சுவர் கடிகாரம்
கதையாசிரியர்: ரா.நீலமேகம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: November 1, 2026
பார்வையிட்டோர்: 196

எப்போதும் போல் காலை ஆறு மணிக்கு எழுந்து தன் அன்றாட வழக்கங்களை முடித்து நடு கூடத்திற்கு வந்து அங்கே சுவற்றில் மாட்டியிருக்கும் பழங்கால சுவர் கடிகாரத்தை உற்றுப் பார்த்து மெலிதான புன்னகையுடன் நின்றிருந்தார் முருகையன். இது அவரைப் பொறுத்தவரை முக்கியமான ஒன்று. ஆனால் பார்ப்பவர்கள் அவரை ‘இவர் எதற்காக இப்படி செய்கிறார் ‘ என்ற கேள்வியுடனே நகர்வார்கள். அப்படியாவது அந்த கடிகாரம் வேலை செய்கிறதா என்றால் அதுவும் இல்லை. பதினோரு மணி காட்டியபடி சிறிய முள்ளும் பெரிய முள்ளும் நின்றபடியே உள்ளது.
வண்ணத்தூர் எனும் சிறிய நகரத்தில் முருகையன் பள்ளிப்படிப்பை படித்து முடித்த பிறகு வேலை தேடி வந்தார். அவர் குடும்பத்திற்கு அப்போது இருந்த நிதி வசதிக் குறைவுகளால் மேற்கொண்டு படிக்க முடியவில்லை. அவ்வூரில் இருந்த ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அவருடைய வேலைத்திறமையால் நான்கு வருடங்களில் நல்ல பதவி உயர்வு பெற்று உதவி மேலாளராக பணி புரிந்து வந்தார்.
பின்னர் தனது தந்தையார் மாணிக்கம், தாயார் பாக்கியம் இவர்கள் சொல்லைத் தட்டாமல், அவர்கள் பார்த்து முடிவு செய்திருந்த பெண் காந்திமதியை மணமுடித்தார். மாணிக்கம் இருந்து வந்த பூர்வீக வீடு மிகவும் பழையதாகி விட்டதால், முருகையன் வண்ணத்தூரில் வேறு ஒரு தெருவில் விற்பனைக்கு வந்த இடத்தை வாங்கி, வங்கிக் கடன் உதவியுடன் ஓரளவிற்கு நல்ல வீடாகக் கட்டினார். பழைய வீட்டைப் பழுது பார்த்து, அதை வாடகைக்கு விட்டு, தன் பெற்றோர்களை தன் புதிய வீட்டிற்கு அழைத்துச் சென்றார். காந்திமதியும் அவர்களை மிகவும் நல்ல முறையில் கவனித்துக் கொண்டாள். அந்த வீட்டில் இருந்த அந்த காலத்து அமெரிக்க சுவர் கடிகாரத்தை மட்டும் எடுத்து வந்து இந்த புதிய வீட்டின் நடு கூடத்தில் மாட்டினார். மாணிக்கம், பாக்கியம், முருகையன் அனைவருக்கும் பிரியமான கடிகாரம் அது.
முருகையன் ஒரு நாள் காந்திமதியுடன் கடைத்தெரு சென்றிருந்த போது அவளுக்கு ஒரு கைக்கடிகாரம் வாங்கிக் கொடுத்தார். காந்திமதி அப்போது ” இது ரொம்ப அழகா இருக்கு. ஆனா பாருங்க,இப்ப எல்லாம் நிறைய சுவர் கடிகாரம் வந்திருக்கு. ஆனால் நம்ம வீட்டுல இருக்கிற மாதிரி நல்ல அமைப்போட, கம்பீரமான மணி சத்தத்தோடு எந்த சுவர் கடிகாரமும் இல்லை.அதனால அதை நல்லா வச்சுக்கணும்” என்றாள்.எப்போதும் அதன் ‘டிக் டாக்’ சத்தங்களையும், ஒவ்வொரு மணியிலும், அரைமணியிலும், ஒலிக்கும் ஒலியையும் கேட்டு தன்னுடைய நாளின் வேலைகளை தீர்மானம் செய்வது அவளுக்கு வழக்கமாக இருந்தது.
முன்னாளில் மாணிக்கம் அந்த கடிகாரத்திற்கு சாவி கொடுத்து சரியான நேரத்தில் ஓடுகிறதா என்பதைப் பார்த்து வந்தார். அதன் பின்னர் முருகையன் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அந்த கடிகாரம் ஒரு தடவை கூட பழுதானதில்லை. ஆனால் ஒரு முறை முருகையனுக்கு திருமணமான இரண்டாம் வருடத்தில் ஒரு நாள் அந்த கடிகாரம் நின்று போய் விட்டது. அன்று மாலை தம்பதிகள் கடைத்தெரு சென்றபோது, இந்த சுவர் கடிகாரத்தையும் எடுத்துப் போய், கடிகாரங்கள் பழுது பார்க்கும் கடையில் காண்பித்ததில் தெரிய வந்தது என்னவென்றால் முருகையன் அதிகமாக சாவியைச் சுற்றி விட்டார் என்று. பழுது பார்ப்பவர் ” சார், நீங்க கொஞ்சம் ஓவரா வைண்ட் பண்ணிட்டீங்க. இதெல்லாம் அந்த காலத்து கடிகாரம் சார். தினமும் தவறாமல் ஒரே நேரத்தில் சாவி கொடுத்து வந்தீங்கன்னா ஆறிலிருந்து எட்டு வரை கீ வைண்ட் செஞ்சா போதும். அதுக்கு மேல போனா ஸ்ப்ரிங் டைட் ஆகி இது போல சில நேரங்களில் நின்று போகும். இப்போ நான் சரி செஞ்சுடறேன். கடிகாரம் நல்ல நிலையில் இருக்கறதால ஒரு அளவோடு வைண்டிங் கொடுத்து வச்சுக்கோங்க.இன்னும் நிறைய நாள் நல்லா ஓடும்.” என்று கூறினார்.
வேலைகளை முடித்து வீட்டுக்கு வந்தவுடன் முதல் காரியமாக காந்திமதி அந்த கடிகாரத்தை எடுத்து அது இருந்த இடத்தில் மாட்டி விட்டு, முருகையனிடம் “இனிமேல் இதை நான் பாத்துக்கிறேன். நீங்க கீ எல்லாம் கொடுக்க வேண்டாம். நான் காலைல ஏழு மணிக்கு தினமும் ஒரே மாதிரி வைண்டிங் செஞ்சு இதைச் சரியா பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இந்த சமயத்தில் இருந்து என்னோடது” என்று உறுதியாக கூறினாள்.
முருகையனும் சிரித்துக் கொண்டே” இப்போ என்ன, கடிகாரத்தை குழந்தை மாதிரி பாத்துக்கிறேன்ங்கற. இல்லையா?” என்று கேட்டு ” சரிம்மா, இந்த பொறுப்பை நீ எடுத்துக்கோ” என்று கூறிவிட்டு நகர்ந்தார்.
அன்று முதல் காந்திமதி தவறாமல் அந்த கடிகாரத்தை மிகவும் கவனத்தோடு, காலையில் சாவி கொடுத்து, துடைத்து அதன் மேல் துளியும் தூசி படாதபடி பார்த்து வந்தாள். காந்திமதியின் இந்த நடவடிக்கைகளைப் பார்த்து வந்த மாணிக்கமும் பாக்கியமும் அதை முருகையனிடம்” முருகையா, பாருடா, நாங்க அந்த கடிகாரம் வாங்கி வந்ததிலேருந்து கொஞ்ச வருஷம் நல்லா துடைச்சு, காந்திமதி பாத்துக்கறது போலத்தான் பார்த்து வந்தோம். அப்புறமா வெறும் சாவி மட்டும் இவரு தவறாம கொடுப்பாரு, எப்பவாவது தூசியை மாசத்துல ரெண்டு வாட்டி துடைச்சு வப்போம். ஆனால் இவளைப் பாரு தெனம் ரெண்டு தடவை துடைக்கறா.செவ்வாய் வெள்ளி சாம்பிராணி காட்டும்போது அதுக்கும் காட்றாடா. எனக்கு ஒரே சந்தோஷமும் ஆச்சரியமுமா இருக்கு. உங்கப்பா ஆசையா வாங்கின இந்த பழைய காலத்து பொருளை எப்படி மதிக்கறா பாருன்னு உங்கப்பாவும் அன்னிக்கு சொல்லிட்டு இருந்தாரு” என்று சொல்லி காந்திமதியை வெகுவாகப் பாராட்டினாள். முருகையன் இதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்தான்.
காந்திமதிக்கு முதல் குழந்தை பெண் சாந்தா அவ்வருடத்தில் பிறந்தாள். பிறகு இரண்டரை வருடங்கள் சென்று மகன் அசோக் பிறந்தான். சாந்தா, அசோக் இருவரையும் எப்படி அன்புடன் மட்டுமல்ல, கண்டிப்புடனும் வளர்த்து வந்தாள். அவர்களும் வளர்ந்து பள்ளி செல்லத் தொடங்கினர். அதற்கான வேலைகளில் காந்திமதி மும்முரமாக இருந்தாலும், அந்த கடிகாரத்தை அதேபோல் சாவி கொடுத்து, துடைத்து வைப்பதை ஒரு நாளும் நிறுத்தியதில்லை. இடையில் அவள் பிரசவத்திற்கு மருத்துவ மனைக்கு இரு முறைகள் சென்றபோதும் அவளைப் பார்க்கப் போன முருகையனிடம், எல்லாம் பேசிவிட்டு” கடிகாரத்தை துடைச்சீங்களா? ஆறு சாலிக்கு மேல் கொடுக்கலையே? கரெக்டா ஏழு மணிக்கு கொடுத்தீங்களா?ஸ்லோவா ஓடலையே? ” என்று துருவித் துருவி கேட்பாள். முருகையன்” அம்மா தாயே, நீ நல்லபடியா எப்படி உன் குழந்தைய பாத்துக்கறயோ அதைப் போல நான் நீ வீட்டுக்கு வர்ற வரைக்கும் பாத்துக்குவேன் அந்த கடிகாரத்தை. நீ கவலையே படாதே”. என்று புன்னகையுடன் சொல்லி விட்டு வருவார்.
சாந்தாவிற்கு ஆறு வயது ஆகும் போது மாணிக்கம் இறந்துவிட்டார். அதைச் சொல்லும்போது காந்திமதி ” சரியா ஏழு முப்பத்தி நாலுக்கு உயிர் போச்சுங்க” என்பாள். “அதெப்படி அவ்வளவு சரியா சொல்றே?” என்று கேட்டால், ” என் கடிகாரம் பொய் சொல்லாது. அதுல ஏழரைக்கு மணி சத்தம் வந்தது. நான் போய் உள்ளேருந்து தண்ணி எடுத்து வரப் போனேன். திரும்பி வரப்போ, அம்மா கத்தினாங்க. மணியப்பாத்தேன். ஏழு முப்பத்தி நாலு.” என்பாள்.
அதற்கடுத்த ஐந்து வருடங்களில் பாக்கியத்திற்கு உடல்நலம் சரியில்லாமல் இறந்து போனாள். அவளை மருத்துவ மனையில் சேர்த்து முருகையன் உடனிருந்து பார்த்துக் கொண்டிருந்த வேளையில், ஒரு நாள் மாலை சிகிச்சை பலனளிக்காமல் காலமாகிவிட்டாள். அதை தொலைபேசியில் வீட்டில் இருந்த காந்திமதிக்கு முருகையன் கூப்பிட்டபோது, அவள் கடிகாரத்தை பார்த்தாள். நான்கு மணி அடித்து ஒரு நிமிடம் ஆகியிருந்தது. அவள் நான்கு மணிக்கு தன் மாமியார் இறந்தார் என்று உறுதிப் படுத்திக் கொண்டாள்.
நாட்கள் விரைவாக ஓடின. சாந்தாவும், அசோக்கும் வளர்ந்து பள்ளி, கல்லூரி படிப்பை முடிக்கும் நேரம் வந்தது. இந்த காலங்களில் தன் அம்மா அந்த கடிகாரத்தின் மீது வைத்திருக்கும் பற்றையும், அக்கறையையும் அவர்கள் இருவரும் புரிந்து கொண்டனர்.
சமையலறையிலிருந்து சில நேரங்களில் குரல் கொடுப்பாள். ” சாந்தா, இன்னும் ஒன்பது மணி ஆகலையா, கடிகாரம் மணி சத்தம் கேட்கலையே” என்பாள். ” அம்மா, ஒன்பது இப்போதுதான் அடிச்சு ரெண்டு நிமிஷம் ஆச்சு அம்மா, நீ வேறு ஏதாவது வேலையில் இதைக் காதுல வாங்கிருக்க மாட்டே” என்று சாந்தா பதில் சொல்வாள். ” இருக்கலாம். மிக்ஸி சத்தத்தினால எனக்கு காதுல விழல போலிருக்கு” என்று காந்திமதி கூறுவாள்.
இதே போல அசோக்கிடமும் பல முறை அந்த கடிகாரம் மணியை தொடர்பு படுத்தி ஏதேனும் கேள்விகள் கேட்பாள் காந்திமதி. இது அவர்கள் அனைவருக்கும் பழகிப்போன ஒன்று.
சில நேரங்களில் சாந்தா, அசோக், முருகையன் மூவரும் சேர்ந்து கிண்டலாக ” அம்மாவுக்கு நாம சாப்பிட்டோமா, உடல் நலமா இருக்கோமா, அப்படிங்கறதெல்லாம் ரெண்டாம் பட்சம்தான். சுவர் கடிகாரம் கரெக்டா ஓடுதா, மணி சரியா அடிக்குதா, இந்த கவலைதான் மனசுல எப்பவும்” என்று சொல்லி சிரிப்பார்கள். காந்திமதி அதைப் பற்றி சட்டை செய்யாமல் லேசான சிரிப்புடன் உள்ளே போய்விடுவாள்.
சாந்தா கல்லூரி படிப்பை முடித்து ஒரு நல்ல நிறுவனத்தில் வேலையில் அமர்ந்தாள். அதற்கடுத்த நான்கு வருடங்களில் அவளுக்கு ஒரு நல்ல வரன் முருகையன் நண்பர் மூலம் வந்ததால், அவளுக்கு திருமணம் ஆனது. மாப்பிள்ளை சுந்தர் வெளிநாட்டில் வேலை என்பதால் அவருடன் சாந்தா திருமணமாகி மூன்று மாதங்களில் வெளிநாடு சென்று விட்டாள்.
அதன் பின்னர் அசோக் முதுகலை படித்து முடித்த பிறகு அவனும் வெளியூரில் உள்ள நல்ல நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தான். ஒரு ஐந்து வருடங்களில் அதெல்லாம் வேண்டாம் என்று சேர்ந்த பணத்தை வைத்துக் கொண்டு, கணினி, மற்றும் அதனுடைய உதிரி பாகங்கள் இவைகளுக்கு வண்ணத்தூரில் விற்பனையகம் ஒன்று தொடங்கி ஒரு வருடத்தில் நல்லவிதமாக நடத்தி வந்து லாபமும் பார்த்தான். முருகையன் கட்டியிருந்த வீட்டை சில மாற்றங்கள் செய்து புதிய முறையில் கட்டினான்.
அதன் பின்னர் அசோக் திருமணம் நடந்தது. அவன் மனைவி அர்ச்சனா பூவரசு மலையூரைச் சேர்ந்தவள். பட்டப் படிப்பு முடித்தவள். மருமகளாக வந்த பிறகு முருகையன், காந்திமதி இருவரிடமும் இரண்டே மாதங்களில் நல்ல பெயர் பெற்று விட்டாள்.
அர்ச்சனா கணினி மூலம் வீட்டிலிருந்தே செய்யும் விதத்தில் கிடைத்த வேலையை நல்ல முறையில் செய்து வந்து சம்பாதித்தாள். காலையில் சீக்கிரமே எழுந்து உணவு தொடர்பான பணிகளை சுறுசுறுப்பாக முடித்து, முருகையன், காந்திமதி இவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து விட்டு வேலையில் உட்கார்ந்து பனிரெண்டு மணி வரை செய்வாள். இதற்கிடையே சிறிய ஓய்வு எடுத்து காந்திமதி கடிகாரம் சுத்தம் செய்வதற்கு உதவுவாள். மாலையில் கடைத்தெரு சென்று மறுநாளுக்காக வேண்டிய கறிகாய்கள், பழங்கள் வாங்கி வருவாள்.
அடுத்த ஒண்ணரை வருடத்தில் அர்ச்சனாவுக்கு மகன் பிறந்தான். அவனுக்கு அவினாஷ் என்று பெயர் சூட்டினார் முருகையன். அவன் பிறந்த போதும் மருத்துவ மனையிலிருந்து அசோக் கூப்பிட்டு சொல்லும்போதும் காந்திமதி தன் கடிகாரத்தை பார்த்து விட்டு ‘ அவன் இந்த மணிக்குதான் பிறந்திருப்பான்’ என்று முருகையனிடம் கூறி அதை ஒரு நோட்டில் எழுதியும் வைத்தாள்.
அசோக், அர்ச்சனா தம்பதியின் மகன் அவினாஷ் வளர்ந்து இப்போது ஆறுவயதாகி பள்ளிக்குச் சென்று படிக்கிறான். இந்த காலகட்டங்களில் காந்திமதி அவனை மிகவும் பாசத்துடனும், அன்பாகவும் அதே நேரத்தில் அவள் எப்போதும் காட்டும் அந்த கண்டிப்புடனும் வளர்த்து வந்தாள். அவினாஷுக்கு நிறைய கதைகள் சொல்வாள். அதேபோல் சுவர் கடிகாரத்தை சிலாகித்து அவனிடம் ” எத்தனை வருஷம் ஆனாலும் தன்னோட வேலைய கரெக்டா செய்யுது பாரு, யாருக்கும் வெயிட் செய்யாதது நேரம் ஒண்ணுதான், அதுலயும் இந்த கடிகாரம் அவ்வளவு பர்ஃபெக்ட்” என்றெல்லாம் சொல்லி வருவாள். அவனுக்கு அந்த கடிகாரத்தை காண்பித்து சிறு வயதிலேயே மணி என்ன என்று பார்ப்பதற்கு கற்றுக் கொடுத்து விட்டாள் காந்திமதி. அவினாஷும் பாட்டியிடம் மிக அன்புடனும் மரியாதையுடனும் நடந்து கொள்வான்.
காலம் அவர்களுக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்த வேளையில், ஒரு நாள் காலை உணவுக்கு பின் காந்திமதி முருகையனிடம் “‘நெஞ்சு லேசாக ஒரு மாதிரி வலிக்கிறது” என்று கூறி படுத்தவள் எழுந்திருக்க முடியாமல் மயங்கி விழுந்து விட்டாள். மருத்துவரை அழைத்து வந்து பார்த்த போது ‘அதிகப்படியான இருதய அழுத்தம் அவங்களைத் தள்ளி இருக்கிறது ‘ என்று கூறி ஒரு ஊசியைப் போட்டார் மருத்துவர். அரை மணி நேரத்தில் சற்று அரைகுறை நினைவுகளுடன் விழித்துப் பார்த்த காந்திமதி முருகையனிடம் ஜாடையில் ‘ அவளை கடிகாரம் இருக்கும் கூடத்திற்கு அழைத்துச் செல்லுமாறு கூறினாள். கண்களில் நீர் தளும்ப முருகையன் அவள் இருந்த அலுமினிய கட்டிலோடு அசோக் உதவியுடன் கூடத்திற்கு அழைத்து வந்தார்.
அவள் அமைதியாக லேசான சிரிப்புடன் கடிகாரத்தை பார்த்தபடி படுத்துக் கொண்டிருந்தாள்.
அசோக் மருத்துவர் எழுதிக் கொடுத்த சில மருந்துகளை வாங்க கடைக்கு சென்றிருந்தான். அர்ச்சனா வெந்நீர் வைப்பதற்கும், முருகையனுக்கு தேநீர் தயாரித்து எடுத்து வரவும் சமயலறை சென்றிருந்தாள். அவினாஷ் எப்போதும் போல் பள்ளிக்குப் போயிருந்தான்.
அப்போது முருகையனை அருகே அழைத்து காந்திமதி மிகவும் மெல்லிய குரலில் அவர் காதில் ” இன்னும் கொஞ்ச நேரம்தான் என் லைஃப். என் கடிகாரம் எனக்கு சொல்லுகிறது. இப்ப பாருங்க மணி அடித்துச் சொல்லும். நீங்க கவலைப் படாமல் இருக்கணும். நான் ஆத்மாவாக இருந்தாலும் உங்களோடதான் இருப்பேன்.” என்று பார்வையை திருப்பி கடிகாரத்தை நோக்கினாள். மணி அடிக்க ஆரம்பித்தது.
” ஒண்ணு, ரெண்டு, மூணு” மிகவும் பலவீனமான குரலில் காந்திமதி எண்ண, கடைசியில் ” பதினொண்ணு” என்று முடித்து கண்களை மூடினாள். முருகையன் ” மதி, மதி, என்னைப் பாரும்மா, ஐயோ, என்ன ஆச்சு உனக்கு, அர்ச்சனா, இங்கே வாயேன்” என்று கத்தினார். அர்ச்சனா பரபரப்புடன் ஓடி வந்தாள். கை நாடி பிடித்து பார்த்து ” மாமா, அத்தை , அத்தை” என்று மீதி வார்த்தைகளைச் சொல்ல முடியாமல் அழுகைக் குரலுடன் அசோக்கிற்கு கைபேசியில் அழைத்து விவரம் சொன்னாள்.
அடுத்த பத்து நிமிடங்களில் மருத்துவருடன் வந்த அசோக், காந்திமதி இறந்து கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் ஆகிறது என்பதை தெரிந்து கொண்டான். முருகையன் அப்போது சொன்னார்” கடிகாரம் பதினொண்ணு அடிக்கும்போது எண்ணிட்டு இருந்தாப்பா, அப்புறம் கண்ணை மூடிட்டா” என்றவர் கடிகாரத்தை பார்த்தார். அது பதினொன்றிலேயே நின்றிருந்தது.
வெளிநாட்டில் இருந்து சாந்தா, சுந்தர் குடும்பத்துடன் வந்தனர். மிகுந்த சோகத்துடன் சாந்தா, சுந்தர் தங்கள் குழந்தைகளுடன் காந்திமதிக்கு இறுதி மரியாதை செலுத்திவிட்டு முருகையனுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி இரு வாரங்கள் தங்கி விட்டு திரும்பச் சென்றார்கள்.
இது நடந்து ஆறு மாதங்கள் ஓடி விட்டன. முருகையன் எத்தனையோ முறை கடிகாரத்தை சரி செய்ய முயற்சிகள் செய்தும் ஒரு நாள் ஓடும், திரும்ப அதே காலை பதினொன்றில் வந்து நின்று விடும். அவருக்கு நினைவுக்கு வந்தது காந்திமதியின் வார்த்தைகள். ” ஆன்மாவாகப் போனாலும் உங்களுடன் இருப்பேன்” . அன்று முதல் காலை எழுந்தவுடன் கடிகாரத்தின் முன் நின்று காந்திமதியை மனக்கண்ணால் பார்ப்பார். ஒவ்வொரு முறையும் உணவு எடுத்துக் கொள்ளும்போதும் சுவர் கடிகாரம் பக்கம் திரும்பி பார்த்து விட்டு சாப்பிட ஆரம்பிப்பார். இரவு படுக்கப் போகும் முன் அதைப் பார்த்து விட்டு உறங்கச் செல்வார்.
அசோக் ஒரு நாள் எண்ணிமக் கடிகாரம் (டிஜிட்டல் க்ளாக்) வாங்கி வந்தான். அதை நடு கூடத்தில் மாட்டிவிட்டு பழைய சுவர் கடிகாரத்தை கழற்றி உள்ளே வைத்து விடலாம் அல்லது கடையில் போட்டு விடலாம் என்று அர்ச்சனாவிடம் பேசிக் கொண்டிருந்தான்.
இதைக் கேட்ட முருகையன் ” அசோக் வேண்டவே வேண்டாம்ப்பா. நான் உயிரோடு இருக்கற வரை உங்கம்மா, அதோ அந்த கடிகாரத்தில ஆன்மாவா இருக்காங்கறதை நினைச்சு தினமும் மனசில அமைதி அடையறேன்டா. நீயே பாரு, நான் என்ன செஞ்சாலும் திரும்ப அந்த காலை பதினோரு மணிக்கு நின்று போய்டுது பாரு. அவ கண்ணை மூடறதுக்கு முன்னால் மணி சத்தத்தை எண்ணினாடா. பதினொண்ணு எண்ணினா.என்னைப் பாத்துட்டு கண்ணை மூடிட்டா. அவ ஆத்மா அங்கேதான் இருக்குப்பா. அந்த கடிகாரத்தை என் காலத்துக்கு அப்புறம் நீ என்ன வேணும்னாலும் செஞ்சுக்கோ” என்று தழுதழுத்த குரலில் கூறிவிட்டு கடைசியாக காந்திமதி அவரிடம் காதில் கூறியதைச் சொன்னார்.
அப்போது அவினாஷ் “தாத்தா, நீங்க பாட்டியை அந்த கடிகாரத்தில சாமியா இருக்காங்கன்னு சொல்றீங்க இல்லையா, நானும் அவங்களை தினமும் நினைச்சு கடிகாரத்தை கும்புடுவேன் தாத்தா. அப்பா, அது அப்படியே இருக்கட்டுமேப்பா. புது கடிகாரத்தை வேற இடத்தில மாட்டிக்கலாமே!” என்றான்.
முருகையனும், தன் மகனும் கூறியதைக் கேட்டு, அசோக், அர்ச்சனா இருவரும் கண்ணீருடன் பேசினார்கள். ” இல்லைப்பா, கடிகாரத்தை அந்த இடத்திலேருந்து எடுக்க மாட்டோம். நம்ம காலம் உள்ள வரை இருக்கட்டும் அது. இப்பதான் புரியுது அம்மா நம்ம கூடவே இருக்காங்கன்னு.”
அந்த நிமிடம் முதல் இன்று வரை அசோக் வீட்டில் கூடத்தில் அந்த சுவர் கடிகாரம் கடவுளிடம் சென்ற காந்திமதியாகப் பார்க்கப் பட்டு, அன்பும் மரியாதையும் காட்டி வருகின்றனர். இன்றும் அதே காலை “பதினோரு ” மணியில் அந்த கடிகாரத்தின் முட்கள் நிலைத்து நிற்கின்றன.
![]() |
பெயர்: நீலமேகம். வயது 71. பூர்வீகம்: திருவாரூர் மாவட்டம், கீழமணலி என்ற கிராமம். தந்தை: ராமஸ்வாமி அய்யங்கார். கிராமத்து கணக்கராக இருந்தவர். தாயார்: ஜானகி படிப்பு: பி.எஸ்சி (இயற்பியல்), திருச்சி தேசியக் கல்லூரி. வேலை தேடி மும்பைக்கு சென்று இருபத்தைந்து ஆண்டுகள் பல தனியார் கப்பல் துறை அலுவலகங்களில் பணிசெய்து கோயம்புத்தூர் இடமாற்றம். உலகின் முதல் பெரிய கப்பல் பணியகமான, 'மெர்ஸ்க் லைன்' (Maersk Line) கோவை அலுவலகத்தில் பொது மேலாளராக…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
நேர்நிரை
நாஞ்சில்நாடன்
November 1, 2026
கோடுகள் இணைந்தன
இரா.துரைமாணிக்கம்
November 1, 2026
உந்தன் நிழலாய் நானடி தோழி…
காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்
November 1, 2026
