சொட்டு ரத்தம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: May 18, 2025
பார்வையிட்டோர்: 5,279 
 
 

(1966ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 16-17 | அத்தியாயம் 18-19

18. குத்துச் சண்டை வீராங்கனை! 

ஆம்புலன்ஸ் கார் வந்த அடுத்த கணமே போலீஸ் ஜீப்பும் பின்னால் வந்து நின்றது. அதிலிருந்து இன்ஸ்பெக்டர் அருளானந்தமும் மற்றவர்களும் இறங்கி ஓடிவந்தார்கள். 

ஆம்புலன்ஸ் வண்டிக்கு வீரமணி டெலிபோன் செய்ததும் அதன் டாக்டர், உடனே இன்ஸ்பெக்டர் அருளானந்தத்துக்கு தகவல் கொடுத்து விட்டார். 

இன்ஸ்பெக்டர் அருளானந்தத்தைப் பார்த்து ராஜா திடுக்கிட்ட போதிலும், என்ன நேர்ந்தாலும் சமாளித்தே தான் ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன், “நாதமுனி தன்னைத்தானே சுட்டுக் கொண்டோ, அல்லது வேறு யாராலோ சுடப்பட்டோ உயிருக்காக மன்றாடிக் கொண்டு இருக்கிறான்” என்று கூறியவாறு அழைத்துச் சென்று காண்பித்தான். 

துடித்துக் கொண்டு இருந்த நாதமுனிக்கு டாக்டர் அருமைராஜ் முதல் உதவி சிகிச்சை செய்துவிட்டு, “அவன் பிழைப்பது அரிது! ஆயினும் அவன் சில 

சில வினாடிகள் வாய் திறந்து ஏதாவது பேசமுடியும்” என்று வருத்தத்தோடு சொன்னார். 

“அவனிடம் இருந்து மரண வாக்குமூலமாவது வாங்கி விடலாம் சார்” என்று படபடத்தான் ராஜா. 

அதையே தான் இன்ஸ்பெக்டர் அருளானந்தமும் கூறினார். நாதமுனியால் பேச முடிந்தால் அவன் தற்கொலை செய்து கொண்டானா. இல்லையா என்பதையாவது தெரிந்து கொள்ளலாம் அல்லவா? 

டாக்டர் அருமைராஜ், விலை உயர்ந்த மருந்தை ‘சிரிஞ்சி’யில் எடுத்து ஊசி 

முனையால் நாதமுனியின் மணிக்கட்டில் உள்ள நரம்பு வழியாக ஏற்றினார். தொடர்ந்து இரண்டு மூன்று ஊசிகளைப் போட்டார். 

எல்லோரும் நாதமுனியைச் சுற்றி வளைந்து கொண்டு நின்றார்கள். 

இன்ஸ்பெக்டர் அருளானந்தம், ராஜாவின் முகத்துக்கு நேராகத் திரும்பி, “நாதமுனி இங்கே வந்து எதற்காகப் பதுங்கி இருந்தான்” என்று குற்றம் சாட்டுவதைப் போல் கேட்டார். 

ராஜா நடைபெற்றதைச் சொல்லிவிட்டு, “போலீஸாரிடம் பிடிபட்டு விடக்கூடாது என்பதற்காக அவன் தான் இங்கே வந்தான். இங்கே வீரமணியின் மனைவி வீட்டில் இல்லாததால் அவள் இங்கே பதுங்கி இருப்பதற்கு நான் தடை சொல்லவில்லை” என்று சொன்னான். 

“இம்மாதிரியான விஷயங்களை போலீஸாரிடம் தெரியப்படுத்தாமல் மறைத்து வைத்தது பெரும் தப்பு. இவ்வளவுக்கும் நீங்கள் தான் காரணம்” என்று குற்றம் சாட்டிய இன்ஸ்பெக்டர் அருளானந்தம், நாதமுனியைப் பார்த்தார். 

நாதமுனியின் முகத்தில் வியர்வை முத்து முத்துக்களாக அரும்பி இருந்தது. எதையோ பேசுவதற்காக அவன் உதடுகளைக் குவித்தான். 

“நண்பன் என்ற முறையில் என்னை பேசுவதற்கு அனுமதியுங்கள் சார் நான் கேட்டால் எல்லாவற்றையும் நாதமுனி சொல்லிவிடுவான். இது எல்லோருக்கும் பயனுள்ளதாகவும் இருக்கும்” என்று ராஜா மிகுந்த ஆர்வத்துடன் சொன்னதும், அதுவும் ஒரு விதத்தில் நல்லது தான் என்பதை உணர்ந்த இன்ஸ்பெக்டர் அருளானந்தம், அவன் பேசுவதற்கு அனுமதி கொடுத்தார். 

உடனே ராஜா, நாதமுனியின் முகத்துக்கு அருகில் குனிந்தபடியே மண்டிபோட்டு உட்கார்ந்து, “நாதமுனி! என்னைப் பாருடா! நான் தான் ராஜா வந்திருக்கிறேன்” என்று உள்ளம் கலங்க, உணர்ச்சி பொங்க கண்ணீர் வடித்துக் கொண்டே சொன்னான். 

நாதமுனியின் கண்கள் அவனுடைய முகத்தை உன்னிப்பாகப் பார்த்த வண்ணம் அப்படியே நிலைகுத்தி நின்றன. 

“நாதமுனி! நான் தாண்டா ராஜா! நான் சொல்லுவது உன் காதுகளில் விழுகிறதா?” 

ஒரு கணம் நாதமுனி உதட்டைக் கடித்துவிட்டு கண்களை உருட்டி விழித்தான். பிறகு அவன் உதடுகளில் சிறு புன்னகை மலர்ந்தது. 

“ரா…ஜா…” என்றான் நாதமுனி மெல்ல. 

“நாதமுனி, நீ ஆபத்தான நிலைமையில் இருக்கிறாய். நீ உயிர் வாழவேண்டும் என்று கடவுளைப் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறேன்.” 

“ம்…ம்……பிரார்த்தனையா….?” என்று சொல்லி விட்டு என்னவோ போல் சிரித்த நாதமுனி, பற்களைக் கடித்துவிட்டு, “என்னை கடவுள் கூப்பிடுகிறார். நான் சீக்கிரமாகப் போய் விடுவேன்” என்று நாத்தழதழக்கும் படிச் சொன்னான். 

“அதற்கு முன்னால் உன்னிடமிருந்து சில உண்மைகளைத் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். சேதுபதியை நீ சுட்டுக் கொல்லவில்லை! நித்தியகலா தான் தன் கணவனைச் சுட்டுக் கொன்றுவிட்டாள். நீ நித்தியகலா மீது அளவு கடந்த அன்பு வைத்து இருக்கிறாய் என்று தெரிகிறது. அந்த அன்பின் காரணமாக நீ அவளைக் காட்டிக் கொடுக்கக்கூடாது என்று நினைக்கிறாய் அல்லவா? அவள் மீதுள்ள கொலைப் பழியை உன் மீதே சுமத்திக் கொள்ளவும் விரும்புகிறாய் அல்லவா? நேரமில்லை நாதமுனி! நடந்ததைச் சொல்லிவிடு! உன்னால் பேச முடியவில்லை என்றால், நான் சொல்வது உண்மை என்பதற்கு அடையாளமாக நீ தலையை ஆட்டினாலே போதும்” 

உணர்ச்சிப் பெருக்குடன் கேட்ட ராஜா நண்பனை விரைவில் இழந்துவிடப் போகிறோமே என்ற தவிதவிப்புடன் பார்த்தான்… 

நாதமுனியால் பேச இயலவில்லை. அவனுடைய நெஞ்சு விம்மியது. அவனை நோக்கி ராஜா கூறலானான். 

“நித்தியகலா தான் தன்னுடைய கணவன் சேதுபதியைச் சுட்டுக் கொன்றுவிட்டாள். ஆனால் உன் மீது அவளுக்கு உள்ள காதலினால், உன்னை அடைவதற்காக மட்டும் அவள் தன் கணவனை அவள் சுட்டுக் கொல்லவில்லை! கேவலம் பணத்திற்காகவே அவள் கொலைகாரியாக மாறினாள் கவனமாகக் கேள்! அவளுடைய கணவன் சேதுபதி ஒரு மர்ம மனிதனைப் பற்றிய இரகசியச் செய்திகளைச் சேகரித்து வைத்துக் கொண்டு, அவற்றைப் பிரசுரிக்காமல் மறைக்க வேண்டுமானால் தனக்குப் பணம் கொடுக்க வேண்டுமென்று அந்த மர்ம மனிதனைப் பயமுறுத்திப் பணம் பறிக்கத் திட்டமிட்டு இருந்தானல்லவா? அவ்வாறு அவனைத் தூண்டிவிட்டவள் அவனுடைய மனைவி நித்தியகலாதான். ஆனால் கடைசிக் கணத்தில் சேதுபதி மனம் மாறி அந்த இரகசியச் செய்திகளைத் தன்னுடைய பத்திரிகையான கலைத்தூதனுக்குக் கொடுத்துவிடத் தீர்மானித்து ஆசிரியர் மாதவனுக்கும் டெலிபோன் செய்து இருக்கிறான். ஆனால் ஆசிரியர் மாதவன் அப்போது டெலிபோனில் அகப்படவில்லை! இதை அறிந்ததும் நித்தியகலா ஆத்திரப்பட்டு இருக்கிறாள். அப்படித் தன் கணவன் செய்துவிட்டால் மர்ம மனிதனிடம் இருந்து ரூபாய் இருபத்தி ஐயாயிரம் பெற முடியாது. எனவே பணத்துக்காகவும் உன்னுடன் வாழும் சந்தோஷமான வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு நித்தியகலா உன் கைத் துப்பாக்கியாலேயே தன் கணவனைச் சுட்டுக் கொன்று விட்டாள்! பிறகு மர்ம மனிதனுக்கு டெலிபோன் செய்து மறுநாள் தபாலில் தன் பெயருக்கு இருபத்தையாயிரம் ரூபாய் அனுப்பும்படித் தகவல் கொடுத்து இருக்கிறாள். அதன் பிறகு அவள் கொலைப் பழியில் இருந்தும் கேள்வி விசாரணைகளில் இருந்தும் தப்புவதற்காக இரண்டு மூன்று தூக்க மாத்திரைகளை விழுங்கி மயங்கி மூர்ச்சித்து விழுந்து இருக்கிறாள்! 

“அதன் பிறகு நேற்று நள்ளிரவு நடுச்சாமத்தில் நீ அவளுடைய வீட்டுக்கு வந்திருப்பாய். அங்கே சேதுபதி கொலையுண்டு செத்துக் கிடப்பதையும், உன் கைத்துப்பாக்கி அங்கே கிடப்பதையும், தூக்க மருந்து சாப்பிட்டு நித்தியகலா மயக்க மூர்ச்சையில் தூங்குவதையும், பார்த்து இருப்பாய் இல்லையா, நாதமுனி? உன் மீதுள்ள ஆசையால் நித்தியகலா தான் தன் கணவனை ஏதோ ஆத்திரத்தில் சுட்டுக் கொன்று விட்டு அப்படி மயக்கிக் கிடக்கிறாள் என்று நீ நினைத்து இருப்பாய். கொலைப் பழியிலிருந்து அவளை காப்பாற்ற வேண்டும் என்ற நல்லெண்ணம் உனக்கு ஏற்பட்டிருக்கும், எனவே பக்கத்து வீட்டுப் பெண்மணியான அகிலாண்டம் அம்மாள் தூங்கக்கூடிய நேரம் பார்த்து சேதுபதியின் பிணத்தை நீயே தூக்கி வந்து உன் மோட்டார் காரின் பின் சீட்டில் வைத்திருப்பாய்! பிறகு காரை ஓட்டிச் சென்று பிணத்தை நுங்கம்பாக்கம் ஏரிக்கரையில் போட்டு விட்டாய்! உன் மோட்டார் காரின் பின் சீட்டில் காணப்பட்ட சொட்டு ரத்தத்தின் மர்மம் இதுதான்! இல்லையா நாதமுனி? எந்த மர்ம மனிதனை சேதுபதி பயமுறுத்திப் பணம் பறிக்கத் திட்டமிட்டானோ அந்த மர்ம மனிதனாலேயே சேதுபதி சுட்டுக் கொல்லப்பட்டான் என்றும் நீ கதை ஜோடிக்க முயன்றாய், இல்லையா?” என்று ராஜா கேட்டான். அவன் சொல்லுவது முழுவதும் உண்மை என்று ஒப்புக் கொள்வதைப் போல் நாதமுனி தலையை அசைத்தான். 

பிறகு நாதமுனி தன் உயிரை இழுத்துப் பிடித்துக் கொண்டு, “ம்…..ம்…..பணத்துக்காகத் தான் நித்தியகலா தன் கணவன் சேதுபதியைக் கொன்றாளா? ம்! அவளுடைய மனதை கடைசி வரையில் என்னால் மாற்ற முடியாமலேயே போய்விட்டது.” என்றான். 

“உன்னுடைய ரிவால்வர் துப்பாக்கி எப்படி நித்தியகலாவின் கைக்குப் போயிற்று?” என்று ராஜா கேட்டான். 

“அவளுக்கும் அவளுடைய கணவனுக்கும் ஏதாவது தகராறு முற்றி அவளுடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்று அவள் பயந்தாள், அதனால் சில தினங்களுக்கு முன்னால் தற்காப்புக்காக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நித்தியகலா என்னிடம் கேட்டு அந்தத் துப்பாக்கியை வாங்கிக் கொண்டாள்.” 

இதை நாதமுனி சொல்லுவதற்கு முன்னால் பட்டபாடு….? 

“சேதுபதியின் பிணத்தை நீ எடுத்துச் செல்லும் போது நித்தியகலா தூங்கிக் கொண்டு இருந்தாளா? அல்லது….?” 

“அவள் அதிகமான தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டதின் விளைவாக அவள் சுயநிலை இல்லாமல் மயக்க மூர்ச்சையான தூக்கத்திலேயே படுத்துக் கிடந்தாள். அவள் தான் தன் கணவனைக் கொன்றுவிட்டு அப்படி மயக்கிக் கிடக்கிறாள் என்று நான் நினைத்தேன்! அதனால் கடைசியில் நான் சேதுபதியின் பிணத்தை எடுத்துச் சென்றேன்” என்றான் நாதமுனி மிகுந்த சிரமத்தோடு. 

“இப்பொழுதாவது சொல் நாதமுனி! உனக்கும் நித்தியகலாவுக்கும் இடையே உள்ள தொடர்பு எத்தகையது? அவள் உன்னுடைய ஆசை நாயகி தானே…?” 

ராஜா உணர்ச்சி பொங்கும்படிச் சொன்னதைக் கேட்டு நாதமுனி இலேசாக ஜீவனற்ற முறையில் சிரித்தான். 

“ஒரு வாலிபனும் ஒரு யுவதியும் நெருங்கிப் பழகினால் அவர்கள் கள்ளக் காதலர்களாகத் தான் இருப்பார்கள் என்று நினைத்துவிடுவது தப்பு. எனக்கு நித்தியகலாவின் மீது அளவு கடந்த அன்பு உண்டு. அவளுக்குக் கல்யாணமாகாமல் இருந்தால் அந்த அன்பு காதலாக வடிவெடுத்துக் எங்களுடைய கல்யாணத்திலும் முடிந்திருக்கக் கூடும்! ஆனால் நித்தியகலாவோ கல்யாணமான பிறகும் என்னைக் காதலித்தாள்! அதைத் திருத்தவே நான் முயன்றேன்! ம்! கடைசியில் அவள் மரண வலையில் சிக்கிக் கொண்டாள்! இரண்டொரு வினாடிகளில் நானும் சாகப் போகிறேன்!” என்று நாதமுனி விம்மினான். 

“உன் பரிசுத்தமான உள்ளத்தைப் புரிந்து கொள்ளாமல் நானும் சந்தேகப்பட்டேன், நாதமுனி இப்பொழுது தான் உன் உயர்வான உள்ளம் எனக்குப் புரிகிறது. நீ மாற்றான் மனைவியை தாயைப் போல் தான் நேசிப்பாய் என்பதில் கொஞ்சமும் சந்தேகம் இல்லை” என்று உணர்ச்சிவசப்பட்டு தொண்டை கரகரக்கச் சொன்ன ராஜா, “நீ கடைசியில் உன்னையே சுட்டுக் கொள்ள முயன்றாயா, நாதமுனி?……தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற கோழைத்தனமான எண்ணம் உனக்கு ஒரு போதுமே வராதே!” என்று விம்மினான். 

“தற்கொலையா…’ என்று எதையோ சொல்ல நினைத்த நாதமுனி அதற்குமேல் பேச முடியாமல் தத்தளித்தான். அடுத்த வினாடியே அவனுடைய உயிர் பிரிந்து விட்டது! 

அவனுடைய மரண இரகசியத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியாமல் போய்விட்டதே என்று நினைத்து ராஜா வருந்தினான். அது தற்கொலையல்ல, படுகொலை தான் என்று எப்படி நிரூபிப்பது என்று ராஜா யோசித்துக் கொண்டே செயலற்று நின்றான். 

அவர்களுடைய உரையாடலில் இருந்து சேதுபதியின் படுகொலை மர்மத்தைப் பற்றி இன்ஸ்பெக்டர் அருளானந்தம் தெரிந்து கொண்டார். 

அப்பொழுது டெலிபோன் மணி அந்த வீட்டினுள் அடிக்கும் ஒலி கேட்டது. 

ஒரு போலீஸ்காரர் அதன் ரிசீவரை எடுத்துப் பேசிவிட்டு இன்ஸ்பெக்டரிடம் விரைந்து வந்து, “உங்களுக்கு டெலிபோன் வந்திருக்கிறது சார்” என்று தெரியப்படுத்தினான். 

இன்ஸ்பெக்டர் அருளானந்தம் போனதைத் தொடர்ந்து ராஜாவும் சென்றான், கேட்கப் போகிற செய்தி துக்க கரமானதாக இருக்குமா? 

இன்ஸ்பெக்டர் அருளானந்தம் மேஜையின் மீது வைக்கப்பட்டு இருந்த டெலிபோன் ரிசீவரை அனாயாசமாக எடுத்து காதோடு பொருத்திக் கொண்டு, “ஆமாம், நான் தான் பேசுகிறேன்! என்ன விஷயம்?” என்று அதிகாரத் தொனியுடன் கேட்டார். 

“போஸ்ட் ஆபீஸில் பக்கத்தில் இரண்டு பெண்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து குஸ்திச் சண்டை போட்டுக் கொண்டு இருந்தார்கள். அவர்களில் ஒருத்தியின் பெயர் பானு. இன்னொருத்தி தன் பெயரைச் சொல்ல மறுக்கிறாள்!” என்று டெலிபோனின் மறுமுனையில் இருந்து ஒரு போலீஸ்காரர் பேசினார். 

“அப்படியா? இரண்டு பேர்களையும் கைது செய்து இங்கேயே கொண்டு வா!” 

ரிசீவரை வைத்துவிட்டு நிமிர்ந்து பார்த்த இன்ஸ்பெக்டர் அருளானந்தம் இலேசாகச் சிரித்துவிட்டு, “ராஜா! உங்கள் காரியதரிசினி பானு, குத்துச் சண்டை வீராங்கனையாகவும் மாறிவிட்டாள். இனி உங்கள் பாடு யோகம் தான்!” என்று சொன்னார். 

ராஜாவுக்கு அவர் சொன்னது மிகுந்த வேதனை அளித்தது. தபாலாபீஸுக்கு பானு போய் இருக்கிறாள் என்றால் முன்னிரவில் நித்தியகலா அவளிடம் குறிப்பிட்டபடி நித்தியகலாவின் பெயருக்கு வந்திருக்கும் தபால் கவர் கட்டை வாங்குவதற்காகவே தபாலாபீஸுக்குப் பானு போயிருப்பாள் என்று தெரிந்தது. 

ஆனால்-அங்கே பானுவுடன் சண்டை போட்டது எந்தப் பெண்மணியாக இருக்குமோ என்ற சிந்தனையில் மூழ்கலானான். 

19. பெரிய மனித ரகசியம்! 

போலீஸ் ஜீப் காரில் இருந்து இரண்டு போலீஸ்காரர்கள் பின்தொடர இளமைச் செழிப்புள்ள இரண்டு இளங்கன்னியர் இறங்கி வந்தார்கள். 

ஒருத்தி பானு இன்னொருத்தி….? 

கொலையுண்ட சேதுபதியின் கள்ளக் காதலியான ராஜாத்தி தான்! காதல் வேட்டையாடும் கண்களுக்குச் சொந்தமான அவள் தான் பானுவின் பக்கத்தில் தளுக்குக் குலுக்கி நடந்து வந்தாள். 

ராஜாத்தி பச்சைக்கரை போட்ட தூய வெண்ணிற புடவையும், உள்பாடி தெரியும்படி வெண்மையான ஜாக்கட்டும் அணிந்து இருந்தாள். பிறர் தயவு எப்பொழுதும் தேவை என்று எதிரொலிப்பது போல் முதுகுப்புறத் துணி திறப்பு வைத்து தைக்கப்பட்டு இருந்தது. 

அவர்கள் இரண்டு பேர்களையும் பார்த்த ராஜா, ராஜாத்தி எதற்காக தபால் நிலையத்திற்கு வந்திருப்பாள் என்று அனுமானம் செய்து கொண்டான். நித்தியகலாவின் பெயருக்கு ரூபாய் இருபத்தி ஐயாயிரம் அனுப்பப்பட்டு இருக்கும் விஷயம் அவளுக்குத் தெரிந்து இருக்கலாம். அந்தப் பணத்தை அபகரித்துச் செல்லவே தபால் நிலையத்துக்கு ராஜாத்தி வந்திருக்கிறாள் என்று புரிந்து விட்டது. 

‘ராஜாத்தி! உன்னை இங்கே சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை” என்றான் ராஜா. 

“அப்படியானால் ராஜாத்தியை இதற்கு முன்னாலும் பலமுறை சந்தித்து இருப்பதாகச் சொல்லுங்கள்” என்று இன்ஸ்பெக்டர் அருளானந்தம் வேடிக்கையாக எதையோ சொல்லிவிட்டதாக நினைத்துச் சிரித்தால். 

பானு தலையைத் தாழ்த்தியபடியே அவர்கள் எதிரில் வந்து நின்றாள். இன்னும் நர்ஸ் உடையிலே அவள் காணப்பட்டாள். ஆனால் அவள் ராஜாத்தியோடு குஸ்திச் சண்டை போட்டதின் விளைவாக அவளுடைய நர்ஸ் தொப்பி பறந்து போய், அவளுடைய முகத்திலும் நகக்கீறல்கள் விழுந்து இருந்தன. 

“என்ன பானு, நடுரோட்டில் நீங்கள் இரண்டு பெண்களும் சண்டை போட்டதாக போலீஸ்காரர்கள் சொல்லுகிறார்கள்?” என்று கேட்டான் ராஜா. 

“அவள் சொல்லுவதை தயவு செய்து நம்பாதீர்கள். என் மீது வேண்டுமென்றே பழி சுமத்துவாள்” என்று முந்தினாள் ராஜாத்தி. 

“முதலில் பானு சொல்லட்டும்” என்றார் இன்ஸ்பெக்டர் அருளானந்தம். 

இன்ஸ்பெக்டரை நோக்கி பானு சொல்லலானாள்: இன்று அதிகாலையில் நித்தியகலாவுக்கு சுய நினைவு வந்து தன் கணவனின் மரணச் செய்திக் கேள்விப்பட்ட அழுத பிறகு அவள் என்னிடம் ஒரு வாக்குறுதி வாங்கிக் கொண்டு ஒரு வேலையை ஒப்படைத்தாள். அதாவது இன்று காலையில் அவளுடைய பெயருக்கு ‘கேர் ஆப்’ போஸ்ட் மாஸ்டர் என்று தபாலாபீஸ் விலாசமிட்டு ஒரு நீளமான கவர்க் கட்டு வருமென்றும் அதை நான் போய் பத்திரமாக வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவள் வாக்குறுதி வாங்கிக் கொண்டாள்! அதன் பிரகாரம் நித்தியகலா பெயருக்கு வந்துள்ள கடிதக் கட்டை வாங்கிக் கொண்டு போவதற்காக நான் போஸ்ட் ஆபீஸுக்கு வந்தேன். ஆனால் அதற்கு முன்னால் ராஜாத்தி வந்து போஸ்ட் மாஸ்டரிடம் தன்னை நித்தியகலா என்று அறிமுகம் செய்து கொண்டு அந்தக் கடிதக் கட்டை வாங்கி விட்டாள். இப்பொழுது அவளுடைய ஜாக்கட்டின் நடுவே இருக்கிறது. அந்தக்கடிதக் கட்டு அதற்காகவே நாங்கள் நடுத்தெருவில் சண்டை போட்டோம்! அவள் தப்பிப் போய்விடக் கூடாது என்பதற்காகவே எங்கள் இருவரையும் கைது செய்து கொண்டு போகும்படி போலீஸ்காரரிடம் நான் வற்புறுத்தினேன்” என்றாள் பானு. 

ராஜாத்தியின் முகம் வெளுத்துவிட்டது. 

“அந்தக் கவர்க் கட்டை நீயாகவே எடுத்துக் கொடுத்து விடுகிறாயா? அல்லது……வேறு யாரையாவது விட்டு……?” என்று நிறுத்தினார் இன்ஸ்பெக்டர் அருளானந்தம், 

வேறு வழியில்லாததால் ராஜாத்தி தன் ஜாக்கிட்டினுள் கையை நுழைத்து நீளமான இரண்டு காகித உறைகளை வெளியே எடுத்தாள். பீதியின் காரணமாக அவளுடைய முகம் வெளுத்துவிட்டது. 

நீளமான இரண்டு காகித உறைகளைப் பார்த்ததும் ராஜா திகைத்தான். இரண்டு உறைகள் மீதும் “நித்தியகலா, ‘கேர் ஆப்’ போஸ்ட் மாஸ்டர்” என்றே விலாசம் இடப்பட்டிருந்தது. அனுப்பியவரின் விலாசம் மட்டும் இரண்டு கவர்கள் மீதும் இல்லை! ஆனால் ஒரு கவர் மீது நித்தியகலாவின் பெயரும் தபாலாபீஸ் விலாசமும் டைப்மிஷினால் அடிக்கப்பட்டு, அதன் மீதுள்ள முத்திரையில் இருந்து அன்று காலை பத்து மணிக்குத்தான் தபாலில் சேர்க்கப்பட்டு இருக்கிறது என்பது தெரிந்தது. அதைத் தடவிப் பார்த்தபோது இருபத்து ஐயாயிரம் ரூபாய்க்கு நூறு ரூபாய் நோட்டுகள் அதனுள் அடங்கி இருக்கின்றன என்பதும் ராஜாவுக்குப் புரிந்தது. இன்னொரு உறை மீதோ நித்திய கலாவின் பெயரும் விலாசமும் பேனா மையினாலேயே எழுதப்பட்டு இருந்தது. அந்தக் கையெழுத்தில் இருந்து ஒரு பெண்மணி தான் அவசர அவசரமாக அந்த விலாசத்தை எழுதி இருக்கிறாள் என்றும், நேற்றிரவே அந்தக் கடிதம் தபாலில் சேர்க்கப்பட்டு இருக்கிறது என்றும், ஒரு மர்ம மனிதனைப் பற்றி சேதுபதி சேகரித்த இரகசியக் காகிதங்கள் அதனுள் அடங்கி இருக்கும் என்றும் ராஜா யூகித்துக் கொண்டான். பிறகு ராஜா அவற்றை இன்ஸ்பெக்டரிடம் விளக்கிச் சொல்லிவிட்டு, ‘சார்! நித்திய கலாவின் பெயருக்கு ‘கேர் ஆப்’ போஸ்ட் மாஸ்டர்” என்று தபாலாபீஸ் விலாசத்திற்கே ஒரு கவர் கட்டினுள் இருபத்தி ஐயாயிரம் ரூபாய் அனுப்பப்பட்டு இருக்கும் விஷயம் ராஜாத்திக்கு எப்படித் தெரியும் என்று கேளுங்கள்.” என்றான். 

இன்ஸ்பெக்டர் அருளானந்தம் தன் கடுமையான பார்வையின் மூலம் கேட்டார். 

ராஜாத்தி சிரிப்பதைப் போன்ற பாவனையில் தலையைத் தாழ்த்தியபடி சிறிது நேரம் நின்று கொண்டு இருந்தாள். தன்னால் எவ்வளவு கவர்ச்சியைக் காட்ட முடியுமோ, அந்தக் கவர்ச்சியில் எதையுமே விட்டு வைக்கவில்லை. 

ஆனால் அந்தக் கவர்ச்சியைக் கண்டு யாராவது மயங்க வேண்டுமே! 

“ராஜாத்தி நான் கேட்பதற்கு ஒழுங்கான முறையில் பதில் சொல். நித்தியகலாவின் பெயருக்குப் பணம் அனுப்பப்பட்டு இருக்கும் விஷயம் உனக்கு எப்படித் தெரியும்?” என்று ராஜா நேரடியாகவே கேட்டான். 

ராஜாத்தி ஒரு கணம் தயங்கிவிட்டு, “நேற்றிரவு சேதுபதி என் வீட்டிற்கு வந்திருந்தார். என் வீட்டில் இருந்த டெலிபோன் மூலமாகவே ஒரு மர்ம மனிதனுக்கு டெலிபோன் செய்து, அந்த மர்ம மனிதனைப் பற்றிய இரகசியச் செய்திகளை எல்லாம் பத்திரிகையில் பிரசுரிக்கக் கொடுக்காமல் மறைத்துவிட வேண்டும் என்றால் நாளைக் காலைக்குள் இருப்பத்து ஐயாயிரம் ரூபாய் பணம் அனுப்ப வேண்டுமென்று பயமுறுத்தினார். அதற்கு அந்த மர்ம மனிதன் சம்மதித்திருக்க வேண்டும். ஆகவே இருபத்து ஐயாயிரம் ரூபாய்க்கு நூறு ரூபாய் நோட்டுகளாக ஒரு கவரினுள் போட்டு அந்தக் கவர் மீது தன் மனைவி நித்தியகலாவின் பெயரை எழுதி ‘கேர் ஆப்’ போஸ்ட் மாஸ்டர் என்று விலாசமிட்டு உடனே தபாலாபீஸ் விலாசத்திற்கே தபால் மூலம் அனுப்பிவிட வேண்டுமென்று டெலிபோனில் சேதுபதி அந்த மர்ம மனிதனுக்கு அறிவித்து விட்டு என் வீட்டிலிருந்து கிளம்பிப் போனார். அதன் பிறகு அவர் கொலையுண்டு மாண்டு விட்டதால், இருபத்து ஐயாயிரம் ரூபாய் அடங்கி உள்ள கவர் கட்டைத் தபாலாபீஸில் வாங்குவார் யாருமின்றி அனாதையாகக் கிடந்து கடைசியில் டெட்-லெட்டர் ஆபீஸுக்குப் போய் விடுமே என்று நான் நினைத்தேன்! அதனால் நானே இன்று காலையில் தபாலாபீஸிற்குப் போய் என் பெயரை நித்தியகலா என்று சொல்லிக் கொண்டு அந்தக் கவர் கட்டை வாங்க முயன்றேன்! என் காதலருக்குச் சேர வேண்டிய பணத்தை நானே வாங்கிக் கொள்ள ஆசைப்பட்டதில் என்ன தவறு இருக்க முடியும்?” என்று குமுறினாள். 

ராஜா புன்முறுவலுடன் ராஜாத்தியைப் பார்த்து விட்டு, “நித்தியகலாவின் பெயருக்கு அதே தபாலாபீஸ் விலாசத்திற்கு இன்னொரு கவர்க்கூடும் வந்திருக்கிறதே; அதில் என்ன அடங்கி இருக்கிறது என்பதும் உனக்குத் தெரியுமா?” என்று கேட்டான். 

“இல்லை அது எனக்குத் தெரியாது” என்றாள் ராஜாத்தி. 

“மர்ம மனிதனின் ரகசியம் பற்றி சேதுபதி சேகரித்த ஆதாரக் கடிதங்கள் அனைத்தும் இன்னொரு கவர் கட்டினுள் அடங்கி இருக்கின்றன” என்று ராஜா கூறி விட்டு, மெல்ல இன்ஸ்பெக்டரை நோக்கி கூறலானான்: ”சார்! சற்றுமுன் நித்தியகலாவைப் பற்றி நாதமுனியிடம் நான் சொன்னதெல்லாம் தவறு! இப்போது தான் உண்மை எனக்குப் புரிகிறது! ஒரு மர்ம மனிதனின் ரகசியம் பற்றிய ஆதாரக் காகிதங்களை எல்லாம் சேதுபதி சேகரித்து வைத்துக் கொண்டு அவற்றைப் பத்திரிகையில் பிரசுரிக்காமல் மறைக்க வேண்டும் என்றால் தனக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்று அந்த மர்மமனிதனைப் பயமுறுத்தி பிளாக்மெயில் செய்து பணம் பறிக்கத் திட்டம் இட்டான் அல்லவா? தன் கள்ளக் காதலியான ராஜாத்தியின் பணத் தேவையை முன்னிட்டே அவளுடைய தூண்டுதலினாலேயே சேதுபதி அப்படி ஆரம்பத்தில் திட்டமிட்டான். இது சம்பந்தமாகவோ, வேறு பல காரணங்களாலோ சேதுபதிக்கும் அவளுடைய சொந்த மனைவி நித்தியகலாவுக்கும் ஏதோ தகராறு மூண்டிருக்கிறது. தகராறு முற்றி தன் கணவனாலேயே தன் உயிருக்கு அபாயம் நேரிடுமோ என்ற நித்தியகலா பயந்திருக்கிறாள். அதனால் அவளுடைய தற்காப்பிற்காக நாதமுனி தன் கைத்துப்பாக்கியை அவளுக்கு இரவல் கொடுத்து இருந்தான். அந்தத் துப்பாக்கியை சேதுபதி எப்படியோ கைப்பற்றிக் கொண்டு, அதைத் தன் கோட் பைக்குள்ளேயே சொருகி வைத்துக் கொண்டு நேற்று மாலை நேரத்தில் என் வீட்டிற்கு வந்தான். அப்போது அவனுடைய கோட் பைக்குள் 22 ரகத் துப்பாக்கியொன்று மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை நான் கவனித்தேன். மர்ம மனிதனைப் பிளாக் மெயில் செய்து பணம் பறிக்கும் திட்டத்திற்கு நான் உதவி செய்ய மறுத்து, சேதுபதிக்குப் பல புத்திமதிகளும் கூறி, அவனுடைய கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிட்டேன். அதன் பிறகு அவனது மனைவி நித்தியகலா என்னிடம் வந்தாள். தன் கணவனின் போக்கை அறிந்ததும், அன்றிரவே தன் கணவன் யாரோ ஒரு பயங்கரமான மர்ம மனிதனைப் பயமுறுத்திப் பணம் பறிப்பதற்காக அபாயகரமான பாதையில் போய்க் கொண்டு இருக்கிறான் என்பதை நித்தியகலா புரிந்து கொண்டு, தன் கணவனின் போக்கைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று உள்ளூரத் தத்தளித்து இருக்கிறாள். மர்ம மனிதனைப் பற்றிய ரகசியக் காகிதங்களை எல்லாம் தன் கணவன் சேகரித்துத் தன் வீட்டில் பதுக்கி வைத்து இருக்கிறான். ஆகையால், அவற்றைத் தன் கணவன் எடுத்துக் கொண்டு போய்த்தான் மர்ம மனிதனிடம் அவற்றை விற்க முயல்வான் என்று நித்தியகலா நினைத்து இருக்கிறாள். ஆகவே, தன் கணவனை முந்திக் கொண்டு அந்த ரகசியக காகிதங்களை எல்லாம் அவளே கைப்பற்றிக் கொண்டு போய் எங்காவது மறைத்து வைத்துவிட்டால், தன் கணவனால் பிளாக்மெயில் செய்து பணம் பறிக்க முடியாது என்றும், தன் கணவனை அபாயகரமான பாதையில் இருந்து தடுத்து நிறுத்திவிடலாம் என்றும் நித்தியகலா தீர்மானித்துக் கொண்டாள். அதன் பிறகு அவள் என் வீட்டிலிருந்து கிளம்பிப் போனதும் ஒரு டாக்ஸிக்காரில் ஏறி நேரே தன் வீட்டிற்குப் போய் அந்த ரகசியக் காகிதங்களை எல்லாம் எடுத்து ஒரு கவருக்குள் போட்டு ஒட்டி, அதன் மீது நித்தியகலா என்று தன் பெயரையே தன் பேனாவினால் அவசர அவசரமாக எழுதி, ‘கேர் ஆப் போஸ்ட் மாஸ்டர்’ என்றும் விலாசமிட்டு போஸ்ட் ஆபீசுக்குப் போய் அந்தக் கவரை நேற்று மாலை ஆறே முக்கால் மணிக்கு தபாலில் சேர்த்து விட்டாள். தபால் முத்திரையில் அந்த நேரந்தான் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அந்தக் கவர் கூட்டைத்தான் இன்று காலை போஸ்டாபீஸுக்கு பானு போய் வாங்கி வர வேண்டும் என்று நர்ஸ் உடையில் இருந்த என் காரியதரிசினி பானுவிடம் நித்தியகலா கேட்டுக் கொண்டு இருக்கிறாள். இவ்வாறு ரகசியக் காகிதங்களை அவள் எடுத்து நேற்றிரவே மறைத்து விட்டாளே தவிர, நேற்றிரவு தன் கணவன் தன் வீட்டிற்கு வந்து அந்த ரகசியக் காகிதங்களைப் பற்றி விசாரித்தால் என்ன பதில் சொல்வது என்று நித்தியகலா பயந்து இருக்கிறாள். அதனாலேயே அவள் நேற்றிரவு ஒன்பதரை மணிக்கு அதிகமான தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு விட்டு மயக்க மூர்ச்சையில் சுய நினைவு இல்லாமலேயே தன் வீட்டினுள் கிடந்து இருக்கிறாள். அவளுக்கு மறுபடி இன்று அதிகாலையில் தான் சிறிது சுய நினைவு வந்திருக்கிறது. ஆகவே நேற்றிரவு ஒன்பதரை மணிக்குமேல் இன்று அதிகாலை வரை அவளுடைய வீட்டினுள் நடந்தது எதுவும் நித்திய கலாவுக்குத் தெரியாது என்பதை நம் நன்றாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இனி நேற்றிரவு அவளுடைய கணவன் சேதுபதியின் நடவடிக்கைகளைக் கவனிப்போம். பிளாக்மெயில் செய்து பணம் பறிக்கும் அவனுடைய திட்டத்திற்கு என் உதவி கிடைக்காது என்று தெரிந்ததும் இனி என்ன செய்வது என்ற யோசனையுடனே சேதுபதி என் வீட்டிலிருந்து கிளம்பிப் போய் இருக்கிறான் அவன் தனி ஒருவனாகவே மர்ம மனிதனைப் பயமுறுத்திப் பணம் பறிக்கப் போகலாம் என்றாலோ, இந்த மர்ம மனிதனால் தன் உயிருக்கு அபாயம் நேர்ந்து விடுமோ என்ற பயம்! தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தன் கோட்டுப் பையினுள் நாதமுனியின் கைத்துப்பாக்கி இருக்கிறது என்றாலும், அதை உபயோகப் படுத்தினால் கொலைகாரனாகத் தூக்கு மேடைக்குப் போக நேரிடுமோ என்ற பயம் ரகசியக் காகிதங்களைப் பற்றியும் சட்ட விரோதமான திட்டத்தைப் பற்றியும் அவன் என்னிடம் பிரஸ்தாபித்து விட்டதால், அதைப் பற்றி உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும் என்ற அவசரம் வேறு! இவ்வாறு குழம்பிக் கொண்டு இருந்த சேதுபதி கடைசியில் ஒரு முடிவிற்கு வந்தான். அந்த ரகசியச் செய்திகளைத் தன்னுடைய ‘கலைத்தூதன்’ பத்திரிகைக்குக் கொடுத்து அவற்றைப் பிரசுரிக்கச் செய்தால் தன் பத்திரிகைக்கும் தனக்கும் புகழ் கிடைப்பதோடு. அதன் மூலம் தன் பத்திரிகை ஆசிரியரின் அபிமானமும் அதிகச் சம்பளமும் கிடைக்கும் என்றும் அதனால் நாட்டிற்கும் நன்மை பிறக்கும் என்றும் சேதுபதி தீர்மானித்து விட்டான். அந்தத் தீர்மானத்தோடு அவன் தன் கள்ளக் காதலியான ராஜாத்தியின் வீட்டிற்கு வந்து, அங்கிருந்த டெலிபோன் மூலம் பத்திரிக்கை ஆசிரியர் மாதவனைக் கூப்பிட்டுக் கலந்து பேச முயற்சி செய்து இருக்கிறான். ஆனால் அப்போது டெலிபோனில் ஆசிரியர் மாதவன் கிடைக்கவில்லை! ஆகவே இன்னும் அரை மணி நேரத்தில், அதாவது நேற்றிரவு சரியாகப் பத்து மணிக்கு தன் சொந்த வீட்டிற்கு ஆசிரியர் டெலிபோன் செய்ய வேண்டும் என்று சேதுபதி தகவல் கொடுத்து இருக்கிறான். ஏனெனில் ரகசியச் செய்தி பற்றிய ஆதாரக் காகிதங்கள் எல்லாம், சேதுபதியின் சொந்த வீட்டிலேயே இருந்ததால் சேதுபதி அங்குபோய் அவற்றை எடுத்துக் கொண்டு அங்கு இருந்தபடியே டெலிபோனில் ஆசிரியரோடு கலந்து பேசலாம் என்று சேதுபதி கருதி இருக்கிறான். இதை எல்லாம் அறிந்ததும் அவனுடைய கள்ளக் காதலி ராஜாத்தி திகைத்து இருக்கிறாள். மர்ம மனிதனைப் பயமுறுத்திப் பணம் பறிக்கக்கூடிய சந்தர்ப்பம் கை நழுவிப் போகிறதே என்று பதறி இருக்கிறாள். அதுபற்றி சேதுபதியிடம் வாதாடியும் இருக்கிறாள். பறிக்காவிட்டால் தன் வீட்டில் இருக்க வேண்டாம் என்று கூட ராஜாத்தி சீறியிருப்பாள். இதனால் எல்லாம் சேதுபதிக்கு எரிச்சல் அதிகமாயிற்றே தவிர, ரகசியச் செய்திகளைப் பத்திரிகையில் பிரசுரிக்கக் கொடுத்து விட வேண்டும் என்ற தீர்மானம் அவனுக்குச் சிறிதும் மாறவில்லை. அந்தத் தீர்மானத்தோடு சேதுபதி நேற்றிரவு ஒன்பதரை மணி ஆகும் சமயத்தில் ராஜாத்தியின் வீட்டை விட்டுக் கிளம்பி தன் வீட்டை நோக்கிப் போயிருக்கிறான், அவன் தன் வீட்டிற்குய் போய் ரகசியக் காகிதங்களை எடுத்துக் கொண்டு டெலிபோனில் பத்திரிக்கை ஆசிரியரோடு பேசுவதற்குள்ளாகவே துப்பாக்கியால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டு விட்டான், அதனால் ராஜாத்தி நிம்மதி அடைந்து, மர்ம மனிதனைப் பயமுறுத்திப் பணம் பறிக்கும் திட்டத்தை அவளே கையாள ஆரம்பித்து விட்டாள்!” என்று ராஜா கூறி நிறுத்திவிட்டு, ராஜாத்தியின் முகத்தை உற்று நோக்கியபடி, “அது உண்மை தானே ராஜாத்தி?” என்று கேட்டான். 

ராஜாத்தி வெடுக்கென்று துள்ளி “அப்படியானால் சேதுபதியை நான் தான் சுட்டுக் கொலை செய்து விட்டேன் என்கிறீர்களா? நேற்றிரவு ஒன்பதரை மணிக்கு என் வீட்டிலிருந்து சேதுபதி உயிரோடு தான் தன் சொந்த வீட்டிற்குப் போனார். அவர் போகும் வழியில் அவரை வீரமணி சந்தித்துப் பேசி இருக்கிறார். அதன் பிறகு சேதுபதி நேரே தன் வீட்டிற்குத்தான் போனாராம். அவர் தன் வீட்டிற்குள் நுழையும் போது முன் வாசலிலே துப்பாக்கியால் சுடப்பட்டுப் பிணமாக விழுந்து கிடந்து இருக்கிறார்! அப்படி இருக்கும் போது அவரை நான் எப்படிச் சுட்டுக் கொன்றிருக்க முடியும்?” என்று குமுறினாள். 

“ஓகோ, அப்படியா, ராஜாத்தி! நேற்று இரவு சேதுபதியின் வீட்டிற்கு நாதமுனி வந்தபோது, முன் வாசலில் பிணமாக விழுந்து கிடப்பதையும் பார்த்து இருக்கிறான். சேதுபதியின் மனைவி நித்தியகலாவோ தன் கணவன் கொலை செய்யப்படுவதற்கு முன்பே அதிகமான தூக்க மாத்திரைகளை விழுங்கி மயக்க மூர்ச்சைக்கு ஆளாகி வீட்டினுள் தன் படுக்கையில் சுயநினைவற்றுக் கிடந்து இருக்கிறாள். இந்த உண்மை நாதமுனிக்குத் தெரியாது ஆகையால், தன் மீதுள்ள ஆசையால் தான் நித்தியகலா தன் கணவனைக் கொலை செய்துவிட்டு அப்படி மயக்க நித்திரையில் ஆழ்ந்து இருக்கிறாள் என்று நினைத்தான். உடனே கொலைப் பழியில் இருந்து நித்தியகலாவைக் காப்பாற்ற வேண்டும் என்று தீர்மானித்து சேதுபதியின் பிணத்தைத் தன் மோட்டார் காரில் தூக்கிப்போட்டுக் கொண்டு போய் ஏரிக்கரை பக்கம் தள்ளிவிட்டான். சேதுபதி மிரட்ட முயன்ற மர்ம மனிதனாலேயே அவன் ஏரிக்கரைப் பக்கம் சுட்டுக் கொல்லப்பட்டான் என்று கதையை மாற்றுவதற்காகத் தான் நாதமுனி அப்படிச் செய்தான்! ஆனால் இந்த விவரங்களைச் சற்று முன்னால் தான் நாதமுனியே எங்களிடம் சொன்னான். அப்படி இருக்கும் போது சேதுபதி தன் வீட்டிற்குள் நுழையும்போது சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறான் என்ற விஷயம் “உனக்கு எப்படித் தெரிந்தது, ராஜாத்தி? ஒன்று நீயே சேதுபதியைப் பின் தொடர்ந்து வந்து அவனை அப்படிச் சுட்டுக் கொன்று இருக்க வேண்டும் அல்லது அவனை அப்படிச் சுட்டுக்கொன்ற கொலைகாரனை உனக்குத் தெரிந்திருக்க வேண்டும்! இல்லையா ராஜாத்தி” என்று ராஜா கேட்டான். 

“நான் கொலை செய்யவில்லை!” என்று ராஜாத்தி வீரிட்டு அலறினாளே தவிர, வேறு எந்தப் பதிலையும் அவளால் சொல்லவே முடியவில்லை. அவளது முகம் அளவு கடந்த பீதியால் வெளிறியது. 

ராஜா தொடர்ந்து, “இனி அடுத்தபடியாக நாதமுனியின் படுகொலைக்கு வருவோம்!” என்று ஆரம்பித்தான். 

வீரமணி சட்டென்று குறுக்கிட்டு, “நாதமுனி தற்கொலை அல்லவா செய்து கொண்டான்” என்று முழங்கினான். 

“அதாவது நித்தியகலாவைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக கொலைப் பழியை தன் மீதே நாதமுனி சுமத்திக் கொண்டு, அதை ஊர்ஜிதப் படுத்துவதற்காக இப்போது தற்கொலையும் செய்து கொண்டான் என்கிறாயா, வீரமணி? ஆனால் நாதமுனி தற்கொலை செய்து கொள்ளவில்லை! கொலைப் பழியிலிருந்து நித்தியகலாவையும் தன்னையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும், உண்மைகளைக் கண்டு பிடிக்க வேண்டும் என்பதற்காகவுமே அவன் உன் வீட்டிற்கு வந்து தலைமறைவாகப் பதுங்கி இருந்தான். இந்த விவரத்தை அவன் என்னிடம் சொல்லிவிட்டு, உன்னுடைய வீட்டிற்குப் புறப்பட்டு வந்தபோது அவனிடம் துப்பாக்கி எதுவுமே இல்லை என்பது எனக்குத் தெரியும்! ஆனால் உன்னுடைய வீட்டில் அவன் தன்னுடைய சொந்தத் துப்பாக்கியாலே சுட்டுக் கொல்லப்பட்டு அவனுடைய பிணத்தருகிலேயே அந்தத் துப்பாக்கி கிடந்து இருக்கிறது! அந்தத் துப்பாக்கியைச் சில தினங்களுக்கு முன்னால் நித்தியகலாவிடம் தற்காப்பிற்காக நாதமுனியே இரவல் கொடுத்து இருக்கிறான். அதை நித்தியகலாவிடம் இருந்து சேதுபதி கைப்பற்றித் தன்னுடைய கோட்டுப் பைக்குள் போட்டுக் கொண்டு நேற்று மாலை என்னுடைய வீட்டிற்கு வந்தான். பிறகு சேதுபதியிடம் இருந்து அந்தத் துப்பாக்கியைக் கொலைகாரன் தந்திரமாக எடுத்துக் கொண்டு அதே துப்பாக்கியாலேயே நேற்றிரவு சேதுபதியைச் சுட்டுக் கொலை செய்து இருக்கிறான். பிறகு அதே கொலைகாரனே, அதே துப்பாக்கியாலேயே இப்போது நாதமுனியையும் சுட்டுத் தள்ளி விட்டு துப்பாக்கியையும் நாதமுனியின் கையருகில் போட்டுவிட்டுப் போய் இருக்கிறான்!’ என்று விளக்கினான் ராஜா. 

“அப்படியானால் நாதமுனியையும் நான் தான் கொலை செய்து விட்டேன் என்கிறீர்களா?” என்று ராஜாத்தி படபடத்தாள். 

“அவசரப்படாதே ராஜாத்தி, எல்லாவற்றையும் நான் விவரமாகச் சொல்லுகிறேன்! நீயும் வீரமணியும் அடிக்கடி டெலிபோனில் பேசிக் கொள்வீர்கள் என்பதும், உங்கள் இருவருக்கு இடையேயும் அந்தரங்கச் சிநேகிதம் உண்டு என்பதும் எனக்குத் தெரியும். சேதுபதிக்கு ஆசை நாயகியாக இருந்ததோடு வீரமணிக்கும் ரகசியக் காதலியாக இருந்து இருக்கிறாய். இன்னும் சொல்லப் போனால் சேதுபதியிடம் இருந்து பணத்தைச் சுருட்டிக் கொண்டு வீரமணியோடு வெளியூருக்கு தலைமறைவாக ஓடிச் சிறிது காலம் தனிக் குடித்தனம் நடத்தலாம் என்றும், ஆசைப்பட்டு இருப்பாய். ஒரு மர்ம மனிதனின் ரகசியம் பற்றிய ஆதாரக் காகிதங்களை எல்லாம் சேதுபதி சேகரித்ததும், அவற்றை வைத்துக் கொண்டு அந்த மர்ம மனிதனை வற்புறுத்தி பிளாக்மெயில் செய்து பெரும் பணம் பறிக்க வேண்டுமென்று நீதான் சேதுபதியை வற்புறுத்தினாய். வீரமணியின் தூண்டுதலின் பேரிலேயே நீ அப்படி வற்புறுத்தினாய்! அந்தப் பணம் பறிக்கும் திட்டத்திற்கு முதலில் சேதுபதி சம்மதித்து தான் என் உதவியை நாடி என் வீட்டிற்கு வந்தான் என்றாலும் நான் அவனுக்கு உதவ முடியாது என்று மறுத்து அவனை வெளியே தள்ளிவிட்டதும் அவன் வேறு வழியின்றி மனம் மாறிவிட்டான். அதாவது பிளாக் மெயில் செய்து பணம் பறிக்கும் திட்டத்தை அடியோடு கைவிட்டு விட்டு, அது சம்பந்தப்பட்ட ரகசியச் செய்திகளை எல்லாம் தன்னுடைய கலைத்தூதன் பத்திரிகைக்கே கொடுத்து விடுவது என்று தீர்மானித்து விட்டான். அதன் பிறகு அவன் தன்னுடைய ஆசை நாயகியான உன் வீட்டிற்கு வந்து, உன் வீட்டில் இருந்தபடியே ஆசிரியர் மாதவனுக்கு டெலிபோன் செய்து அதன் மூலம் தன் மரணத்திற்கே வழி வகுத்து விட்டான் அப்போது டெலிபோனில் ஆசிரியர் மாதவன் கிடைக்கவில்லை. ஆதலால் இன்னும் அரைமணி நேரத்திற்குள், அதாவது நேற்றிரவு சரியாகப் பத்து மணிக்கு தன் சொந்த வீட்டிற்கே ஆசிரியர் டெலிபோன் செய்ய வேண்டுமென்று தகவல் கொடுத்துவிட்டு, உன் வீட்டை விட்டுப் புறப்பட்டு தன் வீட்டை நோக்கிப் போய் இருக்கிறான்! அவன் போய் தன் வீட்டிலுள்ள ரகசியக் காகிதங்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்தே ஆசிரியருக்கு டெலிபோன் செய்து பேசிவிட்டால் மர்ம மனிதனை பிளாக்மெயில் செய்து பணம் பறிக்கும் சந்தர்ப்பமே அடியோடு கை நழுவிப் போய் விடுமென்று நீ பதறி இருக்கிறாய்! சேதுபதியை எப்படித் தடுத்து நிறுத்துவது என்பதும் உனக்குப் புரியவில்லை. அதனால் உன் வீட்டிலிருந்து சேதுபதி கிளம்பிப் போனதுமே நீ அவசரமாக வீரமணிக்கு டெலிபோன் செய்து விஷயத்தைச் சொல்லிவிட்டாய் “உடனே வீரமணி கிளம்பி வந்து சேதுபதியை வழியில் சந்தித்துப் பேசி இருக்கிறான். அந்தச் சந்திப்பை வீரமணியே ஒப்புக் கொள்கிறான். அதோடு அவனும் சேதுபதியும் தெருவில் சண்டை அடித்துக் கொண்டதைப் பார்த்ததாகவும் சில சாட்சிகள் குறிப்பிடுகிறார்கள். வீரமணிக்கும் சேதுபதிக்கும் இடையே திடீரென்று ஏன் தகராறு மூண்டது? மர்ம மனிதனைப் பற்றிய ரகசியக் காகிதங்களை எல்லாம் பத்திரிகையில் பிரசுரிக்கக் கொடுக்கக் கூடாது என்றும், அவற்றை வைத்துக் கொண்டு அந்த மர்ம மனிதனைப் பயமுறுத்திப் பெரும் பணம் பறித்து அந்தப் பணத்தை எல்லாம் ராஜாத்தியாகிய உன்னிடம் கொடுக்க வேண்டும் என்றும் சேதுபதியிடம் வீரமணி வாதாடி இருக்கிறான். அப்போது தான் உனக்கும் வீரமணிக்கும் உள்ள கள்ள உறவு சேதுபதிக்குப் புரிந்து இருக்கிறது. உடனே சேதுபதி ஆத்திரம் அடைந்து, அப்போதே தன் வீட்டிற்குப்போய் பத்திரிகை ஆசிரியருடன் டெலிபோனில் பேசி இரகசியச் செய்திகளைக் கொடுத்துவிடப் போவதாக முழங்கி இருக்கிறான். அதனால் அவனை உடனே தீர்த்துக் கட்டிவிட வேண்டும் என்று வீரமணி தீர்மானித்து விட்டான். அப்போது சேதுபதி குடிவெறியில் இருந்ததால் அவனுடைய கோட்டுப்பைக்குள் கைத்துப்பாக்கியை வீரமணி திருடி எடுத்துக் மறைமுகமாகப் பின் தொடர்ந்து போய் தள்ளாடிக் கொண்டு இருந்த நாதமுனியின் கொண்டு சேதுபதியை வீட்டிற்குள் சேதுபதி நுழையும்போதே அவனைச் சுட்டுத் தள்ளிவிட்டான்! பக்கத்து வீட்டு ஜன்னலில் இருந்து பார்த்தால் சேதுபதியின் வீட்டு முகப்பு வாசல் தெரியாதாகையால் அங்கே முகப்பு வாசலில் கொலை விழுந்த காட்சியை மட்டும் பக்கத்து வீட்டுப் பெண்மணியால் பார்க்க முடியவில்லை. அது ஒருபுறம் இருக்கட்டும்! சேதுபதியை சுட்டுக் கொலை செய்து விட்டு வீரமணி கிளம்பிப் போனதும் ராஜாத்தியாகிய உனக்கு டெலிபோன் செய்து விஷயத்தைச் சொல்லிவிட்டான். அதோடு இனி மர்ம மனிதனைப் பயமுறுத்திப் பணம் பறிக்கும் திட்டத்தை நீதான் மேற்கொள்ள வேண்டும் என்றும் வீரமணி சொல்லி இருக்கிறான். அதன் பிரகாரம் நீ நேற்றிரவே மர்ம மனிதனுக்கு டெலிபோன் செய்து பேசினாய். அப்போது நீதான் சேதுபதியின் மனைவி நித்தியகலா என்றும் தந்திரமாகப் பொய் சொல்லி நடித்தாய்! அப்படிச் சொன்னால் தான் மர்ம மனிதன் அதை-நம்பி தபால் மூலம் பணம் அனுப்புவான் என்றும், உன் பெயருக்கும் ஆபத்து இல்லை என்றும் நீ நினைத்தாய்! நூறு ரூபாய் நோட்டுகளாக இருபத்தி ஐயாயிரத்தை ஒரு கவருக்குள் போட்டு ஒட்டி அதன் மீது நித்தியகலா ‘கேர் ஆப்’ போஸ்ட் மாஸ்டர் என்ற விலாசமிட்டு இன்று காலை பத்து மணிக்குள் தபாலாபீஸில் சேர்த்துவிட வேண்டும் என்றும் மர்ம மனிதனுக்கு நீ டெலிபோனில் சொல்லி இருக்கிறாய்! இன்று காலை நீயே தபாலாபீஸுக்குப் போய் நீ தான் நித்தியகலா என்று சொல்லிக் கொண்டு இருபத்தி ஐயாயிரம் ரூபாய் அடங்கியுள்ள கவரை வாங்கி வந்து விடலாம் என்பது தான் உன்னுடைய தந்திரமாகும்! அது மட்டுமல்ல; சேதுபதி கொலையுண்டு விட்டான் என்றும், ஆனால் சேதுபதி சேகரித்த இரகசியக் காகிதங்களை எல்லாம் என்னிடம் கொடுத்து வைத்து இருக்கிறான் என்றும் நாளை காலைக்குள் மர்ம மனிதனிடம் இருந்து குறிப்பிட்ட பணம் கிடைக்காவிட்டால், அந்த இரகசியச் செய்திகள் எல்லாம் என் மூலமாகப் பத்திரிக்கையில் பிரசுரமாவதற்குப் போய்விடும் என்றும் வேறு நீ பொய் சொல்லி டெலிபோனில் அந்த மர்ம மனிதனை எச்சரித்து இருக்கிறாய்! அதனால் தான் மர்ம மனிதனின் ஆட்கள் அந்த இரகசியக் கடிதங்களைக் கைப்பற்றுவதற்காக என்னுடைய ஆபீஸையும் வீட்டையும் சோதனையிட்டு என் ஆபீஸ் காவற்காரக் கிழவனான ஜம்புலிங்கத்தையும் படுகொலை செய்துவிட்டார்கள்! அப்படியும் அவர்கள் கைக்கு இரகசியக் கடிதங்கள் கிடைக்காமல் போகவே இன்று அதிகாலையில் மர்ம மனிதன் எனக்கு டெலிபோன் பண்ணி, அந்தக் காகிதங்களுக்காகப் பேரம் பேசிய போது, நேற்றிரவு நித்தியகலா செய்த ஏற்பாட்டின் படியே ரூபாய் இருபத்தி ஐயாயிரத்தை அவளுடைய பெயருக்கே தபால் மூலமாக அனுப்பி விடுவதாக மர்ம மனிதன் சொன்னான். ஆனால் நேற்றிரவு சேதுபதி கொலைப்படுவதற்கு முன்பே நித்தியகலா தூக்க மாத்திரைகளை அதிகமாக விழுங்கி விட்டு மயக்க மூர்ச்சையில் கிடந்தாள் ஆகையால் அவள் மர்ம மனிதனுக்கு டெலிபோன் செய்திருக்க முடியாது; ஆகவே ராஜாத்தி நீ தான் நித்தியகலாவின் பெயரை உபயோகப்படுத்திக் கொண்டு அப்படிப் பணம் பறிக்கும் தந்திரத்தைக் கையாண்டு இருக்கிறாய்” என்று ராஜா கூறி நிறுத்தினான். 

ராஜாத்தி திருதிருவென விழித்தாள். 

வீரமணியோ அலட்சியமாக இடி இடியென்று சிரித்து விட்டு, “ராஜா! நீ மர்மக் கதை எழுத்தாளர் என்பதால் வெகு பொருத்தமாகத் தான் கதை அளக்கிறாய். ஆனால் நாதமுனியை நான் தான் சுட்டுக் கொன்றேன் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? நாதமுனி தான் சேதுபதியைச் சுட்டுக் கொன்றதாக நாதமுனியே தன் கைப்பட டைப் அடித்த காகிதம் அதோ தமிழ் டைப் மிஷினில் அப்படியே இருக்கிறது!” என்றான். 

‘வீரமணி! நீதான் நாதமுனியை அந்தத் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளிவிட்டு அதன் பிறகு நாதமுனி டைப் அடித்தது போல் நீ தான் அந்தக் காகிதத்திலும் டைப் அடித்து இருக்கிறாய்” என்றான் ராஜா. 

“நான் டைப் அடித்திருந்தால் டைப் அச்சு எழுத்துகளின் மீது என் கைரேகை பதிந்து இருக்குமே, அதைப் பரீட்சித்துப் பார்த்தாயா?” என்று வீரமணி கிண்டலாகக் கேட்டான். 

கைரேகை படாமலும் டைப் அடிக்க முடியும், வீரமணி! உன் கைவிரல்கள் படாமல் உன் பவுண்டன் பேனாவினாலேயே டைப் மிஷினின் அச்சுத் தட்டைகள் மீது அழுத்திக் குத்தி அந்த வாசகங்கள் நீயே டைப் அடித்து இருக்கிறாய்! அவ்வாறு டைப் அடிக்கப்பட்டு இருக்கும் விதத்தை அந்தக் காகிதத்தில் இருந்து கவனிப்பதோடு, அதோ உன் சட்டைப் பையில் சொருகி இருக்கும் பவுண்டன் பேனாவையும் சோதித்துப் பார்த்தால் அது புரிந்து விடும்!” என்றான் ராஜா. 

அதைக் கேட்டதும் வீரமணி சட்டென்று தன்னுடைய பவுண்டன் பேனாவை எடுத்து ஜன்னல் வழியாக விட்டெறிய முயன்றான். உடனே அவனை இன்ஸ்பெக்டர் அருளானந்தம் சடக்கென்று பிடித்துக் கொண்டார். 

அவனை நோக்கி, “முட்டாள்” என்று ராஜா கிண்டலாகச் சொல்லிவிட்டு, ராஜாத்தியை நோக்கி, “ம்! நாதமுனியைக் கொலை செய்தது வீரமணி தான் என்பது அவனுடைய முட்டாள்தனமான செய்கையில் இருந்தே தெளிவாகிவிட்டது! ஆனால் நேற்றிரவு சேதுபதியைக் கொலை செய்தது நீயா அல்லது வீரமணியா?” என்று கேட்டான். 

“நான் கொலை செய்யவில்லை” என்று ராஜாத்தி பரிதாபமாக விம்மினாள். 

“அப்படியானால் சேதுபதியையும் வீரமணி தான் சுட்டுக் கொலை செய்தானா?” 

“ஆமாம்!” என்று ராஜாத்தி தன்னையறியாமலே தலையாட்டினாள். 

வீரமணி வியர்வையில் குளித்தவனாய், “ராஜாத்தி” என்று கத்தினான். 

ஆனால் ராஜாத்தி தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள். 

போலீஸாரும் ராஜாவும் தன்னை விடமாட்டார்கள் என்பதைப் புரிந்து கொண்ட அவள், “நான் போலீஸ் தரப்பு ‘அப்ரூவராக’ மாறி விடுகிறேன்! தயவு செய்து என்னை விட்டு விடுங்கள்!” என்று கூறிவிட்டு உண்மைகளை எல்லாம் ஒப்புக் கொண்டாள். வீரமணிக்கு அவள் உடந்தை என்பதையும் ஆமோதித்தாள். அதோடு அவள், “சார்! ஒரு பெரிய மனிதரை சேதுபதி பயமுறுத்தி பிளாக் மெயில் செய்து பணம் பறிக்கத் திட்டமிட்டாரே அந்த மர்ம மனிதர் வேறு யாரும் அல்ல! இந்தத் தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. ஆன சங்கர் தான்! நான் அவருடைய பழைய காதலி! சங்கர் ஒரு கள்ளக் கடத்தல்காரர் என்பதையும் எதிரி நாடுகளின் உளவாளி என்பதையும் சேதுபதி கண்டுபிடித்து அவை சம்பந்தப்பட்ட ஆதாரக் காகிதங்களைத் தான் சேகரித்து வைத்திருந்தார்! கடைசியில் சட்ட விரோதமான பணப் பேராசையே எங்களை எல்லாம் அடியோடு அழித்துவிட்டது!’ என்று ராஜாத்தி கூறிவிட்டு விம்மினாள். 

அதன் பிறகு வீரமணியும் வேறு வழியின்றிக் கொலைக் குற்றங்களை எல்லாம் ஒப்புக் கொண்டான். 

அவனையும் ராஜாத்தியையும் போலீஸார் கைது செய்தார்கள். 

நாதமுனி மாண்டு மடிந்துவிட்டான் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு ஓடிவந்த நித்தியகலா அவனுடைய பிணத்தின் மீது விழுந்து அழுது பார்க்கப் பரிதாபமாக இருந்தது. நாதமுனி ஒழுக்கத்தில் சிறந்தவனாக இருந்தது, அவனை தெய்வமாக உயர்த்தி விட்டது. எனவே கணவன் சேதுபதியையும் பறி கொடுத்து, தன்னுடைய உத்தமக் காதலனான நாதமுனியையும் பறிகொடுத்து நித்தியகலா இருவருக்காகவும் பன் மடங்கு கண்ணீர் வடித்தாள். 

“இந்தக் கவரில் உள்ள இருபத்து ஐயாயிரம் ரூபாயை என்ன செய்வது?” என்று இன்ஸ்பெக்டர் அருளானந்தம் கேட்டார். 

“அதை அனுப்பியவரின் விலாசம் எதுவுமில்லாமல் அனாமதேயமான முறையில் நித்தியகலாவின் பெயருக்கு இனாமாக வந்த பணம் அது! இனி நித்தியகலா இஷ்டப்பட்டால் அதை நாட்டு நலனுக்கே தானமாகக் கொடுக்கலாம்” என்றான் ராஜா. 

இன்ஸ்பெக்டர் அருளானந்தம் ராஜாவைப் பாராட்டி விட்டு மர்ம மனிதனான சங்கர் எம்.எல்.ஏ. யைக் கைது செய்வதற்காக அதி வேகத்தில் கிளம்பிச் சென்றார். 

சிறிது நேரத்தில் நாதமுனியின் சடலத்தை சில போலீஸ்காரர்கள் தூக்கி வந்து ஆம்புலன்ஸ் வண்டியில் வைத்தார்கள். நித்தியகலா பைத்தியக்காரி போல் சிரித்தாள். பிறகு அவளும் ஆம்புலன்ஸ் வண்டிக்குள் ஏறி நாதமுனியின் பிணத்திற்கு அருகிலே உட்கார்ந்து கொண்டாள். தன் காதலனின் சடலத்தைப் பின் தொடர்ந்து புதை குழிக்கும் போய்விடத் தயாரானவள் போலவே அவள் தோன்றினாள். 

ராஜாவும், பானுவும் அந்தக் காட்சியைப் பார்த்து கண் கலங்கினார்கள். 

ஆம்புலன்ஸ் வண்டி கிளம்பி அவர்களுடைய கண் பார்வையில் இருந்து மறைந்தது. 

ராஜா பானுவின் கையைப்பற்றி, “வா! போகலாம்” என்று கூறி அழைத்தான். 

“கை வலிக்கிறது; விடுங்கள்” என்று சிணுங்கினாள் பானு. 

“இனிமேல் உன் கையை என்றைக்குமே விட மாட்டேன்” என்று ராஜா சொல்லிவிட்டு அவளை அப்படியே வாரியணைத்துக் கொண்டான். 

பானு கொம்பில் படரும் பூங்கொடியாகி விட்டாள்! 

(முற்றிற்று)

– சொட்டு ரத்தம் (மர்ம நாவல்), முதற் பதிப்பு: 1966, பிரேமா பிரசுரம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *