டும் டும் என் கல்யாணம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 28, 2025
பார்வையிட்டோர்: 1,798 
 
 

கல்யாணம் ஒரு வழியாக முடிந்தது. வந்திருந்த உறவினர்களும் நண்பர்களும் புறப்பட்டுச் சென்றனர்.

கல்யாணமான அன்றே  முதலிரவு வைத்திருந்ததால் அறைக்குள் அருண்,  மனைவி ஷாலினிக்காக வழிமேல் விழி வைத்து ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தான். அவன் பார்வை திறந்திருந்த கதவை விட்டு அப்படி இப்படி நகரவில்லை. உள்ளம் கும்மாளமிட்டுக் கொண்டிருந்தது. நேரம் தன் கடமையை ஒழுங்காகச் செய்து கொண்டிருந்தாலும் அன்று ஏனோ சதி செய்வது போல் மெதுவாக நகர்வதாகப் பட்டது அருணுக்கு! அந்த அளவுக்கு பொறுமையிழந்திருந்தான்.

அருணின் பொறுமை வடிவதற்குத் தோதாக கையில் பால் டம்ளருடன் அறைக்குள் நுழைந்தாள் ஷாலினி. பட்டுப் புடவையில் நகைகள் தரித்து பார்க்க பளிங்குச் சிலை போல் தோற்றமளித்தவளை திறந்த வாய் மூடாமல் முகம் கொள்ளாச் சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தான் அருண்.

தன்னை அணு அணுவாக கணவன் ரசித்துப் பார்ப்பதைக் கண்டு சிரிப்பு வந்தது ஷாலினிக்கு! மெல்ல நடந்து வந்து தன் கையில் வைத்திருந்த பால் டம்ளரை சிரிப்பு மாறாமல் நீட்டினாள்.  

“என்ன, அப்படி விழுங்கறமாதிரி என்னைப் பார்த்துக்கிட்டுருக்கீங்க?”  என கேட்டாள்.

“அப்சரஸ் அப்படின்னா என்னன்னு உன்னைப் பார்த்ததும் இன்னிக்குத் தான் தெரிஞ்சுக்கிட்டேன் ஷாலு!” என்ற படி டம்ளரை வாங்கி சூட்டோடு சூடாக பாதி பாலை காலி பண்ணி விட்டு மீதியை ஷாலினியிடம் நீட்டினான் அருண். நாசுக்காக வாங்கி குடித்தவள், காலி டம்ளரை அருகிலிருந்த மேஜை மீது வைத்தாள். 

அவன் பக்கத்தில் அமர்ந்து கொண்ட ஷாலினி, “எங்க அப்பா அம்மா கூப்பிடுற மாதிரி நீங்களும் ஷாலுன்னு கூப்பிடுறது எனக்கு பிடிச்சிருக்கு.” என்று கொஞ்சம் சந்தோஷத்துடன் கூறினாள்.

“சரி, என்னைப் பற்றி உன்னோட அபிப்பிராயம் என்ன ஷாலு?” திடீரென்று அருண் இப்படி கேட்டதும் திரு திரு வென்று விழித்தாள் ஷாலினி.  பிறகு ஒரு நிலைக்கு வந்தவள், “உங்கள் கேள்வி  புரியவில்லையே! என்ன அபிப்பிராயம் நான் சொல்லணம்னு எதிர்பார்க்கறீங்க?” தலையை ஒயிலாகச் சாய்ந்தபடி கேட்டாள். 

அதைப் பார்த்து பரவசப்பட்ட அருண் சட்டென்று  ஷாலினியின் இடது உள்ளங்கை விரல்களை  தன் வலது உள்ளங்கை விரல்களுடன் கோர்த்து இணைத்துக் கொள்ள, ஷாலினி உடம்புக்குள் இனம் தெரியாத சுகம் வந்து ஆட்கொண்டது. அப்படியே  விழிகள் மூடி மெய் மறந்தாள்.  

“டியர்.” அவள் காதருகே கிசுகிசுத்தான். 

“ம்..” என்றாள் விழிகள் திறக்காமலே .

“என்னை உனக்குப் பிடிச்சிருக்காங்குறதுக்காக அபிப்பிராயம் கேட்டேன்!” 

உடனே விழிகள் திறந்தாள் ஷாலினி. பொய்க் கோபம் கொண்டாள். “இதென்ன கேள்வி? பிடிக்காமலா உங்களைக் கட்டிக்கிட்டேன் ? என்னை உங்களுக்குப் பிடிச்ச மாதிரி, உங்களை எனக்குப் பிடிச்சிருந்தது. ஒத்துக்கிட்டேன்.” 

“ஓ..நீ வெரி இண்டலிஜெண்ட்! உன்னை எனக்கு பிடிச்ச மாதிரின்னு சொல்லி மடக்கிட்டே. இதில ஒரு விசேஷம் என்னன்னா நீ உத்திராடம் நட்சத்திரம். நான் உத்திரட்டாதி. செம பொருத்தம்! அதோடு நான் பார்த்த முதல் வரன் நீ. முதல் வரனே செட்டிலானது அதிர்ஷ்டம்! ஆமாம் நீ?” 

“என்னோடதும் அதே மாதிரிதான். முதல் மாப்பிள்ளையான நீங்க கிடைச்சது என்னோட லக்குதான்.  ஏன்னா முதன் முதலில் உங்களப் பார்த்த உடனேயே என் மனசுல நீங்க சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துட்டீங்க. அதனால நீங்களே எனக்கு கணவராக வரணும்னு கடவுளை வேண்டிக்கிட்டேன்.  நான் வேண்டினது வீணா போகல்லே. நம்ம கல்யாணமும் நல்ல படியாக முடிஞ்சது.”

“சரி..பேச்சு போதும்னு நினைக்குறேன்.” என்று அர்த்த புஷ்டியுடன் ஷாலினியைப் பார்த்து விட்டு, எழுந்து விளக்கை அணைத்தான் அருண்.

சட்டென்று கண் விழித்தாள் ஷாலினி. மின்சாரம் நின்று போயிருக்க வேர்த்துக் கொட்டியது. சொப்பனத்தில் தான் கண்ட காட்சிகள் அவள் நினைவுக்கு வந்தன.

நாற்பது வயதாகி விட்டது. அழகு இல்லை. விந்தி விந்தி நடக்க வேண்டிய நிலைமை. இப்படியே  முதிர் கன்னியாக இருந்து வேதனைப்படுவளுக்கு இந்த மாதிரி சொப்பனங்கள் தான் வடிகால்! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *