ஜிகினா ரவிக்கை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: March 1, 2025
பார்வையிட்டோர்: 4,588 
 
 

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தஞ்சைமா நகரத்து அரண்மனை அன்று மங்கள அலங்காரத்தோடு கண் விழித்தது.

மன்னர் துளஸாஜியின் பட்டத்துராணியான காமாட்சியின் பிறந்ததின விழாவில் அரண்மனை வாசலில் முழங்கும் வாத்திய கோஷம் திசைகளை அதிரச் செய்து கொண்டிருந்தது.

சமஸ்தானத்தைச் சேர்ந்த உத்தியோகஸ்தர்களும், நகரப் பிரமுகர்களும் புதுப்புது ஆடை அலங்காரங்களோடு ராஜ சபைக்கு விரைந்து கொண்டிருந்தார்கள்.

காமாட்சியின் அந்தப்புரத்தில் ராஜ குடும்பத்துப் பெண்மணிகளும், உயர் குடும்பத்துப் பெண்மணிகளும் குழுமி இருந்தார்கள்.

காமாட்சி தேவி மங்கல நீராடிப் புத்தாடைகள் ஆபரணங்கள் அணித்து, மலர் சூடி, நெற்றியில் கஸ்தூரி திலகமும் குங்குமமும் துலங்க, குலதெய்வத்தை வணங்கி வழிபாடுகள் செய்து விட்டு அந்தப்புரத்துக்குள் ஒய்யாரமாகப் பிரவேசித்தாள்.

மைதீட்டி அழகிடப் பெற்ற அவளுடைய தீர்க்கமான கண்கள் சுற்றிச் சுழன்று யாரையோ தேடினர் அந்தக் குறிப்பை உணர்ந்த பணிப்பெண் அருகில் வந்ததும், “ராஜாயி வரவில்லையா, கங்கா?” என்று கேட்டாள் ராணி.

“இதோ வந்து கொண்டே இருக்கிறேனே” என்ற குரல் கேட்டுத் திரும்பினாள் மகாராணி.

அவளுடைய அருமைச் சிநேகிதி ராஜாயி புன்னகை மலர நின்று கொண்டிருந்தாள்.

“ராஜாயி! ஏன் இவ்வளவு நேரம் உனக்கு? பூஜையின்போதே உன்னை வரச் சொல்ல வில்லையா?” என்று வினவினாள் ராணி.

“ஆம். நேரம்தான் ஆகிவிட்டது! தேவி, மன்னித்தருள வேண்டும்!” என்று குறும்பாகச் சொல்லிச் சிரித்த வண்ணம் கைகூப்பினாள் ராஜாயி, ராணி காமாட்சி கலகல் வென்று சிரித்தாள்.

உடனே மகாராஜாவின் புரோகிதர் வீட்டு மூதாட்டியான சுமங்கலி வந்து அங்கு தங்கத் தாம்பாளத்தில் வைக்கப்பட்டிருந்த புஷ்பம், சந்தனம், குங்குமத்தைக் காமாட்சிக்கு அணிவித்து, மங்கலப் பொருள்கள் நிறைந்த அந்தத் தட்டையும், ஆடை ஆபரணங்கள் நிறைந்த மற்றொரு நவரத்தின கசிதமான தாம்பாளத்தையும் எடுத்துக் கையில் கொடுத்து ஆசீர்வதித்தாள்.

பிறகு முறையாக அந்தப்புரத்து மற்ற ஸ்திரீகளும், பிரமுகர்கள் வீட்டுப் பெண்மணிகளும் தாங்கள் கொண்டு வந்த காணிக்கைப் பொருள்களைச் செலுத்தித் தங்களது சந்தோஷத்தைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

கடைசி மட்டும் காத்திருந்து விட்டு ராஜாயி, நெற்றியில் குங்குமமிட்டுப் பட்டு வஸ்திரத்தில் சுற்றியிருந்த தனது காணிக்கைப் பொருளைக் கையில் கொடுத்து அன்புப் பெருக்குடன், “காமாட்சி! உன் தோழியின் எளிய, ஆனால் அன்பு நிறைந்த சிறு பரிசு இது உனக்கு!” என்று கூறினாள்.

ராஜாயியின் அன்பு நிறைந்த சொற்களால் காமாட்சியின் மனம் தெகிழ்ந்தது. நீர் நிரம்பிய கண்களை உயர்த்தித் தோழியைப் பார்த்தாள்.

பிறகு மன்னருடைய உத்தரவை அனுசரித்து வந்தவர்களுக்குத் தன் கையினால், ஆடைகள், ஆபரணங்கள், தன தான்யங்கள் யாவும் வழங்கினாள்.

எப்பொழுது இதெல்லாம் முடியும் என்று காத்திருந்தவள் போல ஆசனத்தை விட்டு எழுந்து எல்லோருக்கும் விடை கொடுத்து அனுப்பிவிட்டு ராஜாயியின் கையைப் பற்றித் தனது அறைக்குச் சென்றாள். வைத்திருந்த பட்டு வஸ்திர முடிப்பை அவிழ்த்தாள்.

ஜிகினா வேலை செய்த பச்சை வெல்வெட்டினால் ஆன ரவிக்கை ஒன்று இருந்தது!

பிரித்துப் பார்த்தாள் காமாட்சி. ஆச்சரியத்தினால் அவள் கண்கள் விரித்தன! மிகுந்த சந்தோஷத்துடன் தோழியின் கையைப்பற்றி, “ராஜாயி! உன் கையால் வேலை செய்ததா இது?” என்று கேட்டாள்.

“இல்லை. தையல்காரி ஸோனாபாயிடம் கொடுத்துச் செய்யச் சொன்னேன். உனக்குப் பிடித்திருக்கிறதா, காமாட்சி?”

“அபூர்வமான வேலை, ராஜாயி, மிகமிக உயர்வு என்று மன்னரால் தயாரிக்கப்பட்ட என் உடைகளில் எதுவும் இம்மாதிரி இல்லை.”

ராஜாயியும், “ஆமாம்! வாஸ்தவம்தான். லோனாபாயின் வேலைப்பாடு தரமானதுதான்! அதனால்தான் உயர் குடும்பத்துப் பெண்களெல்லாம் அவளிடம் கொடுக்கிறார்கள். அந்தப் பெண்ணும் ரொம்ப நல்லமாதிரி. அவள் செய்யும் பூ வேலையும் ரொம்ப நன்றாகத்தான் இருக்கும்….”

”அப்படியா? அவளை அழைத்துக் கொண்டு வாயேன் நாளைக்கு. வேலை கொடுப்போம் அவளுக்கு, அழைத்தால் அவள் வருவாள் அல்லவா?” என்று கேட்டாள் ராணி.

“வராமல் என்ன? அதிலும் அரண்மனை அந்தப்புர வேலை என்றால் குதித்துக் கொண்டு வரமாட்டாளா!”

“ரொம்ப சரி, நாளைக்குக் கட்டாயமாக அவளை அழைத்துக் கொண்டு வா!”

“உத்தரவுப்படி….அதோ! மகாராஜா வருகிறாற் போலிருக்கிறது. நான் போய் வரட்டுமா?”

”அவசியம் நாளைக்கு அந்தப் பெண்ணோடு வரவேண்டும்” என்று அவளுக்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டு மன்னரை எதிர் கொண்டு அழைக்க வேகமாக எழுந்து சென்றாள் ராணி காமாட்சி.

காமாட்சியின் பேரழகுக்கு ஆசைப்பட்டு, அரும் பிரயாசைப்பட்டு மணம் புரிந்துகொண்டார் மன்னர். அவளைத் தமது தேத்திர ஸ்தானத்தில் வைத்துக் காப்பாற்றியும் வந்தார். அவளுடைய தீர்க்காயுளைக் கருதி ஜன்ம நினத்தன்று அநேக தான தர்மங்கள் செய்து விட்டு, தமது மனப்பூர்வமான ஆசியைத் தருவதற்காக வந்து கொண்டிருந்தார் அரசர். இயற்கையிலேயே வடிவழகு பொருத்திய அந்தக் காமாட்சி மகாராணிக்குரிய அலங்காரத்தோடு சௌந்தரிய தேவதை போல் தம்மை எதிர்கொள்ள வந்ததும் ஆனந்த பரவசமாகி அவளது சிரசில் கை வைத்து, “தேவி! அம்பிகை உனக்கு நீண்ட ஆயுளை அருள வேண்டும்” என்று கூறி மன்னர் ஆசீர்வதித்தார்.

மன்னரின் பாதம் தொட்டு வணங்கி, இன்முகத்துடன், “மகாராஜா பரிசு ஒன்றுமில்லையா எனக்கு?” என்று வேடிக்கையாகக் கேட்டாள் மகாராணி.

துளஸாஜி ஒருகணம் யோசித்து விட்டு அவள் முகவாயைப் பற்றி, “காமாட்சி எனது செல்வமே! உன்னை என்று சித்திரத்தில் கண்டேனோ அன்றே என்னையும். என்னுடைய உடைமைகளையும் உனக்கு அளித்து விட்டேனே! மறுபடியும் உனக்குக் கொடுக்க…” என்று கூறினார். பிரேமைப் பெருக்கினால் அவரது வார்த்தை தடைப் பட்டது. அரசருடைய அன்புக்கு ஆழம் காண முயன்ற காமாட்சி தடுமாறிப் போனவளாக, “பிராணபதி! பரிகாசத்துக்கன்றோ வினவினேன். கிடக்கிறது. இதோ பாருங்கள்! ஒரு அபூர்வமான வஸ்து எனக்குக் கிடைத்திருக்கிறது” என்று கூறி ராஜாயி கொண்டு வந்து கொடுத்த ஜிகினா ரவிக்கையை எடுத்து அரசர் கையில் கொடுத்தாள். பிரித்துப் பார்த்த மன்னர், “இது ஏது. காமாட்சி? யார் கொடுத்தது?” என்று வியப்போடு கேட்டார்.

“என் சிநேகிதி ஒருத்தி. ராஜாயி என்று”

“அவள் செய்த பூ வேலையா இது?”

“இல்லை. வேறு யாரோ ஒரு தையற்காரியாம்: ஸோனாபாய் என்று…”

அரசர் ஆச்சரியத்தில் ஆழ்ந்தவராக, “ஆச்சரியம்! நமக்கும் தெரியாமல் இவ்வளவு கைதேர்ந்த பெண் இருக்கிறாளா நம் நகரத்தில்?” என்று கேட்டார்.

“நாளைக்கு அவளை அழைத்து வரச்சொல்லி இருக்கிறேன். பாவம், கூலிக்கு வேலை செய்து கொடுக்கிறாள்” என்று இரக்கத்தோடு மொழிந்தாள் ராணி.

“வந்தாளானால் தாராளமாகச் சன்மானம் கொடுத்தனுப்பு, ராணி!” என்று கூறிவிட்டு எழுந்தார் துளஸாஜி மகாராஜா.


மறுதினம் பிற்பகல். வாசற்கதவு தட்டப் படுற சத்தம் கேட்டு எழுந்து வந்து கதவைத் திறந்த ராஜாயி, வாசலில் ஸோனாபாய் நின்றதைக்கண்டதும். “வா, ஸோனா! உன்னைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். உள்ளே வா!” என்று அவளை அழைத்துக் கொண்டு உள்ளே திரும்பினாள்.

ஸோனாபாய், “என்னம்மா சமாசாரம்? என்ன தைக்கணும்?” என்று கேட்டாள்.

“உட்காரு, கொஞ்சம் உன்னோடு பேச வேண்டும்” என்றாள் ராஜாயி.

திடுக்கிட்டு விழித்தாள் ஸோனா.

“உன்னிடம் காமாட்சி தேவிக்கு என்று பூ வேலை செய்து வாங்கினேன் அல்லவா, ஒரு பச்சை ரவிக்கை?”
”ஆமாம்.”

“அது ராணிக்கு ரொம்பவும் பிடித்துப் போய் விட்டது. உனக்கு அரண்மனை அந்தப்புரத்தில் வேலை கிடைக்கும். ‘லோ லோ’ என்று தெருத் தெருவாக நீயும் கிழவரும் அலைய வேண்டாம். இனி மேல்.”

“நானா! ராஜாங்கத்திலா எனக்கு உத்தியோகம்? ஐயையோ! என்னால் முடியாதம்மா!”

“ஏன்?”

“எனக்குப் பயம். அங்கெல்லாம் நான் வரமாட்டேன். அப்பா கோபிப்பார்.”

“ஒன்றும் கோபிக்க மாட்டார். அசட்டுப் பெண்ணே! வலுவில் வரும் ஸ்ரீதேவியைக் காலால் உதைக்காதே, புறப்படு. மாலைக்குள் திரும்பி விடலாம். ஒன்றும் பயப்படாதே!” என்று தைரியப்படுத்தினான் ராஜாயி.

“இருங்கள். அப்பா வீட்டில்தான் இருக்கிறார். ஒரு வார்த்தை கேட்டுக் கொண்டு வந்து வடுகிறேன்” என்று எழுந்து வாசலுக்குத் திரும்பினாள் ஸோனா.

“சீக்கிரம் வரணும், காத்திருப்பேன்!” என்று சொல்லி எச்சரித்தாள் ராஜாயி.

ஓட்டமும் நடையுமாக வீட்டுக்கு வந்த ஸோனாபாயைக் கண்ட சகாராம்ராவ், “எங்கு போனாய்?” என்று கேட்டார்.

“ராஜாயி அம்மா கூப்பிட்டு அனுப்பியிருந்தார்கள். போய் வந்தேன்.”

“உம்.”

“நேற்று, ராணிக்குப் பிறந்த நாள் பரிசு என்று என்னை ரவிக்கையிலே பூ வேலைசெய்து தரச் சொல்லவில்லையா”

“ஆமாம்.”

“அதைப் பார்த்த ராணிக்குப் பூ வேலை ரொம்பப் பிடித்து விட்டதாம். என்னைப் பார்க்கவேண்டுமென்று சொல்கிறார்களாம்!”

“அந்த அம்மாளும் கூட வருவதானால் போய்விட்டு வாயேன்.”

“பயமாக இருக்கிறது, அப்பா!”

“பயமென்ன?”

“என்னவா? எனக்கு மனமில்லை.”

“சே. அது தப்பு, ராணியாகக் கூப்பிட்டு அனுப்பினால் போகாமலிருப்பது கூடாது. போய் விட்டு வா, அம்மா!”

“எதற்குக் கூப்பிடுகிறார்கள், தெரியுமா? அவர்களுக்கு வேலை செய்ய”

“அப்படி யிருந்தால் அது பவானி தேவியின் அனுக்கிரகம் தான், ஸோனா. போய் விட்டு வா. ராஜசமூகத்துக்கு வெறுங்கையோடு போகக் கூடாது. ஏதோ நம்ம சக்திக்கு ஏற்றது கொண்டு போய்க் கொடுத்துப் பார்த்து விட்டு வா!”

“அரண்மனைச் சேவகத்தில் ஆதாயமிருப்பதுபோல், ஆபத்தும் இருக்கலாமே?”

“என்ன விஷயம் என்று பார்த்துக் கொண்டுவா.ஆபத்தாக இருந்தால் அங்கே போக வேண்டாம்!”

ஸோனா தயங்கியபடி, “ராமதாஸைக் கேட்க வேண்டாமா ஒரு வார்த்தை?” என்று தணிவாகக் கேட்டாள்,

“அவனை என்ன கேட்பது? தாலிகட்டின பிறகுதான் அவன் உத்தரவை எதிர்பார்க்க வேண்டும் – இப்பொழுது அவசியமில்லை. போய்விட்டுவா” என்று ஆக்ஞாபித்த தந்தையின் கட்டளையை அவளால் மீற முடியவில்லை. பெட்டியைத் திறந்து தந்தை குறிப்பிட்டபடி சிவப்புப் பட்டு ரவிக்கைத் துணியை எடுத்துக் கொண்டாள். சகாராம் ராவ் எழுந்து எட்டணா நாணயமொன்றை அவள் கையில் கொடுத்து, “கடைத் தெருவில் நாலு முழம் கதம்பமும் எலுமிச்சம் பழம் ஒன்றும் வாங்கி எடுத்துக் கொண்டு போய்ப் பார்த்து விட்டு வா” என்று கூறினார்.

மனம் நிறையப் பாரத்தைச் சுமந்து கொண்டு நடந்தாள் ஸோனாபாய். அவளுக்கான வயது இருபதில் இன்றுதான் அவள் மனத்தில் அதிர்ச்சியும் துக்கமும் உண்டாயின!

குழந்தைப் பருவத்திலேயே தாயை இழந்தும், அந்தக் குறை தெரியாமல் வளர்த்தார் தந்தை சகாராம் ராவ், தையல் வேலையும், ஜிகினாவில் பூவேலை செய்வதும் அவர்களுடைய பரம்பரைத் தொழில், கை உழைப்பால் உணவருந்திக் கவலையற்று வளர்த்த குமரி ஸோனா மராத்தியருக்குள்ள நிறமும், எழிலும் அமைந்தவள். ஸ்ரீதேவி தாண்டவமாடும் முகம். சுறுசுறுப்பும், குடிகையும் அவளோடு கூடப் பிறந்தவை. தமது தமக்கையின் மகன் ராமதாஸ் என்னும் வாலிபனுக்கு மகளை விவாகம் செய்துதர நினைத்திருந்தார் சகாராம் ராவ் – நிச்சயம் கூடச் செய்து விட்டார் தம் மட்டில்.

ராமதாஸ் அரண்மனைக் காரியாலயத்தில் வேலை பார்ப்பவன். வாட்ட சாட்டமான உடல் அமைப்பு. தந்தம் போன்ற நிறம். வசீகரமான கண்களோடு கூடிய யுவன். தந்தையின் உத்தேசத்துக்கு முன்னதாகவே ஸோனாவின் மனத்தில் குடிகொண்டவன். அவனிடம் அநுமதி கேட்டுக் கொண்டு புறப்படாததில் ஸோனாவுக்குக் குறைதான்.

ராஜாயியின் வீட்டு வாசலில் தனக்காக காத்து நின்ற வண்டியில் ஏறி ராஜாயியுடன் பாதி வழி வந்துவிட்டாள். அப்பொழுதுதான் பூவும் எலுமிச்சம் பழமும் வாங்க மறந்து விட்டோமே என்ற நினைவு வந்தது.

“அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். சும்மா வா. நீ!” என்றாள் ராஜாயி. அடுத்த சில விநாடிகளில் அந்தப்புர வாசலில் வந்து நின்றது வண்டி.

ராணி காமாட்சியை முறைப்படி வணங்கிய ஸோனாபாய் தன் கையிலிருந்த ரவிக்கைத் துணியை ராஜாயியினிடம் கொடுத்து, “அம்மா! இந்த அற்பமான பொருளை ராணியிடம் கொடுக்க வெட்கமாக இருக்கிறது” என்று தாழ்ந்த குரலில் சொன்னாள், ராஜாயி அதைக் கையில் வாங்கி, “இதோ பார், இந்தப் பெண் உனக்குக் காணிக்கை கொண்டு வந்திருக்கிறாள். இச்சிறு பொருளைக் கொடுக்க வெட்கமாக இருக்கிறதாம்!” என்றாள்.

ராணி காமாட்சி அதை வாங்கிக்கொண்டு ஸோனாவைப் பார்த்து, “உட்காரு, அம்மா! யாரிடமும் மனத்திலுள்ள அன்பு பெரிதாக இருக்கிறதா என்று தான் நான் கவனிப்பேனே யொழிய, பொருள் விலையுயர்ந்ததா என்று பார்ப்பதில்லை! உட்காரு, ஸோனா! இனி மேல் நீ இங்கு இருக்க வேண்டியவள்!” என்றாள் ராணி.

“இந்தா, ஏற்கனவே இவள் பயந்தவள். அரண்மனை என்றால் ஏதோ தண்டனைதான் அங்கு கிடைக்குமாக்கும் என்று திகில்படுபவள, போதாதற்கு ‘இனிமேல் நீ இங்கேயே தான் இருக்க வேண்டும்’ என்றாயானால் செத்தே போய்விடுவாள்” என்றாள் ராஜாயி.

கலகலவென்று சிரித்தார்கள் இருவரும். காமாட்சி கனிவு தோன்றும்குரலில், ”அப்படி யெல்லாம் பயப்படாதே, ஸோனா. உனக்கு விருப்பமிருந்தால் நீ இங்கேயே என் தோழியாக இருக்கலாம். அதுதான் என் விருப்பம். உனக்கு அது விருப்பமில்லையானால் காலையில் வந்துவிட்டு மாலையில் போய்விடு. பகலில் இங்கிருந்து என் உடைகளுக்கு வேலைசெய். மாதம் மாதம் சம்பளம் தருகிறேன்” என்றாள்.

“மகாராணியின் ஆதரவு என் பாக்கியம். இதை அப்பாவிடம் சொல்வி ஆலோசித்துக் கொண்டு வந்து பதில் சொல்லுகிறேன்” எனறாள் ஸோனா பணிவாக.

“பேஷ்! அழகாக வேலை செய்கிறாய். அழகாக இருக்கிறாய்; அழகாகவும் பேசுகிறாய்! ஸோனாபாய்! உன்னைக் கண்டதும் ஏனோ என் மனம் உன்மீது பற்றுதல் கொள்ள முயலுகிறது. காரணம் தெரியவில்லை…” என்றாள்.
ஸோனாவுக்கு நிறையத் தின்பண்டங்களும், பரிசுப் பொருள்களும் தந்து அடுத்த நாள் முதல் வந்து அங்கு வேலை தொடங்க வேண்டும் என்று கூறி விடை கொடுத்துத் தக்க துணையோடு அனுப்பி வைத்தாள். பிறகு தன் தோழி ராஜாயியை நோக்கி, “பாவம், ஸோனா ரொம்ப ஏழை போலிருக்கிறது. இப்படிப் பட்டவர்களுக்குத்தான் உதவி செய்ய வேண்டும். வெளி வேலை எதுவும் வேண்டாம் என்று சொல்லி மாதம் இருநூறு ரூபாய் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்!” என்றாள்.

“தாராளமாகக் கொடுக்கலாம். பணமில்லாத தோஷத்தால் வரன் கையிலிருந்தும் விவாகம் செய்ய முடியாமல் சிரமப்படுகிறாராம் அவள் தகப்பனார்” என்றாள் ராஜாயி.

“அடடா! அப்படியா? கொஞ்ச நாட்களில் அதை நாமே செய்து வைத்துவிட்டால் போகிறது. புண்யமாயிற்றே!” என்றாள் ராணி.

அவளுடைய வார்த்தையை எண்ணிப் பின்புறமாகச் சிரித்தது காலதேவதை.


முப்பது நாட்கள் ஓடி ஒளிந்து விட்டன. இரவு ஒன்பது மணி இருக்கும்.

காமாட்சி மஞ்சத்தில் குப்புறக் கிடந்தாள். அறுபட்ட கொடிபோல் துவண்டு கிடந்தாள்.

“காமாட்சி” என்று அழைத்துக் கொண்டே வந்தாள் ராஜாயி.

“ராஜாயி! பிறந்த நாளும், ஜிகினா ரவிக்கையும் என் வாழ்வைப் பொசுக்கி விட்டன! அநியாயமாக – ஒரு அபலையின் இன்ப வாழ்வுக்கு உலை வைத்து விட்டேன் பாவி. என்ன அப்படி விழிக்கிறாய்? ஸோனாபாயின் அழகுக்கு முன் என்னுடைய அழகு மங்கிச் செத்து விட்டது. நேற்று துளஸாஜி மகாராஜாவுக்கும், ஸோனாபாய்க்கும் கலியாணமாகிவிட்டது!”என்று உள்ளங்குமுறக் கூறினாள் ராணி.

“என்ன? யானை தனது தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வதைப் போல நீயாகவே இந்த வினையை விலை கொடுத்து வாங்கிறாயே காமாட்சி!” என்றாள் ராஜாயி உள்ளம் உருக.

“ராஜாயி! என் தலையில் நான் மண்ணைப் போட்டுக் கொண்ட கவலையைத் துரத்தி விட்டது, அந்தப் பெண்ணின் உயிர்த் துடிப்பு, அவளுடைய விருப்பத்தைத் துளியும் லட்சியம் செய்யாமல் – தமது மகள் ராணியாவதைப் பெரும் பேறாக நினைத்து நிர்ப்பந்தப்படுத்தினர் அவள் தந்தை. அவரைச் சொல்வானேன்?-மகாராஜாவின் ஆக்கினை அப்படி இருந்திருக்க வேண்டும்! ராஜாயி! என்ன அக்கிரமம் இது!”

“அக்கிரமமென்ன. காமாட்சி அவளை இங்கு அழைத்து வந்தது நமது பிசகல்லவா?”

“ஆமாம்! பெரும் பிசகுதான்! எனது அலங்கார ஆசை அந்தப் பேதைப் பெண்ணின் இன்ப வாழ்வுக்கு உலை வைத்து விட்டது ! நேற்றிரவு அவளைப் பார்த்து வரலாம் என்று போனேன். நான் வந்ததைக் கூடக் கவனியாமல், ‘ராமதாஸ் இந்தப் பாபியை ஏன் நேசித்தாய்? – ஐயோ? இப்படி நேருமென்று தெரிந்திருந்தால் அன்றே உயிர் துறந்திருப்பேனே!’ என்று குமுறி அழுதாள். என் நெஞ்சை என்னவோ செய்தது. ஆறுதல் அளிப்பதற்காக அவள் அருகே போனேன். அப்பொழுது அவள் என்னைப் பார்த்த அந்தப் பார்வை! ‘தையற்காரியாக இருந்த என்னை இங்கே அழைத்து வந்து மகாராணியாக உயர்த்தினீர்களே’ என்று கேட்பதுபோலிருந்தது. தான் வெட்கித் தலை குனிந்தேன். ‘நீங்கள் என்ன செய்வீர்கள். பாவம்! என் தந்தையின் பேராசை என் சுக வாழ்வை நாசம் செய்து விட்டது! மகாராணி! நான் ராணியாகி விட்டேன்! சுகபோகங்களை நான் விரும்பாவிட்டாலும் அனுபவிப்பேன். ஆனால் என் ஆருயிர் ராமதாஸ் பைத்தியமாகக் தெருவில் திரிவார்!’ என்று முகத்தில் அறைந்து கொண்டு கீழே விழுந்தாள், இந்தப் பெண் பாவம் யாரைச் சூழும்?”

“சந்தேகமென்ன, என்னைத்தான்!”

“எப்படி?”

“எப்படியா? ஜினா யார் தைத்தது என்று கேட்டபொழுது ‘நான் தான்’ என்று கூறியிருக்க வேண்டும்! உன்னிடம் உண்மையைச் சொல்லி விட்டு அவளையும் அழைத்து வந்தது என் தவறுதானே?”

“துளஸாஜியின் மனத்தில் என்னைத் தவிர எந்தப் பெண்ணும் இடம் பெற இயலாது என்ற கர்வத்தில் அவர் அந்தப்புரம் வரும் சமயங்களில் இவளை ஒளித்து வைக்க மறந்தேன்! நான் உன்னைப் பலாத்காரமாக அவளை இங்கே அழைத்து வரச் சொன்னதால்தானே இவ்வளவும் – அவள் பாவத்தைக் கொட் டிக்கொண்டுவிட்டேன்!”

“கொட்டிக் கொண்டு விட்டோம் என்று சொல்லு, காமாட்சி! அந்த வாலிபனையும் எனக்குத் தெரியும். இருவரும் ஏற்ற ஜோடி! எப்படி வந்து மூண்டது பார்த்தாயா வினை?”

“எப்படி வந்தது என்றால் ஜிகினா ரவிக்கை மூலமாக! பார், பார். இங்கிருந்தே தெரிகிறது பார்! அந்தச் சாளர வாயிலில் ஸோனா பாய் நின்று அவர்கள் வீடு இருக்கும் திக்கில் பார்த்துக்கொண்டு அழும் கண்ணராவியை!” என்றாள் ராணி காமாட்சி.

கண்ணீரால் முகம் நனைய வெற்று வெளியைப் பார்த்துக் கொண்டு ஏதோ கூறி இரங்கும் ஸோனாவின் அப்பொழுதைய நோற்றத்தைக் கண்டபொழுது, எங்கேயோ தொலை தூரத்தில் ராமதாஸ் பைத்தியம் பிடித்து உலாவுவது போலும், அதைக் கண்டு ஸோனாபாய் பொருமுவது போலும் ஒரு பிரமையை உண்டாக்கியது.

– 1957-03-17, கல்கி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *