சுற்றிப் பார்க்க வந்தவர்
கதையாசிரியர்: சிங்கை மா.இளங்கண்ணன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: October 16, 2026
பார்வையிட்டோர்: 68
(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“என் கண்ணுல அழாதேம்மா….” என்றேன்.
பிள்ளை அழுகையை நிறுத்தவில்லை. பிள்ளையிடம் விளையாடிக் கொண்டிருந்த எனக்கு எரிச்சலாக இருந்தது. பிள்ளை சிரிக்கும்போது அதனுடன் சேர்த்து சிரித்துப் பழகிய எனக்குப் பிள்ளை அழும்போது சேர்ந்து அழலாம் போல் இருந்தது.
“அடேடே, என்ன அயித்தான், பிள்ளையை அழவிட்டுட்டீக!” என்று என் மனைவிதான் குரல் கொடுத்தபடி அடுப்படியிலிருந்து ஓடிவந்தாள்.
“நானா அழச்சொன்னேன். அதுதான் காக்காக் குஞ்சாட்டம் காகாணு கரையுது. சிரிச்சுக்கிட்டு இருந்தது இருந்தாப்போல சிணுங்குது” என்றேன்.
“தூக்கி வைச்சுக்கிறதுக்கு அலுப்புப் பட்டுக்கிட்டுக்கூட கிள்ளிவிட்டிருப்பீக” என்று நகைத்தபடி சொல்லிவிட்டு பிள்ளையை நோக்கி. “அழாதேம்மா என் கண்ணுல” என்றாள்.
“நானா பிள்ளையைக் கிள்ளினேன்?” என்று கேட்டபடி அவள் கன்னத்தில் செல்லமாகக் கிள்ளினேன்.
“சும்மா இருக்க மாட்டீக; உங்களுக்கு நேரம் காலமே தெரிய மாட்டேங்குதே” என்று குங்குமக் கன்னத்தில் குழி விழச் சொல்லிவிட்டுப் பிள்ளையைத் தூக்கினாள். அவள் தூக்கியும் பிள்ளை அழுகையை நிறுத்தவில்லை. “அழாதேம்மா. இதோ அம்மா உனக்குப் பசி வந்திடும்னு பால் கலக்கி வச்சிருக்கேன்” என்றாள். அப்போதுதான் பிள்ளை பசியால் அழுகிறது என்று என் மரமண்டையில் ஏறியது.
என் மனைவி உள்ளே சென்று பால் குப்பியை எடுத்துப் பிள்ளை வாயில் வைத்தாள். அடைமழை பெய்து ஓய்ந்தாற்போல அழுகை நின்றது.
அழுத பிள்ளைதானே பால் குடிக்கும் என்று எண்ணியபடி இருந்தேன். அப்போது கதவு தட்டும் ஒலி கேட்டது. என் எண்ணமும் பறந்தது.
கடிகாரத்தைப் பார்த்தேன். காலை மணி ஒன்பதரை. மாதக் கடைசியில் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பதரை மணி என்றால் சொல்ல வேண்டியதே இல்லை.
இந்த நேரத்தில்தான் வீட்டில் இருப்பான் என்று கழுகுக்கு மூக்கு வியர்த்து விடுவது போல் வியர்த்து விடுமோ என்னவோ கடன் கொடுத்தவன் வந்து விடுவான் என்று என் மனத்தில் ஓடியது
மீண்டும் கதவு தட்டும் ஒலி.
‘இருக்கிறது பதினாறு பதினேழு வெள்ளிதான். இதை அவனுக்கு அழுது விட்டால் அழுகிற பிள்ளைக்குப் பால் வாங்க முடியாதே. இன்று ஞாயிற்றுக்கிழமை, சந்தைக்குச் சென்று கறிவைக்க ஏதாகிலும் வாங்க வேண்டுமே, சம்பளம் போட இன்னும் மூன்று நாள் இருக்கே’ என்று எண்ணியபடி நின்றேன்.
“யாரோ கதவைத் தட்டுகிறார்களே, உங்களுக்குக் காதுல விழலையா?” என்றாள் என் மனைவி.
கதவு தட்டும் ஒலியும், என் மனைவியின் குரலும், ஏன் கேட்கிறீர்கள் மத்தளத்தின் பாடாக இருந்தது. இதைவிட வாங்கலாம் என்று அவனிடமே ஏதாகிலும் பேச்சு நினைத்துக்கொண்டு விரைந்து சென்று கதவைத் திறந்தேன்.
அப்பாடா! போன உயிர் திரும்பி வந்து விட்டது. கடன்காரன் இல்லை என்று தெரிந்ததும் மகிழ்ச்சியால் நெடு மூச்செரிந்தேன். ஆனால் எனக்கு வியப்பாக இருந்தது. முன்பின் அறிமுகம் இல்லாதவர் இருவர் என் எதிரே நின்றனர்.
யாரையாகிலும் தேடி வந்திருப்பார்கள் என்று எண்ணியபடி நான் அவர்களைப் பார்த்தேன். ஒருவர் மணிலா சட்டை போட்டு வேட்டியை மடித்துக் கட்டியிருந்தார்; அவர் நெற்றியில் குங்குமப் பொட்டு மிளிர்ந்தது. அந்தப் பொட்டின் நடுவில் சிறு சந்தனப் பொட்டும் வைத்திருந்தார்; கையில் குடை இருந்தது.
மற்றவரைப் பார்த்தேன். அவர் நெற்றியில் திருநீறு பூசியிருந்தார்; திருநீற்றுக்கு மேலே வட்டநிறக் குங்குமப் பொட்டு அப்பொட்டுக்குள் சின்னஞ்சிறு சந்தனப் பொட்டும் இட்டிருந்தார். உச்சந்தலை விமானத் திடலை நினைவு கூர்ந்தது. அதைச் சுற்றியுள்ள இளநரை சனிக்கிரக வட்டத்தைப்போல் காட்சியளித்தது. விசிறி மடிப்புத் துண்டு. கைத்தறி முழுக்கைச் சட்டையும் வேட்டியும் அணிந்திருந்தார். கால்களிலே மும்பாய் நடையன்; நான் அவரைப் பார்த்துக்கொண்டு நிற்கும்போதே மணிலா சட்டை அணிந்திருந்தவர். “இது மணி வீடுதானே?” என்று கேட்டார்.
“என் பெயர்தான் மணி. ஆமா நீங்க யார்?” என்று வியப்பு மேலிடக் கேட்டேன்.
முழுக்கை சட்டை அணிந்திருந்தவர் வெற்றிலைக் காவி படிந்த பல்லைக் காட்டிக் கொண்டு நின்றார்.
“யாரயித்தான்?” என்று கேட்டபடி வாசலுக்கு வந்தாள் என் மனைவி. வந்ததும் அவள் முகம் மலர்ந்தது.
“வாங்கப்பு எப்ப வந்தீக?” என்று கேட்டாள்.
முழுக்கை சட்டை போட்டிருந்தவர் “இப்பத்தாம்மா!” என்றார்.
எனக்கு அவர்களை யார் என்று தெரியாவிட்டாலும் பணிவன்புடன் “உள்ளே வாங்க” என்றேன்.
அவர்கள் உள்ளே வந்து சோபாவில் அமர்ந்தனர். என் மனைவி சிரித்த முகத்தோடு கோப்பி கலக்க ஓடினாள். நான் அவர்களைப் பார்த்தேன்; அவர்கள் பால் குடித்துவிட்டுத் தொட்டியில் தூங்கிய பிள்ளைப் பார்த்தனர். மணிலா சட்டை போட்டிருந்தவர். “உங்கள் பிள்ளையா?” என்று கேட்டார்.
கேள்வி என்னவோபோல் இருந்தாலும், “ஆமா” என்றேன். “இப்படி தெரிஞ்சிருந்தா பழம் ஏதாகிலும் வாங்கிக்கிட்டு வந்திருப்போம்” என்றார். மணிலா சட்டை அணிந்திருந்தவர் பேச்சு எனக்கு வியப்பாக இருந்தது!
சற்று நேரத்திற்குள் கோப்பி வந்துவிட்டது. நான் தொண்டை கிழியக் கத்தினாலும் இவ்வளவு சுருக்கில் போட்டிருக்க மாட்டாள்! அன்று என்னவோ மின்னல் வேகத்தில் கொண்டுவந்துவிட்டாள். வந்தவள் கோப்பியை மேசைமீது வைத்தபடி, “அப்பு, அப்பாவுகளாம் நல்லா இருக்காகளா? என்னப்பு சொல்லிவிட்டாக?” அவள் முகத்தில் முல்லை மலர் கொட்டியது; அவள் கேள்வியிலிருந்தே ஊரிலிருந்து வந்திருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டேன்.
“நல்லா இருக்காக அம்மா; நான் நான் வரும்போது பார்த்துட்டுத்தான் வந்தேன். நல்லா இருக்கிறோம்ன்னு சொல்லச் சொன்னாக. உன்னையும் உன் பிள்ளையையும் பார்த்துட்டு வரச் சொன்னாக; இந்த வீட்டு முகவரிகூட உங்க அப்பாவுகதாங் கொடுத்தாக!” என்றார்.
“அப்படியா அப்பு, அது சரி அப்பு. நீங்க ஏன் இம்புட்டுத்தூரம் இளச்சுப் போயிட்டிக? முடியாமக் கிடியாமக் கிடந்திகளா அப்பு?”
“அதெல்லாம் ஒண்ணுமில்லேம்மா, வயசாகிடுச்சுல, அதுதான் இளச்சாப்புலத் தெரியுது.”
“ஆமா.ஆமா!”
“அதுதான் வேற ஒண்ணுமில்லை. வயசும் ஏறிக்கிட்டே போகுதுல; இந்த வயசிலாகிலும் ஊரு சுத்திப் பார்த்திடுவோம்ன்னு புறப்பட்டு வந்தேன்; பினாங்கிலே இறங்கி இப்படி வருகிறேன். கிட்டதட்ட மூணு மாதமாயிடுச்சு. அந்தப் பக்கம் அதுதான் பினாங்கு, கோலாலம்பூருப் பக்கம் உள்ள நம்ம ஊரு ஆளுக விடமாட்டேனுட்டாக. சரின்னு இருந்திட்டு இங்கே நேத்துத்தான் வந்தேன்; நாளைக்குப் பயணம்! அப்படி இருந்தும் உன்னைப் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன். இவுக யாருனு தெரியுமா?” மணிலாச் சட்டைக்காரரைக் காண்பித்துக் கேட்டார்.
“தெரியாதப்பு”
“இவுக நம்ம ஊருக்கிட்டத்தான். கருங்குளம் இவுக ஊரு. அங்கே தான் இருக்காக. இவுகள வந்து பார்த்தேன். இவுகளுக்கிட்டே தாக்கலைச் சொல்லிப்புட்டு உன்னைப் பார்க்கணும்னு சொன்னேன். இன்னிக்கு வேலைக்குக்கூடப் போகாம என்னை அழைச்சுக்கிட்டு வந்திருக்காக” என்றார் முழக்கைச் சட்டை.
“அப்படியா அப்பு” ‘ஆமம்மா”
“அப்பு. கோப்பி ஆறிப் போயிடும், எடுத்துக் குடிங்க” என்று சொல்லிவிட்டு என் பக்கம் திரும்பினாள் என் மனைவி.
பார்த்துவிட்டுத் தாடையில் கையை வைத்துக்கொண்டு, “என்ன அயித்தான் எப்படிப் பார்க்கிறீக! இவுக நான் பிறந்த இடமாக்கும்!” என்றாள்.
நான்.”அப்படியா” என்றேன்.
பிறகு அந்தப் பக்கம் திரும்பி, “அப்பு இவுகதான் உங்க மருமகன். அப்பாவுகள எப்பப் பார்த்தாலும் பகடி செய்யுவாக. அப்பாவுக்கு ஒண்ணும் தெரியாதாம். என்னையும் அப்படியே வளத்துட்டாகளாம். நான் பட்டிக்காடாம்! சொல்லுங்கப்பு பட்டிக்காடுன்னா என்ன?” என்றாள்.
அவர் சிரித்துக்கொண்டே, “விளையாட்டுக்குச் சொல்லியிருப்பாக” எனறார்.
மணிலாச் சட்டை காப்பியை உரிஞ்சிக் குடித்துக் கொண்டிருந்தார்.
சிரித்துக்கொண்டே சொல்லிய என் மனைவி, முகத்தை ஒரு நீட்டு நீட்டிவிட்டு, “மாமனாரைப் பகடி செஞ்சா பாதகம் இல்லையா. என்னைப் பெத்து வளத்தவுகள பகடி செய்யுறாகளே, அவுக இவுகளுக்கு என்ன வேணும்? அம்மான் என்கிறதையும் மறந்திட்டுப் பேசுறாகளே!” என்றாள்.
எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. நான் சிரித்தபடி என் மனைவியைப் பார்த்தேன். அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. யாரைப் பேசினாலும் அவள் தந்தையைப் பற்றிக் குறைவாகப் பேசுவது அவளுக்குப் பிடிக்காது.
“சரி சரி விடு” என்றார் முழுக்கை சட்டை.
“இப்ப என்ன சண்டையா போடுறேன். சும்மா வாய்ப் பேச்சுக்குச் சொல்லுறேன்” என்றாள் என் மனைவி. அவள் பேசுவதே சண்டை போடுவது போல்தான் இருக்கும்.
பிறகு என் பக்கம் திரும்பி, “சந்தையில் போய் கோழி வாங்கிக்கிட்டு வாங்க. ஊருல இருந்து அப்பு வந்திருக்காக” என்றாள்.
அவர்கள், “அதெல்லாம் எதுக்கம்மா?”, “இருக்கிறது போதும்மா! நம்ம வீட்டுல சாப்பிடுறதுக்கு என்ன!” என்றார்கள்.
“என்னப்பு இப்படிச் சொல்லிபுட்டீக! உங்களுக்குக் கோழி அடிக்காமல் யாருக்கு அடிக்கிறது?”
எனக்கு வந்த சிரிப்புப் போய்விட்டது. ‘கோழி வாங்கக் காசு!’ சிந்தித்தபடி நின்றறேன்.
“ஏம்மா இந்த ஊருல கோழிதான் சவுத்துப்போய்க் கிடக்குது. நம்ம ஊருல கருவாடு மாதிரி எங்கே பார்த்தாலும் கோழியாத்தானே கிடக்குது! எல்லாரும் கோழிதான் அடிக்கிறாங்க” என்றார் முழுக்கைச் சட்டை அணிந்திருந்தவர். அவருக்குக் கோழி கருவாடாகத் தெரிந்தது.
எனக்கோ அடிவயிற்றைப் பற்றி எரிந்தது. பிள்ளைக்குப் பால் வாங்க வைத்திருந்த காசு போய் விடுமே என்று வயிற்றில் தீயை அள்ளிக் கொட்டிக் கொண்டு வேறு வழியில்லாமல் சந்தையை நோக்கி நடந்தேன்.
சிங்கப்பூரில் பிறந்த நான்சில ஆண்டுகளுக்கு முன்தமிழகம் சென்று என் அத்தை மகளைத் திருமணம் செய்துஅழைத்துக்கொண்டு வந்த நினைவாகச் சந்தையை அடைந்துவிட்டேன்.
கோழிக் கடைக்குச் சென்று கோழியைப் பிடித்து விலை பேசினேன். கடைக்கார் நிறுத்தப் பார்த்துவிட்டு ஆறு வெள்ளி அறுபது காசு என்றார்.
எனக்கு எப்படி இருக்கும்? “பிள்ளைக்குப் பால் வாங்க வேண்டிய காசு கோழிக்காகப் போகிறதே. இந்த மனுசனுங்க என்று மூன்று நாள் கழித்து வந்திருக்கக் கூடாதா?” எண்ணியபடி காசுப் பையைத் திறந்து காசை எடுத்துக் கொடுத்தேன். பிறகு கோழியும் காய்கறிகளும் வாங்கிக்கொண்டு ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தேன்.
வீட்டில் ஒரே சிரிப்பு! என் மனைவி ஊர்க்கதையைக் கேட்டுவிட்டுச் சிரித்தாள். ஊரிலிருந்து வந்தவர் கொஞ்சமும் சளைக்காமல் ஊரில் நடந்த நிகழ்ச்சிகளை அளந்து கொட்டிக் கொண்டிருந்தார்கள். பேசப் பிறந்தவர்; பேச்சில் குறைவு இல்லை.
“உன் மாமனாரோட அப்பா இருந்தாகளே அவுகளை உனக்குத் தெரியுமா? தெரியாதுன்னு நினைக்றேன்! ஆத்தா, அவுக ஆளைப் பார்த்தா பீமனாட்டம் இருப்பாக! ஒரு ஆட்டை ஒரு ஆளாத் தின்பாகன்னா பார்த்துக்கவே! அவுக நெடுமரம் மஞ்சுவிரட்டுக்குப் போயிருந்தாக. அப்போ நான் சின்னப் பிள்ளை. நானும் போயிருந்தேன்! கூட்டம்னா கூட்டம். எக்கசக்கமா இருந்துச்சு! எல்லாரும் இவுகளைப் பத்தித்தான் பார்த்துப் பேசிக்கிட்டு இருந்தாக. அப்போது ஒரு காளை வாலை முறுக்கிக்கிட்டுத் தொழுவத்தை விட்டு ஓடி வந்துச்சு! அந்தக் காளை அந்தப் பகுதியிலேயே பேரு வாங்கின காளை! அந்தக் காளையின் வாலை பிடித்துச் சவுள் அணைந்து ஒண்டியாகவே பிடிச்சு நிறுத்தி, நெத்திப்பாரை, துண்டுகளை அவிழ்த்துட்டாக! பார்க்க வேணுமே! பேரு வாங்கிய அந்தக் காளையைப் பிடித்துவிட்டதுக்காக அவுகளை அப்படியே அலக்காகத் தூக்கிக்கொண்டு நம்ம ஆளுக ஆடினாங்க!” என்று கைகளை நீட்டி மடக்கியபடி உணர்ச்சி ததும்பப் பேசினார்.
‘ஆனா, பேருவாங்கின அந்த மாட்டைப் பிடிச்சதும் அந்த ஊரு ஆளுகளுக்குக் கேட்கவா வேணும்! கோபம் வந்துடுச்சு. பத்துப் பதினஞ்சு பேராக வந்து அடிக்க வந்துட்டானுக. உடனே இவக மருதாப் பாச்சுக் கட்டிக்கிட்டு சிலம்பு எடுத்து வீசனாக பாரு. அந்த இடத்திலேயே இரண்டு மூணு உருப்படி விழுந்திடுச்சு. மற்றவனுக கண்ணுமண்ணு தெரியாமல் ஓடிட்டானுக. வீரன்னு சொன்னா அவுகதான் வீரன்” என்றார்.
என் மனைவிக்குக் கேட்கவா வேண்டும். தன் தாத்தாவைப் புகழ்ந்து பேசியதால் அவள்தன்னையே மறந்துவிட்டாள்.
அவர் விடவில்லை. மஞ்சு விரட்டு, தட்டுவண்டி விரட்டுதல், அது இது என்று அள்ளிவிட்டுக் கொண்டிருந்தார். இதையெல்லாம் ஏன் அள்ளிவிடுகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இதில் ஏதோ பெருமையிருப்பதாக எண்ணிக்கொண்டு பேசுகின்றனர் என்று மட்டும் என் மனத்தில் ஓடியது.
மணி பன்னிரண்டு ஆகிவிட்டது.
ஒரு வழியாக மதியச் சாப்பாடு முடிந்துவிட்டது. ஆனால் சமைக்கும்போதும், சாப்பிடும் போதும் பேசிய பேச்சு மட்டும் இன்றும் ஓய்ந்தபாடில்லை. வாய் வலிக்காமல் இருக்க எங்குதான் பயிற்சி பெற்றனரோ என்று எண்ணத் தோன்றியது.
நேரம் ஓடியது. அவர்கள் புறப்பட ஆயத்தமானார்கள்.
“அம்மா அப்பாக்கிட்ட என்னம்மா சொல்ல? நான் போனதும் அவுக வந்து தாக்க மாக்க கேட்பாகளே! என் மகளைப் பார்த்தீகளா? எப்படி இருக்கான்னு கேட்பாக! நான் இங்கே வந்ததைச் சொல்லுறேன்! கோழி அடிச்சு கொழம்பு வச்சுப் போட்டதையும் சொல்லுறேன். வேற என்ன சொல்ல?” என்று கேட்டபடி குடைக் காம்பால் தரையைக் குத்தினார்.
“சரியப்பு போய்ச் சொல்லுங்க. அதான் நீங்க நேராப் பார்க்கிறீங்களே! உங்கள் மருமகன் அப்பாவைப் பத்தி பகடி பண்ணுறதையும் சொல்லுங்க! நான் என்னத்தைச் சொல்ல” என்று சொல்லிவிட்டு சிரித்தபடிஅறையை நோக்கி நடந்தாள். நான் அவளைக் கவனித்தேன். சாடைகாட்டி என்னைக் கூப்பிட்டாள்.
நான் அவள் அருகில் சென்றதும், “என்னங்க, ஏதாகிலும் கையில மடியில வச்சுக் கொடுக்க வேண்டாமா? அவுக மறுகிக்கிட்டு திரிகிறாகளே தெரியலீயா?” என்றாள்
“இப்பக் காசுக்கு எங்கே போவது?”
“என்ன இப்படிச் சொல்றீக. இவுக எங்க ஊர்த் தலைவரு! ஊரு சுத்திப் பார்க்க வந்த இடத்தில் நம்மைப் பார்த்துவிட்டுப் போக வந்திருக்காக; நாம ஏதாகிலும் வச்சுக் கொடுக்கணும்! போன போன இடத்தில் எல்லாம் மோதிரம், வேட்டி-சட்டை அம்பது அறுபது வெள்ளினு வச்சுக் கொடுத்திருக்காகளாம்! சொன்னாங்க. செய்ய அப்படிச் நாம் அவுகளே முடியலேனாலும் ஏதாகிலும் வச்சுக் கொடுக்கணும் பாருங்க!” என்றாள்.
“நம்மிடம் துணிமணி வாங்கவோ, மோதிரம் செய்து போடவோ வழியில்லையே!”
“எனக்குத் தெரியாமல் இல்லே, தெரியும்! காசாகிலும் வச்சுக் கொடுக்கப் பாருங்க!” என்றாள்.
“சரி சரி, என்னிடம் பத்து வெள்ளிதான் இருக்கு; வேணும்னா அதிலே ஐந்து வெள்ளி வச்சுக் கொடு” என்றேன்.
“சே போதாதுங்க! கொஞ்சம் கூட வச்சுக் கொடுக்கணுங்க!” என்றாள்.
“சரி இந்தா எல்லாத்தையும் வச்சுக்கொடு! ஆனா ஒண்ணு; பிள்ளைக்குப் பால் இல்லேன்னு மட்டும் சொல்லாதே!” என்றேன்.
அவள் முகம் வாடிவிட்டது.
என் மனம் வருந்தியது; இந்த நேரத்தில் வந்திருக்காகளே, ஒரு பக்கம் கவுரவம், மற்றொரு பக்கம் பிள்ளை; இரண்டுக்கும் இடையில் நின்று தத்தளித்துக் கொண்டிருந்தேன். எனக்குப் பிள்ளை பெரிதாகத் தெரிந்தது. என் மனைவிக்குந்தான்! ஆனால் இன்றே போய்விட வேண்டும் நாளைக்குப் பயணம் என்று பிடிவாதமாக நிற்கும் ஊரிலிருந்து வந்தவரை வழியனுப்பி வைக்க வேண்டுமே! கையிலிருந்த பத்து வெள்ளியை என் மனைவியிடம் நீட்டினேன்.
அவள் அதைத் தயக்கத்துடன் வாங்கிக்கொண்டு என்னையே பார்த்தாள். அவளை அறியாமலே கண்கள் கலங்கின.
“பரவாயில்லை. சம்பளம் போட இன்னும் இரண்டு நாள்தான் இருக்கு; கோப்பி கலக்கிக் கொடுத்தாகிலும் நாளையும் பொழுதையும் ஒட்டுவோம்” என்றேன்.
அவள் கண்ணீரை முன்தானையால் துடைத்துக்கொண்டு அலமாரியைத் திறந்தாள்; கடித உறையை எடுத்து அதற்குள் பத்து வெள்ளியைத் திணித்துக் கடித உறையின் வாயை மூடினாள். அங்கிருந்து முற்றத்திற்குச் சென்றாள்; நான் அவளைப் பின் தொடர்ந்தேன்.
“இரண்டு நாளைக்கு இருந்துட்டுப் போனா நல்லாயிருக்கும். இம்புட்டு நாளா அங்கிட்டு சுத்தி திரிஞ்சவுக ஊருக்குப் போக ஒரு நாள் இருக்கும்போது வந்திருக்கிகளே!” என்றாள் என் மனைவி.
முழக்கைச் சட்டை அணிந்திருந்தவர், தோளில் கிடந்த மேல் துண்டுத் தலைப்பால் வாயைத் துடைத்துக்கொண்டார்; ஆடு அசைபோடுவதுபோல் வெற்றிலையை அசை போட்டுக் கொண்டு, புன்னகை தவழ “அதுக்கென்னம்மா செய்யுறது; மூனு மாதந்தானே ‘விசா’ கொடுத்தாங்க; இல்லேனா இருந்துட்டுப் போகலாம்; நம்ம வீட்டில் இருக்கிறதுக்கு என்னம்மா?” என்றார்.
என் மனைவி பணிவன்போடு கூனிக்குறுகி பத்து வெள்ளி வைத்துள்ள உறையை அவரிடம் நீட்டினாள்.
“இதெல்லாம் எதுக்கம்மா; இதுக்காகவா இங்கே வந்தேன். ஊரையும் உங்களையும் பார்த்துட்டுப் போகலாம்ணுதானே வந்தேன்” என்றார். அவர் இப்படிச் சொல்லியதும் என் மனம் குளிர்ந்தது. ஆனார் அவர் கை உறையை நோக்கி நீண்டதும். உறை கை மாறியதும் அதை அப்படியே தன் சட்டைப் பைக்குள் திணித்துக்கொண்டார்.
பிறகு கொஞ்ச நேரம் ஊர்த் தாக்கலாகப் பேசிக்கொண்டிருந்துவிட்டு அவர்கள் விடைபெற்றுச் சென்றார்.
அவர்கள் சென்ற பிறகு பிறகு “கையில் இருந்ததையும் கொடுத்தாச்சு! இனி பிள்ளைக்குப் பால் வாங்க என்ன செய்யுறது?” என்று என் மனைவியை நோக்கிக் கேட்டேன். அவள் பலி கடாவைப்போல் விழித்தாள்.
அப்போது பிள்ளை அழுதது; அதன் அழுகுரல் பால் பால் என்று கேட்பதைப்போல் என் செவிகளில் விழுந்தது.
கடைக்குச் சென்று கடனாகக் கேட்டுப் பார்க்கலாம் என்றாலும் கடைக்காரன் பழைய பாக்கியைக் கேட்பானே! கடைக்காரனுக்குக் கொடுக்க தொண்ணூறு வெள்ளிக்கு எங்கே போவது என்று எண்ணியபடி நின்றிருந்தேன். இதற்கிடையில் கடன்காரன் நினைவும் தலைதூக்கியது.
நாட்கள் பல நகர்ந்தன. நிலைமைகளை எப்படியோ சமாளித்துவிட்ட மகிழ்ச்சியில் சோபாவில் அமர்ந்திருந்தேன். அன்று எனக்கு விடுமுறை.
“என்னங்க உங்களத்தானே, இவுக ஊருக்குப் போய்ச் சேர்ந்து இன்னும் ஒரு கடிதம்கூட வரலேயே, ஏங்க?” என்று வினவினாள் என் மனைவி.
“வரும் வரும் பயப்படாதே! கோழிக்கறி சமைத்துப் போட்டதில இருந்து எல்லாத்தையும் சொல்லி அளந்து இருப்பாங்க. உங்கப்பா இதைக்கேட்டு உள்ளமெல்லாம் குளிர்ந்து போயிருப்பாரு!” என்றேன்.
அப்போது மிதிவண்டியின் மணி கிறீங் கிறீங் என்று ஒலித்தது. திரும்பிப் பார்த்தேன். அஞ்சல்காரர் நின்றார்.
நான் விரைந்து சென்று கடிதத்தை வாங்கிக்கொண்டு வந்தேன். வந்ததும். “படிங்க!” என்றாள் என் மனைவி. நான் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன்.
‘அன்புள்ள,
மாப்பிள்ளைக்கு இங்கு அனைவரும் நலம். அங்கு அனைவர் நலத்திற்கும் கடிதம் எழுத வேண்டியது. ஊர்சுற்றிப் பார்க்க வந்த நம் ஊர்த் தலைவர் தங்களை வந்து பார்த்ததாகச் சொன்னார். இவ்வளவு தூரம் கடல் கடந்து வந்தவருக்கு கோழி அடித்துப் போட்டுப் பத்து வெள்ளி வைத்துக் கொடுத்ததாகச் சொன்னார். பத்து வெள்ளியும், கோழியும் சிங்கப்பூரில் பெரிது இல்லை என்றும் சொன்னார். இதைக் கேட்டதும் எனக்கு என்னவோபோல் ஆகிவிட்டது. அவர் ஊர் பார்க்க மட்டும் வந்ததாக நீங்கள் நினைத்துக் கொண்டு செய்திருக்கிறீர்கள். ஏதோ நம்ம ஊர்க்காரர்கள் அக்கறைச் சீமையில் நிறையப் பேர் இருக்கிறார்களே. ஏதோ இப்படியே போயிட்டு வந்தால் ஏதாகிலும் தேறும். வீடு வாசலைக் கட்டலாம்; காணிகரை வாங்கலாம் என்றுதான் வந்தார். வந்த இடத்தில் நீங்கள் இப்படி நடந்துகொண்டிருக்கக் கூடாது; நமக்கும் அவரால் நிறையக் காரியங்கள் ஆகவேண்டியது இருக்கு; அதையும் கவனித்துப் பார்த்திருக்க வேண்டும். அவர் தான் போட்ட திட்டத்தை நிறைவேற்றி விட்டார்; என்றாலும் நாம் கொஞ்சம் தாராளமாக நடந்திருக்க வேண்டும். அவர் ஊர்த் தலைவர் என்பதை மறந்துவிட்டு வெறும் பத்து வெள்ளியைச் சாதாரண ஆளுக்கு வைத்துக் கொடுப்பதைப்போல் வைத்துக் கொடுத்திருக்கிறீர்கள். பரவாயில்லை; இனி நடந்ததைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நான் அவரிடம் ‘கடிதம் எழுதுகிறேன்; சின்னஞ்சிறுசுகள் தெரியாமல் நடந்திருக்காங்க’ என்று சொல்லி வைத்திருக்கிறேன்…”
அதற்கு மேல் நான் கடிதத்தைப் படிக்கவில்லை. என் தலையே சுற்றியது. ‘அன்பு மேலிட அவர்கள் பேசியது அத்தனையும் இதற்குத்தானா? பிள்ளை அழுவது பாலுக்கு என்று உணர்ந்த நான் அவர்களின் கனிவுப் பேச்சைப் புரிந்துகொள்ள முடியாமல் இருந்துட்டேனே!’ என்று நடந்ததை நினைத்துப் பார்த்தேன்.
என் மனைவி “அட பாவி! நல்லாத் தின்னுவிட்டுப் போனது போதாதுன்னு பால் வாங்க காசையும் வச்சிருந்த வாங்கிக்கிட்டுப் போயி இப்படிச் சொல்லி இருக்கிறானே! ஊர் முதலுக்கு ஆசைப்படும் அற்பப் புத்திக்காரனுக” என்று சொல்லியபடி தாடையில் கையை வைத்தபடி என்னைப் பார்த்தாள். நான் அவளைப் பார்த்தேன்; பிள்ளை எங்களைப் பார்த்துச் சிரித்தது.
– தூண்டில் மீன், முதல் பதிப்பு: சூலை 2001, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
![]() |
1938இல் சிங்கப்பூரில் பிறந்தார். இவருடைய தாயார் சிங்கப்பூரில் பிறந்தவர். தந்தை தமிழ் நாட்டில் பிறந்தவர். கலைமகள் தொடக்கப் பள்ளியில் கல்வியைத் தொடங்கிய இவர் இண்டர்மீடியட் வரை படித்தார். பின்னர் தகவல் கலை அமைச்சில் தமிழ்ச் தட்டச்சராக அரசுப் பணியில் சேர்ந்து 30 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு ஓய்வு பெற்றார். இவருக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் பாலகிருட்டிணன். பரிதிமாற்கலைஞர் (சூரியநாராயண சாஸ்திரி) மறைமலையடிகளைப் பின்பற்றி இளங்கண்ணன் என்று பெயரை தமிழ்ப் படுத்தி…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
அடடா மழைடா… அடைமழைடா?
வளர்கவி
October 24, 2026
வீடு பேசும் நினைவுகள்
கல்பனா ராஜகோபால்
October 24, 2026
அழகு சிரிக்கிறது
இரா.துரைமாணிக்கம்
October 24, 2026
