சீர்வரிசை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 25, 2012
பார்வையிட்டோர்: 8,938 
 
 

முதலில் மேடையேறும் நடிகனைப்போல மனதில் சொல்லிப் பார்த்துக் கொண்டார் வராகசாமி. ஒட்டக் கறந்துவிட வேண்டும். தரகர் சொல்லியிருந்தார், ‘சரியான பார்ட்டி‘ என்று. ரிமோட் கண்ட்ரோலில் மனைவியின் முகம் வேறு. ஆரம்பித்தார்.

“நாங்க மிடில் கிளாஸ்தான், நகை நட்டை வித்துத்தான்..“ அவரிடம் ஸ்க்ரூ நட் கூட கிடையாது என்பது நெருங்கியவர்களுக்குத் தெரியும்.

“இதையெல்லாம் நீங்க சொல்லணுமா ?“ பெண்ணைப் பெற்றவர் பெருந்தன்மையாகச் சொன்னவுடன் வராகசாமிக்கு வேகம் அதிகரித்தது.

“பையன் பொறந்தபோது வெள்ளியிலே அரைஞாண் கட்டக்கூட வசதியில்லை.“

“இப்போ தங்கத்திலே கட்டிக்கட்டும்.“

“நெஜமாவே உங்க மனசு தங்கம்தான்.. . பையன் ஸ்கூல் போக ஒரு சைக்கிள் கேட்டான்.“

“இப்போ காரிலே போகட்டும் ஆபீசுக்கு !“

“வாடகை வீட்டிலே அவன் பட்ட கஷ்டம்.. கொத்தவால் சாவடிதான்.“

“அரண்மனை மாதிரி பங்களாவை மொதல்லே மாப்பிள்ளை பேருக்கு மாத்திட்டுத்தான் மறு காரியம்.“

“உங்க வீடு மட்டுமில்லை, மனசும் ரொம்ப விசாலம்தான்.“

“நீங்க எதுவும் சொல்ல வேண்டாம், உங்க பிள்ளை எங்களுக்கு முக்கியம். அவரோட சந்தோஷம் முக்கியம். எது வேணும்னாலும் கேளுங்க, கூச்சப்படாமல் கேளுங்க. “

நைசாக ‘பிட்‘டை எடுத்துப் பார்க்கும் பையனைப்போல பையிலிருந்து பாக்கெட் நோட்டை எடுத்தார். அதில் வெள்ளி ஸ்பூன் முதல் வைர நெக்லெஸ் வரை வரிசைப் படுத்தி இருந்தார்.

“அதை இப்படிக் கொடுங்க, ஒண்ணுவிடாம செய்துடறேன் உங்க திருப்திதான் என் திருப்தி. “

“அடடா என்ன மனசு.. என்ன மனசு.. உங்க மாதிரி சம்பந்தம் கெடைக்க கொடுத்து வச்சிருக்கணும். இனிமே ஒரு வார்த்தை பேசமாட்டோம். எல்லாம் உங்க இஷ்டம். “

“எல்லாம் உங்க இஷ்டப்படி செய்துடறேன், ஒரே ஒரு ஆசை, ரிக்வெஸ்ட், ஒரே பெண்.. ரொம்ப செல்லமா வளர்த்துட்டோம் அதனாலே… “

“பரவாயில்லை, நாங்க அட்ஜஸ்ட் செய்துக்கறோம். “

“வேண்டாம். அந்த சிரமம்கூட உங்களுக்கு வேண்டாம். பையன் வீட்டோட மாப்பிள்ளையா எங்களோட இருந்துட்டாப் போதும் சரிதானே ?“

வராகசாமி மூர்ச்சையானார்.

– ஜூன் 16 2005

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *