தாயில்லாக் குழந்தை




முன்னுரை
மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – வீர உணர்வு ஊட்டும் 113 கதைகள்
புறநானூறு மாபெரும் வரலாற்று ஏடு. தமிழர் வாழ்க்கைக் கணக்குப் பொறிக்கப் பெற்றுள்ள பேரேடு; பாடல்கள் நானூறே. படிக்கத் தொடங்கி விட்டாலோ , பெறும் அனுபவங்கள் பலகோடி மனக் கோணலை நிமிர்க்கும் ஒரு பாடல். வளைந்த முதுகை நேராக்கும் மற்றொரு பாடல். சிந்தனை வளர்க்கும் புறப் பாடல். செயலனாக்கும் அப்பாடல். அறம் வளர்க்கும். அறிவைப் பெருக்கும். வீரம் ஊட்டும். அன்பை விளைவிக்கும். ஊக்கம் நிரப்பும். உணர்ச்சியூட்டும். கடமை உணர்த்தும். வீறு பெற்றெழச் செய்யும் வரலாறுகள், கண்ணில் கனல் எழுப்பும் காட்சிகள், மார்பை விம்மச் செய்யும் வீரச் செய்திகள் ; இப்படி எத்தனையோ வியத்தகு செய்திகளைப் புறப் பாடல்களில் பார்க்கலாம்.
இதுவரை, புலவர்களே இப் பேரேட்டிற்குத் தனி உரிமை பாராட்டி வந்தனர். இந்நிலை மாற வேண்டும். புற நானூறு பொது உடைமை – பொதுச் சொத்தாக வேண்டும். எழுத்துக் கூட்டிப் படிப்பவருங்கூடப் புறநானூற்றைப் படித்துப் பயன் துய்க்க வேண்டும். இதற்காக எழுந்த சிறு முயற்சியின் விளைவே இந்நூல். புறநானூற்றுப் பாடல்கள் 400 உள்ளது. அதில் மாணவர்களுக்கு புரியும் வண்ணம் 113 பாடல்கள் கதை வடிவில் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
– முல்லை பி.எல்.முத்தையா
***
குழந்தை பிறந்ததைக் கண்ட தாய் கொள்ளை இன்பம் கொள்கிறாள். பெற்றால் மட்டும் போதுமா? தான் பெற்ற கண்மணியை ஓய்வு ஒழிவு இன்றிப் பேணுகிறாள். பெற்றவளுக்கு உறக்கம் ஏது? உள்ளத்தில் அமைதி ஏது?
பெற்ற குழந்தைக்கு வேளா வேளை பால் ஊட்டுகிறாள். காற்று, தூசு படாதபடி கருத்துடன் பாதுகாக்கிறாள். தொட்டிலில் இட்டுத் தாலாட்டித் தூங்கவைக்கிறாள். ஈ, எறும்பு அருகே செல்லாதபடி பார்த்துக் கொள்கிறாள்.
இப்படிக் கோடிப் பணிவிடைகள் செய்து குழந்தையைக் காப்பாற்றுகிறாள். தாய்க்குக் குழந்தையின் கதைதான் தலைவனுக்குக் குடும்பத்தின் கதையாகும். மன்னனுக்கு நாட்டின் கதையாகும்.
நாட்டிற்குத்தான் நல்ல அரண் இருக்கிறதே என்று அரசன் சும்மா இருக்க முடியுமா? பகைவர் புகமுடியாத நாட்டில் பசி புகுந்து விடலாம். வஞ்சகர் கொள்ளை கொள்ள முடியாத நாட்டைப் பஞ்சம் கொள்ளை கொண்டு விடலாம்…. நோய், நொடிகள் – இன்னும் எத்தனையோ தீமைகள் புகலாம்.
அரசன், குழந்தையைக் காக்கும் தாய் போன்று கண்ணும் கருத்துமாய் இருந்து நாட்டைக் காக்க வேண்டும்.
அத்தகைய அரசனின் காவலே ஆட்சியாம்; இளஞ் சேட்சென்னியின் நாடு தாயுடைய குழந்தை. அவன் பகைவர் நாடோ தாயில்லாக் குழந்தை.
– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்