டிவோட்டா என்கிற மணி மகுடம்
எழுத்தாளன் என்றாலே ஜிப்பா,கண்ணாடி,சோல்னா பை இவைதான் நாம் உருவகப்படுத்தியிருப்போம். “டிவோட்டா” அப்படி இல்லை.
உலகின் சிறந்த எழுத்தாளர்களில்,இந்தியாவின் சிறந்த எழுத்தாளர்களில், தமிழ்நாட்டின் சிறந்த எழுத்தாளர்களில் இப்படி எதுவும் இல்லை.
அடியக்காமங்கலத்தில் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். ஆம் டிவோட்டாவோடு சேர்த்து அடியக்காமங்கலத்தில் 13 எழுத்தாளர்கள். “ரைட்ரோகிஸ்தான்” நாட்டின் மூத்த எழுத்தாளர் மேல் உள்ள பற்றால் தனது பெயரை “டிவோட்டா” என மாற்றிக்கொண்டார்.
தன் வாழ்வியல் அனுபவம்,சிறுகதை,கவிதை எழுதி வந்தவர் இன்னும் அவரை சிறந்த கலைஞனாய் காட்டிக்கொள்ள சிந்தித்தார்.
‘ராஜிமா குட் நைட் ரா … “தேங்க்ஸ்ங்க..!
எதுக்குடி தேங்க்ஸ் சொல்ற.!
என் நைட்டி நல்லா இருக்குனு சொன்னீங்களே?!
அறிவாளி பொண்டாட்டி! தூங்குமா நீ..
கண் அயர்ந்தார் டிவோட்டா.
நிச்சயம் இது அடியக்காமங்கலத்தில் ஒரு பகுதிதான் தார்ச்சாலைக்கு இரு புறமும் தும்பை பூண்டும், காவாள பூண்டும் சூழ அதற்கு இரு புறமும் வயல்வெளிகளின் நடு நடுவே தென்னை மரங்கள். நடக்க.. நடக்க பாதை நீண்டு கொண்டே போனது.
ஆச்சர்யமும், அதிசயமுமாய் ‘இப்பாலம் விபத்துக்குள்ளாகும் பகுதி வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் செல்ல தடை’ என வெள்ளை பலகையில் சிவப்பு வண்ணத்தில் கிறுக்கல்கள்.
என்ன செய்வதென்ற குழப்பம். ‘எழுத்தாளனுக்கு சவால்கள் தான் சுவாரஸ்யம்’ கடந்து சென்றால் அனுபவம்..! இறந்து போனால்?????? எனக்கு அனுபவமே பெரிது. 30 அடி தூரம் கடக்கையில் என் தோளில் யாரோ கை வைப்பது போன்ற உணர்வு. என் பழைய நண்பன் பொட்டுக்கல்ல..!
என்ன பொட்டுக்கல்ல யாரும் இந்த பக்கம் வர தடைனு இருக்கு நீ வர!? பின்னாடி வைக்கோல் ஏத்திக்கிட்டு மாட்டுவண்டி வருது?அதுக்கும் பின்னாடி ஆட்டோவில் பள்ளிக் குழந்தைகள்!
மாட்டுவண்டிக்காரரின் ஹே …ஹே …ஹே .. க்ர்…க்ர்…க்ர்.. போ..போ .. மாடு விரட்டும் சத்தம் என்னை அதிர்ச்சியடைய வைத்தது. பள்ளிக்குழந்தைகள் வரும் ஆட்டோ லேசாக ஆடி ஆடி வந்தது. 1கி.மீ கடந்தேன்.
டேய் பொட்டுக்கல்ல ஏண்டா இந்த பாலம் இப்படியே கெடக்கு.? சரி பண்ண மாட்டங்களா? சத்தமே இல்லை அவனைக் காணூம்! பின்னால் வந்த மாட்டுவண்டியையும் ,ஆட்டோவையும் காணும்.!!!!!
என்னங்க…என்னங்க… எழுந்திருங்க. எவ்ளோ நேரம் தூங்குவிங்க.
என்னம்மா…
வார இதழ்ல இருந்து ஆள் வந்திருக்காங்க போய் பாருங்க.
முகத்தை கழுவிவிட்டு முண்டா பனியனோடு வந்தான்.
வெளியில் அடியக்காமங்கலத்தில் பிரபலமான “அடியக்கா” வார இதழின் உதவி பொறுப்பாசிரியர் நின்றார்.
வணக்கம் சார்… உக்காருங்க என்ன இவ்ளோ தூரம்.
ராஜி டீ எடுத்துட்டு வாம்மா..
வணக்கம் டிவோட்டா சார் இன்னைக்கு சூழல்ல அடியக்காமங்கலத்துல பெரிய எழுத்தாளர் நீங்க…
ராஜிமா காஃபி எடுத்துட்டு வாம்மா..!!!
சொல்லுங்க சார்..
நம்ம அடியக்கா இதழ்ல நீங்க ஒரு தொடர் எழுதனும்.
3 வாரம்தான் தான் எழுதனும் பெருசா பேசப்படனும்.
டிவோட்டாவுக்கு மகிழ்ச்சி இரவு கண்ட கனவையே முதல் நாள் போடப்பட்டது. மற்றொரு யோசனை மற்ற இரண்டு வாரம் என்ன செய்வது? கனவின் தொடர்ச்சி என்பது உண்டா? இந்த கனவு டி.வி தொடர்போல் தொடரும்னு முடிஞ்சிருந்தா? அய்யோ..!
கனவுகள் அப்படி வந்ததாய் நான் கேட்டதில்லை. வந்தால் 3 நாள் பெருசா பேசுவாங்க..! இல்லனா என் சொந்த கற்பனைதான்.!?
மகனை பள்ளியில் விட்டுவிட்டு, தான் எழுதிய கவிதையை ஒரு வார இதழுக்கு கொடுத்துவிட்டு, மதிய சாப்பாட்டுக்கு காய்கறியோடு வீடு வந்தார்.
சாப்பாடு ரெடி.. வாங்க..
சாப்பிட்டு முடித்து நாற்காலியில் சாய்ந்தார்.
டேய் பொட்டுக்கல்ல….. ஏன்டா இந்த பாலம் இப்படியே கெடக்கு..
யாரும் சரி பண்ண மாட்டாங்களா?
டேய் பொட்டுக்கல்ல……பொட்டுக்கல்ல….!!!!!!!!
என்னங்க… என்னங்க
என்னடி நேரங்காலம் தெரியாம கடுப்ப ஏத்திக்கிட்டு…
காலைல பையனுக்கு இட்லிக்கு சட்னி வைக்க பொட்டுக்கல்ல இல்ல அதையும் வாங்கிட்டு பயலுக்கும் பள்ளிக்கொடம் முடியிற நேரம் கூட்டிட்டு வாங்க.
நல்ல கட்டத்துல வந்து எழுப்பிட்டா, இவள வச்சிக்கிட்டு நான் எப்படி அடியக்காமங்கலத்த தாண்டியும் பெரிய எழுத்தாளர் ஆகுறது.
ராஜி குட் நைட்!!!!!???
வேணான்டி ஆத்தா நீ தூங்கு…..
வேக வேகமாக பாலத்தை கடந்து அந்த ஊரில் உள்ளவர்களிடம் சொல்லும்போது அதிர்ச்சியாய் இருந்தது.
தம்பி தனியா வந்திங்களா.. இல்லங்க அதான் பின்னாடி வந்தவங்கள காணும்னு சொல்றனே!
தம்பி அந்த பாலம் புழக்கம் இல்லாம இருக்கு எங்க ஊரு சனங்க ஊர சுத்திதான் வெளி ஊருக்கெல்லாம் போறாங்க.
இல்லங்க நான் வரும்போது மாட்டு வண்டில ஒரு ஆளு .. அட நிறுத்தப்பா வந்ததுல இருந்துதான் சொல்ற.
மாட்டுவண்டியில வந்தது பொட்டுக்கல்ல அப்பா , உங்கூட வந்தவன் பொட்டுக்கல்ல ஆட்டோவுல வந்தது அசலூரு காரன். அவங்க செத்து ஏழு மாசம் ஆச்சு. அந்த பாலம் வழியா வந்தவங்க திருப்பி அந்த வழியா போனா உயிரோட பாக்க முடியாது. ரெண்டு மாசமா இதான் நடக்குது எங்கூர்ல.
அதிர்ந்து போனான் டிவோட்டா ?
விவரம் தெரிய துடித்தது தெரிந்து ஒரு பெரியவர் சொல்லத் தொடங்கினார்.
தம்பி.. பொட்டுக்கல்ல அப்பா ‘பொழுதுவிடிஞ்சார்’ தான் இங்க பஞ்சாயத்து தலைவர். அந்த பாலம் வேல கிட்ட கிட்ட முடியிற கட்டம் வேல சரியா போகுதான்னு பாக்க வந்தாரு தலைவரு.. ஒரு பக்கம் தான் கைப்புடி செவுரு வச்சிருந்தாங்க இன்னொரு பக்கம் வேல நடக்குது. அப்பா எங்க போனாலும் பொட்டுக்கல்லையும் கூட போறதுதான் வழக்கம். அன்னக்கி அவன் மாட்டுக்கு வக்கெ இல்லன்னு பக்கத்தூரு வக்கெ ஏத்த போயிட்டான் . தலைவரு சுத்தி சுத்தி பாத்துட்டு இருந்தாரு. பாலத்துக்கு அந்த மொனைல மாட்டுவண்டில வக்கெ ஏத்திக்கிட்டு இப்படியே போயிடலாமான்னு பாத்து நின்னான் பொட்டுக்கல்ல அத பாத்துட்டாரு தலைவரு.
எவன்டா அவன் கூறு கெட்ட பய இங்க வேல நடக்குது தெரில.
அப்பே.. நாந்தேன் .. செவல கத்திக்கிட்டு கெடக்கு பூரா வக்கெலும் தீந்துடுச்சி அதான் கொஞ்சம் நிதானிச்சி இப்படியே போயிடுவேன்.
உனக்கெல்லாம் அது சரிவராது. எறங்கு வேலயால்வோட்ட மாட்டு வண்டி வருது கொஞ்சம் வேல சாமான ஒதுக்க சொல்லு நீ முன்னாடி பெரிய காள கிட்ட கண்ண காட்டிக்கிட்டே போ..!
இவங்கள பாத்து இந்த பக்கம் வழி இருக்குன்னு பள்ளிக்கொடத்து புள்ளிவோல ஏத்திக்கிட்டு வந்தவனும் வந்துட்டான்.
கொஞ்ச தூரம் போன மாடு சிலுப்பிக்கிட்டு ஓடிரிச்சி.. வண்டியோட பாலத்துல இருந்து முப்பது அடி ஆழத்துல வுழுந்தாறு போழுதுவிடிஞ்சாரூ
அப்பா விழுந்த அதிர்ச்சில பொட்டுக்கல்ல வுழுந்துட்டான். திரும்பி போலாம்னு திருப்புன ஆட்டோ புள்ளிவோலோட வுழுந்துடிச்சி அப்போ நிறுத்துன வேலைதான் இன்னும் ஆரம்பிக்கல.
இந்த ஒத்த பாலம் மட்டும் இருந்தா எங்கூரு சனம் ஊர சுத்தி போகாது தம்பி நல்லதுக்கு , கேட்டதுக்கு எல்லாம் ஊர சுத்தி தான் போகணும் ஆசுபத்திரி போக கூட கஷ்டந்தான்.
டிவோட்டாவுக்கு டிகிரி ஜுரம் வந்தது. நான் எப்படி ஊருக்குச் செல்வது. ஊரை சுற்றி போனால் இரவு ஆகிவிடுமே? பாலத்து வழியா போனா பொழுது சாயிரதுக்குள்ள போகணும்.
“கனவு கலைஞனை உருவாக்கும்
கனவு கல்லைக் கூட பிளக்கும்
கனவு கவிஞனை கட்டமைக்கும்
கனவு கண் அயர்ந்து வரும் மற்றொரு கிரகம்”. என்ற
தன் குரலிலேயே வாசித்த குரல் பதிவோடு சிணுங்கியது கைபேசி.!
ஹலோ .. சார் அடியக்கா ஆசிரியர் பேசுறேன்.
டிவோ: கதை ரெடி சார் எழுதிக்கோங்க..?
ஆசி:சார் ஞாபகம் இருக்கா அடுத்தது கடைசி முடியுது. முதல் பாகம் அருமை வாசகர் கடிதம் குவியுது.
டிவோட்டாவுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. மறுபடியும் கனவு வருமா ? இல்லை முடிவை எழுதிடலாமா?
சார் வீட்ல யாருங்க..தபால் ?
ராஜி யாருன்னு பாருமம்மா
என்னங்க ‘அடியக்கா’ இதழ்ல இருந்து தபால் வந்திருக்கு. வாசகர் கடிதங்களை அனுப்பி வைத்திருந்தார் ஆசிரியர்.
டிவோட்டா இத்தனை நாள் எங்கிருந்தாய் நீ..!
அடுத்த இதழில் என்னென்ன அதிர்ச்சி தரக் காத்திருக்கிறாய்.
தொடர் முடிந்ததும் எங்கப்பா சிங்கப்பூர்ல இருந்து அனுப்புன பேனாவ
அடியக்கா அலுவலகத்துக்கு அனுப்புறேன் வாங்கிக்கொள்ளவும்.
– ‘கள்ளி முள்ளு’ கணேசன் – திருத்துறைப்பூண்டி.
அன்பிற்கினிய டிவோட்டா உன் எழுத்து என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. உங்கள் மூளையில் முத்தமிட ஆசை. என்ன நடக்குப் போகிறது அடுத்து அந்த ஊரிலிருந்து பாலத்தின் வழியே வருவீர்களா..
டிவோட்டா சோர்வானார்.. என்ன பதில் தரப்போகிறோம்.?
ராஜி..
என்னங்க கிட்ட வாயேன்
புள்ள தூங்குறான் முழிச்சிக்க போறான்.
கிட்ட வாடீ..
உனக்கு கனவெல்லாம் வந்திருக்கா ?
சின்ன வயசுல வரும்ங்க..!
நான் குதிரைல சவாரி போவேனா..! நாந்தான் முதல்ல போவன்..
டிவோ: குதிர பின்னாடி வருமா?
என்னங்க நீங்க போங்க..
சரி அந்த கனவே உனக்கு மறுநாளோ இல்ல எப்பவாச்சும் வந்துருக்கா?
இல்லைங்க ஏன் கேக்குறீங்க.
சரிம்மா நீ தூங்கு.
நடப்பது நடக்கட்டும் இரவு ஆவதற்குள் வீட்டிற்கு போக வேண்டும். மெல்லிய மாலை மங்கத் தொடங்கின.
டிவோட்டா பாலத்தை தேர்வு செய்தான். நடந்தான்.. நடுங்கினான் ஆள் அரவமற்ற பாலத்தில் 1 கி.மீ வந்திருப்பான். மாட்டின் சலங்கை சத்தம்..! ஹே.. ஹே… க்ர் .. க்ர் .. போ .. போ என்ற அதே மாடு விரட்டும் சத்தம் கைப்பிடிச் சுவரை பிடித்துக்கொண்டான் . திரும்பிப் பார்த்தால் யாருமில்லை .! தட்டுத் தடுமாறி நடக்க முயன்றான்.
“மணி மகுடம்” டேய் “மணி மகுடம்”.
தூக்கி வாரிப் போட்டது டிவோட்டாவுக்கு அவன் இயற்பெயர் அது..! நண்பர்களுக்கு மட்டுமே தெரிந்த பெயர் .
யாரு .. யார் நீங்க
பொட்டுக்கல்ல டா
எ..எ ..என்ன வேணும் ..?
நீ இந்த பாலத்த கடந்து போயிட்டா இங்க ஆவி இல்லன்னு ஊர் மக்கள் நம்புவாங்க பாலம் வேல ஆரம்பிப்பாங்க மக்களுக்கு பயனா இருக்கும்.
நீ கடந்து போயிட்டு ஊருல நம்பிக்கைக்கு ரெண்டு பேர கூட்டிட்டு பாலத்து வழியாவே எங்கூருக்கு போ அப்போதான் நம்புவாங்க . எப்படியாச்சும் எங்கூரு மக்கள நம்ப வச்சு பாலம் கட்ட ஏற்பாடு பண்ணு.
கட்டப்போற பாலத்துல கைப்புடி மண்ணா எங்கப்பாவும் நானும் இருந்துட்றோம்.
பாலத்தைக் கடந்த டிவோட்டா தன் ஊரில் இருவரை அழைத்துகொண்டு மீண்டும் பாலத்தில் அவ்வூர் சென்றான் அந்த இரவில்.
தான் திரும்பி வந்ததை உறுதி செய்து இத்தனை பேர் செத்ததற்கு காரணம் பாலம் நடுவுல நான் போறப்ப நிறைய சாராய பாட்டுலு கெடந்துச்சு அவங்க போதைல விழுந்து செத்தாங்களே தவிர பொட்டுக்கல்லையாள இல்ல.
எல்லோரும் நம்பும்படியாய் பேசி ஒருமனதாக பாலம் கட்ட முடிவு செய்ய வைத்தான்.
“கனவு கலைஞனை உருவாக்கும்
கனவு கல்லைக் கூட பிளக்கும்
கனவு கவிஞனை கட்டமைக்கும்
கனவு கண் அயர்ந்து வரும் மற்றொரு கிரகம்”. என்ற
தன் குரலிலேயே வாசித்த குரல் பதிவோடு சிணுங்கியது கைபேசி.!
சார் நான் அடியக்கா …
எழுதிக்கோங்க ..!
தொடரின் முடிவு தெரிந்த மறுநாள் அடியக்கா மங்கலம் முழுதும் பேனர்கள் ‘டிவோட்டா வாழ்க’ கோஷங்களோடு.!
அடியக்கா மங்கலத்தின் மிகச் சிறந்த விருதான “சாதித்த அகாடம்மி” விருது டிவோட்டாவுக்கு அறிவிக்கப்பட்டது.
அலைபேசி அடித்தது.
என்னங்க நம்ம ஊரு லோக்கல் டி. வி ல நீங்க இருக்கீங்க உங்களுக்கு பரிசெல்லாம் தர்றாங்க.
ஆமாம் ராஜிமா…
அங்க நின்னு யார்கிட்ட பேசுவீங்க ஃபோனுல ?
உங்கிட்டதாண்டி இது லைவ் நிகழ்ச்சி.