ஜானுப்பாட்டி அழுது கொண்டிருக்கிறாள்!
(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவளும் சீதாதான்!
கண்ணாடியில் – ஜன்னல் கம்பியில் தொங்கிய அந்தக் கண்ணாடியில் சீதா தன்னைப் பார்த்துக் கிளுகிளுத்தாள். சிவப்பு முகத்தில் அந்த சிவப்புச் சாந்து ரத்தம் துளிர்த்து விட்டது போல அடர்ந்தது. குளித்தால் நனைந்த நனைவு பூரணமாக துடைக்காததாலேயே அந்தக் கண்ணாடியில் அவளைப் பூரணமாக்கித்தான் இருந்தது! காதுகள் பளபளத்தன. காதோரம் சுருள்கள் நனைவில் ஈரம் பூத்து சுருண்டு அடங்கியிருந்தன. கழுத்தும் ஈரத்தில் மினுங்கியது. குவடுகளில், புஜத்தின் சரிவில் நடு முதுகு பாம்பு மடிப்பில் ஈரம்! கண் இமைகளில் புருவங்களில் நெற்றி வளைவில்… குளித்த அவசரமா?… எங்கும் ஈரம் மிச்சம்!
குளித்த பரபரப்பு! அப்படியே பிழிந்த பாவாடையும் துண்டும் திண்ணையில் கட்டியிருந்த கொடியில் ரஸமாக காற்று ஊடே இழைந்து. ஜன்னலருகில் கண்ணாடியில் குலவிக் கொண்டிருந்த சீதாவைப் புல்லரிக்கவைக்கிறது! அப்டப் பா! எப்படி புல்லரித்து விட்டது அவளுக்கு! கைகளைப் பார்த்துக் கொண்டாள்! சிலிர்த்து விட்டதால் முன்மயிர் நிரம்பிய அந்தக் கைகள் முழுதும் ஒவ்வொரு மயிர்க்காலும் சிலிர்த்து எழுந்திருந்தது. கையும் காலும்! உடல் முழுதும்!
‘என்ன கை! என்ன கால்!
என்ன புஜம் என்ன உடம்பு.’
கண்ணாடி என்னவோ சின்னதுதான். எதிரே இருந்தது தனி உலகமேயாச்சே! சீதா கண் கொட்டாமல் அவளையே கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருந்தாள். தலைக்குமேலே முறுக்கி சுற்றியிருந்த தலைமுடியை அவிழ்த்து விட்டாள் எண்ணை மினுங்க விரல்களில் கோதி நுனி வாங்கி பினைந்தாள்,
மணி நாலரை அடித்தது!
கணகணவென்று பால்காரன் மணி!
பின்னவை இழுத்துப்பார்த்து, விரல் நுனியால் கண் மைக்கோடு வழித்து சரியாக்கி காதோரம் மிஞ்சிய சந்தனப் பவுடரைத் துடைத்து, உதட்டை மடித்துக் கடித்து ஈரமாக்கி, சேலையை இழுத்து, இறுக்கி, வடிவாக்கி, மீண்டும் கண்ணாடியில் – அது சீதாதானா?! உற்றுப் பார்த்தபின் ஓர் படபடப்புடன் பரவசப்பட்டபடி ஜன்னல் கம்பியிலிருந்து கண்ணாடியை எடுத்து சுவற்று ஆணியில் மாட்டுவதற்குள்….
கணகணவென்ற பால்மணி!
முற்றத்தில் கழுவி வைத்திருந்த எவர்ஸில்வர் உருளியைப் பாய்ந்து எடுத்துக்கொண்டு மெட்டி கிலுகிலுக்க கண்ணாடி வளையல்கள் பேச மூச்சு வாங்க ஓடும்போதே.
கண்கண வென்று பால்காரன் மணியடிக்கிறான்!
பால் நுரைக்க அவள் எவர்ஸில்வர் உருளியில் சலசலக்க ஊற்றுகிறான் அவன்.
உதட்டை மடித்து ஈரமாக்கியபடியே கூப்பனை அவனிடம் நீட்டுகிறான். ”அடீ சீத்தீ! அடி ஏ. சீத்தீ!”
“தோ வந்துட்டேன் பாட்டி!”
பாய்ந்து உள்ளே ஓடி வருகிறாள் சீதா.
“இப்படி திங்திங்குன்னு ஓடி வரப்படாதுன்னு எத்தினை தடவெ சொல்லீர்க்கேண்டி நோக்கு!”
“ஏம் பாட்டி கூப்ட்டே?”
“பரபரன்னு குளிச்சோமா நெத்திக்கு இட்டுண்டோமா கோவுல்ல எண்ணெ போட்டோமா ஏதானும் பொஸ்தகத்தெ எடுத்துண்டமான்னு இருக்கவாண்டாமோ பொண்ணுன்னா இப்படியா?!”
“இப்படியான்னா? நா என்ன செய்யல்லே இப்போ?”
“போடி! போயி எண்ணெயெப் போட்டு வெளக்கேத்து கோவுலே இருண்டுன்னா கெடக்கு”
அந்த சந்துக்குள் இருந்த அந்தப் பிள்ளையார் வரப்ரசாதி! ராமசாமி ஐயருக்கு கோவிலோடேயே இருந்த ஒரே வீட்டையும் கொடுத்து கோவிலையும் அந்த கையகலப் பிரஹாரத்தையும் பிரகாரத்தோடு ஒட்டினாப்போல இருக்கும் கிணற்றையும் ஆறுபத்து மல்லிகை, ஜெண்டி, ரோஜா, செடிக்கும்பலையும் ரெண்டு தென்னை, மூணு மா. இப்படி ஒரு மாட்டு கொட்டகை; ஒரு குப்பைக்குழியையும் கொடுத்து தன்னையும் பார்த்துக்கொள்ள ஏற்பாடு பண்ணியிருந்தார் அந்த மூலையடி பிள்ளையார்!
ராமசாமி ஐயர் வக்கீல் குமஸ்தா வேறுபண்ணிக் கொண்டிருந்தார். பிள்ளையாரைக் காலை மாலை ரெண்டு குடம் தண்ணீரில் சரிபண்ணி சீதா முனைந்து கொடுக்கிற மாலையோடு பூஜை பண்ணுவதோடு சரி! கோவில் மற்ற நேரங்களில் கோவிலாக இராது. தூங்குகிறதே பிள்ளையார் முன்னிலையில்தான் – சந்து ஜனம் அத்தனையும் உற்சவம் எடுத்தால் பிள்ளையாருக்கே இடமிருக்காது நிற்க. கோயில் நிலம் எல்லாமே ரெண்டு திண்ணை மூணு திண்ணையில் அடங்கிவிடும்! விசித்திர நிலப்பரப்பில் சந்து மூலையில் பிள்ளையார் நிற்கிறார்!
ஜானுப் பாட்டி மல்லிகைச் செடியோரம் நின்று வாசலைப் பார்த்து மீண்டும்…
“அடீ சீத்தீ… சீத்தி!”
தஞ்சை ப்ரகாஷ் கதைகள்
அகல் விளக்கோடு பாய்ந்து வருகிறாள் சீதா!
ஜானுப்பாட்டியால் நிமிர முடியாது. இடுப்பில் இரண்டு கைகளையும் கொடுத்துத் தாங்கியபடியேதான் சாதாரண நடையே! யாரையாவது பார்ப்பதானால் இடுப்பில் இன்னும் கையை அழுத்தி ஊன்றிக்கொண்டு கழுத்தை இன்னும் வளைத்து நிமிர்ந்து பார்த்து ஆகும். இடுப்பில் வாயு உட்கார்ந்திருக்கிறது எப்போதும்!
கூடத்து கடிகாரம் ஆறு அடிக்கிறது. மல்லிகைக்செடியோரம் பாட்டியின் குரல். சீதா அங்கே போகிறாள்! வாசலுக்கு – கேட் ஓரமாக நின்று சந்தில் யாரையோ எட்டிப் பார்க்கிறாள்..
“அடி சீத்தி! எங்கே போய்டே! இந்தக் கண்ணே எனவும் தெரிஞ்சு தொலைலியே”
“இதோ வந்து விட்டேன்!”
“கோவுல்ல வெளக்கே ஏத்திப்ட்டு எஞ்சியானும் தொலையேன், யாரு கேட்கப் போறா?”
தடவியபடியே கோவில் பிரகாரத்தில் பாட்டி நிற்கிறாள்.
“பாட்டி எங்கேருக்கே எங்கியானும் விழுந்து வெக்காதே”
“வௌக்கு போட்டயோடி”
“ம்! ஆச்சு!””
“வெளிச்சமே நன்னா தெரீவையேடி!”
“நோக்கு தெரியல்லேன்னா… என்னெ என்ன பண்ணச் சொல்றே?” சீதா வாசற் பக்கமாகப்போய் வாசலை ஒரு முறை பார்த்துவிட்டு வந்தாள்.
“எங்கே போனே?”
“இஞ்சதாம் பாட்டி நிக்கறேன்”
“என்னது?”
“உனக்கு வரவர கண்ணு…”
“ஆமாண்டீ புதிசாச் சொல்லு நேக்கு கண்ணு பொட்டைன்னு இருட்டீடுத் தோல்யோ….அதான்..”
“வௌக்கப்போட்டியோ? எண்னெவிட்டு திரிய நன்னா தூக்கிவிட்டிருக்கா?”
“ம் ஆச்சுன்னேனே.”
இருவரும் சுவாமி கும்பிட்டபின் பிரகாரத்தை விட்டு கிணற்றோரமாய் நடந்தார்கள்.
“எங்கையெப் புடிச்சுக்கோ பாட்டீ! திண்ணைல் உட்கார்த்தி வெக்கிறேன்.” “Qem…”
“என்னது வாசல் கேட்டேன்னா ஆரோ தெறகிறாப்ல இருக்கே?”
“ஹம்! யாருமில்ல பாட்டி காத்து அவ்வளவுதான்”
“ஸ்ஹப்பா… ஈச்வரா?”
பாட்டி திண்ணையில் உட்கார்ந்தாயிற்று! சீதா எழுந்தாயிற்று கிளம்பினாள் “எங்கேடி போறே!?”
“பாலெக் காச்சி கொஞ்சம் காப்பி போட்டுண்டு வரேன்
“வாண்டாம் இப்போ மூனு மணிக்குத்தான் ஆச்சே ஒரு தடவை!” “விரதமாச்சேன்னு”
“வாண்டாம் வாண்டாம்”
“பாலையாவது காச்சி உறில வெச்சுப்ட்டு வரேன்”.
பதிலுக்குச் சீதா காத்திருக்க நேரம் ஒப்பவில்லை. சீறிக் கனிந்தது அது. பட்டுப்பாவாடையும், சிற்றாடையும் சலசலக்க உள்ளே போவதைப் பாட்டி பார்த்துக்கொண்டிருந்தாள்.
கிணற்றோரம் வலியன் குருவி சிடுசிடுத்தது.
கிணற்றோரம் நின்ற வாழைப்பட்டையில் உட்கார்ந்திருக்கும் வலியனைப் பாட்டி பார்த்துக் கொண்டிருந்தாள். தென்னை காற்றில் சிலுசிலுத்துச் சிரித்தது. கோவில் பிரகாரத்தைப் பார்த்தபடியே அசையாது உட்கார்ந்திருந்தாள் பாட்டி இந்த ஆடி கடந்தால் பாட்டிக்கு எண்பது வயது ஆகிறது. காலையில் ஜபம் நீராகாரம் மழை காலமானாலும் தலையைச் சிரைப்பதோ பட்டினி கிடப்பதோ அவலைப் போட்டுக்கொண்டு வேளையை ஓட்டுவதோ ஈரத்தோடே ஸ்தோத்திரத்தைச் சொல்லிக்கொண்டு செடிகளுடன் முன்குவதோ தண்ணீர் விடுவதோ எதுவுமே சிக்கலாகாது ஜானுப்பாட்டிக்கு,
உடம்பு ஏனோ வியர்த்தது. முதுகெல்லாம் வியர்வை. மொட்டைத் தலையெல்லாம்கூட முத்து முத்தாக… காற்று வேறு வீசிக்கொண்டிருக்கிறது, இப்படி வேர்க்காதே…
‘ச்சீ என்ன எழவு இது இப்டி சுசகசன்னு வேர்த்துத் தொலையறதே… ராஜாராமன் இன்ஸ்டிட்யூட்லேர்ந்து வருவான். அவனையும் காணோம். இவரு வக்கீல் குமாஸ்தா சாமியையும் காணோம்…. என்ன வேர்வைடாப்பா இது…’ சீலையை உருவி மூகமூகசென்று துடைத்தாள்.
பிரகாரத்தில் யாரோ நடப்பதுபோலத் திமுதிமுவென்று… திண்ணையி லிருந்து பாட்டி இறங்குகிறாள். இருள் கவிந்துவிட்டது – தெருவிளக்குகள் எரிகின்றன. இடுப்பைப் பிடித்தபடியே மூட்டை அசைவதுபோவ அங்கு மிங்குமாக காலை வைத்துக் கிணற்றோரமாக வந்து பிரகாரத்தில் நுழைகிறாள் பாட்டி.
அமைதி! இருள்! ஙொய் என்ற சுவர்க்கோழிகளின் அமைதியுடன் நசுங்கிய சப்தம்-
பாட்டி கண்ணைக் கசக்கியபடியே பார்க்கிறாள்.
பால் குடித்துக் கொண்டிருக்கும்போது தலைதூக்கிப் பூனை பார்ப்பதுபோல வினோத சப்தம்!
கண்ணாடிப் பாத்திரம் சுவரில் உரசுவதுபோல வேறு ஒரு சப்த அனுபவம்! என்ன இது?-
அமைதி! இருள்! சுவர்க்கோழிகளின் இசை!
பாட்டி மெதுவாக பிரகாரத்தில் நுழைந்து அகல் இருக்கும் மாடத்தில் எச்சரிக்கையோடு கை நீட்டுகிறாள், விளக்கு எரிகிறதா? வெப்பம் இல்லையே! பாட்டி அகலில் கை வைக்கிறாள் – அகல் ஜில்லென்று இருக்கிறது. என்ன இருக்கிறது.
ஜில்லென்று……
அமைதி! இருள்! நொய் என்ற… பிரகாரம் ஓரமாக ஏனோ எச்சரிக்கையாக கல்தூண்களை ஒவ்வொன்றாகப் பிடித்து நடந்துவரும் போது….
மூச்சு முட்டுகிறது.. யாருக்கு?
பாட்டி மூச்சுவிடுவதை நிறுத்தி நின்று – பார்க்கிறாள்.
மூச்சுக்கள் மோதும் ஓசை!
கண்தான் மாலைக் குருடு! காதுமா குருடு!?…
மூச்சுக்கள் சீறுகின்றன.
மல்லிகை வாசனை! செடியிலிருந்தா?
இது மல்லிகை வாசனைகூட அல்ல. மல்லிகை நகங்கினால் தலையணையில் புரண்டால் வீசுகிற மல்லிகை நெடி! அப்படியானால் நெடி வேறு வாசனை வேறா?
பாட்டி மூக்கை காவிப்புடவையில் துடைத்துக் கொள்கிறாள். திண்ணையைத் தட்டித்தடவி ஏறி அமரும்போது பாட்டிக்குத் தலை கொதிக்க ஆரம்பித்துவிட்டது. மணி கூடத்தில் ஏழு அடிக்கிறது. இன்னும் ஐந்து நிமிஷம் கழிகிறது.
‘லொட்’ வாசல்கேட் நாதாங்கி தைரியமாகவே ஓசையிடுகிறது. பாட்டியின் உதடு சிரிப்பதுபோல சுழிக்கிறது.
“வாடா ராஜாராமா! கொஞ்ச நாழிக்கி மிந்தி இப்படித்தான் லொட்ன்னு நாதாங்கி சத்தம் கேட்டுது, நீ தானோன்னு நெனச்சிண்டேன்.”
“நான் இப்போதானே வர்றேன்”-
கூடத்தில் பட்டுப்பாவாடையின் சரசரப்பு கேட்கிறது பாட்டி ராஜாராமன் கையை தொட்டு தடவியபடியே-
“ஏண்டாப்பா ஊர்லேர்ந்து ஓம் பெண்டாட்டி இன்னம் வரல்லியே லட்டச் கிட்டர் எழுதிப் போடப்படாநோ?”
“வாரம் ஒண்ணு போட்டுண்டுதானே இருக்கேன்”
“ஆனா பதில் மட்டும் வரமாட்டேங்கறதாக்கும்!”
‘”சேச்சே! வெள்ளிக்கிழமன்னிக்கி வராளாம் நேதிக்கி வந்த லெட்டர்லே எழுதிருக்கா”
கதவு லேசாக சப்தமிட்டது…
“ஏய் சீத்தி போயி கொஞ்சம் காப்பி போட்டுண்டு வரப்டாதோ. இவன் வந்தே காமணியாப் போறதேடீ! இதல்லாம் தெரிய வாண்டாமோ ஒரு பொண்ணுக்கு’
சீதா சிரித்து கும்மளியிட்டபடியே உள்ளே போனாள்-
“ராஜாராமா! எங்கேருக்கே இப்டி பக்கத்ல வாயேன்… இதென்ன சட்டே வழுவழுன்னு இருக்கே.. டெர்லினா… இன்ஸ்டிட்யூட்டெ இப்பெல்லாம் சீக்கிரமா அடச்சுப்ட்டு இஞ்ச வந்துப்டுறயே… டைப் அடிக்கவராள்ளாம் சிரமப் படமாட்டாளோ?…”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல பாட்டி இப்டி ஒன்னெப் பாத்துப்பட்டு மாமாவையும் பாத்துட்டு, வீட்லேயும் யாரு இருக்கா? பொழுது போகவேண்டாமோ”
“கெடுக்கறதுன்னு கெளம்பீட்டே அதுக்குன்னு-!”
“என்ன சொல்றே பாட்டி? என்னது?”
“அதாண்டா கோவில்!! சித்த நாழிக்கி மிந்தி வெளக்கு எரியறதான்னு பாக்க அங்கே வந்தேண்டா மூசுமூகன்னு மூச்சு விட்டா குருடிக்கி எங்க தெரியப்போறதுன்னு நெனச்சிண்டியோ?”
ராஜாராமன் முகம் திடீரென்று வெளிறியது; உடல் திமிறியது; நெஞ்சில் பாம்பாய் பூணல் நெளிந்து சுண்டியது. பாட்டிக்கு அதுவும்-?
“ல்ல பாட்டீ! நான் இப்போதானே…!”
“போதும்டா! ங்கொப்பன் இருந்தானே அவனே இந்தக் கோவிலுக்கு இப்டிக் கும்பிடத்தான் வருவாள்! நீ இப்போ வந்திருக்கே..”
“பாட்டி வந்து…”
“என்னடா வந்து போயி…சீதா கொழந்தையா இருந்தா! ஏன்… அவிஞ்ச கண்ணுல இன்னும் கொஞ்சம் மண்ணெத் தூவிட்டு அவளே இழுத்துண்டு அங்கே போயிட்டே… பச்செ நரம்பு தெரியறாப்ல… கொஞ்ச குட்டி நிகுநிகுன்னு வளர ஆரமிச்சா போதும்டா ஒங்களுக்கு அன்னிலேர்ந்து அவ மூச்சிலேர்ந்து பால் வாசனைபோயி நான் பார்க்க வெரல் சூப்பிட்டிருந்த பயல் அயோக்கிய ராஸ்கல்..”
பாட்டியின் கை ராஜாராமன் தோளில் அழுத்திப் பிடித்திருந்தது. பயத்தில் வெளிறி சிலையாக உட்கார்ந்திருந்தான்.
“நேத்தி வரைக்கும் பச்சக்கொழந்த அவர் வஸ்த்ராபரணம் பண்ணிபட்டே இப்போ இனிமே நெலகொள்ளுமா அவளுக்கு? பதினாறு வயசாகல்லே லோகந் தெளிஞ்சுடுத்து தரிப்பளோ இனிமே – அது எப்டியும் போறது தபார்னா… இனிமே இங்க வந்தே ஒம் பொண்டாட்டிகிட்ட நேரா போய்டும் விஷயம் ஆமா? ல்லேன்னா அவங்கிட்டச் சொல்லி… அப்றம் நடக்கறதே வேற தெரிஞ்சுக்கோ போய்த் தொலைடா.”
ராஜாராமன் எழுந்து போவது தெரிந்தது-
“நேர வீட்டுக்கு தொலை இஞ்ச திரும்பினே… பாத்துக்கோ!” மாமரத்தில் காகங்கள் சிறகடிக்கின்றன.
காற்று அழுத்தமாக வீசுகின்றது. ஓலைகள் சடசடக்கின்றன.
“வெக்கங்கெட்ட கழுதை” தானே பேசிக்கொண்டாள் பாட்டி பட்டுப் பாவாடையும் சிற்றாடையும் சலசலக்க சீதா வந்தாள். கையில் ஆவி பறக்க எவர்சில்வர் டம்ளரில் காப்பி ஆற்றுகிறாள் நுரைக்க நுரைக்க. மணம் முதல் தரம். புதிதாய் வறுத்து போட்டாயிருக்கிறது”
“எங்கே பாட்டி அவர்!”
“அவ-ர் என்னடி! பொய்ட்டானே அப்பவே. ஓகோ காப்பியா? இப்டி வெய்! அதெ நான் சாப்பிடறேனே”
“அப்போ வேண்டாம்ன்னியே”
“ஆமா! இப்போ வேணும்ங்றேன்! சரீ கோவுல்ல மறந்துட்டு வெளக்கேத்தாமலே வந்துட்டே… இப்போ வானும் எண்ணெய எடுத்துண்டு போயி குளூர எண்ண விட்டு திரியப் போட்டு நன்னா ஏத்தி வெச்சுப்ட்டு சாமி நல்ல புத்தியெக் குடுன்னு நன்னா வேண்டிண்டு வாடி!”
“வந்து… அப்போவே… ஏத்தினேன்… காத்துல…”
“அணஞ்சுடுத்தோல்யோ! பரவால்லே போயி ஏத்தி வெச்சு விழுந்து கும்பிட்டு வா-போடி போனயா?”
பாட்டியையே பார்த்துவிட்டு காதுகள் பயத்தில் ஜிவ்வென வாசல் கேட் பக்கமாகப் பார்த்தாள். பிறகு எண்ணையோடு பிரகாரத்தில் ஏறினாள். சுற்றுமுற்றும் பார்த்தாள். கவரோரமாய் நின்று சந்தை எட்டிப்பார்த்தாள். யாரும் இல்லை! யாருமே இல்லை.
எண்ணை போட்டபோது படபடப்பும் பயமும் நெஞ்சில் நிழலாடியது. விளக்கை ஏற்றியபோது யாரோ வரும் சப்தம்! திரும்பினாள்! – பாட்டிதான்!
நமஸ்கரித்தாள். எண்ணை வழிய பிள்ளையார் அவளையே பார்ப்பது போலிருந்தது.
அமைதியாக அவள் தலையைக் கோதினாள் பாட்டி. இருவருமாக திண்ணையில் வந்து உட்கார்ந்தபின் நீண்ட மெளனம் கஷ்டமாய் இருந்தது. ஜானுப்பாட்டி அவளை அருகே இழுத்துப் போட்டுக் கொண்டாள். பாட்டியின் மடியில் தலை வைத்தபடி கிடந்தாள் சீதா! பாட்டியின் கை அவள் தலையைக் கோதியபடியே இருந்தது.
இருட்டில் பிரகாரத்தில் சுவர்க்கோழிகளின் கூச்சலில் கதகதத்துக் கிடந்த அந்தப் படபடப்பு, பயம் எல்லாம் கடந்துபோய் ஜில்லென்ற ஓர் அமைதி!
இருட்டு|-
கழுத்தில் ஏதோ சொட்டுச் சொட்டாக சொட்டுவது போல ஒரு பிரமை! விரல்களால் தொட்டுப் பார்த்தாள் பயத்தோடு, ஆமாம்-
ஜானுப்பாட்டி அழுது கொண்டிருக்கிறாள்.
– அங்கிள், 1971.
– தஞ்சை பிரகாஷ் கதைகள், முதல் பதிப்பு: ஜூலை 2004, காவ்யா வெளியீடு, சென்னை.