சேர்த்து விரட்டினார் என்பது ஒரு செய்தி.
தாயுமானவரின் மாணாக்கர்கள் அருளையரும், கோடிக்கரை ஞானியாகும் ஆகும். குருவின் மறைவுக்குப் பிறகு இவர்கள் தாயுமானவரின் கீர்த்தனைகளை நாடெங்கும் பரப்பினார்கள்.
“எல்லாம் இன்புற்றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேனென்றறியேன் பராபரமே.” – பராபரக் கண்ணி
– மங்கையர் மலர், நவம்பர் 1981.