சுமக்காதவர்கள்….!
கதையாசிரியர்: காரை ஆடலரசன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: February 14, 2026
பார்வையிட்டோர்: 1,783
(2004ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6
அத்தியாயம் – 3
காலை 7.00 மணிக்கு எழுந்த பிலோமினாவிற்குக் கண்கள் எரிந்தது. இரவெல்லாம் துாக்கம் இல்லை.
எப்போதும் போல் வெளிச்சம், காற்றுக்காக சன்னல் அருகில் சென்றவளுக்குச் சின்ன நடுக்கம்.
திறந்தால் சாமியார் இருப்பிடம் தெரியும். கொஞ்சம் தயங்கி… திறந்தாள்.
லாரன்சு வெளி வராண்டாவில் நின்றிருந்தான்.
பாதிரியார் உடையில் இல்லாமல்… சாதாரண ஆளைப் போல லுங்கி, பனியனில் இருந்தான்.
இப்போதெல்ல்லாம் பூசை நேரத்திற்குத்தானே …வேசம்.!
அதனால் அப்படி இருந்தான்.
எவளோ ஒருத்தி அந்த காலை நேரத்தில் வந்து அவனெதிரே நின்றிருந்தாள்.
‘யார் அவள்? என்ன குறை?
சாமியாருக்குத் துணை எடுபிடியாக இருக்கும் ஆரோக்கியசாமி எங்கே?
இங்கிருந்து சாமியாருக்குச் செல்லும் காபி போய் விட்டதா? அப்பா, அம்மா, தங்கை குடும்பம் என்று வந்திருக்கிறதா?!’ – உற்றுப் பார்த்தாள். உள்ளே ஆள் இருப்பது போல தெரியவில்லை.
கையில் பிரஷை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
“கிழம் போய் இளமை புதுமை சூப்பர் சாமியார்!”
“ரொம்ப அருமையாய் பூசை வைக்கிறார்.” சக ஊழியைகள் பேச்சு இவளை உலுக்கியது.
அதற்கு மேல் லாரன்சைப் பற்றி யோசிக்கவோ நினைக்கவோ பிலோமினாவிற்கு அவகாசமில்லை. காபி சாப்பிட்டு விட்டு குளித்து நைட்டியிலிருந்து கன்னிகாஸ்திரி உடைக்கு மாறி… மதர் சுப்பீரியரிடம் ஆசீர்வாதம் பெற்று.. பணிக்குக் கிளம்பினாள்.
தலைமையாசிரியையின் அறைக்குச் சென்று வழக்கம் போல் மண்டி போட்டு, ஆசி பெற்று…. சரியான நேரத்தில் வகுப்பில் நுழைந்து முதல் வேலையாய் வருகைப் பதிவேடு எடுத்தாள்.
கலா இல்லை.
‘நன்றாகப் படிக்கும் பெண். ஏன் வரவில்லை?’ பாடம் நடத்தினாள்.
சிறிது நேரத்தில் வகுப்பறை வாசலில் மாலதி வந்து நின்றாள். பொது பணிப்பெண்கள் இருவரில் இவள் ஒருத்தி. எல்லா ஆசிரியைகளுக்கும் உதவி. இது மட்டுமில்லாமல் மழலை வகுப்பு மாணவ மாணவிகளை ஒன் பாத் கொண்டு விட்டு வருவது, அவர்கள் மதிய சாப்பாட்டிற்கு உதவுவது, பெருக்குவது, சுத்தம் செய்வதென்று என்று ஏகப்பட்ட வேலை.
“என்ன மாலதி?”
“வகுப்பு வருகைப் பதிவேட்டை எடுத்துக்கிட்டு தலைமை ஆசிரியை அம்மா உங்களைக் கையோட வரச் சொன்னாங்க”
“ஏன்?”
“தெரியலை.” நகர்ந்தாள்.
வகுப்பை அப்படியே விட்டுவிட்டு வருகைப் பதிவேட்டுடன் வெளியே வந்தாள்.
மாடிப்படி இறங்கினாள்.
எதிரில் கலா ஆசிரியை ஏறினாள்.
“எங்கே போறீங்க?”
“உங்க வகுப்புக்குப் போக சொல்லி மேடம் உத்தரவு.”
‘மாற்று ஆள்! என்ன விசேசம்? எங்கே செல்ல வேண்டும்?’
‘சாமியாருடன் ஏதாவது பேசி?’ சட்டென்று இவளுக்குள் கலக்கம் எட்டிப் பார்த்தது.
தலைமை ஆசிரியை ஏஞ்சல் இவளை எதிர்பார்த்து அறையை விட்டு வெளிவந்து வாசலில் நின்றாள்.
முகம் இருண்டிருந்தது.
“என்ன மேடம்?”
“அட்டடென்ஸ் எடுத்துட்டீங்களா?”
“எடுத்தாச்சு.”
“கலா மாணவி வந்திருக்காளா?”
“இல்லை மேடம்.”
“சரி வாங்க”. வேகமாக கீழிறங்கினாள். வாசலை நோக்கி நடந்தாள். இவர்கள் தங்குமிட வாசலில் மதர் சுப்பிரீயர் நின்றாள்.
“வாங்க மதர்!” ஏஞ்சல் அவள் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு வாசல் கேட்டை நோக்கி நடந்தாள்.
‘வயதான காலத்தில் மதரையும் கூட்டிக் கொண்டு எங்கே?’ குழப்பமாக இருந்தது. பிலோமினா எதுவும் பேசாமல் அவர்களுடன் மெல்ல நடந்தாள்.
அவர்கள் மாதாக் கோவிலைத் தாண்டி, அதை அடுத்து உள்ள திருமண மண்டபத்தைக் கடந்து… காவல் நிலையத்திற்குள் நுழையும் போதுதான்…
‘எதுவோ பிரச்சனை?’ பிலோமினாவிற்குள் திகிலடித்தது. வாசலில் அமர்ந்திருந்த ஏட்டு இவர்களைப் பார்த்ததும் எழுந்து, “ஐயா அறைக்குப் போங்க“ பவ்வியமாக கை காட்டி சொன்னார்.
அப்படியே அவர்கள் சப்-இன்ஸ்பெக்டர் அறைக்குள் நுழைந்தார்கள்.
சப்-இன்ஸ்பெக்டர் கமலநாதன் அறை வாசலைப் பார்த்தபடி நாற்காலியில் இருந்தார்
அவரைப் பார்த்தபடி எதிர் நாற்காலியில் லாரன்சு.
அருகில் இரண்டு நாற்காலிகள் காலியாக இருந்தது.
“உட்காருங்க..” சப்-இன்ஸ்பெக்டர் கை காட்ட மதர் சுப்பீரியரும் தலைமை ஆசிரியையும் அமர்ந்தார்கள்.
பிலோமினாவிற்கு ஒரு கான்ஸ்டபுள் நாற்காலி கொண்டு வந்து போட்டார்.
“கணேசன்! அந்த பொண்ணை வரச் சொல்லுங்க..” கமலநாதன் உத்தரவிட்டார்.
சிறிது நேரத்தில் கலா வகுப்பறைக்குள் நுழையும் மாணவி போல் சரியான சீருடை, இரட்டை சடை பின்னல், மார்பில் புத்தகங்களை அணைத்துக் கொண்டு தலை கவிழ்ந்தபடி நுழைந்தாள்.
கமலநாதன் நன்றாக சாய்ந்து அமர்ந்தார்.
“இந்த பெண் காலையில ஒன்பது மணிக்கெல்லாம் இப்படியே பேருந்து நிலையத்துல நின்னிருக்கா. இங்கே வேலைக்கு வந்த கான்ஸ்டபிள் கணேசன் அவள் சீருடையைப் பார்த்து இவள் பள்ளிக்கூடம் அங்கே இருக்கு. இவ எதுக்குத் தனியா இங்கே நிக்கிறாள்ன்னு நெனைச்சு ‘ஏம்மா இங்கே நிக்கிறே?’ ன்னு கேட்டிருக்கார்.
போலீசைப் பார்த்ததும் இவளுக்கு மிரட்சி.
‘பள்ளிக்கூடம் போகனும் பேருந்துக்கு நிக்கிறேன்’னு சமாளிச்சிருக்காள்.
‘பேருந்து இப்போதானே உன் கண்ணெதிரே போகுது. ஏறிப் போகாம எதுக்கு நிக்கிறே? யாரைப் பார்க்குறே?’ ன்னு கேட்டிருக்கார்.
இவளுக்குப் பதில் சொல்ல முடியலை.
அந்த நேரம் பார்த்து இவளைத் தேடிக்கிட்டு ஒரு பையன் வந்திருக்கான். போலீசு விசாரிக்கிறதைப் பார்த்து மிரண்டு போய் துாரத்துலேயே நின்னிருக்கான். இவளுக்கு அவனைப் பார்த்ததும் அழுகை. கண்ணீர் விட்டிருக்காள்.
நம்ம கான்ஸ்டபுள் கணேசனுக்கு விபரம் புரிஞ்சு போச்சு.
‘வாங்க ரெண்டு பேரும் ஸ்டேசனுக்கு’ ன்னு சொல்லி அழைச்சு வந்தார். நான் அவுங்களை விசாரிச்சேன். ரெண்டு கலியாணம் கட்டிக்கப் போறோம்ன்னு கண்டிப்பா செல்றாங்க. பையனுக்கு வயசு 22. இவள் பத்தாம் வகுப்பு படிக்கிறாள் 16. பொண்ணும் பையனும் இங்கே நிக்கிறாங்கன்னு கேள்விப் பட்டு இரண்டு பேரையும் பெத்த அம்மா அப்பா அலறி அடிச்சுக்கிட்டு வந்துட்டாங்க. பெண்ணைப் பெத்தவங்க எங்களுக்கு இந்த திருமணத்துல சம்மதமில்லே. அதுமட்டுமில்லாம இவுங்க காதலுக்குப் பள்ளிக்கூடமும் ஒரு காரணம். இந்த பையன் மதியம் தினம் வந்து பள்ளிக்கூடத்துல பேசிக்கிட்டிருந்திருக்கான். உள்ளே இருக்கிற எந்த ஆசிரிய ஆசிரியைகளும் கண்டிக்கலை. கண்டும் காணாம் விட்டிருக்காங்கன்னு குற்றம் சாட்டி எங்களுக்குப் பொண்ணு முழுசா வேணும்ன்னு பிடிவாதம் பிடிக்கிறாங்க. பையன் வீட்டுப் பக்கம் எது நடந்தாலும் சம்மதம்ன்னு நிக்கிறாங்க. பொண்ணு மைனர். திருமண வயசு நெருங்காதவள். ஆள் கடத்திப் போனான்னுதான் எங்களால வழக்குப் பதிவு எங்களால வழக்குப் பதிவு செய்து சமாளிக்க முடியும்.
அப்படி செய்தால் பையன் சிறைக்குப் போவான். காதல் விவகாரம் வெளியே தெரிஞ்சு பொண்ணு கோர்ட் படியேறி வழக்கு வாய்தான்னு அலையுறதுனால இவ வாழ்க்கையும் பாதிக்கப்படும். தற்போதைக்கு அப்படி வழக்கு பதிவு செய்து வீட்டுக்கு விட்டால் மனசொடிஞ்சு பொண்ணும் பையனுமே தற்கொலைக்கு முயற்சி செய்யலாம். உயிருக்கு உத்திரவாதமில்லே. யாரும் கண்ணுல விளக்கெண்ணைவிட்டு இவுங்களைக் கண்காணிச்சிட்டிருக்க முடியாது.” நிறுத்திப் பார்த்தார்.
யாரும் வாயைத் திறக்கவில்லை.
“நான் உங்களை எதுக்கு அழைச்சேன்னா… பொண்ணைப் பெத்தவங்க குற்றச்சாட்டுக்கு நீங்க என்ன பதில் சொல்லப் போறீங்க?” முடித்து எதிரில் அமர்ந்திருக்கும் நால்வரையும் பார்த்தார்.
“ந…நாங்க இவுங்களைக் கவனிக்கலை சார்….” ஏஞ்சல் மெல்ல தடுமாறினாள்.
“பொய்! எந்த ஆசிரியையும் கவனிக்காம இருக்க முடியாது”.
“அண்ணன் தங்கச்சி பேசி இருக்காங்கன்னு விட்டுப் போயிருக்கலாம் சார்.”
“தினமுமா வந்து அண்ணன் தங்கை பேசுவாங்க. ?“
”மன்னிக்கனும். இவுங்க இப்படின்னு நாங்க நினைக்கலை, யோசிக்கலை.”
கமலநாதன் வலக்கையை நீட்டி மேசை மீதிருந்த கண்ணாடி உருண்டையை உருட்டி…
“ஓ.கே. இது போல தப்பு இனி உங்க பள்ளிக்கூடத்துல நடக்கக் கூடாது. நிர்வாகம் கவனமா இருக்கனும். எட்டாம் வகுப்புக்கு மேல படிக்கிற எல்லாரும் வயசுக்கு வந்தவங்க. குறுகுறு பருவம். தவறு நடக்க வாய்ப்பிருக்கு. கவனிக்கனும். உங்க கவனிப்பு, கண்டிப்பையும் மீறி யாராவது தப்பு செய்தாங்கன்னா தயக்கமில்லாம உடனடியா பெத்தவங்களுக்குத் தகவல் கொடுங்க.” நிறுத்தினார்.
‘என்ன மேன்மையான மனிதர்! இந்த சிக்கலை எப்படித் தீர்க்கப் போகிறார்?’ பிலோமினாவிற்குள் ஓடியது.
“பையன், பெத்தவங்க எல்லாரையும் வரச்சொல்லுங்க கணேசன்.” அடுத்து உத்தரவிட்டார்.
பையன் பெண்ணைப் பெற்ற அம்மா அப்பாக்கள் உள்ளே நுழைந்தார்கள்.
கலா வந்தவர்களுக்கு இடம் விட நகர்ந்து சுவரோரம் ஒதுங்கினாள். வரிசை பிடித்து நின்றார்கள்.
கமலநாதன் அவர்களை ஏறிட்டார்.
எல்லார் முகத்திலும் கவலை, கலக்கம், வருத்தமிருந்தது. அடுத்து பையனைப் பார்த்தார். அவன் மார்புக்கு குறுக்கே இரு கைகளையும் கட்டியபடி நின்றான். கலாவும் அவனும் சோடியாக தலை கவிழ்ந்தபடி இருந்தார்கள்.
“ஏம்மா! நீ இந்த பையனைக் கண்டிப்பா கலியாணம் முடிச்சுத்தான் ஆகனுமா?”
“ஆமாம் சார்!”
“முடிக்கலைன்னா?”
“செத்துடுவேன் சார்.” கண்ணீர் சிந்தினாள்.
“நீ?” அடுத்து அவனைப் பார்த்தார்.
“கலா முடிவுதான் சார் என் முடிவும், எங்களை யார், எது செய்ஞ்சு பிரிச்சாலும் கலா சாகிறாளோ இல்லையோ நான் கண்டிப்பா செத்துடுவேன் சார்.” சொல்லும் போதே அவன் கண்கள் பனித்தது.
‘என்ன துணிச்சல்?!’ கமலநாதனுக்கு அவர்களைப் பார்க்க பாவமாக இருந்தது. ஆத்திரமும் வந்தது.
“காவல் நிலையத்துல அதிலேயும் ஒரு சப்-இன்ஸ்பெக்டருக்கு முன்னால நாங்க தற்கொலை செய்துக்குவோம்ன்னு சொன்னதுக்கே உங்க ரெண்டு பேர் மேலேயும் தற்கொலை முயற்சின்னு வழக்கு பதிவு செய்து சிறையில துாக்கிப்போட்டு அலைக்கழிக்க முடியும். நீங்க அறியாத வயசு தெரியாம சொல்றதால மன்னிக்கிறேன். இனியும் உங்க வாயிலேர்ந்து அப்படி ஒரு வாக்குமூலம் வந்தா அப்படித்தான் செய்வேன். ஒரு உயிர் உருவாகிறது சாமானியமில்லே. உங்க அம்மா அப்பாவைக் கேட்டுப் பாருங்க. நீங்க வயித்துல கருவாய் தரிச்ச போதே உங்களுக்காக என்னனென்ன கஷ்டங்கள் எப்படி எப்படியெல்லாம் பட்டாங்கங்குறதை. ஏன்..இன்னைக்கு நீங்க வயசுக்கு வந்த பிள்ளைங்க. மகன், மகள் மனசுகள் விகாரப்படக் கூடாதுன்னு நெனைச்சு கணவன் மனைவி தங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்தி தொடக்கூட முடியாம தள்ளிப் படுத்திருக்கிறது கூட ஒரு பெரிய தியாகம். இந்த கஷ்ட நஷ்டமெல்லாம் நீங்களும் திருமணமாகி தாய் சேயானால் உணர்வீங்க.
“இப்போ விசத்துக்கு வர்றேன். இன்னையக் காலகட்டம் பொண்ணுக்குத் திருமண வயசு 21. சட்டப்படி 18. ஆணுக்கு வயசு 21. அவன் தயார் பிரச்சனை இல்லே. எங்க காதல் ஆழம் திருமணம்தான் முடிச்சு ஆகனும்ன்னா நீங்க ரெண்டு பேரும் கண்டிப்பா ரெண்டு வருசம் பிரிஞ்சு இருக்கனும். அதாவது கலாவுக்கு வயசு 18 முடியனும். அப்போதான் பெத்தவங்களோ சட்டமோ ஒன்னும் செய்ய முடியாது. இந்த ரெண்டு வருசப் பிரிவுக்கு அப்புறமும் உங்க காதல் நிலையாய் இருந்தால் யாரையும் கேட்காம என்கிட்ட வாங்க. நான் இங்கேயே சட்டப்படி முடிச்சு அனுப்பறேன். இதுக்கு கட்டுப்பட்டீங்கன்னா எந்த வித பேச்சு, பிரச்சனை இல்லாம உங்க அம்மா அப்பாவோட வீட்டுக்குப் போங்க. அவங்க அவுங்க வேலையயைப் பாருங்க. இந்த ரெண்டு வருச் இடைவெளியில ஒருத்தரை ஒருத்தர் பார்க்கக்கூடாது, பழகக் கூடாது. ஏன்… பேசக்கூடக் கூடாது. காரணம் பெத்தவங்களுக்குப் பிடிக்காது. கண்டவங்களும் ஒரு மாதிரியாய்ப் பேசுவாங்க. குடும்பத்துக்கு அவமானம்.”
“அடுத்து பெத்தவங்களுக்குச் சொல்றேன். பொண்ணு புள்ளையைக் கூட்டிப் போனதும் யாரும் யாரையும் குறை சொல்லக் கூடாது. புள்ளைங்களைத் தன் வழிக்குக் கொண்டு வர மூளை சலவைக் கூடாது. காரணம் அவுங்களுக்குப் பிடிக்காது. அப்புறம் மனசொடியறது, காணாம் போறதுன்னு விசயம் விபரீதமாகிப் போகும்.. தொலைச்சுட்டுத் தேடக்கூடாது. புள்ளைங்க மனசறிஞ்சு நடக்கனும்.”
“இதுவரை நடந்ததை இந்த இடத்தை விட்டு நகர்ந்ததும் எல்லாரும் மறந்துடனும். இதுக்கு முன் எப்படி குடும்பம் நடத்துனீங்களோ அப்படியே நடத்தனும்.. மீறி ஒரு புகார், தற்கொலைன்னு யார் வந்தாலும் சம்பந்தப்பட்ட எல்லார் மேலேயும் நான் கண்டிப்பா சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். இதுல தயவு தாட்சண்யம் கெடையாது. இதுக்கு இதுதான் முடிவு, நியாயம். நான் சொல்றது சரியா ?” என்று கண்டிப்பாக சொல்லி அவர்களைப் பார்த்தார்.
“சரி சார்.” பையன் மெல்ல தலையாட்டினான். கலாவும் தலையசைத்தாள்.
பெற்றவர்கள் வாயைத் திறக்கவில்லை.
“என்னய்யா?“ கமலநாதன் அவர்களை அதட்டினார். அதன் பிறகே அவர்கள் “சரி சார்!” ஒட்டு மொத்தமாக கூறி தலையை ஆட்டினார்கள்.
“சரி போங்க..” விடை கொடுத்தார்.
அவர்கள் அனைவரும் அறையை விட்டு வெளியேறினர்.
லாரன்சுக்கு ….சப்-இன்ஸ்பெக்டர் கமலநாதன் பேச்சு, பிரச்சனையை அணுகிய விதம். மனிதாபிமானம், முடிவு ரொம்ப பிடித்திருந்தது,
“நல்ல யோசனை சார்!” பாராட்டி எழுந்து அவருக்குக் கை கொடுத்து தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தான்.
பிலோமினாவிற்கும் இந்த முடிவு திருப்தியாய் இருந்தது.
மதர் சுப்பீரியர் எதுவும் பேசாமல் உம்மென்று இருந்தாள்.
தலைமை ஆசிரியை ஏஞ்சலுக்கு….மாணவி கலா தன்னைக் காவல் நிலையம் ஏற்றி அவமானப்படுத்தி விட்டாள் என்கிற ஆத்திரம். சப்-இன்ஸ்பெக்டர் வேறு குறை சொல்லி விட்டார் என்கிற குமுறல். முகத்தில் கொஞ்சம்கூட மலர்ச்சி இல்லாமல் குறுகுறுவென்று இருந்தாள்.
கமலநாதன் அவளையும் படித்தவர் போல் தொடர்ந்தார்.
“நான் சொன்னதை ஞாபகம் வைச்சு நீங்களும் கவனமாய் இருக்கனும். இங்கு வந்த ஆத்திரம் பள்ளிக்கூடத்துல போய் காட்டக் கூடாது. மாணவ மாணவிகள் கிட்ட அதிக கண்டிப்பு, கறார் கூடாது, பத்து, பதினொன்னு, பன்னிரண்டாம் படிக்கிற எல்லாரும் இரண்டு கெட்டான் விடலைப் பருவம். புத்தி தடுமாறும். அப்படி இப்படி தான் இருப்பாங்க. நாமதான் கண்காணிச்சு கண்டிச்சு அவுங்க மனசு கோணாம திருத்தனும். இன்னொன்னும் சொல்றேன் கேட்டுக்கோங்க. புள்ளைங்க வீட்டுல இருக்கிற நேரம் குறைவு. பெத்தவங்ககிட்ட பழகுற நேரம் கம்மி. பள்ளி, உஙக கட்டுப்பாடு, கண்காணிப்புல இருக்கிற நேரம்தான் அதிகம். ஆகையினால அவுங்க மனசு சிதையாம நீங்க நல்லவிதமாய் நடந்து அவுங்க எதிர்காலம் சிறப்பா இருக்க பாடுபடனும். வாங்க” கை கூப்பினார்.
நால்வரும் வெளியே வந்தார்கள். நடந்தார்கள்.
காவல் நிலையம் தாண்டி மாதாக் கோவில் வாசல் நுழையும்முன் லாரன்சு நின்று, “மேடம்! இவுங்களுக்கு வகுப்பு இருக்கா?” பிலோமினாவைக் காட்டி தலைமை ஆசிரியைக் கேட்டான்.
“இல்லை. ஏன் ஃபாதர்?”
“நான் பிலோமினாகிட்ட கொஞ்சம் பேசனும். பேசி அனுப்பறேன்.”
“சரி ஃபாதர்.” – ஏஞ்சல் மதர் சுப்பீரியருடன் நடந்தாள்.
‘என்ன பேச போகிறான்?!’ மாணவ மாணவிகள் கண்டிப்பு கண்காணிப்பு பற்றியா? வேறா? பிலோமினாவிற்குள் யோசனை ஒடியது.
அத்தியாயம் – 4
வெகு காலத்திற்குப் பிறகு பிலோமினாவும் லாரன்சும் தனிமைப்படுத்தப்பட்ட முதல் சந்திப்பு இது. இருவரும் பேசாமல் நடந்தார்கள்.
லாரன்சு மாடி ஏறி தன் இடம் அடைந்து வெளி வரண்டாவில் உள்ள நாற்காலியில் அமர்ந்தான். இவளுக்கு எதிரிலுள்ள நாற்காலியைக் காட்டினான்.
அமர்ந்தாள்.
“ஏன் இப்படி ஆனே பிலோமினா?” சுற்றி வளைக்காமல் தன் தாக்கத்தை நேரடியாகவே வெளிப்படுத்தினான்.
எதிர்பார்க்காத கேள்வி.
“நீங்க ஏன் இப்படி ஆனீங்க?” இவள் அவனைத் திருப்பிக் கேட்டாள்
லாரன்சு தரையைப் பார்த்தான். மனதில் கிடந்த பழைய நினைவுகளைத் துாசு தட்டினான்.
“அன்னைக்குத் திடுதிப்புன்னு உன் அப்பா என் வீட்டுக்கு வந்தார் பிலோமினா. நான், அப்பா, அம்மா, தங்கச்சி எல்லாரும் இருந்தோம். தன்னை அறிமுகப்படுத்திக்கிட்டு என் எதிர்ல உட்கார்ந்த அவர், நீங்களும் என் பொண்ணும் காதலிக்கிறதா கேள்விப்பட்டேன் தம்பின்னு விசயத்துக்கு வந்து இதெல்லாம் தப்பு தம்பி! எனக்கு பிலோமினா ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு. அமெரிக்காவுல கட்டிக் கொடுத்து அங்கே குடியேத்துறதா பெரிசா கனவு கண்டு அதற்கான முயற்சியில இருக்கேன். அங்கே என் அண்ணன் இருக்கார். அவர் ஏற்பாடெல்லாம் பண்றார். எனக்கும் அங்கே குடியுரிமை இருக்கு. இவ திருமணத்துக்குப் பிறகு நானும் மனைவியும் அங்கே குடியேறிடலாம்ன்னு திட்டம். இப்போ உங்க காதல் அந்த கனவையெல்லாம் சிதைக்குது. இவ இங்கே வாழ்ந்து கஷ்டப்படுறதைப் பார்க்க எனக்குப் பொறுக்காது. பொதுவா பெத்தவங்க மனசு புரிஞ்சு புள்ளைங்க நடக்கிறதுதான் அழகுன்னு என் புத்தியில படுது.”
“உங்க காதலைத் தடுக்க உங்களை அடிச்சுப் போடலாம். ஏன்… ஆளையே காலி செய்து காணாம ஆக்கிடலாம். இதை நான் செய்ய வேண்டியதில்லே. என் ஆள் செய்வான். ஆனா அதெல்லாம் தப்பு, தவறுன்னு என் மனசுக்குப் படுது. மனசுக்குப் படுது. காரணம்…. நான் பெண்ணை வளர்த்தது போலதான் மத்தவங்களும் தன் புள்ளைங்களை வளர்த்திருப்பாங்கன்னு தெரியும். நான் பெத்தவங்க பக்கம் நின்னு மட்டும் யோசிக்கலை. உங்க பக்கம் நின்னும் யோசிக்கிறேன். உங்க காதல் தீவிரம் ரெண்டு பேரும் சேர்ந்தே ஆகனும்ன்னு கட்டாயம் வந்தால் கண்டிப்பா நான் பெண்ணை வெறுத்து ஒதுக்கிடுவேன். நீங்களோ படிக்கிற ஆள் ஆள். அப்பா சம்பாத்தியத்துல இத்தனை பெரிய குடும்பம் ஓடுது. எத்தனைக் காலத்துக்கு ஓசி சோறு தின்னு நீங்க இங்கே காலம் கழிக்க முடியும் ? வெளியேறினால் எப்படி குடும்பம் நடத்த முடியும். சம்பாதிப்பு ?…..யோசிங்க. அடுத்து உங்களுக்குள் இருக்கிறது காதல் இல்லே. பருவ கோளாறு, விடலைப்புள்ளைக கவர்ச்சி. இது காதலாகவே இருந்தாலும் நான் கண்டிப்பா முட்டுக்கட்டை!”
“அப்பாவுக்கு நான் மாற்றல் வாங்கித் தர்றேன். அதுக்கு நான் ஏற்பாடு பண்றேன். இப்போ அப்பா வேலை பார்க்குற அரசாங்கத் துறைக்கு அமைச்சர் என் ஆளு. அவருக்குத் தேர்தல் நிதியாய் ஒரு லட்சம் கொடுத்து ஜெயிக்க வைக்கவும் பாடுபட்டிருக்கேன். என் ஆளுக்கு அமைச்சர் பதவி வேணும்ன்னு கட்சியில அடம்பிடிச்சு அமைச்சர் பதவிக்காகப் பாடுபட்டவனும் நான்தான். அதனால அப்பாவுக்கு மாற்றல்ங்குறது மறு நிமிசம். ஏன்… உங்களுக்கு விருப்பப்பட்ட ஊரை என்கிட்ட சொல்லிட்டு இந்த நிமிசமே மூட்டைக்கட்டி அந்த ஊர்ல போய் இறங்கினீங்கன்னா… உங்களுக்கு முன் உத்தரவு அங்கே காத்திருக்கும். உங்களுக்குச் சந்தேகமாய் இருந்தா இப்பவே அந்த அமைச்சர்கிட்ட நேரடியாய்ப் பேசி காட்றேன் பாருங்க. சொல்லி….எங்க வீட்டு தொலைபேசியை எடுத்து எண்களை அழுத்தி காதில் வைத்து….தொலைபேசி ஒலி பெருக்கியையும் ஓடச் செய்தார்.“
“ஏன்டா நமச்சிவாயம் ! எங்கே இருக்கே?”
“நான் அலுவலக அறையில இருக்கேன் என்.கே. எஸ்”.
”உள்ளே யாராவது இருக்காங்களா?”
“இல்லே. கோப்புகள் பார்த்துக்கிட்டு இருக்கேன். யார் இருந்தா உனக்கென்ன சேதி சொல்லு?”
“நமக்கு ரொம்ப வேண்டியவர் ஒருத்தர் இங்கேதான் உதவி தாசில்தாராய் இருக்கார். மாற்றல் வேணும்ன்னு ஆசைப்படுறார். ஊரெல்லாம் அப்புறம் சொல்றேன். இன்னைக்கே அவர் விருப்பப்படுற ஊருக்கு மூட்டை கட்டி அனுப்பறேன். அவர் அந்த ஊருக்குப் போய் இறங்கியதும் கையில உத்தரவு கிடைக்கிறாப்போல செய்யனும். என்ன சொல்றே?”
“நீ என்ன சொல்றீயோ அதைச் செய்யுறேன்.”
“குடும்பத்தை அனுப்பிட்டு விபரம் சொல்றேன். நான் சொல்றதைச் செய் வைச்சுறேன்!” போனை வைத்தார்.
‘எவ்வளவு சக்திமிக்க ஆள்!’ அப்பா உட்பட அத்தனை பேருக்கும் பிரமிப்பாய் இருந்தது, ஆடாமல் அசையாமல் இருந்தோம்.
உன் அப்பா தொடர்ந்தார்.
“எதுக்கு இந்த மாற்றல்ன்னா… காதல்ங்குறது பேசி பார்த்து பழகினாத்தான் வளரும். வேர் விட்டு கெட்டிப்படும். பிரிதலை வைச்சு அதுக்குத் தண்ணி விடாம தடுத்து நிறுத்திட்டோம்ன்னா…கொஞ்ச நாள்ல வாடி வதங்கி செத்துப் போயிடும். அப்புறம் எல்லாரும் உட்கார்ந்து யோசிச்ச முடிவெடுங்க. என்னால உங்களை ஆக்கவும் முடியும், உயிரைப் பறிச்சு வேலையை எடுத்து குடும்பத்தை அழிக்கவும் முடியும். நான் வில்லன் இல்லே தம்பி மனுசன் ! அவனுக்குள்ளே கடவுள் பாதி மிருகம் பாதி இருக்கு இருக்கு இதையும்தான் இதையும்தான் சினிமாவுல காட்டி இருக்காங்களே ! நீங்க என் வழியில குறுக்கிட்டதாலதான் நான் இந்த வழிக்கு வந்தேன். மறுத்து மனுசனை மிருகமாக்க வேணாம்ங்குறதுதான் என் வேண்டுகோள். நீங்க நல்லவிதமா முடிவெத்து எனக்கு தொலைபேசி செய்யுங்க. வீட்டுக்கு வரவேணாம். நான் உங்களை கிளப்பிய விசயம் என் பொண்ணுக்குப் புரிஞ்சுடும். நான் பாடுபட்டதுக்குப் பலன் இல்லாம போய் வீணா எனக்கும் அவளுக்கும் மனக்கசப்பு ஏற்படும். நான் வீட்டுக்குப் போய் ரெண்டு மணி நேரம் தொலைபேசிக்குப் பக்கத்துலேயே உட்கார்ந்திருக்கேன். நீங்க எல்லாரும் கலந்து பேசி ஆற அமர முடிவெடுத்து சேதி சொல்லுங்க. என்கிட்ட சேதி சொல்லிட்டு உடனே கிளம்பிடுங்க. இல்லேன்னா கிளம்பி சேதி சொன்னாலும் சந்தோசம். ஊர்ல போய் இறங்கி செட்டிலானதும் வீட்டுல திடீர் திருமண ஏற்பாடு. நான் பொண்ணைக் கட்டி பொண்ணைக் கொடுக்கிறதா பேச்சு. என் விருப்பமில்லாம அம்மா அப்பா பேசி முடிச்சுட்டாங்க. என்னை மன்னிச்சுடு. உன் முகத்துல முழிக்க வெட்கம். அதனாலதான் சொல்லாம கொள்ளாம புறப்பட்டுட்டேன்னு பத்து வரி கடிதம் எழுதி என் பொண்ணுக்கு அனுப்பிடுங்க. இதுக்கும் காரணம் இருக்கு. குடும்பம் காணோம் கடிதம் இல்லேன்னா நான்தான் உங்களை மிரட்டி விரட்டி விட்டதா என் மேல சந்தேகப்படுவாள். நான் கிளம்புறேன் தம்பி. சொன்னபடி என்னைத் தவிர வேற யாரும் எடுத்துடாம தொலைபேசியில இருக்கேன். கிளம்பினார் பிலோமினா.
உன் அப்பா போனதும் என் அம்மா அப்பா என்னைப் பிடிச்சிச்சுக்கிட்டாங்க.
கல்லுாரிக்குப் போய் கஷ்டத்தைக் கொண்டு வந்துட்டியேடா. உன் தங்கச்சிங்க வாழ்க்கையிலேர்ந்து நம்ம ஒட்டு மொத்த குடும்ப வாழ்க்கையும் உன் கையிலதான் இருக்கு. நாங்க இந்த ஊரை விட்டு கண்காணாத இடத்துக்குப் போக இப்பவே தயார். சொன்னாங்க.
நம்ம காதல் பெரிசா?….அதனால வர்ற அல்லல் பெரிசா …? யோசிச்சேன். நான் உன்னைத் துரத்தித் துரத்தி காதலிக்க… நீ விலகி விலகிப் போன விபரம் இப்போ புரிஞ்சுது. இந்த காதல் உனக்குத் தொல்லை, கஷ்டம் கொடுக்குமேன்னு நினைக்க மனசு கலங்கிச்சு. என்னையே வெறுத்தேன். ஒதுங்கினாத்தான் நீ நல்லா வாழ்வே, உபத்திரவம் இல்லாம இருப்பே.. மனசுல பட்டுது. கிளம்பிடுவோம்ன்னு முடிவெடுத்து… கன்னியாக்குமரியே கிளம்பிட்டோம். காஷ்மீர்வரை நம்ம தமிழ்நாடு இருந்தா அங்கேயே போயிருப்போம்.
ஆனாலும் உள்ளுக்குள்ளே உன்னை ஏமாத்தினதாய் உறுத்தல். வாழ்க்கையே வேணாம் சாமியாராய்ப் போயிடனும்ன்னு முடிவெடுத்தேன். வேலை கிடைக்காத இந்த காலத்துல சாமியார் படிப்பு படிச்சு வேலைக்குப் போறதுதான் உடனே வேலைக்கும் வேலை. சம்பளத்துக்கும் சம்பளம்ன்னு என் அப்பா அம்மாகிட்டே சொன்னேன். அம்மா உன் காதல் நிறைவேறலைங்குற வெறுப்புலதான் இந்த முடிவுன்னு சொன்னாங்க. அதெல்லாம் இல்லேன்னு சமாளிச்சு சாமியார் படிப்பு படிச்சேன். படிச்சு முடிச்சு வேலைக்குச் சேர்ந்து மூணு தங்கச்சிங்களைக் கட்டிக் கொடுத்தேன். அம்மா அப்பா ரெண்டு வருசத்துக்கு முன்னால காலம். இங்கே வந்தால் நீ நிக்கிறே ?” நிறுத்தினான்.
பிலோமினாவிற்குக் கஷ்டமாக இருந்தது.
“இன்னைக்கு இருந்த ஜோடிக்கு உள்ள துணிச்சல் அன்னைக்கு உங்களுக்கு இருந்துதுன்னா நம்ம வாழ்க்கை எப்படி எப்படியோ போயிருக்கும்” இவள் மெல்ல சொல்லி பெருமூச்சு விட்டாள்.
நிஜம் முகத்திலடிக்க லாரன்சுக்கும் என்னவோ போலிருந்தது, தலை கவிழ்ந்தான்.
“நீ சொல்லு பிலோமினா!” தலையயைக் கவிழ்த்துக் கொண்டே அவள் கதையைக் கேட்டான்.
பிலோமினா வாயைத் திறந்தாள்.
“உங்க கிட்டேயிருந்து கடிதம் வந்ததுமே… இது அப்பா சதின்னு துல்லியமா தெரிஞ்சு போச்சு. ஏன்னா… என்னைப் பெத்து வளர்த்த அம்மா அப்பா குணம் தெரியும். உங்களைத் திரும்ப தொடர்பு கொள்ளலாம்ன்னா முகவரி இல்லே. அப்பாகிட்ட மோதவும் முடியாது. பாறை ! திரும்ப அடுத்து எப்படியாவது உங்ககிட்டே இருந்து கடிதம் வரும். எப்படியும் பிடிக்கலாம்ன்னு பார்த்தேன். பார்த்தேன். முடியலை. எந்த துணிச்சலோடும் அப்பாகிட்ட மோத முடியாத நிராயுதபாணி சூழ்நிலை. இந்த நிலையிலதான் அப்பா எனக்கு சீக்கிரமாய் அமெரிக்காவுல மாப்பிள்ளைப் பார்க்க ஏற்பாடு செய்தார். என் காதலைச் சிதைச்ச இவர் ஆசையில மண்ணையள்ளிப் போடனும்ன்னு எனக்கு வெறி.
“அப்பா! எனக்குக் கலியாணம் வேணாம். கன்னிகாஸ்திரியாய்ப் போறேன்!” சொன்னேன்.
“ஏம்மா!?” அவர் ஆயிரம் வோல்ட் மின்சாரத்தில் என்னை அதிர்ச்சியாய்ப் பார்த்தார்.
“எனக்குத் திருமணத்து மேலேயே நாட்டம் இல்லேப்பா. ஆண்டவனுக்குத் தொண்டு செய்யுறதுதான் என் மனசுக்குத் திருப்தியாய்ப் படுது. தயவு செய்து என் மனசை நோகடிக்காம என் வழியில விடுங்கப்பா. முரண்டு பிடிச்சு நீங்க எனக்கு திருமணம் முடிச்சு வைச்சாலும் அடுத்த நாளே நான் இந்த வாழ்க்கைக்குப் போயிடுவேன்ப்பா. என்னை யாரும் தடுக்க முடியாது. அப்படி செய்தால் மத்தவங்களுக்கும் அவமானம், கஷ்டம், தலைக்குனிவு. என்னை விட்டுடுங்கப்பா.” உறுதியாய்ச் சொன்னேன்.
அப்பாவும் அம்மாவும் ஆடிப்போனாங்க.
அடுத்த நாளே நான் கன்னிகாஸ்திரி ஆகப் புறப்பட்டேன்.” நிறுத்தினாள்.
“ஆக… இருவரும் ஒரே படகு!” சொன்ன லாரன்சு, “உன் அம்மா அப்பா இருக்காங்களா?” கேட்டான்.
“இருக்காங்க. இங்கே இல்லே. அமெரிக்காவுல. என்னை இந்த கோலத்துல பார்க்க அவருக்குப் பயம். நினைச்சா அங்கிருந்து இங்கே தொலைபேசியில பேசுவாங்க.” நிறுத்தியவள், “காலையில பேசிக்கிட்டிருந்தீங்களே! யார் அந்த பொம்பளை?” அடுத்த விசயத்திற்குத் தாவினாள்.
‘பெண்களுக்கே உள்ள சந்தேகக் குணம்!‘ லாரன்சு மனசுக்குள் சிரித்தான்.
“இந்த இடத்தைக் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்து குடி தண்ணீர் வைக்க ஒரு பெண் வேணும்ன்னு எனக்கு உதவியாய் இருக்கிற ஆரோக்கியசாமிகிட்ட ராத்திரி சொன்னேன். அவன் காலையிலேயே புடிச்சு அனுப்பிட்டான்.” என்றான்.
“அவ வேலையில சேர்ந்தாச்சா?”
“சேர்த்தாச்சு!”
பிலோமினா முகத்தில் இருள் அடித்தது.
– தொடரும்…
![]() |
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க... |
