தகனம்
”இன்னிக்கு ’உலகமரபுதினம்’ என்பதால் பள்ளிக்கூடத்துல மாணவிகள் எல்லாரும் பாரம்பரிய கலாசாரத்தை பிரதிபலிக்கிற மாதிரியான உடை போட்டுக்கிட்டு போகலாம்னு இருக்கோம்…. பட்டுப்பாவாடையும் தாவணியும் பீரோலேருந்து எடுத்துவைங்க. அப்புறம் நம்ம மதியம் லஞ்சுக்கு அப்பாவுக்கும் எனக்கும் பிடிச்ச, மீன் குழம்பு சோறு செய்து அதை எடுத்து லஞ்ச் பாக்சுல போட்டு வச்சிடுங்கம்மா”
குளிக்கப்போகும் முன்பு மகள் அன்பு ஆணையிட்டுப்போயிருந்தாள்.
அவள் சொல்லியபடி மீன் குழம்பினை செய்து முடித்து சோறோடு கலந்து சித்ராவின் லஞ்ச்பாக்சினில் வைக்கும்போது கணவர் கேட்டார் ”என்ன முத்துலட்சுமி, காலையிலேயே சமையலை முடிச்சிட்டியா என்ன?“

“ஆமாங்க உங்க பொண்ணு இன்னிக்கு என்னவோ உலகமரபுதினமாம் பாரம்பரிய உடைன்னு அதிசியமா பாவாடை தாவணிபோட்டுக்கப்போறாளாம்! லஞ்சுக்கு நூடில்ஸ் பாஸ்தான்னுதான் கொண்டுபோவா ஆனா இன்னிக்கு மீனைப்போட்டுக்குழம்பு செய்யசொல்றா! எல்லாத்திலயும் பாரம்பரியம் போலிருக்குது!. ஒண்ணும்புரியல எனக்கு!” என்றேன் குழப்பமான சிரிப்புடன்.
” ..மதர்ஸ் டே, ஃபாதர்ஸ் டே, வாலண்டைன் டே மாதிரி இதுவும் ஒர்ல்ட் ஹெரிடேஜ் டே! உலகமரபுதினம்! புராதன சின்னங்களைப்பேணுகிற விழிப்புணர்வுக்காக கொண்டாடுறதை சித்ரா மாதிரி ஒன்பதாவதுபடிக்கிற பசங்க இப்படிக் கொண்டாடறாங்க போலருக்கு! எப்டியோ இன்னிக்கு அது பாவாடை தாவணி போட்டுக்கப் போறதைப் பார்க்கத்தான் நானும் காத்துட்டுருக்கேன்! காணக்கிடைக்காத காட்சி இல்லே?” குறும்புச் சிரிப்புடன்.
என் கணவர்முடித்தபோது மாடி அறையிலிருந்து சித்ரா கீழே இறங்கி வந்துவிட்டாள்.
கரும்பச்சை நிறப்பட்டுப்பாவாடையும் பொன்நிற ஜாக்கெட்டும், சிவப்பு தாவணியும் அணிந்துவந்தவளை என் கணவர் கண்நிறைந்து பார்த்தவர், ”முத்துலட்சுமி! முப்பதுவருஷம் முன்னாடி பதினைஞ்சி வயசில் நீயும் இப்படித்தானே இருந்திருப்பேன்னு நினைக்கிறேன். நிறம் ,முகம், உயரம் எல்லாத்துக்கும் உன்னையே கொண்டிருக்கிறா சித்ரா! “ என்றார்.
“ஆனா பெருந்தன்மைக்கும், அன்பான குணத்துக்கும் உங்களைத்தான் கொண்டிருக்கிறா என் பொண்ணு” என்று சொல்லியபடி சித்ராவை தலைமுதல் கால்வரை புதிதாய்ப்பார்ப்பதுபோல பார்த்தேன்.
என் கணவர் சொன்னது நிஜம்தான்! அப்படியே என்னுடைய பிரதிபிம்பமாய் என்னை அந்த மல்லனூர் உயர்நிலைப்பள்ளி மாணவியாக பார்ப்பது போலிருந்தது.
மறக்கமுடியாத பள்ளி நாட்கள்! பட்டுசிறகினைவிரித்துப்பறந்த பள்ளி நாட்களை நான் அடிக்கடி நினைப்பதுண்டு. மல்லனூர் அருகே தும்பிப்பட்டி கிராமத்தில் தான் தாத்தா பாட்டியின் வீட்டில் என் பள்ளிக்கூடப்படிப்பு ஆரம்பமானது. அப்பாவுக்கு அடிக்கடி வடக்கே பணிமாற்றம் இருந்ததால் என் படிப்பு தமிழோடு தழைக்கவேண்டுமென்று அப்பா நினைத்தார். அப்பா வங்கியில் பணிபுரிந்தாலும் தமிழகம் அறிந்த பிரபல கவிஞராக இருந்தார்.
கிராமத்திலிருந்து பஸ்ஸில் மல்லனூர் உயர்நிலைப்பள்ளிக்கு தினமும் வந்துவிடுவேன்.
இன்றைக்கு சித்ரா என்னிடம் ஸ்பெஷலாய் கேட்டமாதிரி நானும் அன்று ஒருநாள் ‘மீன் குழம்பு சோறு டிபன்பாக்சுல இன்னிக்கு மதியத்துக்கு வைங்கபாட்டி’ என்றேன்.
“என்னடி முத்துலட்சுமி வளக்கமா இட்லியோ ஊத்தப்பமோ தானே வைக்கசொல்லுவே இன்னிக்கு என்ன அதிசியமா?” என்று பாட்டி திகைப்புடன் கேட்டாள்.
பாட்டியிடம், ‘பள்ளிக்கூடம் திறந்ததும் முதநாள்.யாரையாச்சும் ராகிங் செய்யணும் அதுக்குத்தான்’ என்றால் பாட்டிக்குப்புரியாது என்பதால் ’சும்மாத்தான்’ என்று மட்டும் சொல்லி சமாளித்தேன்.
பள்ளி வந்ததும் புதுமுகமாய் வகுப்புக்கு வந்த பெண்ணின் பெயர் கோமளவல்லி எனத்தெரிந்தது. அருகில் அரங்கனூர் கிராமத்திலிருந்து வந்தவள், ஆசாரமான ஐயர் வீட்டுப்பெண் என தோழிகள் அவளை விஜாரித்து எனக்கு ரகசியத்தகவல் சொன்னார்கள். ஆக கோமளவல்லியை ராகிங் செய்வது என தீர்மானித்தேன்.
அந்தகோமளவல்லியிடம் மதிய சாப்பாட்டு நேரத்தில் எனது டிபன் பாக்சைத்திறந்து ‘மீன் குழம்பு சாப்பிட்ருக்கியா ருசி பாக்கறயா?’ என்று ஆரம்பித்தேன். அருகில் உட்கார்ந்திருந்த கோமளவல்லி தனது புளியோதரைப் பொட்டலத்தை திறந்தவள் அப்படியே மூடிவிட்டாள்.
”நாத்தமா நாற்றது… ?” என்று முகம் சுளித்தாள். ‘உவக்’ என அவள் தூரபோய் வாந்தியெடுக்க என் சிநேகிதிகள் சிரிக்க, நான் அதை ரசித்து மகிழ்ந்தேன்.
மறுநாளிலிருந்து கோமளவல்லி பள்ளிக்கே வரவில்லை.
ஆனால் கோமதி டீச்சருக்கு விஷயம் தெரிந்து, ”என்ன புதுப்பழக்கம் ராகிங் என்றெல்லாம்? ஸ்டாப் திஸ் நான் சென்ஸ்” என்று வகுப்பில் சீறிவிட்டார்.
எனக்கும் கோமளவல்லியை அப்படி அருவருப்படைய செய்திருக்ககூடாதென்று தோன்றியது. அவள் என் செய்கையால் பயந்து பள்ளிகூடம் வராமல் போனாளா அல்லது வேறுகாரணமா என்று தெரியவே இல்லை. ’சே..நான் அப்படி செய்திருக்கக்கூடாது’ என்று தோழிகளிடம் சொல்லி வருத்தப்பட்டேன். அப்போதே என் குறும்பான சுபாவமும் அடங்கிப்போனது.
ப்ளஸ்டூவிற்குப்பிறகு கிராமத்திலிருந்து டில்லிக்கு படிக்கப்போய்விட்டேன்.அங்கே கல்லூரியில் கூட நான் யாரையும் ராகிங் செய்யவில்லை..
“அம்மா! என்ன யோசனை? லஞ்ச் பாக்ஸ் ரெடிதானே? டைம் ஆயிடிச்சி..அப்பா, பை! அம்மா பைபை” என்று கூவியபடி சித்ரா ஹாலைக் கடக்கவும் சுதாரித்தேன்.
“முத்துலட்சுமிக்கு பாவாடைதாவணியில் மகளைப்பார்த்ததும் ஃப்ளாஷ் பேக் நினைவுகள் போலிருக்குது, ம்? எனக்கும் ஆபீசுக்கு நேரமாகுது ஏதாவது சாப்பிட ரெடிபண்ணும்மா கண்ணு நான் போயி குளிச்சி ரெடியாகறேன்”
கணவர் கிண்டல் செய்தபடி நகர்ந்தார்.
மறுபடி கோமளவல்லி மனதை ஆக்கிரமிக்க ஆரம்பித்தாள்.
கோமளவல்லிக்கும் இப்போது என்னைப்போல நாற்பத்தி ஐந்து வயதிருக்கும்.
எங்கிருக்கிறாளோ எப்படியிருக்கிறாளோ? கல்யாணமாகி நான் சென்னைக்கு வந்து இருபது வருடங்கள் ஆகிவிட்டன. ஃப்பேஸ்புக் மூலமாக பழைய பள்ளித்தோழிகள் பலரைக்கண்டுபிடித்துவிட்டு தொடர்பில் இருக்கிறேன்.
கோமளவல்லியை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவளுக்கு என் மேல் கோபமும் வருத்தமும் இருக்கலாம். எப்படியாவது அவளைக்கண்டுபிடித்து அந்த இரண்டுங்கெட்டான் வயசில் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என நினைத்துக்கொள்கிறேன்.
மாலை பள்ளிவிட்டுவந்த சித்ரா, ”ஸாரிம்மா..மீன்குழம்பு சோறு அப்படியே கொண்டுவந்திட்டேன்” என்றாள்.
“ஏண்டி உனக்காக காலை சீக்கிரம் எழுந்து செஞ்சிகொடுத்தேனே? சாப்பிடாம பசியோட இருந்தியா சித்ரா?”
“க்ளாஸ்ல என் பக்கத்துல உக்காந்திருக்கிற வர்ஷா ஐயர் வீட்டுப் பொண்ணும்மா.. அவங்கள்ளாம் இதை சாப்பிடமாட்டாங்களே. அதிலயும் வர்ஷாவோட அப்பா, அண்ணன் எல்லாரும் கோயில்ல வேலை செய்றாங்கன்னு சொல்லி இருக்கா.. அவ முன்னாடி எப்படிம்மா டிபன்பாக்சைத் திறக்கிறது? அவளுக்கு குமட்டிட்டு வந்திடுமில்ல? அதான் அப்படியே பைலயே வச்சிட்டேன். எல்லார்கிட்டயும் ‘எங்கம்மாவுக்கு உடம்பு சரி இல்லை அதான் ஒண்ணும் கொண்டு வரலேன்னு சொல்லிட்டேன்.. ஆனா வர்ஷா கமகமன்னு புளியோதரையும் அவியலும் கொண்டு வந்ததை எனக்கும் கொடுத்தாம்மா..ஜோரா இருந்திச்சி..” என்று மகிழ்ச்சியுடன் சொல்லிவிட்டு மாடிப்படி ஏறினாள் வர்ஷா.
என் பெண்ணுக்கு இன்றைக்கு இருக்கிற விவேகம் அன்று எனக்கில்லாமல் போய்விட்டதே!
’கோமளவல்லி! வகுப்புக்கு வந்த முதல் நாளே உன்னை விரட்டி அடித்த என்னை மன்னித்துவிடு ப்ளீஸ்.. உனக்குத்தெரியுமா நான் இதை உணர்ந்த நாளிலிருந்து அசைவம் சாப்பிடுவதையே விட்டுவிட்டேன் அந்த நாற்றம் எனக்கும் பிடிப்பதில்லை. கணவருக்காகவும் மகளுக்காகவும் தான் அசைவம் செய்ய வேண்டியதாயிருக்கிறது. மூக்கைப்பிடித்துக்கொண்டு எப்படியோ செய்துவிடுகிறேன். கோமளவல்லி நீ எங்கிருக்கிறாய் உன்னிடம் மன்னிப்பு கேட்டாலே ஒழிய என் மனம் சமாதானமே அடையாது’. வாழ்க்கையில் தெரிந்து செய்த தவறுகளைவிட தெரியாமல் செய்த தவறுகள் என்றைக்கும் மனதை உறுத்திக் கொண்டேதான் இருக்கும்.
அடிக்கடி கோமளவல்லியை நான் நினைத்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
கணவரிலிருந்து யாரிடமும் இந்தவிஷயத்தை சொல்ல விருப்பமும் இல்லை. சொன்னாலும் ‘ஏதோ அந்த டீன் ஏஜ் குறும்புதானே அதுக்குப்போயி இன்னமும் மருகிட்டு இருப்பியாக்கும்?’ என்று கிண்டல்தான் செய்வார்கள்.
சோகமான நினைவுகளூடன் சித்ராவின் டிபன் பாக்சிலிருந்த சோறினை சமையலை மூலையிலிருந்த குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு கையை கழுவி நன்கு துடைத்துக் கொண்டேன். தவறிப்போய் விரல்பகுதி மூக்கில்பட்டால் அந்த நாற்றத்தில் அன்றைக்கு கோமளவல்லியைப்போல வாந்தி எடுத்துவிடுவேனோ என்ற பயம்தான் காரணம்! மனத்திற்கு அணுக்கமாகிவிட்டவர்களுக்காக அவர்களுக்குப்பிரியமில்லாதவற்றை துறப்பது ஒன்றும் கடினமாக இல்லைதான்.
கூடத்திற்கு வந்தேன்.
சார்ஜில் போட்டிருந்தசெல்போன் சிணுங்கியது.
எடுத்து திரையைப்பார்த்தால் கணவர் தான்.
’என்னங்க?’என்றேன்.
“முத்துலட்சுமி! சித்ரா பள்ளிக்கூடம் விட்டுவந்திடிச்சா?’
“ம்ம் மூணு மணிக்கே வந்துட்டா. என்ன விஷயம் உங்ககுரல் பதட்டமா இருக்குதே?”
“முத்துலட்சுமி, தும்பிப்பட்டில உன் கடைசி சித்தப்பா -அதான் – உங்க தாத்தாவின் நிலபுலனை கவனிச்சிட்டு இருந்தாருல்ல அவரு அரைமணி முன்னாடி ஹார்ட் அட்டாக்ல இறந்திட்டாராம். அவர் மகன் ரமேஷ் துபாயிலிருந்து கிளம்பிட்டானாம். நாமும் புறப்படணும் கார் ரெடிபண்ணிட்டு வரேன்.. விழுப்புரம் பக்கம் தும்பிப்பட்டி இருக்கறதால ரமேசுக்கு முன்னாடி நாம போயிடலாம். இப்ப மணி ஐஞ்சாகுது ஒன்பது மணிக்குள்ள போயிடலாம் நீயும் சித்ராவும் தயாரா இருங்க என்ன?”
“அடடா. சித்தப்பா போயிட்டார்னா நம்பவே முடியலைங்க.. எழுபதுவயசுக்கு ரொம்ப ஆக்டிவா நிலபுலனை கவனிச்சிட்டு இருந்தாரே! ச்சே…கஷ்டமா இருக்கு”
”ஆமாம் எனக்கும் கேட்டதும் ஷாக் ஆகிடிச்சி. உன் நம்பருக்கு ட்ரை செய்தாங்களாம் ஸ்விட்ச்டு ஆஃப்னு வந்திச்சாம் அதான் எனக்கு சொன்னாங்க..,,நாளைக்குத்தான் தகனம்னு சித்தி சொன்னாங்க.. அவங்க மகன் ரமேசு துபாயிலிருந்து வரணுமில்ல?”
“சரிங்க சித்ராகிட்ட சொல்றேன் ரெடியாவுறோம் சீக்கிரம் வந்திடுங்க”
நடு இரவில் தும்பிப்பட்டிக்கு தாத்தாவின் வீட்டிற்கு வந்தபோது மழை தூறல்போட்டது மனசிலும் வழக்கத்தைவிட அந்த நாள் ஞாபகமழை பெய்ய ஆரம்பித்தது..
இந்தவீட்டில் தான் என் இளமைக்காலங்கள்! ஏரியில் குளிப்பதும், வீதியில் பாண்டி விளையாடுவதுமாய் கைவீசி குதிநடைபோட்ட பருவம்!
பள்ளிக்கூடத்திற்கு பஸ்ஸில் சென்ற இனிய நாட்கள்!
பள்ளிக்கூடத்தை நினைத்ததும் மறுபடியும் கோமளவல்லியின் முகம் நினைவிற்கு வந்துவிட்டது.
செத்துப்போன சித்தப்பாவைக்காட்டிலும் கோமளவல்லி மனதை ஆக்கிரமிக்க ஆரம்பித்தாள். என்ன ஆயிற்று எனக்கு என்று புரிபடவில்லை.
மழை வலுத்த அந்த இரவிலும் ஊரேகூடி இருந்தது. ஒப்பாரிக்கிழவிகள் ஒன்று சேர்ந்து ஒருவர் தோளை ஒருவர் அணைத்த நிலையில் உட்கார்ந்து புலம்பிக்கொண்டிருந்தனர்.
சித்தி என்னைக் கண்டதும்,”முத்தூஊஊ “ என்று கட்டிக்கொண்டு அழத்தொடங்கினாள். இரவு முழுவதும் மழையில் நனைந்தபடியே ஊர் ஜனங்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர்.
ரமேஷும் விடியற்காலையில் வந்துவிட்டான்.
“என்கூட துபாய் வந்திடுங்க ன்னு எவ்ளோ வாட்டி சொன்னேன் ஊரைவிட்டு வரமாட்டேன்னுட்டாரு ..தன் அப்பாரு வீட்லதான் உசுரு போகனும்னு பிடிவாதம் “என்றான் வேதனையுடன்.
“ஆகவேண்டியதைப் பாருங்க.. மளை ரொம்ப வலுக்குது இந்த நிலைமைல உள்ளூர் சுடுகாட்டுல எரிக்க முடியாது அதனால மல்லனூர்ல எலெக்ட்ரிக் சுடுகாட்டுக்கு போன் செஞ்சி தகவல் சொல்லிடணும் அங்கதான் இப்பல்லாம் சுத்துப்பட்டு கிராமத்துக்காரங்க எல்லாம் போயி தகனம் செய்றாங்க…பொகை தொந்திரவு கெடயாது. சட்டுனு சாம்பலும் கொடுத்திட்றாங்க” என்றார் ஊர்ப்பெரியவர் ஒருவர்.
என் கணவர் பொறுப்பாக அதனை செய்துவிட்டு, ”அங்கிட்டு மேலாளர்கிட்ட பேசிட்டேன்.. நல்லவேளை டெட்பாடி இப்போதைக்கு வேற ஏதுமில்லை போலிருக்கு. இருந்தா நாமும் காத்திருக்கணும். வண்டி அனுப்பறேன்னாங்க.. உடனே தகனமும் முடிச்சிடலாம்னாங்க” என்றார்.
“தாங்க்ஸ் செந்தில்நாதன்” என்றான் ரமேஷ் என் கணவரின் கைகளைப் பிடித்துக்கொண்டு.
“என்னப்பா ரமேஷ் உன் தங்கை புருஷன் நான் எனக்குப்போயி தாங்கசெல்லாம் சொல்லிட்டு? மனசை தேத்திக்கிட்டு தீச்சட்டி எடுத்திட்டு வண்டில அப்பாவோட கால்மாட்டுல உக்காந்திட்டு வா மத்ததை நாங்க கவனிச்சிக்கிறோம்”
வீட்டில் செய்யவேண்டிய இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு மல்லனூர்மின்மயானம் அனுப்பிய ’பிண ஊர்தி’ என்று பக்கவாட்டில் எழுதப்பட்ட கறுப்பு வேனில் சித்தப்பாவை கிடத்தினோம்.லேசாய்க் கனல் கொண்ட நெருப்பு சட்டியுடன் ரமேஷ் முதலில் போய் உட்கார்ந்து கொண்டான்.
சித்ராவை வீட்டில் சித்தியோடு வீட்டில் விட்டுவிட்டு நானும் கணவரும் ஊர்ப்பெரிய மனிதர்கள் சிலருமாக காரில் தொடர்ந்தோம். மழைமட்டும் விட்டபாடில்லை.
மல்லனூர் ஊராட்சி மன்றத்தின் ஏற்பாட்டினால் மின்மயானம் கட்டப்பட்டு பிரபல தொண்டு நிறுவனம் ஒன்றினால் பராமரிக்கப்பட்டு வருகிறதாம்.சித்தப்பாவின் நண்பர் ஒருவர் காரில் போகும் போது பெருமையுடன் சொல்லிக்கொண்டார். அவர் பெருமைப்படும் அள்வில்தான் மயானமும் காணப்பட்டதை அங்கே போய் இறங்கியதும் கவனித்தேன்..
மயானபூமி மிக சுத்தமாக காட்சி அளிப்பது அபூர்வம்..
மயானத்தை ஒட்டிய பூங்காவின் பசுமை கண்ணுக்கு ரம்மியமாக இருந்தது.
துப்புரவுப்பணியாளர்களாய் ஓரிரு பெண்கள் அங்கே பெருக்குவதும் குப்பைகளை பொறுக்குவதுமாக இருந்தார்கள்.
பிணஊர்தியிலிருந்து சித்தப்பாவை இறக்கினார்கள்.
மயான வாசலில் மூங்கில் பாடையுடன் கிடத்தியபின், ”எல்லாரும் ’தில்லை அம்பலம்! சிற்றம்பலம் !’என்று உரக்க சொல்லிட்டீங்களா? அப்பத்தான் செத்தவர் ஆன்மா சாந்தியடையும். சரி,சவக்கிடங்குக்கு அனுப்பிடலாம் தானே?’ என்று காரியம் நடத்திய பெரியவர் கேட்டபோது ரமேஷ் ‘ஓ’வென கதறினான். எனக்கும் கண்ணில் நீர்முட்டியது.
என் கணவர் ரமேஷின் தோளைத்தட்டி சமாதானம் செய்தார்.
மின்மயானத்தின் முன்புறமிருந்த சிறுகூடம் வரை எங்களை அனுமதித்தார்கள்.பிறகு உள் அறைக்கு சித்தப்பாவின் உடல் எடுத்துப்போனபோது ‘அங்கே தலைப்பகுதிக்கு மட்டும்கருப்புத்துணியை சுற்றிக்கொண்டு மின்மயான உள்பகுதிக்குச் சென்று கொண்டிருந்த நடுத்தர வயதுப் பெண்ணைப்பார்த்து அதிர்ந்தேன்.
சித்தப்பாவின் நண்பரிடம், ”ஐயா ! துப்புரவுப்பணில தான் பொம்பிளைங்கன்னு பார்த்தால் உள்ளே கிடங்கில் எரிக்கிற இடத்துலயும் ஒரு பொம்பிளை போகிறாங்களே இதெல்லாம் பெண்களால முடிகிற காரியமா?” என்று கேட்டேன்.
“பத்துவருஷம் முன்னாடி வரைக்கும் ஆம்பிளைங்கதான் இருந்தாங்கம்மா அவங்க வேலையை சுத்தமா செய்யலயாம் உடலை எரிக்கிற ஊழியம் என்ன சும்மாவா? அதுலயும் சுத்தம் இருக்கணுமில்ல? அப்ப இங்க துப்புரவு வேலை பார்த்திட்டுருந்த ஒரு பொண்ணு ‘நான் செய்றேன்”ன்னு துணிஞ்சி ஒத்துக்கிச்சு. ரொம்ப நேர்மையா செய்யுது பொதுமக்கள் ஆதரவு அந்தப் பொண்ணுக்குக் கிடைச்சிருக்குதுன்னு கேள்விப்பட்டேன். போனவாட்டி தீராம்ப்பட்டில என் கொளுந்தனோட மாமனார் இறப்புக்கும் இங்கதான் வந்தோம். தொழில் சுத்தம் இந்த மயானத்துல தான்னு அப்பவே எல்லாரும் சொல்லிக்கிட்டாங்கம்மா ”
எனக்கு வியப்பும் பெருமையுமாகிப்போனது. பெண்ணால் முடியாததே இல்லையோ!
”ஒண்ணரைமணி நேரம் ஆகும். அதனாலஎரிச்சிமுடிச்சி சாம்பல் வாங்கிட்டுப் போயிடலாம் ரமேசு”
யாரோ சொல்லவும் அதுவரை இருக்கலாமா வேண்டாமா என நான் யோசித்தபோது உள்ளிருந்து வந்த வேறொரு பெண், ”கைவிரல் மோதிரத்தை நீங்க கழட்டாமல் விட்டிட்டீங்க இந்தாங்க” என்று கொண்டு வந்து கொடுத்தாள். நாற்பத்தி ஐந்து வயது மதிக்கலாம் போலிருந்த அந்தப் பெண்ணின் நிறம் சந்தன நிறத்தில் இருந்தது. எளிமையான சூடிதார் உடையில் தலைக்குமேல் அவளும் கருப்புத்துணியை முக்காடுபோல சுற்றி இருந்தாள்.
“பாத்தீங்களா இந்த நேர்மை வேற எங்கயும் வராது” என்றார் கூட்டத்தில் ஒருவர்.
அப்போது அந்தப்பெண் சுற்று முற்றிலும் பார்த்தவள், ஓரமாய் தனியே நின்று கொண்டிருந்த என் அருகில் வந்தாள் சட்டென என்னையே கூர்ந்து பார்த்துவிட்டு, ”மு முத்..முத்துலட்சுமியா நீங்க?” என்று சன்னக்குரலில் கேட்டாள்.
“அ ..ஆமா! நீ ..நீங்க…?”
சட்டென முகம் மலர்ந்தவள், “நினச்சேன் நீங்க முத்துலட்சுமியாத்தான் இருக்கணும்னு, உங்களோட சுருட்டை முடியும் ,பெரிய கண்களும் அடையாளம் காட்டிவிட்டது!.அதான் கண்டுபிடிச்சேன். நான் கோமளவல்லி! நினைவிருக்கா? முப்பது வருஷம் போல இருக்கலாம் அன்னிக்கு ஒரே ஒரு நாள் இதே மல்லனூர்க்கு பள்ளிக்கூடத்துக்கு முதல் நாள் வந்தேன். மத்தியானம் லஞ்சுக்கு நீங்க அன்னிக்கு முட்டை சாப்பிட்டபோது நான் முகம் சுளிச்சி வாந்தி எடுத்தேனே அதே கோமளவல்லிதான்! அன்னிக்குஅப்படி செஞ்சதுக்கு உங்ககிட்ட மன்னிப்பு கேக்காம போயிட்டோமேன்னு மனசு எப்பவும் உறுத்திட்டே இருக்கும்..” என்றாள்.
எனக்கு மூச்சே நின்றுவிட்ட மாதிரியானது.
“கோ…. கோமளவல்லி. நீயா, நீங்களா? இந்..இந்த இடத்திலா நீங்க வேலை செய்றீங்க? உங்ககிட்ட பேசணும், பேச நேரமிருக்குமா?”
“இருக்கு. நான் தான் இந்த மின்மயான மேலாளர்..இன்னொரு உதவிப்பெண் உள்ளே இருக்கிறாள். அவளுக்கு ஏதும் சிரமம்னா கூப்பிடுவா நான் போவேன்..அதனால என் ரூமுக்கு வாங்களேன் நிதானமா பேசலாம்”
கணவரிடம் மட்டும் கிசுகிசுப்பான குரலில் “இவங்க என்கூட படிச்சவங்க பேசிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு கோமளவல்லியைத்தொடர்ந்து அந்த அறைக்குள் நுழைந்ததும் வாய் அலறிவிட்டது..
“ஐயோ கோமளவல்லி உங்களை நான் நினைக்காத நாளில்லை .அன்னிக்கு உங்கள அந்த வயசுக்கே உரிய குறும்புல அப்படி செய்யப்போயி நீங்க மறுநாளிருந்து பள்ளிக்கூடத்துக்கே வரவிடாமல் செய்துட்டேன். அதுக்காக பிறகு ரொம்ப வருத்தப்பட்டேன். இன்னமும் அந்த வருத்தம் தீரலே :”
“முத்துலட்சுமி! அன்னிக்கு மீன் குழம்புக்கு உங்களைப்பார்த்து நான் முகம் சுளிச்சதுக்கு இன்னி வரைக்கும் மனசுக்குள்ள மன்னிப்பு கேட்டுட்டு இருக்கேன். ஆனா, நான் அன்னிக்கு உங்களால் பள்ளிக்கூடம் வராமல் போகவில்லை. அம்மா இல்லாமல் நான்கு குழந்தைகளை வளர்த்த என் அப்பாவுக்கு நேர்ந்த இடைஞ்சலினால் அந்த கிராமத்தைவிட்டு ராவோடுராவாகப்போக நேர்ந்தது. அப்பா கிராமத்துக் கோயில் அர்ச்சகராய் புதிதாய் வேலைக்குச் சேர்ந்திருந்தார். அந்த ஊர் வந்ததுமுதல் இன்னொரு அர்ச்சகரால் மறைமுகத்தொல்லை. கோயில் சிலை திருட்டுக்கு அவர் அப்பாவை உடந்தையாய் இருக்க சொன்னார். அப்பா மறுக்கவும் அடியாட்களை வைத்து மிரட்டினாராம். புதுப்பள்ளிக்கூடம்போய் வீடுவந்த எனக்கு அப்பாவின் வருத்தம் புரிந்தது. எனக்குக் கீழே ஒரு தங்கை ரெண்டு தம்பிகள்!.எல்லாருமாக அன்னிக்கு ராத்திரி ஊரைவிட்டு மைசூர்பக்கம் ஒரு கிராமத்துக்குபோய் அங்கே கோயிலில் அப்பா அர்ச்சகராய் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.தெரிஞ்சவங்களை விட்டு டிசி எல்லாம் மல்லனூர் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்ப வாங்கிக்கொண்டோம். ஒருவருஷம் படிப்பு பாழாகிப்போனாலும் அப்புறம் தொடர்ந்தேன். நானும் மைசூர் போய் பிஏ வரைபடிச்சேன். வேலை தேட பிரயத்தனப்பட்டேன். அப்போ பார்த்து அப்பாக்கு உடல்நிலை மோசமாகிப்போனது. ஏழ்மை நிலையினால். உள்ளூர் ஆஸ்பித்திரில ரத்தம் ஏத்தினபோது நடந்த பிசகில் அப்பாவுக்கு எய்ட்ஸ் வந்துவிட்டது தெரிந்தது. அப்பா எய்ட்சுடன் அவஸ்தைப்பட்டு கிராமத்தில் இறந்தார். அப்பாவை அன்று எரிக்க படாதபாடுபட்டோம். ஊர் சுடுகாட்டில் எரிக்ககூடாதாம் எய்ட்ஸ் வந்தவராம். ஆளாளுக்கு தடைபோட்டாங்க.
எளியாரை வலியார் அடிப்பது காலம் காலமாக எல்லா இடத்திலும் தொடர்வது சகஜம்தானே! நானும் தங்கைதம்பிகளுமாய் அப்பாவின் உடம்பை ஆறுகிலோமீட்டர் தள்ளி இன்னொரு கிராமத்து சுடுகாட்டுக்குக் கொண்டுவந்து எரிச்சோம். அப்புறம் நான் மைசூரில் ஒரு சீட்டுக்கம்பெனில வேலை பார்த்து தங்கைக்குக் கல்யாணம் செய்தேன். தம்பிகளை படிக்க வைத்தேன். சீட்டுக்கம்பெனி முதலாளி செய்த ஊழலால் என் வேலை அங்கே போனது. வளர்த்த உடன்பிறப்புகள் எனக்கு உதவி செய்யத் தயங்கினர். மேலே ஏறினபிறகு ஏணி எதற்கென்று நினைச்சிட்டாங்க.
கல்யாணக்கனவெல்லாம் இல்லாத நான் ஊர் ஊரா வேலை தேடிப் போனேன். பாதுகாப்பில்லாத இடங்களில் வேலை செய்ய முடியவில்லை. பாதுகாப்பான இடங்களில் வேலை கிடைக்கவில்லை. அலைந்து திரிந்து மல்லனூர் வந்தவள் இங்கே இந்த மின்மயானத்துல கூட்டிபெருக்கிற வேலையில் சேர்ந்தேன். படித்த படிப்புக்கு வேலை கிடைக்காத போது, கிடைத்த வேலையை பிடிப்புடன் செய்ய நினைத்தேன். இப்போதும் இங்கே வரும் பிணங்களைப் பார்க்கும் போதெல்லாம் என் அப்பாவின் நினைவுதான் வரும்.
பயம் வராது இந்த மயானப்பணியில் சில ஆண்கள் சரியா வேலை செய்யவில்லை. அதிகம் இந்த தொழிலுக்கும் யாரும் வருவதில்லை..இங்கே துப்புரவு பணியில் இருந்த நான் எரிக்கிற பணி செய்ய விரும்பினேன். மேலிடத்தில் தெரிவித்தேன் இதை நடத்தும் ஒருநற்பணி மன்றம் என் மேல் அக்கறை கொண்டு நம்பிக்கையுடன் இந்தப்பணி செய்ய அனுமதி தந்தது. செய்யும் தொழிலை தெய்வமாய் மதித்தால் நம் திறமையை மற்றவர் உணரமுடியும் என்று நானும் நம்பினேன்…ஆரம்பத்தில சிலர் என் ஜாதியைச் சொல்லி ‘இந்த தொழிலுக்கு நீ வரலாமா?’ என்று கேட்டார்கள்.
தங்கையும் தம்பியும் வந்து தங்கள் மானமே போய்விட்டதாய் குதித்தார்கள். உறவுகள் எதிர்த்தாலும் பொது மக்கள் ஆதரவு தந்தார்கள்.
இங்கே உதவிக்கு இரண்டு பெண்கள் இருக்கிறாங்க..ஓரிரு ஆண்களின் உதவியைத் தவிர முழுமையான பிண எரிப்பு வேலை எல்லாம் பெண்களால் நடத்தப்படும் மின்மயானம் இதுதான். இதன் மேலாளரா நான் இருக்கிறது பெருமையாய் இருக்கு. இதுவரை ஆயிரம் பிணங்களுக்கு மேலே தகனம் செய்துட்டேன். ஒவ்வொன்றையும் என் அப்பாவாய் நினைத்து அவர்கள் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்து வேலையை சிரத்தையாய் செய்து முடிப்பேன். அதில் மன நிறைவு கிடைக்கிறது! வாழ்க்கை த்ருப்தியாய் இருக்கிறது. அன்னிக்கு முத்துலட்சுமி சாப்பிட்ட மீன் குழம்பு வாசனைக்கு முகம் சுளித்தவளுக்கு இன்றைக்கு பிண வாடை பழக்கமாகிவிட்டது! “
நீளப்பேசிய களைப்பிலும் புன்னகையுடன் பேசிவிட்டு, கோமளவல்லி நிறுத்தியபோது “தகனம் முடிகிற நேரமாகிவிட்டது மேடம்” என்று சொல்லியபடி அவளின் உதவியாளர் பெண் அங்குவந்தாள்.
கோமளவல்லி ,”இதோவந்து சரி பார்க்கிறேன்” எனக்கிளம்பும்போது என்னைபபார்த்து கையசைத்து விடைபெற்றுக்கொண்டாள்.
“கோமளவல்லி! நான் மீன் குழம்பு..ஏன்..அசைவம் சாப்பிடுவதையே விட்டுவிட்டேன் அந்த நாற்றம் எனக்கும் பிடிப்பதில்லை” என்று சொல்ல வந்ததை சொல்வது இப்போது முக்கியமில்லை என்று தோன்றிவிட்டது.