சோழ கங்கையின் அலைசடையப்பர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை  
கதைப்பதிவு: December 30, 2025
பார்வையிட்டோர்: 1,359 
 
 

சிதம்பரநாதனைச் சேவிக்க, தேவலோகம் தில்லையில் அணிகொண்டு இறங்கி உள்ளது. அடியார்கள் எல்லாம் சிவரூபம், மன்னர்கள் எல்லாம் நாராயண வடிவம், சான்றோர்கள் எல்லாம் பிரம்ம சொரூபம், குறுநில மன்னர்கள் எல்லாம் இந்திர கோலம், வள்ளல்கள் எல்லாம் சூரியப் பிரகாசம், கலைஞர்கள் எல்லாம் சந்திர அம்சம், செல்வந்தர்கள் எல்லாம் குபேர பிம்பம், வீரர்கள் எல்லாம் அக்கினிக் கொழுந்து. மங்கையர் எல்லாம் அணங்குகள், ஆய்மயில்கள், பாற்கடல் தேவியர் போலக் காட்சியளிக்கின்றனர்.

தில்லையின் வீதிகள் எல்லாம் நதிகளாகப் பெருக்கெடுத்து ஓட, திசையெங்கும் மக்கள் வெள்ளம். அவர்கள் கூட்டம் கூட்டமாய்க் கூடி நகர்ந்து, பூங்கொத்துப்போல கூத்தனை வாழ்த்தும் வாழ்த்தொலியால், தெய்வ ரதவீதி வெண்முரசானது.

ஆனந்தக் கூத்தனைச் சூல்கொண்ட தாய் போல, அசைந்து அசைந்து வருகிறது தில்லைவாணனின் திருத்தேர். விண்ணிலிருந்து மண்ணுக்கும், மண்ணிலிருந்து விண்ணுக்கும் பூமாரியும் பொன்மாரியும் பொழிகிறது. வீதியெங்கெங்கும் வானவில் கோலம். வண்ணப் பொடிகளை அள்ளி வீசி வானத்தையே மறைத்தனர் கன்னியர். நஞ்சை புஞ்சையில் விளைந்த பொன்மணிகளை, வண்ணக் கனி வகைகளை, நவதானியங்களை மலை மலையாய் மக்கள் காணிக்கை ஆக்கினர்.

கதிரோன், ஆனந்தக் கூத்தனைக் காண வழிகேட்டு, தன் கதிர்க் கரங்களை நீட்டித் தில்லை தெய்வ வீதியில் இறைஞ்சுகிறான். மங்கையர் கூந்தலில் சூடியிருந்த செங்கமல மலர்கள், பூந்தேன் வழிய, அந்தக் கதிர்க் கரங்களைப் பற்றி மகிழ்ச்சியில் புன்னகைத்தன.

மங்கையர் சூடிய மலர்கள் வடிக்கும் தேனைச் சேகரிக்கும் பாத்திரங்களாயின, அவர்கள் புனைந்த அணி மணிக் கொண்டைகள். எத்தனை எத்தனை வடிவான கூந்தல் அலங்காரக் கொண்டைகள்! சூரிய வடிவில், சந்திர வடிவில், மலர் வடிவில், கனி வடிவில், பட்சி வடிவில், கோபுர வடிவில், ஆய்மயில் வடிவில் என்று தேன் குடிக்கும் வண்டுகள் வியந்தன.

குழலிசை, யாழிசை, வீணை இசை, பேரிசை, மத்தள இசை, தவிலிசை, மிருதங்க இசை, நாதஸ்வர இசை, உடுக்கை இசையோடு, தேவாரப் பண்ணிசையும், ஆடல் மங்கையரின் சிலம்பிசையும் செவி நிறைய, மக்கள் வாழ்த்தொலியில் நட்டம் பயின்று வருகின்றான் ஆனந்த நடராஜன். அன்னை சிவகாமசுந்தரியின் திருவிழி மலர்கள் குளிர்ந்து களிக்கின்றன.

மலர் மணம், அகில் மணம், சவ்வாது மணம், சந்தன மணத்தோடு, தேன் மணம், நெய் மணம் கமழும் பட்சணத்தோடு, வருவிருந்து பார்த்திருக்கும் சித்ரான்ன மணம். அன்னையர் இடுப்பிலும் மார்பிலும் அணைந்திருக்கும் குழந்தைகளின் வாய்வழியும் பால் மணம் பெருகியோடும் தில்லைத் திருவீதியில், நீறு மணம் மணக்க, கற்பூர மணத்தில் ஆடிவருகின்றான், அடியார் மனம் கோயிலாய் கொண்ட அலைசடை அப்பன்.

குழந்தையின் தளிர் நடை போல கோயில் யானையும், குதூகலத் துள்ளலோடு அலங்காரக் குதிரையும், வீரம் செறிந்த செருக்கோடு கோயில் விடையும், கோமாதாவும் முன்செல்ல, தாதியர் பூத்தூவ, சேடியர் மங்கள தீபம் ஏந்த, மும்முடிச் சோழன், பேரரசர் கோப்பரகேசரி இராஜேந்திர சோழ தேவர் உடையார், பட்டத்து பேரரசிகள் உடன்வர, குருமார்கள், ஆச்சார்யர்கள், ராஜ பரிவாரங்கள் சூழ கூத்தபிரானைக் கண்ணாரக் கண்டு தொழுது, திருத்தேரின் வடம்பிடித்து இழுத்தார். ஆனந்தக் கூத்தனையும் சோழப் பேரரசரையும் கண்ட சோழ வளநாட்டு பக்த கோடிகளின் கண்களில் எல்லாம் அளவில்லா ஆனந்தப் பிரளயம்.

ஆளுடைய பிள்ளையும், அப்பரும், சுந்தரரும், மாணிக்கவாசகரும் தெய்வத் தமிழாய் உலாவரும் திருவீதியில், பஞ்சாட்சரப் படிமேல் வீற்றிருந்து, தமிழைப் படியெடுத்த திருச்சிற்றம்பலம் உடையான் தேர் உலா வருகின்றான். வேத ஒலியையும், யாக ஒளியையும் படையாய்க் கொண்டு, கலியை அழிக்கும் வேதம் பயின்ற அந்தணர் போற்ற, கனக சபையில் நடம்புரியும் தில்லை வாழ் அந்தணர்களுக்கு அருள வீதி உலா வருகிறார்.

அப்பர் பெருமான் அங்கத்தால் உருண்டு தொழுது பக்திப் பயிர் வளர்த்த திருவீதியில், அருள்மழை பொழிந்து வருகின்றார் சிவகாமி நேசர். அப்பர் பெருமானின் பக்தியை நினைத்ததும் திரிபுவன மகாதேவியான வானவன் மாதேவியின் கண்கள் பனித்தன. பணிவுடன் ஆடல்வல்லானின் திருக்கோலத்தை நோக்கி, குஞ்சித பாதத்தை நெஞ்சில் நிறுத்தி, குடிமக்களின் வயிறும் உள்ளமும் நிறையத் தொழுதாள் அந்தச் சோழ குலத் தாய்.

கன்னியர் விழியசைவில் உருகும் காளையரின் இதய நடனம், காளையர் கட்டுடலில் மயங்கும் கன்னியர் மலர்விழி நடனம். அரம்பையர் ஒத்த பாவையர் ஆடும் இன்னிசை நடனம். சித்தத்தைச் சிவன் பால் வைத்த அடியார்களின் பக்திப் பரவச நடனம், அனைத்துக்கும் உயிரும் உருவும் கொடுக்கும் ஆனந்தக் கூத்தனின் அருள் நடனம், சிறப்புடன் நிகழும் செல்வ மாட ரதவீதியில், தன்னில் ஆழ்ந்து உள்ளொளியில் கலந்து உலாவரும் பேரரசர் கோப்பரகேசரி இராஜேந்திர சோழ தேவர் உடையாரை, தன் விழி மலர் தூவி, காதல் ஜோதியால் தீபாராதனை செய்தாள் வீரமா தேவி. தன் இதயக் கோயிலில் குடியிருக்கும் பேரரசரின் பாதம் படும் இடமெல்லாம் தன் இதயம் வைத்து, அவர் நலம் வேண்டி அம்பலத்து அரசனைச் சிந்தித்து வந்தாள் வீரமாதேவி.

பேரரசர் அங்கு இல்லை. தன்னில் ஆழ்ந்திருந்தார். சந்ததம் வந்தது போல அவர் உடல் சிலிர்த்தது. மேலாடை இல்லாத அவர் நெஞ்சம் தீயின் பழம் போலச் சிவந்து ஒளிர்ந்தது. அவர் அணிந்திருந்த முத்து, பவழம், மாணிக்கம், வைர மாலைகள் ஒளிவீசின. ஆடிவரும் ஆடல்வல்லான் அவர் உள்ளத்தில் ஒரு மாபெரும் ஆடலை நிகழ்த்துகிறார். நிகழப்போகும் காலத்தில், நிகழ்த்தப்போகும் செயற்கரிய செயல் ஒன்றைக் காணவிருக்கிறார் பேரரசர் என்பதை உணர்ந்து உள்ளம் ஆனந்தத்தில் நிறைந்தாள் வீரமாதேவி.

வீரமாதேவி விழிகள், மக்கள் வெள்ளத்தில் மீன் என நீந்திக் கொண்டிருந்தாலும், அவள் விழிகள் ஒவ்வொரு கணமும் இராஜேந்திர சோழரின் நெஞ்சத் தடாகத்தில் துள்ளித் துள்ளி விழுந்து களித்தன. படம் விரித்த இராஜ நாகம், கொம்பு நீண்ட செங்காளையின் முகம், கொற்றவை உலாவும் சிம்மம் என்று தனக்குள் வடிவம் கொள்ளும் பேரரசரின் நெஞ்சழகைக் கண்டு கண்டு குளிர்ந்தன அவள் மலர்விழிகள்.

பேரரசர் தனக்குள் கண்டுகொண்ட உன்னதத்தின் ஆனந்த ஜோதியில் பிரகாசித்தார். அவருடைய அருள் வதனத்தில் சிவகலை வளர்ந்தது. கைகளை உயர்த்தி உச்சியில் வைத்து, ஆனந்த நடராஜரை நெஞ்சாரத் தொழுதார்.

தென்னங் குறுத்தால், கன்னல் கட்டுகளால், மாவிலைத் தோரணத்தால், மலர் மாலைகளால், மஞ்சள் இஞ்சிக் கொத்துகளால், முளைப்பாரியால், வண்ண ஓவியச் சீலைகளால் அலங்கரிக்கப்பட்ட ரதவீதியில், இல்லம் தோறும் வண்ண மாக்கோலங்கள் வரைந்து, சாணிப் பிள்ளையார் பிடித்து வைத்து அருகம்புல், பூசணிப்பூ, பரங்கிப்பூ சூட்டி அழகு செய்திருந்தனர் குடும்பத்தார். அடியார்கள் வேண்டியது வேண்டியபடி அருளிட, இல்லம் தோறும் தீபாராதனை ஏற்று அருளினார் சிதம்பரராஜன்.

பக்தர்கள் சபாநாயகரை வாழ்த்திப் போற்றி, அள்ளித் தூவியதில், தன்னை நோக்கி வந்த தெய்வ மலர் ஒன்றைப் பிடித்தாள் வீரமாதேவி. பிடித்ததும் விடுத்ததும் யாரும் அறியொணா வேகத்தில் இராஜேந்திர சோழ தேவரின் வலமார்பில் அடித்தாள். மலர் தனது நெஞ்சைத் தொட்டதும், சுயம் குளிர்ந்த சோழப் பேரரசர் இயல்பாய்ச் சிரத்தைத் திருப்பி முதலில் வீரமாதேவியைத்தான் பார்த்தார். இது போன்ற யுத்த வித்தைகளை அவரிடம் வேறு யாரால் காட்ட முடியும்?

தமிழர் குலம் தழைத்து ஓங்கிய சோழ, சேர, பாண்டிய, பல்லவ நாட்டிலும், கடலால் சூழப்பட்ட ஈழம், கடாரம், ஸ்ரீவிஜயத்திலும், கீழை மேலைச் சாளுக்கிய நாட்டிலும், கலிங்கத்திலும் அவருக்கு முன் ஆயுதம் எடுக்க யாருமில்லை. அவர் முன் யார் ஆயுதம் எடுத்தாலும், அது பூவாக மாறிவிடும். ஆயுதம் எடுத்தவர்கள் அடங்கிப் பணிவார்கள் அவர் திருவடியில்.

நூற்றேழு ஆண்டுகள் பாண்டியன் ஈழத்தில் மறைத்து வைத்திருந்த பாண்டியர்களின் சுந்தர மகுடத்தையும், இந்திர மாலையையும், பாண்டியர் வாளையும் தஞ்சைக்குக் கொண்டு வந்தபோது, அதை உலகம் உணர்ந்து, அவரை வாழ்த்தி வணங்கியது.

பேரரசருடன் அமளிப் போரிலும், ஆயுதப் போரிலும் களம் நிற்கும் கொற்றவை என்றே வீரமாதேவி கொண்டாடப்பட்டாள். தசரதனுக்குக் கைகேயி போல, கண்ணனுக்குப் பாமா போல, இராஜேந்திர சோழ தேவருக்கு வீரமாதேவி என்று மக்கள் வாழ்த்தினர்.

பேரரசரின் பக்தியில் நிறைந்த விழிகள், அன்புத் தேனில் ஊறி கனிந்தன. வீரமாதேவியைப் பார்த்து மெல்லப் புன்னகைத்தார். ‘பளீரென’ ஒரு சிறு வெள்ளிக் கோடு தோன்றி மறைந்தது அவர் இதழ்களில். புவனத்தை இழுக்கும் வசீகரம் அது. அவர் புன்னகையில் மயங்கி, அவர் விழியில் ஊறிய அன்பை உணர்ந்து, தன் அணிமணிகளைச் சீர் செய்வதுபோல, அவர் மட்டும் அறியும் குறிப்பில் புன்னகைத்தாள் வீரமாதேவி.

அவர் கூரிய பார்வையில் புதிய பொருள் ஒன்றை உணர்ந்தாள். அகத்திற்குள் ஆனந்த நடனங்கள் ஆட, “அம்பலத்தரசே!” என்று தனக்குள் சொல்லிக் கனகசபைத் ரத்தினத்தின் தூக்கிய திருவடி, தனது சென்னியில் பதிவதுபோலக் கண்மூடினாள். பேரரசர் ஏதோ ஒரு முக்கியமான அறிதல் ஒன்றைத் தெரிவிக்க விரும்புகிறார் என்பதைப் புரிந்துகொண்டு, மீண்டும் பேரரசரைப் பார்த்துச் சிறு முறுவல் அரும்பத் தேரிழுத்தாள்.

சன்னதித் தெருவில், கீழரதவீதியில் இருந்து புறப்பட்ட திருத்தேர் மேலரதவீதியின் வடக்கு முனையில் தற்காலிகமாக நிலைகொண்டது. இனி மாலையில்தான் உலா செல்வார் நாட்டிய நாயகன். தென்புறம் கொள்ளிடம், வடபுறம் வெள்ளாறு – தில்லை நாயகனுக்குப் புவி அன்னை அணிவித்த அலை மலர் மாலை.

அணிந்த மாலையின் வலப்புற அழகைக் கண்டு களித்து, இடப்புற அழகைக் கண்டு களிக்க முகம் திருப்புவது போல, ஆடல்வல்லான் வெள்ளாற்றை நோக்கி நின்று தன் திருக்கூத்தை நிகழ்த்தினார். எப்போதும் கொள்ளிடத்தின் அழகையே அனுபவிக்கும் ஐயன், சற்றுத் திரும்பி வெள்ளாற்றின் அழகையும் அனுபவிப்பது போலிருந்தது அது. கூத்தபிரான் வடக்கு நோக்கி நின்று அருள்புரியும் கணம் அது. மாமன் இமவானும், மருமகன் பொன்னம்பலக் கூத்தனின் திருமுகம் நோக்கி மகிழும் தருணமாகவும் இருந்தது அது.

பயணத்தில் சந்திக்கும் சுற்றத்தாரின் நலம் அறிய, சற்று நின்று நலம் விசாரிக்கும்போது, திருவிழாவின் புதுமையைக் காண ஆவல் கொண்டு, அன்னை தந்தையின் கையை விட்டு ஓடும் குழந்தைகள் போல, அம்மையப்பனை விட்டுவிட்டுக் கணபதியும் முருகனும் வடக்கு ரதவீதியின் மையம் வரை ஓடி, அம்மையப்பர் வருவதற்காகத் தங்கள் தேரில் காத்திருந்தனர்.

இராஜேந்திர சோழரின் கடற்படைத் தளமாக விளங்கியது கிள்ளைக் கடல். கிள்ளையைச் சேர்ந்த பல நெய்தல் நிலப் பரதவகுலத்தவர், மாலையில் சீர் கொண்டு வந்து ஆடல் அரசரைத் திருமருகனாக வாழ்த்தி வணங்குவார்கள். திருமகளாகிய அன்னை சிவகாமசுந்தரியைப் போற்றி வாழ்த்தி அருள் பெறுவார்கள்.

மாலையில் மீண்டும் தொடங்கியது திருத்தேர் உலா. ஆனந்த நடராஜர் அடியார்களுக்கு அருள்புரிந்து, கீழரதவீதித் தேரடிக்கு வந்து நிலைகொண்டார். கைலாய வாத்தியங்கள் ஒலிக்க, தூப தீப ஆராதனை ஏற்றார்.

பேரரசர் இராஜேந்திர சோழரும், பேரரசியரும், குருமார்களும், ஆச்சாரியர்களும், மடாதிபதிகளும், சிற்றரசர்களும், அமைச்சரும், படைத் தளபதிகளும் சிதம்பரராஜனை வணங்கி, “திருச்சிற்றம்பலம்” என்று ஓதி, ஐந்தெழுத்தை நெஞ்சில் நிறுத்தி அரண்மனை ஏகினர்.

மக்களின் வெள்ளம் பேரரசருடன் தொடர்ந்து போக, தூரத்தில் நின்ற மக்கள் வெள்ளம் வந்து ஆடல்வல்லானைச் சூழ்ந்து “ஹர ஹர மகாதேவா” என்று ஆர்த்தது. செல்லும் மக்கள் வெள்ளமும், தேடி வரும் மக்கள் வெள்ளமும் ஒன்று கலந்ததால், கூத்தபிரான் திருத்தேரைச் சுற்றி ஆரவாரப் பிரளயச் சுழல் உருவானது. அந்த வெள்ளச் சுழலில் களித்து நீந்தும் ஆனந்த மீன்களாயினர் பக்தர்கள். அங்கே கடலைக் கடைந்து பக்தி அமுதம் பெருகச் செய்யும் மந்திரமலை போல் நின்றது ஆனந்தக் கூத்தனின் ஆதிரை நன்னாள் திருத்தேர்.

தில்லையாகிய பொய்கையில் பூத்த தெய்வ மலர் என நின்ற திருத்தேர்களைத் தொட்டு வணங்கி விழிமூடிக் கனிந்து தியானத்தில் ஆழ்ந்தான் கதிரவன் மேல் திசையில்.

‘நாள்’ என்னும் தேவதை தன் ஒளி ஆடைகளைக் கலைந்துவிட்டு, இரவாடையை உடுத்தத் தொடங்கினாள். அதில் சிறியதும் பெரியதுமாய், ஒன்றாய் பலவாய்க் கொத்துக் கொத்தாய்ப் பூத்தன தீபமணிப் பூக்கள். மார்கழித் திருவாதிரைத் திருநாளில் தில்லையின் அழகில் மயங்கிய நிலா நங்கை, தன் முழு முகத்தையும் காட்டிப் புவனத்தைக் குளிர்வித்தாள். ஆனந்த நடராஜர் அன்னை சிவகாமசுந்தரியுடன் ஆதிரை மகா அபிஷேகம் கொண்டருள ஆலயத்திற்கு எழுந்தருளினார்.

அம்மையப்பர் ஆலயத்திற்கு எழுந்தருளியதும், கீழரதவீதியில் புதிதாய் அமைந்த தரிசனக் கடைகளில் மக்கள் கூட்டம். கீழரதவீதியில் இரவு முழுவதும் நாட்டியாஞ்சலி நடந்தன. மேலரத வீதியில் நாடகங்கள் நடந்தன. தெற்குரத வீதியில் சொற்பொழிவும், பட்டமன்றமும் நடந்தன. வடக்குரத வீதியில் விளையாட்டுகள் நடந்தன. இன்னிசை கச்சேரி கோயில் வளாகத்தில் நடந்தன. வேதம் ஒலிக்க லட்சார்ச்சனை நடந்தது அம்மையப்பருக்கு.

ஆண்டுக்கு ஆறுமுறை மட்டும் மகா அபிஷேகம் காணும் பொன்னம்பலவாணர், முதலாம் பராந்தக சோழர் பொன் வேய்ந்த பொன்னம்பலத்தில் இருந்து நான்கு முறையும், ஆயிரங்கால் கொண்ட அலங்காரப் பந்தலில் ஆனித் திருமஞ்சன மகா அபிஷேகமும், மார்கழித் திருவாதிரை மகா அபிஷேகமும் காண்பார்.

வண்டி வண்டியாய் அபிடேகப் பொருட்கள். குடம் குடமாய் பால், தயிர், நெய், தேன், பன்னீர். கூடைக் கூடையாய்த் திரவியப் பொடி, மஞ்சள் பொடி, திருநீறு. சந்தனம், குலை குலையாய் இளநீர் மற்றும் மலை மலையாய் மலர் வகைகள், வகை வகையாய் மாலைகள் ஆலயத்திற்குள் சென்றன.

ஆனந்த நடராஜப் பெருமான், இரவு மூன்றாம் யாமத்தில் தொடங்கி விடியும் வரை ஆருத்ரா மகா அபிஷேகம் கண்டு அருளினார். அபிஷேகம் கண்டு, அணிமணிகள் புனைந்து ஆயிரங்கால் அலங்காரப் பந்தலில் அன்னையுடன் ராஜ அலங்காரக் கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பக்தர்கள் உடலாட, அடியார்கள் தலையாட, அருளாளர் உளமாட, தொழுபவர் வினையோட, உச்சிக்காலத்தில் அன்னையுடன் ஆனந்த நடராஜர் நடன தரிசனம் காட்டி, கனகசபைக்கு ஆட்சி செய்யச் சென்றார்.

பேரரசர் தன் விழியின் குறிப்பில், தனக்குச் சொல்லவந்த செய்தி என்ன? என்பதை அறிய ஆவலாய், தனது தில்லை அரண்மனையில் காத்திருந்தாள் வீரமா தேவி.

மும்முடிச் சோழர் அந்தப்புரம் வருவது அத்தனை எளிதான காரியமா? பேரரசர் நினைவில் வீரமா தேவியின் நெஞ்சம் நெகிழ்ந்து களித்தது. உள்ளம் நடக்கப் போவதை நினைந்து உருகியது. உடல் நடந்தவைகளை எண்ணி மகிழ்ந்தது.

மார்கழி ஆருத்ரா தரிசனம் முடிந்து சில நாட்கள் கழிந்தன. அமாவாசை வானில் பௌர்ணமி பூத்ததுபோல, ஒரு நாள் இரவு வீரமா தேவியின் அரண்மனையை அடைந்தார் பேரரசர் இராசேந்திர சோழர்.

“வெற்றியை நிலைநாட்டியவரும், அனைத்து வகை வெற்றியின் வடிவானவரும், சமுத்திரத்தைக் கலங்களால் அளந்தவரும், புவனத்தைப் பூவாக்கி அதில் திருமகளைக் கொலுவிருக்க வைத்தவரும், அரசர்களுக்கெல்லாம் அரசராகிய பேரரசரும், மும்முடி சோழரும், என் இதயநாயகரும் ஆகிய பண்டித சோழரை வணங்குகிறேன்,” என்று வீரமாதேவி தன் அந்தப்புரத்தில் எழுந்தருளிய பேரரசரின் திருவடிகளை வணங்கினாள்.

வணங்கிய வீரமாதேவியை அள்ளி அணைத்துத் தூக்கித் தன்மடிமீது அமர்த்தி, அன்னத்தின் இறகாலான மஞ்சத்தில் அமர்ந்தார் பேரரசர். தேவி ஒரு குழந்தைபோல் அவர் இடது தொடையில் அமர்ந்து, தனது வளைக்கரங்களை அவர் கழுத்தில் மாலையாக அணிவித்து, அவர் திருமார்பில் முகம்புதைத்தாள். திருத்தேர் அன்று செங்கமல மலரால் தீண்டியதற்கு ஒத்தடம் தருவதுபோல், தங்கக்கேடயம் போன்ற அவர் திருமார்பில் முத்தமிட்டாள்.

வீரமாதேவி இராசேந்திரசோழ தேவரைத் தனிமையில் சந்திக்கும் போதெல்லாம் இப்படிக் குழந்தையாகி, மாலையாகி மகிழ்விப்பாள்; மகிழ்வாள். பேரரசர் அவளின் குழந்தைமையை அனுபவித்து மகிழ்வார். “அவளா இவள்?” என்று எண்ணி வியக்கவும் செய்வார்.


தில்லை நடராசரின் தூக்கிய திருவடிக்கு, முதலாம் பராந்தக சோழனின் மூத்த மைந்தர், இளவரசர் இராசாதித்த சோழரால் அணிவிக்கப்பட்ட சிலம்பு போன்றது வீரநாராயணன் ஏரி. அது கழனிகளையும் காடுகளையும் மணியெனக் கொண்ட நீராலான சிலம்பு.

ஏரிக்கரையின் மேல் தன் குதிரையில் தனியனாக, வீரநாராயணபுரத்திலிருந்து தில்லைக்குச் செல்கிறான். “மும்முடிச் சோழனின் களிறு,” “மார்த்தாண்ட நாயகன் பஞ்சவன் மாராயன்” – இளவரசன் மதுராந்தகன்.

கடம்பூர் சம்புவராயர் அரண்மனையில் நடந்த பொங்கல் திருவிழாவில் நடந்த ஆடல் பாடல்களைக் கண்டு களித்து, வில், வேல், வாள், மல்யுத்தப் போட்டிகளையும், ஏறுதழுவுதல் விளையாட்டையும் பாராட்டிப் பொற்கிழி வழங்கி கௌரவித்து வருகிறான் சோழகுல இளவல் மதுராந்தகன்.

ஏரியின் வலப்புறம் பொன்நெல் வயல்கள், வாழைத் தோட்டங்கள், வெற்றிலைக் கொடிக்கால்கள், மஞ்சள், இஞ்சி, கன்னல் கழனிகள், தொடுவானம் வரை அவன் கண்களைக் குளிர்வித்தன.

அறுவடைத் தாள்களை மாடுகளையும், யானைகளையும் மிதிக்க விட்டுப் போரடித்தனர். நெல்மணிக் குவியல்கள் பொன்மலையெனக் குவிந்திருந்தன களத்துமேட்டில். மூங்கில் முறத்தில் பொன் அள்ளி வீசுவதுபோல் நெற்குவியல்களை அள்ளி வீசி எறிந்து தூற்றினர் உழவர்கள்.

சாலையின் இடப்புறம் அலையில்லாக் கடலென விரிந்த ஏரி. மதலையின் முடிவண்ணத்தில் ஏரியின் நீர். சிறுசிறு அலைகள் காற்றில் தோன்றும்போது நாகக் குஞ்சுகள் நெளியும் நளினம். மேல்வானின் சூரிய ஒளியில் தங்கக் காசுகள் அலைந்தன ஏரியில்.

ஏரியில் முதியவர்கள் சிறுசிறு வல்லத்தில், மூங்கில்களை இணைத்துக் கட்டிய சிறு தெப்பத்தில் சென்று, கைவலையை வீசி மீன்களைப் பிடித்தனர். அவர்கள் உடன் சென்ற சிறுவர்கள் மீன் கூடையைப் பாதுகாத்தார்கள். ஒரு சிறுவனின் மீன் கூடையிலிருந்து கெண்டை ஒன்று துள்ளி ஏரியில் விழுந்து தப்பித்தது. முதியவர் வெற்றிலைச் சாறு ஊறிய வாயைத் திறக்காமல் சிரித்தார். சிறுவன் முகத்தைத் திருப்பிக்கொண்டான். மதுராந்தகனின் இதழ்களில் புன்னகை பூத்தது.

ஏரியில் வண்ண வண்ண ஆடைகள் மிதப்பதுபோலப் பறவைகள் கூட்டம் கூட்டமாய்த் தண்ணீரில் மிதந்தன. மைக்கூடு நகர்வதுபோல இரண்டு வெண்மார்புக் கானாங்கோழிகள் நீரில் நீந்தின. வெள்ளை ஆடை அணிந்து அதன் மேல் கறுப்பு அங்கி போர்த்தியவர் நகர்வதுபோல் இருந்தது. அவைகள் கழுத்தைத் திருப்பும்போதெல்லாம் கறுப்பு வெள்ளை நடனம். இமைப்பொழுதில் அவைகள் நீருக்குள் மூழ்கி வெகுநேரம் காணாமல் மறைந்தன. இளவரசன் சலித்து விழிகளை விலக்கியபோது, இரண்டும் வெகு தொலைவில் நீரைப் பிளந்து எழுந்து தலையை உயர்த்தி ஒன்றை ஒன்றுப் பார்த்து, மீண்டும் நீருக்குள் மூழ்கின. இரண்டும் ஒரே நேரத்தில் மூழ்கி, ஒரே நேரத்தில் எழுந்து மதுராந்தகனை வியப்படைய வைத்தன.

நீரில் மிதந்தப் பறவைக் கூட்டத்தின் மேல் யாரோ கண்ணுக்குத் தெரியாத வலையை வீசி இழுப்பதுபோல அனைத்துப் பறவைகளும் பதறி மேலே பறந்து ஏரியை மறைத்தன. அவைகள் விருப்பம்போலத் தனித்தனியாகப் பறந்தாலும், அந்தக் கணத்தில் அவைகள் அனைத்தும் ஒரு கணிதச் சூத்திரத்தில் பொருந்தி, ஒற்றைச் சிறகால் ஆனதுபோல் பறந்து சென்றன.

சிறிது தூரம் பறந்ததும், அவைகள் அனைத்தும் கூடி சிவகுமரன் செலுத்திய நீண்ட கைவேல் செல்வதுபோன்ற காட்சியில் பறந்தன. முன்னால் ஒரு பறவை கூர் அலகை நீட்டியபடி பறந்தது. வேலின் இலைப்பகுதியை பல பறவைகள் கூடி உருவாக்கின. வேலின் நீண்ட தண்டுப்பகுதியை பல பறவைகள் கூடி உருவாக்கின. முன் பறவையையும் இறுதிப் பறவையையும் ஒரே நோக்கில் பார்க்க முடியாத நீளத்தில் அவைகள் பறந்தன.

மதுராந்தகன் தனது குதிரையை இழுத்து நிறுத்தி, அவைகளின் சித்திரக் காட்சியை மனதில் நிறுத்தி ஆலோசித்தான். பறவைகள் இருந்த இடத்தில் வீரர்களை நிறுத்தினான். ‘வேல் வியூகம்’ உருவானது. மதுராந்தகனின் முகம் மலர்ந்து கண்கள் பளிச்சிட்டன.

வீரநாராயணன் ஏரியின் குளிர்ந்த மாலை நேரக் காற்று இளவரசன் உள்ளத்தில் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. மாலைக் கதிரவனின் ஒளியில் ஏரியின் வண்ணம் மாறிப் பொன் அலைகள் ஒளிர்ந்தன. இளவரசன் உச்சிக் கொண்டை போட்டிருந்தான். மார்பை மறைக்கக் கழுத்தைச் சுற்றிப் போட்டிருந்த பருத்தித் துண்டு காற்றில் பறந்து மார்பைக் காட்டியது. சூரிய ஒளி பட்டு மார்பில் பொன் மின்னியது. குதிரையில் பயணிக்கும் சிங்கம் போல் இருந்தான் இளவரசன்.

இளவரசனுக்குப் பின்னால் தூரத்தில் வந்து கொண்டிருந்த குதிரை வீரன், இளவரசன் குதிரையைப் பின்னுக்குத் தள்ளி முன்னேறினான்.

முன்னேறியவன் சென்று கொண்டே இருந்திருந்தால் தவறு ஒன்றும் இல்லை. முன்னேறியவன் தனது குதிரையின் கடிவாளத்தை இழுத்து, குதிரையை இரண்டு காலில் நிறுத்தி, இளவரசனைப் போட்டிக்கு அழைப்பதுபோல், இளவரசனைத் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தான். போட்டிக்குத் தயாரா? என்பது போல விழிகளை அசைத்துத் தனது குதிரையைப் பறக்கவிட்டான். அந்த விழிகளில் இருந்த துள்ளல், குளிர்ச்சி மதுராந்தகன் உள்ளத்தில் மின்னலைப் பாய்ச்சியது. அவன் செய்கை மதுராந்தகன் உள்ளுக்குள் முள் சாட்டையால் இழுத்ததுபோல், சுரீர் என்று சுட்டது.

இளவரசனுக்குள் சுருண்டு கிடந்த “நான்” என்ற இராசநாகம் சீறி எழுந்து எரிச்சுடரென ஆடியது. மதுராந்தகன் தனது குதிரையின் விலாவை ஓங்கி மிதித்தான். இளவரசன் குதிரை மேகத்தில் மின்னலெனப் பாய்ந்தது.

சப்த கன்னியர் அழைப்பு. படையல் வைத்து, கரகம் தூக்கி, கரகத்தைத் தண்ணீரில் விட ஏரிக்கு வந்த கிராம மக்கள், பம்பை சிலம்பு ஒலிக்க, கன்னிகளின் சாமி ஆட, கும்பி அடித்து, கும்பிப் பாடலுடன் கரையில் கூடி மகிழ்ந்தனர்.

முன் சென்ற வீரனின் குதிரை, “வந்து பார், தொட்டுப் பார்” என்று பறந்தது.

வீரர்களின் குதிரை ஓட்டத்தில் மகிழ்ந்து, கைகளைத் தட்டியும், செயகோஷம் செய்தும் வீரர்களை உற்சாகப்படுத்தினார்கள் கிராம மக்கள். குதிரையில் பறப்பது தங்கள் இளவரசன் என்பதை மக்கள் அறிய முடியாத ஒப்பனையில் இருந்தான் இளவரசன் மதுராந்தகன்.

சினம்கொண்ட இளவரசன் தன் சாட்டையை எடுத்து வீசி, குதிரை வீரன் முதுகுத்தோலை உரிக்க நினைத்தான். உள்ளம் ஒப்பவில்லை. அவனின் குதிரை ஓட்டும் லாவகத்திலும் வேகத்திலும் மனம் மகிழ்ந்தான்.

அவனைச் சோழப் படையில் சேர்க்க நினைத்துச் சற்று அவனுடன் விளையாட நினைத்தான். தன் குதிரையில் இருந்து எழுந்து, மற்றவன் குதிரைக்குப் பாய்ந்து குதிரை வீரனை அள்ளித் தூக்கி எறியப் போனான்.

“இளவரசே!” என்று அந்தக் குதிரை வீரன் இளவரசன் கழுத்தை இருக்கமாகக் கட்டிக்கொண்டு அவன் நெஞ்சோடு ஒட்டிக்கொண்டான். அவன் தலைப்பாகை அவிழ்ந்து காற்றில் பறந்தது. தலைப்பாகைக்குள் மறைந்திருந்த கொண்டை அவிழ்ந்து கூந்தல் அலை அலையாய் காற்றில் அலைந்து மதுராந்தகன் முகத்தில் படிந்து மணத்தது. கொதித்திருந்த இளவரசன் நெஞ்சில் குளிர்மழை. அவன், அவன் அல்ல; அவள் – வீரமாதேவி.

சோழ சேனாதிபதி மதுராந்தகன் பரகேசரி மூவேந்த வேளானின் தங்கை.

அவர்கள் அணைத்துக்கொள்ளும்போது யாரும் பார்க்காமல் இருக்க, மேற்குத் திசையில், அனைவர் விழிகளுக்கும் ஒளிகொடுக்கும் சூரியன் தன் விழியை மூடினான். ஏரிக்கரையின் மரங்களின் கிளைகள் அவர்களை மறைத்துத் திரையென விழுந்தன.

மதுராந்தகனுக்குத், ‘தான்தான் இளவரசன்’ என்று எப்படி அறிந்து வந்தாள் என்ற வியப்பு. பிரமதேசத்தில் இருந்து வீரநாராயணபுரத்திற்குத் தேடி வந்திருக்கிறாளே என்ற பரவசத்தில், அவள் விழிகளுக்குள் தன்னைத் தேடினான். அவள் அவனைத் தன் இதழ்களால் ஒத்தி எடுத்து இதயத்துக்குள் மறைத்துக்கொண்டு, தான் என்பது இல்லாமல் போனாள்.

அன்று முதல் வில், வாள், வேல் தாங்கி, கரி, பரி ஏறி இளவரசன் மதுராந்தகன் மெச்ச இணையாகக் களம் நிற்பவள். இமைக்கணமும் மறவாமல் அவனைத் தன் உளம் வைத்தவள்.


வீரமாதேவியின் பழைய நினைவுகளில் இருந்து விடுபட்ட பேரரசர், அவளே பேசட்டும் என்று அவள் இடும் முத்த மழையில் குளிர்ந்து கொண்டிருந்தார். விளக்கின் நெய் மணமும், தூபத்தின் அகில், சந்தன மணமும், மயிலிறகால் நீவுவதுபோல அவர்கள் நாசியில் இழைந்தது.

சாளரத்தின் வழியாக வந்த நந்தவனத் தென்றல், விளையாட்டுக் குழந்தைகள் கொண்டுவரும் கைப்பொருளை எறிந்துவிட்டுத் திரும்பிச் செல்வது போல, இரவில் மலரும் பவழமல்லி மலர் மணத்தைச் சுமந்து வந்து அறையில் தெளித்துவிட்டு ஓடியது.

தாய் மடியை முட்டும் கன்று போல, பேரரசரின் நெஞ்சில் முட்டி முகம் தேய்த்த வீரமா தேவி, நாணத்துடன், “உங்கள் அணைப்பில் இருக்கும்போது இளமை கடந்து அன்னையாகிவிட்டேன் என்பதே மறந்துவிடுகிறது சுவாமி,” என்றாள்.

பேரரசர் எதுவும் சொல்லாமல், வைரமணி போன்ற தன் விழிகளில் குறும்பு பொங்க, இதழ் மலர, தனது முகத்திற்குக் கம்பீரம் தரும் பெரிய மீசையை வலது கையால் நீவியபடி அவளைக் கனிவுடன் நோக்கினார்.

தனது ஆடை அணிகலன்களைச் சரிசெய்துகொண்டு அரசர் மடியில் இருந்து இறங்கி மஞ்சத்தில் அமரப் போனாள் வீரமாதேவி. “நீ மடியிலேயே இரு, இனியவளே,” என்றார்.

“உடலுக்குத்தான் அகவை கூடுகிறது; இதயத்திற்கு அல்ல தேவி. அகவை கூடக் கூட, பயமும் பரபரப்பும் குறைந்து நுட்பங்கள் விளங்குகின்றன. அதனால்தான் இதயம் காதல் நுட்பங்களை ஆய்ந்து ஆய்ந்து அனுபவிக்க விழைகிறது. ஆகவேதான், அகவை கூடக் கூடக் காதல் இனிக்கிறது. காதலை உடலின் தேவையாக மட்டும் பிழையாகப் பொருள் கொள்பவர்கள் காதலில் திளைக்க முடியாது, தேவி,” என்றார்.

வீரமாதேவியின் நெற்றியில் விழுந்து, அவள் கண்களை மறைத்த சுருள் குழல் கற்றையை ஒதுக்கி அவள் முகம் நோக்கி மகிழ்ந்தார். நாணத்தில் விழிகளைத் தாழ்த்திக்கொண்ட வீரமா தேவி, “அதனால்தான் காதலுக்குக் கண்ணில்லை என்கின்றார்களா? அரசே!” என்றாள்.

காதல் விளையாட்டில் அவள் கூந்தலில் சூடியிருந்து அவிழ்ந்து தொங்கிய மல்லிகைப் பூச்சரத்தை இழுத்து, அவளின் சூரியப்

பிரபை மணிக் கொண்டையைச் சுற்றி முடித்தார். கலைந்த அவளின் நெற்றித் திலகத்தைத் திருத்தி அணிசெய்தார்.

தனது மார்பில் அப்பியிருந்த குங்குமத்தையும் சந்தனத்தையும் விரல்களால் தொட்டு அவள் குழிவிழும் கன்னத்தில் சித்திரம் வரைந்தபடி, “தேவி! கண் என்றால் என்ன?” என்றார்.

“கண் என்றால், கண்தான். அரசே!” என்று தன் மையெழுதிய வீணை போன்ற விழிகளில் ஒன்றை மட்டும் மூடித் திறந்தாள். புருவங்களை அபிநயத்துடன் அசைத்து, இமைகளைப் படபடவென்று பட்டாம்பூச்சிபோல் அடித்துக்காட்டினாள். பேரரசர், அந்த இமை நடனத்தில் மயங்கி விழி விரியச் சிரித்தார்.

“இந்தக் கண் அல்ல கண்ணே; அறிவுக்கண். தெய்வப்புலவர் கூறுவதைக் கவனி: ‘கண்ணுடையோர் என்பவர் கற்றோர்’. கற்பதால் வரும் அறிவுக்கண். அந்தக் அறிவுக்கண் காதலுக்குத் தேவை இல்லை என்பதால்தான் அந்தப் பழமொழி.”

“அப்படியென்றால், காதலர்கள் அனைவரும் அறிவற்றவர்களா? அரசே!” என்று குழந்தையாகச் சிரித்தாள்.

“இதயம் இருப்பவர்கள், தேவி.”

“விளக்கமாகச் சொல்லுங்கள், அரசே!”

“அறிவு, அறியும் வரைதான் பயணிக்கும்; அறிய முடியாத இடத்தில் நின்றுவிடும். அதாவது குருடாகிவிடும். இதயம் அடையும்வரை பயணிக்கும்; அடைந்தே தீரும். அதனால்தான் காதலுக்குக் கண் இல்லை என்கிறோம்; ஆனால் இதய இருப்பை உணர்கிறோம்,” என்றவர், “அதனால்தான் காதலில் முத்தமிடும்போது கண்கள் மூடிக்கொள்கின்றன. இதயம் எம்பி குதிக்கிறது. காதலும் பக்தியும் அறிவால் அல்ல, இதயத்தால் அடையக் கூடியவைகள், இனியவளே!” என்று அவளின் சந்தனக்குழம்பு பூசி, தாழம்பூ மகரந்தப்பொடி தூவிய மஞ்சள் சாந்து போன்ற கன்னத்தில் முத்தமிட்டார். வீரமா தேவி முயற்சி செய்தும் முடியாமல் கண்களை மூடிக்கொண்டாள். அவர் வெடித்துச் சிரித்தார்.

நாணம் வீரமாதேவியைக் குழந்தையாக்கி, மீண்டும் அவர் நெஞ்சில் முகம் புதைக்க வைத்தது. அவள் குழந்தையாக மீண்டும் பேரரசர் நெஞ்சத்தில் முத்தமிட்டாள். பேரரசர், வீரமா தேவியின் முகவாயை தனது வலது கரத்தால் தூக்கி ஏந்தி நோக்கினார். அந்தக் கணத்தில் அவள் முகம் வாளின் நுனியில் பூத்தப் பூபோல இருந்தது.

“பெண்கள் இரண்டு வகை, இனியவளே! ஒரு வகையினர் குழந்தையாக இருக்கும்போதே அன்னை என்று உணர்த்துபவர்கள். இரண்டாம் வகையினர், மூதன்னையாகிய பின்னும் குழந்தை என்றே நம்பச் செய்பவர்கள். தேவி, நீ இரண்டாம் வகை,” என்றார். அவள் சிணுங்கினாள்.

பேரரசரின் சிரத்திற்குப் பின்னால் இருந்த வெள்ளி நெய் விளக்கின் தீப ஒளியில் பேரரசர் சிவந்த சிற்பம்போல் தோன்றினார்.

“சாமி! ஆடவல்லான் ஆதிரை தேர்த்திருவிழாவில் உங்கள் கண்களில் ஓர் அற்புதக் குறிப்பை உணர்ந்தேன். சோழப் பேரரசு விரிவுறும் ஆனந்தம் அதில் இருந்தது. அதைத்தான் விளக்க வந்திருப்பீர்கள். அதைவிட்டுச் சிறுகுழந்தைகள் ஆகிவிட்டோம். என்ன கட்டளை? கட்டளை இடுங்கள்,” என்றாள்.

“கங்கையை வெற்றி கொள்ள வேண்டும், தேவி! அதற்கான ஆராச்சி, அதனை செயல்படுத்தும் செயல்களில் ஈடுப்பட்டு இருந்தேன். அதனால்தான் உன்னைப் பார்க்க வரக் காலதாமதமாகிவிட்டது,” என்றார்.

மஞ்சத்தில் இருந்து குதித்த வீரமாதேவி, “வெற்றிவேல்! வீரவேல்!” என்று வாள் ஏந்தியவள் போல் கையை உயர்த்தி நிமிர்ந்து நின்றாள். சற்றுமுன் தன்னிடம் விளையாடல் புரிந்த குழந்தையா இவள்? மாலை என்று தொட்டால் சீறி, ஆள் உயரத்திற்கு எழுந்து படம் விரித்து நிற்கும் இராசநாகம். பாயும் சிங்கத்தின் மேல் துள்ளி ஏறும் கொற்றவை.

“இவளுடன் உரையாடும்போது, ‘இந்த பேதைக் குழந்தைக்கு யார் வீரமா தேவி என்று பெயர் சூட்டினார்கள்?’ என்று நகைக்க வைக்கிறாள். போர் என்று வந்துவிட்டாலோ, ‘வீரமா தேவி என்ற பெயர் வைத்தவர்களைப் புகழ வைக்கிறாள்’” என்று மனதிற்குள் எண்ணியபடி, “நால்மடி பீமன், தளபதி அரையன் இராசராசன் என்னும் விக்கிரமசோழச் சோழியரையன், உனது சகோதரன் சேனாதிபதி மதுராந்தகன் பரகேசரி மூவேந்த வேளான்… இவர்களுடன் தாங்களும் செல்கின்றீர்கள், தேவி! யானும் தாங்களுடன் வந்து கலந்துகொள்கின்றேன்,” என்றார்.

“உத்தரவு, பேரரசே!” என்று வணங்கினாள் வீரமா தேவி.

“அடியாளின் ஆலோசனை ஒன்றை, பேரரசருக்கு விண்ணப்பிக்க அனுமதி வேண்டும்,” என்றாள்.

“ஆகட்டும், தேவி,” என்றார்.

“பேரரசர் எங்களுடன் வந்து துங்கபத்திரை நதிக்கரையில் உள்ள படைவீட்டில் தங்கி, எங்களுக்கும் சோழப் பேரரசுக்கும் காவல் நிற்க வேண்டும்,” என்றாள்.

“நன்று சொன்னாய் தேவி! சுகமே சூழ்க. வெற்றி பெறுவோம்,” என்றார். வீரமாதேவியின் முகம் மலர்ந்து குருதி ஏறி, தீப ஒளியில் சிவந்து சுடர்ந்தது.

“கங்கையை வெற்றிகொண்டதன் நினைவாக, விஷ்ணுபுரம் என்னும் அரியிலூருக்குக் கிழக்கே, வீரநாராயணபுரத்திற்கு மேற்கே, நமது புதிய தலைநகரை நிர்மாணிக்கப் போகிறேன். அதற்கு ‘கங்கைகொண்ட சோழபுரம்’ என்று பெயர் கொடுக்க இருக்கிறேன். அதற்கு வங்க மன்னன் மகிபாலனை வென்று கங்கையை வெற்றி கொள்வோம், தேவி,” என்றார்.

“சோழர்களின் தலைநகராக விளங்கிய புகார், உறையூர், பழையாறை, தஞ்சாவூர் போன்று, நம் சோழ இராசசக்கரம் இனி கங்கைகொண்ட சோழபுரத்தை அச்சாணியாகக் கொண்டு சுழலும். அதன் சுற்றுப்பாதை அளவிட முடியாத பரப்பளவு கொண்டதாக இருக்கும். காலச்சக்கரம் இனி கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்து புதுமைகளை உலகுக்குக் கொண்டு செல்லும், தேவி,” என்று, தனது அங்கவஸ்திரத்தை எடுத்து, போரின் நினைவில் முகம் ஒளிர நின்ற வீரமாதேவியின் இடையைச் சுற்றி, மாலைபோல் போட்டு, இழுத்து, தன்னோடு இணைத்துக்கொண்டார். வீரமாதேவி குளிர்ந்து அரசருக்கு அருகில் மஞ்சத்தில் அமர்ந்து புன்னகைத்தாள். சொக்கப்பனை ஒன்று விளக்கின் தீபமாகியதுபோல மங்களமாய் ஒளிர்ந்தது அவள் முகம்.

“வெற்றியும் தோல்வியும் எண்ணங்களில் இருந்தே உருவாகிறது. நீங்கள் எண்ணினால் வெற்றிதான். வெற்றியைத்தான் நீங்கள் எண்ணங்களாகப் பெறுகிறீர்கள். நமது படை எப்போது புறப்பட வேண்டும்? கங்கைவரை புலிக்கொடியும், புலிக்குட்டிகளும் நிரம்பி வளர வழிவகுப்போம், பேரரசே!” என்றாள் உணர்ச்சிப் பொங்க.

போரின் நினைவால் அவளால் உட்கார முடியவில்லை. மஞ்சத்தில் இருந்து குதித்து மஞ்சத்தைச் சுற்றி வந்தாள். அவள் கால் சிலம்பு ‘களீர் களீர்’ என ஆர்த்தது. அவளுக்குள் இருந்து ஆடல் புரிந்துகொண்டிருந்த குழந்தை பேரரசருக்குள் சென்று மறைந்துகொண்டதா? அவளுக்குள் மறைந்திருந்த கொற்றவை வெளிப்பட்டுத் தனது சுய சொரூபத்தைக் காட்டுகிறாளா? பேரரசர் அமைதியாக அமர்ந்து வீரமா தேவியைப் பார்த்தார்.

பேரரசர் வீரமாதேவியைப் பார்த்தாலும், அவர் பார்வை அவளைத் துளைத்து, அப்பால் முடிவிலியைக் காண்பதுபோல ஒளிர்ந்தது. “வங்க மன்னன் மகிபாலனை வென்று, யானைப் பாலம் அமைத்து, கங்கையைக் கடந்து, நமது புலிக்கொடியை இமயத்தில் ஏற்றுவேன். வென்ற மன்னர்களின் தலையில், புனித கங்கை நீரை ஆயிரம் பொற்குடங்களில் சுமந்து வரச் செய்வேன். நம் புதிய தலைநகரில் எடுக்கவிருக்கும் சோழீச்சரப் பெருமானுக்கு கங்கை நீரால் குடமுழுக்காட்டி, தலைநகரில் பெரிய ஏரியை வெட்டி அதில் கங்கை நீரை நிரப்புவேன்,” என்றார்.

பேரரசரின் உள்ளுக்குள் அழல் மேனியன் ஆடுவதுபோல், அவர் உள்ளம் சிவந்து, கண்கள் எரிதழல் என ஆடின.

வீரமாதேவிக்குப் பேச்சு வரவில்லை. அவள் உள்ளத்தில் உலகம் காணாத பேரரசு உதித்த உணர்வு பரவியதில் உடல் ஆனந்தத்தில் சிலிர்த்தது.

அவள் கண்களின் கண்ணீர் பேரரசரின் பாதத்தில் சொட்டி அவரைச் சுட்டது.

“கண்ணே! என்ன? ஏன்?” என்று பதறியவர், வீரமாதேவியை அள்ளி, மீண்டும் தன் மடியில் வைத்துக்கொண்டார்.

வீரமாதேவி கண்களைத் துடைத்துக்கொண்டு, “பேரரசே! பேரரசர் மும்முடிச் சோழர், மாமன்னர் எனது மாமனார், காலத்தை வென்ற இராஜராஜேஸ்வரத்தை ஆறு ஆண்டுகள் வானளவு கட்டி, கோபுரம் முழுவதும் பொன் வேய்ந்து, அதற்குத் தட்சிண மேரு என்னும் பெயர் விளங்கும்படி குடமுழுக்கு செய்தார். பெருவுடையார் கோயில் கட்ட எழுந்த உளியோசை இன்னும் ஓயவில்லை. அதற்குள், அதற்கு ஈடாக ஒரு பெரும் கோயிலை நாமே எடுப்பது, அதன் புகழை நாமே மறைப்பதாகாதா?” என்று இரண்டு கைகளையும் கூப்பியபடி அரசர் முன் அமர்ந்திருந்தாள்.

“ஏன் தேவி, அப்படி நினைக்கின்றாய்?”

“ஊரார் வதந்தியை நாமே உண்மையாக்குவது போல் இருக்கிறது, பேரரசே?”

“என்ன வதந்தி?” என்று வீரமாதேவியின் கும்பிடும் கைகளைப் பற்றி, தனது கைகளுக்குள் அன்புடன் வைத்து அவள் விரல்களை

மெல்லச் சொடுக்கி இழுத்தார். அவள் விரல்களில் பயிறு நெற்றுகள் வெடிப்பது போல மெல்லிய ஒலி உண்டாகியது.

“பேரரசர், தங்களுக்கு ஐம்பது அகவை கூடிய பின்னரும் இளவரசுப் பட்டம் கட்டவில்லை என்பதால், தங்களுக்கும் பேரரசருக்கும் இடையே மன விலக்கம் இருக்கிறது என்றும், பேரரசி லோகமாதேவிக்கு மக்கட்பேறு இல்லை. மேலும் அவர் தங்களை மகனாக ஏற்றுக்கொள்வில்லை, அதனால்தான் உங்களுக்கு இளவரசுப் பட்டம் கட்டுவதில் தடையாக இருக்கிறார் என்றும், பேரரசர் தனது வயது முதிர்ந்த காலத்தில் பேரரசி லோகமா தேவியுடன் இரண்ய கர்ப்பம் புகுந்தது, பேரரசி லோகமா தேவி ஆண்குழந்தை பெற வரம் வேண்டித்தான் என்றும், அதற்காகச் சினந்துதான் தாங்கள் பிறந்த நன்நாள் மார்கழி திருவாதிரை அன்று சிற்றம்பலவாணர் ஆடல்வல்லானை தரிசிக்கத் தில்லைக்கு வரவில்லை என்றும், தஞ்சை இராஜராஜேஸ்வரம் பெருவிழாவிற்கும் செல்லவில்லை என்றும் பரவிய வதந்தி. உங்களுக்கு இது தெரியாததுபோல் என்னிடம் வினவுகின்றீர்கள். உண்மையில் நான் உங்களுக்குச் சின்ன குழந்தைதான். குழந்தையிடம் கதை கேட்பதுபோல் என்னிடம் கேட்கின்றீர்கள்,” என்று பரந்த அவர் நெற்றியில் மணக்கும் ஆடல்வல்லான் திருநீற்று மணத்தை நுகர்ந்தபடி, திருமாலின் சக்கர குறியீடு உள்ள சந்தனம் மணக்கும் அவர் வல மார்பில் சாய்ந்து, அவர் நெஞ்சில் விரலால் கோலமிட்டாள்.

“நீயே வதந்தி என்று சொல்லிவிட்டாய், தேவி. பிறகு, அதைப் பற்றி நினைக்க என்ன இருக்கிறது? காலவிரயம் கூடாது, தேவி,” என்றார்.

குண்டு மல்லிகை விரிந்ததுபோல் இருந்த அவள் கன்னக்குழியை மெல்லத் தடவியபடி, “பேரரசர் எனக்கு இளவரசுப் பட்டம் கட்டாமல் காலம் தாழ்த்தியதற்கு, உமது கருத்து என்ன? தேவி,” என்று வினவினார்.

“சேர, பாண்டிய, ஈழ, சாளுக்கிய மன்னர்களை வென்றும், உலகின் பெரும் கடற்படையுடன் கடலைக் குளம் போல் கடந்து, கடாரம், ஸ்ரீவிஜயம் போன்ற நாடுகளில் புலிக்கொடி ஏற்றியும், சாளுக்கியரைத் துங்கபத்திரை நதிக்கு அப்பால் துரத்தியும் தாங்கள் செய்த சாதனை அளவிட முடியாதது. ஒன்பது லட்சம் வீரரும், அறுபதாயிரம் யானையும் கொண்ட மாபெரும் சோழப் படைக்கு நீங்கள் தலைமை தாங்கினீர்கள். கடல் மீது பல கலம் செலுத்தும் வெற்றி வீரர் தாங்கள். ஐம்பது அகவை ஆகியும் என் இறைவருக்கு இளவரசுப் பட்டம் கிடைக்கவில்லையே என்ற நினைப்பும், வருத்தமும் இருந்தது உண்மைதான், சுவாமி.”

“அது நியாயமான வருத்தம்தான், தேவி! அந்த வருத்தத்தில் நீ அந்த வதந்தியைப் பரப்பிவிடவில்லை அல்லவா?” என்று சிரித்தவர், எழுந்து வெள்ளிக் கூசாவில் இருந்த கற்கண்டு, ஏலக்காய், குங்குமப்பூ சேர்த்து காய்ச்சிய பசும்பாலை வெள்ளிக் குவளையில் ஊற்றி, “நிரம்பப் பேசி களைத்துவிட்டாய். களைப்புத் தீர இதைப் பருகுங்கள், தேவி,” என்று நீட்டினார்.

“சாமி! என்ன அபராதம் இது? தங்கள் பாதத்தை பூவாக என் இதயத்தில் சூடிப் பணி செய்யக் காத்துக் கிடக்கிறேன்,” என்று பாய்ந்து எழுந்து அவர் கைகளைப் பற்றிக்கொண்டாள்.

“பொறுமை, பொறுமை, பால் சிந்திவிடப்போகிறது,” என்று பால் குவளையை அவள் கைகளுக்கு மாற்றிவிட்டு, மஞ்சத்தில் அமர்ந்தார். “எந்தை நாட்டிய நாயகன் ஆனந்த நடராசப் பெருமான் சந்தியா வேளையில் அன்னை கௌரியை இரத்தின சிம்மாசனத்தில் அமர்த்தி, அன்னை மகிழ்வதற்காக ஆனந்த நடனம் புரிகின்றார் என்று நீ கேள்விப்பட்டது இல்லையா, தேவி?” என்றார்.

“அவர் தன் மனைவிக்காக மட்டுமா ஆடுகிறார்? உலகுக்கே ஆடுகின்றார். தன் தோழர் சுந்தரர் வேண்டியதால், திருவாரூர் வீதியில் நடையா நடந்து பாதம் தேய்ந்து, அவர் மனையாள் பரவை முன்பும் ஆடினார். அவர் ஆடல் எல்லாம் திருவிளையாடல்,” என்று சற்று அமைதியாக இருந்தவள், “திருவாரூர் என்றாலே பெண்களுக்காக ஆடுவதுதானே ஆடவர் வழக்கம்,” என்று குறும்பாகப் பேரரசரைப் பார்த்தாள்.

“ஓ! நீ ஆரூர் அழகி! வீதிவிடங்கரின் அடியாள் பரவை நங்கையிடம் சென்றுவிட்டாயா? நான் மறந்தாலும் நீ அவளை மறப்பதில்லை. எத்தனை அழகாக இருந்தாலும் பெண்களுக்குத் தான் இன்னும் கொஞ்சம் அழகாக இருந்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றிக்கொண்டேதான் இருக்கிறது. …நன்று.. நன்று.. தாங்கள் பாலைப் பருகுங்கள், தேவி,” என்று சிரித்தார்.

“நீங்கள் பருகாமல் நான் எப்படிப் பருகுவேன், சுவாமி? நீங்கள் பருகிவிட்டுத் தாருங்கள், அரசே!” என்றாள்.

“சிவ சிவ” என்று அண்ணாந்து பாலைப் பருகிவிட்டு, மீதிப் பாலை வீரமா தேவியிடம் வழங்கினார்.

வீரமா தேவி பாலைப் பருகி முடித்து, கிண்ணத்தைச் சந்தன மேசையில் வைத்ததும், “நீ அந்த வதந்தியைப் பரப்பிவிடவில்லை அல்லவா?, தேவி!” என்று வீரமா தேவியின் பவள மணி பதித்த தங்கக் காதணியைச் சுண்டிவிட்டு

விளையாடினார். அவள் கூச்சத்தில் கழுத்தைத் திருப்ப, அவள் கழுத்தில் ஓடிய பச்சை நரம்பு தீப ஒளியில் மின்னியது.

“சாமி எனக்கு இத்தனை பெரிய தண்டனையா?” என்று அவர் மடியில் தலை சாய்த்துக்கொண்டாள் வீரமா தேவி.

குழந்தையைத் துயில வைக்க, மெல்ல அதன் முதுகைத் தட்டுவதுபோல, அவள் முதுகை மெல்லத் தட்டியபடி, “உனது எண்ணம் என்ன என்பதை அறிந்துகொள்ளத்தான் கேட்கிறேன், தேவி,” என்று வினவினார்.

எழுந்து உட்கார்ந்த வீரமாதேவி, “மாமன்னர், எனது மாமனார் திருவடியை வணங்குகின்றேன்,” என்று தலை உயர்த்தி கும்பிட்டுவிட்டு, “பெரும் சோழப் பேரரசை உருவாக்கிய சிவபாதசேகரர் சோழ உடையார் எண்ணங்களில் சிறுமை ஒருபோதும் இருந்ததில்லை அரசே. பேரரசர் சுந்தர சோழர் வழியாக உடையாருக்குக் கிடைத்த அரசப் பதவியை, சிறிய தந்தை உத்தமசோழருக்குக் கொடுத்து அழகு பார்த்தார் அவர். தனக்கு இளவரசுப் பட்டமோ ராஜ்ஜியப் பதவியோ வேண்டும் என்று கனவிலும் நினைக்காத தியாக சீலர் அவர். சோழப் பேரரசின் வளர்ச்சி மட்டுமே அவரின் குறிக்கோள். புலிக்குப் பிறந்தது புலிதானே. தியாக சீலருக்குப் பிறந்த தாங்களும் தியாக சீலர்தான் என்பது அவருக்குத் தெரியாமல் எப்படி இருக்கும்? தந்தையைப் போல தாங்களும் சோழப் பேரரசை விரிவுப்படுத்துவதே குறிக்கோள் என்று வாழ்கின்றீர்கள். பேரரசர் அரசப் பதவியைத் தியாகம் செய்தபோதும் நடராசப் பெருமான் கருணையால் அது அவரிடமே திரும்பி வந்தது. ஆடல்வல்லான் கருணையால் அரசப் பதவி தானாக உரிய காலத்தில் தங்களிடம் வரும் என்று பேரரசர் நினைத்திருக்கக் கூடும்,” என்று அவள் மூச்சு விடாமல் பேசியதை குழந்தை போல பார்த்துக் கொண்டிருந்தார் பேரரசர்.

சந்தனக் குழம்பு தோய்ந்த வீரமாளின் நெஞ்சை மெல்லத் தடவியபடி, “கொஞ்சம் மூச்சு வாங்கிக்கொள், தேவி,” என்று கேலி செய்துவிட்டு, “முடிந்ததா? தேவி!” என்றார்.

“பேசப் பேச சில விடயங்களைத் தற்பொழுது உணர்கின்றேன், பேரரசே! உத்தரவு கொடுங்கள்.”

“சோழப் பேரரசிக்கு உத்தரவா? அவள் கடைக்கண் பார்வை அல்லவா அடியேனுக்கு உத்தரவு,” என்றார். பேரரசரின் உதட்டில் தனது சிவந்த விரல்களை வைத்து மெல்ல அழுத்தி, தனது தலையை மறுப்பதுபோல் அசைத்தாள் வீரமா தேவி.

“நம் குல முன்னோன் சூரியகுல திலகம், வில்லாளிகள் நாயகன், இராமன் போலத்தான் பேரரசர். தந்தை சொல் மீறாத தனயன். தாய்ச் சொல்லைத் தட்டாத மைந்தன். தாங்களும் அவ்வண்ணமே.”

“தங்களை நாடித்தான் இராஜ்யத் தேவதை வந்தாளே அன்றி, தாங்கள் இருவருமே இராஜ்யத்தை நாடியவர்கள் இல்லை. அதற்கும் மேலாக, இருவரும் பிதாமகர் பீஷ்மரைப் போலச் சோழர் குலத்தில் யார் சிம்மாசனத்தில் அமர்ந்தாலும், வெறுப்பு, விருப்பு இன்றிச் சிம்மாசனத்தைத் தாங்கி இராஜ்யத்தைப் பாதுகாக்கக் கூடியவர்கள். தந்தைக்காக ராஜ்ஜியத்தைத் துறக்கக் கூடியவர்களும் கூட.”

“தங்களைத் திருவயிறு சுமந்த எனது மாமியார் திரிபுவன மகாதேவியாகிய வானவன் மாதேவி ஒவ்வொரு போர்க் களத்திற்கும் தங்களை அனுப்பிவிட்டுப் படும் பாட்டையும், நீங்கள் வெற்றி பெற்று வரும்போது, உங்களை உச்சி முகர்ந்து அன்னையார் அடையும் ஆனந்தத்தையும், பேரரசரும் அடைகின்றார். தங்களைப் பிரிந்து மீண்டும் சந்திக்கும்போது அவர் நெஞ்சில் முலை முளைப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆண் வடிவில் அன்னை அவர்,” வீரமா தேவி கண்ணீர் விடுகிறோம் என்பதை அறியாமலே இதைச் சொல்லும்போது கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள்.

கூடுகளை அந்தரத்தில் தனியே விட்டுவிட்டுப் பறந்து செல்லும் தூக்கணாங்குருவிகள் போல, தன் உணர்வுகள் தன்னைத் தன்னந்தனியே விட்டுவிட்டுச் சென்றுவிட்டதுபோல் பேரரசர் தவித்தார். கால்கைகள் கல்லாகிவிட்டதுபோலக் கனத்துக் கிடந்தன. தனிமை தவிர வேறு ஒரு துணையும் இல்லாத பாலைவனப் பாறைபோல அமர்ந்திருந்தார்.

கண்களைத் துடைத்துக்கொண்ட வீரமா தேவி, “இளவரசுப் பட்டம் சூடிய இராஜாதிராச சோழர் தக்கோலம் போரில் யானைமேல் துஞ்சினார். இளவரசுப் பட்டம் சூடிய வீரபாண்டியன் தலைகொண்ட ஆதித்த கரிகாலர் கடம்பூர் மாளிகையில் துரோகிகளால் படுகொலை செய்யப்பட்டார். தங்களுக்கு இளவரசுப் பட்டம் கட்டினால், அவர்களைப்போல தங்களுக்கும் சிறுவயதில் ஏதாவது நடந்துவிடுமோ என்று கூட நினைத்திருக்கலாம்.

“ஆதித்த கரிகால சோழரைக் கடம்பூர் மாளிகையில் கொன்ற துரோகிகளின் தலைவனான இரவிதாசன் வேதம் படித்தவன் என்பதால் அவன் சிரம் அறுக்காமல், அவனையும், அவனைச் சார்ந்த இரத்த உறவுகள் மற்றும் அவர்களுக்குப் பெண் கொடுத்த

உறவுகள் அனைவரையும் பேரரசர் நாடு கடத்தினார். அவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்தார். அதனால் உட்பகையும் வஞ்சமும் அதிகமாக இருந்த காலம். அதனால் நீங்கள்தான் அடுத்த இளவரசர் என்று அடையாளம் காட்டத் தயங்கி இருக்கலாம்.”

“பெரிய பிராட்டி செம்பியன் மாதேவியின் மைந்தர் மதுராந்தகருக்கு இளவரசர் ஆதித்த கரிகாலர் கொலையில் கூட்டு இல்லை என்பதை உலகுக்கு உணர்த்தவே அவருக்கு உத்தமசோழர் என்ற நாமம் சூட்டினார்கள். அந்த நாமத்திற்கு ஏற்றார்போல அவரும் தந்தையார் போலச் சில ஆண்டில் இராஜ்யப் பதவியை உடையாரிடம் வழங்கிவிட்டு இறை வழிபாட்டில் ஈடுபட்டுப் பிறவிப் பயனை அடைந்தார். ஆனால் அவர் மைந்தர் மதுராந்தக கண்டராதித்தர் மனம் என்ன என்பதை யார் அறிவது? அதை அறியும்வரை காலம் கடத்தி இருக்கலாம். உடையார் கொடுங்கோலர் அல்ல; பதவியைப் பறித்துக்கொள்ள. சிவபாதசேகரர். உள்ளுணர்வை அருள் உணர்வாக மாற்றுபவர். அதனாலும் உங்களுக்கு இளவரசுப் பட்டம் கட்டக் காலம் கடத்தி இருக்கலாம்.”

“தந்தையின் உள்ளம், பேரரசரின் உள்ளம் அல்ல, பேரரசே! அதைத் தந்தைகளே அறிய முடியும்.”

“பேரரசர் இருக்கும்வரை அவரைப் பேரரசராகவே நினைத்தது ஏன்? பேரரசருக்குள் இருந்த தந்தையை ஏன் பார்க்கத் தவறினேன்? என்னை மகனாக உணராமல் இளவரசனாகவே உணர்ந்ததாலா? இப்போது பேரரசனாக இருக்கிறேன். பேரரசன் என்ற உணர்வு எழவில்லை; தந்தையாகவே உணர்கிறேன். தந்தையை இழந்ததை க்ஷணம் க்ஷணம் எண்ணித் தவிக்கிறேன்,” பேரரசர் தனக்குள் பேசிக்கொண்டார்.

பொன்னம்பலத்திற்குப் பொன் வேய்ந்த சோழர் முதலாம் பராந்தக சோழ தேவர் அறிந்திருப்பாரா? தனது மக்களால் சோழப் பேரரசுக்குள்ளும் மகாபாரதம் போல யாருக்கு அரசமுடி என்ற போட்டி வருமென்று. மகாபாரதத்தில் திருதராட்டிரர், பாண்டு வாரிசுகள். சோழப் பேரரசில் கண்டராதித்த சோழர், அரிஞ்சய சோழர் வாரிசுகள். அங்கு குருசேத்திரம் சொந்த இரத்தத்தால் உருவானது. இங்கும் சொந்த இரத்தம்தான். இங்கு நமது மாமன்னர் இராஜராஜ சோழ தேவர் தியாகத்தால் குருசேத்திரம் உருவாகாமல் தடுக்கப்பட்டுவிட்டது.

பேரரசர் இராசேந்திர சோழர் அசைந்து உட்கார்ந்தார். ஆழமான, நீண்ட, வெப்பமான மூச்சு அவரிடம் வெளிப்பட்டது. விளக்கின்

ஒளியில் அவர் நெஞ்சு ஏறி இறங்குவது, ஒரு மலை கடலென அலைவதுபோல் இருந்தது.

“அடியேன் இணையரசனாகப் பதவி ஏற்று, சில ஆண்டுகளில் பேரரசர் சிவனடி சேர்ந்துவிட்டார் என்பதை நினைக்கும்போது, கங்கையை வெல்லும்வரை மார்த்தாண்ட நாயகமாக மட்டும் இருந்திருக்கலாம், கங்கை வெற்றியைத் தந்தையார் பாதத்தில் வைத்திருக்கலாம் என்று நினைத்துக்கொள்கிறேன், தேவி.” பேரரசரின் குரல் கம்மியது. வீரமாதேவியை இழுத்து அணைத்து அவள் நெஞ்சில் தனது பெரிய முகத்தை அழுத்தினார். பேரரசர் உடல் குலுங்கியது.

வீரமாதேவி பேரரசரின் முதுகைக் குழந்தையைத் தடவுவதுபோலத் தடவினாள். வீரமாதேவியின் மார்பின் குளிர்ச்சியில் தனது உடலுக்குள் எவ்வளவு வெக்கை இருக்கிறது என்பதை அரசர் உணர்ந்து திகைத்து அமைதியாக இருந்தார். உடல் வியர்த்தது, கண்கள் சிவந்து காந்தின. பெண்ணே குளிராகவும் சூடாகவும் இருக்கும் அற்புதத்தை உணர்ந்து தன்னை விடுவித்துக்கொண்டு, பேரரசர் என்ற கம்பீரத்துடன் சிரித்தார்.

வீரமா தேவி தனது முந்தானையால் பேரரசரின் முகத்தில் துளிர்த்த வியர்வையைத் துடைத்தாள். மஞ்சத்தில் கிடந்த மயிர்த் தோகை விசிறியால் மெல்ல விசிறினாள். பேரரசர் அவள் கையில் இருந்த விசிறியை வாங்கி இருவருக்கும் அவரே விசிறினார். அறைக்கு வெளியில் இருந்து சேடிகளால் இழுக்கப்படும் விசிறிகள் ஆடையால் செய்த பூக்கள் போல அலை அலையாய் மஞ்சத்திற்கு மேல் தொங்கின. பேரரசர் அதை விரும்புவதில்லை. வாழ்நாள் எல்லாம் போர்க்களத்திலேயே கிடந்த உடல் அல்லவா அது. வீரமா தேவியும் பேரரசருக்கும் தனக்கும் இடையில் தாதிகள் பணியை பெரிதாக அனுமதிப்பதில்லை. அவளே அவருக்குத் தாதியும் தாசியுமாக இருந்தாள். பேரரசருடன் இருக்கும் ஒவ்வொரு கணமும் அவளுக்கு அமுதக் கணங்கள். அனுபவித்து அனுபவித்துச் சுவைத்தாள்.

“நீங்கள் கேட்டுப் பதவி பெறவில்லை, அரசே! இவ்வளவு பெரிய சோழப் பேரரசின் பாரத்தை ஆதிசேடனாலும் தாங்க முடியுமா? தன் மைந்தன் மட்டுமே தாங்குவார் என்பதை உலகம் அறியும்வரை காத்திருந்து சிவபாதசேகரர் உங்களுக்கு வழங்கினார்.”

பேரரசர் கங்கைகொண்ட சோழன் கோப்பரகேசரி இராசேந்திர சோழ தேவ உடையார் வடநில மன்னர்களை வென்று, அவர்களின் தலைகளில் புலிச் சின்னம் பொறித்த ஆயிரம்

பொற்குடங்களில் கங்கை நீரைச் சுமந்து வரச் செய்து, கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாருக்குக் குடமுழுக்கு செய்து ஆனந்தப்பட்டார்.

கங்கையைக் கொண்டுவந்த வெற்றியைப் பறைசாற்ற, பெருவுடையார் ஆலயத்திற்கு மேற்கே மூன்று கல் தொலைவில், தெற்கு வடக்காகப் பதினாறு கல் நீளமும், கிழக்கு மேற்காக மூன்று கல் அகலமும் கொண்ட பெரிய ஏரியை உருவாக்கி, நீரால் ஆகிய ஜய ஸ்தம்பம் (வெற்றித் தூண்) என ஏரிக்குள் வெற்றித்தூண் பதித்தார்.

சோழ மன்னர்கள் அமைத்த தலைநகரிலேயே இதற்கு இணையாக ஒரு தலைநகர் இருந்திருக்குமா? கடல்கொண்ட காவிரிப்பூம்பட்டினம் இருந்திருக்கலாம்.

தஞ்சை இராஜராஜேஸ்வரம் விண்ணைத் தாங்கும் ஆண்மையின் எழுச்சி. கங்கைகொண்ட சோழபுரப் பிரகதீஸ்வரம் விண்ணை அணிந்துகொண்ட பெண்மையின் மலர்ச்சி. அது விண்ணைத் தாங்கி நிற்பது; இது மண்ணில் மலர்ந்து நிற்பது. அது ஆணின் அங்கம் போன்று சதுரம்; இது பெண்ணின் அங்கம் போன்று வட்டம். அது சிற்பக்கலையின் உச்சம்; இது சிற்பக்கலையின் ஆழம். அதனைக் காண்பவர்கள் தம்மை மறந்து ஆன்மாவின் மோனத்தில் ஆழ்வார்கள். இதனைக் காண்பவர்கள் தம்மை மறந்து ஆன்மாவின் ஆடலில் லயிப்பார்கள்.

கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயில் கலைவண்ண அழகைக் கண்களால் பருகிப் பருகித் தெவிட்டாத மக்கள், பேசிப் பேசி நெஞ்சம் நிறைந்தார்கள். நித்தம் நித்தம் பெருவுடையாரைத் தரிசிக்கக் குழாம் குழாமாய் வந்து தங்கள் நெஞ்சங்களைக் கோயில் சிற்பங்களுக்குக் காணிக்கை ஆக்கினார்கள்.

பெரிய கோயிலின் கருவறைச் சுற்றுச் சுவரில் கிழக்கு பக்கத்தில் ஈசானிய மூலையில் காட்சி கொடுக்கும் சண்டிகேஸ்வரர் அனுக்கிரக மூர்த்தியைப் பேரரசர் இராசேந்திர சோழரும், வீரமாதேவியும் குடிமக்கள் கோலத்தில் நின்று கண்டு அனுபவித்தார்கள். மக்களோடு மக்களாய்க் கலந்து அனுபவிக்க வேண்டும் என்ற ஆவல் அவர்களுக்கு.

இதழ்களில் புன்னகை பூக்க நெஞ்சம் நெகிழ்ந்து வீரமா தேவியைப் பார்த்த பேரரசர், ஆள் நடமாட்டம் இல்லாத புனித கங்கைக் கிணற்றுக்கு அருகில் சென்று அமர்ந்தார். சிலையின் திருவடிக்குக் கீழ் வைத்திருந்த, சாமிக்குப் பூசை செய்த மலர்க்

கூடையைக் கையில் எடுத்துக்கொண்டு, வீரமா தேவியும் சென்று பேரரசர் காலடியில் அமர்ந்தாள்.

“பேரரசே! பெருவுடையார் கோயில் சிற்பங்கள் அற்புதமான அழகுடையவை. சண்டிகேஸ்வரருக்குப் பதம் அருளும் அப்பன் ஈசன், பரந்தும் நிறைந்தும், ‘பல்லாண்டு’ என்னும் பதம் கடந்து நிற்கும் வரம்பில்லாப் பாங்கு உடையவர் என்பதை விளக்க, மிக பெரிய உருவில் மண்ணையும் விண்ணையும் தொட வடிக்கப்பட்டு உள்ளார். அன்னை சக்தி, மதி அருகு வேணித் தும்பை மணிமுடி மீது அணியும் மகாதேவர் மனம் மகிழ அணைந்து இடப்புறமாகக் குடிகொண்டிருக்கும் உண்ணாமுலை கௌரி, இன்று பூத்தவள் போல இருக்கிறாள். சின்னஞ்சிறியவள். பக்தியில் கனிந்த உள்ளம் மட்டுமே வெளிப்படும் சண்டேசர்! ஐயன் சூட்டும் கொன்றை மாலைதான் எத்தனை நளினம்! கல் மலராகி, மாலையாகி, ஐயன் கை பட்டு நெகிழ்ந்து நெஞ்சில் மணக்கிறது. அம்மையப்பரைச் சுற்றி சண்டிகேஸ்வரர் பதம் பெற்ற விசாரசருமர் புராணம் சிற்பமாய் அணிசெய்கிறது.”

“தில்லையில் நான்கு சிரம்கொண்ட பிரம்மன் சண்டிகேஸ்வரர் பதம் பெற்று அருள்புரிகின்றார். யமதேவன் திருவாரூர் திருத்தலத்தில் சண்டிகேஸ்வரர் பதம் பெற்று அருள்புரிகின்றார். கங்கைகொண்ட சோழபுரத்தில், மானிடராய் பிறந்த விசாரசருமர் சண்டிகேஸ்வரர் பதம் பெற்றுச் சிவதொண்டு புரிந்து அருள்கின்றார். சோழீச்சரச் சிற்பங்களைக் காணக் கண் கோடி வேண்டும், பேரரசே! எண்ணியதை எண்ணியபடி செய்து காட்டிவிட்டீர்கள், பேரரசே! நான் அறியாச் சிறுகுழந்தை என்பதை உணர்கின்றேன். அன்று உங்கள் உள்ளம் அறியாமல் பெரிய கோயில் வேண்டாம் என்று பேதைபோல் பேசி உங்கள் உள்ளத்தை நோக அடித்துவிட்டேன்; என்னை மன்னிக்க வேண்டும்,” என்றாள்.

“நீ மொழிந்ததிலும் பொருள் உண்டு, கண்ணே! மனம் நிறைவு கொள். தஞ்சை இராஜராஜேஸ்வரத்தை, கங்கைகொண்ட சோழீச்சரம் உயரத்தில் மீறவில்லை என்பதை கவனி,” என்றார்.

வீரமாதேவி இடுப்பில் செருகியிருந்த சுருக்குப் பையை இழுத்துத் திறந்து அதில் இருந்த இராசேந்திர சோழன் வெளியிட்ட புதிய நாணயங்களை எண்ணி மீண்டும் பையில் இட்டு இடுப்பில் செருகிக்கொண்டு, பேரரசரை பெருமை பொங்கப் பார்த்தாள்.

“கங்கைகொண்ட சோழபுர அங்காடித் தெருவில், பொருள் கலப்படம், பொருள் பதுக்கல் மற்றும் வரி ஏய்ப்பு செய்யாமல் வியாபாரம் அறத்தோடு நடக்கிறதா என்று சோதனை செய்தேன், அப்பொழுது வாங்கியது இது,” என்று மடியில் வைத்திருந்த பவழ வளையல்களை வழங்கி அணிந்துகொள்ளச் செய்தார். கூடவே பனை வெல்லம் கலந்து செய்த இனிப்பையும் கொடுத்தார்.

வளையல்களை அணிந்துகொண்டு, காய்ந்த ஆற்றுப் பூவரசு இலையில் பொதிந்திருந்த இனிப்பைத் திறந்து பேரரசரிடம் மகிழ்ச்சியுடன் நீட்டினாள். இனிப்புத் துண்டு ஒன்றை பாதியாகப் பிட்டுக் வாயில் போட்டுக்கொண்டு, வீரமாதேவியைப் பார்த்து “உண்ணுங்கள், தேவி!” என்றார். மீதியை வாயில் இட்டுக்கொண்டாள் வீரமாதேவி.

இனிப்புப் பொதியை, தூரத்தில் கோயிலைச் சுற்றிப் பார்த்துக்கொண்டு வந்த குடும்பத் தலைவி ஒருத்தியை அழைத்து கொடுத்தார். கூடவே சுருக்குப் பையில் இருந்த நாணயம் ஒன்றையும் எடுத்துக் கொடுத்தார். வணங்கிப் பெற்றுக்கொண்ட அந்த அன்னையால் பேரரசரையும் வீரமாதேவியையும் அடையாளம் காண முடியவில்லை.

சாமி கும்பிட்டுவிட்டுக் கோயிலைச் சுற்றி வந்த புதிய திருமணக் கூட்டம், திருச்சுற்று மாளிகையின் மேல்மாடத்தில் வட்டமாய் அமர்ந்து கட்டுச்சோறு உண்டார்கள். திருமணக் கூட்டத்தில் இருந்து விலகிய குழந்தை தனியாக வந்து மேல்மாடத்தில் இருந்து தரையை எட்டிப் பார்த்தது. பதறிய வீரமா தேவி, தாமதிக்க நேரமின்றி தனது கணையாழியை கழற்றி வீசிவிட்டு, அதன்பின்னே சுருக்குப் பையில் இருந்த நாணயம் ஒன்றையும் எடுத்து வீசினாள். மோதிரமும் நாணயமும் அந்தத் தாயின் வலது, இடது தோளில் அடித்து அவளை எழுப்பியது. பதறி எழுந்தவள் குழந்தையை அள்ளிக்கொண்டு, அங்கிருந்தே வீரமா தேவியை விழுந்து கும்பிட்டாள்.

பேரரசர் ஒரு கணம் உறைந்து உட்கார்ந்து, பின் நீள்மூச்சு விட்டு, மகிழ்ந்து நெஞ்சு நிறைந்து “அற்புதம்! நன்று செய்தாய், தேவி,” என்றார். “நாளையே மேல்மாடத்தில் விளையாடும் குழந்தைகள் தவறிவிடாமல் இருக்கச் சுற்றுவேலி அமைக்கிறேன்,” என்றார்.

வீரமா தேவி எதுவும் சொல்லாமல் நாணத்துடன், “தாய் மனம், அரசே! பதறிவிட்டது! இடமும் காலமும் பார்க்க நேரமில்லை,” என்றாள்.

“இதுதான் காதலுக்கு இதயம் மட்டும் இருந்தால் போதும் என்பது. கண்ணிருந்தால் என்ன செய்யும்? ‘எவ்வளவு தூரம்?

எப்படிப் போவது? முடியுமா? முடியாதா?’ என்று இங்கேயே உழன்று கொண்டிருக்கும். எத்தனை அடித் தூரம் இருந்தால் என்ன? அடித்தாய் பார் ஒரே அடி! அதுதான் இதயத்தின் அற்புதம். அறிவை வென்று உணர்வு வெளிப்பட்டு வெல்லும் அதிசயம்,” வீரமாதேவி பேசாமல் விழி விரிய பேரரசரையே இதயம் பொங்கப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

“தாய் மனம் என்பது சரிதான், தேவி! தந்தையர் அறிய முடியாத நுண் உணர்வு கொண்டது தாய் மனம்,” என்று சிரித்த பேரரசர், ‘தேவி மகாத்மியம்’ அன்னை ஆதிபராசக்தியைப் போற்றுவதைக் கேள் என்று, “ஓ.. தேவி! நீ ஞான வடிவினள். இவ்வுலகில் உயர்ந்ததாகவும் தாழ்ந்ததாகவும் காணப்படும் அறிவு அனைத்தும் நீயே. எல்லா வகையான ஞானமும் நீயே. உலகில் உள்ள அனைத்துப் பெண் வடிவங்களிலும் நீ உள்ளாய். உலகம் முழுவதும் நீ ஊடுருவி இருக்கிறாய். நீ ஒப்பற்றவள். சொற்களால் விளக்க முடியாதவள். உனது அளப்பரிய பெருமையினை யாரால் விவரிக்க இயலும்?” என்று அர்ச்சனைத் தாம்பாளத்தில் இருந்த மலர்களை அள்ளி வீரமாதேவியின் சென்னியில் தூவி வாழ்த்தினார்.

“இது ஒரு பொன்னான கணம், தேவி! வருங்காலத்தில் இங்கு அன்னை ஸ்ரீ துர்க்கை கோயில் கொண்டு அருள்பாலிப்பாள்,” என்றார். வீரமா தேவி வணங்கினாள்.

பேரரசர் அமைதியாக இருந்தார். எதையோ கூர்ந்து கவனித்தார். திருச்சுற்று மாளிகைக்கு வெளியே ராஜ வீதியில் எழும்பும் ஒலியில் அவர் கவனம் குவிந்தது. “உனது சகோதரன் மதுராந்தகன் பரகேசரி மூவேந்த வேளான், நம்மை கண்காணிக்கின்றான். எங்கே தன் தங்கை உன்னை, நான் தூக்கிச் சென்று விடுவேனோ என்ற பயமாக இருக்கலாம்,” என்று பேரரசர் குறும்பாக வீரமா தேவியைப் பார்த்தார்.

“அவர் என்னைப் பாதுகாக்க வரவில்லை. அவர் பேரரசர் உங்களைப் பாதுகாக்கத்தான் வந்திருப்பார். அவர் பேச்சு மூச்சு எல்லாம் தாங்களும் சோழ நாடும்தான். அவருக்கு இன்னும் என்மீது கோபம் தீரவில்லை. இருந்துவிட்டுப் போகட்டும்,” என்றாள் கோபமாக.

“அவன் கோபத்திலும்…” என்று சொல்லவந்தவர், அமைதியாக இருந்தார்.

“கற்களுக்குக் காதல் வருவதும் இல்லை. காதல் புரிவதும் இல்லை,” என்று தனக்குள் சொல்லிக்கொண்டவள், கோபம்

தணிந்து, “பேரரசே! அவர் எங்கு இருக்கிறார்? அவர் நம்மை கண்காணிக்கிறார் என்பதை எப்படி அறிந்தீர்கள்?” என்றாள்.

“சற்று கூர்ந்து கவனி, தேவி!”

வீரமா தேவி கோயிலில் உலவும் கூட்டத்தில் விழிகளை ஓட்டிப் பார்த்தாள். அங்கு அவர் இல்லை. பெருவுடையாருக்குச் சந்தியாகால பூசை மணிகள் ஒலிக்கின்றன. கோயிலை வலம் வருபவர் ஓதும் தேவாரம் ஒலிக்கின்றன. கோயிலின் உள்ளே அந்தணர்கள் வளர்க்கும் வேள்வியில் வேதங்கள் ஒலிக்கின்றன, மகளிர் அணிந்த சிலம்புகள் ஒலிக்கின்றன, மக்கள் குரல்கள், குழந்தைகள் குதுகலம் கேட்கின்றன. அவர் குரல் கேட்கவில்லை.

கோயிலின் திருச்சுற்று மாளிகைக்கு வெளியே உள்ள ராஜ வீதியில் செல்லும் யானைகளின் கழுத்து மணி ஒலிகளைக் கேட்டாள். குதிரைகளின் சேணத்தில் பூட்டிய மணிகள், அவைகளின் ஓட்டத்திற்கு ஏற்ப ஒலிக்கின்றன. வாகனங்களில் பூட்டிய மாடுகளின் சலங்கைகள், அவைகளின் நடைகளுக்கு ஏற்ப ஒலிக்கின்றன. “அவரைக் காண முடியவில்லையே? அவர் எங்கே? பேரரசே!” என்றாள் ஆவலுடன்.

“அவனுக்குத் தெரிவிக்காமல்தான் வந்தேன். நான் கோயிலில் இருக்கிறேன் என்பதைத் தெரிந்துகொண்டு வந்துவிட்டான். திருச்சுற்று மாளிகைக்கு வெளியே, இந்த ஓசைகளுக்கு இடையில், அவன் குதிரை மட்டும் தாளம் தப்பாத நடையில் ரத வீதியில் கோயிலைச் சுற்றுகிறது. கூர்ந்து கவனி, புரியும். அவன் மட்டுமே பயன்படுத்தும் வாளின் பிடியில் தொங்கும் சதங்கை ஒலியைக் கேள். நாம் இங்கு வந்து உட்கார்ந்த பின்பு மூன்று சுற்று சுற்றிவிட்டான். இது நான்காவது சுற்று. சற்று கூர்ந்து கவனி. அவனும் நம்மைப்போல மாற்று உருவில்தான் இருக்கிறான். அதனால்தான் மக்கள் அமைதியாக இருக்கிறார்கள்.”

“அப்பா! மும்முடிச் சோழர் கோப்பரகேசரி கங்கைகொண்ட சோழ தேவர் என்றால் கடல் வழிவிடும் என்றால் அது வெறும் புகழ்மொழி மட்டும் இல்லை!” என்று தனது பவழ மணி வளைக்கரங்களால் பேரரசருக்குக் கண்ணேறு கழித்தாள்.

“திருச்சிற்றம்பலம். மனம் நிறைவாக இருக்கிறது, தேவி!” என்றார் பேரரசர். கோயிலின் அழகு, திருச்சுற்று மாளிகையின் கம்பீரம், வெளிர் வானத்தின் பின்னணி, அருகில் வீரமா தேவி… பேரரசரின் நெஞ்சம் நெகிழ்ந்தது.

“தேவி இப்போது மக்கள் என்ன சொல்கின்றார்கள்? தஞ்சைப் பெருவுடையார் கோயிலைப் பற்றி என்ன சொல்கிறார்கள்?” என்றார்.

“கங்கைகொண்ட சோழபுரத்துப் பெருவுடையார் கோவிலால் தஞ்சைப் பெருவுடையார் கோவில் புகழ் உயர்ந்துவிட்டது, அரசே. உயர்ந்தது, உயர்ந்ததை உயர்ந்த இடத்திற்கே கொண்டு செல்லும் என்பதை இப்போது அறிகின்றேன் அரசே! தாங்கள் அன்று தஞ்சைப் பெருவுடையார் கோவிலுக்கு நிகராகக் கோயில் கட்டப்போகின்றீர்கள் என்றபோது, ‘பேரரசர் உள்ளத்திற்கு மாற்றாகச் செயல்படுகின்றீர்களோ’ என்று நினைத்துத் தவறாகப் பேசிவிட்டேன்,” என்றாள்.

“பேராற்றலும் பெரும்புகழும் உடைய தந்தையை வெல்ல வேண்டும் என்று நினைப்பது வெற்று ஆணவத்தால் இருக்கக் கூடாது, தேவி. உயர் ஆற்றலால், உன்னத அறிவால் இருக்க வேண்டும். அது வெல்வது அல்ல, வளர்வது. அதுதான் மகனின் உண்மையான வளர்ச்சி. அது மாநிலத்து மண்ணுயிர்க்கு எல்லாம் நலம் பயக்கும்; அதுதான் மகன் தந்தைக்குச் செய்யும் உதவி.”

“தேவி! சிவன் அருள் செல்வர் ஒருவரைப் பயணத்தில் சந்தித்தேன். அவருடன் உரையாடும்போது ஓர் அதிசயமான செய்தி சொன்னார். சில வண்ணத்துப்பூச்சிகள் ஒரே காலநிலையில் ஒரே இடத்தில் வாழும்போது சில நாட்கள்தான் உயிர் வாழ்கின்றன. அவைகள் பறந்து வேறு இடம் செல்வதாலும், புதிய சூழ்நிலைகளைத் தாக்குப்பிடிப்பதாலும், அவைகளின் புதிய தலைமுறைகள் பல மாதங்கள், கிட்டத்தட்ட ஒரு வருடம் உயிர் வாழ்கின்றன என்று சொன்னார். இந்தத் தத்துவம் நம் தலைநகருக்கும் பொருந்தும், தேவி. புதிய தலைமுறைகள் வளர்ந்து நீடிக்கத்தான் இந்த புதிய தலைநகரம், தேவி!”

“பேராற்றலால் கங்கைகொண்ட சோழபுரத்தை உருவாக்கினேன். எனது ஆணவத்தை வெளிப்படுத்துவதற்கு அல்ல, பேரரசின் கல்வி, செல்வம், வீரம் மூன்றையும் வளர்க்கவும் வலுப்படுத்தவும்தான். பெரும் பேரரசு தோன்றினால் மட்டும்தான் உள்நாட்டு குழப்பமும், சிற்றரசர்களின் அர்த்தமற்ற பூசல்களும் ஒழியும். மக்களுக்கு வளமான, நலமான வாழ்க்கை அப்பொழுதுதான் கிடைக்கும். அதற்கு அர்த்தமுள்ள மாற்றங்கள் வேண்டும், ஞானத்தை வளர்க்கும் கலை வேண்டும், உடைமைகளை உருவாக்கும் பல தொழில்களும், உணவை உற்பத்தி செய்யும் உழவுத் தொழிலும் வேண்டும். அந்த நாட்டில்தான் கலையும் இலக்கியமும் வளர்ச்சி அடையும்.”

“வன்னி மரம், கருங்காலி மரம், ஆவாரம்பூச் செடியும், கள்ளியும், கற்றாழையும், செம்மண்ணும் நிறைந்த இந்த பூமியைச் சோழ கங்கத்தால் பொன் விளையும் பூமியாக்கிவிட்டேன். தஞ்சையை மறப்பதற்காக, மறைப்பதற்காக அல்ல. சோறுடைத்த தஞ்சைபோல் இவ்விடமும் பொன் விளைய. இப்போது இங்கும் பொன் விளைகிறது. அதனால் நம் சோழ கங்கையைப் பொன்னேரி என்று மக்கள் மகிழ்ந்து போற்றுகின்றார்கள். அறிந்திருப்பாய். குடிமக்கள் நாவில் சோழ கங்கை ‘பொன்னேரி’ என்றே புழங்கப்படும். காலத்தைக் கடந்து அந்தப் பெயர் நிலைக்கும்.”

“ஒரு நல்ல மன்னன் பெரிய போர் வீரன் என்பதில் பெரிய மகத்துவம் இல்லை, தேவி. ஒரு நல்ல மன்னன் பெரிய விவசாயி என்பதே மகத்துவமானது. எங்கு விவசாயமும் கால்நடையும் செழிக்கின்றதோ, அந்த நாட்டின் குடிமக்கள்தான் பொற்காலத்தைக் கண்டவர்கள். சோழப் பேரரசின் நோக்கமே விவசாயமும் ஆன்மீகமும்தான். விவசாயம் உடல் பசி போக்கும்; ஆன்மீகம் உள்ளத்தின் பசி போக்கும்,” என்றவர், “கங்கைகொண்ட சோழபுரத்தில் உருவான பெருவுடையார் கோயிலும், சோழ கங்கமும் இலக்கண சுத்தமான அணிக் கவிதைகள் தாம், தேவி,” என்றார். வீரமா தேவி அமைதியாக இருந்தாள்.

“கங்கை சிவபெருமான் தலையில் ஆடுபவள். ஆனால் காசியில் விஸ்வநாதப் பெருமான் காலடியில் தவழ்கிறாள். அவளைத் தூக்கிச் சிவபெருமான் தலையில் வைத்து ஆடவிட நினைத்தேன். ஆடவிட்டுவிட்டேன். கங்கைகொண்ட சோழபுரத்துப் பெருவுடையார் தலையில் கங்கை ஆடுகின்றாள். கங்கைகொண்ட சோழபுரத்து ஈசர் கிழக்கு நோக்கி அருள்கின்றார். அவர் தலைக்கு மேலே பொன் கொன்றை பூத்திருக்கும் கரைகளுக்குள் வடக்கு தெற்காகச் சோழ கங்கை பதினாறு கல் பரப்பில் படர்ந்து ஆடுகின்றாள். அலை சடை என ஆடுகின்றாள். பெருவுடையார் சடையாக விரிந்திருக்கிறாள் அவள். கோயில் ஏரி இரண்டையும் ஒரு சித்திரத்தில் வைத்துப்பார். பெருவுடையார் என்னும் அலைசடையப்பர் தரிசனம் கிடைக்கும்,” என்றார். வீரமா தேவியின் விழிகள் பிரமிப்பில் விரிந்தன.

மேகமில்லா வானில் எழுந்த தைத்திங்கள் மூன்றாம் பிறை, பெருவுடையார் கோபுரத்தின் முடியில் அணியென வந்து அமர்ந்தது அன்று.

“பேரரசே! அங்கே நோக்குங்கள். பிறைசூடிய பெருவுடையார்!” என்று ஆனந்த வெள்ளம் உள்ளத்தில் பொங்க, குழந்தையின் குதூகலத்துடன் “திருச்சிற்றம்பலம்” என்றாள் வீரமா தேவி.

கோயில் தொழுவத்தில் கட்டப்படாமல் நிற்கும் கோயில் காளை, அந்த நேரத்தில் தொழுவத்தில் இருந்து கிளம்பி வந்து, கோயில் முன் வந்து நின்று “ம்மா…” என்று எக்காளம் செய்தது அப்போது.

“திருச்சிற்றம்பலம்,” என்ற பேரரசர் இராசேந்திர சோழ தேவர் விழிகளில், கோயில் காளை, பிறைசூடிய பெருவுடையார், மான்கள் விளையாடும், கொன்றை சூடிய சோழ கங்கம் ஏரி விரிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *