வேற்று கிரகங்களிலிருந்து வந்த தொல்பொருட்கள்

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: அறிவியல் புனைவு
கதைப்பதிவு: December 3, 2024
பார்வையிட்டோர்: 4,877 
 
 

“சார், நீங்கள் இதை உடனே பார்க்க வேண்டும்.” SETI (Search for Extraterrestrial Intelligence) இயக்குநரின் அலுவலகத்திற்குள் வேகமாக நுழைந்த சாராவின் குரல் லேசாக நடுங்கியது.

டாக்டர் சென் தனது மேசையிலிருந்து நிமிர்ந்து பார்த்தார். “என்ன விஷயம்? நாம் செலுத்திய ஆய்வுக் கோள்கள் திரும்பி வந்தனவா?”

    “ஆமாம் சார். இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் நம்மைப் போல அறிவு கொண்ட உயிரினங்களைத் தேடி ஆயிரம் கிரகங்களுக்கு நாம் அனுப்பிய ஆய்வுக் கோள்களில் பதினெட்டு திரும்பி வந்துள்ளன. அவைகள் வெறும் கையுடன் திரும்பி வரவில்லை. பதினெட்டு கிரகங்களில் அவைகள் ஆய்வு செய்து கண்டெடுத்த தொல்பொருட்களுடன் திரும்பி வந்திருக்கின்றன.”

    “தொல்பொருட்கள்?” டாக்டர் சென் உடனே எழுந்து விட்டார். “கண்டிப்பாக எனக்கு பார்க்க வேண்டும்.”

    சாராவப் பின் தொடர்ந்து பகுப்பாய்வு ஆய்வகத்திற்குச் சென்றார் டாக்டர் சென். அங்கு ஒரு ஐந்தாறு விஞ்ஞானிகள் தொல்பொருட்கள் உள்ளிருந்த கண்ணாடிப் பெட்டிகளைச் சுற்றி குவிந்திருந்தனர். அவரைக் கண்டதும் மரியாதையுடன் வழி விட்டு ஒதுங்கி நின்றனர்.

    முதலாவது கண்ணாடிப் பெட்டிக்குள் இருந்த தொல்பொருள் அவரை அதிர வைத்தது. மிக மிகப் பழமையான அந்தப் பொருள் என்னவென்று ஒரு சிறு குழந்தை கூட சொல்லி விடும் -அது ஒரு சக்கரம்!

    மற்ற கண்ணாடிப் பெட்டிகளுக்குள் இருந்த தொல்பொருள்கள் ஒவ்வொன்றும் – டெலிவிஷன், கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன் – அவரை பிரமிக்க வைத்தன. பல கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள கிரகங்களில் அவைகள் கண்டெடுக்கப்பட்டன என்பதை அவரால் நம்பவே முடியவில்லை.

    கடைசியாக இருந்த கண்ணாடிப் பெட்டி கொஞ்சம் பெரியதாக இருந்தது.

    நான்கடி உயரம் இருந்த அந்தப் பெட்டிக்குள் இருந்த பொருளை முதலில் அவரால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. அருகில் சென்று அதை கூர்ந்து பார்த்தவர் திடுக்கிட்டு திரும்பினார். “இது… இது… ஒரு ரோபோ தானே?”

    ஆமாம் என்பது போல் அமைதியுடன் தலையசைத்தார் அருகிலிருந்த ஒரு விஞ்ஞானி.

    “மை காட்!” என்று உரக்க சொன்ன டாக்டர் சென் ஒரு சில நொடிகளுக்குப் பின் சுதாரித்துக் கொண்டார். “இவைகளுக்கு கார்பன் டேட்டிங் செய்தீர்களா?”

    “இந்தத் தொல்பொருட்கள் எல்லாம் நான்காயிரம் முதல் முப்பதாயிரம் ஆண்டுகள் பழமையானவை,” என்றார் அந்த விஞ்ஞானி . “முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட சக்கரம் தான் மிகப் பழமையான தொல்பொருள். இந்த ரோபோ தான் சமீபத்திய தொல்பொருள். இது நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது.”

    “இது எப்படி சாத்தியம்?” டாக்டர் சென் தனது நரைத்த தலைமுடியை கோதி விட்டுக் கொண்டார். “பதினெட்டு வெவ்வேறு கிரகங்கள், கிட்டத்தட்ட ஒரே மாதிரியான தொழில்நுட்பத்தை உருவாக்கினவா?”

    “நம்புவது கடினம் தான், டாக்டர். வெவ்வேறு கிரகத்தார்கள் அனைவரும் ஒரே மாதிரியான தேர்வுகளை செய்தார்கள் போலிருக்கிறது. டெலிவிஷன், கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன், ரோபோ என்று நம்மைப் போலவே அதே வரிசையில் பொருள்களை கண்டு பிடித்தார்கள் என்பது மிகவும் ஆச்சரியத்தைக் கொடுக்கிறது.”

    “அந்த பதினெட்டு கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வதற்கான அறிகுறிகள் ஏதேனும் இருக்கின்றனவா?”

    “அப்படி எந்த அறிகுறியும் இல்லை, சார். எந்த உயிரும் இல்லாத வெற்று கிரகங்கள் அவை,” என்றாள் சாரா.

    டாக்டர் சென் நீண்ட நேரம் அமைதியாக நின்றார். “ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை நாம் நடத்த வேண்டும்,” என்றார் இறுதியில். “நாம் கண்டுபிடித்ததை உலகம் அறிய வேண்டும்.”

    “சார்…” என்று தயங்கினாள் சாரா. “உடனடியாக இதை உலகிற்கு தெரியப்படுத்துவது சரியல்ல என்று நினைக்கிறேன்.”

    “என்ன உளறுகிறாய்?” என்றார் டாக்டர் சென். “நாம் இருப்பது SETIல். இந்தப் பிரபஞ்சத்திலுள்ள மற்ற கிரகங்களில் அறிவார்ந்த உயிரினங்கள் இருக்கிறார்களா என்று தேடுவது தான் நம்முடைய ஒரே நோக்கம். அதற்கான திட்டவட்டமான ஆதாரங்களை நாம் கண்டுபிடித்த பின் எப்படி அமைதியாக இருக்க முடியும்?”

    “சார், கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். பதினெட்டு கிரகங்களிலும் நாம் கடைசியாக கண்டெடுத்த பொருள் ஒரு ரோபோ. அவைகள் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டன. ரோபோக்களுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட எதையும் நாம் ஏன் கண்டெடுக்கவில்லை?”

    “என்ன சொல்கிறாய்?”

    “ரோபோக்களை உருவாக்கிய வேற்று கிரகத்தார்கள் அதற்குப் பின் உருவாக்குவதை நிறுத்தி விட்டார்கள் என்றே தோன்றுகிறது. அவர்கள் ஏன் நிறுத்தினார்கள் என்பதற்கு ஒரே ஒரு விளக்கம் மட்டுமே இருக்க முடியும்…”

    “மை காட்… ரோபோக்களை உருவாக்கிய பின் வேற்று கிரகத்தார்கள் அனைவரும் அழிந்து விட்டார்கள்!”

    “ஆமாம் சார். மனிதர்களாகிய நாம் இப்போது தான் அந்தக் கால கட்டத்திற்குள் நுழைந்திருக்கிறோம்… ரோபோக்களை உருவாக்க ஆரம்பித்திருக்கிறோம்…”

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *