சொட்டு ரத்தம்





(1966ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-17 | அத்தியாயம் 18-19
16. சிக்கிக்கொண்டாள் ஒருத்தி!
போலீஸ் தலைமைக் காரியாலயம் அது!
ராஜா காரை ‘பீச்’ ரோட்டில் நிறுத்தி விட்டுக் கீழே இறங்கி எல்லாக் கண்ணாடிகளையும் ஏற்றி காரின் கதவை மூடிவிட்டு நேராக போலீஸ் தலைமைக் காரியாலயத்தை நோக்கி நடந்தான்.

ஆயுதம் தாங்கிய போலீஸ்காரர்கள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து ‘பாரா’ கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்.
ராஜா அவர்கள் எல்லோரையும் கடந்து குற்ற இலாகா இன்ஸ்பெக்டர் அருளானந்தத்தின் தனி அறையினுள் நுழைந்தான்.
இன்ஸ்பெக்டர் அருளானந்தம் குனிந்தபடி எதையோ காகிதத்தில் எழுதிக் கொண்டு இருந்தார்.
அவர் எதிரில் இரண்டு கைகளையும் நெஞ்சின் குறுக்காகக் கட்டிக் கொண்டு வீரமணி நின்று கொண்டு இருந்தான். என்ன நடக்கப்போகிறதோ என்ற கிலியினால் அவனுடைய முகம் வெளுத்துப் போயிருந்தது.
“ராஜா! நீங்கள் இங்கேயும் வந்து விட்டீர்களா?” என்று எரிந்து விழுந்த இன்ஸ்பெக்டர் அருளானந்தம், “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று சீறினார்.
“வீரமணிக்கு உதவி செய்வதற்காக ஆசிரியர் மாதவன் என்னை இங்கே அனுப்பி இருக்கிறார்” என்று சொன்னான் ராஜா.
இன்ஸ்பெக்டர் அருளானந்தம் முதலில் கோபித்துக் கொண்ட போதிலும், பிறகு முகத்தில் சாந்தத்தை வரவழைத்துக் கொண்டு, “நீங்கள் இங்கே வந்ததும் ஒருவிதத்தில் நல்லது தான். இல்லாவிட்டால் அப்பாவியான வீரமணியை போலீஸார் வேண்டும் என்றே குற்றவாளியாக்கி விட்டார்கள் என்று கதை கட்டிவிட்டு விடுவீர்கள். பிறகு எங்கள் மீது பழி சுமத்தி பத்திரிகையில் தொடர் கட்டுரையும் எழுதத் தொடங்கி விடுவீர்கள்” என்று சொன்னவர், “உட்காருங்கள்” என்று கனிவோடு சொன்னார்.
திடீர் மருமகனுக்கு மாமியார் வீட்டு விருந்து கிடைந்ததைப் போன்ற மகிழ்ச்சி ராஜாவுக்கு ஏற்பட்டது. சிரித்துக் கொண்டே-ஆனால் கலவரத்துடனேயே உட்கார்ந்தான்.
“நீங்கள் எதனால் என்னை இங்கே அழைத்து வந்து அவமரியாதையுடன் நடத்துகிறீர்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. அப்படி நான் என்ன தப்பு செய்து விட்டேன்?” என்று பொறுமை இழந்து விட்ட வீரமணி அவமானத்தால் குன்றிப்போய் உணர்ச்சிப் பெருக்குடன் கேட்டான்.
“நீங்கள் தப்பு செய்தீர்களா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ளவே இங்கே அழைத்து வந்தேன். நேற்றிரவு கொலையுண்ட சேதுபதியும் நீங்களும் நடுத் தெருவில் நின்று கொண்டு இருந்ததை இரண்டு பேர்கள் பார்த்து இருக்கிறார்கள். நீங்கள் தானா பேசியது என்பதை அவர்கள் அடையாளம் காண்பிக்கப் போகிறார்கள்” என்றார் இன்ஸ்பெக்டர் அருளானந்தம் அமைதியாக.
“நான் பேசவில்லை என்று மறுத்தால் தானே என்னை அவர்கள் அடையாளம் காட்ட வேண்டும்! நான் சேதுபதியிடம் மனம் விட்டுப் பேசினேன். இதை ராஜாவிடம் கூடத் தெரியப்படுத்தி இருக்கிறேனே, சொல்லுங்கள் ராஜா!”
ராஜா அவன் சொன்னதை ஒப்புக்கொண்டு விளக்கினான்.
“வீரமணி! நீங்கள் தான் சேதுபதியையும், வாட்ச்மேன் ஜம்புலிங்கத்தையும் கொலை செய்தீர்கள் என்று நான் நம்பிவிடவில்லை. உங்களை அவர்கள் அடையாளம் காட்டிய பின்பு நீங்கள் விரிவான ‘ஸ்டேட்மென்டு’ ஒன்று கொடுக்கலாம்” என்று சொன்ன இன்ஸ்பெக்டர் அருளானந்தம், வெளியே நின்று கொண்டு இருந்த இரண்டு ஆட்களை அழைத்து, ‘இவரைக் கூர்ந்து பாருங்கள். நீங்கள் பார்த்த ஆசாமி இவர் தானா என்று சொல்லுங்கள். அவசரப்பட்டு எதையும் உளறிவிடக் கூடாது” என்று எச்சரிக்கை செய்வதைப் போல் சொன்னார்.
ஐம்பது வயதைத் தாண்டிய அரைக்கிழவர்கள் இருவரும் வீரமணியைக் கூர்ந்து பல கோணங்களில் நின்றும் பார்த்தார்கள். பின்பு அவர்களில் ஒருவர், “எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. இவர் தான் சேதுபதியுடன் நேற்றிரவு கடுமையாகச் சண்டை போட்டார்” என்று சொன்னார்.
அவர் சொன்ன அதே வார்த்தைகளைத் தான் இன்னொரு அரைக்கிழவரும் தெரியப்படுத்தினார்.
அந்த அரைக்கிழவர்கள் தன் உயிருக்கு உலை வைக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்ட வீரமணி பதறிப்போய், “நான் சண்டை போட்டதாகக் கூறப்படுவது பொய்! வேண்டுமென்றே எனக்கு இழைக்கப்படும் அநீதி! நானும் சேதுபதியும் பேசிக் கொண்டோமே தவிர, சண்டை போட்டுக் கொள்ளவில்லை” என்று சொன்னான்.
இன்ஸ்பெக்டர் அருளானந்தம், “இதற்கு என்ன பதில் சொல்லுகிறீர்கள்?” என்று கேட்பதைப்போல் அந்த அரைக்கிழவர்களில் ஒருவரைப் பார்த்தார்.
“பேசுவதற்கும் சண்டை போடுவதற்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது. அவர்கள் இரண்டு பேர்களும் நடுரோட்டிலேயே நின்று கொண்டு சண்டை போட்டதால் எங்களால் மிகவும் நன்றாகக் கவனிக்க முடிந்தது. இரண்டு பேர்களும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டார்கள்!” என்றார் அரைக் கிழவர்களில் ஒருவர்.
வீரமணி வியர்த்து விறு விறுக்க நின்று கொண்டு இருந்தான். தன் கட்சியை எப்படி நிலை நாட்டுவது என்று அவனுக்குத் தெரியவில்லை.
இன்ஸ்பெக்டர் அருளானந்தம் துப்பு துலங்கி விட்டதைப் போன்ற மகிழ்ச்சியுடன், “சேதுபதியை உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று சாட்சிகளிடம் கேட்டார்.
“நாங்கள் தூரத்து உறவினர்கள். சேதுபதி, குடிகாரன் என்பது எங்களுக்குத் தெரியும். அவன் தள்ளாடியபடியே தன் வீட்டை நோக்கி நடந்து வந்து கொண்டு இருந்தான். அப்பொழுது ஒரு கார் அவனைக் கடந்து வந்து ‘கிரீச்’ என்ற ஒலியுடன் நின்றது. அதிலிருந்து இவர் இறங்கி வந்து சேதுபதியுடன் ஏதேதோ பேசினார். உடனே அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டு விட்டது.”
“நீங்கள் அவர்கள் சண்டை போட்டதை வேடிக்கை பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தீர்களா?” என்று கேட்டார் இன்ஸ்பெக்டர் அருளானந்தம்.
அதன் பிறகு தான் இழந்து விட்ட உயிர் திரும்பவும் கிடைத்து விட்டதைப் போன்ற மகிழ்ச்சி வீரமணிக்கு ஏற்பட்டன. மிகவும் பொருத்தமான கேள்வியல்லவா அது!
அரைக் கிழவர்கள் இருவரும் அபாயத்தில் மாட்டிக் கொண்டவர்களைப் போல் ‘திரு திரு’வென்று விழித்தார்கள்.
“நாங்கள் சண்டையை விலக்க எண்ணுவதற்குள் அவர்களாகவே பிரிந்து போய்விட்டார்கள்!” என்றார் இரண்டாவது அரைக்கிழவர்.
“அதன் பிறகு சேதுபதி இறந்துவிட்டான் என்ற விஷயம் உங்களுக்கு எப்படித் தெரிந்தது?”
“காலையில் வந்த ‘கலைத்தூதன்’ பத்திரிகையைப் படித்துப் பார்த்ததும் திடுக்கிட்டுப் போனோம். சேதுபதி இரவில் கொலை செய்யப்பட்டதாக அதில் செய்தி வெளியாகி இருந்தது. அதன் பிறகு தான் நாங்கள் இரவில் பார்த்த சண்டை விபரத்தைச் சொல்லுவதற்காக உங்களிடம் வந்தோம்.”
“நேற்றிரவு இரண்டு பேர்களும் சண்டை போட்ட போது சேதுபதியின் மீது பலமான அடிப்பட்டதை நீங்கள் கவனித்தீர்களா?”
“நாங்கள் இருட்டில் அதைச் சரியாகக் கவனிக்க வில்லை. ஆனால் அவர்கள் ஒருவரை ஒருவர் பிடித்துத் தள்ளிக் கொண்டு இருந்தார்கள்.”
“அப்படியானால் நீங்கள் பார்த்தபோது சேதுபதி சாகவில்லை அல்லவா?”
“சாகவில்லை. ஏனென்றால் சண்டை முடிந்ததும் அவன் தள்ளாடியபடியே தன் வீட்டை நோக்கிப் போய்க் கொண்டு இருந்தான்.”
அதைக் கேட்டதும் உயிர் பிழைத்ததைப் போன்ற நிம்மதியுடன் வீரமணி மூச்சு விட்டான். கொஞ்சம் ஏமாந்து விட்டால் அவர்கள் தூக்கு மேடைக்கே அழைத்துச் சென்று நிறுத்தி விடுவார்கள் போல் தோன்றியது!
வீரமணி குற்றமற்றவன் என்று நினைத்துக் கொண்டாரோ! என்னவோ, நாற்காலியில் உட்காரும்படி இன்ஸ்பெக்டர் அருளானந்தம் சொன்னார்.
அப்பாடா! வீரமணி கைக்குட்டையால் தன் முகத்தைத் துடைத்துக் கொண்டு நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தான்.
“இரண்டு மனிதர்கள் வீரமணியின் மீது குற்றம் சாட்டினார்கள் என்பதற்காகவா அவரைக் கைது செய்து கொண்டு வரும் படிச் சொன்னீர்கள்?” என்று வீரமணிக்காகப் பரிந்து கொண்டு ராஜா கேட்டான்.
இன்ஸ்பெக்டர் அருளானந்தம், அது அவனுக்குத் தேவையற்ற விஷயம் என்ற போதிலும், பத்திரிகையின் சார்பாக வந்திருப்பதால், “இன்று காலையில் இரண்டு போலீஸ்காரர்கள் வீரமணியின் வீட்டுக்குப்போய் சேதுபதி இறந்துபோன செய்தியைச் சொன்னார்களாம். ஆனால் அந்தச் செய்தியைக் கேட்டு வீரமணி எந்த விதமான அதிர்ச்சியும் அடையவில்லையாம். எதுவும் நடைபெறாததைப் போல் அமைதியாக காப்பி சாப்பிட்டுக் கொண்டு இருந்தானாம். அதனால் தான் எங்கள் ஆட்களுக்கு அவன் மீது கடுமையான சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது” என்று தெளிவுபடுத்தினார்.
“சேதுபதி செத்துப்போன விஷயம் முன்கூட்டியே வீரமணிக்குத் தெரியும்! உண்மை அப்படி இருக்கும்போது, அந்த மரணச் செய்தியை முதன் முறையாகக் கேள்விப்பட்டதைப் போல் எப்படி வீரமணியால் நடிக்க முடியும்? போலியாக நாடகமாட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?” என்றான் ராஜா.
திறமை வாய்ந்த ஒரு வக்கீலைப்போல் பேசும் ராஜாவை இன்ஸ்பெக்டர் நிமிர்ந்து பார்த்தார்.
“சேதுபதி இறந்துவிட்டான் என்பது வீரமணிக்கு எப்படித் தெரிந்தது? பத்திரிகை கடைகளுக்கு வருவதற்கு முன்னாலேயே போலீஸ்காரர்கள் அவனைச் சந்தித்துப் பேசி இருக்கிறார்கள்.”
“சேதுபதியின் ஆசை நாயகியான ராஜாத்தி என்பவள், வீரமணிக்கு டெலிபோன் செய்து சேதுபதி இறந்துவிட்ட தகவலைச் சொன்னாளாம்.”
இப்படி ராஜா சொல்லிவிட்டு ராஜாத்தியின் பெயரையும் கொலை விவகாரத்தில் சம்பந்தப்படுத்தி விட்டோமே என்று நினைத்து வருந்தினான்.
அதே வருத்தம் வீரமணிக்கும் உண்டாகத்தான் செய்தது. போலீஸார் இனிமேல் ராஜாத்தியை நிம்மதியாக இருக்க விடுவார்களா என்ன? சதாவும் கேள்விகள் கேட்டு அவளை ‘குடாய்ந்து’ எடுத்து விடுவார்களே!
“சேதுபதிக்கு ஆசை நாயகி என்று ஒருத்தியும் இருந்தாளா? ஆச்சரியமாக இருக்கிறதே!” என்று சொல்லி விட்டு வியப்புடன் பார்த்த இன்ஸ்பெக்டர் அருளானந்தம், “அவள் சேதுபதி கொலையுண்ட விபரத்தை எப்படி தெரிந்து கொண்டாள்?” என்று கேட்டார்.
சும்மா கிடந்த சங்கை எடுத்து ஊதிக்கெடுத்ததைப் போன்ற நிலைமையில் தத்தளித்த ராஜா, “நான் தான் இந்தத் தகவலை ராஜாத்தியிடம் சொன்னேன்” என்றான்.
“கொஞ்சம் விபரமாகச் சொல்லுங்கள். சேதுபதிக்கு ராஜாத்தி என்ற பெயரை உடைய ஆசை நாயகி ஒருத்தி இருக்கிறாள் என்பது உங்களுக்கு எப்படித் தெரிந்தது?”
“நீங்கள் இறந்துபோன சேதுபதியின் கால் சட்டைப் பையினுள் இருந்து ஐந்து என்ற எண் பொறிக்கப்பட்ட சாவியைக் கண்டெடுத்தாகச் சொன்னீர்கள் அல்லவா? நான் அந்தச் சாவிக்குரிய வீட்டைத் தேடிக் கண்டுபிடித்தேன். அந்த வீட்டில் தான் ராஜாத்தி குடியிருக்கிறாள். சாவி எண் அந்த வீட்டின் ‘பிளாகி’ நம்பராகும்.”
“மிகவும் புத்திசாலித்தனமாக அசல் துப்பறியும் போலீஸ் அதிகாரியைப் போலவே நடந்து இருக்கிறீர்கள்” என்று பாராட்டிய இன்ஸ்பெக்டர் அருளானந்தம், “உங்களுக்கு நன்றி” என்று சொன்னார்.
வெற்றிக்கம்பத்தை நோக்கி நடந்து கொண்டு இருக்கும் வீரனைப்போல் அகமகிழ்ந்த ராஜா, “நித்தியகலாவுக்கு மயக்கம் கலைந்து அவள் பேசி விட்டாளா?” என்று கேட்டான்.
இன்னும் இல்லை. அவள் மயக்கம் தெளிந்து எழுந்ததும், தன் புருஷனின் மரணத்தைப் பற்றிக் கேள்விப்படுவதற்கு முன்னால் என்ன சொல்கிறாள் என்பது தான் முக்கியம்! ஆனால் அவள் மயக்கம் கலைந்ததும் போலீஸாருடன் தான் பேசமுடியும். நீங்கள் பக்கத்தில் கூட நெருங்க முடியாது!” என்றார் இன்ஸ்பெக்டர் அருளானந்தம்.
ராஜா போலீஸ் அதிகாரியின் கண்டிப்பான உத்தரவைக் கேட்டு முறுவலித்துக் கொண்டான். தனக்காக நர்ஸ் உடையில் பானு அந்த வீட்டுக்குள்ளேயே நித்தியகலாவோடு பேசுவதற்காக உட்கார்ந்து இருக்கிறாள் என்பது அவனுக்கு மட்டும் தானே தெரியும்?
இன்ஸ்பெக்டர் அருளானந்தம், வீரமணியின் முகத்துக்கு நேராகத் திரும்பி, “சேதுபதியின் மரணம் குறித்து ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?” என்று கேட்டார்.
“எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை சார். இன்னும் சேதுபதி உயிருடன் இருப்பதைப் போன்ற உணர்ச்சியே எனக்கு ஏற்படுகிறது!” என்றான் வீரமணி.
இன்ஸ்பெக்டர் அருளானந்தம் ஏதோ பேசுவதற்கு உதடுகளைக் குவித்ததும் மேஜையின் மீதிருந்த டெலிபோன் மணி யாருடைய அபாயத்தையோ எதிரொலிப்பது போல் அலறியது. அவர் ரிசீவரை எடுத்து காதோரமாக வைத்துக் கொண்டு, “ஹலோ…. இன்ஸ்பெக்டர் அருளானந்தம் பேசுகிறேன்’ என்று சொன்னதும், அடுத்த கணம் அவருடைய முகத்தில் கோபத்தின் சலனம் படர்ந்தது.
ராஜாவும், வீரமணியும் திடுக்கிட்டார்கள். அவர் கேட்கும் செய்தி தங்களுக்கு ஆபத்தை உண்டாக்கக் கூடியதா?
“அவளைக் கைது செய்து உடனே இங்கே கொண்டு வாருங்கள். இப்படிப்பட்ட திமிர்பிடித்த பெண்களுக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும்”.
இன்ஸ்பெக்டர் அருளானந்தம் கடுமையாக உறுமிவிட்டு ரிசீவரை வைத்ததும், “நாங்கள் வெளியே போகலாம் அல்லவா?” என்று கேட்டுக்கொண்டே ராஜா எழுந்தான். அவனைத் தொடர்ந்து வீரமணியும் எழுந்தான்.
“அப்படியே உட்காருங்கள்”
அருளானந்தம் ஓர் அதட்டல் போட்டதும் இரண்டு பேர்களும் அப்படியே உட்கார்ந்து விட்டார்கள்.
“எங்கள் இலாகாவில் விளையாடவா செய்கிறீர்கள்? ராஜா. இந்த உலகத்திலேயே உங்கள் ஒருவருக்குத் தான் மூளை இருக்கிறது என்று நினைத்து விட வேண்டாம்.”
அவர் இப்படி சொன்னதும் ராஜாவுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. எந்த பெண்ணை அவர் கைது செய்து கொண்டு வரும்படி சொன்னார்? பானு போலி நர்ஸாக நடித்த விஷயம் அம்பலமாகி விட்டதா?
அவளுக்கு ஆபத்து என்றால்…?
ராஜாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. உடனே எழுந்து சென்று பானுவைப் பார்த்து விட வேண்டும் என்பதைப் போல் உள்ளம் துடியாய்த் தடித்தது.
“உங்கள் திட்டம் என்ன என்பதை இனியாவது ஒளிக்காமல் சொல்லுங்கள்” என்று இன்ஸ்பெக்டர் கேட்டார்.
ராஜா விழித்தான்.
“இன்னும் நான் சொல்லுவதைப் புரிந்து கொள்ள முடியவில்லையா? உங்கள் காரியதரிசினி பானுவுக்கு நர்ஸ் உடையைக் கொடுத்து டாக்டர் சாமுவேல் அனுப்பியதைப் போல் அனுப்பி நித்தியகலா என்ன சொல்லுகிறாள் என்பதை உளவறியச் செய்து விட்டீர்கள், இல்லையா ?”
இன்ஸ்பெக்டர் அருளானந்தம் கண்கள் இரண்டும் வெளியே பிதுங்கிக்கொண்டு நிற்க மிகவும் கடுமையான கோபத்துடன் கேட்டார்.
உண்மை என்ன என்பது
ராஜாவுக்குப் புரிந்துவிட்டது. நர்ஸ் உடையில் இருந்த பானுவை போலீஸார் கண்டுபிடித்து விட்டார்கள்! இருந்தாலும் அவன் சமாளித்தான்.
“பானுவும் ஒருவிதத்தில் நர்ஸ் தான்! ஏற்கனவே அவள் முதல் உதவி சிகிச்சை முறைகளை எல்லாம் படித்துப் பாஸாகி இருக்கிறாள். டாக்டர் சாமுவேல், நித்தியகலாவைக் கவனித்துக் கொள்ள ஒரு பெண் இருந்தால் போதும் என்று சொன்னார். எனவேதான் பானுவை அனுப்பி வைத்தேன். நித்தியகலாவைப் பார்த்துக் கொள்ள பானு போதாதா சார்?”
இன்ஸ்பெக்டர் அருளானந்தம் மேஜையின் மீது கையை மடக்கி பலமாகக் குத்திக் கொண்டார்.
“பானு போதும்! ஆனால் அவளை நீங்கள் அனுப்பி வைத்ததின் உள்நோக்கம் இப்பொழுது தான் எனக்குப் புரிந்தது. நித்தியகலா எங்களிடம் கொலை சம்பந்தமான உண்மையைச் சொல்லி விடாமல் தடுக்க அவள் மூலமாக ஏற்பாடு செய்து வீட்டீர்கள்.”
“உண்மை அதுவல்ல சார்.”
“நீங்கள் இனிமேல் எதைச் சொன்னாலும் நம்பமாட்டேன். பானுவுக்கும் உங்களுக்கும் சரியான தண்டனை கிடைக்கும்” என்று கண்டிப்பதைப்போல் சொன்ன இன்ஸ்பெக்டர் அருளானந்தம், “இன்னும் சிறிது நேரத்தில் பானு இங்கே வரப்போகிறாள். அவளிடம் நீங்கள் எதுவுமே பேசக்கூடாது” என்று உத்தரவிட்டார்.
பானுவின் தர்ம சங்கடமான நிலைமையை உணர்ந்து ராஜா வருந்தி தலையைத் தாழ்த்தினான். முதன் முறையாக போலீஸாரிடம் பிடிபட்டு இருக்கும் பானு எவ்வளவு வேதனையை அனுபவித்துக் கொண்டு இருக்கிறாளோ? அவமானத்தால் அவள் முகம் சுண்டிப்போய் இருக்குமே….?
சிறிது நேரம் கழித்து பானுவை நர்ஸ் உடையிலேயே சப்- இன்ஸ்பெக்டர் ராமசாமி அழைத்து வந்தார்.
அவளை ராஜா பார்த்தான். உடனே தன்னையும் அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் பொங்கியது.
பானு இலேசாகத் திரும்பி தலையைத் தாழ்த்திய படியே ராஜாவை அமைதியாகப் பார்த்தாள். கண்கள் கலங்கிப்போய் இமை வரையில் கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது.
பாவம் பானு! போலீஸாரின் கையில் பிடிபட்டதும், எப்படி தொட்டால் சுருங்கி செடிபோல் துவண்டு போய் விட்டாள். முகத்தில் மலர்ச்சி என்பது கொஞ்சம்கூட இல்லையே!
ராஜா கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டு, “எதற்குமே அஞ்ச வேண்டாம். நான் இருக்கிறேன்” என்று சொல்லுவதைப்போல் கண்களைச் சிமிட்டி சைகை செய்தான். உதடுகளைக் கடித்தும் உணர்த்தினான்.
“நர்ஸ் அம்மா? வாருங்கள்! வாருங்கள்! என்ன தான் நம்பிக்கையுள்ள காரியதரிசினியாக இருந்தாலும் இப்படி ஒருபோதும் நடந்து கொள்ளக் கூடாது! போலி நர்ஸ் வேடம் போட்டதற்கு உனக்கு என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா?” என்றார் இன்ஸ்பெக்டர்.
பானு குனிந்த தலை நிமிரவில்லை. அவர் அதட்டல் போட்டு ஏதேதோ சொன்ன போதிலும் அவள் வாய் திறந்து எந்தக் கேள்விக்குமே பதில் சொல்ல வில்லை.
அவளுடைய செய்கையைக் கண்டு ஆத்திரத்தினால் குமுறிய இன்ஸ்பெக்டர் அருளானந்தம், “என்ன நடந்தது?” என்று சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமியைப் பார்த்துக் கேட்டார்.
“நித்தியகலாவுக்கு மயக்க நிலை தெளியும் சமயத்தில் நித்திய கலாவின் படுக்கையறைக் கதவை இந்தப் பானு உட்புறமாகத் தாளிட்டுக் கொண்டாள். பிறகு இவளும் நித்தியகலாவும் ஏதேதோ பேசிக் கொண்டார்கள். ஆனால் என்ன பேசினார்கள் என்பதைச் சொல்ல பானு கண்டிப்பாக மறுத்து விட்டாள். எதுவுமே பேசவில்லை என்று அப்பட்டமாக பொய் சொல்லுகிறாள்! நாங்கள் நித்திய கலாவைப் போய்ப் பார்த்தபோது நித்தியகலா மீண்டும் மயக்க நிலை அடைந்து விட்டாள். அதனால் அவள் பானுவிடம் என்ன பேசினாள் என்பது கூட அவளுக்கு ஞாபகம் வரவே வராதாம்! இந்தப் பானுவோ என்ன பேசினார்கள் என்பதைச் சொல்ல மறுக்கிறாள்!” என்றார் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி.
“நீயும் நித்தியகலாவும் என்ன பேசிக் கொண்டீர்கள் என்ற உண்மையைச் சொல்லிவிடு. பிடிவாதமாக நின்று கொண்டு இருந்தால் மிகவும் மோசமான விளைவுகள் தான் ஏற்படும்” என்று அதட்டினார் இன்ஸ்பெக்டர் அருளானந்தம்.
இப்போதும் பானு அசைந்து கொடுக்கவில்லை. தலைவனுடைய உத்தரவுக்கு எதிர்பார்க்கும் வீரனைப் போலவே நின்று கொண்டு இருந்தாள்.
“நாங்கள் கேட்டால் அவள் வாயிலிருந்து எந்த வார்த்தைகளுமே வெளிவராது போல் இருக்கிறது. அதனால் நீங்களே கேளுங்கள் ராஜா!” என்றார் இன்ஸ்பெக்டர் அருளானந்தம்.
தனக்கு வெற்றி கிடைத்துவிட்டது என்று நினைத்து உள்ளூர களிப்படைந்த ராஜா எழுந்து சென்று பானுவின் பக்கத்தில் ஜோடியாக நின்று கொண்டு, “பானு!” என்றான்.
பானு புருவங்களை உயர்த்தி அவன் முகத்தைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் ஊடுருவல் நிறைந்து இருந்தது.
“நேற்றிரவு என்ன நடந்தது என்பதைப் பற்றி நித்தியகலா ஏதாவது உன்னிடம் சொன்னாளா? பயப்படாமல் தைரியமாகச் சொல்.” என்றான் ராஜா.
அவன் இப்படிச் சொன்னதும் பானு வியப்புடன் அவன் முகத்தைப் பார்த்தாள். எதையுமே சொல்லக் கூடாது என்பதல்லவா அவனுடைய பழைய உத்தரவு…?
அவள் எதனால் தயங்குகிறான் என்பதைக் கவனித்த ராஜா “நடந்ததைச் சொன்னால் என்னையும் அவளையும் சிறையில் அடைத்து விடுவீர்களோ என்று பயப்படுகிறாள். அதனால் அவள் உண்மையைச் சொன்னதும் நீங்கள் எங்களை விட்டு விட வேண்டும்.” என்று ராஜா கேட்டுக் கொண்டார்.
“நான் உங்களை வெளியே விட்டு வைப்பதும், சிறையினுள் தள்ளுவதும் பானு சொல்லும் உண்மையைப் பொறுத்தது. அவள் நம்பிக்கையாகவும் நல்ல விதத்திலும் நடந்து கொண்டால் எங்களால் உங்களுக்குத் தொந்தரவு ஏற்படாது.”
இன்ஸ்பெக்டர் அருளானந்தம் பொய் சொல்லாதவர் என்பதாலும், சொன்ன சொல்லை நிறைவேற்றக் கூடியவர் என்பதாலும் ராஜா அவரை நம்பினான்.
“பானு!” என்று ராஜா வாஞ்சையோடு கூப்பிட்டான்.
பானு தன் கண்களை உயர்த்தி ஏங்குவதைப் போல் பார்த்தாள்.
“நித்தியகலா உன்னிடம் என்ன சொன்னாள் என்பதைச் சொல்”
பானு பயந்த போதிலும், தலைவன் கட்டளையிட்ட பின்பு வேறு அட்டியே இல்லை என்ற எண்ணத்துடன் கூறலானாள்.
“நான் நித்தியகலாவின் அருகில் நர்ஸைப் போல் உட்கார்ந்து அவளையே கண் கொட்டாமல் கவனித்துக் கொண்டு இருந்தேன். இன்று பொழுது விடியும் சமயத்தில் அவளுக்கு மயக்க மூர்ச்சை மெல்லத் தெளிந்து. நினைவுகளின் தொடர்ச்சியாக நித்தியகலா ஏதோ சொல்ல முற்பட்டாள். உடனே நான் அந்தப் படுக்கையறைக் கதவை உட்புறமாகப் பூட்டி விட்டு வந்து அவளுடைய முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றேன் அவள் கண் விழித்து என்னைப் பார்த்தாள். நான் அன்போடு அவளை நோக்கிப் புன்முறுவல் பூத்தேன்! அவளுடைய கணவன் செத்துப் போன விஷயத்தைப் பற்றி அப்போது எதுவும் நான் சொல்லாததால், அவள் தன் கணவன் இன்னும் திரும்பி வரவில்லையே என்று புலம்பினாள்! நேற்றிரவு என்ன நடந்தது என்று அவளிடம் நான் கேட்டேன். நேற்றிரவு ஒன்பதரை மணிக்கு நித்தியகலா இரண்டு தூக்க மாத்திரைகளை மட்டும் விழுங்கிய நினைவு இருக்கிறதாம். கணவனைப் பற்றி அவள் கவலை கொண்டு இருந்ததால் உடனே தூங்கி விட வேண்டும் போல் இருந்ததாம். அவளுடைய கணவன் வீட்டுக்கும் வரவில்லையாம். எங்கே இருக்கிறார் என்றும் அவளுக்குத் தெரியாதாம். தன் கணவருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்து விடுமோ என்று பயந்தாளாம். அந்தப் பயத்தை மறப்பதற்காக இன்னும் இரண்டு மூன்று தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு விட்டுப் படுத்தாளாம்! அதன் பிறகு இரவு பத்து மணிக்கு மேல் நித்தியகலா சுயநினைவை இழந்துவிட்டாளாம். ஒரு வேளை இரண்டுக்கு அதிகமான மாத்திரைகளை தூக்கக் கலக்கத்தில் எடுத்துச் சாப்பிட்டு இருக்கலாம் என்று அவள் அபிப்பிராயப் படுகிறாள். அதனால் அவளுக்கு மயக்க மூர்ச்சை ஏற்பட்டு இருக்கலாம்!” என்று பானு சொன்னாள்.
அங்கே நிசப்தம் நிலைவியது. இன்ஸ்பெக்டர் அருளானந்தம் அமைதியாக அவள் சொன்னதைக் கேட்டுக் கொண்டு இருந்தார்.
ராஜாவோ ஏமாற்றம் அடைந்தவன் போல் முகம் வெளிறிச் சிந்தனையில் ஆழ்ந்தான் நித்தியகலாவுடன் இரவு பன்னிரண்டு மணிக்கு நாதமுனி பேசியதாகச் சொன்னான். திரும்பவும் இரண்டு மணிக்கு டெலிபோன் செய்து கணவன் வீட்டுக்கு வந்து விட்டானா இல்லையா என்று விசாரித்ததாகவும் தெரியப்படுத்தினான். நண்பனாகிய நாதமுனி பொய் சொல்லி விட்டானா? அல்லது நித்தியகலா வேண்டும் என்றே பொய் சொல்லி விட்டாளா?
குழம்பிய ராஜா, “நித்தியகலா சொன்னது உண்மையாக இருக்கும் என்று நம்புகிறாயா பானு?” என்று கேட்டான்.
“நித்திகலாவின் பேச்சில் அழுத்தமும் உறுதியும் இருந்தன. கணவன் வீட்டுக்கு வரவில்லை என்பதால் தாங்க முடியாத வேதனையுடன் இருந்தாள்” என்று பானு தன் இனிய குரலில் சொன்னாள்.
“அவளுடைய கணவர் சேதுபதி செத்துவிட்டார் என்பது அவளுக்குத் தெரியுமா?” என்று ராஜா கேட்டான்.
“முதலில் அவளுக்கு அது தெரியாது! இனி அவளால் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று தெரிந்தவுடன் அவளுடைய கணவர் கொலை செய்யப்பட்ட விஷயத்தைச் சொன்னதும் நான் சொன்னேன்! உடனே தூக்கிவாரிப் போட்டதைப் போன்ற நிலையில் நித்தியகலா இடிந்து போனாள். பிறகு விக்கி விக்கி அழத் தொடங்கி விட்டாள்.”
“தன் கணவனைக் கொலை செய்தது யாராக இருக்கும் என்று நம்புகிறாள்?”
“நான் ஏதேதோ கேட்டுப் பார்த்தேன். அவள் தனக்கு எதுவுமே தெரியாது என்று சொல்லுகிறாள். இரவு பத்து மணிக்கு மேல் விடிவது வரையில் நடைபெற்ற விஷயங்கள் எதுவுமே அவளுக்குத் தெரியாதாம்.”
“நேற்றிரவு பத்து மணிக்கு அவளுடைய கணவன் சேதுபதி அவளுடைய வீட்டிற்குத் திரும்பி வந்தது கூட அவளுக்குத் தெரியாதா?” என்று ராஜா கேட்டான்.
“அது நித்தியகலாவுக்குத் தெரிந்திருக்க முடியாது! ஏனெனில் அவள் அப்போது தூக்க மாத்திரைகளால் மயக்க மூர்ச்சையில் கிடந்து இருக்கிறாள்!” என்றாள் பானு.
ராஜா எதையோ எதிர்பார்த்து அந்த விஷயத்தில் தோல்வி கண்டவனைப் போல் விழித்தான்.
“நித்தியகலாவிடம் இருந்து சில உண்மைகளைத் தெரிந்து கொள்ளலாம் என்ற ஆசைப்பட்டேன். கடைசியில் அது பலன் இல்லாமல் போய்விட்டது” என்றான் ராஜா.
உடனே சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி குறுக்கிட்டார் .
“பானு சொல்லுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை சார். நித்தியகலா பல விஷயங்களை அவளிடம் சொல்லி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பானு அந்தப் படுக்கையறைக் கதவை உட்புறமாகப் பூட்டி வைக்க வேண்டிய அவசியம் என்ன?”
“நித்தியகலாவுக்கு மற்றவர்களால் தொந்தரவு ஏற்படக் கூடாது என்பதற்காகவே அவ்விதம் செய்தேன்” என்றாள் பானு.
“நாங்கள் நித்தியகலாவை விசாரிப்பதற்காக உள்ளே நுழைந்தபோது அதைத் தவிர்ப்பதற்காகவே நித்தியகலா தூங்குவதைப் போல் நடிக்கிறாள் என்று நினைத்தோம்!” என்றார் ராமசாமி.
“நீங்கள் திடீரென்று உள்ளே புகுந்து அவளுடைய புருஷனின் சாவைப்பற்றி விசாரிக்க விரும்பியதால் தான் அவள் அதிர்ச்சி வசப்பட்டு மறுபடியும் மயக்க மூர்ச்சைக்கு ஆளாகி விட்டாள். அது தெளிந்ததும் அந்த விபரங்களை எல்லாம் அவளிடமே நீங்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். நான் இப்பொழுது உங்களுக்கு இடைஞ்சலாக இருக்கவில்லையே!” என்றாள் பானு.
சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி விழித்தார். அவள் சொல்லுவதும் உண்மை தானே!
“எதையும் மறைக்காதே பானு! நீ நர்ஸாக நடித்து ஏமாற்றியதைக் கூட மன்னித்து விடுவேன்!” என்றார் இன்ஸ்பெக்டர் அருளானந்தம்.
“நான் எதையுமே மறைக்கவில்லை சார். எனக்குத் தெரிந்தது இவ்வளவு தான்.”
பானு இப்படிச் சொன்னதும் இன்ஸ்பெக்டர் அருளானந்தம் ஏதோ ஒரு எண்ணத்துடன் எழுந்தார்.
“இனி நாங்கள் போகலாம் அல்லவா சார்?’ என்று கேட்டான் ராஜா.
பானுவையும் மற்றவர்களையும் இங்கே வைத்திருப்பது பயனற்றது என்பதை உணர்ந்த இன்ஸ்பெக்டர் அருளானந்தம், அவர்கள் வெளியே போக அனுமதித்தார்.
17. பானு சொன்ன ரகசியம்
ராஜா டிரைவர் ஆசனத்தில் உட்கார்ந்து காரை ஓட்டிக் கொண்டு இருந்தான். அவனுக்கு இடதுபுறத்தில் பானுவும், பின் ஆசனத்தில் வீரமணியும் அமர்ந்து இருந்தார்கள். புலியின் குகையில் இருந்து தப்பி வந்ததைப் போன்ற உணர்ச்சி ஒவ்வொருவருக்கும் இருந்தது.
காரை இப்படி நிறுத்துங்கள். நான் போய் சிகரெட் வாங்கிக் கொண்டு வந்து விடுகிறேன்” என்று சொன்னான் வீரமணி. நீண்ட நேரமாக அவன் சிகரெட் பிடிக்காமல் இருந்ததால் மண்டை வெடித்து விடுவதைப் போலவும் இருந்தது.
ராஜா காரை நிறுத்தினான்.
வீரமணி கதவைத் திறந்து கொண்டு வெளியே போனதும், ராஜா சட்டென்று இடதுகையை நீட்டி பானுவின் கழுத்தைச் சுற்றி வளைத்து அருகில் இழுத்து முகத்தோடு முகம் சேர்த்தான். இருவர் அதரங்களும் கண நேரத்தில் கதை பேசிவிட்டன.
“என்ன ராஜா இது? நடுரோட்டில் வைத்து இப்படி நடந்து கொண்டதை யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள்” என்று சிணுங்கிய பானு தன்னை மிகுந்த சிரமத்துடன் விடுவித்துக் கொண்டாள்.
ராஜா தன்னுடைய கண்கள் பெற்ற பாக்கியத்தை சில வி னாடிகளுக்குள்ளேயே அனுபவித்து விட்டான். பானு கொழுந்து வெற்றிலையைப் போல் கவர்ச்சியாகவும் அழகாகவும் இருந்தாள்!
“நித்திய கலா விஷயமாக வேறு எதுவுமே பேசுவதற்கு இல்லையா?” என்று கேட்டான் ராஜா.
“உங்களுக்காக ஒரு ரகசியச் செய்தியை மறைத்து வைத்துக் கொண்டு இருக்கிறேன் ராஜா! நித்தியகலா என்னிடம் ஒரு முக்கியமான செய்தியைச் சொன்னாள்” என்றாள் பானு.
பானு இப்படிச் சொன்னதும், இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்த ராஜா அவளுடைய கன்னத்தைச் செல்லமாகத் தட்டி, “சொல்லு கண்ணே!” என்று கூறி விட்டு அவளது பேரழகைப் பருகினான்.
அவள் தூய வெண்ணிற நர்ஸ் யூனிபாரம் அணிந்து இளமையின் குறுகுறுப்புடன் மிகுந்த எடுப்பாகக் காட்சி அளித்தாள். பருவம் நர்ஸ் உடைக்குள் கோலம் போட்டு கண்ணாம்பூச்சி விளையாடியது.
“சேதுபதி கொலை செய்யப்பட்டார் என்ற துக்க கரமான செய்தியை நான் சொன்ன பிறகு நித்தியகலா ஒரு விம்மலின் மூலம் மனதைத் தேற்றிக் கொண்டாள். ஒரு செய்தியை என்னிடம் சொல்லி அதை எக்காரணத்தைக் கொண்டும் போலீஸில் சொல்லக் கூடாது என்று என்னிடம் ஒரு வாக்குறுதியும் வாங்கிக் கொண்டாள்.”
“என்ன செய்தி அது?” என்று ராஜா அதிக ஆவலுடன் அவளுடைய களையான முகத்தைப் பார்த்தான்.
“இன்று காலை பத்து மணிக்கு போஸ்ட் மாஸ்டருக்கு நித்திய கலாவின் பெயரில் ஒரு கடிதக் கவர் வருமாம்! நான் அவள் கொடுத்து இருக்கும் சீட்டைக் கொண்டு போய் காண்பித்து அந்தக் கவர் கட்டை வாங்கிக் கொண்டு வந்து உடைத்துப் பார்க்காமலே என்னிடம் வைத்திருந்து சமயம் வரும்போது அவளிடம் கொடுத்து விட வேண்டுமாம்” என்றாள் பானு.
நித்தியகலா மர்ம வேலைகளில் எல்லாம் ஈடுபட்டு அதில் வெற்றியும் கண்டு இருக்கிறாள் என்பதை ராஜா புரிந்து கொண்டான்.
போஸ்ட் மாஸ்டருக்கு நித்தயகலா எழுதிக் கொடுத்து இருக்கும் சீட்டை வாங்கிப் படித்து விட்டு பானுவின் உள்ளங்கையில் வைத்து அழுத்திய ராஜா, “நீ நேராக போஸ்ட் ஆபீஸுக்குப் போய் அந்தக் கடிதக்கட்டை வாங்கிக் கொண்டு போய் நம்முடைய ஆபீஸில் காத்திரு! நான் நாதமுனியைப் பார்த்துப் பேசி சில உண்மைகளைத் தெரிந்து கொண்டு வந்து விடுகிறேன்!” என்று சொன்னான்.
பானு சிரித்துக் கொண்டே காரை விட்டு இறங்கியதும், வீரமணி வந்து அவள் உட்கார்ந்து இருந்த இடத்தில் அமர்ந்து கொண்டான்.
“வீரமணி! இப்போது என் காரியதரிசினின் பானுவிடம் நித்தியகலா சொன்ன விஷயங்களுக்கும் நாதமுனி என்னிடம் சொன்ன விஷயங்களுக்கும் பொருத்தம் இல்லாமல் தோன்றுகிறது! சொட்டு ரத்தத்தின் மர்மத்தைப் பற்றி உடனே நான் தெரிந்து கொள்ள வேண்டும்! இப்போது உன் வீட்டில் தானே நாதமுனி தலைமறைவாகப் பதுங்கி இருக்கிறான்?” என்றான் ராஜா.
“ஆமாம்! அவன் ஓயாமல் குடித்துக் கொண்டு இருக்கிறான்! நித்தியகலா சம்பந்தமாக அவன் எதையோ மூடிமறைக்க முயல்கிறான் என்றே எனக்குத் தோன்றுகிறது!” என்றான் வீரமணி.
“அதாவது நாதமுனியின் மீதுள்ள ஆசையால் நித்தியகலா தன் கணவனையே சுட்டுக் கொன்று விட்டாள் என்றும் நாதமுனி அதை மறைக்க முயல்கிறான் என்றும் நினைக்கிறாயா? சரி! உன் வீட்டுக்கு வழிகாட்டு” என்றான்.
சிறிது நேரத்திற்கெல்லாம் கார் அவர்களைச் சுமந்து கொண்டு வந்து வீரமணியின் வீட்டின் முன்னால் நின்றது இரண்டு பேர்களும் சொல்லி வைத்தாற்போல் ஆளுக்கொரு பக்கமாகக் கதவைத் திறந்து கொண்டு கீழே இறங்கினார்கள்.
“நாதமுனியுடன் நாம் சீக்கிரமாகப் பேச்சை முடித்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் நான் சீக்கிரமாக ஆபீஸுக்குப் போய் நடந்ததை ஆசிரியரிடம் சொல்ல வேண்டி இருக்கிறது” என்று சொன்னான். வீரமணி சொல்லி விட்டு வீட்டினுள் சென்றான்.
ராஜா தலையை அசைத்து விட்டு, காரை ஒருபுறமாக நிறுத்திவிட்டு வீரமணியின் வீட்டினுள் சென்றான்.
உள்ளே “நாதமுனி நாதமுனி!” என்று வீரமணி கூப்பிடும் குரல்கள் கேட்டன.
ராஜாவும் அவனருகில் வந்து நின்றான்.
வீட்டினுள்ளே இருந்து எந்தவிதமான அரவமும் கேட்கவில்லை.
உள்ளே ஓர் அறையில் இருந்து கழுத்தறுபட்ட ஆடு கைகால்களைப் போட்டு வதைத்துக் கொள்வதைப் போன்ற சத்தம் மட்டும் வந்தது.
ராஜா அதைக் கவனித்ததும் என்னவோ ஏதோ என்று பதறிப்போய் அந்த அறையினுள் நுழைந்து பார்த்து விட்டு அங்கே நடந்த காட்சியைக் கண்டு துள்ளினான்.
துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், சொட்டு சொட்டான ரத்தங்களிடையே நாதமுனி தன் கைகால்களை இழுத்துக் கொண்டு தரையில் கிடந்து உருண்டு கொண்டு இருந்தான்.
அந்தக் காட்சியைப் பார்த்த வீரமணி, வீரிட்டுக் கதறிவிட்டான். “ஒரு வினாடி அப்படியே மலைத்துப் போய் நின்று கொண்டு இருந்த ராஜா, “வீரமணி! இன்னும் நாதமுனி உயிருடன் இருப்பதைப் போலவே தோன்றுகிறது. நல்ல வேளையாக துப்பாக்கிக் குண்டு அவனுடைய கன்னப் பொட்டுக்குள் பாயாமல் தவறி அவனுடைய மேல் மண்டையில் தான் பாய்ந்து இருக்கிறது. ஆகவே ஆஸ்பத்திரி ஆம்புலன்ஸ் காருக்குச் சீக்கிரமாக நீங்கள் டெலிபோன் செய்யுங்கள்” என்று துரிதப்படுத்தினான். உடனே வீரமணி டெலிபோன் வைத்திருந்த அறையை நோக்கி வேகமாக ஓடினான்.
அவன் போன பின்பு ராஜா அந்த அறையைப் பார்த்தான். நாதமுனியின் பக்கத்தில் சிறிய ரிவால்வர் ஒன்று கிடந்தது. அது 22 ரகத்தைச் சார்ந்த துப்பாக்கி தான்!
அந்த ரிவால்வர் நாதமுனிக்குச் சொந்தமானது தான்! அதிலிருந்து அவன் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்து இருக்கிறானே என்று சந்தேகம் மூட்டியது.
அது உண்மை என்று மெய்ப்பிப்பதைப் போல் மேஜையின் மீது தமிழ் டைப்ரைட்டர் மீது டைப் அடிக்கப்பட்ட ஒரு காகிதமும் தென்பட்டது.
அந்தக் காகிதத்தில்-
“நான் தான் சேதுபதியைச் சுட்டுக் கொன்றேன்! அது சம்பந்தமாக நித்தியகலாவுக்கு ஒன்றுமே தெரியாது. என்னைக் காப்பாற்றுவதற்காக அவள் என்ன சொன்னாலும் நம்ப வேண்டாம். அவளுடைய கணவனை நான் கொலை செய்த பின்பு எனக்கு மன நிம்மதி இல்லை. நித்தியகலாவும் மரணப் படுக்கையில் கிடக்கிறாள்.
எனவே நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். என்னை நானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்பதே தான் என்னுடைய முடிவு! என் மரணத்துக்கு யாருமே பொறுப்பல்ல?
இப்படிக்கு,
வாழத் தெரியாத
நாதமுனி”
இவ்வாறு டைப் அடிக்கப்பட்ட அந்தக் காகிதத்தைத் தமிழ் டைப்ரைட்டர் மிஷினில் இருந்து பல தடவை படித்துப் பார்த்து விட்ட ராஜா, அவன் தற்கொலை செய்திருப்பான் என்பதை நம்ப முடியாமல் தத்தளித்தான். உயிரை மாய்த்துக் கொள்ள நினைக்கும் கோழையல்ல நாதமுனி! உயிரின் விலைமதிப்பு எத்தகையது என்பது அவனுக்குத் தெரியும்!
ராஜா தடுமாற்றமடைந்து கைகளைப் பிசைந்து கொண்டு நின்ற போது வீரமணி விரைந்து வந்து, “ஆம்புலன்ஸ் வண்டிக்கு போன் செய்துவிட்டேன் இன்னும் சிறிது நேரத்தில் வண்டியை எதிர்பார்க்கலாம்” என்று சொன்னான்.
தன் நண்பன் நாதமுனி உயிர் பிழைத்து விட வேண்டும் என்று ராஜா வேண்டிக் கொள்ளாத தெய்வம் இல்லை!
– தொடரும்…
– சொட்டு ரத்தம் (மர்ம நாவல்), முதற் பதிப்பு: 1966, பிரேமா பிரசுரம், சென்னை.
Please publish next Chapters of this Novel
Dear Sir, Next chapter will be released later today, Thanks for your interest.