தானம்





(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“எல்லாம் அமைதியாய் இரு. பந்தியைக் குழப்பாமல் எல்லாம் அமைதியாய் இரு.” ஆர்ப்பரிக்கின்ற ஆலய மணிகளிற்கு மேலாக அருணாசலத்தாரின் குரல் ஆவேசமாக ஒலித்தது.

“மூடல் இல்லாதவைக்குத்தான் இலை.” தேக்கமிலை தேகம் நிறைந்திருக்க ஒரு கையால் இலைகளைப் பிய்த்தவாறே வரிசையில் அமர்ந்திருப்பவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார் அவர்.
“பொடியள் புறம்பான பந்தியிலை இருங்கோ. ஆரும் அங்கையிங்கை கள்ளப்பந்தி மாறினது கண்டனோ கம்பாலைதான் விழும். சொல்லிப் போட்டன்.”- அடிக்குரலில் அவர் கூறுகிறார்.
அப்போது தான் கோவிலடிக்கு வந்த செல்லன் மூடலைக் கமக்கட்டிற்குள் வைத்துக்கொண்டே தனது மூன்று பிள்ளைகளுடனே அவசர அவசரமாக ஆலய முன்றிலுக்கு ஓடிவந்தான்.
“செல்லன்… உங்கடை பந்தி தேக்கமரத்துக்குக் கீழையெல்லே? பந்தியைக் குழப்பாமல் அங்கை போயிரு”
“அங்கைதானாக்கும் போறன் ஒரு இலை தரவாக்கும்!”
“மூடல் இல்லாதவைக்குத்தான் இலை. ம்…விலகு. நிண்டு மெனக்கெடுத்தாதை.”
அந்த ஆலயத்தில் எவரது அன்னதானம் நடந்தாலும், முன்னின்று உழைக்கும் அருணாசலத்தார், இன்று தனது மைத்துனர் முருசேசரின் தானம் ஆகையால் சற்று உற்சாகமாகவே இயங்குகிறார்.
கேட்டது கிடைக்காது போகவே, அரையிலிருந்த சால்வைத் துண்டால் மூடலைத் துடைத்துத் தட்டிக் கொட்டியவாறே, தேக்க மரத்தடிக்குச் செல்கிறான் செல்லன்.
‘மா மணல் ஒண்டுமில்லை. கையிலையும் ஒரு சதத்துக் காசுமில்லை. இண்டைக்கு இரவைக்குப் பொடியளுக்கு என்னத்தைத் தேடுறது?” என்று துறையால் திரும்பும் போது ஆழ்ந்த சிந்தனையில் வந்தவனுக்கு, கந்தமுருகேசனார் சிலையடியில் வரும்போது, “இண்டைக்கு பிள்ளையார் கோயிலிலை முருகேசற்றை தானமாம்” என்று யாரோ கதைத்துக் கொண்டது தேனாகக் காதுகளில் பாய்கிறது. மூன்று பிள்ளைகளைப் பெற்றுக் கொடுத்து விட்டு மாரடைப்பால் அவனது மனைவி மூன்று வருஷங்கட்கு முன்பு மாண்டதன் பிறகு மாடாயுழைப்பதுடன் நித்தமும் மாலையில் தீன் தேடுவதும் அவனது தலையில் வீழ்ந்துவிட்டது. பத்து வயதும் நிரம்பாத மூத்த அவனது மகள், அடுத்தடுத்த வருடங்களில் பிறந்த இரண்டு மகன்கள் அவர்களால் தான் என்ன செய்ய முடியும்?
காலையில் உண்ட பழஞ்சோறு போக, ஆனைப் பசியுடன் அவனைக் காத்திருந்த பிள்ளைகள், அவன் வருவதைக் கண்டதும் காணாததுமாக “ஐயா கோயில்லை பூசையாம். வா போவம்” என்று சொன்ன போதே அவர்களது அகோரப் பசியை அவனால் உணர முடிந்தது. வெளுத்து வந்த உடுப்புக்களைத் திண்ணையில் போட்டவன், மூடலை எடுத்துக்கொண்டே பெருமூச்சுடன்…
“பிள்ளையாரே.”- பூசை முடிந்து ஆலய வாசலில் அடியவர்கள் கைதட்டும் ஒலி பஞ்சடைந்த செல்லனின் காதுகட்கும் பசுமையாகவே கேட்கிறது.
வெற்றிலைத் தாம்பாளத்துடன் குருக்கள் வெளியேறிய போது குறிப்புணர்ந்து, தீர்த்த மடத்தில் ‘காட்ஸ்’ விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களும், வடக்கு வீதியில் கிளித்தட்டாடிய பிள்ளைகளும் ஆட்டங்களை இடைநிறுத்திவிட்டே ஆலயத்தை நோக்கி ஓடி வருகின்றனர்.
காதுகளிரண்டினையும் செவ்வரத்தம் பூ அலங்கரிக்க, மார்பில் சந்தனம் பரிணமிக்க கோயிலுக்கு வெளியே வந்த முருகேசர், ஆலய முன்றலில் பந்திகளாகப் பரந்திருக்கும் சனங்களை ஒரு கணம் பார்த்து விட்டு, வரிசையில் நின்ற ஐந்தாறு இளைஞர்களை அழைக்கிறார். “தம்பியவை சோத்துப்பெட்டி பிடிக்க ஆள் தேவை. ஒல்லுப் போலை வாருங்கோடி.”
சேட்டுடன் நின்ற இளைஞர்களில் சிலர் சேட்டைக் கழற்றி நண்பர்களிடம் கொடுத்துவிட்டு, சாரத்தை மடித்துக் கட்டியவாறே கோயிலுக்குள் நுழைகின்றனர்.
எழுந்து நின்று கூத்தடிக்கும் சிறுவர்களைக் கம்பு கொண்டு கட்டுப்படுத்திக் கொண்டு நின்ற அருணாசலத்தாரை அழைத்த முருகேசர், ஆலய முன்றிலில் பரந்திருக்கும் சனங்களைக் காட்டி காதில் எதையோ கூறுகிறார். அதைக் கேட்டு அருணாசலத்தாரும் தலை ஆட்டிவிட்டு மீண்டும் தனது கடமையில் ஈடுபடுகிறார்.
பந்திக்குள் புகுந்து வந்த அருணாசலத்தார் சோற்றுப் பெட்டிகளுடன் மூன்று இளைஞர்கள் வெளிவருவதைக் கண்டதும் ஆலய வாசலிற்கு ஓடுகிறார். “தம்பியவை! சனம் எக்கச்சக்கமாக வந்திருக்கு! சோத்தை அளந்து போடவேணும்!” என்று கூறியவாறே சோற்றுப் பெட்டிக்குள் தன்கையை வைத்து அளவு காட்டுகிறார்.
“மண்டலாய், நீ வடக்கை போ. சண்முகம், நீ பொடியளின்ரை பக்கம் போ. எட தம்பி வேலோன், நீ இங்காலை தேர்முட்டியடிக்குப் போ.” – சோற்றுப் பெட்டிகளுடன் வந்த இளைஞர்களைப் பிரித்துவிடுகிறார் அவர். யாவற்றையும் மேற்பார்வை செய்து கொண்டு முருகேசர் உண்டியல் பெட்டிக்கருகில் கை கட்டியவாறே நிற்கிறார். அடிக்கொருதரம் அவரது கண்கள் தெற்கு வீதியில் ‘எதையோ’ எதிர்பார்க்கின்றன.
சகலதையும் கவனித்தவாறே தேக்க மரத்திற்குக் கீழே இருந்த செல்லனின் மகள் …. “ஐயா. எங்கடை பந்திக்கு ஏன் ஒருதரையும் விடேலை?” என்று ஏக்கத்துடன் கேட்டாள்.
“கடைசியாகத் தான் மோனை விடுவினம்.”
அப்போ..பெரிய கைப்பெட்டி நிறையச் சோறு, காய் கொண்டு வெள்ளை வேட்டியுடன் ஒருவர் கோயிலை விட்டு வெளியேறுகிறார்.
“அவையளுக்கு அவளவு சோறோ ஐயா?”
“ஓம் மோனை. அது படையல் சோறு. பரம்பரை பரம்பரையாக அவையளுக்குத் தான் முதல் சோறு குடுக்கிறது.”
“அவை உவ்வளவு சோத்தையும் வைச்சிருந்து நாளை, நாளைண்டைக்கும் தின்னுவினம் என்னையா?” – ஊரில் எங்காவது சடங்குகள் நடந்தால் வரும் குடிமைச் சோற்றை வைத்து ‘தண்ணீர் ஊற்றி’ நாலைந்து நாட்களுக்குத் தாம் வயிறாறுவதை மனதிருத்தி செல்லனின் இளையது வினவியது.
“பேக்கதை பறையிறாய். அவை வளவுக்கை நெல்லு மூட்டை மூட்டையாக் கிடக்கு. உதுகள் ஏன் அவைக்கு?”- செல்லனின் ‘நடுவில்’ இது.
“அப்ப என்ன செய்வினம்?”
“ஆடு, மாட்டுக்கு வைப்பினம்.”
“உவ்வளவு சோத்தையுமோ?”
“சோறு … சோறு…!”- வடக்குப் பந்திக்கு சோறு கொடுத்துக் கொண்டிருந்த மண்டலாயர் சோறு அடிப்பெட்டிக்குள் போகவே அடிக்குரலெடுத்தார். அருணாசலத்தார் பெட்டி நிறைய சோறு கொண்டு வந்து மண்டலாய் வைத்திருந்த பெட்டியை நிரப்புகிறார். “தம்பி மண்டலாய், நீ கூடப் போடுறாய். . . . அளந்து போடு. சோறு மட்டுமட்டு.”
“சரியண்ணை சமாளிக்கிறன்.”
சற்றுத் தூரம் சென்று வந்த அருணாசலத்தார் திரும்பவும் மண்டலாயின் அருகில் வந்து மெல்லிய குரலில் கூறுகிறார். “தம்பி…பக்கத்திலை என்ரை மருமோள் பொடிச்சியிருக்கிறாள். பாத்து என்ரை பங்கையும் அந்த மூடலுக்கை போட்டுவிடு.”
“ஓமண்ணை.போட்டுவிடுறன்.”
“அரோகரா, அரோகரா.”- கோபுரத்தில் பட்டு குரல்கள் எதிரொலித்தன. இளைஞர் பந்திப் பக்கமாகச் சென்ற சண்முகம் வெற்றுப் பெட்டியை இரு கைகளாலும் தன் தலைக்கு மேல் உயர்த்தியவாறே கோவிலுக்குள் நுழைகிறார்.
இளைஞர் பந்தி சிதறுகிறது.
“சனியனுகள், பந்தியளைக் குழப்புதுகள். இஞ்சை எங்கடை பந்திக்கு….” – செல்லனின் அருகில் நின்ற கதிரன் இது.
“அதுகளுக்கென்ன? வீட்டிலை வேளா வேளைக்குச் சோறு கிடைக்கும். போதாக் குறைக்கு பூசைச் சோத்தையும் திண்டுட்டு நிண்டு குதியன் குத்துதுகள்.”-செல்லன் அலுத்துக் கொள்கிறான்.
“அங்கையென்ன குழப்பம்?” வடக்குப் பந்தியைச் சிதறவிடாது
அருணாசலத்தார் மண்டலாயின் பக்கத்தில் நிற்கிறார்.
“அண்ணை இந்த மூடலுக்கை மூண்டுபேருக்கு.”
“ஆரடா மூண்டு பேர்? ஆக்களைக் காட்டு.”
“எனக்கும், இவனுக்கும், தம்பிக்கும்.
“எங்கையடா மற்றவன்?”
“வீட்டை நிக்கிறான்.”
“வீட்டையோ? ஏன் கொப்பு, கோத்தைக்குமா சேத்துத் தாறம். கொண்டு போவன்….” ஏதோ பகடி விட்ட நினைப்பில் அருணாசலத்தார் நிமிருகிறார். சற்று நேரத்தில் மண்டலாயர் சோற்றுப் பெட்டியைத் தன் தலைக்கு மேல் உயர்த்துகிறார்.
“அரோகரா, அரோகரா.”- வடக்குப் பந்தியும் சிதறுகிறது.
“மண்டலாய், பெட்டியை உள்ளை கொண்டு போ.”- தேக்க மரத்தடியில் மட்டும் இன்னும் தேங்கி நிற்கும் சனக்கூட்டம் பக்கமாக மண்டலாயின் பார்வை திரும்பிய போது அருணாசலத்தாரின் குரல் ஒலிக்கவே, அவர் பெட்டிப் பாம்பாகி கோவிலுக்குள் நடையைக் கட்டுகிறார்.
தேர் முட்டியடிப் பந்திப் பக்கம் சென்ற வேலோன் நிமிர்ந்த போது அருணாசலத்தார் அருகிலேயே வந்து விட்டார்.
“அரோகரா, பிள்ளையாருக்கு அரோகரா.”
“பொறண்ணை. மரத்தடிப் பந்திக்கு இன்னும் சோறு வைக்கேல்லை.”
“வேலோன், பெட்டியை இஞ்சை கொண்டா.”- அருணாசலத்தார் அவசரங் காட்டினார்.
“தேக்க மரத்தடியிலையும் ஒரு பந்தியெல்லே அண்ணே இருக்கு?”
“சோறு மட்டுமட்டடா தம்பி, பிறகென்ன. மச்சான் வெறுங்கையோடையே வீட்டை போறது?”
‘”அப்ப . . . அதுகள் சோறு வாங்காமலே போறது?”
“அதுகள். . . .அதுகள் எண்டு எளிய சாதியளுக்காக நீ ஏன் வக்காலத்து வாங்கிறாய்?”
“அத்தான், உங்கை என்ன சச்சரவு?. பெட்டியை உள்ளை கொண்டு போங்கோ. தம்பிமார் உங்களைத் தான் உள்ளை போங்கோடியவை.”-தெற்கு வீதியில் ‘எதையோ’ எதிர்பார்த்துக் கொண்டு நின்ற முருகேசர் விடயமறிந்து தேர்முட்டியடிக்கு ஓடி வந்து விட்டார்.
“அண்ணை, மரத்தடிப் பந்திக்கு இன்னும் சோறு வைக்கேல்லை.”
“தம்பி. . . .சோறு மட்டுமட்டடி. அதுதான். அதுகளை விட்டுட்டு பெட்டியைக் கொண்டு உள்ளை வா மோனை.”
“அண்ணை, தானமெண்டால் தானமாயிருக்க வேணும். எல்லாருக்கும் குடுத்திட்டு அதுகளுக்கு.”
“தம்பி, நிலவரமறியாமல் பறையிறாய். சோறு மட்டுமட்டு. பந்திக்கு சோறு வைச்ச பொடியளுக்கும், இனிக் காத்தாலை தொடக்கம் பூசைக் காய்களரிஞ்சு பாடுபட்டவைக்கும் புறிக்கவேயடா சோறு மட்டுமட்டு.”
தானம் எண்டால் அதுதான். பாடுபட்டவைக்கு சோறு போட வேணு மெண்டால், நீங்களெல்லாரும் வீட்டை கூடியிருந்து ஒரு பெரிய பாட்டி வைச்சிருக்கலாமே.”
“அத்தான், அவன்ரை விசர் ஞாயங்களை விட்டிட்டு பெட்டியை வேண்டிக் கொண்டு நீங்கள் உள்ளே வாங்கோ.”
“இதுகளைப் போல ஒரு வேளை சோத்துக்காக அவலப்படுகிற சனங்களுக்கு ஒரு நேரமாவது வயிறாறச் சோறு போடுறதுக்குத்தான் தானம், அண்டை அயலார் கூடி வந்து அவிச்சுப் போட்டு புறிச்சு வீட்டை கொண்டு போறதுக்கில்லைத் தானங்கள். வீட்டிலை பண்டங்கள் நிரம்பியிருக்கிறவைக்குப் பெட்டி பெட்டியாச் சோறு அனுப்புறியளே…பசிக்காகப் போராடுற இதுகளுக்கு ஒரு வேளையாவது வயிறாறச் சோறு போடுறதுக்குத் தான் தானங்கள்.”
“அத்தான், பெட்டியை வாங்கிக் கொண்டு நீங்கள் உள்ளை வாங்கோ. அவன்ரை வியாக்கியானங்களைக் கேட்டுக் கொண்டு நிக்க எங்களுக்கு நேரமில்லை. அலுவலுகள் கனக்கக் கிடக்கு.” – குட்டிபோட்ட நாயானார் முருகேசர்.
“தானம் குடுக்கினமாம் கண்டறியாத தானம்…” – பெட்டியை விட்டாலும் வேலோன் பேச்சை விடுவதாக இல்லை.
தெற்கு வீதியால் வந்த முருகேசரின் கார் மடைப்பள்ளி வாசலில் வந்து நின்றது. இப்போதுதான் முருகேசர் உசாரானார். கார் ‘டிக்கி’ திறக்கப்பட்டது.
“ஐயா, பசிக்குது…சோறு.” – பொறுமையின் எல்லையைத் தாண்டிச் செல்லனின் இளையது அழ ஆரம்பித்து விட்டது.
தேக்க மரத்தின் கீழ் இருந்த ஐம்பது, அறுபது சனங்களும்.. சிதற ஆரம்பித்தனர். மூடலைத் தட்டிக் கொட்டியவாறே மடைப்பள்ளிப் பக்கம் செல்கிறான் கதிரன்.
“கதிரன் நில்.எங்கை போறாய்? உனக்கு வெட்கமாயில்லையே? நடந்ததைப் பாத்த பிறகும் பிச்சை கேட்கப் போறியே? உன்னைப் போலக் குனியிறவங்களும் இருக்கிறதாலை தான் அவங்களும் குட்டிக் கொண்டிருக்கிறாங்கள். என்ன பெரிய பட்டினி? இவ்வளவு நாளும் இருக்காததே? உதை விட ஈரத்துணியா ஒண்டை எடுத்து வயித்தை இறுக்கிக் கட்டிப் போட்டுக் கிடந்திடலாம்.” – எழுந்து நின்று செல்லன் கூறுகிறான்.
“ஐயா சோறு…”
கார் ‘டிக்கியும்,’ ‘கரியரும்’ சோற்றுப் பெட்டிகளால் நிரம்பின. கார் புறப்பட்டு விட்டது. இப்போது முருகேசர் வெளியேறுகிறார். பின்னே தலையில் பெட்டிகளுடன் அருணாசலத்தார் வெளிப்பட்டார்.
ஏதோ நப்பாசையில் மரத்தடியில் இன்னும் சிலர் சிதறியபடியே…நிற்கிறார்கள். ஆனால், கதிரன் அப்போதே சென்றுவிட்டான்.
பொழுதும்….மைமலாகி விட்டது.
வெளியே வந்த முருகேசர் வாசலில் நின்றவாறே மூன்றுதரம் தோப்புக்கரணம் போடுகிறார்.
“பிள்ளையாரே.” – கைகளைத் தட்டி விட்டு நடையைக் கட்டுகிறார் அவர்.
தேக்க மரத்தடியில்…சனங்கள் மெல்ல,மெல்லக் கலைய ஆரம்பிக்கின்றனர்.
நடந்து கொண்டிருக்கும் முருகேசரைச் செல்லன் வெறித்துப் பார்த்தவாறே நிற்கிறான். வர…வர.. முருகேசரின் உருவம் செல்லனின் கண்களில் குறுகிக் கொண்டே செல்கிறது!
– மல்லிகை
– புதிய பயணம் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: வைகாசி 1996, பதிப்புரிமை: திருமதி இ.சாந்த குமாரி, கொழும்பு.