சீர்





(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘எண்ணவும் அரிதான இரகசியங்களினுள்ளே மௌனமாக இருக்கிறவனும் ‘யானே யாவேன்’ என்றான் கீதாசிரியன். அந்த வாசகம் நினைவுக்கு வரவே யான் மெளனமாக இருக்கிறேன்….’

அவன் படைத்தனன் ஐம்பொறிகளை. எனினும் அவற்றிற்கிடையேயும் முளைத்தது சச்சரவு.
‘யானே எல்லாப் புலன்களிலும் முதலில் விழிப்பு நிலை எய்துபவன். பிரபஞ்ச தோற்றத்திற்கு ஆதி நிமித்தமாய் அமைந்த பிரணவ மந்திரத்தைக் கேட்டின்புற்றவனும் யானே. எனவே, மாட்சிமை பெற்றவனும் யானே’ தோடுடைய பெருமையுடன் செவி பேசிற்று.
‘உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத பிராண வாயு உட்செல்லும் வாயில் யான். இது மட்டுமோ என் பெருமை? தமிழ்ச் சங்கத்திலே தங்கக் கவிதை ஒன்று இயற்றினான் தென்னாடுடைய சிவன். அக்கவிதையிலே பொருட் குற்றம் இருக்கிறது என்ற நக்கீரனின் விமர்சனத்தைத் தொற்றி விவாதம் முற்றியது. திருக்காளத்தியப்பருடைய தேவியாராகிய ஞானப்பூங்கோதை அம்மையாருடைய கூந் தலிலே இயற்கையான மணம் வீசுகின்றதா என்ற ஆராய்ச் சியில் ஈடுபட்டனர். நாற்றத்தை நிறுவ உதவுபவன் யார்?’ என மூக்கு வரலாற்று ஞானத்துடன் தன் புகழ் அளந்தது.
செவிடனும் வாழ்கிறான்; மூக்கறையனும் வாழ்கிறான் துர்நாற்றத்தைச் சகிக்க முடியுமா? உயிர் தங்குவதற்கு ஆதாரம் மெய்யாகிய யானே. இன்பங்களுள் கல்வி இன் பமே தலையாயது என்பதைப் போகிகள் அறிவர். இவ்வற்புத இன்ப அனுபவம் மெய் என்னும் வழிநின்று சித்திக்கின்றது. அதனை மறக்கவேண்டாம்’ என்றது மெய்.
‘வட்டக் கருவி, வீழ்த்திடும் வேல்விழி, குளிர் மதர் குவளைவிழி, துள்ளும் கயல்விழி, வெல்லும் வில்விழி என்று பலபட என்னைப் போன்று உங்களை எந்தப் புலவனாவது விதந்தேத்திப் பாடியிருக்கிறானா? கண்ணை இழந்தவன் ஒளியை இழக்கிறான். ஒளியை இழந்தவன் சகல திருத்தரிசனங் களையும் இழக்கிறான். மெய், கேவலம் சிற்றின்ப நுகர்ச்சிக்கு உட்படுவதைப் பிரமாதப்படுத்துகின்றது. குருநிலத்தில் பார்த்தனுக்குப் பரமாத்மாவின் விஸ்வரூப தரிசனம் நானின்றிச் சித்தித்திருக்குமா?’ என்று கவிஞர்களையும், புராணீகச் செய்திகளையும் தன் கட்சியை நிலைநாட்ட இழுத்தது’.
‘செவியும் ஓசையும், மூக்கும் நாற்றமும், உடலும் ஊனும், கண்ணும் ஒளியும்! அவ்வளவுதானே? கண்ணில் லாதான் திருதராஷ்டிரரும் குருக்ஷேத்திரப் போரினைச் சஞ்சய முனியின் கட்புலன்வழி தரிசித்தான். மொழிகள் தோன்ற யானே காரணன். மேலும் யானே சுவையின் வடிவம். இச்சுவையையும் நால்வழிகளில் ஊட்டுகிறேன். சோறு முதலிய உண்ணுதற் பொருள்களிலும், கறி முதலிய தின்னுதற் பொருள்களிலும், தேன் முதலிய நக்குதற் பொருள் களிலும் சுவையறிந்து சொல்லுகின்றேன். உண்பவன் வைச்வாநரன் என்னும் நெருப்பு; உண்ணப்படுவது சோமன் என்ற தத்துவமும் என்னால் எழுந்தது….இனி, சுவையும் ஆறு வகைத்து….’ என நா தன் வன்மை சாற்றித் தொடர்ந்து பேசலாயிற்று.
‘மூளையே! ஐவருள் யார் உயர்ந்தவன்? நீயே தீர்ப்புக் கூறு….’ எனச் செவி குறுக்கிட்டது.
‘எண்ணவும் அரிதான இரகசியங்களிலுள்ளே மௌன மாக இருக்கிறவனும் யானே யாவேன்’ என்றான் கீதாசிரியன். அந்த வாசகம் நினைவுக்கு வரவே யான் மௌனமாக இருக்கிறேன் என மூளை அடக்கமாகக் கூறியது.
– கீதை நிழலில், முதற் பதிப்பு: அக்டோபர் 1975, கலைஞன் பதிப்பகம், சென்னை.