செல்லப்பிள்ளை




(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

[இது சீமான் உலகில் காணக்கூடிய ஒரு சிறு சித்திரம்! படக்காட்சியாக வெளிவந்ததல்ல; காமிராவுக்குத் தப்பிய காட்சிகளிலே இது ஒன்று]
நம் நாட்டுக் காமிராக்கள்தான் இன்னமும் கைலாய வைகுந்தக் காட்சிகளைப் படம் பிடிக்கும் சத்காரியத்திலேயே ஈடுபட்டுள்ளனவே! சமூகத்தைப் படம் பிடிக்க நேரம் ஏது?
காமிராவுக்கு இவை தப்பிவிட்டன. ஆனால் கருத்துள்ளவர்கள், அவைகளைக் காணமுடியும்.
எங்கு? குறிப்பிட்டு ஒரு இடத்தைச் சொல்ல முடியுமா? காட்சி, சீமான்கள் உலகில் காணக்கூடியது என்று மட்டுந் தான் சொல்ல முடியும்.
இடம்: சீமான் வீடு–முன்புறம்.
உறுப்பினர்: சீமான், அவன் நண்பன். (பிறகு) வேலைக்காரக் குப்பன்.
காலம்: மாலை.
நிலைமை: சீமான், வெளியே புறப்பட சித்த மாகி, அதற்கேற்ற அலங்காரத்துடன் விளங்கு கிறார். மோட்டார், ‘ரிப்பேர் செய்யப்படுவதற்காகச் சொல்லி விட்டான் டிரைவர் மோகன். எனவே, ‘பீட்டன்’ தயாராக இருக்கிறது, சீமான் செல்ல.
வெளியூரிலிருந்து வந்திருக்கும் நண்பன், சீமானுக்குப் பள்ளிப் பருவ சினேகிதம். நிம்மதியாக இருந்து படித்து ஒரு புத்தகம் எழுத, சீமான் வீட்டுக்கு வந்திருக்கிறார்.
சீமான், தன் நண்பனை நன்கு உபசரித்து வருகிறார்.
மாளிகை வாயிற்படியை நோக்கி இருவரும் நடந்து வரு கின்றனர். அப்போது சீமான் உல்லாசமாக, நண்பனுடன் பேசுகிறார். தன்னை உபசரிக்கும் சீமானின் உள்ளம் குளிரப் பேசுவது தன் கடமை என்ற எண்ணம் நண்பனுக்கு.
நண்பன் எதிரே, தன் செல்வம், அந்தஸ்து, அதிகாரம் ஆகியவைகளைக் காட்டிக் கொள்வதிலே, சீமானுக்கு ஒரு அலாதியான சந்தோஷம்.
[இந்நிலையில், பேச்சு ஆரம்பிக்கிறது இருவருக்கும்] சீமான்: (தன் நண்பனிடம், எதிரே வரும் தன் ஆளைக் காட்டி) பயலைப் பார்த்தீரா! எப்படி இருக்கிறான்?
நண்: கரிக்கட்டைபோல..
சீமான்: நிறம் கிடக்கட்டுமய்யா! நான்கூடத்தான் கருப்பு.
நண்: (அசட்டுச் சிரிப்புடன்) மறந்துவிட்டேன், மன்னிக்கணும். ஆனா, ஒங்க நிறம் கருப்பு என்றாலும், பள பளப்பு பாருங்கோ! அவன் அப்படி அல்ல…
சீமான்: அது கிடக்கட்டுமய்யா. இந்தப் பய இருக்கிற இருப்புக்கு இவன் இப்ப கலியாணம் வேறு செய்து கொண்டான்.
நண்: என்ன அவசரமாம்?
சீமான்: வயசு ஆச்சு, கிடாப்போல. ஆனா, இதுகளெல் லாம், காலை முதல் மாலைவரை வேலை செய்து கிடக்க ணும்; பணம் காசு கிடையாது. என்னமோ கலியாணம், கலி யாணம் என்று துடித்துக் கொண்டுபோய், கலியாணத்தை நடத்திக் கொண்டான்.
நண் : ஆமாம், கலியாணமென்றால் ஒரு பெரிய பொறுப் யாச்சே! நமக்கு முடியுமா இப்போது என்கிற கவலையோ முன்யோசனையோ கிடையாது.
[வேலையாள் வந்து கும்பிடுகிறான்.)
சீமான்: ஏண்டா, குப்பா! கலியாணம் செய்துகிட்டாச்சி! சந்தோஷந்தானே?
வேலை: (கூச்சத்துடன்) ஆமாங்க, எஜமான்…
சீமான்: எலே, டே! காதிலே என்னடா.
(நண்பனிடம்) பீடித்துண்டு
[வேலையாள் அதை எடுத்து அவசரமாக மறைக்கிறான்.]
[சீமான் வேலையாளை நோக்கி.]
ஏண்டா, உன் மூஞ்சிக்கும், யோக்யதைக்கும் கலியாணம் வேறே செய்துகிட்டே! கால்காசுக்கு மதிப்பாளாடா உன்னை, உன் சம்சாரம்?
[வேலையாள் இளிக்கிறான்.]
சீ: என்னடா, பல்லைக் காட்டறே?
(நண்பனைப் பார்த்து) பெண், நல்ல இலட்சணமா இருக்கா சார். கொஞ்சம் சிகப்புக்கூட . (வேலையாளைப் பார்த்து) ஏண்டா, உன் சம்சாரம் சிகப்புத்தானே?
வே: மாநிறமா இருப்பா.
சீ: போடா போ! நல்ல சிகப்புத்தான். நல்ல தேய்ப் யும் மேய்ப்பும் இருந்தா, நல்லத்தான் இருப்பா. அது பாவம், இவனிடம் வந்து சேர்ந்தது.
நண்: ஏழையா இருக்கும்.
சீமான்: இவன் என்ன மகாராஜனோ? அதெல்லாம் இல்லை. ஆசாமி, எப்படியோ கொண்டுவந்துவிட்டான், சரியான குட்டியாப் பார்த்து.
வே: எங்க அத்தை மகதானுங்களே, அவ.
சீமான்: அத்தை மகளோ, மாமன் மகளோ, நல்ல பெண். (நண்பனைப் பார்த்து) நல்ல சினிமா டைரக்டர் கையிலே அகப்பட்டா, ஸ்டார் ஆயிடுவா சார்.
நண்: கிராமப் பெண்களே…
சீமான்: ஒரு தனி அழகுதான்…இவன் எப்படி அவளை வைச்சிக் குப்பை கொட்டப் போறானோ தெரியவில்லை.
நண்: டே, குப்பா! ஐயா, ரொம்பப் புகழ்கிறாரே, உன் சம்சாரத்தைப் பத்தி.
வே: ஆமாங்க.
சீமான்: ஏண்டா, உன்னிடம் ஆசையா இருக்காளா?
வே: (வெட்கத்துடன்) ஆமாங்க… சிறுசுதானுங்களே! புதுசு பாருங்கோ…
சீமான்: சரி! ஜாக்கிரதையாக வைச்சிக் காப்பாத்து. தெரியுதா? டே! அருமையான பொண்ணுடா அது. உனக்குக் கிடைக்கிற வஸ்து இல்லே. தெரியுதா?
வேலை: சரிதானுங்க…
சீமான்: சும்மா, நம்பத்தான் தாலியைக் கட்டிப் போட்டோமென்று இருந்து விடாதே, தெரியுதா? (நண்பனைப் பார்த்து) எனக்குச் சந்தேகம்தான் சார். அந்தக் குட்டி, இந்தப் பயகூடக் காலந்தாள்ளுவாளான்னு சந்தே கம்தான். ஏன்னா, இவன் இருக்கிற இலட்சணத்துக்கு இவன் துளிகூட அவளுக்கு ஏத்தவனல்ல. நீங்க வேணுமானா ஒரு நாளைக்கு பாருங்க, அவ, ஒரு நீலக்கலர் சேலையைக் கட்டிக் கொண்டு, கொண்டை போட்டுக்கிட்டு, குடத்திலே தண்ணி எடுத்துக்கிட்டுப் போகிறபோது பார்த்தா…
வேலை: நான் போயிட்டு வரட்டுங்களா?
சீமான்: ஏண்டா, கோவமா? என்னடா இது நம்ம புதுப் பொண்டாட்டியைப் பத்திப் பேசறாங்களேன்னு வருத்தமா?
வேலை: இல்லிங்க…
சீமான்: போ! போ!
[வேலையாள் போகிறான்]
சீமான்: (நண்பனிடம்) பயலுக்குக் கொஞ்சம் கோபம். கிடக்கின்றான். சார், உண்மையிலேயே இந்தப் பய அந்தப் பெண்ணுக்கு ஏற்றவனே அல்ல. ரொம்ப அழகு சார்! எப் படித்தான் இவனிடம் தக்குவாளோ, தெரியலை. (கைக்கடி யாரத்தைப் பார்த்து) ஓ! நேரமாயிடுத்து! வேலா கோபித் துக் கொள்வாள். நான் வரட்டுமா?
நண்: செய்யுங்க.
சீமான்: நீங்கள் அந்தப் புத்தகத்தைக் கட்டிக்கொண்டு அழப் போகிறீர்களாக்கும்?
நண்: ஆமாம், இன்னும் ஒரு ஐம்பது பக்கம் இருக்கு..
சீமான்: என்ன புராணம்னு பேர் சொன்னீர் அதுக்கு?
நண்: புராணமல்ல, யோக விளக்கம்.
[சீமான் விடைபெற்றுக் கொள்கிறார்.]
[சீமான் போனபிறகு வேலையாள் வருகிறான். நண்பனைப் பார்த்து]
வே: யோக்யதையாய்யா இது?
நண்: என்ன குப்பா! என்ன கோபம்?
வேலை இல்லையப்பா, என்னமோ வேலை செய்து புழைக்கிறோம், வயித்துக்காக. எங்க அப்பன் ஜெமீன்தா ரனா, நான் குடித்துவிட்டுக் கூத்தி வீடுபோக? பாடுபட்டு உழைச்சி நான் குடும்பம் நடத்தறேன். ஏழைன்னா எது வேணுமானாலும் பேசிடலாமா சீமானுங்க?
நண்: என்ன திட்டினார் இப்போ?
வே: திட்டவேணுமா? கழுதே நாயேன்னு ஆயிரம் தடவை திட்டிப் போட்டாக்கூடப் பரவாயில்லையேய்யா. அந்த ஆள், என்னாத்தான் பணத்திமிரு இருந்தாலும், என் கிட்டவே, என் பொண்ஜாதியைப் பத்தி எதுவோ தெருவிலே சுத்தற பொம்பளையைப் பத்திப் பேசறதுபோலப் பேசற தும், உனக்கு ஏத்தவளில்லை, ஜாக்ரதையாக காப்பாத்த வேணும், சினிமாக்காரி போல இருக்கா என்று, எவ்வளவு தலை இறக்கமான பேச்சு பேசினான் அந்த மனுஷன். சோத் ஒப்புவிச்சேன். துக்காக உழைக்கறதுக்கு இந்த உடலை மான ஈனத்தைக் கூடவாய்யா? ஒரு புருஷன்கிட்ட அவன் பெண்ஜாதியைப் பத்தி இப்படியாய்யா பேசச் சொல்லுது, என்னாத்தான் பணம் இருந்தாலும்..
ந: கோபிக்காதே குப்பா! அடடே, என்னடா இது அழறே. சும்மா தமாஷ் செய்தாரு…
வேலை: இதுதான் தமாஷாய்யா, தமாஷு? ஏழை யைக் கூப்பிட்டு வைச்சிக்கிட்டு அவன் பொண்சாதியைப் பத்தி அவன் எதிரிலேயே, கேவலமாகப் பேசிக் கேலி செய் யறது தமாஷா? என்னென்னமோ, பெரிய பெரிய புஸ்தக மெல்லாம் படிக்கிறயே நீ!
நண்: நீ இவ்வளவு வருத்தப்படுவேன்னு, நான் எண்ணலை.
வேலை: நீ எப்படி எண்ணுவே? நீத்தான், அவன்கூடச் சேர்ந்துகிட்டு, அகப்பட்டவரைக்கும் அனுபவிக்கறேயே, உனக்கு மாத்திரம் எப்படி ஏழைக வயிறு எரியறது தெரி யப் போவுது? ‘அவனுக்கு ஏத்தவளா நீ? உனக்குத் தக்குவாளா அவ?’ என்று அவன் கேட்டான்; நீ அவர் தமாஷ் பேசினாரு என்று சொல்கிறே. நியாயமாகப் பேசு, இதுவா தமாஷு?
நண்: விளையாட்டு விபரீதமாகப் போச்சு…
வே: அட யாரடா அறிவு கெட்டவனா இருக்கறே. நீ படிச்சது எதுக்கு? அந்தப் பண மூட்டைக்குப் பக்கமேளம் அடிக்கிறதுக்கா? நியாய அன்யாயம் பார்த்துப் பேசறதே இல்லை என்று சத்தியம் செய்துகிட்டுத்தான் அந்தப் பெரிய புஸ்தகத்தைப் படிக்கறயா? என்னடா இது, ஒரு மனுஷனை அவன் எதிரிலேயே அவமானப் படுத்தறாங்களேன்னு கொஞ் சம்கூட இரக்கம் வரலை.
நண்: நான் என்னப்பா செய்வது? அவனுங்க சுபாவம் அது.
வேலை: ஏழைக மனசு பதறப் பதறப் பேசறது, அதுக்கு நீ தமாஷ்னு பேரு வைக்கறது… நல்லா இருக்கய்யா உங்க நியாயம்.
நண்: கிடக்கிறான், விட்டுவிடு! பதறாதே.
வேலை: வேணுமானா வாய்யா, இப்பக் காட்டறேன், உன் கண்ணாலேயே பாரு…
நண்: எதை?
வே: என்னைச் சொன்னானே, அந்தப் பெண்ணு வன்கிட்டத் தக்குவாளான்னு, அவன் பெண்ஜாதி நடத் தையைக் காட்டுகிறேன் வா.
[வேலைக்காரக் குப்பன் கோபத்தோடு, சீமானின் நண்பனின் கரத்தைப் பிடித்து இழுத்துக்கொண்டு, வேகமாகச் செல்கிறான், சீமான் வீட்டுப் பின்புறம் உள்ள மோட்டார் ஷெட்டுக்கு.]
(‘ஷெட்டு’ கதவு முழுவதும் மூடப்படவில்லை; கொஞ் சம் திறந்திருக்கிறது.கதவோரமாக நிற்கிறார்கள் இருவரும். உள்ளிருந்து பேசும் குரல் வருகிறது.)
பெண்: எனக்குத் துளிகூட நிம்மதி இல்லை மோகன்! நான் சொல்வதைக் கேள். நாம் பேசாமல் வெளியே போய் விடுவோம்.
ஆண்: உனக்குப் பைத்யம்…
பெண்: என்னால் அவனோடு இருக்க முடியாது இனி மேல்.
ஆண்: என்ன உனக்கு இப்போது கஷ்டம்?
பெண்: விளையாடாதே. எனக்கு ஏற்றவனா அவன்?
[வளை ஒலி, முத்தமிடும் சத்தம்,பெருமூச்சு, இலேசான சிரிப்பு, மீண்டும் வளை ஒலி, மெல்லிய குரலில் பாட்டு, மோட்டார் ஊதுகுழல் மெல்லிய நாதமாக்கப்படு கிறது.]
[சீமானின் நண்பன், வேலையாளின் வாயைத் தன் கைகளால் பொத்தியபடி, அங்கிருந்து இழுத்துக் கொண்டு போகிறான்.]
[கொஞ்ச தூரம் சென்றதும், வேலையாள், ஆவேசம் பிடித்தவன்போலக் கூச்சலிட்டு…]
வேலை: என் மனைவியை என் எதிரிலே இழிவாகப் பேசினானே, எப்படி இருக்கிறது அவன் தர்மபத்தினியின் வேலை! பார்த்தாயா?
நண்: பார்த்தேன், என்ன செய்வது?
வேலை: இப்படிப்பட்ட உலகைப்பற்றி நீ படிக்கும் புத்தகத்திலே ஒரு வரி கூடவா இல்லை?
நண்: ஏராளமாக இருக்கிறது..படித்ததை எல்லாம் சொல்லப்போனால்…
வேலை: சீமான் வீட்டுச் செல்லப் பிள்ளையாக இருக்க முடியாது.
[நண்பன், வெட்கத்தால் தலைகுனிந்து கொள்கிறான். வேலையாள், கோபமாகப் போய்விடுகிறான்.]
– இரு பரம்பரைகள், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1980, பூம்புகார் பிரசுரம் பிரஸ், சென்னை.
![]() |
காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை (C. N. Annadurai) (15 செப்டம்பர் 1909 - 3 பெப்ரவரி 1969), தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். முதன்முதலில்…மேலும் படிக்க... |