ஜீவஜோதி






(1980ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 | அத்தியாயம்-5

தளபதி உக்கிரசேனர் தேவதேவியின் அந்தப்புரத் துக்குப் போவதின் முன்னால் பலரிடம் அனுமதி வாங்கிக் கொண்டே ஐந்தாவது அடுக்கிலிருந்த தேவதேவியின் சொந்த அறைக்குள் நுழைய முடிந்தது. அழகான வேலைப் பாடுகளுடன் கூடிய தந்தப் படியில் பொருத்தியிருந்த மயில் விசிறியை எடுத்துக் கொண்டு அவர் திரும்பி வந்த பொழுது உயரே போவதற்கு அனுமதிக்கப்படாத சித்ரா கீழ்த் தளத்தில் கவலையோடு நின்று கொண்டிருந்தாள்.
தகப்பனைக் கண்டதும் “அவர் எப்படியிருக்கிறார் அப்பா? தேவி மருந்து கொடுத்தாளா?” என்று சித்ரா கேட்டாள்.
“மருந்து கொடுத்திருப்பாள் சித்ரா. இன்னும் ஜோதிக்கு அறிவு திரும்பவில்லை. தேவி போனபிறகு நீ வந்து பார்க்கலாம். கவலைப்படாமல் கொஞ்சம் பொறு மையோடு இரு!” என்று சொல்லிக் கொண்டே ஓடினார் உக்கிரசேனர்.
“நானும் உள்ளே வருகிறேனே அப்பா! நான் வந் தால் என்ன?” என்று கேட்டுக் கொண்டு சித்ராவும் அவர் பின்னால் ஓடிவந்தாள்.
“தேவியின் போக்கு உனக்குத் தெரியாது குழந்தை. உத் அவள் அழைக்காவிட்டால் உள்ளே வரக்கூடாது. தரவு மீறப்படுவதை அவள் ஒரு கணமும் பொறுக்கமாட் டாள். அவள் போனபிறகு நீ வரலாம் சித்ரா” என்று நல்ல வார்த்தை சொல்லி அவளைச் சமாதானப்படுத்தி வெளியிலிருக்கச் சொல்லிவிட்டு உக்கிரசேனர் மாத்திரம் ஜோதியின் அறைக்குத் திரும்பினார்.
உக்கிரசேனர் கொண்டு வந்த மயில் விசிறியை தேவ தேவி வாங்கிக் கொண்டு “சரி, நீ போகலாம் உக்கிர சேனா! அழைக்கும் பொழுது வருவதற்கு நீ வெளியே இரு!” என்று உத்தரவிட்டாள். உக்கிரசேனர் வெளியே றிய பின் மயில் விசிறியைக் கையிலெடுத்துக் கொண்டு எஜ மானுக்குப் பணிவிடை செய்யும் ஒரு பணிப் பெண்ணைப் போல பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்த ஜோதிவர்மனுக்கு அவள் மெதுவாக விசிறினாள்.
நான் வரத் தயங்கினாலும் என்னைச் சற்று கட்டாயப் படுத்தியேனும் நேற்று இங்கு அழைத்து வந்திருக்கக் கூடாதா? என் பிரபு இவ்வளவு அருகிலிருந்தும் கூட அவர் தவிப்பது தெரியாமல் நான் வராதிருந்துவிட்டேன். எவ்வளவு பெரிய பாவி நான்! என்று தனக்குள் பேசிக் கொண்டாள் தேவதேவி.
”உங்களை நான் எப்படிக் கட்டாயப்படுத்தி அழைத்து வர முடியும் கன்னிமாதா!” என்றான் பாலாஜி.
“கன்னிமாதா! தயவு செய்து என்னை இனிமேல் இப் படி அழைக்காதீர்கள் அய்யா? தங்களுக்கு நான் கன்னி மாதாவும் இல்லை, மகாராணியும் இல்லை. எனக்கு நீங்கள் மரியாதை கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை! நான் உங்களுடைய மருமகள். என் பெயர் தேவதேவி!” என் றாள் தேவதேவி.
“நீங்கள் ஏதோ ஒரு பெரிய தவறு செய்கிறீர்கள் தேவதேவி ! இவன் என் வளர்ப்பு மகன் ஜோதிவர்மன். ஜமீன்தார் விஜயவர் மனின் ஒரே மகன்” என்றார் பாலாஜி.
“இருக்கலாம். இந்த ஜன்மத்தில் இவர் பெயர் ஜோதி வர்மனாயிருக்கலாம். முந்திய ஜன் மங்களிலே இன்னும் எவ் வளவோ பெயர்கள் இவருக்கு இருக்கலாம். எந்த நாட் டில் எந்த ஜன்மமெடுத்திருந்தாலும் என்னுடைய விஜய கேசரியை எனக்குத் தெரியும்! கோடானு கோடி ஜனங் களுக்கு மத்தியில் இருந்தாலும் அவரை என் அந்தராத்மா கண்டு பிடித்துவிடும்! இவர் முகத்தைப் பாருங்கள் அய்யா! நன்றாக உற்றுப் பாருங்கள் அய்யா ! இவ்வளவு நிஷ்களங்கமான முகம் உலகத்தில் வேறு யாருக்கு உண்டு என்று சொல்லுங்கள் பார்க்கலாம்! விஜயகேசரி வரு வார் வருவார் என்று எத்தனை நூற்றாண்டுகளாக இந்தக் காட்டுமிராண்டி ஜனங்களுக்கு மத்தியில் ஏகாங்கியாக நான் காலம் கழித்து வந்தேன்! சர்வஞானசித்தரின் வாக்கு சத்தியவாக்கு என்று நம்பி எத்தனை பொறுமை யோடு காத்திருந்தேன். என் பொறுமைதந்த பரிசைப் பாருங்கள் அய்யா! என் பதியை என்னிடம் கொண்டு வந்து சேர்ந்த உங்களுக்கும் உக்கிரசேனனுக்கும் நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்?என்ன கைம்மாறு செய்தாலும் நீங்கள் செய்த இந்தப் பேருதவிக்கு ஈடு இணையாகுமா?
இப்படிச் சொல்லிக் கொண்டே தேவதேவி ஜோதிவர் மனுக்கு விசிறுகையில் பாலாஜியின் மனம் சந்திரிகா எழுதி வைத்திருந்த வரலாறுகளை ஒரு தடவை ஞாபகப் படுத்திப் பார்த்துக் கொண்டிருந்தது. செம்பவளத் தீவுக்கு வந்து சேர்ந்தது முதல் நடக்கும் ஒவ்வொரு சிறு சம்பவமும் கூட அந்தப் பழைய நம்பமுடியாத வர லாற்றை மேலும் மேலும் ஊர்ஜிதப்படுத்தி வருவதையும் கடைசியாக ஜோதிவர்மனைப் பார்த்த மாத்திரத்தில் அவன் விஜயகேசரியின் சந்ததியைச் சார்ந்தவன் தானென் பதை தேவதேவி தெரிந்து கொண்டுவிட்டதையும் எண்ணி யெண்ணி குழம்பிக் கொண்டிருந்தான் பாலாஜி.
பாலாஜி இப்படிக் குழம்பிக் கொண்டிருக்கையில் தேவதேவி பரபரப்புடன் “வாருங்கள் அய்யா! சீக்கிரம் வந்து பாருங்கள் அய்யா!” விஜயகேசரி பிழைத்துக் கொண்டுவிட்டார்! அதோ நெற்றியின் நடுவில் ஒரு சிறு நரம்பு துடிப்பதை நன்கு கவனித்துப் பாருங்கள். அந்த நரம்பு வெளியில் தெரிந்தால் மருந்து பிடிக்க ஆரம்பித்து விட்டதென்று அர்த்தம். இனிக் கொஞ்சம் கூடப் பயமில்லை. சரியாக இன்னும் இரண்டரை நாழிகையில் விஜய கேசரி தூங்கி விழித்துக்கொண்டதைப்போல எழுந்து உட் கார்ந்து விடுவார்! அவர் எழுந்திருப்பதற்குள் அவசர மாகக் கவனிக்க வேண்டிய வேலை ஒன்று இருக்கிறது வெளியே நிற்கும் அந்தப் பெண் சித்ரா இவருக்கு என்ன வேண்டுமென்று சொன்னீர்கள்? என்று கேட்ட வண்ணம் கட்டிலை விட்டு எழுந்தாள் தேவதேவி.
சித்ரா ஜோதிவர்மனுக்கு என்ன வேண்டும்? என்று தேவதேவி வினவியபொழுது பாலாஜி ஒரு கணம் தயங்கி விட்டு “அவள் ஜோதியின் மனைவி!” என்றான்.
“மனைவி! சித்ரா விஜயகேசரியின் மனைவி! அது எப் படி முடியும்? சித்ரா உக்கிரசேனர் மகள் என்றல்லவா சொன்னீர்கள்?” என்று கேட்டாள் தேவதேவி.
“ஆமாம் தேவி! சித்ரா உக்கிரசேனர் மகள்தான். நாங்கள் உக்கிரசேனரின் குகைக்கு வந்தவுடன் இந்நாட்டு சம்பிரதாயப்படி சித்ரா ஜோதி வர் மனுக்கு மாலையிட்டு முத்திரை மோதிரத்தையும் முத்தமிட்டு கணவனாக அவனை வரித்துக் கொண்டாள்! வரும் வழியெல்லாம் ஜோதி நோயில் அவதிப்பட்ட பொழுது அவள் இரவு பகலாக விழித்திருந்து அவனுக்குப் பணிவிடை செய்தாள்” என்றான் பாலாஜி.
*இருக்கட்டுமே! பணிவிடை செய்பவர்களெல்லாம் என் பிரபுவின் பத்தினிகளாகிவிட முடியுமா?” என்றாள் தேவதேவி.
“நாட்டு நடப்பின்படி ஜோதியை மணந்தவள் சித்ரா!” என்றான் பாலாஜி சித்ராவை விட்டுக் கொடுக்காமல்.
“நாட்டு நடப்பு இங்கு வரும் அந்நியர்களைக் கட்டுப் படுத்தாதென்பது அவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும். தெரியாவிட்டால் அதை அவள் தகப்பன் தெரியும்படி அவ ளுக்குச் சொல்லியிருக்க வேண்டும். எப்படியானாலென்ன? விஜயகேசரி என் கணவர். எனக்கும் அவருக்குமிடையில் இருப்பவர் எவராயிருந்தாலும் அவருக்கு உயிரோடு இருக்க உரிமை கிடையாது. சித்ரா மடிந்து மறைய வேண்டியவள். மேலே உட்கார்ந்து கடிக்கவரும் கொசுவை நசுக்கிக் கொல்வதைப்போல சித்ராவையும் அழித்து ஒழிப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை?” என்று சொல்லியபொழுது மலைக்கன்னியின் கண்களில் குரோதமும் பொறாமையும் பிரதிபலிப்பதை பாலாஜி கவனித்தான். சொல்லுவதைப்போல செய்வதற்கும் அவள் திட்டமிட்டிருக்கிறா ளென்பதை ஒருவாறு அவன் புரிந்து கொண்டு ”பாவம்! சித்ரா என்ன குற்றம் செய்தாள் அவளைக் கொலை செய்வதற்கு?” என்றார் அங்கலாய்ப்புடன்.
“என்ன குற்றம் செய்தாள்? சித்ரா என்ன குற்றம் செய்தாள் என்றா கேட்கிறீர்கள்? எனக்கும் என் பிரபுவுக்குமிடையில் இருப்பதைவிட அவள் இன்னும் என்ன குற்றம் செய்ய வேண்டும் அய்யா! காத்திருந்தவள் கணவனை நேற்று வந்தவள் தட்டிக் கொண்டு போகப் பார்ப்பது குற்றமில்லையா? ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்தத் தீவாந்திரத்தில் நான் கடுந்தவம் செய்து கொண் டிருக்கிறேன். தவத்தின் பலனையடையும் தருணத்தில் அதை இன்னொருவள் வந்து பறித்துக் கொண்டு போகப் பார்ப்பது குற்றமில்லையா அய்யா? விஜயகேசரி எப்படி யும் என்றைக்காவது ஒருநாள் என்னைத் தேடிவருவார். எல்லோரையும்போல என் வாழ்க்கையும் மலரும் என்று எத்தனை காலமாக நான் ஏங்கி ஏங்கிச் சாகாமல் செத்துக் கொண்டிருக்கிறேன்! போகபாக்கியங்களை எல்லாம் துறந்து எவ்வளவு கடுமையான விரதத்தை நான் கைக் கொண்டிருக்கிறேனென்பது உங்களுக்குத் தெரியுமா? விர தத்தின் பலன் கைமேல் கிட்டும் தருணத்தில் அதை இன்னொருவள் அபகரித்துக் கொண்டுபோக ஒருபோதும் நான்விடமாட்டேன். என் பிரபு பிரக்ஞை தெளிந்து கண் விழித்துப் பார்த்தால் அந்தக் காட்டுமிராண்டியை உத றித் தள்ளிவிட்டு என்னை அங்கீகரிப்பாரென்பது எனக்குத் தெரியும். நான் எங்கே அவள் எங்கே! என் ரூபலாவண் யத்துக்கும் குப்பை மேட்டல் புரளும் சித்ராவின் தோற் றத்துக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம்! ஆயி னும் அவள் உயிருடனிருந்தால் எப்பொழுதாவது ஒரு சம யம் என்பிரபு அவளை நினைக்கலாம். நோயுற்றிருந்த காலத்தில் அன்புடன் ஆதரித்துப் பணிவிடை செய்தவள் என்ற பரிவினாலாவது அவள் ஞாபகம் என்றைக்காவது ஒருநாள் என் பிரபுவின் நினைவுக்கு வரலாம். அதுவும் கூடாது. என் பிரபு எனது ஏகபோக உரிமையுடைய என் ஏகாதிபத்தியம். அதில் என்னைத் தவிர, என் ஒருவளைத் தவிர வேறு எவருக்கும் எந்தக் காலத்திலும் என்ன கார ணத்தை முன்னிட்டும் அணுவளவுகூட இடம்கிடையாது. எனக்குப் போட்டியாக முளைத்தவள், என் வாழ்வைச் சீர் குலைக்கத் தோன்றியவள் மறைந்து ஒழியத்தான் வேண் டும்! இதில் கருணைக்கும் யோசனைக்கும் இடமுமில்லை. அவ காசமுமில்லை!” என்று மளமளவென்று வார்த்தைகளைச் சிந்தினாள் மலைக்கன்னி.
“கொஞ்சம் யோசித்துச் செய்யுங்கள் தேவி! தீமை யினால் தீமைதான் விளையும். நன்மை விளையாது. சுத்தி கொண்டு ஜயிப்பவன் அதே கத்தியினால் மடிவான் என்ற பழமொழியை நீங்கள் கேட்டதில்லையா? உங்கள் நன் மையை உத்தேசித்தே சொல்லுகிறேன். மன எழுச்சி தணிந்தபின் ஆற அமர நிதானமாகச் சற்று சிந்தித்துப் பார்த்துவிட்டு எதையும் செய்யுங்கள்” என்று முறையிட் டான் பாலாஜி.
“தீமை! எது தீமை? கடிக்க வரும் பாம்பை நசுக்கி. அழிப்பதா தீமை? கொல்லவரும் காண்டாமிருகத்தை அடித்துக் கொன்று அழிப்பதா தீமை? அப்படியானால் மனிதன் இவ்வுலகிலேதான் வாழச் செய்யும் ஒவ்வொரு சிறுகாரியமும் தீமைதான்! தினே தினே தெரிந்தும் தெரி யாமலும் கோடிக்கணக்கான தீமைகளைப் புரிந்து பாவமூட் டையைச் சுமக்க வேண்டியவனாகி விடுவான் மனிதன்! அவன் நடக்கும்பொழுது எவ்வளவு கோடிக்கிருமிகள் அவன் காலடியிலே மிதிபட்டுச் சாகின்றன? இது தீமையில்லையா அய்யா? பசித்த வயிற்றை நிரப்ப எவ்வளவு ஆட்டையும் மாட்டையும் அடித்துக்கொன்று சமைத்து விழுங்குகிறான் மனிதன்? இது தீமையில்லையா? வாய் விட்டு அழத்தெரியாத மரம் செடி கொடிகளிலிருந்து காய்கனிகளைச் சிதைத்துப் பறித்து உண்கிறானே அது தீமை யில்லையா? நீங்கள் வர்ணிக்கும் தீமையென்ற சொல்லுக்கு அர்த்தமேயில்லை. வாழப்பிறந்த வர்கள் மனிதர்கள். சாகப்பிறந்தவர்களல்ல. வாழ்க்கை வளம்பெற முட்டுக் கட்டையாயிருப்பவைகளை அழித்து ஒழித்து வெற்றி கொண்டு வாழ்வதுதான் உலகம் தோன்றிய நாள் முதல் இன்றுவரை இருந்துவரும் இயற்கையின் நியதி!” என்றாள் தேவதேவி.
“விசித்திரமாயிருக்கிறறு அம் மா உங்கள் வேதாந் தம்! கொலை செய்வது பாபமில்லையென்றால் வேறு எது பாபமென்பதுதான் எங்களுக்குப் புரியவில்லை! மனிதன் தனது வாழ்வு வளம்பெற, பசித்த வயிறு நிரம்ப ஆடு மாடு பறவை இனங்களைக் கொன்று புசிப்பதும் காய் கனி கிழங்குகளை வெட்டிப் புசிப்பதும் தொன்று தொட்டு இருந்துவரும் வழக்கம். இதற்கும் நிரபராதியான சித் ராவைக் கொடுமையாகப் படுகொலை செய்வதற்கும் வித் தியாசமில்லையா? ஒவ்வொருவரும் தனது மனோரதம் நிறை வேற அதற்குக் குறுக்கே நிற்பவர்களையெல்லாம் அழித்து துவம்சம் செய்வதுதான் தர்ம நியாயமென்றால் இந்த உலகமே நடைபெறாது! எவ்வளவோ நூற்றாண்டுகளுக்கு முன் இப்புவியில் மானிடப் பூண்டு அற்றுப்போயிருக்கும்!”
பாலாஜி சித்ராவுக்காகப் பரிந்து கொண்டு தர்ம நியா யங்களை எடுத்துச் சொல்லி வாதித்தபொழுது மலைக்கன்னி ஆடாமல், அசையாமல் மௌனமாயிருந்தாள். அந்த மெளனம் அதிபயங்கரமாக வெடிக்கப் போகும் எரிமலை யைப் போலிருந்தது. மௌனமாயிருந்தாலும் அவள் மனதில் ஏற்பட்டுக் கொண்டிருந்த சூறாவளியை அவளு டைய முகம் பாலாஜிக்குத் தெளிவாக எடுத்துக் காட்டி யது.
“ஜோதிவர்மன், சித்ராவுக்கே உரியவன். தூயமனதுடன் செய்த சேவையினால் அவள் பெற்ற பரிசை துரா கிருதமாக நீ அபகரிக்கப் பார்க்கிறாய்! என்று தேவ தேவியிடம் சொல்வதா? அல்லது கலாக்கில்லாத ஆண்டுகளாகக் காத்திருக்கும் உனக்கே என்மகன் உரியவன். எங்கிருந்தோ முளைத்தவள் சித்ரா! அவளை அழித்து உன் பதியை நீ அடைவதுதான் நியாயம்! என்று தேவதேவி யிடம் பகிரங்கமாகச் சொல்லாமல் அவள் இஷ்டம்போல் செய்யட்டுமென்று விட்டு சும்மா இருந்துவிடுவதா?” இப் படிப் போராடிக் கொண்டிருந்தது பாலாஜியின் மனம். சித்ரா ஜோதியை அடைய முடியாவிட்டாலும் அவள் உயிரையாவது காப்பாற்றிவிட்டால் அதுவே பெரிய விஷயமென்று பாலாஜி நினைத்தார். தேவதேவிக்கு ஏற்பட்டிருந்த கொலை வெறியில் சித்ராவின் உயிர் தப்புமா? என்பது அவருக்குப் பெரும் பிரச்சினையாகவும், சந்தேகமாகவும் இருந்தது.
பிறகு சித்ராவின் உயிரை எப்படியும் காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணத்துடன் “தேவதேவி, உங்களுக்குக் கருணையென்பதே கொஞ்சம்கூட இல்லையா தேவி? சற்று நேரத்துக்கு முன்புவரை எந்தப் பெண் ஜோதியைத் தூய உள்ளத்துடன் நேசித்து இராப்பகலாகப் பணிவிடை செய் தாளோ அவளிடமிருந்து அவள் விரும்பிய புருஷன நீங் கள் பறித்துக் கொள்ளுகிறீர்கள். அந்தப் பெண்ணின் ஆசையை நிராசையாக்குவதோடு நில்லாமல் அவளைக் கொடுமையாகக் கொலை செய்யவும் வேண்டுமா? சித்ராவின் ஸ்தானத்தில் உங்களை வைத்துக் கொண்டு பாருங்கள்! வாழ வேண்டும், மனம் விரும்பிய வாலிபனை மணந்து ஆனந்தமாக வாழ வேண்டுமென்று நீங்கள் நினைப்பதைப் போல அவளும் நினைப்பது ஒரு குற்றமா? அந்தக் குற்றத்துக்கு மரணம் தான் தண்டனையா? தயவு செய்து என் வார்த்தையைக் கேளுங்கள். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பின்னால் காத்திருந்த கணவனை நீங்கள் அடையப் போகும் மங்களமான தருணத்தில் அதன் புனிதத் தன்மையை மாசுபடுத்த ஒரு கொலை நடக்க வேண்டாம்! சித்ரா எங்கேயாவது தப்பிப் பிழைத்து ஓடிப் போகட்டும். அவளை உயிரோடு விட்டுவிடுங்கள். உங்களை மன்றாடிக் கேட்கிறேன். என் மகன் கல்யாணம் ஒரு படுகொலையை அடுத்து, அவனை உள்ளன்போடு நேசித்த வளின் பிரேதத்தின் முன்னிலையில் நடக்க வேண்டாம். உங்களுக்கு இன்னொன்றும் சொல்லுகிறேன். ஜோதியின் போக்கை நீங்கள் அறியமாட்டீர்கள். சிறு குழந்தையில் இருந்து அவனை வளர்த்த எனக்குத் தெரியும் பண்பட்ட அவன் மனோபாவம். சித்ராவை நீங்கள் படுகொலை செய்தது தெரிந்தால் உங்களை அவன் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான். அவனைப் பயமுறுத்த முடியாது. என் மகன் ஜோதி சாவுக்குப் பயந்தவனில்லை. வெறியில் ஒருமுறை விஜயகேசரியைக் கொன்றீர்கள். அதன் பலன் இருபத்தைந்து நூற்றாண்டுகள் வரையில் மனம் புழுங்கி நொந்து உள்ளூரத் தண்டனையனுபவித்தீர்கள். மீண்டும் அதே பயங்கரமான தவறைச் செய்தால் கைக்குக் கிட்டிய கனி வாய்க்குக் கிட்டாமல் போய்விடும்! நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன். பிறகு உங்கள் இஷ்டம்” என்றார் பாலாஜி.
தேவதேவி பாலாஜி சொல்லுவதைக் கேட்டு அப்படியே சிலைபோலச் சமைந்து நின்றாள்.
சிறிது நேரத்துக்குப் பின் “உங்கள் யோசனையை நான் ஏற்றுக் கொள்ளுகிறேன். என் பிரபுவை நான் திரும்பப் பெறும்பொழுது அந்தச் சந்தோஷமான சமயத்தில் ஒரு கொலை நடக்க வேண்டாம். கொடுமைப்படுத்த வேண்டுமென்பதற்காக நான் யாரையும் இம்சிப்பதில்லை அய்யா! உங்களுக்காக சித்ராவுக்கு நான் உயிர்ப்பிச்சை அளிக்கிறேன். அவளை உடனே இங்கு வரச் சொல்லுங்கள். என் பிரபு பிரக்ஞை தெளிந்து எழுந்திருப்பதற்குள் அவளுடைய விவகாரம் தீர்ந்துபோய்விட வேண்டும்!” என்றாள் தேவதேவி.
தன்னுடைய முறையீடுகள் ஓரளவு வெற்றியளித்து விட்டதென்ற மகிழ்ச்சியோடு பாலாஜி வெளியே சென்று சித்ராவை மாத்திரம் மகாராணி அழைப்பதாகச் சொல்லி உள்ளே வரச் சொன்னான். ஜோதிவர்மன் பிரக்ஞை தெளிந்து “சித்ரா எங்கே!” என்று கேட்டிருக்க வேண்டும். என்ற எண்ணத்துடன் அவள் ஆவல் துடிக்க உள்ளே ஓடி வந்தாள். ஆசையோடு ஜோதியின் கட்டிலை அவள் நெருங்கிய பொழுது “நில்! கட்டிலை நெருங்காதே! அப்படியே நில்!” என்று அதிகார தோரணையில் தேவதேவி உத்தரவிடுவதைக் கேட்டு அவள் அசந்துபோய் அப்படியே ஸ்தம்பித்து நின்றாள்.
“உக்கிரசேனன் மகள் சித்ரா தானே நீ!”
“ஆம் கன்னி மாதா!” என்று கைகட்டி வாய் பொத்தி பயந்து நடுங்கிக் கொண்டு பதில் சொன்னாள் சித்ரா. அவளுடைய வாய்தான் பேசியதே தவிர அவள் கவனமெல்லாம் கட்டிலில் படுத்திருந்த ஜோதிவர்மன் மீதே பதிந்திருந்தது!
“யாருடைய அனுமதியின் மீது நீ என் அரண்மனைக்கு வந்தாய்? என் உத்தரவில்லாமல் அமரகிரியின் சுற்றாடல்களுக்குக்கூட யாரும் வரக்கூடாதென்பது உனக்குத் தெரியுமா தெரியாதா? கேட்ட கேள்விக்குப் பதில் சொல்” என்றாள் தேவதேவி! அவளுடைய குரலில் கொடூரம் தொனிப்பதைக் கண்டு நடுநடுங்கிப்போன சித்ரா “தெரியும் கன்னி மாதா!” என்றாள்.
“என் அனுமதியின்றி இந்த அரண்மனைக்கு வந்தது நீ செய்த மன்னிக்க முடியாத முதல் குற்றம். போகட்டும், கட்டிலில் கடும் நோயுடன் படுத்திருக்கும் இந்த மனிதர் யார்? இவர் உனக்கு என்ன உறவினர்?” என்று கேட்டாள் மலைக்கன்னி.
“இவர்…இவர்…இந்நாட்டுக்கு வந்த விருந்தாளி…!” என்று சித்ரா சொல்லி முடிப்பதற்குள் “இந்த நாட்டுக்கு வந்த விருந்தாளியா? அல்லது உன்னுடைய மகாராணியின் விருந்தாளியா? இவர்கள் என் விருந்தாளிகளென்பதை உன் தகப்பன் உனக்குச் சொல்லியிருக்க வேண்டுமே!” என்றாள் தேவதேவி.
“தெரியும் கன்னிமாதா! இவர்கள் உங்களுடைய விருந்தாளிகளென்பது எனக்குத் தெரியும். நோயுடன் படுத்திருக்கும் ஜோதி என்னுடைய கணவர்!” என்று தடுமாறிக் கொண்டு சொன்னாள் சித்ரா.
‘‘உன் கணவர்! நோயுடன் படுத்திருப்பவர் உன் கணவர்! என் விருந்தாளியை உனது கணவராக்கிக் கொள்ள யார் உனக்கு அனுமதி கொடுத்தது?” என்றாள் தேவி.
“நம்நாட்டு நடப்பின்படி அவருக்கு மாலையிட்டு மணந்தேன் கன்னிமாதா!” என்றாள் சித்ரா.
“நம்நாட்டு நடப்பின்படி நம் நாட்டுக்கு அந்நியரான ஒருவரை அதிலும் என் விருந்தாளியான ஒருவரை நீ எப்படி மணக்கலாம்? இந்தத் தேசத்தின் சம்பிரதாயங்கள் ஒரு அந்நியரை எப்படிக் கட்டுப்படுத்தச் செய்யும்? இதுதான் போகட்டும். உன் குலமென்ன, இவர் குலமென்ன? சந்திரகுலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு சூரியகுலத்தைச் சேர்ந்த ஒரு வாலிபனை மணக்க எவ்வளவு மனத்துணிச்சல் இருக்க வேண்டும்? இவருக்கு மாலையிட்டதினால் சூரியகுலம் முழுவதையுமே நீ அவமதித்து விட் டாய், இந்த நாட்டுச் சட்டதிட்டங்களையெல்லாம் மீறி விட்டாய். நீ செய்த இந்த மன்னிக்க முடியாத குற்றத்துக்கு மரணதண்டனை ஒன்றுதான் பொருத்தமான தண்டனை. என் உத்தரவை அலட்சியம் செய்தவர்களுக்கு இன்று காலை என்ன தண்டனை விதித்தேனென்று உனக்குத் தெரியுமா?” என்று கேட்டாள் தேவதேவி.
“தெரியும் கன்னி மாதா”
“உன்னையும் அவர்களோடு சேர்த்து புலிக்குகைக்குள் தள்ளச் சொல்லியிருக்க வேண்டும். ஆயினும் என்னைப் போல நீயும் ஒரு பெண் என்பதற்காக, இதோ நிற்கும் இந்த மனிதர் உனக்காகப் பரிந்து வாதாடியதற்காக இன்று உன்னை மன்னிக்கிறேன். ஓடிப்போ! இந்த இடத்தைவிட்டு உடனே ஓடிப்போ! மறுபடியும் என் கண்ணிலோ அல்லது ஜோதியின் கண்ணிலோ நீ பட்டால் உன் உயிர் நிலைக்காது. உடனே இங்கிருந்து ஓடிப்போய்விடு!” என்று கட்டளையிட்டாள் தேவதேவி.
இவ்வளவு நேரமும் பயந்து தலைகுனிந்து கொண்டிருந்த சித்ரா இவ்விடத்தைவிட்டு உடனே ஓடிப்போய்விடு! என்று தேவதேவி சொல்லிய பொழுது பளிச்சென்று நிமிர்ந்து பார்த்தாள். மகாகவி கம்பன், காளிதாசன் போன்றவர்கள் அப்பொழுதே அங்கிருந்தால் சித்ராவின் நிமிர்ந்து நின்ற அந்தக் கம்பீரத்தோற்றத்தையும் அவள் பார்வையையும் வைத்து ஒரு பெரிய மகாகாவியமே எழுதித் தள்ளியிருப்பார்கள். அவ்வளவு அர்த்த புஷ்டி நிரம்பியதா யிருந்தது, சித்ராவின் தீட்சண்யமான பார்வை. ஒரு கணம் தேவதேவியே திகைத்துப்போய் நின்றாள்.
“என்ன பார்க்கிறாய்? நான் சொல்லியது உன் காதில் விழவில்லை?” என்று சிறிது நேரத்துக்குப் பிறகு கேட்டாள் தேவி.
“விழுந்தது கன்னி மாதா! நீங்கள் சொல்லியது என் காதில் விழுந்தது. என்னைப் போகச் சொல்லும் காரண மும் எனக்குப் புரிந்தது. இவர் என் கணவர். என் கணவரைவிட்டு என்னைப் போகச் சொல்ல யாருக்கும் அதிகாரமில்லை. இங்கிருந்து நான் போகப்போவதில்லை!” என்று உறுதியாகவும் கிணீரென்று கம்பீரமாகவும் சொன்னாள் சித்ரா.
பெண் சினந்தால் புலி என்றபழமொழிக்கு ஒப்ப சித்ரா ஆக்ரோஷத்தோடு தேவதேவியையே எதிர்க்கத் தலைப்பட்டு விட்டதையிட்டு பாலாஜி அதன் விளைவு என்ன விபரீதத்தில் போய் முடியுமோ என்று அஞ்சினார்.
“என்ன சொன்னாய்? இங்கிருந்து போகமாட்டே னென்றா சொன்னாய்? யாரிடம் இப்படிப் பேசுகிறாயென்பது உனக்குத் தெரிகிறதா?” என்று தேவதேவி முழங்கிய பொழுது அவள் கண்களில் தீப்பொறி பறந்தது.
”தேவி! அவள் சிறுமி, ஒன்றுமறியாதவள். அவளை ஒன்றும் செய்துவிடாதீர்கள்!” என்று மன்றாடினான்பாலாஜி.
“சிறுமிக்கு இவ்வளவு வாய்த் துடுக்கா! இதோ பார் சித்ரா! நினைத்தால் உன்னை நீ நிற்குமிடத்திலேயே எரித்துச் சாம்பலாக்கிவிடுவேன். இருந்தாலும் அறியாச் சிறுமி யென்பதற்காக உன்னை மீண்டும் மன்னிக்கிறேன். உயிரிடம் ஆசையிருந்தால் ஓடிப்போய் பிழைத்துக் கொள்!” என்று மீண்டும் உத்தரவு பிறப்பித்தாள் மலைக்கன்னி.
“உயிரிடம் ஆசையிருப்பதால்தான் என் உயிரை இங்கு வைத்துவிட்டுப்போக மறுக்கிறேன். என் புருஷனிடம் ஆசைப்பட்டு அவரை கவர்ந்து கொள்ளப் பார்க்கிறீர்கள். இதுதான் உங்கள் ராஜதர்மமா தேவி? சாவுக்கு நான் அஞ்சவில்லை. தர்மத்தின் பெயரினால் கேட்கிறேன். என் புருஷனிடமிருந்து என்னைப் பிரிக்க உங்களுக்கு என்ன அதிகாரம்?” என்று உச்சதொனியில் கத்தினாள் சித்ரா.
பாலாஜி எதிர்பார்த்ததற்கு முற்றிலும் மாறாக மலைக் கன்னியின் முகத்தில் கோபத்துக்கும் குரோதத்துக்கும் பதிலாகப் பரிவும் பணிவும் பிரதிபலிப்பதைப் போலத் தோன்றி யது. தேவியின் அநீதியான போக்கைத் தன்னால் உணர்த் திக்காட்ட முடியாமலிருக்கையில் சின்னஞ் சிறுமியான சித்ரா மனதில் பதியும்படி நன்கு உணர்த்திக் காட்டி வெற்றி பெற்றுவிட்டாளோ என்று எண்ணி பாலாஜி பெருமிதம் அடைந்து கொண்டிருக்கையில் “பாவம்! அறியாச் சிறுமி!” என்று கனிவுடன் சொல்லிக் கொண்டே திரிசூலத்துடன் சித்ராவை நெருங்கினாள் தேவதேவி,
அவள் எதற்காக அருகில் வருகிறாள், என்ன செய்ய வருகிறாள் என்பதை சித்ரா உணர்ந்து கொள்ளுவதற்குள்ளாக திரிசூலத்தின் ஒரு முனையை தேவதேவி லேசாகச் சித்ராவின் தலைமீது வைத்தாள். திரிசூலம் தலையில் பட்டதுதான் தாமதம், சித்ரா மின்னலினால் தாக்கப்பட்டவளைப்போல பிரமை பிடித்துப்போய் பரக்கப் பரக்க விழித்துக் கொண்டு செயலற்று நின்றாள். திரிசூலம் பட்ட இடத்தில் நாமம் போட்டதைப்போல தலைமுடி எரிந்து வழுக்கைத் தலை வெள்ளை வெளேரென்று தெரிந்தது. கண்ணிமைப் பொழுதில் இது நடந்து விட்டது.
பரிவு காட்டுவதைப்போல நடந்து சித்திராவிடம் பழி வாங்கிய தேவதேவி சித்ராவை கூர்மையாகப் பார்த்த வண்ணம் ”போ! மரியாதையாகப் போய்விடு! மறுபடி எப்பொழுது என் கண்ணில் பட்டாலும் உன் தலையில் போட்டிருக்கும் திரிசூல அடையாளம் உன்னைக் காட்டிக் கொடுத்துவிடும். என் கண்ணில் படாமல் தப்பிப் பிழைத்துக் கொள்” என்றாள்.
சித்ரா பதில் பேசவில்லை. ஓவென்றலறிக் கொண்டே அந்த இடத்திலிருந்து அம்புபோல் பாய்ந்து ஓடிவிட்டாள்.
“பார்த்தீர்களா? இந்தக் காட்டு ஜனங்களுக்குப் பலாத்காரம் ஒன்றுதான் புரியும் பாஷை. சாந்தமாகப் பேசினால் அவர்களுக்குப் புரியாது. என் ஆணையை மீறி செத்துமடியப் பார்த்தாள் அந்தச் சிறுமி! இனி அவள் எப்பொழுது என் கண்களில் மறுபடி பட்டாலும் திரிசூலத்தின் அடையாளம் அவளை எனக்குக் காட்டிக் கொடுத்து விடும்!” என்று பாலாஜியிடம் சொன்னாள் தேவதேவி.
திரிசூலத்தின் சக்தியைக் கண்டு வியந்து பயந்து கொண்டிருந்த பாலாஜி “பாவம்! சித்ரா பிரமை பிடித்தவளைப் போல ஓடுகிறாள்!” என்றார்.
“ஓடட்டும்! நன்றாக ஓடட்டும். மறுபடி என் வாழ்வில் குறுக்கிடாமல் உலகத்தின் மறுகோடிக்கே ஓடட்டும்! என்றாள் தேவதேவி. பிறகு “என் பிரபு இனி இங்கிருக்க வேண்டாம். என் அந்தப்புரத்துக்கே வந்துவிடட்டும். தூக் கிச் செல்ல என் பணிப் பெண்களை அனுப்புகிறேன். உங் களுக்கு இன்னொன்றும் முன்கூட்டியே சொல்லி வைக் கிறேன். சரியாக இன்னும் ஐந்து நாழிகை (இரண்டு மணி) நேரத்தில் விஜயகேசரி பிரக்ஞை தெளிந்து எழுந்து விடு வார். அப்பொழுது அவரிடம் சித்ராவைப் பற்றியோ அல்லது என்னைப் பற்றியோ கண்டிப்பாக நீங்கள் ஏதும் சொல்லக் கூடாது. சொல்ல வேண்டியதைப் பக்குவமாக எப்பொழுது எப்படிச் சொல்ல வேண்டுமென்பது எனக் குத் தெரியும். இது என்கண்டிப்பான உத்தரவு. ஞாபகமிருக்கட்டும். இந்த அறையில் நடந்த விஷயங்கள் உக்கிர சேனனுக்கும் இப்பொழுது தெரிய வேண்டாம்!” என்று சொல்லிவிட்டு தேவதேவி அங்கிருந்து போய்விட்டாள்.
அவள் தலை மறையும்வரையில் காத்திருந்துவிட்டு அவ சரம் அவசரமாக உள்ளே வந்த உக்கிரசேனர் “சித்ரா ஏன் அப்படி ஓடுகிறாள் அய்யா! என்னிடம் கூடச் சொல் லிக் கொள்ளாமல் பரபரப்போடு ஓடுகிறாளே!” என்று கவ லையோடு விசாரித்தார்.
“அனுமதியில்லாமல் ராணியின் அரண் மனைக்கு வந்ததற் காக மகாராணி அவளைக் கடிந்து கொண்டாள். ராணிக் குப் பயந்துதான் அப்படி ஓடுகிறாள்” என்று வார்த்தையை மென்று விழுங்கிக் கொண்டு சொன்னான் பாலாஜி!
“இப்படி நடக்குமென்று எனக்குத் தெரியும், நான் செய்த புண்ணியம் என்மகள் உயிர்தப்பியது. ஜோதி அரண்மனைக்குப் போய்விட்டுத் திரும்பி வருவான். நீ அரண் மனைக்கு வராதேயென்று படித்துப் படித்துச் சொன் னேன். என் பேச்சைக் கேட்காமல் சித்ரா இங்கு வந்து தேவியின் கோபத்துக்குப் பாத்திரமானாள். நல்லவேளை இதோடு போயிற்றே!” என்று சொல்லிவிட்டு ஒரு பெரு மூச்சுவிட்டார் உக்கிரசேனர். பிறகு, தேவி என்னிடம் என்னென்னவோ சம்பந்தமில்லாமல் சொன்னாளே அதன் பொருள் என்ன அய்யா! எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே!” என்றார் அவர்.
ஜோதியை அரண்மனைக்கு அழைத்து வந்ததற்காக தேவதேவி நன்றி தெரிவித்ததைக் குறிப்பிட்டே உக்கிரசேனர் இவ்விதம் கேட்டாரென்பதைப் புரிந்து கொண்ட பாலாஜி, “தயவு செய்து இப்பொழுது என்னி டம் ஒன்றும் கேட்காதீர்கள். இது ஒரு பெரிய தேவரகசியம். சமயம் வரும்பொழுது தேவதேவியே எல்லாவற்றையும் உங்களிடம் சொல்லுவாள்!” என்றான் பாலாஜி.
‘”அப்படியா?” என்று உக்கிரசேனர் சொல்லி வாய் மூடுவதற்குள் இரண்டு பணிப் பெண்களும் நான்கு ஆட்களும் அங்கு வந்தார்கள். பணிப் பெண்கள் சமிக்ஞை செய்து காட்டியபடி அந்த ஆட்கள் நால்வரும் ஜோதி படுத்திருந்த கட்டிலை மெதுவாகத் தூக்கிக் கொண்டு நடந் தார்கள். கட்டிலின் பின்னால் பாலாஜியும் முனுசாமியும் சென்றனர். உக்கிரசேனர் ஒன்றும் புரியாமல் விழித்துப் பார்த்துக் கொண்டு நின்றார்.
மலைச் சிகரத்தின் நான்கு அடுக்குகளையும் தாண்டி தேவதேவியின் அந்தப்புரத்திலிருக்கும் இடத்துக்கு அவர் கள் வந்த பொழுது அவர்களுடைய வருகைக்காக தேவ தேவி அங்கு காத்திருந்தாள். தேவியின் சயனக்கிரகம் போன்ற அறைக்குப் பக்கத்திலிருந்த இன்னொரு அறைக்கு ஜோதியைக் கட்டிலோடு தூக்கிக் கொண்டு போனார்கள். அந்த அறை கிட்டத்தட்ட தேவியின் சொந்த அறையைப் போலவே ஆடம்பரமிக்கதாயிருந்தது. பட்டுமெத்தைகள் விரித்த ஒரு சந்தனக் கட்டிலின்மீது ஜோதிவர்மனைத் தூக் கிக் கொண்டு வந்தவர்கள் மெதுவாகத் தூக்கிப் படுக்க வைத்துவிட்டு கயிற்றுக் கட்டிலை எடுத்துக் கொண்டு போனார்கள்.
கூடவந்திருந்த பணிப் பெண்களையும் தேவதேவி வெளியே போகச் சொல்லிவிட்டு பாலாஜியின் பக்கம் திரும்பி “இவரை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள் ளுங்கள் அய்யா! அவர் கண்விழிக்கும் சமயத்தில் நான் வருகிறேன்!” என்று சொல்லிவிட்டுப் போனாள்.
சரியாக ஐந்து நாழிகை நேரத்துக்குப் பின்னர் சுய நினைவு இல்லாமல் மூன்று தினங்களாகப் படுக்கையாய்க் கிடக்கும் ஜோதிவர்மனின் கண்ணிமைகள் படுத்த லேசாக அசைவதைப் போலிருந்தன. ஜோதி பிரக்ஞை தெளிந்து எழுந்திருக்கப் போகிறானென்று ஆவலோடு அவன் முகத்தின் மீது வைத்த விழியை நகர்த்தாமல் பாலாஜி பார்த்துக் கொண்டிருக்கையில் சந்தடி செய்யாமல் அவன் பின்னால் வந்து நின்ற தேவதேவி “என் பிரபு இதோ எழுந்திருக்கப் போகிறார். நான் உங்களை எச்சரித்தது ஞாபகமிருக்கட்டும். சித்ராவையோ அல்லது என்னையோ பற்றி இப்பொழுது அவரிடம் நீங்கள் ஒன்றும் சொல்லக் கூடாது!” என்று சொல்லிவிட்டு கட்டிலில் ஜோதியின் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டாள்.
– தொடரும்…
– ஜீவஜோதி, முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1980, வீரகேசரி பிரசுரம், கொழும்பு.