தர்ம சபதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 1, 2019
பார்வையிட்டோர்: 7,543
(இதற்கு முந்தைய ‘படித்துறை விளக்கம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது)
“ரொம்ப ஆசைப்பட்டு ராஜலக்ஷ்மியை கல்யாணம் பண்ணிக் கொண்டார். அழகான இளம் மனைவியோடு சந்தோஷமாகவும் பெருமையாகவும் வாழப் போறோம்ன்னு நிறைய கற்பனை பண்ணினார். ஆனா அவரால் அப்படி சந்தோஷமாக வாழ முடியவில்லை. கல்யாணத்தன்னிக்கே பிரச்னை வந்துடுத்து…”
“அழகான அதுவும் வயசுக் குறைச்சலான பெண், பார்த்தாலே வெகுளியா தெரியற ராஜலக்ஷ்மி வயதான என் அப்பாவை கல்யாணம் பண்ணிக்க ஏன் முன் வந்தா?”
“உன் அப்பாவைப் பத்திச் சொன்னாலே போதும்னு நெனச்சேன்… ஆல்ரைட் சுருக்கமா ராஜலக்ஷ்மி உன் அப்பாவைக் கல்யாணம் பண்ணிக்கொண்ட கதையையும் சொல்றேன்…
ராஜலக்ஷ்மியின் இயல்பான ஆர்வங்களுக்கும், ரசனைகளுக்கும் ஏற்ற வாழ்வுக்கு பணம் இருக்கிற கணவர் வேணும் என்கிற ஒரு எண்ணம் அவங்ககிட்ட இருந்தது சுகுணா. ஆனா அவங்களோட ஏழ்மையின் சூழலில் பணவசதி உள்ள கணவன் வர்றதுக்கு சாத்தியமே இல்லாம போயிடுத்து. அதனால் ரெண்டாம் தாரமா கொஞ்சம் வயசானவருக்கு வாழ்க்கைப்படவும் ராஜலக்ஷ்மி தயாரா இருந்தாங்க.
ரெண்டாம் தாரமா வாழ்க்கைப்படற இடத்துல முதல் தாரத்தின் குழந்தைகளுக்கு ‘இன்ஸ்டன்ட் மதரா’ ஆயிடறதுக்கெல்லாம் விரும்பலை ராஜலக்ஷ்மி. வறுமையில் இருந்து உடனடியா அவங்களுக்கு வேண்டியிருந்த சுதந்திரத்தில் உடனடியா பொறுப்பு எதையும் சுமக்க தயாரா அவங்க இல்லை.
உன்னோட அப்பாகிட்ட அவங்களுக்கு இப்படிப்பட்ட உடனடி பொறுப்பு குறுக்கே எதுவும் இல்லை. ஆனா வயசைப்பத்தி கொஞ்சம் யோசனை பண்ணினாங்க. அப்படி யோசனை செய்ததில் வயசு அவங்களுக்கு ஒரு தடையா இல்லை. சுதந்திர தாகத்தோடும் சந்தோஷ எதிர்பார்ப்புகளோடும் யாரோட கட்டாயமும் இல்லாம ராஜலக்ஷ்மி உன்னோட அப்பாவை கல்யாணம் பண்ணிண்டாங்க. இது போதுமா சுகுணா?”
“புரியுது.”
“சபரிநாதனைப் பொறுத்தவரைக்கும் பிரச்னை கல்யாணத்தன்னிக்கே ஆரம்பம் ஆயிடுத்து. தாலி கட்டின கொஞ்ச நேரத்ல அவர் ரொம்ப ஆசையா தன் பேரன்கிட்ட ராஜலக்ஷ்மியைக் காட்டி ‘இதான் உன் சின்னப் பாட்டின்னு’ சொல்லியிருக்கார். உடனே அந்தப் பேரன் ‘போ தாத்தா, இதுவா சின்னப்பாட்டி; இது சின்ன அக்கான்னு’ சொல்லிட்டான்! ஒருமாதிரி ஆயிட்டார் உன் அப்பா. இதை நாமும் நேரில் பார்த்தோம் சுகுணா.”
மேலும், திருநெல்வேலியில் பையன்கள் ராஜலக்ஷ்மியை பின் தொடர்ந்து வந்தது; குற்றாலத்தில் இளைஞர்கள் அவளை சைட் அடித்தது; வள்ளியூர் அத்தை அவர்களைப் பார்ப்பதற்கு தகப்பன் மகள்போல இருப்பதாகச் சொல்லிச் சிரித்தது போன்ற சம்பவங்கள் அனைத்தையும் விவரித்துச் சொன்னான்.
“சுருக்கமாச் சொன்னா, அந்த வள்ளியூர் அத்தை அடிச்ச கமெண்ட்ல உன்னோட அப்பா கண்ணீர் விட்டுத்தான் அழலை… அன்றைக்கே ராஜலக்ஷ்மியை கல்யாணம் பண்ணிக்கொண்ட பெருமையும் சந்தோஷமும் அவருக்குள் சுக்கல் சுக்கலா உடைஞ்சு போயிடுத்து சுகுணா. ராஜலக்ஷ்மியை எங்கேயுமே அழைச்சிட்டுப் போறதில்லை என்கிற முடிவுக்கு வந்திட்டார் அவர்.
ராஜலக்ஷ்மி இளம் மனைவியா அவருக்கு இருந்தா போதும், மத்தவங்களுக்கு அவங்க இளம் பெண்ணா தெரியக்கூடாதுன்னும் முடிவு பண்ணினார். இதனால் அவளின் இயல்பான ஆர்வங்களையும், ரசனைகளையும்கூட இளமையின் தன்மைகளாகப் பார்த்து அவை எல்லாவற்றையும் தடை பண்ணினார். அன்றாட வாழ்க்கையின் எல்லா கோணத்திலும் ராஜலக்ஷ்மியின் இளமை வெளிப்பட்டு விடாதபடி அவங்களை இயக்கினார். அதற்கும்மேல் பலபடிகள் போய் எந்த நிலையிலும் ராஜலக்ஷ்மி இளைஞன் எவனுடைய பார்வையிலும் பட்டுவிடாமல் பார்த்துக்கொண்டார். இதன் அளவு கடந்த நடைமுறையாக ராஜலக்ஷ்மி கோயிலைத்தவிர வேறு எங்கும் தனியாக போய்வருவதற்கு தடை போட்டுவிட்டார். இப்படி ராஜலக்ஷ்மியின் வாழ்க்கையை எவ்வளவு குறுகலா குறுக்கிவிட முடியுமோ அவ்வளவு குறுக்கி விட்டார்…
முதலில் ஒரு தீவில் தனிமைப் படுத்தப்பட்ட மாதிரி இருந்தது ராஜலக்ஷ்மிக்கு. பிறகு தீவு வாழ்க்கை சிறை வாழ்க்கையா ஆயிடுத்து அவங்களுக்கு. கல்யாணத்துக்கு முன்னாடி ஏழ்மை என்ற சிறைக்குள் இருந்த ராஜலக்ஷ்மயின் வாழ்க்கை கல்யாணத்துக்குப் பிறகு சபரிநாதனோட முதுமைச் சிறைக்கு டிரான்ஸ்பர் ஆயிடுத்து! ஆனா அவங்களுக்கு தேவைப்பட்டது டிரான்ஸ்பர் இல்லை, சுதந்திரம்!
அதுவும் சிறைவாசம் கடுமையாக கடுமையாக சுதந்திர வேட்கையும் அவங்களுக்கு அதிகமாயிடுத்து. இந்தக் கட்டத்தில்தான் நான் உள்ளே நுழைந்தேன் சுகுணா. நான் வீட்டு மாப்பிள்ளை. இளமையானவன். உன்னோட அப்பா எப்படித் தாங்குவார் இதை?
இளைஞன் என்ற ஒரே காரணத்துக்காகவே பார்த்தவுடனே என்னை விஷமா வெறுத்திட்டார் உன் அப்பா. நான் பாட்டுப்பாடினா கோவப்பட்டார். பைக்ல போய்வந்தா எரிச்சல் பட்டார். ஊர்ல நான் பிரபலமானா பொறாமைப்பட்டார். நான் என்ன செய்தாலும் ஆத்திரப்பட்டார். அந்த அளவுக்கு இளமைகிட்ட உன்னோட அப்பாவுக்கு காம்ப்ளெக்ஸ் இருந்தது. அந்தச் சிக்கலின் ஒரு உச்ச கணத்தில் நட்ட நடுநிசியில் என் பைக்குக்கு தீ வச்சிட்டார் உன் அப்பா.
“அப்பாவோட காம்ப்ளெக்ஸ் இப்படி திடீர்ன்னு வன்முறை ஏற்பட்டதற்கு பர்டிகுலரா வேற காரணம் எதுவும் கிடையாதா?”
“காரணம் இருக்கு. சம்பவம் என்கிற ரீதியில் அது குறிப்பிட்ட காரணம் மாதிரி தெரியலாம். ஆனா அது ஒரு நீண்ட தொடர்ச்சியின் மற்றொரு கனுதான்.”
“சுருக்கமா அதையும் சொல்லுங்களேன்…”
“எந்தக் காரணத்தைக்கொண்டும் ராஜலக்ஷ்மி ஆத்துல குளிச்சிடக் கூடாதுன்னு சபரிநாதன் தடை உத்தரவு போட்டிருந்தார். ஆனா ராஜலக்ஷ்மி அவர் எங்கேயாவது வெளியூர் போயிருக்கிற போதெல்லாம் ஊர் பெண்களோட சேர்ந்து ஆத்துல குளிச்சிருக்காங்க. ஊர்க்காரங்க யாரும் இதை அவர் காதுக்கு கொண்டுபோகலை. ஏன்னா உன்னோட அப்பா ராஜலக்ஷ்மியை எப்படி அடிமை மாதிரி வச்சிருந்தார்ன்னு ஊர்ல எல்லோருக்குமே தெரிஞ்ச விஷயம். அதனால எல்லோருக்குமே ராஜலக்ஷ்மி மேல அனுதாபம் உண்டு. எல்லா விஷயத்திலும் ஒரு சர்வாதிகாரி மாதிரி ராஜலக்ஷ்மி கிட்ட நடந்து வந்திருக்கும் சபரிநாதன், அவர் இல்லாத ஒருநாள் அவள் ஆத்துல குளிச்சது தெரிஞ்சா சும்மா இருப்பாரா? அப்படி குளிச்ச ராஜலக்ஷ்மியை, அவர் விஷமா வெறுத்த நானும் அதேநேரம் ஆத்துல குளிச்சுண்டே பாத்தேன்னு வேற தெரிஞ்சா தாங்க முடியுமா அவரால?
சுப்பையா அந்தச் சம்பவத்தை சுருக்கமாகச் சொல்லிவிட்டுத் தொடர்ந்தான்.
“அந்தச் சம்பவத்தினால்தான் உன்னோட அப்பா கொந்தளிச்சுப் போயிட்டார். ராஜலக்ஷ்மியை வீட்டுக்குள் பூட்டி வைத்து மாட்டை அடிக்கிற மாதிரி அடித்து விளாசிவிட்டார். அவள் ஆத்தில் குளிக்கும்போது பார்த்துவிட்ட அவருக்குப் பிடிக்காத இளைஞன் என்னை அடிச்சு உதைக்க முடியாது; அதனால என்னோட பைக்குக்கு ஆத்திரத்தில் தீ வைச்சுட்டார். அந்தத் தீ இளமைக்கு எதிராக வைக்கப்பட்ட தீ! படிப்படியாக இளமையை அழிக்கத் துடிக்கிற பயங்கரவாதியா ஆயிட்டார் உன்னோட அப்பா.
அதீதமா எதிர்க்கவும் அழிக்கவும் துடிக்கிறது ஒருவகையான மன நோயும்கூட. உன்னோட அப்பா அப்படிப்பட்ட மோசமான மனோவியாதிக்கு ஆளாயிட்டார் சுகுணா… அந்த மன நோயாளிக்கிட்ட இருந்தும்தான் நாம ராஜலக்ஷ்மியை காப்பாற்றி ஆகணும்…”
பல நிமிடங்கள் கழித்து சுகுணா கனத்த பெருமூச்சுடன் சொன்னாள்:
“உங்களை இந்த ஊருக்கு நான் அனுப்பியிருக்கக் கூடாது… தப்பு பண்ணிட்டேன்.”
“அப்படிக் கிடையாது சுகுணா. இங்கே நான் வந்ததாலேதான் ராஜலக்ஷ்மி என்கிற அருமையான முனுஷியை என்னால சந்திக்க முடிந்தது. அருமையான ஒரு உறவும் அவளுடன் ஏற்படுத்திக்கொள்ள முடிந்தது.”
“ஒங்களுக்கு கல்யாணமாகி ஒரு ஆம்புளப் புள்ள இருக்கான். அசிங்கமா இல்ல, என்கிட்டேயே இப்படிப் பேசறதுக்கு? நீங்க சொன்னபடி என்னோட அப்பா அந்தப் பொண்ணை அடிமையா நடத்தியிருக்கலாம். ஆனா இந்தநாள் வரைக்கும் ராஜலக்ஷ்மி அவரோட பெண்டாட்டிதான். அந்தக் கோட்டைத் தாண்டி அவள் இன்னொரு இளைஞனிடம் எப்படிப்பட்ட உறவை ஏற்படுத்திக் கொண்டாலும் அது ஏத்துக்கக் கூடியதில்லை. கணவன்-மனைவி என்கிறது அக்னி சாட்சியா நடந்த ஒரு கமிட்மென்ட்…”
“கமிட்மென்ட்னு சொன்னியே அது கரெக்ட்தான். ஆனால் அவர்களிடையே இருப்பது வெறும் கன்வென்ஸனல் கமிட்மென்ட்தான். ரிலேஷன்ஷிப்பே கிடையாது அவங்களுக்குள்ள… உறவு இருந்தாத்தான் கணவன் மனைவி. உறவே அற்றுப் போனதால அவர்கள் கணவன் மனைவி கிடையாது. அப்படிப் பார்க்கும்போது எனக்கு ஏற்பட்ட உறவு ராஜலக்ஷ்மி என்கிற தனி மனுஷிகிட்டேதானே தவிர உன்னோட அப்பாவின் மனைவிகிட்டே கிடையாது…” சுப்பையா ஒருவித ஆக்ரோஷத்துடன் சொன்னான். பிறகு சற்று நிதானித்துக் கொண்டு தொடர்ந்தான்…
“பார்த்த சில நிமிடங்களிலேயே ராஜலக்ஷ்மியை எப்படி ஒரு வெகுளிப் பெண் என்று உன்னால சொல்ல முடிஞ்சிதோ, என்னாலேயும் அதை அவங்களைப் பாத்த உடனேயே உணர முடிஞ்சுது. அதையும் மீறி துல்லியமா அவங்ககிட்ட நான் பார்த்த முக்கியமான அம்சம் நிதானமான இன்டெலிஜென்ஸ். பொதுவா இண்டெலிஜென்ட் பர்ஸன்கிட்ட ஒருவித இன்டெலெக்சுவல் பர்ஸனாலிடியும் பில்டப் ஆகும். ராஜலக்ஷ்மிகிட்ட துளிக்கூட அது பில்டப்பே ஆகலை. அபூர்வமான இன்னொசென்ஸ்ஸும் அவங்களுக்குள்ளே ஆள் அரவமற்ற வனாந்திரத்தில் இருக்கிற ஏரிநீர் போல துல்லியமா இருந்தது. இப்படி இண்டெலிஜென்ஸும் இன்னொசென்ஸ்ஸும் மென்மையா இயல்பா கலந்திருந்த அரிதான அழகான கலவைதான் ராஜலக்ஷ்மி. இந்தக் கலவையை உணர்ந்து பார்க்க முடிஞ்ச அப்புறம்தான் சுகுணா ஐ பெல் இன் லவ் வித் ஹர. ஆனா, நான் இப்படிக் காதல் வயப்படறதுக்கு முன்னாடியே ராஜலக்ஷ்மிகிட்டே இருந்து எனக்கு ஒரு ‘அப்பீலிங் வாய்ஸ்’ கேட்டது.
நான் ஹைதராபாத் எப்ப திரும்பிப் போனாலும் யாருக்கும் தெரியாம அவங்களையும் அழைச்சிட்டுப் போயிடச் சொன்னங்க. அப்படி அழைச்சிண்டு போய் என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லலை சுகுணா. ஏதாவது ஒரு அனாதைகள் விடுதியில் சேர்த்துவிடச் சொல்லித்தான் எங்கிட்ட அழுதாங்க… அந்த SOS அழைப்பில்தான் எங்க உறவே ஆரம்பமாச்சு சுகுணா.
அவங்க இஷ்டப்படி ஹைத்ராபாத்ல ஒரு புகலிடம் பார்த்து கண்டிப்பா சேர்த்து விடறதாத்தான் நான் அவங்களுக்கு முதல்ல உறுதிமொழி கொடுத்தேன். அதுக்குப் பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமா சூரியோதயம் மாதிரி ராஜலக்ஷ்மியோட க்ளாஸிக்கல் பர்ஸனாலிட்டி தெரிய தெரியத்தான் அவங்க இருக்க வேண்டிய இடம் அனாதைகள் இல்லம் கிடையாது என்கிற முடிவுக்கு வந்தேன்.
ராஜலக்ஷ்மி அடிமையாகவும் அனாதையாகவும் இருக்காமல் என்னோட அருமையான துணையா இருக்கவேண்டும் என்பதை நான் மனதில் தீர்மானம் செய்துகொண்டேன். ராஜலக்ஷ்மியும் அதை ஏற்றுக்கொண்டாள். ஆனா அதை எப்படி எப்போ நடத்துறது என்கிறதை முழு வரைபடமா இன்னும் எதையும் நான் தயாரிச்சிடலை. ஆனா தயாரிக்க ஆரம்பிச்சாச்சு!
உன்னோட அப்பா ஒரு பயங்கரவாதியா மனநோயாளியா வெடிக்க ஆரம்பிச்சிருக்கார். அதனால இப்போ நாங்க அவசரமா முடிவு எடுத்தாக வேண்டிய கட்டத்ல இருக்கோம். இந்த நேரத்ல எதிர்பாராம நீ இங்க வந்துட்ட. அதனால உன்கிட்ட நான் உண்மையைச் சொல்ல வேண்டியதாயிடுத்து.
ஒரு பயங்கரவாதிகிட்டே இருந்து ராஜலக்ஷ்மியை மீட்டு என்னோட இணைத்துக் கொள்கிற தர்ம சபதத்தில் இருந்து நான் பின் வாங்கறதாகவே இல்லை சுகுணா… இதை நீ புரிஞ்சுப்பேன்னு நான் நம்பறேன்.”
“அடி செருப்பால…”
போர் வரப்போகுதா சுகுணா வாழ்க்கையில ? விறுவிறுப்பா இருக்கு.சீக்கிரம் அடுத்த பகுதியை எழுதவும்.ப்ளீஸ்