ட்யூசன் டீச்சர்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 10,690
“அய்யோ! இப்போ பி.வி.ஆறுமுகம் க்ளாஸ்டா”
“பேப்பர் கொடுப்பானா?”
“இன்னும் திருத்தி இருக்க மாட்டான். அவன்கிட்ட ட்யூஷன் போற பசங்க பேப்பரை மட்டும் திருத்திட்டானாம்”
“அங்கப்பனுக்கு தொண்ணூத்தி நாலு மார்க்”
“நமக்கு எல்லாம் நாப்பது அம்பதுதாண்டா போடுவான்”
“வவுறன் வந்துட்டான். யாரையாச்சும் கூப்ட்டு மொத்துவான் பாரு”
“வணக்கம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அய்யா”
“ம்ம்..உக்காருங்க”
“நேத்து நடத்துன வெப்பவியல் படிச்சுட்டு வந்தீங்களா? எதாச்சும் சந்தேகம் இருக்கா?”
“சந்தேகமே இல்லைன்னா நான் கேள்வி கேட்பேன்”
“சார் எனக்கு டவுட்”
“என்னடா?”
“சார், எந்தப் பொருளுமே சூடு பண்ணினா இளகித்தானே போகும்? இரும்பு கூட உருகி போகுது. அப்புறம் ஏன் சார் மண்ணுல செய்யற சட்டி பானை மட்டும் சூடு பண்ணினா கெட்டி ஆகுது”
“பக்கதுல வா”
”பசங்களா இங்க கவனிங்க. நடேசனுக்கு ஒரு சந்தேகம். திரும்பி நின்னு பசங்களை பார்த்து சத்தமா கேளு”
“தங்கம் இரும்பு எல்லாம் சூடு பண்ணினா உருகிப் போகுது, மண் சட்டி மட்டும் ஏன் சூடு பண்ணினா இறுகி போகுது?”
“யாருக்காச்சும் பதில் தெரியுமா?”
“………..”
“ட்யூசன் படிக்கிறயா?”
“இல்ல சார்”
“ஆமா சார் படிக்கறான்…பொய் சொல்லுறான்.. அவங்க வீட்டுக்கு பக்கத்துலேயே ஒரு அண்ணன்கிட்ட ட்யூஷனுக்கு போறான் சார்”
”நாயே, பொய் சொல்லுறியா?”
“சார் சார்…காது வலிக்குது சார்…வலிக்குது சார்…வேற பக்கம் ட்யூஷன் போனா நீங்க அடிப்பீங்கன்னுதான் சார் பொய் சொன்னேன்”
“இப்போ மட்டும் அடிக்க மாட்டேனா?”
“வலிக்குது சார்…சார்..கிள்ளாதீங்க சார்”
“வாத்தியாருக்குத் தெரியுதான்னு செக் பண்ணிட்டு வான்னு சொன்னானா உங்க ட்யூஷன் அண்ணன்?”
“இல்ல சார்..நானேதான் கேட்டேன்”
“இனிமே கேட்க மாட்டேன் சார்…விடுங்க சார்…சார்..சார்..சார்”
“என்ன ஆறுமுகம் வீட்டுக்கு கிளம்பாம டீச்சர்ஸ் ரூம்லேயே உக்காந்துட்டு இருக்கீங்க?”
“கிளம்போணும். ஒரு சின்ன சந்தேகம் கந்தசாமி. மண்பாண்டங்கள் ஏன் சூடு செய்யும் போது இறுகிப் போவுது?.”
“எனக்குத் தெரியலைங்க. செக் பண்ணனும்”
“என்ன திடீர்ன்னு சந்தேகம்? பசங்க கேட்டாங்களா?”
“அப்படியெல்லாம் இல்லீங்க கந்து…இன்னைக்கு வண்டியில வரும் போது சந்தேகம் வந்துச்சு”
“நாளைக்கு தேடி பார்க்கிறேன்”
“ஆறுமுகன் கிள்ளுனது வலிக்குதாடா நடேசா?”
“ச்சே ச்சே அதெல்லாம் இல்ல. வவுறன் டிவிஎஸ் 50யோட பெட்ரோல் டேங்க்ல சர்க்கரையை போட்டுட்டேன். இன்னைக்கு சாயந்திரம் அவனுக்குத்தான் கால் வலிக்கும்”
– ஜூலை 2, 2012