தவழும் தென்றலுக்கு என்னைப் புரியாதா?
(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மூன்றே வருடத்தில் திவாகரன் கண்மூடித்தனமான வளர்ச்சி சசிகலாவிற்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. திவாகர் தன்னிடம் காதலை வெளிப்படுத்திய போது தான் திட்டி அனுப்பியதும், அவன் சவால் விட்டுப் போனதும் நேற்றே தான் நடந்தது போலிருக்கிறது. ஆனாலும், மூன்று வருடங்களாகி விட்டன.

“ஒரு சாதாரண இரும்புப் பட்டறையில் வேலை செய்யும் நீ…ஒரு கம்பெனியின் சொந்தக்காரரின் மகளைக் காதலிப்பதா? உனக்கு வெட்கமாக இல்லை?”
“காதலுக்கு உயர்வு தாழ்வு கிடையாது சசிகலா. எனக்கு உன் மீது காதல் உணர்வு பிறந்ததற்கு காரணம் உன் பண உயரம் அல்ல. உன் நடை உடை பாவனை. பழகும் முறை… அப்கோர்ஸ் உன் அழகும் தான் காரணமே யொழிய நீ சொல்லும் பணத்தைக் குப்பையில் கொட்டு.”
“உனக்குப் பணத்தைப் பற்றி என்ன தெரியும். தினக்கூலி செய்து கஞ்சி குடிப்பவனுக்கு காரும் பங்களாவும் வாங்குவது எப்படி என்று சொன்னால் புரியவாப் போகிறது. மிஸ்டர் திவாகர் பணம் காசு சம்பாதிப்பது அவ்வளவு ஈஸியான விஷயமில்லை.”
“அது ஒன்றும் மலையைக் குடைகிற விஷயமில்லை மேடம்.”
“எங்கே உன்னால் ஒரு லட்ச ரூபாய் சம்பாதித்து காட்ட முடியுமா?”
“ஒரு லட்சம் என்ன… எனக்காகக் காத்திருக்கிறேன் என்று சொல், இந்த உலகத்தையே வாங்கிக் காட்டுகிறேன்.”
“எங்கே நான் கிழவியாகி சாகக் கிடக்கப் போகிற நேரத்தில் வந்து தாலி கட்டப் போறியா? சும்மா காதல் வசனம் சவடால் விடறதை யெல்லாம் விட்டு விடு.”
“ஒ.கே. மூன்று வருடம் கொடு. நான் உன் அப்பாவை விட அதிகமாகச் சம்பாதித்துக் காட்டினால் என்னை மணந்து கொள்வாயா?”
“…..”
“என்ன மவுனமாகி விட்டாய் சசி? உனக்கு என் மேல் காதல் உண்டு என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் என் ஏழ்மையை நீ அடிக்கடி குத்திக்காட்டி பேசுவதுதான் எனக்கு புரியவில்லை. ஏழைகள் எல்லாம் காதலிக்கக் கூடாது என்றோ, ஏழைகள் பணக்காரப் பெண்களை கண்களால் ஏறெடுத்துப் பார்க்கக் கூடாது என்றோ எங்காவது சட்டம் போட்டிருக்கிறார்களா?”
“இதெல்லாம் வீண் பேச்சு திவாகர். சரி இன்றி லிருந்து மூன்று வருடம் கழித்து என்னைச் சந்தியுங்கள். அப்போது நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதித்திருக்கிறீர்கள் என்று பார்க்கலாம். அப்போது நம் காதல் கை கூடுமா என்று யோசிப்போம்.”
“சசிகலா…காதலுக்கு விலை பேசுகிறாயா? காதல் தானாக வரக்கூடிய காட்டாற்று வெள்ளம். அந்த நீரை அள்ளிக் குடிப்பதற்கு கூட காசு கேட்கிறாயா?”
“திவா… வீணாக வசனம் பேச வேண்டாம். வாழ்க்கைக்கு அத்தியாவசியம் பணம். அதை முதலில் சம்பாதித்துக் காட்டுங்கள் பார்க்கலாம்” என்று சவால் விட்டுவிட்டுப் போனது இப்போது கனவா நனவா என்று தன்னையேக் கிள்ளி பார்க்குமளவிற்கு திவாகர் உயர்ந்த அந்தஸ்திற்கு போய் விட்டான்.
அந்தப் பங்களாவின் வாசலில் நின்று யோசித்துக் கொண்டிருந்தவள், உள்ளே போவதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தவள் வாசலுக்கு வந்த காருக்காக வழி விட்டாள்.
காரை நிறுத்தி விட்டு இறக்கிய திவாகர், “வா சசிகலா. நானே இன்றைக்கு உன்னைத் தேடி வர வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்” என்று அவளையும் காரில் ஏற்றிக் கொண்டு கூர்க்கா திறந்த கேட்டின் பாதை வழியே சியாலோ காரை ஓட்டினான்.
“என்ன விஷயம் திவாகர்”
“நீ போட்ட கெடு மூன்று வருடம் இன்றோடு. முடிகிறது தெரியுமா?”
“ஆம்” என்று தலையாட்டினாள்.
“ஓ! நான் வருவதற்கு முன்பாகவே என்னைத்தேடி.. வந்து விட்டாயா? நான் சொன்னேனே… உனக்குள்ளும் என் மேல் அபரிமிதமான காதல் இருக்கிறது என்று…”
சொல்லிக் கொண்டே காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கியதும், “வா சசிகலா. நாம் வாழப் போகும் சின்ன மாளிகை இதுதான். கண்டிப்பாக தாஜ்மஹாலோ, வசந்த மாளிகையோ அல்ல இது. நம் காதல் வீடு அவ்வளவு தான்.”
சோபாவில் அமர்ந்து விட்டு ”அய்யர் காபி கொண்டு வாங்க” என்றான் சமையலறையை நோக்கி.
“திவாகர் உண்மையிலேயே உங்கள் காதலின் உத்வேகம் எனக்கு மிகவும் நன்றாக புரிகிறது. எப்படி… எப்படி இவ்வளவு வேகமாக…” அவளால் பேச முடியாமல் திணறினாள் சசிகலா.
“நீ சொல்வது எனக்குப் புரிகிறது. உன் மேல் கொண்ட அதீதக் காதல்… நான் இவள் தந்தையின் பணத்தை விட அதிகமாக சம்பாதித்தால் என்னால் என் அன்பு காதலியின் மனசு கிடைக்க வேண்டுமென்பதற்காக நான் எடுத்துக் கொண்ட தீவிரம்தான் என்னுடைய வளர்ச்சி.”
“சில இரவுகளின் நான் கூட என்னைக் கிள்ளிப்பார்த்துக் கொண்டது உண்டு… எப்படி என்னால் இவ்வளவு உயர முடிந்தது என்று.
“ஒரு சாதாரண இரும்புப் பட்டறையில் வேலை செய்த நான், தனியாக காரேஜ் தொடங்கி பணமில்லாமல் கஷ்டப்பட்டு கார் பாடி செய்ய ஆரம்பித்து இன்று எக்ஸ்போர்ட் செய்யுமளவிற்கு என்னால் உழைத்து முன்னேற முடியும் என்றால் அது நீ எனக்கு கிடைப்பாய் என்ற உத்வேகம். சொல் சசிகலா… நான் எப்போது உன் தந்தையை வந்து பார்க்க வேண்டும்?”
“எங்கப்பாவை எதற்கு பார்க்க வேண்டும்!”
“பச்சைக் குழந்தை மாதிரி பேசாதே, உன்னை பெண் கேட்கத்தான் உன் அப்பாவை வந்து பார்க்க வேண்டும்.”
“நாம் கல்யாணம் செய்து கொண்டால் இந்த வளர்ச்சி நின்று போகும் திவாகர்.”
அதிர்ச்சியாக திரும்பியவன், “என்ன சொல்கிறாய் சசி?” என்றான் கர்ச்சிப் எடுத்து முகம் துடைத்துக் கொண்டு.
அய்யர் வந்து இரண்டு காபி வைத்து விட்டுப் போக காபியை எடுத்துப் பருகிய சசிகலா, “திவாகர் இந்த வீட்டிற்குள் நான் நுழையும் போது உங்கள் வளர்ச்சியையும், உங்களை அடையப் போகும் அதிர்ஷ்டத்தையும் நினைத்து பெருமைப் பட்டேன்” என்றாள்.
“அப்புறம் என்னாயிற்று?”
“என் காதலைத் துறந்து விடலாம் என்று நினைக்கிறேன் திவாகர்.”
“உனக்கென்னப் பைத்தியமா பிடித்து விட்டது சசி?”
“ஆமாம் திவாகர், உங்கள் வளர்ச்சி மேல் எனக்கு பைத்தியம் பிடித்து விட்டது. நீங்கள் என் மேல் கொண்ட காதல் உண்மையானால் இன்னும் கோடி கோடியாக சம்பாதிக்க வேண்டும். அதை நான் தூரத்திலிருந்து பார்க்க வேண்டும்.
“நம் காதல் கல்யாணத்தினால் உங்கள் வளர்ச்சி தடைப்பட நான் ஒரு போதும் தடைக் கல்லாக இருக்க மாட்டேன். அதற்காக இன்னொருவனை என் வாழ்வில் ஏற்றுக் கொள்வதே, இல்லை திருமணம் செய்து கொள்வதோ இனி என்றுமே கிடையாது.
“உங்களுக்காக, ஒரு காதலி, கன்னியாக உங்கள் வளர்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்ற நம்பிக்கையோடு நீங்கள் வளர வேண்டும். இந்தியாவின் பணக்காரர்களுள் ஒருவராக நீங்கள் திகழப் போவதை நான் பார்த்து மனமார ரசிக்க வேண்டும். அது கண்டிப்பாக என் அன்புத் திவாகரால் முடியும். நீங்கள் செய்து காட்டுவீர்கள். வருகிறேன்” என்று சொன்னவாறு விருட்டென்று கிளம்பினாள் சசிகலா.