சொல்லிட்டாளே…





என்னுள் எழும் உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்த வேண்டுமென்பதே என் கொள்கையாகக் கொண்டிருந்தாலும் இப்போது மட்டும் அது இயலாமற் போகிறது.
‘அவளாக ஏதும் சொல்லுமுன் இன்றைக்கு எப்படியாவது அவளிடம் சொல்லிடணும்’ கடந்த சில நாட்களாக எடுக்கும் தீர்மானத்தை இன்றும் எடுத்தேன்.
“என்ன மச்சி தீபிகா பற்றிய யோசனையா” சிவாவின் குரலால் கலைந்தேன்.
“ம்… நானும்தான் உங்கூடவே இருக்கேன், என்னைத் திரும்பிப் பார்க்கமாட்டேங்கிறா…” என்று அங்கலாய்த்தான்.
நான் முறைக்கவும் நமுட்டு சிரிப்புடன் பார்வையைத் திருப்பிக்கொண்டான்.
அன்பான மனைவி சுமதி. அவளைக் கல்யாணம் பண்ணிவச்சதற்காக அம்மாவை நான் பாராட்டாத நாளேக்கிடையாது. எல்லோரையும் போல முதலில் கல்யாணம் வேண்டாமென்று மறுத்த நான், சுமதியின் அன்பிலும் அமைதியிலும் என்னை மறந்து, “சீக்கிரம் கல்யாணத்தை வைங்கம்மா” என்றுவிட்டு நாக்கைக் கடித்துக்கொண்டேன்.
ஒருநாள் காமன்வெல்த் ரயில்நிலையத்தை அடைந்த ரயில் மேலே போகமாட்டேனென்று அடம்பிடித்தது. வேறுவழியில் பயணத்தைத் தொடரும்படி மன்னிப்புடன் அறிவிப்பு வெளியாக, ‘எக்ஸ்க்யூஸ்மீ’க்கள் அங்குமிங்கும் ஒலித்தன. கைத்தொலைபேசியில் பலமுறை முயன்றதன் பலனாய் டாக்சி கிடைக்க “தெம்பனீஸ்” என்றுவிட்டு நிம்மதிப் பெருமூச்சை விட்டேன்.
“சார் நீங்க தெம்பனீசா போறீங்க, நானும் அங்குதான் போகணும். கட்டணத்தை ஷேர் பண்ணிக்கலாமா ப்ளீஸ்” என்றாள் அருகிலிருந்தப் பெண். ரம்பை, ஊர்வசி, மேனகை வரிசையில் இவளுக்கும் இடமுண்டு.
“நானும் ட்ரை பண்றேன் டாக்சி கிடைக்கலை” என்றபின்தான் அவளழகிலிருந்து மீண்டேன்.
“ஓகே, நோ ப்ராப்ளம்” தோள்களைக்குலுக்கினேன். அவள் நேர்முகத்தேர்வுக்காக செல்லுமிடத்தை அறிந்த நான், அது என் அலுவலகம்தான் என்றுவிட்டு, அங்கேயே அவளுக்கு வேலை கிடைக்கவேண்டுமென்று கடவுளிடம் முதன்முதலாகக் கோரிக்கையை வைக்க அவரும் மனது வைத்தார்.
அவள் வேறு பிரிவில் வேலை பார்த்தாலும், நாங்கள் எதேச்சையாகச் சந்தித்துக்கொண்டால் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டே செல்வாள்.
அவள் என்னை விரும்புவதாக சிவாதான் சொன்னான். அலுவலகத்தில் யாரையும் ஏறெடுத்தும் பார்க்காதவள் என்னை மட்டும் பார்த்து சிரிப்பதால் உண்மையாகயிருக்குமோ என்று நானும் நினைத்தேன்.
‘இன்னும் கொஞ்சநாள் பொறுத்திருந்திருக்கக்கூடாதா? இப்போது கல்யாணம் வேண்டுமென நானாக் கேட்டேன்’ அம்மாவின்மேல் கோபம் விசுவரூபமெடுத்தது. என் நினைவில் சுமதி வில்லியாகத் தெரிய மனதைக் கல்லாக்கிகொண்டு, நான் திருமணமானவனென்று சொல்லிவிட வேண்டுமென்று நினைக்கிறேன் முடியலை.
“மச்சி, கைத்தொலைபேசியும் கல்யாணமும் ஒண்ணுன்னு சும்மாவா சொன்னாங்க, நாம விருப்பப்பட்டத அடைஞ்ச பிறகுதான் அதைவிட நல்லதாக ஒன்று வரும்னு” என்றெனது மனவோட்டத்தைக் கணித்தவனைக் கழுத்தை நெரிக்கலாமாங்கிற வெறி தோன்றியது. என் பார்வையின் பொருளையுணர்ந்தவன் அடங்கிவிட்டான். நாக்குதான் சற்று நீளமேத்தவிர இடுக்கண் களைபவன்.
வேலைமுடிந்து மின்தூக்கிக்காக காத்திருந்த சமயம், “ஒருநிமிடம்” என்றவாரே வந்தாள் தீபிகா. சிவா ‘மாட்டினாயா’ என்பதுபோல என்னிடமிருந்து விடைபெற அருகில் வேறுயாருமில்லை.
“நான்…நான்…” என்னிடம் வார்த்தைகள் சண்டித்தனம் செய்தன.
“சொல்லுங்க” என்றவாறே கைப்பையிலிருந்து கவரை எடுத்தாள்.
‘நான் பயந்தவாறே நடக்கப்போகிறதே’ என்றப் பதற்றம் என்னைப் பீடித்தாலும், மனதின் மூலையில் இளையராஜாவின் இன்னிசையொலிக்க வெள்ளையுடை தேவதைகள் நடனமாட…
“நாளைக்கு என் மகனின் பிறந்தநாள், அவசியம் வாங்க” என்றபடி அழைப்பிதழை நீட்டினாள்.
“படார்”
“சார்…, கொஞ்சம் தள்ளிநடங்க, கீழே நொறுங்கிக்கிடப்பது என் இதயம்”.
– சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்தும் கதைக்களத்தில் (டிசம்பர் 2016) மூன்றாம் பரிசு பெற்ற கதை.