சீத்தலைச் சாத்தனர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 30, 2021
பார்வையிட்டோர்: 5,411 
 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சேரன் செங்குட்டுவன் கலைவளம் காணுவதற்காகப் போயிருந்தான். அங்கே வாழ்ந்த மலைவாணர்களாகிய வேடர்கள் மான் கொம்பு, கவரிமானின் வால் முதலிய காணிக்கைகளோடு மன்னனை வந்து பார்த்தார்கள். அப்போது அவர்கள் தாம் கண்ட அதிசயம் ஒன்றை அரசனுக்கு எடுத்துச் சொன்னார்கள். “அரசே, ஒரு பெண் தன் கணவனை இழந்து வந்து, இந்த மலையின் மேல் ஏறி, ஒரு வேங்கை மரத்தின் அடியில் நின்றுகொண்டிருந்தாள். அப்போது வானவர்கள் விமானத்தில் அவள் கணவனேடு வந்து, அவளை அழைத்துக்கொண்டு சென்றதைக் கண்டோம்” என்றார்கள். அதைக் கேட்டபோது அங்கே இருந்த சீத்தலைச் சாத்தனார், “எனக்கு அந்தப் பெண்ணேப் பற்றிய செய்திகள் தெரியும்’ என்று சொன்னார். அப்போது அங்கே செங்குட்டுவனுடைய மனைவியும் அவன் தம்பியாகிய இளங்கோவடிகளும் இருந்தார்கள்.

சீத்தலைச் சாத்தனார், “கண்ணகியை, மதுரை நகருக்குக் காவல் தெய்வமாகிய மதுராபதி, இரவிலே கண்டு பேசியதை நான் கேட்டேன். மதுரைக் கோயிலில் நான் படுத்துக்கொண்டிருந்த பொழுது இது நிகழ்ந்தது’ என்று சொல்லி, கண்ணகியின் கணவன் கோவலன் கொலையுண்டதையும் பத்தினியாகிய கண்ணகி மதுரையை எரித்ததையும் எடுத்துச் சொன்னார். கண்ணகியின் வரலாற்றைக் கேட்டு, யாவரும் வியப்பில் ஆழ்ந்தார்கள்.

அவள் கதையைக் காவியமாகச் செய்தால் நன்றாக இருக்கும் என்று சாத்தனார் எண்ணினார். இளங்கோவடிகளும் புலமை யுடையவராதலின் மரியாதைக்காக அவரையே அந்தக் காவியத்தைப் பாடும்படி சொல்லலாம். அவர் எங்கே ஏற்றுக்கொள்ளப் போகிறார்? நம்மையே பாடும்படி சொல்வார்’ என்று எண்ணி, “இந்தப் பத்தினித் தெய்வத்தின் கதையை அடிகளாகிய நீங்களே பாடியருள வேண்டும்” என்றார், துறவி இந்தக் கதையில் ஈடுபட மாட்டார் என்றும் நினைத்தார். ஆனால் இளங்கோவடிகள் மனத்தைக் கண்ணகியின் கதை உருக்கிவிட்டது. சாத்தனர் சொன்னவுடன், “அப்படியே செய்கிறேன்’ என்று ஒப்புக்கொண்டு விட்டார்.

கண்ணகியின் கதையைக் காவியமாகப் பாடவேண்டும் என்ற ஆர்வத்தோடு இருந்தவர் சாத்தனர். இப்போது அதற்கு இடம் இல்லாமற் போயிற்று. ஆனாலும் ஏதாவது ஒரு காவியத்தை இயற்றாமல் இருப்பதில்லை என்ற வேகம் அவருக்கு உண்டாயிற்று. கண்ணகியின் கதையைப் பாட முடியாவிட்டாலும் கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மணிமேகலையின் கதையையாவது பாடலாம் என்ற ஊக்கம் பிறந்தது. விரைவிலே அதைப் பாடி முடித்துவிட்டார். இந்த இரண்டு காவியங்களும் சேர்ந்தே தமிழ் நாட்டில் உலவலாயின. பிற்காலத்தில் ஐம்பெருங் காப்பியங்கள் என்று ஒரு வரிசையைப் புலவர்கள் பாராட்டிச் சொல்வார்கள். அந்த ஐந்தில் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் முதலில் நிற்கின்றன.

சாத்தனாருக்குச் சீத்தலைச் சாத்தனார் என்று பெயர் வந்ததற்கு ஒரு காரணம் உண்டு. நல்ல கவிதையைக் கண்டால் அவர் மிகவும் விருப்பத்தோடு படிப்பார். தவறான கவிதைகளையும் சுவையற்ற கவிதைகளையும் கண்டால் அவருக்குப் பிடிப்பதில்லை. கவி பாடியவர்களைக் கண்டு பிடித்து வைய முடியுமா? ‘இந்தக் கவியைப் படிக்கும்படி நேர்ந்ததே’ என்று தம் தலையில் குட்டிக் கொள்வார். ஒரு சமயம் ஏதோ ஒரு நூலைப் படித்தார். அது மட்டமான கவிகள் அடங்கியது.

அதைப் படிக்கவே சகிக்கவில்லை. வழக்கம் போலத் தலையிலே குட்டிக் கொள்ளப் போனார். அப்போது அவர் கையில் எழுத்தாணி இருந்தது. அந்த நினைவே இல்லாமல் அவர் குட்டிக் கொண்டபோது எழுத்தாணி தலையில் குத்திவிட்டது. ஆழமாகக் குத்தி ரத்தம் பிரிட்டது. புண் உண்டாயிற்று. பிறகு அது சீழ்ப் பிடித்து ஆறுவதற்குப் பல நாட்கள் ஆயின.

அவர் தலையில் கட்டு கட்டிக்கொண்டிருந்ததைக் கண்ட நண்பர்கள், “என்ன புலவரே, கட்டு?” என்று கேட்டார்கள்.

“புண், சீழ் கட்டியிருக்கிறது.”

“என்ன புண்?”

“சுவையற்ற கவிதையைக் கண்டு, குத்திக் கொண்டதனால் வந்த வினை!”

“ஐயோ பாவம்! நீங்கள் சீத்தலைச் சாத்தனார் ஆனது தெரிந்தால், மட்டமான கவிகளை இனிமேல் யாரும் எழுத மாட்டார்கள். எழுதினாலும் உங்களிடம் காட்டமாட்டார்கள்” என்று அவர்கள் சொன்னார்கள்.

அது முதல் அவரைச் சீத்தலைச் சாத்தனார் என்றே யாவரும் அழைக்கத் தொடங்கினார்கள்.

– கவிஞர் கதை, கலைமகள் வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *