கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 3, 2025
பார்வையிட்டோர்: 4,956 
 
 

முப்பது டேக் எடுத்த பின்னும் ‘ஷாட் திருப்தியாக வரவில்லை, நாளைக்கும் எடுக்க வேண்டும்’ என இயக்குனர் சொன்ன போது சினிமா மீதே வெறுப்பாக வந்தது நடிகை மாயாவிற்கு.

தன்னை இன்று ஒரே நாளிலேயே பூவைக்கசக்குவது போல அவர் கசக்கி எறிந்து விட்டதாகப்பட்டது.

கேரவனுக்கு சென்று உடை மாற்றும் போது மடைதிறந்த வெள்ளம் போல் அவளது கண்களில் கண்ணீர் ஆறாக ஓடும் அளவிற்கு உள்ளக்குமுறல்களை தனியாக கதறி அழுது வெளியேற்றினாள். கண்கள் சிவந்து போயின. உடல் சோர்வோடு மனச்சோர்வும் சேர, தன்னை அழைத்துச்செல்ல வந்த காரில் ஏறியவுடன் பின் சீட்டில் படுத்துக்கொண்டாள்.

“நான் அப்பவே உனக்கு சொன்னனில்ல. இந்த சினிமா தொழிலே வேண்டாம்னு. நடிப்புங்கிறது என்னையோட போகட்டும். நீ படிச்சு வேலைக்கு போயி சம்பாதிச்சா சிக்கனமா வாழ்க்கைய இந்த மெட்ராஸ்ல ஓட்ட முடியாட்டியும், நீ வேலை பார்க்கிற எடத்துக்கு வந்து உனக்கு சாப்பாடு செஞ்சி போட்டுட்டு நிம்மதியா காலத்த ஓட்டியிருப்பேன்” தாயின் புலம்பல் மேலும் வேதனையைக்கூட்டியது.

“என்ன மாயா… இன்னைக்கு ஷூட்டிங் ஸ்பாட்ல  என்ன நடந்ததுன்னு மேக்கப்பாய் விலாவாரியா சொன்னான். அந்த டைரக்டரு மனசுல என்னதான் நெனைச்சிட்டிருக்கான்? நடிகைன்னா அப்படித்தான்னு நெனைச்சுட்டான் போலிருக்கு… நடிப்பு சொல்லிக்கொடுக்கிறதா சொல்லிட்டு கண்ட எடத்துல தொட்டானாமே…. முத்தக்காட்சிய எவனாவது முப்பது டேக் எடுப்பானா…? நாளைக்கும் எடுக்கப்போறானாமே….? நீ முடியாதுன்னு சொல்லிடு. பாத்துக்கலாம்…” பதிலே பேச விடாமல் தான் காதலிக்கும் கரண்  தன்னிடம் அலைபேசியில் பேசியது தலைவலியைக்கூட்டியது மாயாவிற்கு.

“காலைல பேசறேன்” என ஒத்தை வார்த்தையில் கூறிவிட்டு படுக்கைக்கு சென்றவளுக்கு உறக்கம் வரவில்லை. முதல் படம் துணை நடிகையாக நடித்தவளுக்கு, கதாநாயகியாக இது முதல் படம். 

வாழ்க்கையின் பெரிய கனவு கதாநாயகியாகவேண்டும் என்பது. அது நிறைவேற என்ன தியாகம் வேண்டுமானாலும் செய்து விடலாம் என உறுதியாக இருந்தவளுக்கு படப்பிடிப்பின் போது சினிமா செய்தியாளர்களையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு இயக்குனர் நடந்து கொண்ட விதம் வெறுப்பைத்தந்தது.

நடிப்பு ஆசையில் மதுரையிலிருந்து சிறுவயதிலேயே சென்னை வந்து துணை நடிகையாகி, கதாநாயகியாகும் கனவு நிறைவேறாமல் ஒரு டாக்ஸி டிரைவரைத்திருமணம் செய்து கொண்டு தன்னைப்பெற்று வளர்த்த தாய் சுந்தரியின் கனவு தன் மூலமாவது நிறைவேற வேண்டுமென்கிற வெறித்தனமான முடிவில் பிலிம் இன்ஸ்டியூட்டில் சேர்ந்து நடிப்பு பயிற்சி எடுத்தாள். 

தனது பள்ளித்தோழியின் தந்தை தயாரிக்கும் படமென்பதால் கதாநாயகி வாய்ப்பை எளிதாகப்பெற்றாள். இயக்குனர் கனிப்பாண்டியனோ தான் விரும்பும் பெண்ணை கதாநாயகியாக்க நினைத்திருந்தார். தயாரிப்பாளரின் விருப்பப்படி மாயாவை ஏற்றுக்கொண்டாலும், கடினமாக வேலை கொடுத்து படத்திலிருந்து தானாக வெளியேற வைக்க தன்னாலான அத்தனை முயற்ச்சியும் எடுக்கிறார் என நினைத்ததில்  நொந்து நூலாகிப்போனாள் மாயா. மன நிலையால் உறக்கம் வர மறுத்தாலும் உடல் சோர்வால் உறங்கிப்போனாள்.

அடுத்தநாள், முதல் நாள் நடந்த கசப்பான கடின நிகழ்வுகளை முற்றிலும் மறந்தவளாய் குறித்த நேரத்திற்கு செட்டில் இருந்தாள். புகழ், பணம் கஷ்டங்களையும், பகை உணர்வுகளையும் மாற்றி விடும் என்பதைப்புரிந்து கொண்டாள். ஒவ்வொரு நாளும் மாயா வருவதற்கு முன் வந்து விடும் இயக்குனர் அன்று வரவில்லை. இணை இயக்குனர் படத்தின் வேறு காட்சியை ஒரே டேக்கில் ஓகே சொன்னது ஆச்சரியமாக இருந்தது.

தயாரிப்பாளரும் தனது தோழியின் தந்தையுமான ராசையா  தனது பென்ஸ் காரிலிருந்து இறங்கி வந்தார். அவரை காலைத்தொட்டு வணங்கினாள் மாயா.

“இதெல்லாம் இனிமேல் வேண்டாம்மா. நாளைக்கு பத்திரிக்கைல ‘தயாரிப்பாளர் தன் படத்தில் நடிக்கும் நடிகையை காலில் விழ வைத்தார்’ னு செய்தி போட்ருவாங்க. இன்னைக்கே பல லட்சம் செலவு பண்ணி வந்த அளவுக்கு விளம்பரம் வந்திருக்கு. ‘நடிகைக்கு டார்ச்சர் கொடுத்த இயக்குனர்’ னு போட்டு மானத்தக்கெடுத்துட்டானுக. இன்னைக்கு தலை காட்ட முடியாம அசிஸ்டென்ட் டைரக்டர வச்சு எடுங்கன்னு டைரக்டர் சொல்லிட்டாரு” என சொன்ன போது தான் வணங்கிய வடபழனி முருகனுக்கு நன்றி சொன்னாள் மாயா.

மூன்று மாதம் பின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர்” மாயா என்னை முதல்ல மன்னிச்சிட்டதா சொல்லனம். ஏன்னா ரொம்பவுமே அவங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கிட்டேன். அன்னைக்கு மட்டும் நான் அப்படிப்பண்ணாம இருந்திருந்தா இன்னைக்கு தயாரிப்பாளர் மகிழ்ச்சியா நமக்கெல்லாம் சம்பளம் கொடுத்திருக்க முடியாது. ஒரு துணை நடிகைய கதாநாயகியாக்கினா படம் எப்படி ஓடும்னு கேட்டு விநியோகஸ்தர்கள் படத்தை வாங்கவே முன் வரலே. மாயா மிகச்சிறந்த நடிகைனு எனக்கு மட்டும் தெரிஞ்சத இந்த உலகமே தெரிஞ்சுக்கனம்னா நாம ஏதாவது செய்யனம்னு தான் முதல் ஷாட்ல சூப்பரா வந்த சீன முப்பது தடவை எடுத்தேன். படத்துல முதல் காட்சி தான் வரப்போகுது” என கூறிய இயக்குனர் காலைத்தொட்டு ஆனந்தக்கண்ணீர் மல்க வணங்கினாள் மாயா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *