சொட்டு ரத்தம்





(1966ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-17
13. ரணத்தை நோக்கி…?
பழுது பார்க்கும் இடத்திலிருந்து தன்னுடைய ‘பியட்’ காரைத் திரும்பப் பெற்றுக் கொண்ட ராஜா டிரைவர் ஆசனத்தில் உட்காந்து நாற்பது மைல் வேகத்தில் எண்ணூரை நோக்கி ஓட்டிக் கொண்டு இருந்தான்.

32 ரகத்தைச் சார்ந்த ரிவால்வர் அவனுடைய பாண்டுப் பையினுள் தயாராக இருந்தது. பேனா பிடித்து கதைகள் எழுதுவது மட்டுமல்ல; ரிவால்வரைப் பிடித்துச் சுடவும் அவனுக்குத் தெரியும்!
கார் அவனைச் சுமந்த வண்ணம் ஓடிக் கொண்டு இருந்தது. ராஜா சிந்தனையே உருவாகக் காட்சி அளித்தான். கண்கள் மட்டும் தான் பாதையை நோக்கிக் கொண்டு இருந்தன.
இருபத்தி ஐயாயிரம் ரூபாயை அனாயாசமாகக் கொடுத்து செய்தியை வாங்கப் போகும் அந்தப் பெரிய மனிதன் யாராக இருப்பான் என்ற ஆராய்ச்சி அவனுக்கு மிகுந்த தலை வேதனையைக் கொடுத்தது.
அந்தப் பெரிய மனிதன் எதிர்பார்க்கக்கூடிய செய்திகள் அடங்கிய காகிதக்கத்தை இன்னும் அவன் கைக்குப் போகவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆபீஸ் அறை வீடு ஆகியவற்றைச் சோதனையிட்ட பிறகும், வேறு எங்கெங்கோ அலைந்த போதிலும் பலன் கிட்டவில்லை.
உண்மையிலேயே காகிதக் கத்தைகளை மட்டுமே கைப்பற்றும் எண்ணம் ‘அந்த பெரிய மனிதனுக்கு’ இருந்திருந்தால், தன்னுடைய குறிக்கோள் நிறைவேறுவதற்குள், செய்திகளைச் சேகரித்து வைத்துப் பயமுறுத்திக் கொண்டு இருந்த சேதுபதியைச் கொலை செய்யமாட்டான்.
அப்படியானால் சேதுபதியைக் கொலை செய்தது யார்!
செய்திக் கத்தைகளை எப்படியும் கைப்பற்றி விடலாம் என்ற நம்பிக்கையுடன், அந்தச் செய்திகளுக்கு மூலகாரணமாக இருந்த சேதுபதியையும், தேடுவதற்கு இடைஞ்சலாக இருந்த வாட்ச்மேன் ஜம்புலிங்கத்தையும் அந்தப் பெரிய மனிதனே கொலை செய்து விட்டானா? அல்லது வேறு யாராவது சேதுபதியைக் கொலை செய்திருக்கலாமா? அப்படியானால் அந்தக் கொலையைச் செய்தது யார்? சேதுபதியின் சொந்த மனைவியான நித்தியகலாவா? அல்லது நித்தியகலாவின் கள்ளக்காதலன் என்று கருதப்படும் நாதமுனிதானா…?
சிந்திக்கும் தோறும் மேலும் மேலும் ராஜாவின் குழப்பங்கள் தான் அதிகரித்துக் கொண்டு இருந்தனவே தவிர, கொஞ்சம் கூடக் குறைந்த பாடில்லை.
சிறிது நேர பிரயாணத்திற்குப் பிறகு கார் எண்ணூர் கடற்கரை யோரமாக இருந்த விசாலமான சாலையில் போய் நின்றது.
ராஜா காரை விட்டிறங்கி நீளமான தோல் பையினுள் வைத்திருந்த பட்டை நாமம் போட்டு வரையப்பட்ட காகிதக் கத்தைகளை எடுத்துக் கொண்டு காரின் ஒவ்வொரு ஜன்னல் கண்ணாடிகளையும் ஏற்றி விட்டான்.
பின்னர் தன்னை யாராவது எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருக்கிறார்களா என்பதை அறிய நாலாப் பக்கமும் பார்வையை ஓடவிட்டுப் பார்த்தான்.
கடற்கரை வெறிச்சோடிக் கிடந்தது. காலை நேரமாகியதால் ஆள் நடமாட்டமே இல்லை. ஆனால் கடற்கரை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு படகின் மறைவில் மட்டும் நின்று கொண்டு இருக்கும் இரண்டு மனிதர்களின் தலை உயரமாகத் தெரிந்தது.
அவர்கள் தான் பெரிய மனிதர்களின் கையாட்களா? தன்னுடைய வருகையை எதிர்பார்த்துத் தான் அங்கே நின்று கொண்டு இருக்கிறார்களா?
தன்னைப் பார்த்து அவர்கள் கைகளை அசைக்கவே, ராஜா மிகவும் பயங்கரமானதொரு கை கலப்பைச் சமாளிக்க நேரிடும் என்ற எண்ணத்துடன் காகிதக் கத்தைகளின் கட்டை இடது கையில்- கட்கத்தில் வைத்துக் கொண்டு படகை நோக்கிப் போனான். வலது கை ரிவால்வர் இருந்த பாண்ட் பையினுள்ளேயே இருந்தது.
படகை நெருங்க நெருங்க இனம் புரியாத ஒருவிதப் பயம் வந்து ராஜாவைத் துன்புறுத்தத் தான் செய்தது. எமகாதரர்களை நேருக்கு நேர் சந்திப்பது என்றால்…?
பெரிய மனிதனின் ஆட்கள் எதற்குமே துணிந்தவர்களாகத் தான் இருப்பார்கள். அவ்வளவு சீக்கிரத்தில் ஏமாந்து போய் இருபத்தி ஐயாயிரம் ரூபாயையும் கொடுத்து விடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அப்படி எதிர் பார்ப்பதும் முட்டாள் தனமான காரியமும் ஆகும்.
படகை ராஜா நெருங்கி விட்டான் இன்னும் சில கெஜ தூரம் சென்றால் படகு மறைவில் நின்று கொண்டு இருக்கும் மனிதர்களைச் சந்தித்து விடலாம்.
“இப்படி வா! படகு மறைவிலேயே நாம் பேசலாம்!” என்று கனமான தொண்டையில் அழைத்தான் ஒருவன்.
தன்னை இவன் எப்படியோ அடையாளம் தெரிந்து வைத்து இருக்கிறானே என்று வியப்படைந்த ராஜா, மிகுந்த துணிச்சலோடு படகின் முன்னால் போய் நின்றான்.
அலைகள் சீறிக்கொண்டு எழும்புவதும்-கரை வரையில் வந்து தாக்குவதும்-பின் வாங்குவதுமாக இருந்தன. அவர்கள் நின்று கொண்டு இருந்த இடம் வரையில் தண்ணீர் வந்தது.
போதுமான அளவுக்கு வளர்ந்திருந்த இரண்டு தடியர்கள். ஆனால் படித்தவர்களைப் போல் காப்பி கலர் கோட்டும் சூட்டும் அணிந்து கண்களில் கூலிங்கிளாஸ் சகிதம் ‘ஜம்மென்று’ நின்று கொண்டு இருந்தார்கள். உதடுகளின் இடுக்கில் புகைந்து கொண்டு இருந்த சிகரெட் தொங்கிக் கொண்டு இருந்தது.
“நீதானே ராஜா என்று மர்மக்கதை எழுதும்…” என்று நிறுத்தினான் ஒருவன்.
“ஆமாம்” என்றான் ராஜா.
“உன்னைச் சந்திக்க நேர்ந்ததற்காக மகிழ்ச்சி!” என்ற இன்னொரு தடியன் கைகுலுக்குவதற்காக கையை நீட்டினான்.
ஆனால் ராஜா தன் கையைக் கொடுக்க வேண்டுமே! ஆடாமல் அசையாமல் அப்படியே நின்று கொண்டு இருந்தான். கண்கள் மட்டும் அவர்களுடைய செய்கைகளை மிகவும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு இருந்தன.
அவர்களில் ஒருவன் அலட்சியமாகச் சிரித்துவிட்டு, “மரியாதை தெரியவில்லை! படித்த முட்டாள் போல் இருக்கிறது” என்றான் கிண்டலாக.
“ஆல் ரைட்! நாம் ஏன் அவனிடமிருந்து மரியாதையை எதிர்பார்க்க வேண்டும்?” என்று சொன்ன இன்னொரு தடியன். “எங்கள் முதலாளி கேட்ட ரகசிய டாக்கு மெண்டைக் கொண்டு வந்து விட்டாயா?” என்று கேட்டான்.
”ஓ எஸ்! நான் கொண்டு வந்து விட்டேன். அதைப் போல் நாங்கள் பேரம் பேசிக் கொண்டபடி இருபத்தி ஐயாயிரம் ரூபாயும் நீங்கள் கொண்டு வந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்றான் ராஜா.
“கரெக்ட்! இருபத்தி ஐயாயிரம் ரூபாய் எங்களிடம் பத்திரமாக இருக்கிறது. எங்கே டாக்கு மென்டுகளைக் கொடு பார்க்கலாம்.”
ராஜா காகிதக் கத்தைகளின் கட்டைத் தன் கையில் வைத்துக்கொண்டு உடம்பை இங்குமங்கும் அசைத்தபடி. “முதலில் பணம் கைக்கு வந்து சேரட்டும்” என்று சொன்னான்.
“பணம் தானே…? இதோ…!” என்று ஒருவன் சொன்ன அதே நேரத்தில் மற்றவன் குபீரென்று பாய்ந்து ராஜாவின் கையிலிருந்த காகிதக் கத்தைகனைப் பிடுங்கிக் கொண்டு வெற்றியை எதிரொலிப்பது போல் ‘இடி இடி’ என்று சிரித்தான். இன்னொரு தடியனும் அந்தச் சிரிப்பில் கலந்து கொண்டான்.
அவர்கள் சிரித்து ஓய்ந்த பின்பு ராஜாவும் சிரித்தான். அந்தச் சிரிப்பு அவர்களைப் பார்த்து நையாண்டி மேளம் வாசிப்பது போலிருந்தது.
பிறகு ராஜா சிரிப்பை நிறுத்திக் கொண்டு, “அப்படியானால் நீங்கள் த்தைக் கொடுக்க மாட்டீர்கள் இல்லையா?’ என்று கேட்டான்.
“பணமா? பைத்தியக்காரா! உன்னை நாங்கள் உயிருடன் விட்டிருக்கிறோமே என்று திருப்தியடைந்து வீட்டுக்குப் போ! எந்தவிதச் சிரமமும் கொடுக்காமல் டாக்கு மென்டுகளைத் தந்து விட்ட உனக்கு நன்றி” என்று சொன்ன ஒருவன் இன்னொருவனைப் பார்த்து, “வாடா… போகலாம்” என்று கூறி அழைத்தான்.
இரண்டு பேர்களும் அடிக்கொரு தரம் பின்னால் திரும்பிப் பார்த்த வண்ணம் வேகமாக நடந்தார்கள்.
ராஜா அந்த முரட்டுத்தனமான முட்டாள்களை நினைத்துச் சிரித்துவிட்டு, “டேய் திருட்டுப் பசங்களா! காகிதக் கட்டினுள் என்ன அடங்கி இருக்கிறது என்று சோதித்துப் பார்க்காமலேயே போகிறீர்களே!” என்று கொக்கரிப்பதைப் போல் சிரித்தான்.
‘திடீர்’ பிரேக் போட்டு நிறுத்தப்பட்ட புதிய காரைப்போல் அவர்கள் அங்கேயே நின்று காகிதங்களை விரித்துப் பார்த்தார்கள்.
அதிர்ச்சி ஏற்படாமல் இருந்திருக்குமா? தாங்க முடியாத அதிர்ச்சி அவர்கள் இரண்டு பேர்களுக்கும் ஏற்பட்டது. ஒவ்வொரு காகிதத்திலும் பெரிய பட்ட நாமங்கள் போடப்பட்டு இருப்பதைப் பார்த்து ஆத்திரத்துடன் குமுறினார்கள்.
ஒரு கணம் மலைத்துப்போய் என்ன செய்வது என்று தோன்றாதவர்களைப் போல் நின்று கொண்டு இருந்த அந்தத் தடியர்கள் சொல்லி வைத்ததைப் போல் ஒரேப் பாய்ச்சலில் ஓடி வந்து ராஜாவின் எதிரில் நின்றார்கள்.
“என்னடா விளையாடுகிறாயா?”
“இல்லை, உலகத்தில் எத்தனை ஏமாளிகள் இருக்கிறார்கள் என்று கணக்கெடுத்துக் கொண்டு இருக்கிறேன்.
ராஜா இப்படிச் சொல்லுவதற்கும், அந்தத் தடியர்கள் ஆளுக்கொரு ரிவால்வரைக் கையில் எடுப்பதற்கும் சரியாக இருந்தது.
உடனே ராஜாவும் தன்னுடைய ரிவால்வரை கையில் எடுத்துக் கொண்டான்.
ராஜாவின் கையில் ரிவால்வர் இருப்பதைக் கவனித்துவிட்ட அந்தத் தடியர்கள் சொல்லி வைத்தாற்போல் சுட்டார்கள், ராஜாவும் சுட்டான்.
மூன்று பேர்கள் சுட்டதும் குறிதவறி விட்டது. அதே நேரத்தில் மூன்று பேர்களுமே தரையில் கிடந்து உருண்டார்கள்.
ரிவால்வர்கள் சரமாரியாக வெடியோசையைக் கக்கிக் கொண்டே இருந்தன. ஆனால் குண்டுகள் யார் மீதும் படவில்லை.
இதற்குள் அவர்கள் அலைகளுக்குள் உருண்டு வந்து விட்டனர். அதே சமயத்தில் எல்லா ரிவால்வர்களில் உள்ள குண்டுகளும் சொல்லி வைத்தாற்போல் காலி ஆயின.
ராஜா துள்ளி எழுந்து அலைகளில் புரண்டு கொண்டு இருந்த அந்தத் தடியர்களை மூர்க்கத்தனமாகத் தாக்கினான் அவர்கள் எளிதில் விட்டு விடுவார்களா என்ன? அவர்களும் அதை விடவும் பன்மடங்கு வேகத்தில் பதிலடி கொடுத்தார்கள்.
அலைகள் பொங்கி எழுந்து அந்த மூன்று பேர்களையும் விழுங்குவதும் வெளியே தள்ளுவதுமாக இருந்தன. ஆயினும் அந்த அலைகளைப் பொருட்படுத்தாமல் பயங்கரமாகச் சண்டை போட்டார்கள். யாருமே சலிப்படைந்து விடவில்லை.
ஆனால் சிறிது நேரத்திற்குள் சற்றும் எதிர்பார்க்காத சம்பவம் ஒன்று நடந்தது. அதாவது அந்த முரட்டுத் தடியர்களைப் பொங்கி எழுந்த பேரலை ஒன்று அப்படியே சுருட்டிக் கொண்டு போய்விட்டது. ராஜாவையும் அந்த அலை சுருட்டிய போதிலும் கடலில் குளித்து நன்றாகப் பழக்கப்பட்டவன் என்பதால் நீந்தித் தப்பித்துக் கொண்டான்.
அந்த முரடர்கள் அலைகள் மட்டத்துக்கு மேல் கைகளை ஆட்டிக்கொண்டு அலறினார்கள். ‘உதவி உதவி’ என்று ஓலமிட்டார்கள்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் தன்னுடைய எதிரிகள் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்ட ராஜா, அவர்களைக் காப்பாற்றலாம் என்ற மனிதாபிமான உணர்ச்சியுடன் நீந்திச் சென்றான்.
ஆனால் பாவம்! பேரலை ஒன்று பொங்கி எழுந்து அந்த எதிரிகளை விழுங்கிவிட்டது. தண்ணீர் மட்டத்துக்கு மேல் அவர்களைக் காண முடியவில்லை!
ராஜா தண்ணீருக்குள் மூழ்கிச்சென்று மூச்சைப் பிடித்துக் கொண்டு தன்னால் முடிந்த வரையில் அவர்களைத் தேடிப் பார்த்தான்.
அந்த எமகாதகரர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. கடல் அவர்களை விழுங்கி ஏப்பம் போட்டு விட்டது என்பதை மட்டும் தான் அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.
ராஜா இரண்டு உயிர்களைக் கண்ணெதிரிலேயே பறி கொடுத்து விட்டோமே என்று வருந்திக் கரையிலேறித் திரும்பிப் பார்த்தான்.
அலைகளின் சீறல் அகோரமாய் இருந்தது. பயங்கரமான அந்த மனிதர்களைப் பார்த்து உணர்ச்சி அற்றதாகக் கருதப்படும் அலைகளுக்குக் கூட கடுமையான ஆத்திரம் வந்து விட்டது போலும்!
அலைகளால் சுருட்டிச் செல்லப்பட்ட அந்த மனிதர்கள் என்ன ஆனார்கள்? சுறா மீன்கள் வந்து கவ்விக் கொண்டு சென்று விட்டனவா?
ராஜா குழம்பிப்போய் நின்று கொண்டு இருந்த போது, சிலந்தியின் வலையில் சிக்கிக் கொண்ட எறும்பைச் சிலந்தி உருட்டுவது போல் கடல் அலைகள் அந்த இரண்டு தடியர்களையும் உருட்டிக் கொண்டு தரையில் தள்ளுவதைக் கவனித்தான்.
உடனே ஓடிச்சென்று பார்த்தான்.
இரண்டு பேர்களும் பிணமாகிக் கிடந்தார்கள். கண்களையும் வாயையும் மணல் மூடியிருந்தது. முகத்தில் சிராய்ப்பு ஏற்பட்டதைப்போல் காயங்கள் காணப்பட்டன.
மற்றவர்களுக்கு இடைஞ்சல் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கடவுள் இப்படித்தான் தண்டனை கொடுப்பார் என்று எண்ணிய ராஜா சாலையை நோக்கி நடந்தான்.
உயிருடன் இருந்தபோது அந்த மனிதர்கள் எவ்வளவோ அட்டகாசம் செய்தார்கள்! ராஜாவைக் கொன்று விடுவதாகவும் மிரட்டினார்கள்!
ஆனால் இப்பொழுது..?
14. மீண்டும் மர்ம மனிதன்!
தன்னால் இரண்டு மனிதர்களின் உயிர் பிரிந்து விட்டதே என்று ராஜாவுக்கு வருத்தமாகத்தான் இருந்தது. ஆயினும் அவர்கள் சாகவேண்டிய விஷ ஜந்துகள் தானே என்ற மன நிம்மதியுடன் காரிலேறி விரைந்தான்.
வழியில் டெலிபோன் பூத் ஒன்று இருந்தது. காரை அதன் அருகில் ஓட்டிக் கொண்டு வந்து நிறுத்திய ராஜா, கீழே இறங்கி முதல் வேலையாக போலீஸுக்கு டெலிபோன் செய்து இரண்டு பேர்கள் கடல் அலைகளால் ஒதுக்கப்பட்டு இறந்து கிடக்கும் விபரத்தை மட்டும் சொன்னான். டெலிபோன் செய்து தகவல் கொடுப்பது இன்னார்தான் என்பதைத் தெரிவிக்கவில்லை. பின்னர் ராஜா காரிலேறி தன்னுடைய வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.
என்ன அது? பூட்டு வைத்துப் பூட்டப்பட்ட கதவு திறந்த படியே கிடக்கிறதே!
கலவரமடைந்த ராஜா வீட்டினுள் எதிரியின் ஆட்கள் யாராவது இருக்கக் கூடுமோ என்ற எண்ணத்துடன், மற்றுமொரு சண்டையை எதிர்பார்த்து ஓசைப்படாமல் நடந்து உள்ளே போனான்.
முன் ஹாலினுள் போடப்பட்டு இருந்த சோபா உறைகள் எல்லாம் கிழிக்கப்பட்டு இருந்தன.
எதிரிகள் வேலையாகத்தான் இவை இருக்கும் என்பதில் கொஞ்சமும் ஐயமில்லை. இரவில் இந்த வேலை நடைபெற்று இருக்கக்கூடும். இரகசியச் செய்திகள் அடங்கிய காகிதங்கள் உறைகளினுள் மறைத்து வைக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எதிரிகளுக்கு வந்திருக்கலாம்.
ராஜா திகைத்துப்போய் நின்று கொண்டு இருந்த போது உள் அறையிலிருந்து குதிரை நடந்து வருவதைப் போன்ற காலடியோசை கேட்டது.
குதிரைக்கு வீட்டினுள் என்ன வேலை….? ராஜா குழம்பியபோது, கையில் ரிவால்வரை நீட்டிப்பிடித்த படியே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருளானந்தம் வந்து கொண்டு இருந்தார்!
அவரைக் கண்டு ராஜா துணுக்குற்ற போதிலும் சமாளித்துக் கொண்டு, “என்ன தான் போலீஸ் அதிகாரியாக இருந்தாலும் ஆள் இல்லாத வீட்டின் கதவைத் திறந்து கொண்டு சோதனை போடலாமா?” என்று மனங்குறுவதைப்போல் கேட்டான்.
“உங்கள் ஆபீஸைச் சோதனை போட வேண்டும் என்ற எண்ணத்துடன் நான் இங்கே வரவில்லை. உங்கள் வீட்டின் கதவு திறந்து கிடப்பதைக் கவனித்து விட்டு ரகசிய போலீஸார் எனக்கு தகவல் கொடுத்தார்கள். அதனால் தான் இங்கே வந்து பார்த்தேன். யாரோ ஒருவன் வீட்டைச் சோதனை இட்டிருக்கிறான். ஆனால் எந்தப் பொருளுமே களவாடப்பட்டதாகத் தெரியவில்லை’ என்றார் இன்ஸ்பெக்டர் அருளானந்தம்.
ராஜா வீட்டினுள் சென்று எல்லா அறைகளையும் பார்த்து விட்டு வந்தான். அவர் சொன்னது போல் எல்லா பொருள்களும் பத்திரமாகவே இருந்தன. ஆனால் ‘பீரோ’வும், மேஜை டிராயர்களும் மட்டும் திறந்து வைக்கப்பட்டு இருந்தன. மற்ற பொருட்களும் இடமாறிக் காட்சி அளித்தன.
“உங்கள் ஆபீஸைச் சோதனையிட்டவனும் வீட்டினுள் நுழைந்து இருப்பவனும் ஒரே ஆளாகத்தான் இருக்க முடியும் என்று யூகிக்கிறேன்.”
ராஜா குழம்பிய நிலையில் நின்று கொண்டு இருந்தான். இனி என்ன பேசுவது? எதைப் பேசினாலும் ஆபத்தைத் தானாகவே கொண்டு வந்து விடும் போல் தோன்றுகிறதே!
“தான் உங்களிடம் சேதுபதியைப்பற்றி விசாரித்த போது உண்மையைச் சொல்லி இருந்தால் ஒழுங்காக வேலைகள் நடைபெற்று இருக்கும். அவனையும் இன்னொரு உயிரையும் இழக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டு இருக்காது. நித்தியகலாவும் நிலை தடுமாறிப் போய் இருக்கமாட்டாள்” என்றார் இன்ஸ்பெக்டர் அருளானந்தம்.
“நான் உங்களிடம் உண்மையைத்தான் சொன்னேன். நீங்கள் அதை நம்பாமல் இருந்தால் என்னால் என்ன செய்ய முடியும்?”
“சேதுபதி தன் மனைவி நித்தியகலாவை விவாகரத்து செய்வதற்கு யோசனை கேட்பதற்கு உங்களைத் தேடி வந்தான் என்ற உண்மையையா? நீங்கள் அப்பட்டமாகப் பொய் சொல்லுகிறீர்கள் என்பதை முகமே எடுத்துக் காட்டுகிறது.”
“நான் பொய் பேசவில்லை.”
“அதிருக்கட்டும், நீங்கள் எங்கே போய்விட்டு வருகிறீர்கள்? நெற்றியில் இரத்தக் காயம் ஏற்பட்டு இருப்பதைப் போன்ற சிராய்ப்பும் ஏற்பட்டு இருக்கிறதே. சட்டையின் பின்புறத்திலும் இரத்தக்கறை பட்டிருக்கிறது.”
இன்ஸ்பெக்டர் அருளானந்தத்தை ஏமாற்றி தப்பித்துக் கொள்வது கடினம் என்பதை உணர்ந்த ராஜா, எண்ணூர் கடற்கரை நிகழ்ச்சியைச் சொல்லுவதைத் தவிர வேறு வழி இல்லை என்பதை உணர்ந்து, “நான் இரண்டு கொலைகாரர்களைப் பிடித்து உங்களிடம் ஒப்படைக்க எண்ணினேன். ஆனால் அந்த சண்டாளர்களை கடல் விழுங்கிவிட்டது” என்று சொன்னான்.
“என்னது…? இரண்டு பேர்கள் இறந்து விட்டார்களா? என்ன நடந்தது என்ற விபரத்தைச் சொல்லுங்கள்.”
இன்ஸ்பெக்டர் அருளானந்தம் அவனை வற்புறுத்தி துரிதப்படுத்தினார்.
ராஜா, தனக்கு ஒரு மர்ம மனிதன் டெலிபோன் செய்த விபரத்தையும், கடற்கரையில் நடைபெற்ற பயங்கர நிகழ்ச்சியையும் விவரித்தான்.
“அப்படியானால் நீங்கள், விடிந்ததும் விடியாததுமாக இரண்டு கொலைகளைச் செய்து விட்டீர்கள் என்று சொல்லுங்கள்,”
இன்ஸ்பெக்டர் அருளானந்தம் இப்படித் தனக்கு எதிராகவே பேசுவார் என்று ராஜா எதிர்பார்த்தது தான். எனவே அவன் அதிர்ச்சியடைந்து விடவில்லை.
“நான் கொலைகளைச் செய்ததாகக் கூறுவதற்கு உங்களுக்கு எப்படி சார் மனம் வருகிறது? அந்தத் தடியர்கள் என்னைக் கொலை செய்வதற்கு எவ்வளவோ முயற்சி செய்தார்கள். ஆனால் கடல் அலைகளுக்கே அது பொறுக்கவில்லை. எனவே அவை அவர்களைத் தூக்கி விழுங்கி விட்டன.”
“நீங்கள் சொல்லுவதை நான் நம்ப வேண்டும் என்று சொல்லுகிறீர்கள், இல்லையா?”
“நான் உங்களைக் கட்டாயப்படுத்தவில்லை. அவர்களுடைய பிணங்கள் எண்ணூர் கடற்கரையிலேயே கிடக்கின்றன. எண்ணூர் போலீஸ் நிலையத்திற்கு டெலிபோன் செய்து நான் விபரத்தைத் தெரியப்படுத்தி விட்டதால் இந்நேரம் அவர்கள் பிணங்களைக் கைப்பற்றி எடுத்துச் சென்றிருப்பார்கள். என் மீது உங்களுக்கு நம்பிக்கை ஏற்படாமல் இருந்தால் பிணத்தை அறுத்துச் சோதனை செய்து தெரிந்து கொள்ளலாமே”
இன்ஸ்பெக்டர் அருளானந்தம், அவனுடைய பேச்சைக் கேட்டு மனத்திற்குள்ளாகவே கோபித்துக் கொண்ட போதிலும், வாய்ப்பு கிடைக்கும் போது அவனைக் கவனித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன், எண்ணூர் போலீஸ் நிலையத்திற்கு டெலிபோன் செய்து விசாரித்தார்.
எண்ணூர் சப்-இன்ஸ்பெக்டர் மரக்காணம், எண்ணூர் கடற்கரையில் இருந்து இரண்டு பிணங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி இருக்கும் விவரத்தைத் தெரியப்படுத்தினார்.
டெலிபோன் பேச்சை முடித்துக் கொண்ட இன்ஸ்பெக்டர் அருளானந்தம், “உங்களைக் கொலை செய்வதற்காகக் காத்துக் கொண்டு இருக்கும் ஆசாமி யார் என்பதைத் தெரிந்து கொண்டீர்களா?” என்று கேட்டார்.
“அதைப் பற்றித் தான் சிந்தித்துக் கொண்டு இருக்கிறேன். என்னால் எந்தவிதமான முடிவுக்கும் இன்னும் வரமுடியவில்லை” என்றான் ராஜா.
“இனியாவது எதையும் மறைக்காமல் சொல்லுங்கள். எதற்காக நேற்று மாலையில் உங்கள் வீட்டுக்கு சேதுபதி வந்தான்?”
“ஏற்கனவே இதற்கு நான் பதில் சொல்லிவிட்டேன். அடங்காத மனைவியான நித்தியகலாவுடன் வாழ அவன் பிரியப்படவில்லை. எனவே விவாகரத்து செய்து கொள்ள விரும்பி என் உதவியை நாடினான்.”
“போலீஸாரிடம் பொய் சொல்லி ஏமாற்றினால் உங்களுக்கு என்ன கிடைக்கும் தெரியுமா?”
“பொய் சொல்லி-அதுவும் உங்களை நான் ஏமாற்றினால் தானே!
ஏமாற்றும் வழக்கம் எனக்குக் கிடையாது. கொலைகாரனை உங்களிடம் ஒப்படைத்துப் பரிசு தட்டிச் செல்வேனே தவிர, ஒரு போதுமே கம்பி எண்ண முன்வரமாட்டேன்.”
“கொலைகாரனைப் பிடித்து எங்களிடம் ஒப்படைக்கப் போகிறீர்களா? பேஷ்! பேஷ்! உங்கள் துணிச்சலைப் பாராட்டுகிறேன்’ என்று சிரித்த இன்ஸ்பெக்டர் அருளானந்தம், “ஆனால் அதற்கு முன்னால் உங்களிடமிருந்து உண்மையை எதிர்பார்க்கிறேன்” என்று சொன்னார்.
எத்தனை முறை தான் அவர் உண்மையை எதிர்பார்த்து, ஏமாற்றம் அடைவார்?
“நான் சொல்ல வேண்டியவற்றை எல்லாம் தெளிவாகவே சொல்லி விட்டேன்.” என்றான் ராஜா.
“நீங்கள் சொன்னவற்றை எல்லாம் உண்மை என்று நான் நம்பியிருப்பேன். ஆனால் வீரமணியும், பக்கத்து வீட்டுப் பெண்மணியான அகிலாண்டம் அம்மாளும் கொடுத்த ‘ஸ்டேட் மெண்டுகள்’ தான் உங்களை நம்ப மறுக்கின்றன. அவர்கள் சேதுபதி நித்தியகலா ஆகியோரின் அந்தரங்க வாழ்க்கை இரகசியங்களை எல்லாம் பயந்து போய் என்னிடம் உளறிவிட்டார்கள். என்னுடைய தந்திரமும், அதட்டலும் வெற்றி வாங்கித் தந்துவிட்டன.
ராஜா கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளானான். வீரமணியை நம்பி அவளுடைய வீட்டில் தான் நாதமுனி தலைமறைவாகப் பதுங்கி இருக்கிறாள் என்பதும் ராஜாவுக்கும் தெரியும் இருந்தாலும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், “வீரமணி என்பது யார்” என்று ஒன்றும் தெரியாதவனைப் போல் அமைதியாகக் கேட்டான்.
“அவனும் ஒரு எழுத்தாளர் தான்! ‘கலைத் தூதன்’ பத்திரிக்கையின் உதவி ஆசிரியர்களில் ஒருவன். இறந்து போன சேதுபதியும் அவனும் ஒரே பத்திரிகையில் தான் வேலை பார்த்து வருபவர்கள்!
“அப்படியா? எனக்கு இதெல்லாம் தெரியாது.” என்று சொன்ன ராஜா, “உங்கள் தோற்றத்தைக் கண்டதும் அவர்கள் பயந்து போய் தப்பினால் போதும் என்ற எண்ணத்துடன் உங்களிடம் எதையாவது உளறி இருக்கலாம்” என்றான்.
அவன் சொன்னதைக் கேட்டு இன்ஸ்பெக்டர் அருளானந்தம் சீறினார்.
“அவர்கள் பேசியது உண்மையா, பொய்யா என்று எனக்குத் தெரியும். அகிலாண்டம் அம்மாள் என்ன சொன்னாள் தெரியுமா? சேதுபதியின் மனைவி நித்தியகலா தவறான வழிகளில் எல்லாம் நடந்தாளாம். நாதமுனிக்கு அவள் ஆசை நாயகியாகவும் இருந்தாளாம். இரண்டு பேர்களும் கணவன்-மனைவி போல் கள்ளத்தனமாக வாழ்க்கை நடத்திக் கொண்டு வந்தார்களாம். இந்த விபரம் சேதுபதிக்கும் தெரியுமாம். அதுமட்டுமல்ல; நீங்களும் நாதமுனியும் உயிருக்கு உயிரான நண்பர்கள் என்பதும் சேதுபதிக்குத் தெரியுமாம். உண்மையிலேயே மனைவியை விவாகரத்து செய்து கொள்ளும் எண்ணம் சேதுபதிக்கு இருந்தால் நாதமுனியின் நண்பனாகிய உங்களிடமே அவன் உதவி தேடி வரவேண்டிய அவசியம் இல்லை. நண்பனுக்கு எதிரான காரியத்தில் நீங்கள் ஈடுபடமாட்டீர்கள் என்பது அவனுக்குத் தெரியும்.”
“நீங்கள் சொல்லும் தோரணையைக் கவனிக்கும் போது நாதமுனி, சேதுபதியின் கொலையில் சம்பந்தப்பட்டு இருப்பான் என்று நீங்கள் சந்தேகிப்பதாகத் தோன்றுகிறதே! ஆனால் நாதமுனியின் குணத்தைப் பற்றி ஒன்று மட்டும் சொல்லுகிறேன், கேளுங்கள். அவன் தெரிந்தோ, தெரியாமலோ நித்தியகலாவுடன் பழகி இருக்கலாம். ஆனால் அவளுடைய கணவனைக் கொலை செய்துவிடும் அளவுக்கு ஒருபோதுமே கெட்டவனாக இருக்கமாட்டான்.”
“நண்பனுக்காக நீங்கள் வக்காலத்து வாங்கிக் கொண்டு பேசுகிறீர்கள் என்பது மிகவும் நன்றாக விளங்கிவிட்டது. நண்பனை நீங்கள் போலீஸில் காட்டிக் கொடுக்க கொஞ்சமும் விரும்பவில்லை. நீங்கள் அகிலாண்டம் அம்மாளிடம், போலீஸார் விசாரித்தால் எதையும் சொல்லாமல் மழுப்பிவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருந்து இருக்கிறீர்கள். எல்லாவற்றையும் அந்த அம்மாள் என்னிடம் சொல்லி விட்டாள்.
நம்பியிருந்த அகிலாண்டம் அம்மாள் கால்களை வாரிவிட்டு விட்டாள் என்பதைத் தெரிந்து கொண்ட பிறகு நிலைமையை ராஜாவால் எப்படி சமாளிக்க முடியும்? இனி எதைச் சொன்னாலும் இன்ஸ்பெக்டர் நம்ப மாட்டாரே!
“யார் எதைச் சொன்னாலும் அதை அப்படியே நம்பிவிடுவது நல்லதல்ல சார்!” என்றான் ராஜா.
“நம்புவதா, வேண்டாமா என்று எங்களுக்குத் தெரியும்” என்று சொன்ன இன்ஸ்பெக்டர் அருளானந்தம் ‘அது இருக்கட்டும் இப்பொழுது நாதமுனி எங்கே?” என்று அதட்டினார்.
“அவனைப் பற்றி என்னிடம் ஏன் விசாரிக்கிறீர்கள்? நாங்கள் இரண்டு பேர்களும் ஒரே வீட்டிலேயா குடி இருக்கிறோம்?”
“நீங்கள் குடி இருக்கிறீர்களோ; குடியைக் கலைக்கிறீர்களோ; அதெல்லாம் எனக்குத் தெரியாது. நாதமுனி தலைமறைவாகி விட்டான்.”
“அப்படியா? அவன் எதற்காகத் தலைமறைவாகி விடவேண்டும்?” என்று ராஜா ஒன்றும் தெரியாதவனைப் போல் கேட்டான்.
“காரணம் சொல்ல வேண்டுமா? கேளுங்கள்! நாதமுனி. நித்தியகலாவுடன் என்றென்றும் இணை பிரியாமல் வாழ வேண்டும் என்பதற்காக அவளுடைய கணவன் சேதுபதியைச் சுட்டுக் கொன்று விட்டுத் தலைமறைவாகி விட்டான்.”
“அபாண்டமான பழி சார்!”
“உண்மையிலேயே நான் சொல்லுவது பழியாக இருந்தால் அவன் ஏன் தலைமறைவாகி விட வேண்டும்? நேரில் வந்து நடந்தவற்றை எல்லாம் எங்களிடமே விளக்கி இருக்கலாமே!”
“அப்படி அவன் செய்யாமல் தலைமறைவாகி இருப்பது தப்பு தான்” என்று சொன்ன ராஜா, “நித்தியகலாவின் மீதிலுள்ள ஆசையால் அவன் கொலைகாரனாகி இருப்பான் என்று நம்புகிறீர்களா” என்று கேட்டான்.
“பெண்ணாசை ஆண்களை என்ன வேண்டுமானாலும் செய்யத் தூண்டும். வீரமணியும், அகிலாண்டம் அம்மாளும் சொன்னவற்றைக் கவனிக்கும் போது கொலை செய்தவன் நாதமுனி தான் என்று திட்டவட்டமாகத் தெரிகிறது. அவனைக் கைது செய்வதற்காக இப்பொழுது நாங்கள் முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம்” என்றார் இன்ஸ்பெக்டர் அருளானந்தம், தனக்கே உரித்தான கனத்த தொண்டையில்.
“என் மனசாட்சி அவன் கொலை செய்து இருக்கமாட்டான் என்றே சொல்லுகிறது. இருந்தாலும் மனிதர்களின் நெஞ்சழுத்தத்தை என்னால் தெரிந்து கொள்ள முடியுமா என்ன” என்று சொன்ன ராஜா, “அவனைக் கைது செய்வதும், கைது செய்யாமல் விட்டுவிடுவதும் உங்கள் விருப்பம்!” என்றான்.
“இன்னொரு தகவலும் எங்களுக்குக் கிடைத்து இருக்கிறது. அதாவது ஒரு பெரிய மனிதனைப் பற்றிய மோசமான செய்தியைக் காலஞ்சென்ற சேதுபதி சேகரித்து வைத்து இருந்தானாம். அந்தச் செய்தியை அவனிடமிருந்து அபகரிக்க நாதமுனி முயன்று கொண்டு இருந்ததாகவும் அறிந்தேன். அதனால் நாதமுனி அவனைப் பார்ப்பதற்கு எங்கேயெல்லாமோ அலைந்து திரிந்து கொண்டு இருந்திருக்கிறான்.”
எல்லாவற்றையுமே இன்ஸ்பெக்டர் அருளானந்தம் தெரிந்து கொண்டு இருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்ட ராஜா “ம்! சேதுபதியிடம் இருதி செய்திகளை எதற்காக நாதமுனி அபகரித்துக் கொள்ளப் போகிறான்?” என்று நல்லதையே நினைப்பவனைப் போல் பாசாங்கு செய்து கேட்டான்.
“ஒருவனுடைய மனைவியை அபகரிக்க நினைக்கக் கூடியவன் இந்த உலகத்தில் பஞ்சமா பாதகங்களைக் கூடத் துணிகரமாகச் செய்வான்.”
“இந்த பயங்கரமான செய்தி சேதுபதியிடம் இருந்தது என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?”
“எல்லாவற்றையும் சேதுபதியின் சகாவான வீரமணியிடம் இருந்தே தந்திரமாகத் தெரிந்து கொண்டேன். அந்த இரசசியச் செய்தியை பத்திரிகைக்குக் கொடுக்க நேற்று இரவு சேதுபதி முயற்சி செய்து இருக்கிறான். அந்தச் செய்தி மட்டும் பத்திரிகையில் வெளியாகிவிட்டால் ஒரு பெரிய மனிதனின் மானமே போய் விடுமாம். நாட்டுக்கே நன்மை பிறக்குமாம்!” என்றார் இன்ஸ்பெக்டர்.
அதைக் கேட்டதும் ராஜா திகைத்தான். இரகசியச் செய்தியைப் பிரசுரிக்காதபடி விற்று விடுவதாகச் சொல்லி ஒரு மர்ம மனிதனிடம் பெரும் பணம் பறிக்கத் திட்டமிட்ட சேதுபதி திடீரென்ற மனம்மாறி அந்தச் செய்தியைப் பத்திரிகைக்கே கொடுத்துவிட ஏன் முடிவு செய்தான் என்று ராஜாவுக்குப் புரியவில்லை.
“அந்தப் பெரிய மனிதன் யார் என்பதையும் நீங்கள் தெரிந்து கொண்டீர்களா?” என்று ராஜா கேட்டான்.
“அகிலாண்டம் அம்மாளும், வீரமணியும் அவனைப்பற்றி எதுவும் தெரியாது என்று சொல்லி விட்டார்கள். அவன்மேல் மட்டத்தில் ராஜபோகத்துடன் வாழக்கூடிய பெரும்புள்ளியாக இருக்கலாம்.”
“பத்திரிகைக்கு அந்தச் செய்தியைக் கொடுப்பது என்று முடிவு செய்த விபரம் வீரமணிக்கு எப்படித் தெரிந்தது?”
“சேதுபதி தான் நேற்றிரவு வீரமணியிடம் சொன்னானாம். அப்போதைய நிலைமையில் அதைத் தவிர வேறு வழியே இல்லையாம்” என்று சொன்ன இன்ஸ்பெக்டர் அருளானந்தம் மேலும் பேச்சைத் தொடர்ந்தார்.
“செய்தியை சேதுபதி பத்திரிகைக்குக் கொடுக்காமல், அதைப் பிரசுரிக்கப் போவதாகப் பயமுறுத்தியே ஒரு பெரிய மனிதனைப் ‘பிளாக் மெயில்’ செய்து பணம் பறிக்கத் திட்டமிடுவானோ என்று நினைத்து வீரமணி மிகுந்த வருத்தப்பட்டு இருக்கிறான். அதனால் சேதுபதியின் வீட்டின் சமீபம் வரையிலும் அவன் வந்து புத்தி சொல்லி இருக்கிறான். சேதுபதி அப்பொழுது அளவுக்கு மீறிக் குடித்து இருந்தானாம்” என்றார் இன்ஸ்பெக்டர் அருளானந்தம்.
ராஜா உதட்டைப் பிதுக்கியமாறு குறுக்கும் நெடுக்குமாக நடந்து விட்டு, “வீரமணியை மிரட்டி எப்படியோ இந்த விபரங்களை எல்லாம் தெரிந்து கொண்டு இருக்கிறீர்கள். அப்படியானால் இன்னும் அவன் ஓர் அந்தரங்க விஷயத்தையும் உங்களிடம் சொல்லியிருக்க வேண்டுமே!” என்று கேட்டான்.
இன்ஸ்பெக்டர் அருளானந்தம் தன்னைக் குறுக்கு கேள்வி கேட்கும் அவனைப் பார்த்து விழித்தார்.
“என்ன அந்தரங்க விஷயம்?”
“குடிபோதையில் சேதுபதி தள்ளாடிக்கொண்டு வீட்டுக்குப் போனபோது, அங்கே அவனுடைய மனைவி நித்தியகலாவும் நண்பன் நாதமுனியும் உல்லாசத்தில் மிதப்பதை நேருக்கு நேராகவே பார்க்கலாம் என்று சேதுபதியிடம் வீரமணி சொன்னானா?” என்று ராஜா கேட்டான்.
இன்ஸ்பெக்டர் அருளானந்தம் அவனை மிகுந்த வியப்புடன் பார்த்தார். அந்த வியப்பை எதிரொலிப்பது போல் நெற்றியில் சுருக்கங்களும் விழுந்தன.
“என்னிடம் வீரமணி இப்படிச் சொன்னான் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?”
“எல்லாம் அனுமானம் தான்! பலதரப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையை கதையாக எழுதிக் கொண்டு இருக்கிறேன் அல்லவா?”
“வீரமணி சொன்ன பிறகாவது நாதமுனியும் நித்தியகலாவும் கள்ளக் காதலர்கள் தான் என்பதை ஒத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். சேதுபதி ஒரு பெரிய மனிதனைப் பற்றிய ரகசியச் செய்தியைச் சேகரித்து வைத்துக் கொண்டு ஒரு திட்டம் போட்டு உங்களிடம் வந்து இருக்கிறான் என்பதையும் ஒப்புக் கொள்வீர்களா?” என்று இன்ஸ்பெக்டர் கேட்டார்.
“எனக்கு இன்னும் நம்பிக்கை ஏற்படவில்லை. உங்களிடம் இருந்து தப்பினால் போதும் என்ற எண்ணத்துடன் வீரமணி வேண்டும் என்றே பொய் சொல்லி இருக்கிறான். சேதுபதி அந்தச் செய்தியை பத்திரிகைக்குத் தெரியப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதுவும் நேற்றிரவு அவன் அந்த முடிவுக்கு வந்திருக்க முடியாது. மேலும் அந்த விபரங்களை எல்லாம் அவன் வீரமணியிடம் தெரியப்படுத்தி இருக்கவும் மாட்டான். அதனால் வீரமணி பொய் சொல்லி இருப்பான் என்று திடமாக நம்புகிறேன்” என் றான் ராஜா.
அவன் சொன்னதைக் கேட்டு இன்ஸ்பெக்டர் அருளானந்தம் சிரித்தார்.
“அப்படியானால் ‘கலைத் தூதன்’ பத்திரிகை ஆசிரியரான மாதவனும் பொய்தான் பேசுகிறாரா? அவர் பொய் சொல்லித்தான் வாழவேண்டும் என்ற அவசியம் கொஞ்சமும் இல்லையே!”
கலைத் தூதன் ஆசிரியரான மாதவனையும் இன்ஸ்பெக்டர் அருளானந்தம் இழுத்ததும், நிலைமை மோசமாகிக் கொண்டு வருவதை உணர்ந்தான் ராஜா.
“கலைத் தூதன் ஆசிரியர் மாதவனா? நீங்கள் எந்த அர்த்தத்தில் இப்படிப் பேசுகிறீர்கள் என்று தெரியவில்லையே!”
“நீங்கள் கொலைகாரன் என்று கருதப்படும் ஒருவனுக்கு ஆதரவாக நடந்து வருவதால் சில உண்மைகளைத் தெரிந்து தான் ஆகவேண்டும். நேற்றிரவு சேதுபதி உயிருடன் இருக்கும் போது தான் கலைத் தூதன் பத்திரிகையின் ஆசிரியரான மாதவனுக்கு அவசரமாக டெலிபோன் செய்திருக்கிறான். ஆனால் மாதவன் அப்பொழுது ஆபீஸில் இல்லை. எனவே அவர் வந்தவுடன் தனக்கு டெலிபோன் செய்யும்படி ‘ஆபரேட்டருக்கு’ சேதுபதி தகவல் கொடுத்து இருக்கிறான். பத்திரிகைக்கு அந்தச் செய்தியை எப்படியும் கொடுத்து விடவேண்டும் என்ற ஒரே வேகத்தில் அவன் இருந்து இருக்கிறான். இதையும் அவன் டெலிபோன் ஆபரேட்டரிடம் சொல்லி இருக்கிறான்.”
சற்று அதிர்ந்து போன ராஜா. “சேதுபதி எங்கேயிருந்து டெலிபோன் செய்தான்? என்று கேட்டான். அதே சமயத்தில் முக்கியமான தகவல்களைத் தெரிந்து கொள்கிறோமே என்ற ஒரு வகையான உத்வேகமும் மனதில் பொங்கியது.
“தன்னுடைய வீட்டிலிருந்தே தான் சேதுபதி டெலிபோன் செய்திருப்பான். ஏனெனில் கலைத் தூதன் ஆசிரியர் மாதவனைத் தன் வீட்டுக்குத் தான் உடனடியாக டெலிபோன் செய்யும்படி தன் வீட்டு நம்பரையும் கொடுத்து இருக்கிறான்.”
“மாதவன் ஆபீஸுக்கு வந்ததும் சேதுபதியின் வீட்டுக்கு டெலிபோன் செய்தாரா?”
”ஆமாம்! சேதுபதி அவசரமாக டெலிபோன் செய்யச் சொன்ன விபரத்தை டெலிபோன் ஆபரேட்டர் தெரியப்படுத்தியதும் உடனே ஆசிரியர் மாதவன் பரபரப்போடு சேதுபதியின் வீட்டுக்கு டெலிபோன் செய்திருக்கிறார். ஆனால் பதில் இல்லையாம். டெலிபோன் மணி தொடர்ச்சியாக அடித்துக் கொண்டு இருந்த போதிலும் யாருமே அதை எடுத்துப் பேசவில்லையாம். அதனால் மாதவன் மிகுந்த குழப்பம் அடைந்து இருந்தாராம். சிறிது நேரம் கழித்து திரும்பவும் அவர் டெலிபோன் செய்து பார்த்து இருக்கிறார். அப்போதும் பலன் இல்லை”
ராஜா குழப்பமடைந்த நிலையில் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்து புகையை ஊதிவிட்டு சேதுபதியின் ஆசை நாயகியான ராஜாத்தி சொன்ன விஷயத்தைப் பற்றிச் சிந்திக்கலானான்.
ராஜாத்தி என்ன சொன்னாள்? அவள் சொன்ன வாசகங்கள் ‘கிண்கிண்’ என்று ராஜாவின் காதுகளில் ஒலிப்பதைப் போல் இருந்தன.
“….டெலிபோனில் சேதுபதி யாரோ ஒரு மர்ம மனிதனைக் கூப்பிட்டு இன்னும் அரைமணி நேரத்தில் எதிர்பார்க்கும் ஆசாமியிடம் இருந்து பெருந்தொகை ஒன்று கைக்கு வந்து சேராவிட்டால் சேகரித்து வைத்து இருக்கும் பயங்கரச் செய்தியை பத்திரிகைக்குக் கொடுத்துவிடப் போவதாகச் சொன்னார். அவர் எதிர்பார்க்கும் பத்திரிகை அந்தச் செய்தியைப் பிரசுரிக்க மறுத்தால் நாதமுனி வேலை செய்யும் ‘தமிழ் நேசன்’ பத்திரிகைக்கு நாதமுனி மூலமாகவே கொடுக்கப் போவதாகவும் கூறினார். பிறகு தன்னுடைய வீட்டு டெலிபோன் நம்பரைக் கொடுத்து அரைமணி நேரத்திற்குள் தகவல் தெரிவிக்கும்படிக் கூறினார் தவறினால் விபரீதமான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரித்தார்.” இவ்வாறு ராஜாத்தி முன்பு சொன்னதற்கும், இப்போது இன்ஸ்பெக்டர் அருளானந்தம் சொன்னதிற்கும், சம்பந்தம் இருப்பதை ராஜா உணர்ந்தான். சேதுபதி சேகரித்து வைத்திருக்கும் இரகசியச் செய்திகளை வைத்துக் கொண்டு ஒரு பெரிய மனிதனை மிரட்டிப் பணம் பறிக்க வேண்டுமென்ற வேகத்தோடு தான் அவன் நேரே போயிருக்கிறான். பிறகு அவன் பயந்தோ வேறு எதனாலோ மனம் மாறி தன்னுடைய பணம் பறிக்கும் பிளாக் மெயில் திட்டத்தைக் கைவிட்டு விட்டு தன்னுடைய கலைத் தூதன் பத்திரிகைக்கே அந்தச் செய்தியைக் கொடுத்து விடுவது என்று தீர்மானித்து இருக்கிறான் அதனாலேயே அவன் ராஜாத்தியின் வீட்டிலிருந்து கலைத்தூதன் பத்திரிகை அலுவலகத்திற்கு டெலிபோன் செய்து இருக்கிறான் என்பது தெளிவாகிவிட்டது. ஆனால் பத்திரிகை ஆபீஸில் ஆசிரியர் மாதவன் அப்போது இல்லை என்று தெரிந்ததால், இன்னும் அரை மணி நேரத்தில் தன் வீட்டுக்கு ஆசிரியர் டெலிபோன் செய்ய வேண்டுமென்று சேதுபதி தகவல் கொடுத்து விட்டு ராஜாத்தியின் வீட்டை விட்டு இரவு பத்து மணிக்குக் கிளம்பி தன் சொந்த வீட்டிற்குப் போயிருக்கிறான்.
அப்படியானால் சேதுபதி நன்றாகக் குடித்து விட்டு குடிபோதையுடன் டெலிபோனுக்காகத் தன் வீட்டிலேயே காத்துக் கொண்டு இருந்தானா?
இன்ஸ்பெக்டர் அருளானந்தத்திடம் வீரமணி சொன்னபடி சேதுபதியை வீட்டுக்குப் போகும் வழியில் வைத்தே சந்தித்துப் பேசியிருக்க வேண்டும். உண்மையிலேயே இருவரும் சந்தித்து இருந்தால் குடிபோதையில் தள்ளாடும் சேதுபதி தன்னுடைய ‘பிளாக் மெயில்’ விவகாரத்தையும், பிறகு மனம் மாறிய விஷயத்தையும் வீரமணியிடம் சொல்லி இருக்கக்கூடும்!
ராஜாத்தியும் அகிலாண்டம் அம்மாளும் சொன்னவற்றைக் கவனித்தால் சேதுபதி வழியில் ஒரு வினாடி நேரத்தைக் கூட வீணாக்கி இருக்க முடியாது.
அவன் சரியாக இரவு பத்து மணிக்குத் தன் வீட்டை விட்டு வெளியே போனதாக ராஜாத்தி சொன்னாள். அகிலாண்டம் அம்மாளோ பத்துமணி அடித்து பத்து நிமிடம் கழித்து சேதுபதி தன் சொந்த வீட்டு வந்ததைப் பார்த்ததாகத் தெரியப்படுத்தினாள். ராஜாத்தியின் வீட்டுக்கும் நித்தியகலாவின் வீட்டுக்கும் இடையே நடந்து வர கண்டிப்பாகப் பத்து நிமிடம் பிடிக்கும்!
அப்படியானால் வீரமணி போலீஸ் அதிகாரியிடம் சொன்னவை எல்லாம் பொய்யா?
“கலைத்தூதன் பத்திரிகைக்கு சேதுபதி எத்தனை மணிக்கு டெலிபோன் செய்தான் என்று தெரியுமா சார்?” என்று ராஜா கேட்டான்.
“இரவு பத்துமணி இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஆசிரியர் மாதவன் பத்தரை மணி கழித்து வந்தாராம். சேதுபதி சொன்ன விபரத்தை ஆபரேட்டர் தெரியப்படுத்தியதும் உடனே அவன் கொடுத்த வீட்டு நம்பருக்கு டெலிபோன் செய்தாராம்” என்றார் இன்ஸ்பெக்டர் அருளானந்தம்.
அகிலாண்டம் அம்மாள் கேட்டதாகச் சொன்ன முதல் டெலிபோன் மணி இதுவாகத்தான் இருக்கும் என்று ராஜா எண்ணினான். இரண்டாவது டெலிபோன் மணி அடித்ததைக் கேட்டதாகவும் அவள் சொன்னாளே!
“ஆசிரியர் மாதவன் மறுபடியும் சுமார் பதினொரு மணிக்கு சேதுபதியின் விட்டுக்கு டெலிபோன் செய்தாரா?”
“நீங்கள் சொல்லுவது சரி! முக்கால் மணி நேரம் கழித்து திரும்பவும் அவர் டெலிபோன் செய்தாராம். அப்போதும் சேதுபதியின் வீட்டில் யாரும் டெலிபோனை எடுத்துப் பேசாமல் இருக்கவே, விடிந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து ரிசீவரை வைத்து விட்டாராம்” என்றார் இன்ஸ்பெக்டர்.
அகிலாண்டம் அம்மாள் சொன்னது முற்றிலும் உண்மை. இரண்டாவதாக அவள் கேட்ட டெலிபோன் மணி சத்தம் இதுவே தான்!
அப்படியானால்…
இரவு பத்துமணி பத்து நிமிடம் கழிந்ததும் சேதுபதி வீட்டுக்கு குடிபோதையுடன் வந்ததைப் பார்த்ததாக அகிலாண்டம் அம்மாள் சொன்னாள். அதே நேரத்தில் நித்தியகலாவும் வீட்டினுள்ளேயே தான் இருந்து இருக்கிறாள் என்பதும் தெளிவாகிறது.
உண்மை இவ்வாறு இருக்கும் போது பத்தரை மணிக்கு வந்த டெலிபோனில் ஏன் அவர்கள் இருவரில் ஒருவருமே டெலிபோனை எடுத்துப் பேசவில்லை? அப்பொழுது அவர்கள் இரண்டு பேர்களும் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்?
பத்திரிக்கை ஆசிரியரான மாதவன் தனக்கு எப்படியும் டெலிபோன் செய்வார் என்று நிச்சயமாக சேதுபதி ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு இருந்திருப்பான். அத்தகைய எண்ணம் கொண்ட அவன் திடீரென்று பத்தரை மணிக்கு எங்கே போயிருந்தான்? அல்லது அவன் என்ன ஆனான்?
அதே நேரத்தில் தன்னுடைய உயிர் நண்பனாகிய நாதமுனி சொன்னதும் ராஜாவின் நெஞ்சைத் தாக்கியது. நாதமுனி இப்படித்தான் சொன்னான்.
நள்ளிரவு வரையில் தன் கணவன் சேதுபதி இன்னும் வீட்டுக்கே வரவில்லை என்று நித்தியகலா தெரியப்படுத்தினாளாம். கணவனுக்காக அவள் கவலைப்படவும் செய்தாளாம்.
இதுவும் அல்லாமல் நாதமுனியின் காரின் பின் சீட்டில் சொட்டு ரத்தமும் உறைந்து இருந்தது. ஆனால் அந்த இரத்தக் கறையைப் பற்றித் தனக்கு எதுவுமே தெரியாது என்று நாதமுனி சொல்லி விட்டான்.
ராஜா எல்லாவற்றையும் நினைத்துக் கொண்டதும், இன்னும் அதிகமாகக் குழம்பினான். வீரமணி சொன்னதை நம்புவதா? நாதமுனி சொன்னதை நம்புவதா? அகிலாண்டம் அம்மாள் சொன்னதை நம்புவதா? ராஜாத்தி சொன்னதை நம்புவதா? யார் சொல்லுவதையுமே அவனால் நம்ப முடியவில்லை. ஒவ்வொருவரும், ஒவ்வொரு மூலையில் நின்று கொண்டு சந்தேகப் புயலையே கிளப்பினார்கள்.
ராஜா திரும்பவும் யோசனையில் ஆழ்ந்தான்.
நேற்றிரவு தன் கணவன் சேதுபதி வீட்டுக்கே வரவில்லை என்று நித்தியகலா நாதமுனியிடம் சொல்லி இருக்கிறாள்.
உண்மையிலேயே சேதுபதி வீட்டுக்கு வரவில்லையா? வேறு யாராவது வந்ததை அகிலாண்டம் அம்மாள் பார்த்து விட்டு அவன் சேதுபதியாக இருப்பான் என்று யூகித்து இருப்பாளா?.
சேதுபதி வீட்டுக்கு வரவில்லை என்பது உண்மையானால் பத்திரிகை ஆசிரியரை இன்னும் அரைமணி நேரத்தில் தன் வீட்டுக்கு டெலிபோன் செய்யும் படிச் சொல்லிவிட்டு ஏன் வீட்டுக்கு வரவில்லை? அவன் வீட்டுக்கு வராமல் வேறு எங்கே போயிருப்பான்?
நீண்ட நேரம் இந்தப் பிரச்சனைகளைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டு இருந்தால் தனக்கு மூளைக் குழப்பம் ஏற்பட்டு விடும் என்பதை உணர்ந்த ராஜா, ‘ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்து கொண்டு, சேதுபதி எத்தனை மணிக்கு செத்தான் என்பதை பிரேத பரிசோதனையில் இருந்து டாக்டர்கள் கண்டு பிடித்து விட்டார்களா?” என்று கேட்டான்.
இன்ஸ்பெக்டர் அருளானந்தமும் அவனுக்கெதிரில் இன்னொரு நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்து கொண்டார்.
“டாக்டருடைய ‘ஸ்டேட்மென்டு’ இன்னும் வரவில்லை.”
“சேதுபதியின் மரணம் சம்பந்தமாக நீங்கள் டாக்டரின் கருத்தை யூகித்துத் தெரிந்து கொண்டு இருப்பீர்களே!’
“ஓரளவு தெரிந்து கொண்டேன். சேதுபதி கொலை செய்யப்பட்ட பின்பு அந்தப் பிணத்தை எடுத்து வந்து நுங்கம்பாக்கம் ஏரிக்கரையில் போட்டு இருக்கிறார்கள் நாங்கள் பிணத்தைக் கைப்பற்றுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னால் பிணம் அங்கே கொண்டு வந்து போடப்பட்டு இருக்கலாம்.”
“அப்படியானால் சேதுபதி கொலை செய்யப்பட்ட பின்பு அவனுடைய பிணத்தை எடுத்து வந்து ஏரிக் கரையில் போட்டிருக்கலாம் என்று நினைக்கிறீர்களா?”
“டாக்டர் அப்படித் தான் கருதுகிறார். கொலை செய்யப்பட்ட இடம் வேறு! பிணம் கிடந்த இடம் வேறு!”
“எதற்காக கொலைகாரன் அப்படிச் செய்ய வேண்டும்? சேதுபதி சுட்டுக் கொல்லப்பட்ட அதே இடத்திலேயே பிணத்தையும் போட்டு விட்டுப் போய் இருக்கலாமே!”
“எப்படி வேண்டுமானாலும் செய்திருக்கலாம். ஆனால் அதை நேரடியாக கொலைகாரனிடம் தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.” என்று சொன்ன இன்ஸ்பெக்டர் அருளானந்தம், விழிப்படைந்து கொண்டவராக, “உம்முடைய நண்பன் நாதமுனியை உடனடியாக நான் பார்த்தாக வேண்டும் இப்பொழுது எங்கே போனால் அவனைப் பார்க்கலாம்?” என்று கேட்டார்.
போலீஸ் அதிகாரியின் சந்தேகம் முழுவதும் நாதமுனியின் மீது திரும்பிவிட்டது என்பதற்கு இதை விடவும் வேறென்ன உதாரணம் வேண்டும்?
வீரமணியின் வீட்டில் தான் நாதமுனி-பதுங்கி இருக்கிறான் என்பது ராஜாவுக்குத் தெரியும். ஆனால் தலை மறைந்திருக்கும் நண்பனை எப்படிப் போலீஸில் காட்டிக் கொடுப்பது?
“எனக்கு எதுவுமே தெரியாது சார். நான் இன்னும் அவனைப் பார்க்கவில்லை.”
இன்ஸ்பெக்டர் அருளானந்தம் அவனைப் பார்த்து முறுவலித்தார். விரைவில் நீ அபாயத்தில் சிக்கிக் கொள்வாய் என்று எச்சரிப்பது போல் இருந்தது. அவருடைய அனுபவம் நிறைந்த பார்வை!
“ராஜா! நீங்கள் நாதமுனிக்கு ஆதரவாக வேலை செய்வதை இனிமேலாவது நிறுத்திக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன் நித்தியகலா சுய உணர்வு பெற்று எழுந்ததும் எல்லா உண்மைகளையும் சொல்லி விடுவாள்.”
அது உண்மை தான் என்று ராஜா நினைத்த போதிலும், நர்ஸ் வேஷத்தில் போயிருக்கும் தன் காரியதரிசினியான பானு தந்திரமாக நித்தியகலாவைக் கண்காணித்து எதுவும் பேசவிடாதபடி நித்தியகலாவைத் தடுத்து விடுவாள் என்ற நம்பிக்கையுடன் முறுவலித்தான்.
திறமைசாலியான பானு இருக்கும்போது என்ன குறை?
அந்தச் சமயம் பார்த்து டெலிபோன் மணி பயங்கரமான ஓர் அபாயத்தை எதிரொலிப்பது போல் கூவியது.
யார் டெலிபோன் செய்திருப்பது என்று ராஜா நினைத்தான். அது நாதமுனியாக இருந்தால் சிக்கல்கள் ஏற்படும். அதனால் போலீஸால் தனக்கும் தொந்தரவு ஏற்படலாம். கொலைகாரன் ஒருவனுக்கு உடந்தையாக இருப்பதாகக் குற்றம் சாட்டி இன்ஸ்பெக்டர் தன்னைக் கைது செய்து கொண்டு போய்விடுவார்.
“டெலிபோனில் யாரோ உங்களை அவசரமாகக் கூப்பிடுகிறார்கள் போல் இருக்கிறது. என்னவென்று கவனியுங்கள்!” என்று சிரித்தார் இன்ஸ்பெக்டர் அருளானந்தம்.
உடம்பு ஐஸ்கட்டியைப்போல் ஜில்லிட்ட போதிலும், டெலிபோன் செய்திருப்பது யார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியத்தை உணர்ந்து ராஜா, எழுந்துபோய் ரிசீவரை எடுத்துப் பேசினான்.
“நான் ராஜாதான் பேசுகிறேன்.”
பானுவோ, நாதமுனியோ மறுமுனையில் பேசலாம் என்ற எண்ணத்துடன் ராஜா சற்று அழுத்தத்துடன் சொன்னான்.
“என்னுடைய குரலைக் கேட்டதும் பேசுவது யாராக இருக்கக் கூடும் என்பதைத் தெரிந்து கொண்டு இருப்பாய் என்று எண்ணுகிறேன்.”
அதே கனத்த குரல் தான்! முன்பு இரண்டு தடியர்களை எண்ணூர்க் கடற்கரைக்கு அனுப்பித் தன்னைக் கொலை செய்ய முயன்ற அதே மர்ம மனிதன் தான் மறுபடியும் டெலிபோனில் தன்னிடம் பேசுகிறான் என்பதை ராஜா புரிந்து கொண்டான். பிறகு அவன் கீழ்க்கண்ணால் இன்ஸ்பெக்டர் அருளானந்தத்தைப் பார்த்தான்.
அவர் அவனுடைய ஒவ்வொரு அசைவுகளையும் மிகவும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு இருந்தார்.
“தெரிந்து கொண்டேன் என்ன விஷயம்?” என்றான் டெலிபோனில் ராஜா.
“நான் அனுப்பிய இரண்டு ஆட்களையும் கடலில் பிடித்துத் தள்ளி நீ கொன்றுவிட்டாய். இருந்தாலும் பரவாயில்லை.”
என்னைப்பற்றி நீங்கள் நினைத்துக் கொண்டு இருப்பது தவறு. நான் அவ்விதம் ஒருபோதுமே நடந்து கொள்ளவில்லை. மற்றவர்களுக்கு கெடுதல் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் எனக்குக் கிடையாது!” என்றான் ராஜா.
இன்ஸ்பெக்டரை நினைத்துக் கொண்டதும் அவனுக்கு நெஞ்சு ‘திக் திக்’ என்று அடித்துக் கொண்டது. உடல் கனத்துக் கொண்டே வருவதைப் போன்றதொரு பிரமையும் தட்டியது.
இனி என்னென்ன விபரீதங்கள் நடைபெறப் போகின்றனவோ!
ஒருபுறம் போலீஸ் அதிகாரி! இன்னொருபுறம் பயங்கரத்தின் சின்னமான கொலைகாரன்!!
“நீ நல்லவனாக இருந்தால் எனக்கு மகிழ்ச்சி தான்!” என்று சொன்ன அந்த மர்ம மனிதன், “மறுபடியும் நான் உன்னுடன் பேரம் பேசத் தயாராக இருக்கிறேன்!” என்று சொன்னான்.
“நீங்கள் நல்லெண்ணத்துடன் நேசக்கரம் நீட்டினால் நானும் தயாராகவே இருக்கிறேன்” என்றான் ராஜா.
“ஆனால் நீ அந்த இரகசியக் காகிதங்களைத் தருவாய் என்று நான் எப்படி நம்புவது?”
“நீங்கள் என்னை நம்பித்தான் ஆகவேண்டும். சேதுபதி ‘சீல்’ போட்டு கொடுத்து விட்டுப்போன இரகசிய காகிதங்கள் என்னிடம் தான் இன்னும் இருக்கின்றன. நீங்கள் பணம் கொடுத்ததும் அக்காகிதங்களை எல்லாம் நான் படித்துப் பார்க்க முயலாமலே, அப்படியே அரக்கு முத்திரை ஸீலுடன் தீயில் போட்டு எரித்துச் சாம்பலாக்கி விடுவேன்” என்று சொன்ன ராஜா இன்ஸ்பெக்டர் அருளானந்தம் எல்லாவற்றையும் கிரகித்துத் தெரிந்து கொண்டு இருப்பாரோ என்று நினைத்துக் கலங்கினான்.
“நீ உறுதியாகச் சொல்லுவதை என்னால் நம்பாமல் இருக்க முடியவில்லை உன்னை முழுக்க முழுக்க நம்புகிறேன்”
“நீங்கள் முதலில் ஏற்பாடு செய்த விஷயம் நினைவு இருக்கிறது அல்லவா?”
“என் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட பிரச்சனை ஒன்றை அவ்வளவு விரைவில் மறந்து விடுவேனா என்ன? நான் ஒப்புக் கொண்டபடி இருபத்தி ஐயாயிரம் ரூபாய் தருவதற்குத் தயாராகவே இருக்கிறேன்” என்று சொன்ன அந்த மர்ம மனிதன், “நீங்கள் ரொம்பவும் நாணயத்துடன் நடந்து கொள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டான்.
“எவனைப் பற்றிய கவலை உங்களுக்கு கொஞ்சமும் வேண்டியதில்லை. நான் எக்காரணத்தைக் கொண்டும் சொன்ன சொல்லைத் தவற விட்டு விட மாட்டேன்! உங்கள் பணம் கிடைத்ததும், என்னிடம் சேதுபதி கொடுத்துவிட்டுப் போன காகிதங்களை எரித்துச் சம்பலாக்கி விடுகிறேன்!’ என்றான் ராஜா உறுதியோடு.
“அப்படியானால் சரி” என்று சொன்ன அந்த மர்ம மனிதன் ஒரு வினாடி நேரம் யோசிப்பதைப்போல் பேச்சை நிறுத்திவிட்டு மறுபடியும் பேசினான்.
“ரூபாய் இருபதி ஐயாயிரத்தை நான் எப்படி அனுப்ப வேண்டும்? பழைய ஏற்பாட்டின்படி தானே?” என்று மர்ம மனிதன் கேட்டான்.
“என்ன ஏற்பாடு அது”
“நூறு ரூபாய் நோட்டுகளாக இருபத்தி ஐயாயிரத்தை ஒரு கவருக்குள் போட்டு ஒட்டி சேதுபதியின் மனைவியான நித்தியகலாவின் பெயருக்கே விலாசமிட்டு போஸ்ட்மாஸ்டரிடம் பெற்றுக் கொள்ளும்படி போஸ்டாபீஸில் இன்று காலை பத்து மணிக்கு நாங்கள் கொடுத்து வைத்து விட்டுப் போகிறோம். நித்தியகலாவோ, நித்தியகலாவினால் அனுப்பப்படும் ஆளோ போஸ்டாபீஸுக்குச் சரியாக பத்து மணிக்குப் போனால் அந்தப் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்!”
மர்ம மனிதனின் இந்த ஏற்பாடு ராஜாவைப் பிரமிக்க வைத்தது. அந்த பயங்கர மனிதன் தன்னை எப்படி எப்படி எல்லாமோ வளைத்துக் கொள்கிறானே!
நித்தியகலாவின் பெயருக்கு அவன் ஏன் பணத்தை அனுப்ப வேண்டும்? அது பழைய ஏற்பாடாமே? ஏதாவது ஒரு பித்தலாட்டம் நடைபெற்று விட்டதா?
போலீஸ் அதிகாரி உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டு இருந்ததால் ராஜாவால் எந்த விளக்கத்தையும் மர்ம மனிதனிடம் நேரடியாகக் கேட்டுப் பெற முடியவில்லை. ஆனாலும் வேறு விதத்தில் சுற்றி வளைத்துக் கொண்டு பேசினான். எப்படியாவது விஷயத்தைக் கிரகித்துத் தெரிந்து கொண்டால் போதும் போல் அவனுக்கு இருந்தது.
“நேற்றிரவு சேதுபதி இறந்துவிட்டான் என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று ராஜா கேட்டான்.
“தெரியும்! அவனுடைய மனைவி நித்தியகலா தான் பணம் விஷயமாக எனக்கு நேற்றிரவு டெலிபோன் செய்து தன் பெயருக்கே பணத்தைக் கவரின் மூலம் போஸ்டாபீஸில் கொடுத்துவிட்டுப் போகும்படி சொன்னாள். அது உங்களுக்கும் சம்மதம் என்று சொன்னாள். அந்தப் பழைய ஏற்பாட்டின் படியே பணத்தைத் தபாலாக அனுப்பி விடுகிறேன். போஸ்டாபீஸுக்குப் போய் அதை வாங்கி நீங்கள் இரண்டு பேர்களுமாகச் சேர்ந்து அந்தத் தொகையை பகிர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் ஒரு நிபந்தனை என்னைப்பற்றி சேதுபதி சேகரித்து வைத்திருக்கும் செய்தியை உடனே தீயில் போட்டுப் பொசுக்கிவிட வேண்டும்!” என்றான் டெலிபோனில் அந்த மர்ம மனிதன்.
நித்தியகலா நடந்து கொண்ட விதம் ராஜாவுக்குப் பெரும் குழப்பத்தை உண்டு பண்ணிய போதிலும், இன்ஸ்பெக்டர் அருளானந்தம் எதையும் தெரிந்து கொள்ளக் கூடாது என்ற எண்ணத்துடன், “நீங்கள் எந்த ஏற்பாட்டைச் செய்தாலும் வரவேற்கிறேன். சரியாக பத்து மணிக்கு எப்படியும் அனுப்பி அந்த விவகாரத்தை முடித்து விடுங்கள்!” என்று சொன்னான்.
இதுவரையிலும் பேசாமல் உட்கார்ந்திருந்த இன்ஸ்பெக்டர் அருளானந்தம் ‘டெலிபோனை வைத்து விடாதீர்கள். நானும் சிறிது பேசவேண்டும்” என்று சொல்லிக் கொண்டே எழுந்து பரபரப்போடு வந்தார்.
ஆனால் ராஜா அதற்குள் “தேங்க் யூ!” என்று சொல்லிவிட்டு ரிசீவரை வைத்துவிட்டான்.
“உங்களைக் கொலை செய்ய முயன்ற ஒரு முரனுடன் தான் நீங்கள் பேசினீர்கள் என்று எனக்குத் தெரியும். அப்படி இருக்கும் போது எதனால் அர்த்தம் இல்லாமல் நடந்து கொள்கிறீர்கள்? என்னாலும் உங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்திருக்க முடியும்” என்றார் இன்ஸ்பெக்டர் அருளானந்தம்.
ராஜா பதில் பேசாமல் கையும் களவுமாகப் பிடிபட்டுவிட்ட குற்றவாளியைப் போல் ‘திரு திரு’வென்று விழித்தான்.
“பத்து மணிக்கு அந்த விவகாரத்தை எப்படியும் முடித்து விட வேண்டுமென்று அவனிடம் கூறினீர்களே, அது என்ன?” என்று கேட்டார் இன்ஸ்பெக்டர்.
“இப்பொழுது எதையும் நான் சொல்ல விரும்பவில்லை. விரைவில் கொலைகாரன் யார் என்பதைக் கண்டுபிடித்து உங்கள் கையில் ஒப்படைத்து விடுகிறேன்.”
“குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதும், அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பதும் எங்கள் பொறுப்பு நீங்கள் எங்களுடன் ஒத்துழைத்தாலேயே போதும்!”
“மன்னிக்கவும், நான் சில விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் வரையில் எதையும் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன்.”
“இப்பொழுது நீங்கள் யாருடன் பேசினீர்கள்?”
“முன்பின் அறிமுகம் இல்லாத ஒரு மனிதனுடன்!”
“என்னென்ன பேசிக் கொண்டீர்கள்?”
“எல்லாவற்றையும் தொகுத்து விரைவிலேயே உங்களிடம் தெரியப்படுத்துவேன்..”
“உங்களிடம் சேதுபதி எதைக் கொடுத்துவிட்டுப் போனான்? அதை நான் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.”
“அவர் எந்தப் பொருளையும் என்னிடம் தர வில்லை. எதையோ கொடுத்து விட்டுப் போனதாக வீண்
வதந்தி மட்டும் தான் கிளம்பி ருக்கிறது.”
“ஆனால் நீங்கள் டெலிபோனில் பேசியதைக் கவனித்தால், உங்களிடம் சேதுபதி ஏதோ ஒரு இரகசியப் பொருளைக் கொடுத்து விட்டுப் போய் கொலையுண்டு போய் இருப்பதாகவும், அந்தப் பொருளை நீங்கள் எரித்துச் சாம்பலாக்குவதற்காக கொலைகாரனிடம் பேரம் பேசுவதாகவும் தோன்றுகிறதே!” என்று இன்ஸ்பெக்டர் கேட்டார்.
“என்னிடம் சேதுபதி ஒன்றையும் கொடுத்து வைக்கவில்லை! அதனால் நான் எரிப்பதற்கு ஒன்றுமே இல்லை! இல்லாத ஒன்றை எரிப்பதற்காகத்தான் அந்த மர்ம மனிதன் எனக்குப் பணம் அனுப்பப்போகிறான்! அதைக் கொண்டே அவனை நான் மடக்கிப் பிடிக்க முயல்கிறேன்! நீங்கள் அனாவசியமாகக் குழப்ப வேண்டாம், சார்!” என்றான் ராஜா.
இன்ஸ்பெக்டர் அருளானந்தத்துக்கு கோபம் வந்து விட்டது. பூட்ஸ் காலால் தரையை மிதித்துக் கொண்டார்.
“யார் குழம்புவது என்பதை நித்தியகலா மயக்க மூர்ச்சை கலைந்து எழுந்தவுடனேயே தெரிந்து கொள்வீர்கள். உங்கள் கைகளுக்கே விலங்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.”
ராஜா சிரித்தான்.
இன்ஸ்பெக்டர் அருளானந்தம் அவனிடம் ஏதேதோ கேட்டார். பதிலுக்கு ராஜா ஏதேதோ உளறினானே தவிர, உண்மையை ஒரு போதுமே சொல்ல வில்லை.
கடைசியில் இன்ஸ்பெக்டர் அருளானந்தம் அவன் மீது கருவிக் கொண்டே வெளியே போனார்.
15. போலீஸ் உத்தரவு!
மர்ம மனிதனுடன் டெலிபோனில் நித்தியகலாவும் பேசியிருக்கிறாள் என்பதையும், அவனிடம் இருபத்தி ஐயாயிரம் ரூபாய் கேட்டு இருக்கிறாள் என்பதையும் நினைத்தபோது ராஜா இந்த உலகத்தில் யாரையுமே நம்ப முடியாத நிலையில் தத்தளித்தான்.
நித்தியகலாவும் பணத்துக்காக ஆசைப்பட்டு ‘பிளாக் மெயில்’ பண்ணுகிறாளா? பிறரை ஏமாற்றித்தானே இந்தக் காலத்தில் சொகுசாக வாழ்க்கை நடத்த முடிகிறது!
மிகவும் கவலையடைந்த ராஜா, இனி நித்தியகலா மயக்கம் கலைந்து எழுந்த பிறகு, எல்லாவற்றையும் தன் காரியதரிசினி பானு மூலமாகத் தெரிந்து கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் அன்றைக்கு காலையில் வெளி வந்த எல்லா பத்திரிகைகளையும் புரட்டிப்பார்த்தான்.
சேதுபதி வேலை செய்து வந்த ‘கலைத் தூதன்’ பத்திரிகை கறுப்பு பார்டர் போட்டு அவனுடைய மரணத்தைப் பற்றி துக்ககரமான செய்தி வெளியிட்டு இருந்தது.
அதன் அடியில் இன்னொரு முக்கியமான அறிவிப்பையும் அந்தப் பத்திரிகை வெளியிட்டு இருந்தது.
அதாவது சேதுபதியைக் கொலை செய்த கொலைகாரனைக் கண்டுபிடித்து போலீஸில் ஒப்படைப்பவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அன்பளிப்பு கொடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தனக்கு விரைவில் அந்த பத்தாயிரம் ரூபாயும் கிடைத்து விடும் என்று ராஜா எண்ணிக் கொண்டான். கதை எழுதாமல் அலைந்து கொண்டு திரிவதற்கு இந்தச் சன்மானமாவது கிடைக்கட்டுமே!
ராஜா சீக்கிரமாகக் குளித்து உடை மாற்றிக் கொண்டு சேதுபதி வேலை பார்த்து வந்த ‘கலைத் தூதன்’ பத்திரிகை அலுவலகத்திற்கு வந்து ஆசிரியர் மாதவனைச் சந்தித்தான்.
“வாருங்கள்…வாருங்கள்…” என்று எழுந்து நின்றபடி கூவி வரவேற்ற பத்திரிகை ஆசிரியர் மாதவன், “உட்காருங்கள்!” என்று கைகளை நீட்டி அமர்த்தினார்.
ராஜா புன்முறுவல் பூத்தபடி அவர் மேஜையை ஒட்டிக் கிடந்த நாற்காலியில் அமர்ந்தான். அவனுடைய வலது கை மேஜையின் மீது கிடந்த பேப்பர் வெயிட்டை உருட்டியது.
“இன்று காலையில் நீங்கள் இரண்டு முரடர்களிடம் இருந்து உயிர் தப்பியதாகச் செய்தி வந்தது. உங்கள் நல்ல குணம் தான் உங்களைக் காப்பாற்றி இருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.”
ராஜா நன்றி தெரிவிப்பதைப் போல் முறுவலித்து விட்டு “எனக்கு வந்த ஆபத்தைக்கூட நான் பெரிதுபடுத்த வில்லை. ஆனால் எங்கள் ‘வாட்ச்மேன் ஜம்புலிங்கம் கொலை செய்யப்பட்டது தான் மிகுந்த கவலையைத் தந்து இருக்கிறது” என்று கவலையோடு சொன்னான்.
“அவனைப் பற்றிய செய்திகள் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள். நம்முடைய பத்திரிகையில் பிரமாதமாக வெளியிட்டு விடுகிறேன்.”
“இப்பொழுது நான் எதையுமே தெரியப்படுத்த விரும்பவில்லை” என்று சொன்ன ராஜா. “ஒரு முக்கிய தகவலை உங்களிடமிருந்து தெரிந்து போக வந்தேன்” என்றான்.
“என்ன தகவல்? என்னால் முடிந்தால் நிச்சயமாகக் கொடுப்பதற்குத் தயாராக இருக்கிறேன்!” என்று சொன்னார் ஆசிரியர் மாதவன்.
“நேற்றிரவு சேதுபதி உங்களுக்கு டெலிபோன் செய்ததாகக் கேள்விப்பட்டேன். அவர் என்னென்ன உங்களிடம் சொன்னார் உங்கள் பத்திரிகையில் அவர் வேலை செய்து வந்ததால் எதையும் மறைக்காமல் மனம் விட்டுப் பேசியிருக்க வேண்டுமே!”
ராஜா, கொலைகாரனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறான் என்பதையும், பத்தாயிரம் ரூபாய் பரிசைத் தட்டிக் கொண்டு போய் விடுவான் என்பதையும் ஆசிரியர் மாதவன் தெரிந்து கொண்டார்.
“நேற்றிரவு எனக்கு சேதுபதி இங்கே டெலிபோன் செய்தபோது நான் வெளியே போயிருந்தேன். சுமார் பத்தரை மணிக்கு நான் திரும்ப வந்தபோது டெலிபோன் ஆபரேட்டர் என்னிடம் வந்து சேதுபதி உடனடியாக டெலிபோன் செய்யும்படிச் சொன்னதாகத் தெரியப் படுத்தினான். நான் சற்றும் தாமதிக்காமல் அவனுக்கு டெலிபோன் செய்தேன் ஆனால் அவனுடைய வீட்டில் டெலிபோன் மணி தான் இடைவிடாமல் அடித்துக் கொண்டு இருந்ததே தவிர யாருமே டெலிபோனை எடுத்துப் பேச முன்வரவில்லை. பிறகு பதினொரு மணிக்கு டெலிபோன் செய்தேன். அப்பொழுதும் இதே நிலைமை தான் ஏற்பட்டது. யாருமே டெலிபோனை எடுத்துப் பேசவில்லை!” என்றார் மாதவன்.
“ஆபரேடர் வேறு ஏதாவது உங்களிடம் சொன்னாரா?”
“சொல்லவில்லை.”
“இப்பொழுது அந்த ஆபரேட்டருடன் நான் பேசலாமா?’
“நேற்றைக்கு அவனுக்கு இரவு ‘டூட்டி’ என்பதால் பகலில் வரமாட்டான் மறுபடியும் ஆறு மணிக்கு வந்தால் அவனைப் பார்த்துப் பேசமுடியும்.”
“இன்னொரு விஷயத்தையும் உங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். சேதுபதி சேகரித்து வைத்திருந்த இரகசிய செய்தியைப்பற்றி சக நிரூபரான வீரமணி உங்களிடம் ஏதாவது சொல்லி இருக்கிறாரா?”
வீரமணியும் சேதுபதியும், கலைத்தூதன் பத்திரிகையில் வேலை பார்த்து வந்தவர்கள் என்பதால், எல்லா விபரங்களையும் ஆசிரியர் மாதவன் தெரிந்து வைத்து இருப்பார் என்று ராஜா எண்ணிக் கொண்டான்.
“வீரமணியும், சேதுபதியும் நண்பர்கள் ஆகியதால், சேதுபதி எதற்காக எனக்கு அவசரம் அவசரமாக டெலிபோன் செய்தான் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக நான் வீரமணிக்கு டெலிபோன் செய்தேன்” என்றார் மாதவன்.
“அப்புறம்? நீங்கள் டெலிபோன் செய்தபோது வீரமணி வீட்டில் தான் இருந்தாரா?”
“ஆமாம்”
“என்ன சொன்னார்? நீங்கள் டெலிபோன் செய்து சேதுபதியைப் பற்றி விசாரித்ததும்?”
“சேதுபதி கோபத்துடனேயே நேற்றிரவு குமுறிக் கொண்டு இருந்தானாம். அவனால் ஓரிடத்தில் நின்று கொண்டு இருக்கவும் முடியவில்லையாம். அளவுக்கு மீறி குடித்து இருந்ததால் தள்ளாடினானாம்.’
“வீரமணியிடம் சேதுபதி என்ன சொன்னார்?”
“சேதுபதி ஏன் அப்படி இருந்தான் என்பதை வீரமணியால் சரிவரப் புரிந்துகொள்ள முடியவில்லையாம்”
“நீங்கள் டெலிபோன் செய்தபோது சேதுபதி எதனால் பேசவில்லையாம்? அப்பொழுது வீட்டில் தானே சேதுபதி இருந்திருக்க வேண்டும்?”
“நீங்கள் சொல்லுவது உண்மை தான்! அது தான் வீரமணிக்கும் ஆச்சரியமாக இருக்கிறதாம். நான் டெலிபோன் செய்த அதே நேரத்தில் சேதுபதி வீட்டில் தான் இருந்திருக்க வேண்டும் என்று வீரமணி உறுதியாக நம்புகிறான்.”
“அந்த நம்பிக்கை வீரமணிக்கு எப்படி வந்தது?”
“இரவு பத்து மணிக்கு முன்னால் சேதுபதி நடந்து வீட்டுக்குப் போனதை வீரமணி பார்த்தானாம். அப்பொழுது சேதுபதி வீட்டுக்குத் தான் போய்க் கொண்டு இருப்பதாகத் தெரியப் படுத்தினானாம்.”
பத்திரிகை ஆசிரியரான மாதவனும் இப்படிச் சொன்னது ராஜாவுக்கு வியப்பைத் தந்தது.
ராஜாத்தியின் வீட்டிலிருந்து கிளம்பும் போதும் சேதுபதி தன்னுடைய வீட்டுக்குப் போகப் போவதாகத் தான் சொல்லி இருக்கிறான். அதே வார்த்தைகளைத் தான் வீரமணியிடமும் வழியில் வைத்துத் தெரியப்படுத்தி இருக்கிறான்.
அப்படியானால் அவர்களிடம் நேரில் சொன்னபடி சேதுபதி ஏன் வீட்டுக்குப் போகவில்லை? அவன் வேறு எங்கே போய்விட்டான்? அகிலாண்டம் அம்மாளும் சேதுபதி தன் வீட்டுக்குப் போவதைப் பார்த்ததாகச் சொன்னாளே; அதன் மர்மம் என்ன?
ராஜாவுக்கு எதுவுமே புரியவில்லை. மண்டைக்குள் சூடு ஏறுவதைப் போன்ற உஷ்ண உணர்ச்சி பொங்கியது.
“இப்போது வீரமணி ஆபீஸுக்கு வந்து விட்டாரா?”
“அவன் எப்பொழுதோ வந்துவிட்டானே!” என்று சொன்ன ஆசிரியர் மாதவன், “வீரமணி!’ என்று கூப்பிட்டார்.
பின்னால் பலகைகளினால் மறைக்கப்பட்டு இருந்த ஓர் அறையின் உள்ளே இருந்து வீரமணி பைஜாமா ஜிப்பா சகிதம் கையில் பேனாவைப் பிடித்த படியே வந்தான்.
“உட்கார் வீரமணி! உன்னிடம் ராஜா சார் பேச வேண்டும் என்று சொல்லுகிறார்.”
வீரமணி பேனாவை மூடி ஜிப்பா பாக்கட்டினுள் குத்திவிட்டு அமர்ந்தான்.
ராஜா அவன் முகத்தை உன்னிப்பாக ஆராய்ந்தான். முதல் தடவையாக அவன் தன்னுடைய வீட்டுக்கு வந்ததும். தன்னிடம் பேசி விட்டுப்போன வாசகங்களும் நினைவில் வந்து நின்றன.
அந்த வாசகம்:–“சேதுபதி உங்களிடம் ஒரு விஷயத்தைச் சொல்ல வந்தான் அல்லவா? அந்த விஷயத்தில் எனக்கும் பங்கு இருக்கிறது. ஒரு பெரிய மனிதரைப் பற்றிய அந்தரங்க செய்திகளைச் சேகரித்து வைத்து இருப்பதாக அவன் உங்களிடம் சொல்லி இருப்பான். அந்த செய்தி உண்மையானது தான். ஆனால் அந்தச் செய்திக்கும் அவனுக்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது. நான் தான் அந்தச் செய்தியைச் சேகரிப்பதற்குக் காரணமாக இருந்தேன். நான் தான் அந்தச் செய்திக்குச் சொந்தக்காரன்! ஆனால் அந்தச் செய்தி சம்பந்தப்பட்ட ஆதாரக் காகிதங்கள் எல்லாம் சேதுபதியிடம் தான் இப்போது சிக்கிக் கொண்டு இருக்கின்றன.
மேலும் வீரமணி சொன்னது அவனுடைய நினைவைத் தாக்கியது.
“நான் அந்த விஷயத்தைச் சொல்லத்தான் நினைத்தேன். ஆனால் அதைச் சொல்லக்கூடாது என்று என் மனச்சாட்சி கட்டளையிடுகிறது. சேதுபதி மிகவும் ஆபத்தான நிலைமையில் சிக்கிக் கொண்டு இருக்கிறான். அவனுடைய மனைவி நித்தியகலா தன் கணவன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று அழுது கொண்டே இருக்கிறாள். அவளுடைய கண்ணீரைக் கண்டு இரக்கப்பட்டே இங்கே நான் ஓடி வந்தேன்.”
“…அதே நேரத்தில் அவள் தன் கணவனுக்கு எந்த விதமான ஆபத்தும் வந்து விடக்கூடாது என்று சதாவும் கடவுளையே வேண்டிக் கொண்டு இருக்கிறாள். அவனுக்கு ஏதாவது நிகழ்ந்து விட்டால் அந்த இடத்திலேயே மனைவியின் உயிர் பிரிந்து விடும்!” இவ்வாறு வீரமணி முன்பு கூறியவற்றைப் பற்றியே ராஜா, சிந்தித்துக் கொண்டு இருந்தான்.
மௌனமாக உட்கார்ந்து இருக்கும் ராஜாவையும், ஆசிரியர் மாதவனையும் மாறி மாறிப் பார்த்த வீரமணி, “என்னை ஏன் இங்கே வரும்படி சொன்னீர்கள்?” என்று கேட்டான்.
“நேற்றிரவு நீங்கள் எத்தனை மணிக்கு சேதுபதியைச் சந்தித்தீர்கள்? இன்ஸ்பெக்டர் அருனானந்தத்திடம் எல்லாவற்றையும் விபரமாகச் சொல்லி விட்டீர்களாமே!” என்றான் ராஜா தன்னுடைய சிந்தனைகளைக் கலைத்து ஒரு நிலைக்குக் கொண்டு வந்தபடியே!
“சுமார் பத்து மணிக்கு மேல் இருக்கும் என்று நினைக்கிறேன். சேதுபதி தன் வீட்டுக்குப் போகும் வழியில் அவனைச் சந்தித்தேன்!” என்று சொன்னான் வீரமணி.
“என்ன பேசிக் கொண்டீர்கள்?”
“குடிபோதையில் சேதுபதி இருந்ததால் வீட்டுக்குப் போய் பத்திரமாகப் படுத்துக் கொள்ளும்படி சொன்னேன்”.
“உடனே அவர் போய்விட்டாரா?”
“ஆமாம், தள்ளாடியபடியே வீட்டை நோக்கி நடந்து போனார்.”
“அன்றிரவு சேதுபதியின் இரகசியக் காதலியான ராஜாத்தியின் வீட்டுக்கு நீங்கள் டெலிபோன் செய்தீர்களா?”
“ஆமாம்!”
“அப்பொழுது எத்தனை மணி இருக்கும்”
“சுமார் ஒன்பது மணி இருக்கலாம்.”
“வீட்டில் சேதுபதியும் இருந்திருப்பார், இல்லையா?”
“நான் ராஜாத்தியுடன் தான் பேசினேன். அப்பொழுது சேதுபதி வீட்டினுள் இருந்தாரா, இல்லையா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் நான் ராஜாத்தியிடம் சேதுபதியைப் பற்றிக் கேட்ட போது, இதுவரையிலும் அவனைப் பார்க்கவே இல்லை என்று கூறினாள்.”
“ராஜாத்தி வேண்டுமென்றே உங்களிடம் பொய் சொல்லி இருக்கிறாள்” என்று சொன்ன ராஜா, அவன் முகத்தைப் பார்த்தான்.
“அவள் பொய் சொன்னாளா உண்மையைச் சொன்னாளா என்று எனக்குத் தெரியாது. நான் டெலிபோனில் விசாரித்த போது சேதுபதியை இரவு ஒன்பது மணி வரையில் பார்க்கவே இல்லை என்று ராஜாத்தி சொன்னாள்! உண்மை கடவுளுக்குத் தான் வெளிச்சம்!” என்றான் வீரமணி.
“அதிருக்கட்டும். நீங்களும் சேதுபதியும் பத்து மணிக்கு மேல் வழியில் வைத்து சந்தித்த விபரத்தைச் சொல்லுங்கள்”
ஆசிரியர் மாதவன் இரண்டு பேர்களுடைய உரையாடல்களையும் அக்கரையோடும் ஆர்வத்தோடும் கவனித்துக் கொண்டு இருந்தார். அதனால் பத்திரிகைக்கும் முக்கியமான தீனி கிடைக்கும் அல்லவா?
வீரமணி தோள் பட்டையைக் குலுக்கிக் கொண்டு பேசலானான்.
“நான் என்னுடைய காரில் வந்து கொண்டு இருந்தேன். அப்பொழுது சேதுபதி குடிபோதையோடு தள்ளாடித் தள்ளாடி நடந்து கொண்டு இருந்தான். உடனே காரை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு நான் இறங்கிச் சென்று அவனுக்குத் துணையாக வீடு வரையில் வருவதாகச் சொன்னேன். அவன் தனக்கு மதுவைத் தவிர வேறு எதுவுமே துணையாக வேண்டாம் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டான். மேலும் அவன் அந்த நேரத்தில் தனிமையைத் தான் விரும்பினான். என்னை அவன் நண்பன் என்று கூட மதிக்கவில்லை.”
“எதனால் அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்தவரைப் போல் பேசினார்?” என்று ராஜா கேட்டான்.
வீரமணி பேசத்தகாத ஒரு விஷயத்தைச் சொல்லப் போவது போல் முகத்தைச் சுழித்துக் கொண்டு பேசினான்.
“அவன் வெறிபிடித்தவனைப் போல் நாதமுனியைத் தேடி அலைந்து கொண்டு இருக்கிறானாம். நாதமுனி யாராலும் மன்னிக்க முடியாத மாபெரும் துரோகத்தை அவனுக்குச் செய்துவிட்டானாம். தன்னுடைய இந்த நிலைக்கு அவன் தான் காரணமாம்! நாதமுனி மட்டும் இந்த உலகத்தில் பிறக்காமல் இருந்திருந்தால் சேதுபதி எவ்வளவோ மனநிம்மதியுடன் இருந்து இருப்பானாம்.”
“நாதமுனியின் மீது அவருக்குக் கடுமையான ஆத்திரம் இருப்பதை நீங்கள் தெரிந்து கொண்டு இருப்பீர்கள் இல்லையா?”
“ஆமாம்! நாதமுனி என்ற பெயரைச் சொன்ன உடனேயே சேதுபதி தன் பற்களை ‘நறநற’வென்று கடித்தான்”
“அதனால் நீங்கள் அவரை உடனடியாக வீட்டுக்குப் போகும் போது நாதமுனியும் அவருடைய மனைவி நித்தியகலாவும் ஒரே கட்டிலில் சயனித்துக் கொண்டு இருக்கும் காட்சியைப் பார்க்கக் கூடும் என்று சொன்னீர்கள் இல்லையா?”
அதைக் கேட்டதும் வீரமணிக்குக் கோபம் பொங்கியது: “நான் உங்களைப்போல் நடந்து கொள்வேன் என்று நினைக்க வேண்டாம். நாதமுனியும் நித்தியகலாவும் தவறு செய்தால் கூடப் புத்தி சொல்லி திருத்துவதற்கு முயற்சி செய்வேனே தவிர, ஒரு போதுமே அவர்களைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்.”
“நீங்கள் காட்டிக் கொடுத்து விடுவீர்கள் என்று நான் குற்றம் சாட்டவில்லை. சேதுபதியும் உங்கள் நண்பர். எனவே அவருக்குத் துரோகம் செய்ய மனம் வராமல் இருந்து இருக்கலாம்” என்று சொன்ன ராஜா, “சேதுபதி வீட்டுக்குப் போனதும் நாதமுனி உள்ளே இருப்பதைப் பார்ப்பார் என்று நீங்கள் நினைத்து இருக்கலாம் இல்லையா?’ என்றான்.
“நான் எதைப் பற்றியும் நினைக்கவில்லை. உங்களுக்கு நாதமுனி- நித்தியகலா விஷயம் புதிதாக இருக்கலாம். ஆனால் அது எங்களைப் பொறுத்த வரையில் மிகமிகப் பழையது. அவர்கள் இரண்டு பேர்களும் கள்ளக் காதலர்கள் என்பது எல்லோருக்குமே தெரியும்.”
“உங்களுக்கும் அவர்கள் கள்ளக்காதலர்கள் என்று தெரியும் அல்லவா?”
“தெரியாமல் என்ன? நேற்றிரவு கூட நாதமுனியின் மோட்டார் கார் நித்தியகலாவின் வீட்டுக்கு வெளியே சற்றுத் தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததைக் கவனித்தேன்.” என்றான் வீரமணி.
“அதிருக்கட்டும், வீரமணி! ஒரு மர்மமான பெரிய மனிதனைப் பற்றிய இரகசியங்களை ஆதாரங்களோடு சேதுபதி சேகரித்து வைத்து இருந்தானல்லவா?” என்று கேட்டான் ராஜா.
“ஆமாம்! அந்த இரகசிய தஸ்தாவேஜுகளைச் சேதுபதி கைப்பற்றுவதற்கு நான் தான் உதவி புரிந்தேன். ஆனால் அவற்றை நான் படித்துப் பார்க்காததால் அதைப்பற்றி ஒன்றுமே எனக்குத் தெரியாது! ஆனால் அதை வைத்துக் கொண்டு சேதுபதி எங்கள் கலைத்தூதன் பத்திரிகைக்கு சூடான செய்திகள் தொகுத்துக் கொடுப்பான் என்று நினைத்தேன். ஆனால் சேதுபதி அப்படிச் செய்யாததால் அந்த இரகசியங்களை அவன் பிறருக்கு விற்றுப் பணம் பறிக்க முயல்வது சுத்த கீழ்த்தரமான புத்தியென்று நேற்றிரவு அவனைத் திட்டினேன். அவளும் என்னைத் திட்டினாள். அந்த ஆத்திரத்தில் தான் அவனுடைய மனைவியையும் நாதமுனியையும் பற்றி நான் ஏதோ ஏளனமாகச் சொன்னேன்!” என்றான் வீரமணி.
“சேதுபதியிடம் பேசியதும் உடனே நீங்கள் உங்களுடைய காரை ஓட்டிக் கொண்டு போய் விட்டீர்களா?”
“ஆமாம்!”
“இன்று அதிகாலையில் ராஜாத்தி உங்களுக்கு டெலிபோன் செய்தாள் அல்லவா?”
வீரமணி தன்னை அவன் தொந்தரவு செய்கிறானே என்பதை உணர்ந்து முகத்தைச் சுழித்துக் கொண்டு, ”அவள் எனக்கு டெலிபோன் செய்தது உண்மை தான். ஆனால் நீங்கள் என்னையும் ராஜாத்தியையும் பற்றி வித்தியாசமாக மட்டும் நினைத்து விடாதீர்கள் சேதுபதியின் நண்பன் என்ற முறையில் மட்டுமே ராஜாத்தியிடம் எனக்குப் பழக்கம் உண்டு. சேதுபதி இறந்து விட்டார் என்பதை அவள் உங்கள் மூலம் தெரிந்து கொண்டதும் பயந்து போய் உடனே எனக்கு டெலிபோன் செய்தாள்” என்று சொன்னான்.
“அந்த ராஜாத்தி இன்னும் இன்னும் சில விஷயங்களையும் உங்களிடம் சொல்லி இருக்க வேண்டுமே! நேற்றிரவு சேதுபதி அவளுடன் நீண்ட நேரத்தைக் கழித்ததாகவும், சேதுபதி ‘பிளாக் மெயில்’ பண்ணி பணம் பறிக்கப் போவதாகச் சொன்னபோது அவருடைய திட்டத்தை ராஜாத்தி கடுமையாக எதிர்த்ததாகவும், பிறகு திட்டத்துக்கு ஒத்துழைப்புக் கொடுக்காமல் இருக்கவே பத்து மணிக்கு சேதுபதி அவளுடைய வீட்டை விட்டு வெளியே போனதாகவும் சொல்லி இருப்பாளே!”
“என்னிடம் ராஜாத்தி எதையும் சொல்லவில்லை!’ என்று அதிர்ச்சி அடைந்தவனைப் போல் சொன்ன வீரமணி, “இந்த விபரங்களை எல்லாம் அவள் வெளிப்படையாகவே உங்களிடம் சொன்னாளா?” என்று கேட்டான்.
“என்னிடம் ராஜாத்தி மனம் விட்டுப் பேசினாள்!” என்றான் ராஜா.
இந்த சமயத்தில் ஆசிரியர் மாதவன் குறுக்கிட்டார்.
“நீங்கள் பேசும் இந்த ராஜாத்தி இன்னார் என்று எனக்குத் தெரியவில்லையே!”
“சேதுபதியை அங்குமிங்குமாக அலையவிட்டு வேடிக்கை பார்த்தவர்களில் அவளும் ஒருத்தி. அவருக்கு அவள் ஆசை நாயகியாகவும் இருந்தாள். சேதுபதி பண ஆசை பிடித்து அலைந்து கொண்டு இருந்ததற்கு அவள் தான் முக்கிய காரணம்!” என்றான் ராஜா.
“அப்படியா வீரமணி?” என்று ஆசிரியர் மாதவன் கேட்டார்.
“ராஜாத்தி இளமை வேகம் உள்ளவள் என்பதும், சேதுபதியை முறையோடு மணந்து கொண்டு கணவன் -மனைவியாக வாழத் துடித்தாள் என்பதும் உண்மை தான். நித்திய கலாவை விவாகரத்து செய்து விட்டுத் தன்னை மனைவியாக ஏற்றுக் கொள்ளும்படி சேதுபதியை ராஜாத்தி வற்புறுத்தி இருக்கலாம்.”
வீரமணி இப்படிச் சொன்னதும், எவ்வளவு மோசமான பெண்களாக நித்தியகலாவும் ராஜாத்தியும் இருந்து இருக்கிறார்கள் என்று ஆசிரியர் மாதவன் நினைத்துக் கொண்டார்.
“சேதுபதி எதற்காக சதாவும் பணம் பணம் என்று பறந்து கொண்டு இருந்தான் என்பது இப்பொழுது தான் எனக்கு விளங்குகிறது ஒரு மனைவியைச் சமாளிப்பதே இந்தக் காலத்தில் கடினம்! அப்படி இருக்கும் போது ஆடம்பரத்துடன் வாழும் இன்னொரு பெண்மணியையும் ஆசை நாயகியாக வைத்துப் போஷிப்பது என்பது எளிதான காரியமா? இரண்டு பெண்களு மே அவனைப் பம்பரம் போல் ஆட்டிப் படைத்து இருப்பார்கள்!’ என்றான் ராஜா.
“எனக்கு அவர்களுடைய குடும்ப அந்தரங்க விஷயங்கள் எல்லாம் அதிகமாகத் தெரியாது. சேதுபதி நிம்மதி இல்லாமல் தவித்துக் கொண்டு இருந்தான் என்பது மட்டும் உண்மை” என்றான் வீரமணி.
“அதிருக்கட்டும், வீரமணி! நேற்றிரவு பத்து மணி சுமாருக்கு சேதுபதியை நீங்கள் சந்தித்துப் பேசியபோது கடைசியாக சேதுபதி உங்களிடம் என்ன சொன்னார்-அதாவது மர்ம மனிதனின் இரகசியங்களைப் பற்றி சேதுபதி என்ன சொன்னார்?” என்று ராஜா கேட்டான்.
“சேதுபதிக்கு ஏதோ திடீரென மனமாற்றம் ஏற்பட்டு இருக்கிறது! நான் சொன்ன புத்திமதிகளாலே அந்த மனமாற்றம் ஏற்பட்டு இருக்கக்கூடும்! அதன் விளைவா 5 மர்ம மனிதனின் இரகசியம் பற்றிய ஆதாரக் குறிப்புகளை எல்லாம் எங்கள் ‘கலைத் தூதன்’ பத்திரிகையில் சூடான செய்திகளாகப் பிரசுரிக்கக் கொடுக்கப் போவதாகவும், தன் வீட்டிற்குப் போய் எங்கள் ஆசிரியரை டெலிபோனில் கூப்பிட்டு அது சம்பந்தமாகப் பேசப் போவதாகவும் சொல்லி விட்டுப் போனான். ஆனால் அப்படிப் போனவன் திடீரென்று செத்து விட்டதால் எங்கள் பத்திரிகைக்குத் தான் பெரும் நஷ்டம் ஏற்பட்டு விட்டது!” என்றான் வீரமணி.
“உங்கள் துணை ஆசிரியர்களில் ஒருவரான சேதுபதி கொலை செய்யப்பட்டார் என்பதால் கொலை காரனைக் கண்டுபிடித்து தண்டனை வாங்கிக் கொடுப்பதில் அதிக அக்கறை காட்டுவீர்கள் என்று நம்புகிறேன்!” என்று ராஜா ஆரம்பித்தான்.
“அது இயல்பு தானே!” என்றார் ஆசிரியர் மாதவன்.
“அப்படியானால் சரி, சேதுபதி எப்படி நடந்து கொள்வார்? வேலை விஷயத்தில் கரெக்டா?”
“சேதுபதி ஒழுங்காக நடந்து கொடுத்த வேலையைச் செய்து முடிப்பான் என்று தான் சொல்ல வேண்டும். அவன் தேனீயைப் போன்றவன். மிகவும் சுறுசுறுப்பாக வேலை செய்வான்.”
ஆசிரியர் மாதவன். இறந்துபோன சேதுபதியைப் பற்றி உயர்வாகப் பேசிக் கொண்டு இருந்தபோது, ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரும், இரண்டு கான்ஸ்டேபிள்களும் ‘தள்ளு’ கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்தார்கள்.
“உங்களுக்குச் சிரமம் கொடுப்பதற்காக மன்னிக்கவும். இங்கே வீரமணி என்று….”
சப்-இன்ஸ்பெக்டர் சொல்லிவிட்டு எல்லோரையும் கேள்விக் குறியுடன் பார்த்தார்.
“நான் தான் வீரமணி! என்ன விஷயம்?” என்று கேட்ட வீரமணி, நாற்காலியை விட்டு எழுந்து நின்றான்.
“உம்மைக் கையோடு அழைத்து வரும்படி போலீஸ் மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்திருக்கிறது” என்று சொன்ன சப்-இன்ஸ்பெக்டர் ஆசிரியர் மாதவனிடம் அனுமதி கேட்டார்.
வீரமணி கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளானான். போலீஸ் மேலிடத்தில் இருந்து தன்னைக் கையோடு அழைத்து வரும்படி உத்தரவு பிறப்பித்து இருக்கிறது என்றால்…?
“நான் எங்கே வேண்டுமானாலும் வருவதற்குத் தயாராக இருக்கிறேன்” என்று சொன்ன வீரமணி, ஆசிரியர் மாதவனிடம் அனுமதி பெற்றுக் கொண்டு வெளியே புறப்பட்டான்.
அவனுக்குப் பின்னால் போலீஸ்காரர்களும், சப்-இன்ஸ்பெக்டரும் கம்பீரமாக நடந்து சென்றார்கள்.
அவர்கள் ‘தள்ளு’ கதவுக்கு வெளியே போனதும், ‘நானும் போலீஸ்’ ஹெட் குவாட்டருக்குப் போய் விட்டு வரலாம் என்று நினைக்கிறேன். வீரமணியை போலீஸார் என்ன செய்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று சொல்லிவிட்டு ராஜாவும் எழுந்தான்.
ஆசிரியர் மாதவன் மிகவும் குழம்பிப்போய் இருந்தார். போலீஸார் எதற்காக வீரமணியை அழைத்துக் கொண்டு போகிறார்கள் என்பது இன்னும் அவருக்குப் புரியவில்லை.
“ஏதாவது முக்கியமான விஷயம் இருந்தால் உடனே எனக்கு டெலிபோன் செய்யுங்கள். ஏற்கனவே ஒரு உதவி ஆசிரியரை இழந்தேன். மறுபடியும்…” என்று நிறுத்தினார் ஆசிரியர் மாதவன்.
ராஜா டெலிபோன் செய்து விபரம் தெரிவிப்பதாகக் கூறி விட்டு வேகமாக வெளியே போனான்.
– தொடரும்…
– சொட்டு ரத்தம் (மர்ம நாவல்), முதற் பதிப்பு: 1966, பிரேமா பிரசுரம், சென்னை.