தந்தை சொல் வேதம்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 11, 2024
பார்வையிட்டோர்: 1,317
(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அடர்ந்த காட்டுப்பகுதியை அண்டினாற்போல திகிலிவெட்டை என்றொரு முன்னேற்றமடையாத கிராமம்.
அந்தக் கிராமத்தில் பத்துப் பதினைந்து வீடுகளே இருந்தன.
அந்த வீடுகளின் ஒன்றில் சின்னையா என்னும் விறகு வெட்டி தனது மனைவியுடன் வாழ்ந்து வந்தார்.
இருவருக்கும் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தைக்கு கமலவேணி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர்.
கமலவேணிக்கு ஐந்து வயது இருக்கும் பொழுது தீடிரென அவளுடைய தாய் இறந்து போனாள்.
தாய் இல்லாத குழந்தையின் மேல் மேலும் அன்பு கொண்டு தாய் இல்லையே என்ற குறை தெரியாவண்ணம் வளர்த்து வந்தார் சின்னையா.
பிள்ளை வளர வளர தந்தையின் சொல் கேளாத பிள்ளையாக வளர்ந்தாள்.
அவள் கேட்பதை வாங்கிக் கொடுக்க வேண்டு. அவள் சொல்வதை அப்படியே செய்ய வேண்டும்.
இந்தச் செய்கை வேதனைக்குள்ளாக்கியது.
இந்த அடம்பிடிப்பை பலமுறை தந்தை கண்டித்தும் அவள் கேட்கவில்லை.
அடம்பிடிப்பது கூடாத பழக்கம், தாயிற் சிறந்த கோயிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை, அதனால் அப்பாவினுடைய சொல் கேட்டு நடக்க வேண்டும் என்று அடிக்கடி கூறுவார்.
ஆனால், அவளோ தந்தையின் சொல்லைக் கேட்கவில்லை. அவளின் இஸ்டப்படியே நடந்தாள்.
இதனால் மனமுடைந்த சின்னையா கடவுளே என் மகளை நீதான் திருத்தித் தர வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக் கொண்டார்.
ஒரு நாள் மாலை நான்கு மணியிருக்கும் காட்டில் விறகு வெட்டி விட்டு வீடு திரும்பிய சின்னையா கிணற்றடியில் முகம் கழுவிக் கொண்டிருந்தார்.
மகள் கமலவேணி தெருவோரத்தில் நின்று தெருவால் போவவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவ்வழியால் சில பெண்கள் தலையிலே பெட்டியைச் சுமந்தவாறு போய்க் கொண்டிருந்தனர்.
அவர்களைக் கண்ட கமலவேணி “நீங்கள் எங்கே போகின்றீர்கள்?” என்று கேட்டாள்.
“நாங்கள் நாவற்பழம் பறிக்கப் போகிறோம்” என்றனர்.
நாவற் பழங்கள் என்று சொன்னதும் கமலவேணிக்கு வாயூறியது. “இதோ நில்லுங்கள் உங்களுடன் நாவற்பழம் பறிக்க நானும் வருகின்றேன்” என்று கூறிக் கொண்டு துள்ளிக் குதித்தவாறு தந்தையிடம் ஓடினாள்.
“அப்பா – பெண்கள் நாவற்பழம் பறிக்கக் காட்டுக்குப் போகிறார்கள். அவர்களுடன் சேர்ந்து நானும் நாவற்பழம் பறிக்கப் போகின்றேன்” என்றாள்.
“மகளே, அது மிகவும் கொடிய மிருகங்கள் வாழும் காடு. அதனால் உனக்கு ஆபத்து உண்டு. நீ அங்கே போக வேண்டாம். நான் உனக்கு நாவற்பழங்கள் பறித்துத் தருகிறேன்” என்றார் தந்தை.
ஆனால், அவள் தந்தையின் சொல்லைக் கேட்கவில்லை. தந்தையின் சொல்லைப் புறக்கணித்து தான் விரும்பியபடி அந்தப் பெண்களுடன் சேர்ந்து நாவற்பழம் பறிக்கக் காட்டுக்குப் போனாள்.
அடர்ந்த காட்டினுள் சென்ற பெண்கள் நாவல் மரங்களில் ஏறி பழங்களைப் பறித்தனர். கமலவேணியும் ஒரு மரத்தில் ஏறி நாவற் பழங்களைப் பறித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது “ஆ…… ஆ……” என்ற உறுமல் ஓசையுடன் கரடியொன்று அவர்கள் நின்ற மரத்தடியை நோக்கி வேகமாகப் பாய்ந்து வந்தது.
பாய்ந்து வந்த கரடியைக் கண்ட எல்லோரும் அவசரம் அவசரமாக மரத்திலிருந்து இறங்கி ஓடத் தொடங்கினர். கமலவேணியும் ஓடினாள். காட்டுப்பாதை அவளுக்குப் பழக்கம் இல்லாததால் அவளால் மற்றப் பெண்களுடன் சேர்ந்து ஓட முடியவில்லை.
அவர்களின் பின்னாலேயே ஓடினாள்.
சற்றுத் தூரம் சென்றதும் பாய்ந்து வந்த கரடி அவளின் தலைமயிரிலே பிடித்து இழுத்துச் சென்றது.
முட்புதர்கள் நிறைந்த பாதையினுடாக இழுத்துச் சென்றதனால் முட்களில் உடல் கொளுவி, சட்டை கிழிய உடலில் இருந்து இரத்தம் சொட்டுச் சொட்டாக நிலத்திலே விழுந்து கொண்டு சென்றது.
இறுதியில் அடர்ந்த காட்டிற்கு நடுவே அமைந்திருந்த குகை ஒன்றினுள் கொண்டு போய் வைத்து விட்டு, குகையின் வாசலிலே காவல் நின்றது கரடி.
கமலவேணியோ பயத்தினால் நடுங்கியபடி விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள்.
அதேவேளை தப்பியோடிய பெண்கள் கமலவேணியின் தந்தையிடம் கமலவேணியைக் கரடி கொண்டு போன செய்தியைக் கூறினார்கள்.
உடனே சின்னையா விறகு வெட்டும் கோடரியை எடுத்துக் கொண்டு வேகமாகக் காட்டை நோக்கிப் போனார்.
அங்கே முட்புதர்களில் சிக்கி சட்டை கிழிந்து துண்டு துண்டாகக் கிடப்பதைக் கண்டார்.
கரடியினால் இழுத்துச் செல்லப்பட்ட தடயமும் இரத்தச் சிந்தல்களும் தெளிவாகவே தெரிந்தன.
அந்தக் தடத்தினால் நடந்தார். அது போய் ஒரு குகையில் முடிந்தது.
ஓசை எழும்பா வண்ணம் மெதுவாகப் பதுங்கிப் பதுங்கி குகையை நோக்கி நடந்தார்.
குகை வாசலில் ஒரு கன்னங்கரிய கரடி வாயை அசைத்தவாறு முன்னங்கால்களை நீட்டியபடி படுத்துக் கிடந்தது. ஆனால் கமலவேணியைக் காணவில்லை .
மகளைக் காணாத தந்தையின் நெஞ்சு வேதனையால் துடித்தது. அழுகை அழுகையாக வந்தது. மகளைக் கரடி சாப்பிட்டு விட்டது என நினைத்தார்.
கரடியின் மீது ஆத்திரம் அதிகரித்ததும். மின்னல் வேகத்தில் முன்னேறினார். கையில் இருந்த கோடரி நிலவொளியில் “பளிச்…பளிச்…..” என்று பளபளத்தது.
எங்கேயோ இருந்து மகள் விக்கி விக்கி அழும் ஓசை மெதுவாகக் கேட்டது.
அதற்கிடையில் சின்னையாவைக் கரடி கண்டு கொண்டது.
வேகமாக ஓடி வந்து சின்னையாவின் மேலே பாய்ந்தது. சின்னையா கையிலிருந்த கோடரியை கரடியை நோக்கி வீசினார். அது குறி தவறாது கரடியின் மண்டையைப் பிளந்து கொண்டு வீழ்ந்தது. கரடி அவ்விடத்திலேயே துடிதுடித்து இறந்தது.
சுற்றும் முற்றும் மகளைத் தேடினார். மகளைக் காணவில்லை. ஆனால் அழுகை ஒலி மட்டும் மெல்லியதாகக் கேட்டுக் கொண்டேயிருந்தது.
உற்றுக் கேட்டார். அவ்வழுகையொலி குகையினுள்ளேயிருந்தே வந்து கொண்டிருந்தது.
குகையினுள்ளே போக எத்தனித்தார். முடியவில்லை. உள்ளே ‘கும்’ மென்ற இருட்டாக இருந்தது.
குகையின் வாசலிலே நின்று கொண்டு மகளே என்று சத்தம் போட்டுக் கத்தினார்.
அந்தச் சத்தம் மலைகளில் முட்டி மோதி எதிரொலித்துக் கொண்டிருந்தது.
அப்பொழுது “அப்பா” என்றவாறு ஓடி வந்து கமலவேணி தந்தையை இறுக்கக் கட்டி அணைத்துக் கொண்டாள். ஆனால் அழுகை ஓயவில்லை.
அழுகையிடையே “அப்பா, நான் உங்களுடைய சொல்லைக் கேட்காமல் நடந்ததற்கு நல்ல பாடம் படித்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்” என்றாள்.
“தந்தையின் சொல்லைக் கேட்காத பிள்ளைகளுக்கு கஷ்டத்திற்கு மேல் கஷ்டம் வரும். எனவே அம்மா அப்பா சொல் கேட்டு நடந்தால் கஷ்டமே வராது” என்று கூறி மகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
– நரியின் தந்திரம், முதற் பதிப்பு: அக்டோபர் 2000, ப்ரியா பிரசுரம், மட்டக்களப்பு