செல்லாத ஓட்டுகள்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 5, 2019
பார்வையிட்டோர்: 20,881 
 
 

அரவிந்தன் மாநிலத்திலேயே மிகச் சிறந்த அரசியல் பேச்சாளன். அந்ததொகுதியில் இடைத் தேர்தல். இரண்டு முக்கிய கட்சிகள் நேரிடைப் போட்டி!

ஒரு கட்சி சார்பாக அந்த நகரத்தில் வாக்கு சேகரிக்க அரவிந்தன் வருகை தந்திருந்தான்.

உள்ளூரைச் சேர்ந்த சில கட்சித் தொண்டர்களோடு, அரவிந்தன் காரில் முக்கிய வீதிகளில் பிரச்சாரம் செய்து கொண்டே வந்தான். பிரச்சார வேன் தொழிலதிபர்கள் வாழும் நகர்,ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். ,டாக்டர்கள், லாயர்கள், உயர் அதிகாரிகள் வசிக்கும் முக்கியமான காலனிகள் என்று தோழர்கள் சொன்ன இடங்களில் எல்லாம், “இங்கும் எந்தப் பிரச்சாரமும் வேண்டாம்! வேனை வேறு பகுதிக்கு விடுங்கள்!..” என்று சொல்லிக் கொண்டே வந்தான்.

குடிசைகள் நி்றைந்த குப்பங்கள், ஏழைத் தொழிலாளர்கள் நிறைந்த பகுதிகளாகத் தேர்ந்தெடுத்துப் பிரச்சாரம் செய்தான். டாஸ் மாக் கடைகள், தொழிற் சங்கக் கொடிகள் நிறைய பறக்கும் பகுதி, சினிமா ரசிகர்கள் மன்றம் நிறைந்த பகுதிகளிலும் வேனை நிறுத்தச் சொல்லிநீண்ட நேரம் பிரச்சாரம் செய்தான்.

பிரச்சாரம் முடிந்து மாலை கட்சி அலுவலத்திற்கு திரும்பினார்கள்.அங்கு வேட்பாளர் அரவிந்தன் வருகைக்காக காத்திருந்தார்.

“…நீங்க தொழில் அதிபர்கள், டாக்டர்கள், லாயர்கள், உயர் அதிகாரிகள் குடியிருந்த பகுதியில் எல்லாம் பிரச்சாரம் செய்வதை தவிர்த்து விட்டதாக தோழர்கள் சொல்கிறாங்க?…ஏன் சார்?..” என்று வேட்பாளரே கேட்டார்!

“ நம் நாட்டில் மொத்த வாக்குப் பதிவில் சுமார் 20%வாக்குகள் பதிவாவது இல்லை! அப்படி தங்கள் வாக்குரிமையைச் செலுத்தாதவர்கள் தான் இந்த டாக்டர்கள், லாயர்கள், உயர் அதிகாரிகள், பெரும் பணக்கார்கள், தொழிலதிபர்கள், நிறைய படித்த மேதைகள், இவர்கள் எல்லாம் சேர்ந்தது தான் அந்த 20% வாக்குகள்!

ஓட்டுச் சாவடிப் பக்கம் வராத இவர்களிடம் இருப்பது எல்லாம் செல்லாத ஓட்டு மாதிரி தான்!. அந்த செல்லாத ஓட்டுகளுக்காக நாம் ஏன் சார் நம்ம நேரத்தை வேஸ்ட் செய்ய வேண்டும்?…” என்றான் அரவிந்தன்.

– 19-12-2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *