கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 5, 2026
பார்வையிட்டோர்: 79 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இன்று நான், என் மனைவி, ஆறு வயது செல்ல மகள் மூவரும் சென்னை திட்டமிட்டுள்ளோம். என் மாமா சிங்கப்பூரிலிருந்து இரண்டு வருடம் கழித்து வந்திருக்கின்றார். அவரைப் பார்ப்பதற்காகத் தான்!

பயண ஏற்பாடுகள் எல்லாம் முடிந்துவிட்டது. பஸ்ஸில் செல்வதாகவும் உத்தேசிக்கப்பட்டுவிட்டது. டிக்கட் ரிசர்வ் செய்ய வேண்டியது தான் பாக்கி. எங்கள் ஊரிலிருந்து தினமும் ஒரு பஸ் தான் சென்று கொண்டிருக்கின்றது. ஆகவே முன்னமே டிக்கட் ரிசர்வ் செய்தால்தான் கிடைக்கும்.

இந்த நேரத்தில் தான்-

“பஸ்ஸில் நான் வரமாட்டேன்” இப்படி அடம்பிடிப்பது என் மகள்.

எனக்கு எரிச்சல் எரிச்சலாக வருகிறது. குழந்தையை அடிக்கலாம் போல் வருகிறது. என்ன செய்வது ஆசை மகளாச்சே! கோபத்தை அடக்குகிறேன்.

‘இந்தச் சனியன் ஏன் இப்படி தொல்லை கொடுக்கிறது?’ மனதிற்குள் முனங்குகிறேன்.

என்னுடைய எண்ணம் என்னவென்றால், பஸ்ஸில் சென்றால் விரைவிலேயே சென்னையை அடைந்துவிடலாம். மேலும் சிரமமும் குறையும். ஊஹும் எனது எண்ணம் பலிக்காது போல் தெரிகிறது.

கடைசி வரை எனது மகள் அடம்பிடித்துத் தன் காரியத்தைச் சாதித்து விட்டாள். ஆம் இரயிலில் போவதாக பயணம் மாற்றியமைக்கப்பட்டுவிட்டது.

இரயில்வே ஸ்டேசனை நோக்கி ஓடுகிறேன். ஸ்டேசன் மாஸ்டரைப் பார்த்து, ரெகமென்டேசன் பிடித்து இரண்டு டிக்கெட் ரிசர்வ் செய்துகொண்டேன்.

விதியே என்று மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டு, இன்று இரவு 8.55 மணி ரயிலில் ஏறி அமர்ந்தேன். மனைவி மற்றும் மகளுடன் தான்!

எக்ஸ்பிரஸ் இரயில் என்று இதற்குப் பெயர். ஆனால் ஆமை ஜெயித்துவிடும் போங்கள்! ஒரு மாதிரியாக அடுத்த நாள் காலை 8.30 மணியளவில் எழும்பூரை சென்றடைந்தது.

ஒரு ஆட்டோவில் ஏறி அமர்ந்துக் கொண்டோம். ஒன்பது மணிக்கு மாமா வீட்டை அடைந்தேன்.

மாமா வீட்டில் அன்றைய பகல் ரேடியோவில் நியூஸ் கேட்பதற்காக ரேடியோவை ட்யூன் பண்ணினேன்.

எனது ஊரிலிருந்து நேற்றிரவு புறப்பட்ட விரைவு பேருந்து, திண்டிவனம் அருகே ஆக்ஸிடென்டுக்கு உள்ளாகி 30 பேர் மரணம் என ரேடியோ சொல்லிற்று.

எனக்கு ‘பக்’ என்றது. நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். ஆனாலும் அந்த விபத்துச் செய்தி உலுக்கியது. என் குடும்பத்தைக் காப்பாற்றியதற்காக… கடவுளுக்கு நன்றி செலுத்தினேன்.

எனது மகளின் நெத்தியில் முத்தமிட்டேன்… என் கண்ணின் ஓர் துளி அவளின் மேல் விழுந்தது! மீண்டும் அணைத்துக் கொண்டேன்!

– நெகிழ்ச்சியூட்டும் சிறுகதைகள்!, முதற் பதிப்பு: 2005, மல்டி ஆர்ட்ஸ் கிரேஷன்ஸ், சிங்கப்பூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *