தாமரை இலைத் தண்ணீர்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 5, 2026
பார்வையிட்டோர்: 88 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சங்கருக்கு அப்போது தான் புதிதாக கல்யாணம் ஆகியிருந்தது. அவன் மனைவி சுசீலாவை அவனுக்கு கொஞ்சங்கூட பிடித்திருக்கவில்லை. சுசீலாவும் அழகில் குறைந்தவள் அல்ல. நல்ல அழகிதான்.

சங்கருக்கு சுசீலாவைப் பிடிக்காததன் காரணமெல்லாம் இதுதான். சங்கர் ஒரு பெண்ணை காதலித்து வந்தான். அவளையே திருமணம் செய்து கொள்வதாயும் சொல்லியிருந்தான். ஆனால் பாருங்கள் பெற்றோரின் கெடுபிடியால் அவளை மறக்க வேண்டியதாயிற்று. சுசீலாவைப் பார்த்து கல்யாணம் செய்து வைத்துவிட்டார்கள். அன்று முதல் சங்கர், மனதில் புழுங்கிக் கொண்டேயிருக்கின்றான்.

கல்யாணமான நாள் முதல் இன்று வரை தன் மனைவியை சினிமா, கடற்கரை என்று எதுக்கும் கூட்டிப் போனதில்லை. சுசீலாவும் இதை பெரிதுபடுத்துவதில்லை. அவன் மனதில் பழைய காதலிதான் அடிக்கடி மோதினாள்.

இப்படியாக ஆறு மாதங்கள் உருண்டோடிவிட்டன. சங்கரின் செயல் அனைவருக்கும் வெறுப்பைத் தந்தது. ஆறுமாதமாகியும் சரியாக அவளைத் தீண்டியது கூட கிடையாது. அப்போதுதான் சுசீலாவிற்கு அவளது பெற்றோரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.

அதில், சுசீலாவின் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாததாகவும், கவனித்துக் கொள்ள ஆள் இல்லாததால் சுசீலாவை வந்து தங்கிவிட்டுப் போகுமாறும் எழுதப்பட்டிருந்தது.

சுசீலா, சங்கரிடம் விஷயத்தைச் சொல்லி ஊருக்குப் போக வேண்டி அனுமதி கேட்டாள். அவனும் வேண்டா வெறுப்பாக, ‘எங்காவது போய்த் தொலை’ என்றான்.

அவள் தன் ஊருக்குச் சென்றுவிட்டாள். வாரம் ஒன்றானது… இரண்டானது… அவள் திரும்பி வரவேயில்லை. சங்கர் தனிமையை உணர்ந்தான். சுசீலா இல்லாதது அவனுக்கு என்னவோ போல் இருந்தது. அவளை வரச்சொல்லி கடிதம் எழுதலாமென்றாலும் தன்மானம் அவனை விடவில்லை,

அப்படி இப்படி மாதம் ஒன்றாகிவிட்டது. இதற்கு மேலும் அவனாலும் பொறுக்க முடியவில்லை, அன்பு மனைவி சுசீலாவிற்கு என்னை மன்னித்து விடு. உன் அப்பாவின் உடல்நிலையை கவனித்துவிட்டு, உடன் இங்கு புறப்பட்டு வரவும். இப்படிக்கு நீ இல்லாமல் வாடும் உன் கணவன் சங்கர் என்ற வாசகங்களை கடிதத்தில் எழுதி உடன் அஞ்சல் செய்தான் சங்கர். அந்த வரிகள் சங்கரைப் பார்த்து சிரித்துக் கொண்டே சென்றது.

– நெகிழ்ச்சியூட்டும் சிறுகதைகள்!, முதற் பதிப்பு: 2005, மல்டி ஆர்ட்ஸ் கிரேஷன்ஸ், சிங்கப்பூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *