தத்துவத் தவளை
தத்துவ ஞானிகளுக்கும் தத்துவவாதிகளுக்கும் பெருத்த வேறுபாடு உண்டு. தத்துவ ஞானிகள் உண்மையை உணர்ந்துகொண்டவர்கள். தத்துவவாதிகளோ, உண்மையை உணர்ந்துகொள்ள விரும்பாமலும், அதை ஏற்றுக் கொள்ளாமலும், அது பற்றி தர்க்கபூர்வமாக வாதாடுவதையே நோக்கமாகக் கொண்டவர்கள்.
முக்கியமாக, தத்துவவாதிகளிடம் ஆன்மிக அனுபவம் இருக்காது. எனவே, ஓஷோ தத்துவவாதிகளை ஏற்றுக் கொள்வதில்லை. தத்துவ ஞானிகளான நீட்ஷே, சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில் போன்றவர்களை அவர் பெரிதும் பாராட்டினாலும், தத்துவவாதிகள் பற்றி கேலியான பார்வையையே கொண்டிருந்தார். அது பற்றி அவர் கூறிய மிக அருமையான ஒரு கதை இது.

தத்துவவாதியான தவளை ஒன்று, மரவட்டை நடந்து செல்வதைப் பார்த்து ஆச்சரியப்பட்டது. அது மரவட்டையிடம் சென்று, “மரவட்டை மாமா,… நீங்கள் எப்படி நூற்றுக்கணக்கான கால்களை வைத்துக்கொண்டு நடக்கிறீர்கள்? இந்தக் கால்களில் எதை முதலாவதாக வைப்பீர்கள்; எதை அடுத்த அடுத்ததாக வைப்பீர்கள்? இதில் உங்களுக்குக் குழப்பம் வராதா?” என்று கேட்டது.
“எனக்கு அது தெரியாது. நான் நடந்துகொண்டிருக்கிறேன்; அவ்வளவுதான்!” என்றது மரவட்டை.
உடனே தத்துவத் தவளை, “அப்படி இருந்தால் போதாது. எதையும் ஆராய்ந்து, அறிவுபூர்வமாக சிந்தித்து, செயல்பட வேண்டும்” என்று ஒரு விரிவுரை ஆற்றிவிட்டு சென்றது.
மறு நாள் அந்தத் தவளையை சந்தித்த மரவட்டை, அதனிடம் புலம்பியது:
“நீ நேற்று என்னிடம் கேட்ட கேள்வியும், ஆற்றிய விரிவுரையும் எனக்குப் பெரும் தீங்கு இழைத்து விட்டது. நான் மட்டுமல்ல; பூமி தோன்றிய காலம் தொடங்கி, மரப்பட்டை இனம் முழுதுமே, இதுவரைக்கும் எந்தக் காலை முதலில் எடுத்து வைப்பது, அடுத்ததாக எதை வைப்பது என்ற கேள்வி கேட்டுக் கொண்டதில்லை. நாங்கள் ஒழுங்காக நடந்து கொண்டிருந்தோம். ஆனால், நீ இந்தக் கேள்வியைக் கேட்டதிலிருந்து, எந்தக் காலை முதலிலும், எதை அடுத்தடுத்ததாகவும் வைக்க வேண்டும் என்கிற யோசனையால் திணறித் தடுமாறி நான் விழுந்துவிட்டேன். என்னால் முன் போல ஒழுங்காக நடக்கவே முடிவதில்லை. தயவு செய்து இனி மேல் வேறு எந்த மரவட்டையிடமும் இந்தக் கேள்வியைக் கேட்டுவிடாதே!”