தன்னை மறந்த கொல்லர்
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 13,757
முன்னொரு காலத்தில் சாந்தப்பன் என்ற கொல்லன் இருந்தான். ஊருக்கு வெளியே அவன் உலைக்களம் இருந்தது. பொறுப்பாகத் தொழில் செய்ததால் அரண்மனை வேலையை அவனிடம் ஒப்படைத்தனர். அவன் வீரர்களுக்கு வாள், வேல், கவசம் போன்றவற்றை செய்துக் கொண்டிருந்தான்.
அப்போது அந்நாட்டு அரசர் வீரர்கள் சூழ ஆரவாரமாக அந்த வழியாக வந்தார். வேலையிலேயே கவனமாக இருந்த அவன் அரசர் வந்ததை அறியவில்லை. அரசரின் பார்வை தற்செயலாக உலைக்களத்திற்குள் சென்றது. அங்கே ஒருவன் தனக்கு வணக்கம் செய்யாமல் அமர்ந்து இருப்பதைப் பார்த்தார்.
குதிரையில் இருந்து கோபத்துடன் இறங்கிய அவர் உலைக்களத்திற்குள் சென்றார். அப்போதும் அவன் அரசர் வந்ததைக் கவனிக்கவில்லை. வாள் முனை கூர்மையாக உள்ளதா என்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். தான் வந்ததை அறிவிக்க நினைத்த அரசர் மெல்ல முனகினார்.
குரல் கேட்டுத் தலை நிமிர்ந்து பார்த்தான் அவன். அரசரும் வீரர்களும் நிற்பதைப் பார்த்துத் திடுக்கிட்டான்.
“”அரசே! என்னை மன்னியுங்கள். இந்த வாளைக் கூர்மைப்படுத்துவதிலே கவனமாக இருந்தேன். தாங்கள் வந்ததை நான் கவனிக்கவில்லை!” என்றான்.
“மரியாதை தெரியாத அவனுக்கு என்ன தண்டனை கிடைக்கப் போகிறதோ தெரியவில்லையே!’ என்று மற்றவர்கள் நினைத்தனர்.
“”கொல்லரே! உம் கடமை உணர்வைப் பாராட்டுகிறேன். நீர் வலிமையான படைக் கருவிகளைச் செய்து தருவதால்தான் நம் வீரர்கள் போர்களத்தில் வெற்றி பெறுகின்றனர். உம்மைப் போன்றவர்களின் கடமை உணர்வினால் நம் நாடு பாதுகாப்பாக உள்ளது!” என்று பாராட்டிவிட்டு அங்கிருந்து சென்றார் அவர்.
குட்டீஸ்… இந்தக் கொல்லர் என்ன மாதிரி கவனமா இருந்து வேலை செய்கிறார் பார்த்தீர்களா? இதே போலவே நீங்களும் படிக்கும்போது கவன சக்தியை சிதறவிடாமல் இருந்து படிக்கணும். சரியா?
– செப்டம்பர் 03,2010