சொந்த வீடு அவசியமா?

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 11, 2023
பார்வையிட்டோர்: 4,401 
 
 

(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்புக்குரிய சுஜாதா,

சொந்தமாக வீடு கட்டுவது பற்றி என் அபிப்பிராயத்தைக் கேட்டிருக்கிறாய், நிதானமாக யோசித்துச் செய்ய வேண்டிய காரியம்.

சொந்தமாக வீடு ஒன்று கட்டுவது அவசியமா என்பது ஒரு கேள்வி. வசதியுள்ளவர்களுக்கு அவசியம்தான். பறவைகளெல்லாம் ஒரு கூடு கட்டிக் கொள்ளும்போது நமக்கு மட்டும் வீடு அவசியமில்லையா?

வீடு கட்டுவது லாகிரி போன்றது தான், நாம் எவ்வளவு ரூபாயில் கட்டுவ தெனத் தீர்மானிக்கிறோமோ அநேகமாக அதைவிட அதிகமாகத்தான் செலவு ஆகும். எனக்குத் தெரிந்த ஒரு பெரியவர் வீடு கட்டினார். அவருடைய ஒரே பிள்ளையும் வெளியூரில் இருந்தான். ஆனால் அவர் வீட்டுக்கு யார் வந்தாலும் புதிதாக ஒரு அறையோ, தாழ்வாரமோ கட்டுவதைப் பற்றித்தான் பேசுவார். வீடு கட்டும் ஆசையில் தம் சிறிய குடும்பத்துக்கு எவ்வளவு இடம் தேவையென அவரால் நிர்ணயிக்க முடியவில்லை.

வீடு கட்டும் விஷயத்தில் நம் வீட்டுப் புருஷர்கள் மனப்பான்மை விநோதமானது. வீட்டுக்கு வந்தவர்கள் உட்காருவதற்கு அழகான கூடம் அமைப்பார்கள். பிள்ளைகள் படிப்பதற்கென்று அறைகள் கட்டுவார்கள். வீட்டை அழகு படுத்த எவவளவோ செலவு செய்வார்கள். ஆனால் சமையல் அறை கட்டும்போது மாத்திரம் அவர்கள் மனப்பான்மை குறுகிப் போய் விடும். சமையலறையைச் சின்னதாகக் காற்றோட்டமும் வெளிச்சமும் குறைவானதாகக் கட்டுவார்கள்.

அதுவரை ஆன செலவுக்குச் சிக்கனம் செய்யச் சமையல் அறையும் ஸ்தான அறையும்தான் அவர்களிடம் அகப்பட்டுக் கொள்ளும், ஓரடி, இரண்டடி வித்தியாசத்தில் அபிப்பிராயபேதம் ஏற்படும்! ஒரு வீட்டுக்கு மற்ற எல்லாப் பாகங்களையும் விடச் சமையல் அறை மிகவும் முக்கியமானதல்லவா? அங்கே நல்ல காற்றேட்டம், சமைப்பவர்கள் சௌகரியத்துக்கும் சுகாதாரத்துக்கும் அவசியமாக இருக்கிறது.

சமீபத்தில் ஒரு சகோதரி அழகான புது வீடு கட்டியிருக் கிறர். சமையல் அறையை நன்றாகக் கவனித்து அமைத்திருக்கிறார். மிகவும் வசதியாக இருக்கும் அவர்கள் சமையல் அறையைப் பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

புதிதாக வீட்டைக் கட்டி விட்டால் மட்டும் மனம் நிரம்பி விடுவதில்லை. அதற்குத் தகுந்த பொருள்களாகச் சேகரித்து அலங்காரம் செய்வதை முக்கியமாகவே நினைக்கின்றேம்.

ஒரு வீட்டில் முன் கூடத்தில் இடமின்றிப் பொம்மைகள், மான் கொம்பு, பூத்தொட்டி எல்லாம் நிரப்பி வைத்திருந்தார்கள். இவற்றை அவ்வளவையும் எடுத்துத் துடைத்து வைப்பது பெரிய வேலையாக இருக்கிறதென்று அந்த அம்மாள் பெருமைப்பட்டுக் கொண்டார். இது வேண்டாத வேலை யல்லவா?

தில்லியில் எப்படியோ? இங்கே சென்னை யில் வீட்டின் அலங்காரப் பொருள்களில் கண்ணாடிப் பெட்டிகளில் மீன் குட்டிகள் வைப்பது என்று ஒரு புது வழக்கம் இருக்கிறது. பெரிய வீடுகளில் மட்டுமல்ல. ஒரு சின்ன டீக்கடையில் கூடக் கண்ணாடி டம்ளர்களிலாவது சின்ன மீன் குஞ்சுகளைப் போட்டு வைக்கிறார்கள். அவை சூரிய வெளிச்சத்தில் குளத்திலும், நதியிலும், குதித்துக் கொண்டு ஆனந்தமாக இருக்குமே.

அப்படியிருக்க அவைகளை நாம் காப்பாற்றுவதாக அர்த்தமா? அந்தப் பெட்டியில் பெரிய மீனகள் சின்னக் குஞ்சுகளை ஆகாரம் போதாமல் தின்றுவிடுவதைக் கண்டு ஏங்க வேண்டியிருக்கிறது. இது வீட்டுக்கு அலங்காரமா?

இப்படிக்கு,
பூமாதேவி

– தேவியின் கடிதம், கல்கியில் 1956-இல் தொடங்கிய தொடர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *