கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 3, 2024
பார்வையிட்டோர்: 3,558 
 
 

(2003ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6

அத்தியாயம்-1

ஒன்பது சதுரத்தில் சுமாரான வீடு. சிவபுண்ணியம் நடு கூடத்தில் அமர்ந்து நிதானமாக தினசரி மேய்ந்து கொண்டிருந்தார். அவர் மனைவி சமையற்கட்டில் வேலையாய் இருந்தாள்.

பள்ளிக்கூடத்திற்குச் சென்ற மகள் பிரியா பட்டப் படிப்பில் மூன்றாம் வருடம். வாசலில் ஸ்கூட்டியைக் கொண்டு வந்து நிறுத்தினாள். வண்டி பெட்டியைத் திறந்து என்னென்னமோ அள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.

மகளைப் பார்த்த சிவபுண்ணியம் படிப்பை நிறுத்தினார். தினசரியைக் கீழே இறக்கி, ‘‘ என்னம்மா ?‘‘ என்றார்.

‘‘மார்க் லிஸ்ட்டைப் பாருங்க‘‘ – தான் கொண்டு வந்ததை அப்படியே அப்பா மடியில் கிடத்திவிட்டு பக்கத்தில் அமர்ந்தாள்.

சிவபுண்ணியம் ஆவலாக அவள் கொடுத்ததைப் பிரித்தார். மதிப்பெண் பட்டியலை எடுத்தார். மகள் வாங்கிய மதிப்பெண்களை வரிசையாக பார்த்தார்.

98, 99, 97, 99, 96 ……..

‘‘ஏன்ம்மா நூறே இல்லே. பேப்பர் திருத்தினவருக்கு நூறு போடத் தெரியலையா, மனசில்லையா…?‘‘ – கேட்டார்.

‘‘அதான்ப்பா எனக்கும் தெரியலை!‘‘ ப்ரியா முகத்தைத் தொங்கலாக வைத்துக்கொண்டு சிரிக்காமல் பதில் சொன்னாள்.

‘‘சௌம்மியா!‘‘ சிவபுண்ணியம் மனைவிக்குக் குரல் கொடுத்தார்.

‘‘கை வேலையாய் இருக்கேன். என்ன சொல்லுங்க ?‘‘ அவள் அங்கிருந்தபடியே குரல் கொடுத்தாள்.

‘‘என்ன பெரிய கை வேலை…? சோறாக்குவே, குழம்பு வைப்பே. எதுவா இருந்தாலும் அப்படியே போட்டு;ட்டு இங்கே வா. வந்து… உன் மக செய்ஞ்சிருக்கிற வேலையைப் பார். ‘‘

குழம்பைத் தாளித்து மூடி,‘‘ என்ன?‘‘ கையைத் துடைத்துக் கொண்டே அவர்கள் அருகில் வந்தாள்.

‘‘இதைப் பார்!‘‘ – சிவபுண்ணியம் பிரியா கொடுத்து மதிப்பெண் பட்டியெலை எடு;த்து மனைவி கையில் கொடுத்தார்.

வாங்கிப் பார்த்த சௌம்மியாவிற்குக் கண்கள் விரிந்தது.

‘‘நான்தான்ம்மா தமிழ்நாட்டிலேயே பர்ஸ்ட்.!‘‘

‘‘அப்புடியா..? வெரிகுட்! வெரிகுட்! அப்போ முதலமைச்சர் கையால பரிசு, விருது வாங்குவே. தினத்தந்தி பரிசு கெடைக்கும.; உள்@ர் அரிமா சங்கம், ரோட்டரி கிளப் எல்லாத்திலேயும் பரிசு வாங்குவே, பாராட்டுவாங்க.‘‘ – சிவபுண்ணியம் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு பெருமையாய் சொன்னார்.

‘‘அடுத்ததையும் கேட்டுக்கோங்கப்பா. நான் மாநில அளவுல துப்பாக்கி சுடும் போட்டியில முதல். நீளம் உயரம் தாண்டுதல்ல இரண்டாவது. பேச்சுப் போட்டியில முதல்…‘‘

‘‘வாயை மூடு மொதல்ல நான் திருஷ்டி எடுத்து வர்றேன் அப்புறம் பேசலாம். ‘‘- சௌம்மியா அவசரமாக எழுந்து உள்ளே நடந்தாள்.

‘‘ஏன்டி! எல்லாத்துக்கும் ஒரே சுத்தலா இல்ல தனித்தனியா?‘‘

‘‘உங்களுக்கு எல்லாம் கிண்டல்தான்!‘‘ பதில் சொல்லி அவர் பேச்சை பொருட்படுத்தாமல் நடந்தாள்.

‘‘இன்டர்நெட்டை கையில வைச்சக்கிட்டு ஆயிரம்தான் உலகம் கைக்குள் இருந்தாலும் பெண்கள் இன்னும் இந்த சென்டிமென்ட் மூடப் பழக்க வழக்கத்தை மாத்திக்க மாட்டாங்க. ஏன்ம்மா இதெல்லாம் நம்புறீயா?‘‘ மகளைப் பார்த்தார்.

‘‘நம்பலை. ஆனாலும் மத்தவங்க திருப்திக்காக செய்யிறதை நான் தடுக்க விரும்பலை.‘‘

‘‘ரொம்ப சரி. தெரிஞ்சும் மத்தவங்க வருத்தப்படுவாங்கன்னு நாம ஏத்துக்கிறதுனாலதான். இன்னும் இதெல்லாம் இருக்கு‘‘.

ப்ரியா ஒப்புக்கொண்டதற்கு அடையாளமாக தலை கவிழ்ந்தாள். அதற்குள் சௌம்மியா தாம்பாளத்தில் கொட்டாங்குச்சி, மிளகாயை எரியவிட்டுக்கொண்டு வந்தாள்.

‘‘ஏன்டி! இதுக்கெல்லாம் கொட்டாங்குச்சி தயாராய் வைச்சிருப்பியா?‘‘

‘‘வாயை மூடுங்க. தேங்காயைத் துருவிட்டு கொட்டாங்குச்சியை இதுக்காகப் போட்டு வைச்சிருந்தா ஒன்னும் கெட்டுப்போயிடாது.‘‘ என்று சொல்லிக்கொண்டே வந்தவள் ப்ரியா தலையைத் தாம்பாளத்தால் மூன்று சுற்று சுற்றினாள். மகள் முன்னே தீபாரதனை போல காட்டி, ‘‘காரி துப்பு !‘‘ நீட்டினாள்.

‘‘சௌம்மியா! அக்னி தெய்வம் ! காரித் துப்புறது சரியா?’’ சிவபுண்ணியத்திற்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. மனைவி வாயைப் பிடுங்குவதற்காக அப்படிச் சொன்னார்.

‘‘ஐயோ உங்களை வைச்சிக்கிட்டு ஒன்னு செய்ய முடியாது.’’ என்று கணவனைக் கடுப்படித்தவள் மகளைப் பார்த்து, ‘‘ ப்ரியா துப்பு..!” மகளைப் பார்த்துக் கட்டளையிட்டாள்.

துப்பினாள். சௌம்மியா எரியும் தாம்பாளத்தட்டுடன் அப்படியே வாசலுக்குச் சென்றாள்.

போன் மணி அடித்தது.

‘‘ஹலோ!’’ சிவபுண்ணியம் எடுத்தார்.

‘‘பேங்க் மேனேஜர் வீடுங்களா?‘‘

‘‘ஆமா.‘‘

‘‘நாங்க கேபிள் டி.வி. ஆப்பரேட்டர் பேசறோம்.‘‘

‘‘ஒரு ஆள்தானே பேசுறீங்க.‘‘

எதிர்பக்கத்தில் மௌனம்.

‘‘சொல்லுங்க.?‘‘

‘‘உங்க பொண்ணுதானே ப்ரியா?‘‘

சிவபுண்ணியம் ஒருகணம் நிதானித்தார்.

சமாளித்து ‘‘என்ன விசயம்?‘‘ – என்றார்.

‘‘சாயந்தரம் வர்றோம். வீட்டுல எல்லாரும் இருங்க. உங்க பொண்ணை பேட்டி எடுத்து கேபிள்ல ஒளிபரப்பு செய்யனும்.‘‘

‘‘ஏன்?‘‘

‘‘விசயம் தெரிஞ்சு விளையாடாதீங்க சார். கௌரவிக்கிறோம்.‘‘

‘‘வேணாம்ப்பா.‘‘

‘‘ஏன் சார்?‘‘

‘‘நாங்களே காசு கொடுத்து விளம்பரம் தேடிக்கிட்டதா சொல்லுவாங்க‘‘

‘‘நாங்க வர்றோம் சார். ‘‘- அவன் வைத்தான்.

அடுத்த மணி அடித்தது.

எடுத்தார்.

‘‘சார்! நான் தினத்தந்தி நிருபர் பேசறேன். எங்க தலைமை அலுவலகத்திலேர்ந்து உடனே உங்க பெண்ணையும், குடும்பத்தையும் பேட்டி எடுத்து அனுப்பச் சொல்லி சேதி வந்திருக்கு சார் ‘‘

‘‘எப்போ வர்றீங்க?‘‘

‘‘மாலை அஞ்சு மணிக்கு.‘‘

வைத்தார்.

அடுத்தடுத்து போன் கால்கள்.!!!

சௌம்மியா உள்ளே வந்தாள்.

‘‘அடுத்து ஒரு ஆரத்தி ரெடியா எடுத்து வைச்சுக்கோ. டி.வி பத்திரிக்கைகாரங்கலெல்லாம் வர்றாங்க.‘‘

கேட்ட சௌம்மியாவிற்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. ‘‘என் ராசாத்தி!‘‘ மகளைக் கட்டி இறுக அணைத்தாள். வாசலில் அழைப்பு அடித்தது.

‘‘என்னங்க?‘‘ சௌம்மியா பயத்துடன் கணவரை அழைத்தாள்.

‘‘என்ன?‘‘

‘‘பத்திரிக்கை, பாராட்ட வர்றேன்னு சொல்லி நாலைஞ்சு தடிப்பசங்க வீட்டுல நுழைஞ்சி கொள்ளையடிக்கப் போறாங்க.’’ சொன்னாள்.

‘‘இந்தப் பட்டப்பகல்லேயா?‘‘ சிவபுண்ணியத்திற்கும் திக்கென்றது.

அடுத்தத் தெருவில் இப்படியொரு அசம்பாவிதம் நடந்தது – நினைவிற்கு வந்தது.

‘‘நம்ம பொண்ணுக்குக் கராத்தே தெரியும்டி‘‘ – துணிந்து சென்றார். திறந்தார்.

மூன்று இளைஞர்கள் நின்றார்கள். ஒருவன் தோளில் கேமரா மாட்டியிருந்தான்.

‘‘சார் நாங்க ஹிண்டுலேர்ந்து வர்றோம்‘‘

‘‘எங்கே இருந்து?’’

‘‘சென்னையிலேர்ந்து.’’

ஆட்களைப் பார்த்ததும் திருப்தியாக இருந்தது.

இனி மூடிப் போட்டு மூடினாலும் முடியாது. சிவபுண்ணியத்துக்குள் தெளிவாக தெரிந்தது.

‘‘வாங்க‘‘‘- உள்ளே அழைத்தார்.

குடும்பத்தையே போட்டோ எடுத்து, அப்புறம் பிரியாவைத் தனியே எடுத்து, பேட்டி ஆரம்பமாக….

இந்த பாராட்டுதல்களும் பெருமையும் நியாயமாக யாருக்குப் போய் சேர வேண்டும்? யோசிக்க…

சிவபுண்ணியத்திற்குள் கடந்த காலம் கண்ணுக்குள் வந்தது.

சுற்றி நடப்பது எதுவும் தெரியாமல் நாற்காலியில் சாய்ந்தார்.

2
அரசுடைமை ஆக்கப்பட்ட அந்த வங்கி நகரின் பிரதான சாலையில் அமைந்திருந்தது. வடக்கே….எதிரெதிரே இரண்டு அரசுப் பள்ளிகள். அடுத்து ஒரு சின்ன டீக்கடை. அருகில் பங்க் கடை. பக்கத்தில் மளிகை, காய்கறியென்று அந்த இடமே கலகல.

வங்கியில் காலையில்தான் வாடிக்கையாளர்கள் பரபரப்பு. மாலையில் கணக்கு வழக்கு.

அதில் வேலை செய்யும்….சேகர், ச்pவா, சிவபுண்ணியம், கணேஷ், தினேஷ் எல்லாருக்கும் மாலை 4.00 மணி என்பது தேநீர் நேரம்.

சாந்தி டீ கடையில்தான் கணக்கு. மாதம் பிறந்ததும் பட்டுவாடா.

இருபது ஆண்டுகளுக்கு முன் அப்படித்தான் எல்லாரும் டீ குடிக்கச் சென்றார்கள். டீக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு நின்றார்கள். பிரதான சாலை போக்குவரத்தாக இருந்தது. அதையும் மீறி…

‘‘உன் மவனை நீயே வைச்சுக்கோடி. பொண்ணு வேணுமாம் பொண்ணு. போடி போக்கத்தவளே!‘ ‘- வசைவுகளை வீசியப்படி வித்தியாசமான குரல் கேட்டது.

எல்லோரும் திரும்பி பார்த்தார்கள்.

சிவந்த உடல். மேலும் கீழும் கிழிந்த உடை. நீண்ட முடி. வயது இருபத்தைந்துக்குள்ளிருக்கும். பைத்தியக்காரி ! இல்லை… மனம் நலம் பிறழ்ன்றவள். எவரையோ சபித்துக்கொண்டு சென்றாள். நிச்சயம் மாமியாரை இருக்கும். இல்லை நாத்தனாரையாய் இருக்கும். வரதட்சணைக் கொடுமையோ வேறு என்ன கொடுமையோ செய்திருப்பார்கள். இதில் கணவனும் சேர்ந்திருப்பான் இல்லை, உடந்தையாய் இருந்திருப்பான். அடக்கி அடக்கி வைக்க அவளுக்குள் பைத்தியமாகி…இல்லை அடி கொடுத்துக்கூட இவள் இப்படி ஆகி இருக்கலாம். எல்லோருக்கும் பட்டது.

‘‘ச்சே! என்ன கொடுமைடா இது?‘‘ சிவபுண்ணியம் வாய்விட்டு தன் வருத்தத்தைத் தெரியப்படுத்தினான்.

‘‘கொடுமைதான்! என்ன பண்றது? பணத்துக்காகவோ வேறெதுக்காகவோ இதெல்லாம் நடக்குது. ஒரு பொண்ணோட வாழ்க்கையைக் கெடுத்து… இப்படி நடு ரோட்டுல விட்டவர்களைச் சுட்டுத் தள்ளனும்.‘‘ – கணேஷ் தன் பங்கிற்குக் கோபப்பட்டான்.

‘‘பைத்தியம் பிடிச்சதும் வெளியே தள்ளிட்டாங்களா. இல்லை வெளியே தள்ளினதும் பைத்தியம் பிடிச்சுதா தெரியலை. எப்படி இருந்தாலும் இப்போ மன வியாதிக்கெல்லாம் சரியான வைத்தியம் உண்டு. கவனிக்காம விட்டுட்டா பைத்தியம்!” – தினேஷ் தன் கருத்தைச் சொன்னான்.

‘‘ஆமாம்.! இவன் சொல்றது சரி. என் தங்கைக்கு இது மாதிரிதான் புருசன் சரியில்லேன்னு மனம் பேதலிச்சுப் போயிச்சு. மாமியார் வீட்ல பேய் பிசாசு பிடிச்சிருக்குன்னு ஓட்டி… பின்னால நான் மனநல டாக்டரைப் பார்த்து வைத்தியம் பார்த்ததும் குணமாகிட்டா. இவ சொந்தக்காரங்க அக்கறை இல்லாம விட்டுட்டாங்க. அவுங்களுக்கென்ன இவ போனா வரதட்சணையோட அடுத்தவ. புருசனும் புது மாப்பிள்ளை. எவனுக்குக் கசக்கும்?!”

‘‘பேச்சுப் போதும் சார். டீ ஆறுது.‘‘ – டீ மாஸ்டர் நினைவுறுத்தினார்.

எல்லோரும் எடுத்துக் கொண்டார்கள்.

‘‘யார் அது ?‘‘ – சிவபுண்ணியம் டீயை உறிஞ்சுக்கொண்டே மாஸ்டரைக் கேட்டான்.

‘‘எதுவோ பொறம்போக்கு. நாலைஞ்சு நாளா இங்கதான் சுத்துது, இங்கே அங்கே படுக்கை. இந்த கடையில டீ, இட்லி, எதிர் கடையில வாழைப்பழம்இ பன்னு பொழுது ஓடுது,‘‘

‘‘யாருன்னு விசாரிக்கலையா?‘‘

‘‘யாரை எப்படி விசாரிக்கிறது. அதைக் கேட்டா சொல்லத் தெரியாது. அப்படியும் இட்லி கொடுக்கும்போது சர்வர் முந்தாநாள், நீ என்ன ஊருன்னு விசாரிச்சான். சொல்லத் தெரியலை. பேசாம நின்னு குடுத்ததை வாங்கிக்கிட்டு போயிட்டு.‘‘ – நிறுத்தினான்.

“இதுனால நமக்கு ஒன்னும் பாதிப்பு இல்ல சார். பசிச்சா இங்கே வந்து செவனேன்னு நிக்கும். குடுத்தா வாங்கிப் போவும். குடுக்காட்டியும் அப்பால போன்னு சொன்னா அடாவடிப் பண்ணாது. பெரும்பாலும் அப்புடி சொல்றது இல்லே. போவுதா இல்லியான்னு பார்க்க ஒருநாள் அப்புடி சொன்னதோட சரி. மொதலாளியே இரக்கப்பட்டு, ‘பாவம்! பசின்னு வந்து நிக்குது. அப்புடி சொல்லாதீங்க..’ போட்டனுப்புங்கன்னார். கொறைச்சுக் குடுத்தாலும் நிறையக் குடுத்தாலும் வாய் வார்த்தை பேசாம போவும் சார். எதிர்ல உள்ள பங்க் கடையிலேயும் அது மாதிரிதான்.” என்று சர்வர் வந்து ஒப்பித்தான்.

‘‘ ……’’

‘‘ஆனா பசங்கதான் பார்த்தா கல்லால அடிக்குது. நேத்து அடிச்சு மண்டையில காயம் !‘‘ சொல்லி வருத்தப்பட்டான். எல்லாருக்கும் கேட்க கஷ்டமாக இருந்தது..

‘‘பேரு என்ன தெரியுமா ?‘‘- சிவா கேட்டான்.

‘‘தெரியலை. ரோட்டுக்கு அப்பால எதிர்ல உள்ள ஒதியன் மரத்தடியில எப்போதும் உட்கார்ந்திருக்கும் ராணின்னு கூப்பிட்டா வரும்.’’ – சர்வர் சொல்லி வாய் மூடவில்லை.

பத்தடிதூரத்தில் சிறுவர்கள் பயப் பீதி, உற்சாகமாய் ‘‘…பைத்தியம்டோய்…! ‘‘- கத்தி கல்லெடுத்து அவளைப் பார்த்து வீசினார்கள்.

‘‘இப்புடித்தான்சார் பசங்க அநியாயம் பண்றாங்க. தன்னைக் காப்பாத்திக்க இது கல்லெடுத்து அடிக்க ஒரே கலாட்டா சார்.‘‘- மாஸ்டர் வருத்தப்பட்டார்.

அவள் கல் மழையில் நனைவதைப் பார்க்க எல்லோருக்கும் கஷ்டமாக இருந்தது.

அப்போது அந்த வழியாய் வந்த பெரியவர் ஒருத்தர், ‘‘டேய் ஓடுங்கடா ‘‘- கையிலிருந்த கம்பை ஓங்கினார். பையன்கள் பறந்தார்கள்.

சிவபுண்ணியத்திற்கு அலுவலகம் வந்தும் வேலை ஓடவில்லை. ராணி மனசுக்குள்ளேயே அலைந்தாள். அவள் உருவம், கஷ்டம,; கல்லடிப்பட்டது எல்லாம் கண்ணுக்குள்ளேயே வந்தது.

‘வெள்ளிக்கிழமை கோயிலுக்குப் போகனும் சீக்கிரம் வந்துடுங்க‘ மனைவி சொன்னது நினைவு வர…. ஒரு மணி நேரம் மேலாளரிடம் அனுமதி பெற்றுக்கொண்டு முன்னதாகவே புறப்பட்டான்.

சௌம்மியா வீட்டில் தயாராகவே இருந்தாள். இவனை எதிர்பார்த்து காத்திருந்தாள்.

சிவபுண்ணியம் முகம் கழுவி உடை மாற்றி புறப்பட்டான்.

சாந்தி டீக்கடைக்கும் அப்பால்தான் சிவன் கோயில். மனைவி கையில் பூசை சாமான் கூடை. இருவரும் சேர்ந்து நடந்தார்கள்.

சாமியைத் தரிசித்து விட்டு வரும்போதுஇ ‘‘கஷ்டகாலம்!‘‘ தலையிலடித்துக் கொண்டு கவிழ்நது நடந்தாள்.

‘‘என்னடி?‘‘

‘‘அங்க பாருங்க‘‘ – தலை நிமிராமலேயே எதிர்திசையைக் காட்டினாள்.

ராணி; நின்று கொண்டிருந்தாள்.

‘‘என்ன?‘‘- சிவபுண்ணியம் புரியாமல் பார்த்தான்.

‘‘ம்…ம் ஒன்னுமில்லே” – முகத்தில் ஒருவித நாணம். அருவருப்பு கவிழ்ந்தாள்.

‘‘என்ன சொல்லு?‘‘

‘‘இப்புடிப்பட்ட பொறப்பெல்லாம் ஆண்டவன் கொன்னே போட்டுடலாம். வைச்சிருக்கத் தேவையில்லே. இல்லே அரசாங்கம்கூட இதை செய்யலாம். ‘‘- புலம்பிக்கொண்டே நடந்தாள். தலை நிமிரவில்லை.

‘‘என்ன சௌம்மியா பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்றே?‘‘

‘‘ஒன்னுமில்லே சும்மா வாங்க ‘‘- விடுவிடுவென்று நடந்தாள்.

‘‘நீ சொல்லலைன்னா தலை வெடிச்சுடும்.‘‘- நின்றான்.

‘‘அந்த பையித்தியத்தைப் பாருங்க ஒதுங்கி இருக்கா போலிருக்கு.. துணி மாத்தக்கூட புத்தி இல்லே. இதெல்லாம் இருந்து…‘‘ பேசிக்கொண்டே போனாள்.

பார்த்த சிவபுண்ணியத்திற்கு அதிர்ச்சியாய் இருந்தது. அவள் பின் பக்கப் புடவையில் அடையாய் ரத்தக்கறை. பெண்ணின் மாதவிலக்கு!

இவளுக்குப் புத்தி சுவாதீனமில்லையென்றால் இயற்கை தன் வேலையைச் செய்யாமலிருக்குமா?!

மறுநாள். வழக்கம் போல் சேகர், கணேஷ், சிவா, சிவபுண்ணியம், தினேஷ் எல்லாரும் தேநீர் நேரத்தில் சாந்தி கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார்கள்.

‘‘என்னடா மெறைக்கிறே?‘‘- ராணி எதிரில் வந்த இளைஞனைப் பார்த்துத் திட்டினாள்.

அவன் தலையைத் தாழ்த்தி, தரையைப் பார்த்து திருட்டு முழி முழித்துச் சென்றான்.

‘‘என்ன ராணி?‘‘ மாஸ்டர் இங்கிருந்தபடியே குரல் கொடுத்தார்.

‘‘இதைப் பார்க்கிறான்.‘‘ – அவள் கொஞ்சமும் கூச்சம், வெட்கமில்லாமல் தன் மார்பைக் காட்டினாள்.

அதில் கிழிந்த முந்தானை… மார்பில் கயிறாக முறுக்கிக் கிடந்தது. ஜாக்கெட்டின் கிழிவின் வழியே அவள் மாம்பகம்..பளிச்சென்று திமிறி திண்ணென்று தெரிந்தது.

‘‘அட பேமானி!‘‘- பதை பதைத்து… சர்வர் பார்த்துச் சென்றவனைத் திட்டினான்.

‘‘ரொம்ப கயவாளித்தனமாப் போச்சு. யாரை எப்புடி பார்க்கனும்ங்குற வெவஸ்தை இல்லே. நாய்ங்க உரலுக்குப் புடவையைச் சுத்தி இருந்தாக்கூட பொம்பளையான்னு தூக்கிப் பார்த்துட்டுப் போகும் போலிருக்கு.‘‘ மாஸ்டர் தன் பங்கிற்குத் திட்டினார்.

‘ஐயோ பாவம்ன்னு குளிருக்கு நடுங்கின மயிலுக்குப் பேகன் மேலாடைப் போர்த்தின காலம் போய்… இது என்ன வக்கிரம்?‘ – கணேஷ் டீயை முடித்துவிட்டு நடந்தான். மற்றவர்களும் அவனைத் தொடர்ந்தார்கள்.

‘‘தான் சுய புத்தியில இல்லேன்னாலும் பெண் பெண்ணா இருக்காள்லே?‘‘ தினேஷ் சிகரெட்டைப் புகைத்துக் கெண்டே சொன்னான்.

‘‘ஆமா. எதிரி எப்புடி பார்க்கிறான்னு அவளுக்குத் தெரியுது.‘‘ சேகர் பதில் சொன்னான்.

‘‘தொரை! இவ பைத்தியமா பைத்தியம் போல நடிக்கிறாளா ?‘‘ சிவா தன் சந்தேகத்தை வெளியிட்டான். ‘‘ஒரு வயசுப் பொண்ணு இப்படியெல்லாம் நடிச்சி நடு ரோட்டுல கெடக்க முடியாது. எந்த மவராசி பெத்த பொண்ணோ நல்ல குடும்பம்ன்னு நெனைக்கிறேன். இப்படி சீரழியுது.‘‘ – தினேஷ் வருத்தப்பட்டான்.

‘‘கிழவி, குமரி, பொண்ணு எந்த நெலையில இருந்தாலும் சுதாரிப்பா இருக்கா பாரு இதுதான் நம் ரத்தத்தோட ஊறிப்போன தமிழ் மண் கலாச்சாரம்.!‘‘ -சிவபுண்ணியம் பெருமையாய்ச் சொல்லி வாய் மூடுவதற்குள்…

‘‘ஹாய்!…‘‘எதிர் திசையிலிருந்து ஒருவன் உற்சாகமாக கையசைத்தான்.

3

சிவபுண்ணியம் பழக்கப்பட்ட குரல் போலிருக்கப் பார்த்தான். எதிர் பேருந்து நிறுத்தத்திலிருந்து இவன் பால்ய சிநேகிதன். உள்ளூர்க்காரன் ஒரே படிப்பு பி.எஸ்.சி. அவன் தற்போது மெடிக்கல் ரெப்ரசென்டேட்டிவ்.

“மதன்!‘‘ – சிவபுண்ணியத்திற்கு நண்பனைக் கண்டதில் மகிழ்ச்சி.

‘‘எப்போ வந்தே?‘‘உற்சாகமாய்க் குரல் கொடுத்தான்.

‘‘இப்போதான் பேருந்தைவிட்டு இறங்கினேன். நீ வர்றே‘‘ – அவன் அருகில் வந்தான். ‘‘சின்னதா சிங்கில் டீ அடிக்கலாம்‘‘ என்றான்.

இவன் சகஊழியர்களுக்கு நண்பனை அறிமுகப்படுத்திவிட்டு, “எனக்கு ஒரு மணி நேரம் அனுமதி சொல்லுங்கப்பா. வர்றேன். ‘‘அவனை அழைத்துக்கொண்டு நடந்தான்.

திரும்ப டீக்கடை.

‘‘ஊர்ல அப்பா அம்மாவெல்லாம் எப்புடி இருக்காங்க?‘‘ சிவபுண்ணியம் மதனை விசாரித்துக்கொண்டே மாஸ்டரிடம் ஒரு விரல் காட்டினான்.

‘‘நல்லா இருக்காங்க. உனக்கு டீ?‘‘

‘‘இப்போதான் குடிச்சேன் வேணாம்.’’

‘‘சார் டீ!‘‘- மாஸ்டர் போட்டு வைத்ததார்

மதன் எடுத்துக்கொண்டான்.

‘‘பொறுக்கி கம்மனாட்டி!‘‘- திரும்ப ராணி யாரையோ சபித்து சத்தம் போட்டுச் சென்றாள்.

‘‘யார்டா அவ? ‘‘மதன் பாதி டீயை விழுங்கியவாறே கேட்டான்.

‘‘தெரியலை…? பைத்தியம்!‘‘

‘‘புகை படிஞ்ச ரவிவர்மா ஓவியம் போலிருக்கா.‘‘

‘‘இன்னும் உனக்கு அந்த பொறுக்கிப் புத்தி போகலையா?’’ சிவபுண்ணியம் அவனைப் பார்த்து சட்டென்று கேட்டான். ‘‘பொறந்ததிலேர்ந்து ஊறினதாச்சே எப்படி போகும்.’’ மதன் நண்பனுக்குத் திரும்ப பதில் சொன்னான்.

‘‘நீ பார்க்கிறதை அவ பார்த்தா கல்லெடுத்து அடிப்பா. ஏற்கனவே நாலைஞ்சு பேர் வாங்கி கட்டியிருக்காங்க. சரி வேற பேச்சு பேசுவோம். அவ தலைவிதி பாவம் அலையுறா.‘‘ – சிவபுண்ணியம் பேச்சைத் திருப்பினான்.

‘‘ஓ.கே. இன்னையிலேர்ந்து ஒரு வாரம் இந்த ஊர்ல கேம்ப்’’ என்றான் மதன்.

‘‘அவ்வளவு வேலையா?‘‘

‘‘வேலை குறைவுதான். தண்ணி அடிக்காம ரொம்ப நாளாய்க் காய்ஞ்சு கெடக்கேன். எங்கேயும் நல்ல சரக்கு கெடைக்கிறதில்லே. இங்கே வந்தாத்தானே எல்லாத்துக்கும் வசதி,‘‘

‘‘நான் குடிக்கிறதை விட்டு ரொம்ப நாளாச்சு.‘‘

‘‘ஏன் பொண்டாட்டி திட்டினாளா?‘‘

‘‘எனக்குப் பிடிக்கலை. கலியாணம் பண்ணினா மனுசன் மாறனும்?!‘‘

‘‘ஆக மாறிட்டே?‘‘

‘‘நீயும் மாறிடுவே!‘‘

‘‘அது மனைவின்னு ஒருத்தி வந்தப்பிறகு பார்த்துக்கலாம்.!‘‘

‘‘மனைவி வருத்தப்படும்போது விட்டுடனும்.‘‘

‘‘செய்யலாம். இன்னைக்கு ராத்திரி கம்பெனிக்காக வாயேன்.‘‘

‘‘வர்றேன். குடின்னு வற்புருத்தக்கூடாது.‘‘

‘‘வேணாம்ப்பா வம்பு. சௌம்மியாவுக்கு நான் பதில் சொல்லனும்.‘‘

‘‘வீட்டுக்குப் போகலாமா?‘‘

‘‘இன்னைக்கு ராத்திரி மட்டும் உன் வீட்டுல தங்கல். மத்தபடி லாட்ஜ்.‘‘

‘‘ஒருவாரமும் தங்கலாமே?!‘‘

‘‘உனக்கு சிரமம். என்னாலேயும் சுதந்திரமா இருக்க முடியாது,‘‘

‘‘ஓ.கே உன்னிஷ்டம். ஆனா ஒரு கண்டிசன். ரொம்ப குடிச்சிட்டு சகதியில பொரளக்கூடாது.‘‘

‘‘இன்னைக்கு அப்புடி நடக்காது.‘‘

‘‘ஏன்??‘‘

‘‘சௌம்மியா இல்லேன்னாதான் அப்புடி‘‘.

‘‘வீட்டுக்குப் போகலாமா?‘‘

‘‘போலாம். ‘‘- நடந்தார்கள். அலுவலகம் வந்து ஹீரோ ஹோண்டாவில் ஏறி வீட்டில் இறங்க….

‘‘வாங்கண்ணா !‘‘ – சௌம்மியா வரவேற்றாள்.

அவளுக்கு மதனென்றால் உயிர். அண்ணன் இல்லாத குறையைத் தீர்க்கும் மனநிறைவு. மேலும் சோகம் சுமப்பவன் என்னும் பரிவு. மதனும் அவள் மீது அன்பாக இருப்பான். ஒண்டியாய்ப் பிறந்தவன். பாசம் காட்ட ஆள் இல்லாததால் இவள் மீது வாஞ்சை. அண்ணன் தங்கையாய் மாறி மாறி பாசம் பொழிவார்கள். மதன் எங்கு கிடந்தாலும் சரி இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இவளை வந்து பார்த்துப் போவான். இல்லையென்றால் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவான்.

சௌம்மியாவிற்கு அவன் வருவதில் உள்ளுர மகிழ்ச்சி திருப்தி யென்றாலும் ‘‘தண்ணி அடிக்க வர்றே?‘‘ வெறியேற்றுவாள்.

மதனும் சளைக்க மாட்டான்.

‘‘அப்படித்தான் வைச்சுக்கோயேன். உன்னைப் பார்த்த திருப்தி. அப்புறம் அப்புடியே தண்ணியடிக்கிற சந்தோசம்‘‘ – மறைக்காமல் ஒப்புக்கொள்வான்.

‘‘அப்போ என்னைப் பார்க்க வரலை ?!‘‘- சிவபுண்ணியம் இடையில் நுழைவான்.

‘‘நீ இல்லாம இவ ஏது?‘‘ – நண்பனைத் தேற்றுவான். எல்லாரும் மாறி மாறி பாசம் பொழிந்தாலும் ‘‘அண்ணா! திருமணம் செய்யனும்‘‘ – சௌம்மியா வற்புறுத்துவாள். ‘‘அது முடிஞ்சு போன சமாச்சாரம் ! ‘‘- மதன் ஒரேயடியாக மறுப்பான். திருமணப் பேச்சையே வெறுப்பான்.

வீடு சென்ற போது ‘‘வாங்கண்ணே !’’ சௌம்மியா வழக்கம் போல் வாய் நிறைய வரவேற்றாள்.

சௌக்கியங்கள் விசாரித்தாள்.

இரவு…

பாரில் இசை ரம்மியமாக ஒளித்துக் கொண்டிருந்தது. மதனுக்குப் பாதி சுதி ஏறி இருந்தது.

சிவபுண்ணியம் 7அப்பை கிளாசில் ஊற்றிப் பாதி முடித்திருந்தான்.

‘‘உனக்கு ரொம்ப மனக்கட்டுபாடு சிவம். அரைப் பாட்டில எதுவும் கலக்காம ராவா அடிக்கிற நீ எப்படிடா இப்புடி மாறினே?!’’ மதன் ஆச்சரியப்பட்டான்.

சிவபுண்ணியம் புன்னகைத்துக்கொண்டே தனக்கு வந்த ஆம்லேட்டை சாப்பிட்டான்.

‘‘மன்னிச்சுக்கோடா. இனிமே உன்னை சத்தியமா பாருக்கு கூட்டிவரமாட்டேன்.!’’ பாட்டிலை எடுத்து அப்படியே குடித்தான்.

‘‘மதன்! வருத்தத்துல நீ அதிகம் குடிக்காதே. எழுந்திரி போகலாம். குடி குடியைக் கெடுக்கும்.’’

‘‘போதையில புத்தி சொல்லாதேடா. போதையும் ஏறாது. புத்தியும் ஏறாது. பைத்தியம் பாவமில்லே…?’’

திடீரென்று ஏன் ராணி பேச்சு…? அவள் மேல் புத்தி…? சிவபுண்ணியத்திற்குத் திக்கென்றது.

சிலருக்குப் போதை ஏறினால் வீரம் வரும்.

‘‘டாய்ய்….!!’’ தள்ளாடுவார்கள்.

பிடறியில் ஒன்று போட்டால் பொத்தென்று விழுவார்கள். இன்னும் சிலருக்கு போதையில் செத்துப்போன அம்மா ஆத்தாள் அப்பா ஞாபகம் வரும். குலுங்கிக் குலுங்கி அழுவார்கள்.

இன்னும் சிலர் காரணகாரியமில்லாமல் சிரிப்பார்கள்.

மதன் ? சிவபுண்ணியம் நண்பனைக் கூர்ந்து பார்த்தான். ‘‘குடியைத் தற்போது தங்கச்சிக்காக முடிச்சுக்கிறேன்.!’’ மதன் சொல்லி எழுந்தான்.

வெளியே வந்தார்கள்.

‘‘நாம வீட்டுக்குப் போனதும் எனக்கு வெளியே கொண்டு வந்து பாயைப் போடு.’’ சொன்னான் மதன். ‘‘வேணாம் உள்ளாறயே படுக்கலாம்.’’

‘‘தமிழ்நாட்டுச் சரக்குன்னு நெனைச்சு குடிச்சிட்டேன் போதை அதிகமா இருக்கிற மாதிரி இருக்கு. வாந்தி எடுத்தாலும் கழுவிவிட வசதி சுலபம்.”

சிவபுண்ணியம் மறுப்பு சொல்லவில்லை.

அவன் சொன்னபடி பாயைப் போட்டு படுக்க வைத்த பிறகு மதன் குறட்டைவிட்டு சுகமாக தூங்கினான்.

சிவபுண்ணியத்திற்கும் சௌம்மியாவிற்கும்தான் தூக்கம் வரவில்லை.

‘‘என்னங்க!..’’

‘‘சொல்லு?’’

‘‘மதன் அண்ணன் இப்புடி குடிச்சிக் குடிச்சி அழியறாரே. குடும்பமாக்கக் கூடாதா… ?’’

‘‘எவன் வேண்டாம்ன்னான். மனைவி செத்துப் போனதிலேர்ந்து பெத்தவங்க வற்புறுத்துறாங்க. இவன்தான் வேண்டாம் வேண்டாம்ன்னு தட்டிக் கழிகிறான்.’’

‘‘அதுக்காக நாமும் இவரை இப்படியே விடுறதா?’’

‘‘என்ன செய்யனும்ங்குறே?’’

‘‘புத்தி சொல்லி கலியாணம் காட்சி ?” இழுத்தாள். ‘‘பார்க்கலாம்!’’

‘‘என்ன இப்படி விட்டேத்தியா சொல்றீங்க?’’

‘‘ஒரு வருசத்துல ஒருத்தியோட வாழ்ந்த வாழ்க்கை போதும்ன்னு சொல்றான்.’’

‘‘ஏன் அவ அந்த அளவுக்கு கொடுமை செய்தாளா?’’

‘‘அறையில நடந்தது அம்பலத்துக்கு வரலை. இவன் சொல்லலை.’’

‘‘உங்ககிட்ட கூடவா..!?’’

‘‘ஆமாம் !’’

‘‘என்னவாங்க இருக்கும்..?’’

‘‘மத்தவங்க ஆராய்ச்சி நமக்கு வேணாம். இப்போ என்னைத் தூங்க விடு.’’ சிவபுண்ணியம் திரும்பிப் படுத்தான். ‘என்ன காரணமாக இருக்கும் ?’ – சௌம்மியா யோசித்துக்கொண்டிருக்கும் போதே கொட்டாவி விட்டாள்.

– தொடரும்…

– 12-05-2003 மாலைமதியில் பிரசுரமான குறுநாவல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *