தப்பிவிட்டார்கள்
கதையாசிரியர்: கலைஞர் மு.கருணாநிதி
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: December 20, 2024
பார்வையிட்டோர்: 1,166
(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஊரில் ஒரே ரகளை – மூலைக்கு மூலை போலீஸ் லாரிகள் பறந்து கொண்டிருந்தன! இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு சிவப்புத் தொப்பிக்காரர்களின் கூச்சல், ஊரெங்கும் – தெருவெங்கும் வீடெங்கும் ஊடுருவிப் பாய்ந்தது. எந்த வீட்டிலும் கதவு மூடியிருக்கவில்லை. குறட்டைச் சப்தம் கேட்கவுமில்லை. தாய் தகப்பன்மார்களின் பேச்சு வார்த்தைகளையும் பரபாப்பையும் கண்டு சின்னஞ்சிறு குழந்தைகள் கூட வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. ஒரு வீட்டின் வாயிற்படியில் அமர்ந்து ஒரு கிழவி பாக்கு இடித்துக்கொண்டிருப்பவள், தன்னையறியாது தூங்கிவிட்டாள் … பாவம் பழுத்துப் போன இமைகள்! ‘பூம் பூம்’ என்ற காரின் சப்தம் அவளைத் திடுக்கிட வைக்கவே, பாக்கு உலக்கையைத் தடதடவென்று தரையில் இடிக்க ஆரம்பித்தாள். இதைக்கண்டு ‘கடகட’ வென்று கைகொட்டி ரசித்தான் அவள் பேரன்.

காரிலிருந்து இறங்கிய போலீஸ் வீரர்கள் வீட்டில் புகுந்து கிழவியை ஏதும் கேட்காமலேயே சோதனை போட ஆரம்பித்தனர். பரணியைப் பார்த்தனர். அடுக்களையை ஆராய்ந்தனர். கதவிடுக்கைக் கவனித்தனர். கடைசியில் உதட்டைப் பிதுக்கிக்கொண்டு வெளியே வந்தனர். ‘ஐயோ பூச்சாண்டி’ என்று கிழவியின் பேரன் கீழே விழுந்ததுதான் மிச்சம். ‘இப்படி எல்லா வீடுகளிலும் சோதனை. அந்த ஊரே அல்லோலகல்லோலப்பட்டது! காரணம், லீலா மில் சொந்தக்காரர் ராமதுரை அன்று இரவு ஏழு மணிக்கு இறந்து விட்டார்! இல்லை, இல்லை; கொலை செய்யப்பட்டார்! கொலை செய்தவன் ஒரு மில் தொழிலாளி! பெயர் விட்டல்.
அன்றிரவே கொலைகாரனைப் பிடித்துக் கூட்டில் அடைப்பதற்காகப் போலீசார் லாரிகளிலும், கார்களிலும், சைக்கிள்களிலும் புயல் வேகத்தில் முயன்று கொண்டிருந்தார்கள். ராமதுரை என்றால் யார் ? காலையிலெழுந்து ‘கடவுளே’ என்று கூப்பிட்டு ஒருமுறை தலைவிதியை நொந்துகொண்டு வயிற்றுப்பாட்டைப் பார்க்கும் ஓர் ஏழை மனிதரா? ஏழை கொல்லப்படுவது ஓர் எறும்பு நசுக்கப்படுவது போல! ராமதுரை போன்ற பணக்காரருக்குச் சாவு வரலாமா ? வாழ வசதியும், வளமும், வற்றாத இன்பமும் அளித்திருக்கிற கடவுள், ஆயுளையும் ஆயிரமாக அதிகப்படுத்தக் கூடாதா என்ற கவலை அவர்களுக்கு வளர்பிறையாகுமே!
“ஐயோ பாவமே!” ராமதுரைக்கு நாற்பது வயதுகூட இருக்காதே! நல்லவராயிற்றே! நாடுபுகழ் வள்ளலாயிற்றே! நாகேஸ்வரன் கோயில் நவராத்திரி அவர் உபயந்தானே! அகிலாண்டேஸ்வரி ஆலயத்தில் ஆயிரக்கால் மண்டபம் கட்டியது அந்தப் புண்ணியவான்தானே! ஒரு தர்ம தாதாவைப் பாவிப்பயல் குத்திக் குவித்து விட்டானே!”
“அப்படித்தான் என்ன, அவர் தொழிலாளர்கட்குத் துன்பம் அளித்தாரா ? ஒரு ‘ஸ்ட்ரைக்’ உண்டா – அவருடைய மில்லில் ? ஒரு தொழிலாளியை வேலையை விட்டு நீக்கினார் என்றுதான் இருக்குமா ? ஒன்றுமே இல்லாமல், இவன் இழவுக்கு இருநூறு ரூபாய் கடன் கொடுக்க மறுத்தார் என்பதற்காக இப்படி ஒரு மகாபாதகம் செய்வதா? பாவி, அவன் நல்லாயிருப்பானா?”
“அந்தக் குபேரனுடைய மனைவி – மகாலட்சுமி மாதிரி! இரண்டு மழலைக் குழந்தைகள். அவர்களுடைய மனம் என்ன பாடு படும் ? ஏழேழு ஜன்மங்களுக்குத் தவமிருந்தாலும் கிடைக்க முடியாத கணவனைப் பிரிந்து அவள் எப்படித்தான் துடிக்கிறாளோ? அடப் பழிகாரா, பஞ்சமா பாதகா, உன்னை இப்படிக் குத்திக் கொன்றால் உன் மனைவிக்கு எரியாதா? உம். உன்னையும் கொல்லாமலா விடப்போகிறார்கள்?”
“தூக்கிலே போடக்கூடாது அந்தச் சண்டாளனை! துண்டு துண்டாய் அவன் சதையைக் கிழித்துக் கிழித்துக் கொல்லவேண்டும்!”
இப்படி ஊரின் பலபகுதிகளில் பேச்சுக்கள். கொலைக்குக் காரணம் – விட்டலுக்கு இருநூறு ரூபாய் தரவில்லை. ஆகவே கொன்றான் என்பதுதான்.
லீலா மில் · நகரத்தின் ஓர் அழகான பகுதியில் அமைக்கப்பட்ட பெரிய தொழிற்சாலை. அங்கே சுமார் மூவாயிரம் தொழிலாளர்கள் வேலை செய்தனர். பஞ்சை நூலாக்குவதும், நூலை நூதன ஆடைகளாக்குவதும் அந்த மில்லின் வேலை. தொழிலாளர்கள் வசிப்பதற்கென்று நகரையடுத்துச் சிறிது தொலைவில் லீலாபுரம் என்ற இடமுண்டு. அங்குதான் மூவாயிரம் தொழிலாளிகளும் வாழ்க்கைத் தோணியை நகர்த்திக் கொண்டிருந்தனர். அந்த மூவாயிரத்தில் ஒருவன்தான் விட்டல்.
அன்று மாலை ஐந்துமணிக்கு வழக்கம்போல் ஆலையின் சங்கு ஊதிற்று. அடைபட்டுக் கிடந்த பாட்டாளிக் கூட்டம் அணி அணியாக வெளியேறிப் பெருமூச்சு விட்டபடி வீடு நோக்கிச் சென்றது. அவர்களோடு வெளியேறிய விட்டலும் மில்லுக்கு எதிரேயுள்ள மரத்தடியில் நின்றுகொண்டு பெண்கள் போகும் வழியைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருந்தான். சுமார் ஆயிரம் பெண்களை வெளியே அனுப்பும் வாயில் அது. எல்லாப் பெண்களும் வெளியேறி விட்டனர். அவளை மட்டும் காணவில்லை. ஆம், அவன் மனைவியைத்தான்! அவன் கால்களும் ஓய்ந்துவிட்டன.
முன்னே போய்விட்டாளோ என்று அங்கிருந்து அவன் வேகமாக நடந்தான். வீட்டுக்கு ஓடினான் – வீடு பூட்டியிருந்தது. மீண்டும் திரும்பினான். “காலையில் மில்லுக்குப் போகும்போதே தலையை வலிக்கிறது என்றாளே – ஒரு வேளை காய்ச்சல் வந்துவிட்டதோ என்ற சந்தேகம் அவனுக்கு. மனைவியின் மேல் ஓர் எறும்பு கடிக்கக்கூடப் பொறுக்கமாட்டான் விட்டல். அவ்வளவு ஆசை! ஏழைக்கு, அதைத் தவிரத்தான் வேறென்ன இன்பம்? விட்டல், மில்லை நோக்கி ஓட்டமும் நடையுமாக வந்தான்.
ஆலைச் சங்கு ஊதியதும், அத்தானைக் காணவேண்டுமென்று ஆவல் ததும்பப் புறப்பட்டாள் தங்கம். பகலெல்லாம் மில்லில், பஞ்சைப் பதப்படுத்த வேண்டிய பணி அவளுடையது. அவளுடைய கருத்த மேனியும், முகத்தில் அவளுக்கென்றே அமைந்த தனிக் களையும் விட்டலின் பயங்கரக் கவலைகளையெல்லாம் எத்தனையோ முறை விரட்டியிருக்கின்றன. காலை முதல் கஷ்டப்பட்டுக் கைகால் வலியெடுத்து நிற்கும் அவனுக்கு அவளுடைய ‘தரிசனம்’ தான் மருந்தாக இருக்கும். அதைப் போலவே அவளும் அவனைப் பார்த்துக் குளிர்ச்சி பெறுவாள். வேலை முடிந்ததும் தலையில் ஒட்டிக்கிடக்கிற பஞ்சைத் தட்டக் கூட நேரமிருக்காது. அவசர அவசரமாகப் புறப்படுவாள் அத்தானைப் பார்க்க.
அன்றும் அப்படித்தான் தங்கம் வந்துகொண்டிருந்தாள். பியூன் சிங்காரம் பின்னாலேயே ஓடிவந்து தங்கத்தைப் பார்த்து – “உன்னை முதலாளி கூப்பிடுகிறார்” என்றான். என்ன காரணம் என்றே புரியாத தங்கம் திடுக்கிட்டாள்.
முதலாளியின் அறைக்குச் சென்று அடக்க ஒடுக்கமாக ஒதுங்கி நின்றாள். ராமதுரை ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக்கொண்டு “தங்கம்! வேலையெல்லாம் முடிந்ததா?” என்றார். தங்கம் “உம்” என்று தலையை அசைத்தாள். “நீ ரொம்பத் திறமையாக இருக்கிறாயாம்; மானேஜர் சொன்னார்.” இதற்குப் பதில்கூறவில்லை. ஒரு புன்சிரிப்புத்தான். அந்தப் புன்முறுவலை ராமதுரை உற்றுக் கவனித்தார். “இந்த மாதத்திலிருந்து உனக்குச் சம்பளம் அதிகமாக்கச் சொல்லியிருக்கிறேன்”.
தங்கம் இப்போதும் பேசவில்லை; கன்னங்கள் மட்டும் குழியாயின. இந்தச் சந்தோஷ சமாசாரத்தை அத்தானிடம் சொல்ல வேண்டுமே என்று துடித்தாள். அங்கு நின்று கொண்டு, இளித்துக் கொண்டிருந்த சிங்காரத்தைப் பார்த்து “ஏய் போடா… காப்பி கொண்டு வாடா” என்று அதட்டினார். அவன் ஓடி விட்டான்.
ராமதுரை சிகரெட் சாம்பலைத் தட்டிக்கொண்டார். சாம்பல் பூக்காதிருக்கும்போதே, அதைப் பலமுறை தட்டிக்கொண்டிருந்தார். இன்னொரு சிகரெட்டை எடுத்தார். தீக்குச்சி அணைந்துவிட்டது. சே! ஒரே காற்று! ஜன்னல் கதவுகளைச் சாத்திவிட்டு மீண்டும் தீக்குச்சியைத் தட்டினார்.
ஆனால் சிகரெட் கொளுத்தப்படவில்லை. “அடடா என்ன காற்று! சனியன்! தங்கம்! அந்தக் கதவைச் சாத்து” என்று சொல்லும்போதே ராமதுரையின் குரல் நடுங்கிற்று, குளிரில் நடுங்கும் கிழவனின் குரல் போல்; தங்கம் முதலாளியைப் புரிந்துகொண்டாள்.
“நான் வருகிறேன்” என்று கூறிவிட்டு ஓர் அடி எடுத்து வைத்தாள். ராமதுரைக்கு அதற்கு மேலும் பொறுக்க முடியவில்லை. தங்கத்தின் மேல் தாவினார், கதவுகள் மூடிக்கொண்டன.
அவள் ‘ஐயோ!’ என்று அலறினாள். ராமதுரையின் வாயிலிருந்து போதை நிரம்பிய வார்த்தைகள் உதிர்ந்தன. “பச்சைப் பசுங்கிளியே! பேசும் பொற்சித்திரமே! என் இச்சைக்கு இணங்கி விடு – தங்கப்புறாவே!” அவள் நடுங்கினாள். “நடக்கும் பொன்வண்டே – ஏன் நடுங்குகிறாய் ?” ராமதுரை தங்கத்தை அணைத்துக் கொண்டார். அவள் திமிறிக்கொண்டு கோவெனக் கதறினாள். முதலாளியின் காலில் விழுந்து “என் கற்பைக் காப்பாற்றுங்கள்” என்று கதறினாள். “போர்க் களத்தில் ஒப்பாரியும் – போகக் களத்தில் புலம்பலும் கோழைகள் செயலடி கோமளாங்கி!” என உபதேசம் செய்தார் அவர்.
தங்கத்தால் அந்தக் காண்டாமிருகத்தின் பிடியிலிருந்து மீள முடியவில்லை. தங்கத்தின் மென்மையான அதரங்கள் – விட்டலின் அதரங்களை மட்டுமே சுவைத்த அதரங்கள் சூடேறிய ராமதுரையின் அதரங்களோடு அழுத்தப்பட்டன. அவள் மூர்ச்சித்தாள். அந்த மிருகம் ஆசை கொண்ட மட்டும் தன் பசியைத் தீர்த்துக் கொண்டது. தங்கம் துவண்டு போனாள்.
மணி ஆறு அடித்தது. அறைக்கதவு திறந்தது. ராமதுரை தங்கத்தின் கையில் ஒரு நூறு ரூபாய் நோட்டை வைத்து அழுத்தினார். அதைச் சுக்குச் சுக்காகக் கிழித்தெறிந்துவிட்டு தங்கம் ஓடினாள்.
விட்டல் மில்லுக்கு மிக அருகில் வந்து விட்டான். தங்கத்தைக் கண்டதும் விட்டலுக்கு ஒரே ஆனந்தம். அருகே ஓடி வந்தான்… ஆனால் தங்கம் தணலில் பட்ட புழுவாய் இருந்தாள்.
“அத்தான் என்னைத் தொடாதீர்கள். நான் எச்சிற் பண்டம்” – அவள் அழுதாள்.
“என்ன தங்கம் சொல்கிறாய்?”
“முதலாளி . . என் கற்பை..” அவள் முடிக்கவில்லை. முடிக்கவும் முடியவில்லை. விம்மிக் கொண்டே விட்டலின் கால்களில் விழுந்தாள். அவன் அவளைக் கவனிக்கவேயில்லை. மில்லை நோக்கிப் பாய்ந்தான்.
வாயிலில் நின்று கொண்டிருந்த கூர்க்கா ஆச்சரியத்தோடு விட்டலைப் பார்த்தான். விட்டல், அவன் இடுப்பைப் பார்த்தான். பளபளப்பான கட்டாரி. ஒரே பாய்ச்சலில் அதைப் பிடுங்கிக் கொண்டு, முதலாளியின் அறையை நோக்கி ஓடினான். அவ்வளவுதான் – தங்கத்தை ருசி பார்த்த அந்தச் சுவை மாறுவதற்குள் ராமதுரை பிணமானார்.
கட்டாரியைத் தன் இடையில் செருகிக் கொண்டு வெளியே ஓடி வந்தவனை வாயிற்காப்பாளன் கூர்க்கா வழிமறித்துக் கொண்டான். கூர்க்காவின் கத்தி விட்டலின் விலாவில் பாய்ந்தது. விட்டல், கூர்க்காவின் கழுத்தில் கட்டாரியை நுழைத்து, அவனைத் தூக்கி வீசிவிட்டு, விலாவைப் பிடித்தவாறு – ‘குபு குபு’ வென்று பெருகும் ரத்தத்தை அடைத்துக் கொண்டு தங்கத்திடம் ஓடி வந்தான்.
தங்கம் தரையில் சுருண்டு கிடந்தாள். அவளை ஒரு கையால் அணைத்துத் தூக்கிக் கொண்டு மில்லுக்கு ஓரமாக நீர் வற்றிப் போயிருந்த ஒரு வாய்க்காலுக்குள் ஒளிந்து கொண்டான்.
மில்லிலிருந்து ஆட்கள் சிதறினர். ‘டெலிபோன்’கள் அலறின.
தங்கம் தன் சேலையைக் கிழித்துச் சுற்றினாள். விட்டலால் நிற்க முடியவில்லை. தள்ளாடினான். அவன் இரத்தமெல்லாம் விலாவில் ஏற்பட்ட ஓட்டை வழியாக வெளியேறிக் கொண்டிருந்தது. “அத்தான், என்னையும் கொன்றுவிடுங்கள்” என்று தேம்பினாள் தங்கம்; “உஸ்…’ என்று அவளைத் தட்டிக் கொடுத்தான். அவன் இமைகள் ஈரமாயின. இருவரும் தழுவிக் கொண்டார்கள். தங்களிருவரிடையே ஏற்படப் போகும் பெரியதொரு பயங்கரமான நிகழ்ச்சி, அவர்களைப் பைத்தியம்போல் ஆட்டி வைத்தது.
“இந்த வாய்க்காலுக்குள்ளேயே நடந்தால், அடுத்த ஊர் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய்விடலாம். எப்படியாவது தப்ப முயல்வோம்” என்று தழுதழுத்த குரலில் கூறினான் விட்டல். தங்கம் கண்ணீர் பொழிந்தாள்.
இருவரும் நடந்தார்கள்… நடந்தார்கள்… நடந்து கொண்டே இருந்தார்கள். கொலைகாரனை, போலீஸ் வலை போட்டுத் தேடும் போதெல்லாம் நடந்து கொண்டு தானிருந்தார்கள்.
இங்கு… போலீஸ் வீரர்கள் ஊரை ரகளை செய்தார்கள். ஆகாயத்தைத் தவிர மற்ற இடங்களில் பார்த்து விட்டதாகப் பெருமையடித்துக் கொண்டனர். ஊருக்குள் பார்க்காத இடமில்லை. எதிலும் பயனில்லை என்றதும், ஒன்பது மணிக்குப் புறப்படுகின்ற ரயில் வண்டியில் கொலைகாரன் தப்பி விடலாம் என்ற யோசனையின் பேரில் எல்லா ரயில்வே ஸ்டேஷன்களுக்கும் லாரிகள் பறந்தன. பத்து மைலுக்குட்பட்ட இடங்களுக்கு; கமலாபுரம் ஸ்டேஷனை நோக்கி ஒரு லாரி ஒடிற்று!
ஆம்! அந்த ஸ்டேஷனை நோக்கித்தான் தங்கமும், விட்டலும் போய்க்கொண்டிருக்கிறார்கள். இன்னும் பத்து நிமிடங்கள் பாக்கி, வண்டி வருவதற்கு! அவர்களும் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டார்கள். ஆனால் விட்டலால் ஓர் அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. விலாவின் வலி அதிகமாகி விட்டது. “ஐயோ ஐயோ” என்று கத்த ஆரம்பித்தான். தங்கத்தின் நெஞ்சு ‘படக் படக்’ என்று அடித்துக் கொண்டது, அவள் காதில் தட்டுவது போலிருந்தது. ஆலை வேலை முடிந்து ஆனந்த லாகிரியில் மூழ்கி அத்தானுடன் படுத்துறங்கும் தங்கம் எங்கே ?… இப்போது மரண மூச்சு விட்டுக்கொண்டிருக்கும் இந்த அபாக்கியம் நிறைந்த தங்கம் எங்கே ?
“அத்தான்!” என்று கொஞ்சியபடி அவன் கைகளை எடுத்துத் தன் தோளின் மேல் போட்டுப் பிடித்துக் கொண்டே மூச்சைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.
எப்படியும் அவனை ஸ்டேஷனுக்குக் கொண்டு போய்ச் சேர்த்து விடலாம் என்ற அசட்டுத் தைரியம் அவளுக்குப் பிறந்துவிட்டது. அந்த ரயில் மட்டும் கிடைத்துவிட்டால்?..
பிறகு எங்கேயாவது போய், எப்படியாவது தப்பித்து விடலாம் என்ற ஒரே ஆசைதான் அவர்களை விரட்டியடித்தது. விட்டல் திணறித்திணறி மூச்சுவிட்டான். தங்கம் ஆவேசங் கொண்டவளாய் நடந்து கொண்டிருந்தாள்
திடீரென அவள் முகம் மலர்ந்தது. ரயில்வே ஸ்டேஷன் சிவப்பு விளக்கு தெரிந்துவிட்டது. இன்னும் சில நிமிஷங்கள் வாய்க்காலிலிருந்து மேலே ஏறவேண்டும்; அவ்வளவுதான் … சற்று நேரத்திற்கெல்லாம் ரயில் வந்துவிடும்; தப்பித்து விடலாம்.
தங்கம் விட்டலைக் கட்டிக்கொண்டு “அத்தான்!” என்றாள். அழுகையும் சிரிப்பும் கலந்து சோகத்தை அதிகமாக்கின. கரையில் ஏறிக்கொண்டு பலங்கொண்ட மட்டும் முயன்று தன் ஆசை அத்தானைத் தூக்கி கரை சேர்த்தாள். “இதோ ஸ்டேஷன்!” என்று அவனை இறுகப் பிடித்துக் கொண்டாள். அந்தத் தழுவலில் அவன் விலாவின் வலிகூட இருந்த இடம் தெரியவில்லை. “தங்கம்” என்றான் இன்பம் பொங்கிடும் கீழ் ஸ்தாயியில்! “ஐயோ” என்று அலறினாள் தங்கம்!
லாரியிலிருந்து போலீஸ்காரர்கள் வேகமாக இறங்கிக் கொண்டிருந்தார்கள். ‘டார்ச் லைட்டு’கள் பல திசைகளிலும் சென்றன. தங்கத்தின் நினைவு சுழன்றது. தலை கிறு கிறுத்தது, விட்டல் கையில் விலங்கு – பிறகு. தூக்குமேடையில் அவன் தங்கம் விதவைக் கோலம். இந்தப் பயங்கரம் அவளை ஓர் உலுக்கு உலுக்கிற்று. “அத்தான்! அகப்பட்டுக் கொண்டோம்!” என்று வீறிட்டாள். விட்டல் விழிகளை உருட்டிப் பார்த்தான். அவள் கன்னங்களும் நனைந்து விட்டன. தங்கம் தன் ஆசையனைத்தையும் ஒரு சேர உதட்டில் சேர்த்து விட்டலை முத்தமிட்டாள். முத்தம் முடிந்தது.
போலீஸ் படை “விடாதே! பிடி!” என்று கத்திக் கொண்டு ஓடி வந்ததைக் கண்டார்கள். விட்டலின் இடுப்பிலிருந்த கட்டாரியைத் தங்கம் எடுத்துக் கொண்டாள். போலீசாரிடமிருந்து தப்புவதற்கு அவளுக்கு இப்போது வழி தெரிந்துவிட்டது. தன் அன்பு அத்தானின் நெஞ்சில் ஓங்கி ஒரு குத்து – அவன் பிணமானான்! அந்த இரத்தம் சொட்டும் கட்டாரி அவள் கழுத்துக் குழியிலும் பாய்ந்தது. போலீஸாரிடமிருந்து விட்டலைக் காப்பாற்றினாள் ! வேதனையிலிருந்து தன்னையும் காப்பாற்றிக் கொண்டாள்.
சமுதாயக் கொடுமையிலிருந்து இருவருமே தப்பி விட்டார்கள்.
– 16 கதையினிலே, முதற் பதிப்பு: டிசம்பர் 1995, திருமகள் நிலையம், சென்னை.